Sunday 31 May 2015

ஊறுகாய் மகாத்மியம்!

வெய்யில் காலம் வந்தாலே ஊறுகாய்கள், வடகங்கள், வற்றல் வகைகள் என்று வருஷம் முழுவதும் வைத்துக்கொள்ள வீட்டுக்கு வீடு பெண்கள் எல்லோரும் அவற்றைத்தயார் செய்வதில் எப்போதும் ஈடுபடுவார்கள்.
 [ இப்போது அப்படிப்பட்ட நிலைமை வீட்களில் இருக்கின்றனவா?] 

சின்ன வயதில் அரிசி மாவில் செய்யப்படும் கூழ்வடகங்களை பெரியவர்கள் செய்ய ஆரம்பிக்கும்போது, அதற்கான கூழ் கிண்டி வைக்கும்போதே ஒரு கிண்ண‌த்தில் அதை எடுத்துப்போட்டுக்கொண்டு ருசிக்க ஆரம்பிப்போம். அது அத்தனை ருசியாக இருக்கும். அப்புறம் அதில் கூழ்வடகங்கள் பிழிந்து காயவைக்கும்போது காய்ந்தும் காயாமல் இருக்கும் அவற்றில்ல் சில எடுத்து வாயில் போட்டு சுவைப்பது தனி சுகம்.

பிப்ரவரி, மார்ச்ச் மாதங்களிலேயே குடமிளகாய்களை சிறியதாய் பார்த்துப் பார்த்து வாங்கி அவற்றை தயிரில் போட்டு குடமிளகாய் வற்றல் தயாரிக்கும் வேலைகள் ஆரம்பிக்கும். வீடு முழுவதும் தயிரில் தோய்ந்திருக்கும் குடமிளகாய் வாசனை ஆளைத்தூக்கும். அப்புறம் மார்ச், ஏப்ரல் மாதங்களில் மாவடுகள் சீசன் ஆரம்பிக்கும். குண்டு மாவடுகளில் சுவை அதிகமா, நீள‌ மாவடுகளில் சுவை அதிகமா என்று விவாதங்கள் நடக்கும். தஞ்சையில் பூச்சந்தை என்று ஒரு இடம் இருக்கிறது. எப்போதும் விடியற்காலையில் அங்கு போய் இளசாக குட்டி குட்டி மாவடுகள் வாங்கி வந்து உடனேயே நீர் மாவடு போட்டு விடுவது வழக்கம். மாவடு வர ஆரம்பிக்கும்போது, கிலோ 100 ரூபாய்க்குக் கூட விற்கும். அதற்கெல்லாம் மனம் அஞ்சுவதில்லை. மாவடு ஊறுகாய் போட்டால் தான் மனம் திருப்தி அடையும். பெரிய கல்சட்டியில் போட்டு முழுவதும் தயாரான பிறகு, அதை ஜாடிகளில் மாற்றி, பின் இங்கு வருகையில் அதை ஃபிரிட்ஜில் வைத்து வருவது என்று இன்றைக்கும் இந்தப்பழக்கம் தொடர்கின்றது.

இந்த தடவை மார்ச்சிலேயே இங்கு வந்து விட்டதால் மாவடுகளை மிஸ் பண்ணி விட்டேன்!!
இப்போது மாங்காய் சீசன் ஆரம்பித்து விட்டது. இங்கிருந்து கொண்டே மாங்காய்களுக்கான பெருமூச்சு தொடர்கின்றது. இங்கு, [துபாய், ஷார்ஜா ] கேரளத்து மாங்காய்கள் மே மாத வாக்கில் வர ஆரம்பிக்கும். அது மிகவும் சுவையாக இருக்கும். [என்ன இருந்தாலும் நம் கிளிமூக்கு மங்காய்களுக்கு கிட்டே வர முடியாது!] அவற்றை வாங்கி வெந்தய மாங்காய் ஊறுகாய் போடுவது வழக்கம். இப்போதும் போட்டு விட்டேன்.  
  
ஜுன் மாதம் ஊருக்குச் செல்லவிருப்பதால் மனம் இப்போதே மாங்காய்களுக்காக காத்திருக்க ஆரம்பித்து விட்டது. கிளி மூக்கு மாங்காய்களை நல்லதாய் கெட்டியாய் தேர்ந்தெடுத்து மாங்காய்த்தொக்கு, வெந்தய மாங்காய்,  ஆவக்காய் ஊறுகாய்கள் தவிர மாங்காய்களை அரிந்து இந்த சுக்கு வெய்யிலில் வற்றல் போடும் வேலையும் ஆரம்பித்து விடும். மாங்காய்களை குறுக்காக விரல் நீளத்திற்கு அரிந்து துண்டுகள் போட்டு உப்பு நீரில் கலந்து நன்றாக காய வைத்தால் மாங்காய் வற்றல் தயாராகி விடும். மயிலாடுதுறைப்பக்கம் தண்னீரில் மாங்காய்த்துண்டுகள் போட்டு, உப்பும் போட்டு, ஒரு கொதி வந்ததும் தண்ணீரை முழுவதுமாக வடித்து, மாங்காய்த்துண்டுகளை சுக்கலாகக் காய வைத்து எடுப்பார்கள். அவையும் மிகவும் சுவையாக இருக்கும். இந்த வற்றல்கள் வருடக்கணக்கில் கெடாது இருக்கும். வேண்டும்போது சில வற்றல்களை எடுத்து வென்னீரில் போட்டு வைத்தால் அவை சில மணி நேரங்களில் மிருதுவாகி விடும். பின் அவற்றை வற்றல் குழம்பில் போட்டு  உபயோகிப்பது வழக்கம். சீசன் இல்லாத நேரங்களில் என் மாமியார் அப்படி ஊறவைத்த மாங்காய்த் துண்டுகளில் ஊறுகாய் போட்டு ஜாடியில் நிறைத்து வைப்பார்கள். அத்தனை சுவையாக இருக்கும். சீக்கிரமே ஜாடி காலியாகியும் விடும்!!

ஒரு முறை ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் உணவருந்தச் சென்றிருந்தோம். அப்போது பரிமாறிய மாங்காய் ஊறுகாய் அப்படியே அசத்தி விட்டது. மாங்காய்த்துண்டுகளில் கலோஞ்சி விதைகள் தூவி, சீனிப்பாகு ஊற்றியிருந்தார்கள். அதன் சுவை மயக்க, உடனேயே சமையல் நிபுணரை அழைத்து, பாராட்டி, அதன் செய்முறையையும் வாங்கி செய்து பார்த்து விட்டேன். சுவை அத்தனை அற்புதம்!

இதற்கெல்லாம் அப்புறம் தான் கடாரங்காய், நார்த்தை, எலுமிச்சை, நெல்லி ஊறுகாய்கள். கடாரங்காய், நார்த்தையில் வெல்லம் சேர்த்து செய்யும் ஊறுகாய்கள் மிக மிக ருசியாக இருக்கும்.  கடாரங்காய் ஊறுகாய் எப்போதும் வீட்டில் இருக்கும். எலுமிச்சை மட்டும் தான் கடைசி லிஸ்ட்டில் இருக்கும்.

இங்கு பெரும்பாலும் வருடம் முழுவதும் நெல்லிக்காய்க்ள் கிடைக்கும். சில சமயங்களில் மாங்காய் இஞ்சியும் நிறைய கிடைக்கும். இப்போது வரப்போவது மாங்காய் இஞ்சி தக்காளி ஊறுகாய்!!

மாங்காய் இஞ்சியைப்பற்றி சில வார்த்தைகள்!



மாங்காய் வாசத்துடன் இஞ்சி சுவையுடன் இஞ்சி போன்ற தோற்றத்திலிருப்பதால் மாங்காய் இஞ்சி என்று பெயர்  அமைந்திருக்கிறது. இதில் உடலுக்குத்தேவையான அத்தனை தாதுப்பொருள்களும் விட்டமின்களும் இருக்கின்ற‌ன. அதனால் அடிக்கடி மாங்காய் இஞ்சியைச் சேர்ப்பது உடம்புக்கு நல்லது. முக்கிய‌மாக  வயிற்றுக்கோளாறுகளுக்கு மிகவும் நல்லது. இது வாயுவை நீக்கி, கெட்ட பாக்டீரியாக்களை அழித்து, குடலில் நிறைந்திருக்கும் நச்சுப்பொருள்களை அழிக்கும் சக்தி வாய்ந்தது. இதன் துருவல்களைக்கொண்டு சாதத்தில் சேர்த்து சாப்பிடுவதும் சிறு துண்டுகள் செய்து எலுமிச்சை ரசம் கலந்து உப்பு சேர்த்து சாப்பிடுவதும் மிகவும் நல்லது.

மாங்காய் இஞ்சி ஊறுகாய்


தேவையானவை:

மாங்காய் இஞ்சி தோல் சீவிய துன்டுகள்- ஒரு கப்
தக்காளியை ஒன்று பாதியாய் அரைத்தது- ஒன்றரை கப்
பொடியாக நறுக்கிய சிறு பூண்டுகள்- ஒரு கைப்பிடி
நல்லனெண்ணெய் -அரை கப்
பொன்னிறமாக வறுத்த வெந்தயம்- ஒரு ஸ்பூன்
பொரித்த பெருங்காய்த்துண்டுகள்- அரை நெல்லி அளவு
மிள‌காய்த்தூள் -ஒரு மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் -அரை ஸ்பூன்
தேவையான உப்பு
எலுமிச்சம்பழம் -ஒன்று
கடுகு -ஒரு ஸ்பூன்

செய்முறை:

வறுத்த சாமான்களைப் பொடித்துக்கொள்ள‌வும்.
மாங்காய் இஞ்சித்துண்டுகளை துருவிக்கொள்ள‌வும்.
நல்லெண்ணையை ஒரு வாணலியில் கொட்டி குறைந்த தீயில் சூடாக்கவும்.
கடுகைப்போட்டுப் பொரிந்ததும் மாங்காய்த்துருவலை பூண்டு, மஞ்சள் தூளுடன் சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.
பிறகு தக்காளி சேர்த்து தீயை சற்று அதிகமாக்கி சமைக்கவும்.
தக்காளி நன்கு வெந்து தண்ணீர் வற்றி எண்ணெய் மேலே மிதக்க ஆரம்பித்ததும் மிள‌காய்த்தூள், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்துக்கிளறவும்.
சில நிமிடங்கள் கழித்து பொடித்த தூள்கள் சேர்த்துக் கலக்கவும்.
சுவையான மாங்காய் இஞ்சி ஊறுகாய் தயார்!

குறிப்பு:

தக்காளியின் தன்மையைப்பொறுத்து சில சமயம் மிளகாய்த்தூள் சற்று அதிகமாகத் தேவைப்படலாம். சுவைத்துப்பார்த்து, சற்று கூடுதலாக மிளகாய்த்தூள் சேர்த்துக்கொள்ள‌லாம்.
படங்கள்: கூகிள்

 

38 comments:

சாரதா சமையல் said...

முதல் பதிவு என்னுடைய மலரும் நினைவுகளை ஞாபாக படுத்தி விட்டது. அக்கா நான் இன்று தான் கூழ் வடகம் போட்டு அதற்குரிய போட்டோஸ் எடுத்து விட்டேன். கூடிய சீக்கிரம் பதிவு கொடுக்கிறேன்.மாங்காய் இஞ்சி ஊறுகாய் அப்படியே எடுத்து சாப்பிடணும் போல இருக்கு. மிக அருமை அக்கா.

Menaga Sathia said...

நாவூறுது ஊறுகாயை பார்க்கும்போது,நார்த்தங்காய் வெல்லம் ஊறுகாய் செய்முறையும் போடுங்களேன்..

KILLERGEE Devakottai said...


புகைப்படம் அல்வா போல இருக்கிறதே.... ஸூப்பர்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

தாங்கள் சொல்லியுள்ள அனைத்து ஊறுகாய்களும் அருமை. எனக்கு எல்லாவிதமான ஊறுகாய்களும் காரசாரமாகவும் புத்தம் புதிதாகவும் நிறம் கருத்துப்போகாமல் சிவப்பாக இருந்தால் மட்டுமே பிடிக்கும். மாவடு மட்டும் ஆறு மாதங்கள் ஆனாலும் பிடிக்கும்.

அருமையான அழகான நாவூறவைக்கும் பதிவு. படங்களும் ஜோர். பகிர்வுக்கு நன்றிகள்.

ப.கந்தசாமி said...

ஊறுகாய்கள் அதிக நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்க தேவையான உப்பும் புளிப்பும் இருக்கவேண்டும். புளிப்பு இல்லாத காய்களுக்கு எலுமிச்சை சாறு அல்லது வினிகர் சேர்த்தலாம். தவிர கெமிக்கல்ஸ்ஸுக்கு ஆட்சேபணை இல்லாதவர்கள் KMS - Potassium Meta bi-sulphite கொஞ்சம் சேர்க்கலாம். இதைச் சேர்த்தால் உயிருக்கு ஆபத்து என்று நினைப்பவர்கள் சேர்க்கவேண்டாம்.

Vijiskitchencreations said...

Yummy recipe & my favorite is curd rice and mango pickle.


ஸ்ரீராம். said...

தக்காளி, பூண்டு, தேங்காய்த் துண்டுகள் சேர்த்ததில்லை. இது மாதிரி ஒருமுறை செய்து பார்த்து விடலாம்.

ஊறுகாய் மாவடு, ஆவக்காய் என்று சொல்லி அதிகாலையில் மோர்சாதத்தைத் தேட வைத்து விட்டீர்கள்!

திண்டுக்கல் தனபாலன் said...

ஸ்ஸ்ஸ்... முடியலே... யப்பா...!

நாங்களும் செய்து பார்க்கிறோம்... நன்றி...

priyasaki said...

ஊறுகாய் பற்றிய பதிவு நாவூற வைத்திட்டீங்க. அம்மா எலுமிச்சையில் போட்டு காயவைத்தா போகவர எடுத்து ருசித்திடுவோம். மாங்காஇஞ்சி ரெசிபி பார்க்கவே நல்லாயிருக்கு. நன்றி

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

தலைப்பைவிட்டு வெளியே வர மனம் ஒப்பவில்லை. நன்கு யோசித்து வைத்துள்ளீர்கள். ஊறுகாய் சகாப்தம் என்ற இப்பதிவு, ஊறிய காய், ஊறும் காய் என்ற அனைத்து நிலைகளிலும் பொருந்தும்.

இந்தியன் எக்ஸ்பிரசில் வந்த எனது நேர்காணலை வாசிக்க வருக.
http://www.ponnibuddha.blogspot.com/2015/06/tracing-footprints-of-buddhism-in-chola.html

ADHI VENKAT said...

சுவையான ஊறுகாய் பதிவு. குறிப்புகளும் பிரமாதம் அம்மா. செய்து பார்க்கிறேன்.

கீதமஞ்சரி said...

நாவூறச் செய்யும் பதிவு. நன்றி மனோ மேடம்.

தி.தமிழ் இளங்கோ said...

அன்புடையீர் வணக்கம்!
இந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அவர்களால் தங்களின் வலைத்தளத்தின் ஒருசில பதிவுகள், வலைச்சரத்தில் இன்று (02.06.15) அடையாளம் காட்டப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் + இனிய நல் வாழ்த்துக்கள்.

வலைச்சர இணைப்பு இதோ:
http://blogintamil.blogspot.in/2015/06/2.html

yathavan64@gmail.com said...

அன்புடையீர்! வணக்கம்!
இந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (02/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை வலைச்சரத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
வலைச்சர இணைப்பு: http://blogintamil.blogspot.fr/2015/06/2.html
திருமதி. மனோ சாமிநாதன் அவர்கள்
வலைத்தளங்கள்:
கை மணம்
முத்துச்சிதறல்
http://muthusidharal.blogspot.in/2015/04/blog-post.html
எதைத்தான் சாப்பிடுவது ?
http://manoskitchen.blogspot.in/2015/04/blog-post.html
அவல் பாயஸம்
http://muthusidharal.blogspot.in/2014/12/blog-post.html
உதவி எனப்படுவது யாதெனில்
http://muthusidharal.blogspot.in/2014/09/blog-post.html
நார்த்தங்காயும் பல்வலியும்
http://muthusidharal.blogspot.in/2014/03/blog-post.html
இதெற்கென்ன தீர்வு ?

நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
FRANCE.

Yarlpavanan said...

பயன்தரும் ஊறுகாய்
சிறந்த வழிகாட்டல்
தொடருங்கள்

shameeskitchen said...

சுவையான பதிவு..அருமையாக இருக்கு இஞ்சி ஊறுகாய்...
நீங்க மயிலாடுதுறையா?

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி சாரதா! சீக்கிரம் கூழ்வற்ற‌ல் குறிப்பு வெளியிடுங்கள்! ஊருக்குப்போகும்போது நானும் செய்து பார்க்கிறேன்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி மேனகா! ஊருக்குப்போனதும் நார்த்தை ஊறுகாய் செய்து படத்துடன் குறிப்பையும் போடுகிறேன்!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கு அன்பு நன்றி கில்லர்ஜி! ஊறுகாய் உங்களுக்கு அல்வாவை நினைவூட்டுகிறதே!

மனோ சாமிநாதன் said...

நிச்சயம் நீங்கள் இந்தப்பதிவை ரசிப்பீர்கள் என்று எதிர்பார்த்தேன் சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்! கருத்துரைக்கும் பாராட்டிற்கும் இனிய நன்றி!

மனோ சாமிநாதன் said...

ஊறுகாய் கெடாமலிருக்க தாங்கள் சொல்லியுள்ள ஆலோசனைகளுக்கு மனமார்ந்த நன்றி சகோதரர் பழனி கந்த‌சாமி!

மனோ சாமிநாதன் said...

வாருங்கள் விஜி! ரொம்ப நாட்கள் கழித்து நீங்கள் இங்கு வந்து பின்னூட்டமிட்டது மகிழ்வாக இருக்கிற்து!

நிலாமகள் said...

தக்காளி, எலுமிச்சைக்கு பதிலாக சிறிது புளி சேர்த்தது உண்டு. அதுவொரு சுவை. தோல் நீக்கிய மாங்காய் இஞ்சித் துண்டுகளோடு வறுத்த மிளகாய், பெருங்காயம், புளி, உப்பு சேர்த்து மிக்சியில் அரைத்து தாளித்து வதக்கி விடலாம். அடுத்த தடவை உங்க முறைப்படி செய்துவிட வேண்டியதுதான்.

மனோ சாமிநாதன் said...

தேங்காய்த்துண்டுகளை இதில் நான் சேர்க்கவில்லை ஸ்ரீராம்! அவசியம் ஒரு முறை இந்த ஊறுகாயை செய்து பாருங்கள்!

வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி!

மனோ சாமிநாதன் said...

அவசியம் வீட்டில் இந்த ஊறுகாயைச் செய்து பார்க்கச் சொல்லுங்கள் தனபாலன்!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி பிரியசகி!

மனோ சாமிநாதன் said...

அருமையான பின்னூட்டத்திற்கு இனிய் நன்றி சகோதரர் ஜம்புலிங்கம்!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி ஆதி!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி கீதமஞ்சரி!

மனோ சாமிநாதன் said...

வலைச்சர பகிர்விற்கு அன்பு நன்றி சகோதரர் தமிழ் இளங்கோ!

மனோ சாமிநாதன் said...

வலைச்சர பகிர்விற்கு அன்பு நன்றி சகோதரர் வேலு!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி யாழ்ப்பாவணன்!

மனோ சாமிநாதன் said...

வலைச்சர பகிர்விற்கு அன்பு நன்றி ஆதி!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி ஷாமீ! நான் தஞ்சையைச் சேர்ந்தவள். மயிலாடுதுறை என் மரும‌களின் ஊர்!

மனோ சாமிநாதன் said...

வாங்க நிலாமகள்! குறிப்பிற்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி!

saamaaniyan said...

அம்மா...

இந்த பதிவை படித்ததுமே எங்களின் பூர்வீக வீட்டு வாழ்க்கையின் ஞாபகங்களுக்கு தாவிவிட்டது மனம்...

ஊறுகாய் தொடங்கி, முறுக்கு வத்தல், புளி கொட்டை நீக்குதல், தேங்காய் எண்ணை தயாரித்தல், கோலா மீன் கருவாடு என ஆண்டுதோறும் அட்டவணை போட்டு, எங்கள் பாட்டியுடன் சேர்ந்து தெருவே களைகட்டும் !...

இன்று எல்லாமே மாசுபட்ட " மேகி " பாக்கெட் உணவாக சுருங்கிவிட்டது !

நன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr

எனது புதிய பதிவு : " பொறுமை என்னும் புதையல் ! "
http://saamaaniyan.blogspot.fr/2015/06/blog-post.html
தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள். நன்றி

மனோ சாமிநாதன் said...

உங்களைப்போலவே நிறைய பேருக்கு மலரும் நினைவுகள் வந்து விட்டது சாமானியன்! ஊறுகாய், வற்ற‌ல் போடுதல் போன்ற நல்ல பழக்கங்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து போய்க்கொண்டிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.
நீங்கள் சொன்ன மாதிரி ரெடிமேட் விஷயங்கள் வந்து வயிற்ரைக் கெடுத்துக்கொன்டிருக்கின்றன! இன்றைய இளைய தலைமுறை மாறினால் தான் இந்த மாதிரி பழைய விஷயங்களை மீட்டெடுக்க முடியும்!

வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி!

Thulasidharan V Thillaiakathu said...

புளி சேர்த்து செய்ததுண்டு...இம்முறையில் இப்போது தங்களிடம் கற்றுக் கொண்டுவிட்டாயிற்று...இப்படியும் செய்துட்டாப் போச்சு....மாங்காய் இஞ்சி மிகவும் பிடிக்கும்....சும்மா கீறி சிறு துண்டுகளாக்கி உப்பிட்டாலே சுவையாகவும் இருக்கும்....