Monday 26 August 2013

எழில்மிகு பாண்டுரங்கன் கோவில்!

ரொம்ப நாட்களாகவே தஞ்சையிலிருந்து என் சம்பந்தி இல்லத்திற்கு மயிலாடுதுறை செல்லும்போதெல்லாம், திருவிடை மருதூரைத்தாண்டியதும் இடது பக்கம் தென்படும் அழகிய கலையழகு மிக்க கோவில் மனதை எப்போதும் ஈர்த்துக்கொண்டே இருந்தது. இந்த முறை அதற்கென நேரம் வகுத்துக்கொண்டு, அதைப்பார்க்க என் சினேகிதியுடன் சென்றே விட்டேன்.
உள்ளே நுழைந்ததுமே அதன் அழகும் கலை வேலைப்பாடுகளும் நம்மை அப்படியே அசத்துகிறது.


வெளியிலிருந்து முகப்பு
இது மராட்டிய மாநில பண்டரிபுரம் பாண்டுரங்கர் ருக்மணி  கோயிலின் சாயலாகவே பல கோடி ரூபாய் செலவில் பலவேலி நிலத்தில் கட்டப்பட்டுள்ளது.
வட இந்தியாவைப்போல் பாண்டுரங்கர் - ருக்மணி உருவங்களை
கையினால் தொட்டு வணங்கலாம்
கோவிந்தபுரம் என்ற ஊரில் இது அமைந்திருக்கிறது. முழுக்க முழுக்க மராட்டியப் பாணியில் அதாவது பண்டார்பூரில் உள்ள அசல் கோயிலைப் போலவே கட்டப்பட்டுள்ளது.


உள்ளிருந்து முகப்பு
இக்கோயில் சூரிய நமஸ்காரத்தில் உள்ள 132 பஞ்ஜாதியை (பிரிவு) வெளிப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது 40 அடி உயரத்திற்கு தளமும், அதன் மீது 92 அடி உயரத்திற்கு கோபுரமும் வட மாநில கட்டட வேலைப்பாடுடன் கட்டப்பட்டு உள்ளது. 18 என்பது ஜெயத்தை குறிக்கும் என்பதால் அதனை வெளிப்படுத்தும் வகையில் கோயில் விமானத்தின் மீது வைப்பதற்காக 18 அடி உயரத்திற்கு செப்புக்கலசம் செய்யப்பட்டு, பக்தர்கள் அதனை சுற்றி வந்து வழிபட வசதி செய்யப்பட்டுள்ளது. 27 நட்சத்திரங்களை குறிக்கும் வகையில் நுழைவாயிலில் 27 படிக்கட்டுகள் உள்ளன. கோயில் உள்பகுதியில் தெய்வங்கள், மகான்கள், யானை சிற்பங்கள் செய்யப்பட்டு கதவுகளில் பொருத்தப்பட்டுள்ளது. கோயிலின் வடக்கு பகுதியில் தீர்த்தக்குளம் இருக்கிறது.


கோவிலின் மேற்புறமும் கோபுரமும்

எங்கிருந்து பார்த்தாலும் மக்கள் காணக்கூடிய வகையில் 132 அடி உயரம் கொண்ட பிரம்மாண்டமான கோபுரம் கட்டப்பட்டுக் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. பச்சைப் பசேல் என்ற வயல்களின் மையத்தில் அமைந்துள்ள கோவிலும், அதன் கோபுரமும் காண்போர் கண்களுக்கு மிகப் பெரிய விருந்து!.


கோவிலின் தோற்றம்
சுவாமியின் பள்ளியறை அமைந்துள்ள மகா மண்டபம் தென்னிந்தியக் கலைநயத்தைப் பறைசாற்றும் வகையில் அரைவட்ட வடிவில் கட்டப்பட்டுள்ளது. நாம சங்கீர்த்தனம், பஜனை, உபன்யாசம் முதலிய நிகழ்ச்சிகள் நடைபெறும் வசந்த மண்டபம் தூண்கள் எதுவுமின்றிக் கட்டப்பட்டுள்ளது மிகவும் ஆச்சரியம் அளிக்கும் விஷயம்!. சுமார் 2000 பேர் அமர்ந்து நிகழ்ச்சிகளைக் காணும் வகையில் வசந்த மண்டபம் விசாலமாகக் கட்டப்பட்டுள்ளது. மண்டபத்தின் மேல் விதானத்தில் அற்புதமான ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.


அழகிய சுதை வேலைப்பாடு

இதை மராட்டியப் பாணியில் கட்டுவதற்காக மராட்டிய மாநிலத்திலிருந்து ஸ்தபதிகள் வரவழைக்கப்பட்டனர். அவர்களுடன் தமிழக ஸ்தபதிகளும் இணைந்து இந்த அழகான கோவிலைக்கட்டியுள்ளார்கள்!


பக்த பாண்டுரங்கனின் அழகிய சிலை

பாண்டுரங்கன் ஆஸ்ரமம் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் அமையப் பெற்றுள்ளது. இரண்டு பிரிவுகளாக அமைந்துள்ள இவற்றில் பெரும்பான்மையான இடங்கள் பசு வளர்ப்புக்காக பயன்படுத்தப்படுகிறது. சுமார் 400 பசுக்கள் இக்கோயிலைச் சேர்ந்த கோசாலையில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
தினமும் பசு வழிபாடான கோபூஜைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது.

ஆஸ்ரமத்தின் செயல்பாடுகளால் கவரப்பட்ட இப்பகுதி மக்கள் தங்கள் நிலப்பகுதியை ஆஸ்ரமத்தின் செயல்பாட்டிற்கு தர மனமாற முன்வந்து ஆஸ்ரமத்தின் பணிகளை விரிவடையச் செய்துள்ளனர்.












 

37 comments:

'பரிவை' சே.குமார் said...

பாண்டுரங்கன் கோவிலைப் பற்றி அறியத் தந்தீர்கள் அம்மா...

படங்கள் அழகு.

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஆஹா, உங்களிடமிருந்து கோயிலைப்பற்றிய ஒரு பதிவா என முதலில் நான் வியந்து போனேன்.

>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

//வெளியிலிருந்து முகப்பு இது மராட்டிய மாநில பண்டரிபுரம் பாண்டுரங்கர் ருக்மணி கோயிலின் சாயலாகவே பல கோடி ரூபாய் செலவில் பலவேலி நிலத்தில் கட்டப்பட்டுள்ளது.

வட இந்தியாவைப்போல் பாண்டுரங்கர் - ருக்மணி உருவங்களை
கையினால் தொட்டு வணங்கலாம்

கோவிந்தபுரம் என்ற ஊரில் இது அமைந்திருக்கிறது.

முழுக்க முழுக்க மராட்டியப் பாணியில் அதாவது பண்டார்பூரில் உள்ள அசல் கோயிலைப் போலவே கட்டப்பட்டுள்ளது.//

ஆம், இந்தக்கோயில் எழுப்பபட்ட பணியினில் ஏதோ ஒரு வழியினில், கொஞ்சூண்டு என்னையும் ஈடுப்டச் செய்தவர் அந்த பாண்டுரங்கன்.

இராமாயணத்தில் ஸ்ரீராமருக்கு அணில் உதவியது போல.

>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

//பெரும்பான்மையான இடங்கள் பசு வளர்ப்புக்காக பயன்படுத்தப்படுகிறது.

சுமார் 400 பசுக்கள் இக்கோயிலைச் சேர்ந்த கோசாலையில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

தினமும் பசு வழிபாடான கோபூஜைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது. //

இதில் மேலும் ஒரு ஆச்சர்யம் என்னவென்றால், மதுராபுரியில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் மேய்த்து வந்த பசுக்களின் வம்சாவழியில் வந்த பசுமாடுகள் தான் இவை.

இவை தமிழ்நாட்டு பசுக்கள் அல்ல.

பார்த்தாலே வித்யாசம் நன்கு தெரியும்.

இவற்றை அங்கிருந்து மிகவும் கஷ்டப்பட்டு, இங்கு கூட்டி வந்து வளர்த்து வருகிறார்கள்.


>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

இந்தக்கோயில் கோவிந்தபுரத்தில் இவ்வளவு சிறப்பாக அமைந்துள்ளது, கும்பகோணம் மற்றும் தமிழ்நாட்டுக்கே மிகவும் பெருமை தான்.

இந்தக்கோயில் இவ்வளவு செலவில் இவ்வளவு நிறைவாக இங்கு அமையப்பெற்றதற்கு, முழுமுதல் காரணமாகச் சொல்ல வேண்டும் என்றால் முன்பு ஸ்ரீ ஜயகிருஷ்ண தீக்ஷிதர் என்றும், இன்று விட்டல் தாஸ் மஹராஜ் என்றும் அழைக்கப்பட்டு வரும், ஸ்ரீ பாண்டுரங்க பக்தர் தான்.

மக்கள் திலகம் திரு எம்.ஜி.ஆர். அவர்களுக்கு அன்று முதல் இன்று வரை எவ்வளவு மக்கள் செல்வாக்கு உண்டோ, அதே போல் ஆன்மிகட் துறையில் இவருக்கும் உண்டு.

இவர் பாண்டுரங்கன் மேல் பக்தியுடன் பாடல் பாட ஆரம்பித்தால், மெய் மறந்து இவர் பின்னால் தொடர்பவர்கள் லக்ஷக்கணக்கில் இன்றும் உண்டு.

சென்னை ரெங்கநாதன் தெருவில் இவர் ஒருநாள் பாடிச்செல்லும் போது, லக்ஷக்கணக்கான மக்கள், மெய்மறந்து தாளமிட்டபடி கூடவே செல்ல. போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்துப்போனது.

இவருக்கு, மக்களை வசீகரிக்கும் தெய்வாம்சம் பொருந்திய குரல்வளம் உண்டு.

இதற்கெல்லாம் ஸ்ரீ பாண்டுரங்கனின் அருள் + திருவிளையாடல்கள் மட்டுமே காரணம்.


>>>>>









வை.கோபாலகிருஷ்ணன் said...

பண்டரீபுரத்தில் உள்ள ஸ்ரீ பாண்டுரங்கன் கோயிலையும், கோவிந்தபுரத்தில் உள்ள இந்தப்புதிய ஆலயத்தையும் நேரில் சென்று தரிஸித்துள்ளேன்.

வாய்ப்புக்கிடைத்தால் இந்தக்கோயிலின் கலை அழகுகளை அனைவருமே வாழ்க்கையில் ஒரு முறையாவது கண்டு களிக்க வேண்டும்.

பகிர்வுக்கு நன்றிகள். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

பண்டரீபுரத்தில் உள்ள ஸ்ரீ பாண்டுரங்கன் கோயிலையும், கோவிந்தபுரத்தில் உள்ள இந்தப்புதிய ஆலயத்தையும் நேரில் சென்று தரிஸித்துள்ளேன்.

வாய்ப்புக்கிடைத்தால் இந்தக்கோயிலின் கலை அழகுகளை அனைவருமே வாழ்க்கையில் ஒரு முறையாவது கண்டு களிக்க வேண்டும்.

பகிர்வுக்கு நன்றிகள். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

கோமதி அரசு said...

பசு வளர்ப்புக்காக பயன்படுத்தப்படுகிறது. சுமார் 400 பசுக்கள் இக்கோயிலைச் சேர்ந்த கோசாலையில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. //

பசுக்கள் எல்லாம் பிரந்தாவனம் , மதுராவிலிருந்து கொண்டு வந்தவை.
கண்ணன் விளையாடிய பசுக்களின் வாரிசுகள் என்பார்கள்.
ஆயர்பாடியில் உள்ள பசுக்கள் ஓவியம் பார்த்து இருப்போம் அல்லவா! அது போலவே தான் அழகாய் இருக்கும்.வட நாட்டு யாதவர்கள் தான் பசுக்களை நன்கு கவனித்துக் கொள்ள இங்கு வந்து இருக்கிறார்கள்.

ப.கந்தசாமி said...

ரசித்தேன்.

RajalakshmiParamasivam said...

அடிக்கடி மயிலாடுதுறை செல்பவள் நான். இந்தக் கோவில் பற்றித் தெரியவில்லையே!அடுத்த முறை கண்டிப்பாக தரிசனம் செய்யவேண்டும்

இராஜராஜேஸ்வரி said...

உள்ளே நுழைந்ததுமே அதன் அழகும் கலை வேலைப்பாடுகளும் நம்மை அப்படியே அசத்துகிறது.

அருமையான கோவில் .. பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..!

நிலாமகள் said...

ஆஹா, உங்களிடமிருந்து கோயிலைப்பற்றிய ஒரு பதிவாஆஹா, உங்களிடமிருந்து கோயிலைப்பற்றிய ஒரு பதிவா//

எனக்கும் வியப்புதான்!

மேலும், இப்பசுக்களிடமிருந்து பெறப்படும் பால் தினசரி சுற்றுகிராம மக்களுக்கு இலவசமாக காலை நேரங்களில் கோவிலில் வழங்கப் படுவதாகக் கேள்வி.

ஒரு பஜனைமடம் இத்துணை வளர்ச்சி அடைந்தது பக்தியின் உச்சமே.

இன்றிரவு கிருஷ்ண ஜெயந்திக்காக சுவாமி புறப்பாடும், செப்.1 அன்று திருக்கல்யாணத்துக்காக திரளும் சீர் வரிசை ஊர்வலமும் ஆண்டு தோறும் வளர்ந்தபடியே. கோவையிலிருந்து வரும் பெருந்திறள் மக்களில் உங்க தோழியும் வந்திருக்கலாம்.

கே. பி. ஜனா... said...

அற்புதமானதொரு கோவிலைப் பற்றி அமோகமானதோர் பதிவு!

இளமதி said...

கண்கவர் காட்சி! அத்தனையையும் மிகமிக நேர்த்தியாகப் படம் பிடித்து எமக்குக் காட்டியுள்ளீர்கள்!

அருமை மனோ அக்கா!

பகிர்விற்கு மிக்க நன்றி!

மகேந்திரன் said...

கோயிலை பற்றிய தகவலும்..
படங்களும்
மனம் நிறைக்கிறது அம்மா...

கரந்தை ஜெயக்குமார் said...

இக் கோயிலுக்குச் சென்றிருக்கின்றேன். அருமையான வேலைபாடமைந்த கோயில்.
அருமையான பதிவு
அறியாத பல செய்திகளையும் அறியத் தந்தமைக்கு நன்றி சகோதரியாரே

கதம்ப உணர்வுகள் said...

அன்பு வணக்கங்கள்...

கோவிந்தப்புரத்திற்கே கூட்டிட்டு வந்துட்டீங்க மனோம்மா...

போன வருடம் நாங்க ஊருக்கு போயிருந்தப்ப அம்மா என்னிடம் சொன்னது.. கண்டிப்பா கோவிந்தப்புரம் போயிட்டு வாங்க.

அங்க என்ன ஸ்பெஷல்னு கேட்டப்ப பாண்டுரங்கர் கோயில் இருக்குன்னு சொன்னாங்க...

என்ன விஷேஷம்னு கேட்டப்ப.. இந்த கோயில் ஸ்தாபிதம் செய்யும் முன்னர் அம்மாவும் பெரியம்மாவும் போனார்களாம்... அம்மாவின் பாஸ்போர்ட் தொலைந்தபோது...

அங்கே இருந்த பெரியவர் சொன்னது.. இந்த தேதிக்குள் உனக்கு பாஸ்போர்ட் கிடைத்துவிடும் என்றும் 32 சுற்று சுற்றிவிட்டு செல்லுங்கள்..

இப்ப அதுபோல சுற்ற இயலாது...

ஆச்சர்யம்.. பாஸ்போர்ட் அவர் சொன்ன தேதியில் கிடைத்தது, தொலைந்த பாஸ்போர்ட் அல்ல.. புதியதே... எத்தனை அற்புதம்..

பாண்டுரங்கன் கோயிலுக்குள் போனபோது திரும்ப வெளியே வர மனமே இல்லை..

இப்ப இந்த படங்களை பார்த்ததும் மீண்டும் அங்கே சென்று வந்த நிறைவு மனோம்மா..

எப்படி இருக்கீங்க சௌக்கியமா?

ரொம்ப நாள் கழித்து உங்க வலைப்பக்கம் வந்திருக்கேன் மனோம்மா..

மனம் நிறைந்த அன்பு நன்றிகள் பகிர்வுக்கு...

ஸ்ரீராம். said...


இந்தக் கோவில் பற்றி அப்பாதுரை சொல்லக் கேள்விப் பட்டிருக்கிறேன்.

கோமதி அரசு மேடம் ஊர் வேற ஆச்சே மயிலாடுதுறை? அவர்களைச் சந்திக்கவில்லையா!

Anonymous said...

கோவிலின் தோற்றப் படம் 4வது. மிக அழகாக உள்ளது.
பதிவிற்கு நன்றி.
தகவல்கள் எப்போதும் இனிக்கும் தானே!
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் பாராட்டுக்கும் அன்பு நன்றி குமார்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் பாராட்டுக்கும் அன்பு நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்! இதற்கு முன்பே நான் கோவில்களைப்பற்றி பதிவுகள் எழுதியிருக்கிறேனே! நீங்கள் அவற்றைப் படித்து பாராட்டியும் இருக்கின்றீர்கள்! நான் வியந்த கலையழகு மிக்க, சரித்திரப்புகழ் பெற்ற கோவில்களை நான் எப்போதுமே ஆர்வமாய் பதிவிட்டுக்கொண்டு தானிருக்கிறேன்!!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு அன்பு நன்றி கோமதி அரசு!

மனோ சாமிநாதன் said...

ரசித்ததற்கு அன்பு கனிந்த நன்றி சகோதரர் பழனி கந்தசாமி!

மனோ சாமிநாதன் said...

கும்பகோண‌த்திலிருந்து மயிலாடுதுறை செல்லும்போது, திருவிடை மருதூர் தாண்டியதும் இடது பக்கம் உடனேயே இந்தக் கோவில் வந்து விடும். அடுத்த முறை அவசியம் பாருங்கள் ராஜலக்ஷ்மி!!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்களுக்கு அன்பு நன்றி ராஜராஜேஸ்வரி!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு அன்பு நன்றி நிலாமகள்! என்னுடன் வந்ததே என் கோவை சினேகிதி தான்!!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றி சகோதரர் ஜனா!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கும் கருத்துரைக்கும் இனியநன்றி இளமதி!

மனோ சாமிநாதன் said...

அருமையான பின்னூட்டத்திற்கு அன்பார்ந்த‌ நன்றி மகேந்திரன்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் பின்னூட்டத்திற்கும் மனங்கனிந்த நன்றி சகோதரர் ஜெயக்குமார்!

மனோ சாமிநாதன் said...

வாருங்கள் மஞ்சுபாஷிணி! ரொம்ப நாட்களுக்குப்பினால் உங்களை இங்கு பார்ப்பது மகிழ்வாக இருக்கிறது! வழக்கம்போல அருமையான பின்னூட்டம் தந்தற்கு அன்பு நன்றி!!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கு அன்பு நன்றி ஸ்ரீராம்! மயிலாடுதுறை சகோதரி கோமதியின் ஊரா? தெரிந்திருந்தால் நிச்சயம் சென்று பார்த்திருப்பேன்! அதனாலென்ன, அடுத்த முறை மயிலாடுதுறை செல்லும்போது அவசியம் பார்த்து விடலாம்!!

மனோ சாமிநாதன் said...

வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் கருத்துரைக்கும் இனிய நன்றி வேதா!

தி.தமிழ் இளங்கோ said...

திருவிடைமருதூர் – மாயவரம் மார்க்கமாக செல்லும்போது கோவிந்தபுரம் – பாண்டுரங்கன் கோயில் நுழைவு வாயிலைப் பார்த்து இருக்கிறேன். விவரம் தெரியாது. உங்கள் பதிவின் மூலம் அதிக தகவல்களைத் தெரிந்து கொண்டேன்..வாய்ப்பு அமையும் போது இந்த கோயிலுக்கு சென்று வரவேண்டும். திரு VGK அவர்களின் கருத்துரைகளும் சென்று வர ஆவலைத் தூண்டுகின்றன பகிர்வுக்கு நன்றி!

வை.கோபாலகிருஷ்ணன் said...

தி.தமிழ் இளங்கோ said...

வாருங்கள், வணக்கம்.

//வாய்ப்பு அமையும் போது இந்த கோயிலுக்கு சென்று வரவேண்டும். திரு VGK அவர்களின் கருத்துரைகளும் சென்று வர ஆவலைத் தூண்டுகின்றன பகிர்வுக்கு நன்றி!//

மிக்க நன்றி ஐயா. தாங்கள் புறப்படும் முன் என்னிடம் சொல்லிவிட்டுச் செல்லுங்கள், ஐயா.

தங்களுக்கு திவ்ய தரிஸனம் கிடைக்க என்னால் முடிந்த ஒருசில மிகச்சிறிய உதவிகள் செய்யக்கூடும்.

அன்புடன் VGK

இராஜராஜேஸ்வரி said...

கோவிந்தனின் குழலிசையைக் கேட்டு வளர்ந்த வம்சாவழிகள் என்பதை பசுக்களின் காதுகள் மற்ற பசுக்களின் காதுகளை விட நீண்டு வளர்ந்திருப்பதன் மூலம் அறியலாம் ..

காதுகளை பார்த்தால் ஆச்சரியமாக அழகாக நீண்டு இருந்தன.
கண்ணனின் புல்லாங்குழல் இசையை காது குளிரக்கேட்டதால் இப்படி நீண்டுவிட்டனவாம் ..!

வை.கோபாலகிருஷ்ணன் said...

//இராஜராஜேஸ்வரி said...

கோவிந்தனின் குழலிசையைக் கேட்டு வளர்ந்த வம்சாவழிகள் என்பதை பசுக்களின் காதுகள் மற்ற பசுக்களின் காதுகளை விட நீண்டு வளர்ந்திருப்பதன் மூலம் அறியலாம் ..

காதுகளை பார்த்தால் ஆச்சரியமாக அழகாக நீண்டு இருந்தன.

கண்ணனின் புல்லாங்குழல் இசையை காது குளிரக்கேட்டதால் இப்படி நீண்டுவிட்டனவாம் ..!//

இதைத்தங்கள் வாயால் இங்கு கேட்க என் காதுகளும் நீண்டு விட்டது போன்ற ஓர் பிரமை ஏற்படுகிறதே! ;)))))

அப்புறம் நம் திருமதி நிலாமகள் அவர்கள் எழுதியுள்ள கமெண்ட்டை மீண்டும் முழுவதுமாகப் படியுங்கோ, ப்ளீஸ்.

அது யாருக்காக எழுதப்பட்டுள்ளது?

யாரைப்பற்றி எழுதப்பட்டுள்ளது?

என்பதில் எனக்கோர் சந்தேகம் உள்ளது.

குறிப்பாக அந்தக்கடைசி வரிகளில் .....

*****

கோவையிலிருந்து வரும் பெருந்திரளான மக்களில் உங்க தோழியும் வந்திருக்கலாம்.

*****

அன்புடன் VGK