Tuesday, 25 June 2013

வலி!!

வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அனுபவம் தான்.

 மகிழ்வானதாக அவை இருக்கும்போது உலகிலுள்ள வலிகளை நாம் மறந்து விடுகிறோம். அவற்றை அவ்வப்போது நினனவு படுத்துவதற்குத்தானோ என்னவோ, நமது மனத்திடத்தை நொறுக்கவும் கண்ணீரைக்கொட்டவும் பிறர் கருணையை எண்ணி நெகிழவும் நமக்கு பலவித அனுபவங்கள் வாழ்க்கை முழுவதும் கிடைத்துக்கொண்டே இருக்கின்றது.

கடந்து சென்ற 30 நாட்கள் வாழ்க்கையில் திரும்பவும் வரக்கூடாது என்று பிரார்த்தனை செய்யும் அளவிற்கு மனம் துவளச் செய்தவை. இதில் ஒரு பகுதி, சொந்த அனுபவம் என்ற போதிலும் இதை வெளியிடுவதன் மூலம் தெரிந்தோ தெரியாமலோ தினசரி தவறான உணவுப்பழக்கங்களையும் நடைமுறைகளையும் கடைபிடித்து வரும் எத்தனையோ பேருக்கு எச்சரிக்கையைத் தர நினைத்தே கடந்து சென்ற 30 நாட்களின் அனுபவங்களை இங்கே எழுத ஆரம்பிக்கிறேன்.

வலி என்பது உடலால் அனுபவிக்கும் வலி மட்டுமல்ல. அந்த வலியை நாம் அனுபவிக்கும்போது நமது பிரியத்துக்குரியவர்கள் மனதால் அனுபவிக்கும் வலி அதையும் விட அதிகமானது, கொடுமையானது.

சென்ற மாத இறுதியில், எங்களுக்கு நன்கு பழகிய ஒரு தமிழ் நண்பர் திடீரென உடல் நலக்குறைவுடன் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்றுக்கொண்டிருப்பதாக செய்தி வந்ததும் உடனே சென்று பார்த்தோம். இரவு தூங்கச் சென்றவர் எழுந்து வாந்தி எடுத்து கீழே மயங்கி விழவே, அவர் மனைவி உடனேயே அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அழைத்துச் சென்று மருத்துவ மனையில் சேர்த்தார்கள். பரிசோதனை முடிவில் அவருக்கு அதிக இரத்த அழுத்தம் காரணமாக மூளைக்குச் செல்லும் ஒரு இரத்தக்குழாயில் இரத்தக்கசிவாகிக் கொண்டிருப்பது தெரிந்தது. உடனேயே அவருக்கு அங்கே அறுவை சிகிச்சை செய்தார்கள். மனைவியும் மகனும் கண்ணீருடன் வெளியில்!

இங்கேயெல்லாம் நோயாளியுடன் யாரும் தங்க அனுமதிக்கப்படுவதில்லை. அவரின் மனைவி மகனுடன் காலை மாலை என, மருத்துவ மனை அனுமதிக்கும் நேரத்தில் வந்து அவரிடம் புரியும்படி நிறைய பேசி தைரியம் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். என்னைப் பார்த்ததும் அவரின் மனைவி உடைந்து போய் அப்படியே அழுதார். நிலைமையின் தீவிரம் புரியும்போது சில சமயங்களில் ஆறுதல் சொல்வது கூட கடினமாகப் போய் விடுகிறது. ஒரு நிமிடம் மனதில் ‘ இந்த அறுவை சிகிச்சையே ஊரில் நடந்திருந்தால் எத்தனை பகீரென்று இருந்திருக்கும்! சுற்றி எத்தனை உறவினர்கள் நின்று கொண்டிருந்திருப்பார்கள்!’ என்ற நினைப்பு வந்து போனது!

அந்த நண்பர் கடின உழைப்பாளி. அதே சமயம் அதிக செலவாளி. வங்கிகளில் செய்த சில குளறுபடிகளால் சிறை தண்டனை வரை போய் இன்னொரு நண்பரின் உதவியால் அதிலிருந்து சமீபத்தில்தான் விடுபட்டு வந்தார். அவரின் பிரச்சினைகளும் அதன் நிர்ப்பந்தகளும் இந்த நிலைமைக்கு முக்கிய காரணம்.. அதனாலேயே அவரின் இரத்த அழுத்தம் மிக அதிகமாயிருக்கிறது. அவரும் தன்னை கவனிக்காமலிருந்திருக்கிறார். எல்லாமாகச் சேர்ந்து அவரை இப்படித் தாக்கி விட்டது.

தற்போது ஒரு மாதிரி தேறி வீட்டுக்கு வந்து விட்டார். எழுந்து நடமாடவும் டாய்லட் தனியே செல்லவும் அவரால் முடிகிறது. வருபவர்களை நன்கு புரிந்து கொண்டு பேசுகிறார் என்றாலும் அவர்கள் சென்றதும் ‘ அவர்கள் யார் ’ என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். மருத்துவர் மெல்ல மெல்ல அவர் முழுவதுமாக குணமாகி விடுவார் என்று உறுதி கூறியிருக்கிறார்.

இன்னொரு நெருங்கிய நண்பர். இவருடன் தான் மேற்சொன்ன நபரைப்பார்த்து வந்தோம். இவருக்கு சமீப காலமாக முதுகெலும்பு பகுதியில் நல்ல வலி. ஆனாலும் அந்த வலியுடன் தொடர்ந்து அதிக வேலைகளிலும் அலைச்சல்களிலும் ஈடுபட்டுக்கொண்டேயிருந்தார். அதிக சர்க்கரை அளவிற்காக இன்சுலின் போட்டுக்கொள்வதும் உயர் இரத்த அழுத்தமுமாக இருந்த அவரின் மனைவி தன் கணவரின் உடல் நிலையை நினைத்துப்புலம்பியவாறே படுத்தவர் காலையில் கண் விழித்துப்பார்க்கவில்லை. சிறிது நேர முயற்சிக்குப்பிறகு கண் விழித்து உட்கார்ந்தவர் தனக்கு ஒன்றுமில்லை, நன்றாகத்தானே இருக்கிறேன் என்றும் பேசியிருக்கிறார். இருப்பினும் அவரது கணவர், டெல்லியில் மருத்துவ இயல் மேற்படிப்பு படித்துக்கொண்டிருக்கும் தன் மகனுக்கு ஃபோன் செய்து பேசியிருக்கிறார். அவர் தன் அம்மாவைப்பேசச் சொல்லியிருக்கிறார். சிறிது பேசிய பின் தன் தந்தையிடம் ‘ அம்மாவின் குரல் குளறி இருக்கிறது. அம்மாவுக்கு ஸ்ட்ரோக் வந்திருக்கிறது என்று சந்தேகப்படுகிறேன். உடனடியாக அம்மாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள்’ என்று சொல்லியிருக்கிறார்.

எங்கள் நண்பரோ பொதுவாகவே தனது, தனது வீட்டினரின் உடல் நிலையைப்பற்றி அதிகம் மற்றவர்கள் தெரிந்து கொள்ளக்கூடாது என்று நினைப்பவர். நோய்கள் பற்றி எத்தனை சொன்னலும் மனதில் வாங்கிக் கொள்ள மாட்டார். மகன் அப்படிச் சொல்லியும் நிதானமாக குளித்து விட்டு, லிஃப்ட் இல்லாத அந்த கட்டிடத்தில் மனைவியை முதல் தளத்திலிருந்து, அத்தனை உயரத்திலிருந்து தானே மெதுவாக இறக்கிக் காரில் ஏற்றி தானே வண்டியை ஓட்டிக்கொண்டு, நான்கு மணி நேரங்கள் டிராபிக் ஜாமில் மாட்டி, கிட்டத்தட்ட 25 கிலோ மீட்டர் தூரத்திலிருக்கும் துபாய்க்கு வந்து மருத்துவ மனையில் சேர்ப்பதற்குள் அவர் மனைவி மயங்கிச் சரிந்தவர் அதன் பின்னர் எழுந்திருக்கவே இல்லை. இந்த நிமிடம் வரை படுக்கையில் தான் இருக்கிறார். முழித்துக்கொண்டிருக்கிறாரே தவிர, வலது கை, வலது கால் செயல்பாடுகள் இல்லாமல் பேச இயலாமல் யாரையும் அடையாளம் தெரிந்து கொள்ள இயலாமல் இருக்கிறார். தற்போது சென்னையில் அப்பல்லோவில் சிகிச்சையில் இருக்கிறார். இந்த நிகழ்வு முதலாம் நண்பருக்கு உடல் நலம் சரியில்லாது போன அடுத்த வாரத்திலேயே நிகழ்ந்தது.

மருந்துகளை முறையாக எடுத்துக்கொள்ளாமல் அலட்சியம் காட்டுவது, என்னால் எப்படி உப்பு, நெய்யில்லாமல் சாப்பிட முடியும் என்பது, போதுமான ஓய்வின்மை, பிரச்சினைகளை தானாகவே இழுத்துப்போட்டுக்கொள்வது, போதுமான செல்வ வளம் இருந்தாலும் இன்னும் மேலே மேலே தேடி அலைவது- இப்படி எத்தனை பேர் மருத்துவ ஆலோசனைகளை உதறித்தள்ளி அலட்சியமாக இருக்கிறார்கள்!

தொடரும்.. ..!

39 comments:

Yaathoramani.blogspot.com said...

பயனுள்ள தொடரை அருமையாக
துவக்கியிருக்கிறீர்கள்
அதிக எதிர்பார்ப்புடன் தொடர்கிறோம்
தொடர வாழ்த்துக்கள்

இளமதி said...

மனோ அக்கா...

பேச வார்த்தை இல்லை அக்கா.
விக்கித்துபோனேன்...:’(

இப்படி அலட்சியமாக நடக்கவும் கூடாது ஓவராக ஸ்ரெயின் பண்ணி தன்னலம் கெட தானே காரணமாகவும் கூடாதுதான்.

ஆனால் ஒரு சம்பவத்தில் நடந்ததை யாருமே காணாமல் போய் அதனால் வந்த விளைவால் உயிர் மட்டும் இருக்கின்றது தன் உணர்வுகள் ஏதுமின்றி...
அவருடன் உற்ற உறவாக இருப்பவருக்கு எப்படி அக்கா ஓவர்ஸ்ரெய்ன் வராமல் போகும்...

இதற்கு எவ்வகையில் வைத்தியமோ மருந்தோ கிடைக்கும்..

பதைக்கவைக்கும் உங்கள் பதிவு. அறிவு பூர்வமாக அலெட்சியமில்லாமல் வாழ்கையை கொண்டு நடத்த உபயோகமான அறிவுரையுடன் கூடியது.
பகிர்தலுக்கு மிக்க நன்றி அக்கா!

திண்டுக்கல் தனபாலன் said...

ஏன் தான் இப்படி உடம்பை கவனிக்காமல் அலட்சியமாக வீம்பு பிடிக்கிறார்களோ...? ம்... வருத்தமாக இருக்கிறது... விரைவில் நலம் பெறட்டும்...

Radha rani said...

வரும் முன் காப்பது நன்று..இதை எல்லாரும் தெரிந்திருந்தாலும் வாழ்க்கை ஓட்டத்தில ஒரு சிலர்அஜாக்கிரதையாக இருந்து விடுகிறார்கள். விதிப்படி வாழ்க்கை என்று நினைப்பவர்கள் இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள்.பகிர்விற்கு நன்றி மேடம்.

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

பொதுவாகவே பிறரின் மகிழ்ச்சியை விட துயரம் என்னைச் சட்டென ஈர்ப்பது.

உங்களின் பதிவில் நீங்கள் பகிர்ந்து கொண்ட நண்பர்களின் அவர்களின் குடும்பத்தினரின் உடல்நலமின்மையின் நிவாரணத்துக்காக நான் ஆண்டவனிடம் மனமுருகிப் ப்ரார்த்தனை செய்து கொள்கிறேன்.

அவர்களின் ஆரோக்கியம் விரைவில் சீராகட்டும்.

கவியாழி said...

உண்மைதான் மனவலி மிகக்கொடுமையானதே

நிலாமகள் said...

ரொம்ப நாளாக் காணலையேன்னு நினைச்சேன். காரணம் புரிந்தது. நமக்கும் நம்மைச் சுற்றி உள்ளவர்களுக்கும் இதெல்லாம் ஒரு எச்சரிக்கை தான்.

உங்க நண்பர்கள் நலம் பெறட்டும்.

வெங்கட் நாகராஜ் said...

பயனுள்ள தொடர்....

தொடர்கிறேன்.

பதிவில் சொல்லப்பட்ட உங்கள் நண்பர்கள் விரைவில் குணமடைய எனது பிரார்த்தனைகளும்....

ஸாதிகா said...

மருந்துகளை முறையாக எடுத்துக்கொள்ளாமல் அலட்சியம் காட்டுவது, என்னால் எப்படி உப்பு, நெய்யில்லாமல் சாப்பிட முடியும் என்பது, போதுமான ஓய்வின்மை, பிரச்சினைகளை தானாகவே இழுத்துப்போட்டுக்கொள்வது, போதுமான செல்வ வளம் இருந்தாலும் இன்னும் மேலே மேலே தேடி அலைவது- இப்படி எத்தனை பேர் மருத்துவ ஆலோசனைகளை உதறித்தள்ளி அலட்சியமாக இருக்கிறார்கள்!
//ரொப சரியாக சொன்னீர்கள் அக்கா.தவறு என்று தெரிந்துமே இப்படி எத்தனையோ தவறுகளை செய்யத்தான் செய்கிறோம்.நல்ல விழிப்புணர்வு ஊட்டும் பகிர்வு.விரைவில் அடுத்த பகுதியப்போடுங்கள்.

கரந்தை ஜெயக்குமார் said...

ஒரு தனி மனிதனின் அலட்சியம், குடும்பத்தையே அல்லவா பாதிக்கும்.மிகவும் பயனுள்ள தொடர். தொடர்கிறேன்.

ஸ்ரீராம். said...

கஷ்டமாக இருக்கிறது.
பயமாகவும்.
நான் கூட கொஞ்சம் மெதுவாகத்தான் மருத்துவ உதவி நாடும் பழக்கம் உள்ளவன். கொஞ்சம் சுதாரிப்பாக இருக்கத் தோன்றுகிறது.
அவர்கள் இருவரும் விரைவில் அவர்கள் பிரச்னையிலிருந்து முற்றிலும் குணமாக எங்கள் பிரார்த்தனைகள்.

பால கணேஷ் said...

நண்பர்களின் அனுபவங்கள் மனசைக் கரைத்தன. பொதுவாக உடல்நிலை நமக்கு சரியில்லை சிக்னல் கொடுக்கும் சமயம் கை வைத்தியமாக மருந்துகள் சாப்பிட்டு அதை அலட்சியப்படுத்தும் நபர்களையும் நான் கண்டதுண்டு. விளைவு.... நீங்கள் சொன்னது போல தனக்கு உடல் உபாதையும் பிறர்க்கு மன உபாதையும் மட்டுமே! மிக அவசியமான பகிர்வு! தொடர்கிறேன் நான்!

கோமதி அரசு said...

உங்கள் இரு நண்பர்களின் உடல் நலம் விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்.
எல்லோரும் பிராத்தனை செய்துக் கொள்வோம் அவர்கள் நலமடைய.
நல்ல விழிப்புணர்வு பதிவு.

RajalakshmiParamasivam said...

உங்கள் பதிவு நல்ல விழிப்புணர்வு பதிவு.
நாம் அல்ட்சியம்க் செய்யும் சில விஷயங்களுக்குப் பின்விளைவுகள் எத்தனை மோசமானவை என்பதை விவரிக்கும் பதிவு.
விரைவில் நலம் பெற வாழ்த்துக்கள்....

Asiya Omar said...

மனோ அக்கா,இந்த தொடர் நிச்சயமாக பல பேருக்கு பயன் தரப்போகும் விழிப்புணர்வு தொடராக இருக்கும்.போனில் நீங்கள் தகவல்களை பரிமாறியிருந்தாலும் இதனை வாசிக்கும் பொழுது இன்னும் வலி அதிகமாகிறது.தொடருங்கள்.

ezhil said...

அருமையான பதிவு... சிறு அலட்சியங்கள்தான் பெரிய விளைவுகள் உருவாக்குகிறது என்பது உண்மை...அதிலும் பெரும்பாலும் வீட்டிலுள்ள பெண்களிடம் அந்தப் போக்கு அதிகம் உள்ளது..நீங்கள் கூறியபடி உப்பு புளி, காரம் சேர்க்காமல் எப்படி வாழ முடியும் எனக் கேட்கும் நட்புகளும் உள்ளனர்...உடலுக்கு உகந்ததில்லையெனில் ஒதுக்கித்தானே ஆக வேண்டும்.

இமா க்றிஸ் said...

நல்லதோர் விழிப்புணர்வுக் கட்டுரை. அருமையான ஆரம்பம். தொடருங்கள் அக்கா, நானும் தொடர்கிறேன்.

கீதமஞ்சரி said...

வருமுன் காப்பது போல் உடல்நலத்தில் அக்கறையும் உணவுப்பழக்கவழக்கத்தில் எச்சரிக்கையும் இருந்தால் கூடுமானவரை வரும் வியாதிகளைத் தவிர்க்க இயலாவிட்டாலும் ஒத்தியாவது போடலாம். எதிலும் அலட்சியம் காட்டாமல் ஆரம்பத்திலேயே கவனித்துக்கொள்வது நல்லது. படுக்கையில் விழுந்தால் நமக்கு மட்டுமல்லாது நம்மைச் சார்ந்தவர்களுக்கும் எவ்வளவு மனக்கஷ்டம், சிரமம்! உடல்நலம் குறித்து விழிப்புணர்வூட்டும் பதிவுக்கு நன்றி மேடம். நண்பர்கள் விரைவில் குணமடைய என் பிரார்த்தனைகள்.

'பரிவை' சே.குமார் said...

நல்ல தொடர்...

படிக்கும் போது வருத்தமாக இருக்கிறதம்மா.

மனோ சாமிநாதன் said...

மன வலிகளின் பின்னணியில் இந்தப்பதிவுத்தொடரை எழுதக்காரணமே நிறைய பேருக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டுமேன்பது தான்! வருகைக்கும் கருத்துரைக்கும் அன்ப நன்றி சகோதரர் ரமணி

மனோ சாமிநாதன் said...

விரிவாக மன உணர்வுகளுடன் பின்னூட்டமிட்டிருப்பதற்கு நன்றி இளமதி இதைப்படிக்கும் யாரேனும் ஒருத்தர் தனது அலட்சியங்களைக் கை விட்டு தன குடும்பத்துக்காக தன உடல் நலத்தைப்பாதுகாக்கத்தொடங்கினால் அதுவே இந்தப்பதிவை எழுதியிருப்பதற்கு கிடைத்த பெரிய பயனாக நான் கருதுவேன்!

மனோ சாமிநாதன் said...

தங்களின் கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் தனபாலன்!

மனோ சாமிநாதன் said...

பலர் எல்லாம் தெரிந்திருந்தும் அஜாக்கிரதையாக இருப்பது தான் சரியான வார்த்தை ராதா! ஆனால் அதற்கு விலையாக அவர்கள் கொடுப்பதை இன்று பல வீடுகளில் பார்க்கும்போ து அடி வயிற்றில் பயம் தான் எழுகிறது!

மனோ சாமிநாதன் said...

மனமுருகி, , அதுவும் முன்பின் தெரியாத யாருக்கோ பிரார்த்தனை செய்வதென்பது ஒரு பெரிய வரம் சகோதரர் சுந்தர்ஜி ! தங்களின் கருணைக்கு என் இதயம் நிரைந்த நன்றி!!

மனோ சாமிநாதன் said...

கொடுமையான இந்த மனவலி எல்லோருக்கும் குறைய வேண்டுமென்று நாம் இங்கே பிரார்த்தனை செய்வோம் சகோதரர் கவியாழி கண்ணதாசன்!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கு மனம் நிறைந்த நன்றி நிலாமகள்!!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்கும் நல்ல வார்த்தைகளுக்கும் அன்பு நிறை ந்த நன்றி சகோதரர் வெங்கட் !

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்கும் கருத்துரைக்கும் இனிய நன்றி ஸாதிகா

மனோ சாமிநாதன் said...

தனி மனிதனின் அலட்சியப்போக்கும் மெத்தனமும் தான் அவனது குடும்பத்தின் துன்பங்களுக்குக் காரணம் என்று நீங்கள் சொல்லியிருப்பது மிகவும் சரியான விஷயம் சகோதரர் ஜெயக்குமார்! வருகைக்கும் கருத்திற்கும் அன்பு நன்றி!!

மனோ சாமிநாதன் said...

அவசியம் நீங்கள் சுதாரிப்பாக இருக்க வேண்டும் சகோதரர் ஸ்ரீராம் ! எந்த நேரத்தில் எந்த பிரச்சினை உயிர்க்கொல்லி போல் வாழ்க்கையினுள் புகும் என்பது நமக்கே புரியாத விஷயம்!

மனோ சாமிநாதன் said...

தங்களின் பிரார்த்தனைக்கு மனம் நிறைந்த நன்றி சகோதரர் ஸ்ரீராம்!

Anonymous said...

மிக நல்ல பதிவு. பலர் விழிப்புணர்வு அடைய உதவும்.
அதிகாலையில் பச்சை வெண்டிக்காய் சாப்பிடுவது,
பாகற்காய் சாப்பிடுவது. துளசி இலை உண்பது போன்ற ஆரோக்கிய செயல்கள் கசர்க்கரை வியாதியாளருக்கு நல்லது என்றால் சிரிக்கிறார்கள் ஐயோ என்று.
ருசி அல்ல ஆரோக்கியமே தேவை
பாராட்டுகள்.
வேதா. இலங்காதிலகம்.

மனோ சாமிநாதன் said...

அருமயான கருத்துரை தந்தீர்கள் சகோதரர் பாலகனேஷ்! சின்னச் சின்ன பிரச்சினைகளுக்கு மட்டுமே கை வைத்தியம் பலனளிக்கும். வித்தியாசமான பிரச்சினைக்களுக்கு உடனேயே மருத்துவரை அணுகுவதன் மூலம் எத்தனையோ துன்பங்களை வர விடாமல் தடுக்கலாம்.

மனோ சாமிநாதன் said...

வாழ்த்துக்கள், பிரார்த்தனைகளுக்கு அன்பு நன்றி சகோதரி கோமதி!

மனோ சாமிநாதன் said...

அர்த்தமுள்ள கருத்துரை தந்ததற்கு மனமார்ந்த நன்றி ராஜலக்ஷ்மி!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி ஆசியா!

மனோ சாமிநாதன் said...

அருமையான பின்னூட்டத்திற்கு அன்பு நன்றி எழில்! நீங்கள் சொன்னது போல அலட்சியமும் சோம்பேறித்தனமும் பல இன்னல்களை உருவாக்குகிறது.

மனோ சாமிநாதன் said...

அன்பான பிரார்த்தனைக்கும் அருமையான பின்னூட்டத்திற்கும் இனிய நன்றி கீதமஞ்சரி!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி குமார்!