ரொம்ப நாட்களுக்குப்பின் தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு ஆரோக்கியமான திரைப்படம் வெளி வந்திருக்கிறது! மன வளர்ச்சி குன்றிய ஒருவனுக்கும் அவனது மகளுக்கும் இடையேயுள்ள பாசப்பிணைப்பு தான் கதையின் உட்கரு. மன வளர்ச்சி குன்றிய ஒருவனை விரும்பி மணம் புரிந்ததற்ககாக தன் பெண்ணைப் புறக்கணிக்கிறார் தந்தை. அவன் [ பெயர் கிருஷ்ணா] ஊட்டி அருகே ஒரு கிராமத்தில் சாக்லேட் ஃபாக்டரியில் வேலை செய்ய, அவள் அவனுக்கு ஒரு பெண் குழந்தையைப் பெற்றுக்கொடுத்து மறைகிறாள். குழந்தைக்கு ஐந்து வயதாகும்போது, அவளை இனம் கண்டு கொண்ட பாட்டனார், அவனையும் குழந்தையையும் தானே வைத்து காத்து வருவதாக சாக்கலேட் உரிமையாளரிடம் கூறி, போகும் வழியில் முன்பின் தெரியாத சென்னையில் காரிலிருந்து கிருஷ்ணாவை மனித நேயமேயில்லாமல் இரவு நேரத்தில் இறக்கி விட்டுப்போகும்போது கதை ஆரம்பிக்கிறது! ஒன்றும் பேசத் தெரியாது, தன் பெண்ணான ‘நிலா’வைத் தேடுவதாகச் சொல்லி கிருஷ்ணா வழியில் பார்ப்பவர்களையெல்லாம் கேட்க ஆரம்பிக்கும்போது நம் மனமும் நெகிழ ஆரம்பிக்கிறது.
கிருஷ்ணாவும் நிலாவும் பேசுகிற பேச்சுக்கள், சிரிப்பு, தவிப்பு, கோப தாபம் எல்லாமே நம்மையும் அப்படியே கதைக்குள் இழுத்துச் செல்லுகிறது! பிறந்ததிலிருந்து அவனிடமே வளரும் குழந்தை அவனிடம் தென்படும் வித்தியாசங்களைப் பொருட்படுத்தாமல் அவனை அப்படியே தந்தையாக சுவீகரிப்பது, சக மாணவன் ‘ அவள் அப்பா பைத்தியம்’ என்று சொல்லும்போது, ‘ என் அப்பா பைத்தியம் இல்லை’ என்று சின்னக் குரலில் மறுத்துப்பேசும் அழகு, இருவரும் படுத்தவாறே ‘ கிருஷ்ணா வந்தாச்சி, நிலா வந்தாச்சி’ என்று பேசியவாறே சிகப்பு மை பூசிய விரல்களை ஆட்டுவது, ‘ என்னைக் காணோமென்றால் அந்த நிலா கிட்டே சொல்லுங்க’ என்று முழு நிலவைக் காண்பித்து தன் மழலைக்குரலில் மகள் சொன்னதற்காக, பிரிவு ஏற்பட்ட பின் தனித்தனியே இருவரும் வெண்ணிலவிடம் பேசுவது, இறுதிக்காட்சியில் புற நிகழ்வுகளை மறந்து, சுற்றியுள்ள மனிதர்களை மறந்து தங்களின் சங்கேத மொழியில் அபினயிப்பது என்று தந்தைக்கும் மகளுக்குமான பாசப்பிணைப்பு நம்மை படம் முழுவதும் நெகிழ வைத்துக்கொண்டே இருக்கிறது!
விக்ரம் கதை நாயகனான கிருஷ்ணாவாகவே வாழ்ந்திருக்கிறார். அவர் நடிகர் விக்ரம் என்பது நமக்கு நினைவுக்கு வருவதேயில்லை. பொதுவாகவே மன வளர்ச்சி குன்றியவர்கள் பேச முயலும்போது, முதலில் வார்த்தைகள் வராமல் நாக்கு சிறிது நேரம் மேலண்ணத்தில் ஒட்டி, சுழன்று அதன் பிறகு தான் தனது மனதிலுள்ளதைப் பேச முயற்சி செய்வார்கள். என் சகோதரி குடும்பத்திலும் சினேகிதி குடும்பத்திலும் பல வருடங்கள் இவர்களைப் பார்த்துப் பழகிய அனுபவம் அதிகம். விக்ரம் ஒவ்வொரு தடவையும் பேசும்போதும் அதை அப்படியே பிரதிபலித்துக் காட்டியிருக்கிறார். தனக்கென ஒரு பொக்கிஷம் மகள் உருவில் கிடைத்தால் அவர்கள் எப்படியெல்லாம் அந்தப் பாசத்தில் அமிழ்ந்து போவார்கள் என்பதையும் இயக்குனர் விஜய் அருமையாக உருவகப்படுத்தியிருக்கிறார்.
அந்தக் குழந்தை நிலா தன் அழகாலும் பேச்சாலும் நம்மை அப்படியே வசீகரிக்கிறது. பிரமிக்கத்தக்க வீடோ, உணவோ, விளையாட்டுப்பொருள்களோ, எதாலுமே ஈர்க்கப்படாமல் தன் தந்தையையே நினைத்து, நிலவைப்பார்த்துப் பார்த்து உருகும் அந்தக் குழந்தை நம் மனசையும் உருக வைக்கிறது!
சின்னச் சின்ன நிகழ்வுகள்- பணத்தைத் திருடியவன் கிருஷ்ணாவின் நிலையை அறிந்து, தான் கொஞ்சப்பணத்தை மட்டும் வைத்துக் கொண்டு கிருஷ்ணாவிடமே நிறைய பணத்தைத் திருப்பிக் கொடுத்து திருடுவதிலும் ஒரு நியாயத்தைக் காண்பிப்பது, தன்னை அடைத்து வைத்திருக்கும் நாசரின் வன்மம் புரியாமல் கிருஷ்ணா நாசருடைய குழந்தைக்காக ஓடிச்சென்று மருந்து வாங்கி வருவது, பைத்தியம் என்று சொல்லி கிருஷ்ணாவை மிரட்டும் அந்தப் பையன் மனம் மாறி கிருஷ்ணாவுக்கு முத்தம் கொடுப்பது என்று அழகழகாய்க் காட்சிகளைத் தொகுத்திருக்கிறார் இயக்குனர்.
அனுஷ்காவின் காதல் முதலில் கருணை, அப்புறம் அக்கறை என்று உருவாகி அப்புறம் காதலாக மாறுவதை இயக்குனர் ஒரே ஒரு பாடல் மூலம் காண்பிக்கிறார். அந்தப் பாடலில் அனுஷ்காவின் முக பாவங்கள் அற்புதம்! அந்தக் காதல் நிறைவேறுகிறதா இல்லையா என்பதற்கெல்லாம் இயக்குனர் கவலைப்பட்டுக்கொள்ளவில்லை. கதாநாயகனின் பல குண இயல்புகளால் ஈர்க்கப்பட்ட ஒரு பெண்ணின் மனதில் ஏற்படும் அழகான உணர்வுகள் என்ற வரையில் அதை அப்படியே விட்டு விடுகிறார்.
கடைசியில் தந்தையும் மகளும் இணையும்போது மனம் நிறைகிறது. இயக்குனர் அதை அப்படியே விட்டு விடாமல் மன உணர்வுகளைக்காட்டிலும் நியாயங்களே முக்கியம் என்பதைக் காட்டுகிறார். நாசர் கோர்ட்டில் வாதாடும்போது, ‘ உன்னால் இந்தக் குழந்தையை எப்படி டாக்டருக்குப் படிக்க வைக்க முடியும்?’ என்று கேட்டு நெஞ்சில் அறைவதைப்போல பல கேள்விகளை கிருஷ்ணாவிடம் கேட்கிறார். அந்தக் கேள்விகளிலுள்ள நியாங்களை அப்படியே உள்வாங்கிக்கொள்கிறது கிருஷ்னாவின் மனம். குழந்தை தூங்கியதும் அதை அப்படியே அள்ளிச் சென்று பாட்டனாரின் இன்னொரு மகளான அமலா பாலிடம் கொடுக்கிறார். இது தான் நியாயமென்று இயக்குனர் சொன்னாலும் யதார்த்தத்தை நம் மனம் ஏற்க மறுக்கிறது
இயக்குனர் விஜய் அங்கே தான் ஜெயிக்கிறார்.
ஏற்கனவே மிகச் சிறந்த ஓவியமாக ‘மதராசப்பட்டிணத்தைத் தீட்டியவர், மேலும் அழகான வண்ணக்கலவைகளைச் சேர்த்து இன்னுமொரு அழகான ஓவியத்தைக் கொடுத்துள்ளார். மன வளர்ச்சி குன்றியவர்களுக்கு மரியாதை செலுத்திய இயக்குனர் விஜய்க்கு ஒரு சல்யூட்!!
படங்களுக்கு நன்றி: கூகிள்
70 comments:
பாதி படம் போன வாரம் நெட்டில் பார்த்தேன் மீதம் இன்றைக்கு பார்க்கணும்
அதிசயமா உங்களிடமிருந்து சினிமா விமர்சனம். படம் உங்களை எவ்வளவு கவர்ந்துள்ளது என புரிகிறது. அனுஷ்கா பற்றிய வரிகளுக்கு ஸ்பெஷல் நன்றிகள் :))
படம் நீங்கள் சொன்னதுபோல அற்புதம், அருமை. அதுவும் கடைசிக் காட்சி சைகை பாஷைகள்... சான்ஸே இல்லை!! ஒவ்வொரு காட்சியும் பார்த்துப் பார்த்து செதுக்கப்பட்ட முறை, ஒன்றிரண்டு லாஜிக் மீறல்களையும் மறக்க மைக்கிறது.
ஆனால், திரைக்குப் பின்னால்.. அந்தச் சிறுமியின் நிகழ்காலம் - எதிர்காலம் என்று நினைக்கும்போது, ஏனோ அந்தச் சிறுமியின்மீது பிரமிப்பைவிட, பரிதாபம்தான் அதிகம் வருகிறது. அதை நிரூபிக்கிறது, இந்த வாரம் ஆனந்த விகடனில் அந்தச் சிறுமி கொடுத்திருக்கும் ”பேட்டி”!! பேட்டியெடுத்தவர், அவளை ஒரு நிமிடம்கூட முழுதாக அவளை ஒரு இடத்தில் இருக்கவைக்க முடியவில்லை என்றும் கூறியிருந்தார்!!
கடைசியில் தந்தையும் மகளும் இணையும்போது மனம் நிறைகிறது. //
ஹா ஹா ஹா ஹா நல்லா இருக்கு, மேடம் உங்களுக்கு எப்பிடி இதெல்லாம் பார்த்து பதிவு போட நேரமிருக்கு என்பதுதான் எனக்கு ஆ ஆ ஆ ஆ ஆ ஆச்சர்யமா இருக்கு வாழ்த்துக்கள் மேடம்....!!!!
அக்கா,அதென்னவொ தெரியவிலை.படம் பார்ப்பதென்றால் எனக்கு பொறுமையே இருப்பதில்லை.
உங்கள் விமர்சனத்தினைப் படித்தபின் படம் பார்க்கத்தோன்றுகிறது. சீக்கிரம் பார்த்து விடுகிறேன்.
தங்கள் சினிமா விமர்சனமே மிக நன்றாக உள்ளது.மன வளர்ச்சி குன்றியவரே ஒரு குழந்தை போலத்தான். அப்படிப்பட்டவருக்கு ஒரு குழந்தை என்பதால், படத்தை உடனே பார்க்க வேண்டும் என்ற ஆவலை உண்டாக்கியுள்ளீர்கள்.
பயனுள்ள பதிவுக்கு நன்றிகள்.
பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
விமர்சனம் சூப்பர்
nice
சினிமா விமர்சனம் தூள் ...உங்க விமர்சனத்தை பார்த்தா படம் பாக்கலாம்ன்னு நினைக்றேன் ....
"I am Sam" பாத்திருக்கேன். இந்த படத்த பாக்கலாமா வேண்டாமா-ன்னு யோசித்து கொண்டிருந்தேன். உங்க விமர்சனம் என் முடிவை நிர்ணயித்து விட்டது!
Excellent!!
படம் பார்க்கும் ஆவலைத் தூண்டியுள்ளீர்கள்!
ஹிந்தியில் அஜய் தேவ்கான் நடித்து , சுஸ்மிதா சென் வக்கீலாக அசத்திய படம்.
சில வருடங்களுக்கு பிறகு இப்போது தமிழில் இது எந்தளவுக்கு வந்திருக்குன்னு இப்ப நீங்க சொன்னதிலிருந்து புரிகிறது :-)
//ரொம்ப நாட்களுக்குப்பின் தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு ஆரோக்கியமான திரைப்படம் வெளி வந்திருக்கிறது!//
தொடக்கமே பாராட்டுதலுடன் விமர்சனம் ஆரம்பம்.. உங்கள் சிறந்த விமர்சன பதிவுக்கு பாராட்டுக்கள்
விகடனில் விமர்சனமும் சிறுமியின் பேட்டியும் இன்றுதான் வாசித்தேன். உங்கள் பார்வையில் அழகாக சொல்லியுள்ளீர்கள். படம் பார்க்கும் ஆவலை அதிகரித்து விட்டுள்ளீர்கள்.
உங்கள் விமர்சனம் கலக்கல்...நானும் இந்த படத்தை பார்த்தேன் ரொம்ப பிடித்திருந்தது...
உங்கள் விமர்சனமே மனதை நெகிழ வைத்து விட்டது. நன்றி மேடம்
வருகைக்கு அன்பு நன்றி கார்த்திக்! மீதத்தையும் பார்த்து உங்கள் கருத்தை எழுதுங்கள்!
நல்ல படங்கள் அதிசயமாய்த்தானே வருகிறது மோகன்குமார்? அதனால்தான் முதன்முதலாக விமர்சனம் எழுதினேன். அனுஷ்காவின் முக பாவங்களை அந்தப் பாடலில் மிக மிக ரசித்தேன் நான்!
நீங்களும் ரசித்துப்பார்த்ததை அறிந்து மகிழ்வடைந்தேன் ஹுஸைனம்மா! நீங்கள் சொன்னது மாதிரி அந்த கடைசி காட்சியில் அவர்களிருவரின் சங்கேத மொழியிலும் அபிநயத்திலும் கண்கள் கலங்குவதைத் தவிர்க்க முடியவில்லை! ஆரம்பத்தில் கொஞ்சம் இழுவை, சில இடங்களில் தேவையில்லா காமெடி என்று சிலச்சில குறைகள் இருந்தாலும் படத்தின் நெகிழ்வில் அவையெல்லாம் ஒரு பொருட்டாய்த் தெரியவில்லை!
ஆனந்த விகடன் இனிமேல் தான் வரும். படித்துப்பார்க்க வேண்டும்!
வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி சகோதரர் மனோ!
வாரம் ஒரு முறை தான் பதிவு போடுவதால் மனசை எதெல்லாம் பாதிக்கிறதோ, அதைப் பொறுமையாக எழுதி பதிவு போட போதுமான நேரமிருக்கிறது எனக்கு!
உண்மை தான் ஸாதிகா! இப்போதைய படங்களில் நிறையவற்றைப் பார்க்க மிகவும் பொறுமை தான் வேன்டும்! ஆனாலும் இந்த மாதிரி சில அருமையான படங்களை மிஸ் பண்ணி விடாதீர்கள்!!
கருத்துக்கு அன்பு நன்றி சகோதரர் வெங்கட் நாகராஜ்! சீக்கிரம் பார்த்து விட்டு உங்களின் விமர்சனத்தை எழுதுங்கள்!!
வாழ்த்துக்களுக்கும் பாராட்டுரைக்கும் அன்பு நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!
தங்களின் ஒற்றை வரி பாராட்டு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது சகோதரர் கோபி!
பாராட்டுக்கு அன்பு நன்றி மாலதி!
அவசியம் படத்தைப் பாருங்கள் கூடல் பாலா! என் விமர்சனம் சரியானது என்பதை உணர்வீர்கள்!!
ஆங்கிலப் படமான Iam Sam- ஐத்தழுவி இந்தப்படம் எடுக்கப்படாலும் மிக அருமையாக மன உணர்வுகளை செதுக்கியிருக்கிறார்கள் மாதங்கி! அவசியம் படத்தைப்பார்த்து விட்டுச் சொல்லுங்கள்!!
ஆவலை என் விமர்சனம் தூண்டி விட்டதாகத் தெரிவித்தது மகிழாயிருக்கிறது மாதவி!
ரொம்ப நாட்கள் கழித்து உங்கள் வருகை மகிழ்வைத் தருகிறது சகோதரர் ஜெய்லானி!
ஹிந்தியில் இப்படி ஒரு படம் வந்துள்ளது தெரியவில்லை! பெயர் தெரிந்தால் எழுதவும்.
அன்பான பாராட்டுதல்களுக்கு மனமார்ந்த நன்றி மாய உலகம்!
கருத்துரைக்கு இதயங்கனிந்த நன்றி ராமலக்ஷ்மி!
இனிமேல் தான் விகடனின் விமர்சனத்தைப் படித்துப்பார்க்க வேன்டும்!!
பாராட்டுதல்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி மேனகா!!
பாராட்டுரைக்கு மனமார்ந்த நன்றி சிவகுமாரன்!!
மனோ அக்கா நீங்களும் இப்போ பட விமர்சனம் செய்யத் தொடங்கிட்டீங்க..
நல்லபடம்போலதான் தெரிந்தது அட் பார்க்க. இப்போ நீங்க சொன்னதிலிருந்து நல்ல படமேதான், அழகாக வர்ணிச்சிட்டீங்க.
இந்தக் குழந்தை உண்மையிலேயே விகரத்தின் மகளோ? ஒரு சந்தேகம் அதுதான் கேட்டேன்....
நல்விமர்சனம். படம் நிச்சயம் பார்க்கணும்.
உங்கள் விமர்சனத்தினைப் படித்தபின் படம் பார்க்கத்தோன்றுகிறது. சீக்கிரம் பார்த்து விடுகிறேன்.
தங்களின் இந்த படத்தை பற்றிய விமர்சனத்தை படிக்கும் போது படத்தை சீக்கிரம் பார்க்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது.
மதராசபட்டினமும் அருமையான படம்.
http://kovai2delhi.blogspot.com/2011/07/blog-post_23.html
விமர்சனம் அருமையாக இருக்கு மேடம். படத்தை உடனடியாக பார்க்க தூண்டுகிறது..
நல்ல படம் வராதா என ஏங்கியவர்களின்
ஏக்கத்தை தீர்க்கும் விதமாக இந்தப் படம்
இருக்கும் என நினைக்கிறேன்
அது தங்கள் விமர்சனம் மூலம் தெரிகிறது
நல்ல விமர்சனம்.வாழ்த்துக்கள்
இன்னும் படம் பார்க்கவில்லை. நல்ல விமர்சனம்.
படம் இன்னும் பார்க்கவில்லை. விமரிசனம் பார்க்கத்தூண்டுகிறது!
அம்மா உங்கள் விமர்சன விததில் அப்படத்தை பார்க்க தூண்டுகிறது.
நிச்சயமாக பார்ப்பேன்.
பதிவுக்கு பாராட்டுக்கள்.
அன்புடையீர்!
வணக்கம்!
நான் சினிமாவே பார்பதில்லை
உங்கள் விமர்ச்சனம் கண்டபின்
இப்படத்தை பாரக்கலாமா...!
என, கருதுகிறேன்
புலவர் சா இராமாநுசம்
முடியும் போது நம்
வலைப் பக்கம் வரலாமே!
அருமைய மதிப்புரை..:))
padaththin name "theyvaththirumakal "
ithuthaane ?
pls.
அதிரா! ஒரு நல்ல படத்தைப் பார்த்த பின், அதன் பாதிப்பு தான் நம்மை விமர்சனம் எழுதத் தூண்டுகிறது! இது அந்த மாதிரியான படம்!
விக்ரம் மகளாக நடித்தது ' சாரா' என்ற மும்பையைச் சேர்ந்த சிறுமி!
பாராட்டிற்கும் வருகைக்கும் அன்பு நன்றி கலாநேசன்!
அவசியம் பாருங்கள் நிலாமகள்! இந்தப் படத்தில் தந்தை மகள் கூடவே இழைந்து வரும் நுண்ணிய உணர்வுகள் உங்கள் மனதுக்கு ரொம்பவே பிடிக்கும்!!
அன்பான கருத்துரைக்கு இனிய நன்றி ஆதி! அவசியம் படத்தைப் பாருங்கள்!!
படத்தைப் பார்த்து அவசியம் எப்படி ரசித்தீர்கள் என்று எழுதுங்கள் விடிவெள்ளி! படத்தின் பெயர் ' தெய்வத் திருமகள்'தான்!
வணக்கம் அம்மா அருமையான திரைப்பட விமர்சனம் .
இப்பெல்லாம் படம்பார்க்க நேரம்போதுவதில்லை இருந்தாலும்
தங்களின் விமர்சனம் கண்டபின் இந்தப் படத்தைப் பார்க்கவேண்டும்
என்று ஒரு ஆவல் எனக்குள் வந்துள்ளது .நன்றி பகிர்வுக்கு .
தியேட்டரில் படம் பார்த்து விட்டு வெளியில் வருபவர்கள் ஒவ்வொருவர் முகத்தையும் கூர்ந்து பார்த்து அழுதிருக்கிறார்களா என்று செக் செய்வதாக பார்த்து விட்டு வந்தவர்கள் சொன்னார்கள். சிற்சில குறைகளைத் தவிர படம் நன்றாக இருப்பதாகத்தான் எகொபித்ஹா அபிப்ராயம் சொல்கிறது. குறிப்பாக ஒட்டுமொத்தமாக பதிவுலகம் பாராட்டிய படம் தோல்வி அடைந்தது இல்லை!
அருமையாய் விமர்சனம் செய்திருக்கிறீர்கள்...... நான் கூட கொஞ்சம் கொஞ்சம் அந்த படம் பார்த்தேன். விக்ரமும் அந்த குட்டிப் பெண்ணும் அசத்தியிருக்கிறார்கள்..... நல்ல விமர்சனக் கட்டுரை....
ரொம்ப சரி மனோ மேடம். நன்றி. கதையின் முடிவில் எனக்கு ஒப்புதல் இல்லை. குழந்தை வளர்ப்பு என்பது சிறிய வயதில்தான் சிரமம் அதையே நன்றாக செய்ததாக காட்டி, இவர்களாலும் நார்மலாக இருக்க முடியும் - என்ன கொஞ்சம் மெதுவாக செய்கின்றனர்- என்று ஊக்கம் காட்டிய கதையமைப்பு கடைசியில் கவிழ்ந்துவிட்டது.
படத்தின் பெயர் ”Main Aisa Hi Hoon “
Starring Ajay Devgan,
Sushmita Sen,
Esha Deol,
Anupam Kher,
Release May 2005.
கிடைத்தால் பாருங்கள் . :-)
இனிய பாராட்டுக்கு அன்பு நன்றி ராம்வி!
வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் அன்பு நன்றி சகோதரர் ரமணி!
பாராட்டிற்கு அன்பு நன்றி வித்யா!
முதல் வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி சகோதரர் சென்னை பித்தன்!!
அன்புள்ள புலவர் ராமானுஜம் அவர்களுக்கு!
தங்களின் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி!
சினிமாவே பார்ப்பதில்லை என்று எழுதியிருந்தீர்கள்!
நம்பி இந்தப் படத்தை நீங்கள் பார்க்கலாம். ஒரு சில காட்சிகள் தவிர, நல் உணர்வுகளைக்காட்டும் சிறந்த படம் இது.
உங்களின் வலைத்தளத்திற்கு வந்து, பின்னூட்டமும் இட்டிருக்கிறேன்.
பாராட்டிற்கு அன்பு நன்றி தேனம்மை!
பாராட்டுக்கும் முதல் வருகைக்கும் அன்பு நன்றி அம்பாளடியாள்!
நானும் அவ்வளவாக திரைப்படங்கள் பார்ப்பதில்லை. பொறுக்கி எடுத்த திரைப்படங்கள் மட்டும்தான் பார்ப்பேன். அவசியம் இந்தத் திரைப்படம் பார்த்து விட்டு சொல்லுங்கள்.
உண்மைதான் சகோதரர் ஸ்ரீராம்! கடைசிக் காட்சியில் கண்களினின்றும் நீர் வழிவதை தவிர்க்க இயலவில்லை! நீங்கள் எழுதியது போல, ஒரு சில குறைகள் இருக்கத்தான் செய்கின்றன. அவையெல்லாம் படத்தின் தந்தையும் மகளும் நம்மை ஆக்ரமித்துக்கொள்வதால் அவ்வளவாகத் தெரியவில்லை!
உள்ளம் திறந்த பாராட்டிற்கு மனமார்ந்த நன்றி கிருஷ்ணப்ரியா!
கருத்துரைக்கு நன்றி சாகம்பரி!
கதையின் முடிவு, அவர்களிருவரின் பாசத்தில் மூழ்கிப்போயிருந்த நமக்குப்பிடிக்கவில்லை என்பது தான் நிஜம்! ஆனால் நடைமுறை வாழ்க்கைக்கு வெறும் அன்பு மட்டிலும் போதாது என்றுணர்ந்த கதாநாயகன் தன் குழந்தை மிக நல்ல வாழ்க்கை வாழ எடுத்த முடிவு இது! அவனால் வளர்க்க முடியாது என்று இயக்குனர் சொல்லவில்லை. அவன் சம்பாத்தியத்தில் அவன் குழந்தையை ஒரு மருத்துவராக ஆக்க முடியாது என்று நாசர் மூலம் சொல்லுகிறார். யதார்த்தமும் நியாயமுமாக இருந்த போதிலும் நம் மனசை அது தொடவில்லை! நிறைவையும் அது தரவில்லை!!
தகவலுக்கு அன்பு நன்றி சகோதரர் ஜெய்லானி! படம் பார்த்து விட்டு உங்களுக்குச் சொல்லுகிறேன்!!
இன்று எனது வலைப்பதிவில்
நவீனகால பிளாக் பெல்ட் கட்ட பொம்மன் ..
நண்பர்களே வந்து கண்டுகளித்து கருத்துகளை கூறுங்கள்
http://maayaulagam-4u.blogspot.com
விமர்சனம் நல்ல இருக்கு, விமர்சகியே, தொடரட்டும் உங்கள் விமர்சனம்.
நேற்றுத்தான் இப்படம் பார்த்தேன். உண்மையில் சில இடங்களில் என்னை அறியாமலே கண்கள் கலங்கிவிட்டன. இவ்வாறான பாத்திரங்களில் விக்ரம் பொதுவாக நன்றாகவே நடிப்பார். ஆனால், டைரக்டர் அந்தச் சின்னப் பெண்ணை எப்படி நடிக்க வைத்திருக்கின்றார். அம்மணிப்பொழுதுகள் நாமும் அத்திரைப்படத்துடன் வாழ்ந்தோம். கதை நகர்ந்து கொண்டிருக்கும் போது இப்படி நடக்குமோ அப்படி நடக்குமோ என்ற எதிர்பார்ப்பு இருந்தபடி இருந்தது. உங்கள் விமர்சனமும் திரைப்படத்தைப் பார்க்காதவர்களுக்கு பார்க்கத் தூண்டும் வகையில் அமைந்திருந்தது.
Post a Comment