Sunday, 31 July 2011

நட்பு- தொடர் பதிவு!

சகோதரி அதிராவின் அழைப்பிற்கு அன்பு நன்றி!

நட்புக்கு இலக்கணம் திருக்குறளில் ஆரம்பித்து,  புதினங்கள், தமிழ்க்கவிதைகள், பாடல்கள், திரைப்படங்கள் என்று பலவற்றிலும் வந்து விட்டது. சின்னஞ்சிறு வயதில், உலகம் தெரியாத அந்தப் பருவத்தில், நட்பு என்ற சொல்லின் அர்த்தம் கூடப் புரியாத காலத்தில் சக பள்ளித்தோழிகள், அதே தெருவில் வசித்த மற்ற தோழிகள் என்று ஒன்றாய் கூடித் திரிந்ததுவும் நிலாவில் பாடியும் ஆடியும் களித்ததுவும் இப்போது நினைத்துப்பார்த்தால் கூட அடிக்கரும்பை சுவைப்பது போல மனசின் ஆழம் வரை இனிக்கிறது. அந்த நட்பிற்கு துரோகம் கிடையாது. பொறாமை கிடையாது. ‘ உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுவது ’ கிடையாது.



‘ மயிலிறகு குட்டி போடுமா?’ என்ற கேள்வியில் பெரிய ஆராய்ச்சியெல்லாம் நடக்கும். பூவரசம்பூவில் மோதிரம் செய்ய போட்டிக்கு மேல் போட்டி இருக்கும். அப்புறம் கொஞ்சம் வயது அதிகமாக, பாவாடை தாவணியில் புதிய உலகம் தெரிந்ததில் சினேகிதிகளுடன் எதற்கெடுத்தாலும் சிரிப்பாயிருக்கும். படிப்பு அப்போது பிரதானமாக இருக்கும். தோளில் புத்தகப்பையும், கையில் சாப்பாட்டுப்பையுமாக, யார் வேகமாக நடப்பது என்பதில் பெரிய போட்டியே இருக்கும். அப்புறம் கல்லூரிப்பருவம். இளம் வயதின் ஆரம்பம். வீட்டின் பிரச்சினைகளைப் பகிர்ந்து கொள்வதிலும் காதலில் அமிழ்ந்து அந்தத் தவிப்பைப் பகிர்ந்து கொள்வதிலும் நட்பின் தீவிரம் இந்த வயதில்தான் அதிகரிக்கும். பாடல்களைக் கேட்டு மயங்குவதிலும் கவிதைகளைப் பற்றி ரசித்துப் பேசுவதிலும் நட்பின் அன்பு ஆழமாகும்.

இப்படி ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு விதமாய் வளரும் நட்பு, பல வருடங்களின் அனுபவங்களுக்குப்பிறகு, வாழ்க்கையின் நடுப்பகுதியில் உயிர்காக்கும் நட்பாகவும் அவதாரம் எடுக்கிறது. சில சமயங்களில் நட்பு முதுகில் குத்தும் எதிரியாகவும் மாறுகிறது. நட்பை சில சமயங்களில் பொருளாதாரம் தீர்மானிக்கிறது. சிலரது வாழ்க்கையில் நட்பு பொறாமையில் தீக்கனலாக மாறி தகிக்க வைக்கிறது. அந்த வயதில் ‘உயர்ந்த மனிதன் ’ திரைப்படத்தில் வரும்

“அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே
நண்பனே! நண்பனே! நண்பனே!

இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே
அது ஏன்? ஏன்? ஏன்? நண்பனே!

பாடம் படிப்பு ஆட்டம் பாட்டம்
இதைத் தவிர வேறெதைக் கண்டோம்

புத்தகம் பையிலே
புத்தியோ பாட்டிலே
பள்ளியைப் பார்த்ததும்
ஒதுங்குவோம் மழையிலே

நித்தமும் நாடகம்
நினைவெல்லாம் காவியம்
உயர்ந்தவன் தாழ்ந்தவன்
இல்லையே நம்மிடம்”

என்ற கவிஞர் வாலியின் பாடலை நினைக்காதவர் இருக்க முடியாது!!

உண்மையான நட்பு அந்தஸ்து பேதம் பார்ப்பதில்லை. அக்கறையும் கனிவும் அன்புமாய் நட்பை அமையப் பெற்றவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.

என் நட்புக்குரியவர்கள் என்று பார்த்தால், முக்கியமான சிலரைக் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

சில பிரச்சினைகளுக்காக சில மாதங்கள் அந்த நகரத்தில் நான் தங்கியிருந்த போது, குடும்ப நண்பரால் அறிமுகமான சினேகிதி இவர். குறுகிய நாட்களிலேயே மனம் ஒருமித்த சினேகிதிகளாகி விட்டோம். இவரைப்பற்றி முத்துச்சிதறலில் முன்னமேயே எழுதியிருக்கிறேன். கணவர் பெரிய செல்வந்தர். கையெடுத்து வணங்கக்கூடிய தோற்றம். ஆனால் வெளியில் தெரியாத மோசமான குடிப்பழக்கத்தால் வாழ்க்கையை நரகமாக்க, என் சினேகிதி அதுவும் 8 வயதிலும் 5 வயதிலும் 1 வயதிலும் பெண் குழந்தைகளைப் பெற்றவர் பல தடவைகள் தற்கொலைக்கு முயன்று கொண்டேயிருந்தார். நான் அங்கு இருந்தவரை அவரைப் பல தடவைகள் அந்த மோசமான முடிவிற்குச் செல்லாமல் தடுத்து நிறுத்தி கண்டித்திருக்கிறேன். நான் அங்கிருந்து இங்கு வந்த ஓரிரு மாதங்களிலேயே இறந்து போனார். இப்போது நினைக்கும்போது கூட மனதை கனமாக்கி விடும் சினேகிதி இவர்.

இன்னொரு சினேகிதி. மிகுந்த செல்வாக்குடன் வளர்ந்தவர். திருமணமானதும் அத்தனையும் மாறிப்போனது. சந்தேகப்படும் கணவனால் வாழ்க்கை ரணமாயிற்று. சம்பாதித்ததெல்லாம் கணவரின் பொருந்தாத வியாபாரத்தில் காற்றாய்ப் பறந்து போக வாழ்க்கை வறுமையின் கோரப்பிடியில் கழிய ஆரம்பித்தது. மலை போன்ற நம்பிக்கையை பையன் மீது வைத்திருந்தார். அவனும் விபத்தொன்றில் இறந்து போக, நிலை குலைந்து போனார் அவர். இப்போது பெண் வீட்டில் காலம் கழிக்கும் அவர் மனம் படும் பாட்டை எழுத்தில் வடிக்க முடியாது. அவ்வப்போது, 10 வருடங்களுக்கு முன்னால் இறந்த தன் மகனை நினைத்து அழும் அவரை என்னால் எப்போதுமே சமாதானம் செய்ய முடிந்ததில்லை.

சில சமயங்களில் நட்பு கூட நம்ப முடியாத அவதாரங்கள் எல்லாம் எடுக்கும். ‘அறுசுவை’ இணைய தள நிறுவனர் என்னை அவரது தளத்தில் சமையல் குறிப்புகள் எழுமாறு கேட்டுக்கொண்ட போது, அவர் ஒரு சக நண்பராகத்தான் இருந்தார். அப்புறம் நேரே சந்தித்த போதுதான் தெரிந்தது அவர் என் உறவினர் என்று! அதே போல் சக பதிவர் ‘ஹைஷ்’ நிறைய பேருக்கு நல்ல நண்பர். நல்ல அறிவுத்திறன் கொண்டவர். பலருடைய வலிகளை ‘ஹீலிங்’ என்ற முறையில் சரி செய்பவர். என் ஊரிலிருக்கும் அவரின் தங்கையைப்பார்க்கச் சென்ற போதுதான் தெரிந்தது அவரும் என் உறவினர் என்று! உலகம் எத்தனை சின்னது என்று அப்போது தான் புரிந்தது.

கடைசியாக பள்லிப்பருவத்திலிருந்து இன்று வரை தொடர்ந்து வரும் என் சினேகிதியைப் பற்றிச் சொல்ல வேண்டும். இவர் கோவையிலிருக்கிறார். எப்போது நான் ஊருக்குச் சென்றாலும் எனக்கு முன்னதாகவே என் வீட்டுக்கு வந்து பூட்டைத் திறந்து, எல்லாம் சுத்தமாக இருக்கிறதா என்று கவனித்து, ஒரு குட்டி சமையல் செய்து, நாங்கள் போய் இறங்கும்போது ஒரு ஃபில்டர் காப்பியுடன் வரவேற்பார். எத்தனை வேலைகள், பிரச்சினைகள் இருந்தாலும் நாங்கள் இருவரும் தினமும் இலக்கியம் பேச மறப்பதில்லை. பாடல்களைக் கேட்டு ரசிப்பதையும் கதைகள் பல பேசுவதையும் பிரச்சினைகளைப் பகிர்ந்து கொள்வதையும் பல வித சமையல் குறிப்புகளை செய்து பார்த்து ருசித்து சிரிப்பதையும் என்றுமே மறந்ததில்லை. அவர் என் சமையலை ருசித்து சாப்பிடுவதைப்பார்க்கும்போதெல்லாம் என் மனம் நிறைந்து விடும். நான் அவருக்காக பதிவு செய்து எடுத்துச் சென்ற பாடல்களைக் கேட்டு விழி நீர் கசிய பரவசப்படும்போது என் மனதும் புளகாங்கிதமடையும். வசந்த கால நட்பை விட இலையுதிர்க்காலத்து நட்பு ரொம்பவும் ஆழமானது!

நட்பிற்கும் எல்லை இருக்கிறது. அன்பும் பாசமும் எல்லை மீறினால் அந்த நட்பில் விரிசல்கள் விழுவதைத் தடுக்க இயலாது. சார்ந்திருக்கும் நட்பை விட கூடவே இருந்து பலப்படுத்தும் நட்பு மிகவும் சிறந்தது!

இந்த நட்பு தொடர்பதிவில் பங்கேற்க‌ ந‌ண்ப‌ர்க‌ள்

1. மதுரகவி ராம்வி

2. திரு. வெங்கட் நாகராஜ்


3. 'தீதும் நன்றும் பிறர்தர வரா' ரமணி அவர்கள்.


4. ஹுஸைன‌ம்மா

ஆகியோரை அன்புட‌ன் அழைக்கிறேன்.








53 comments:

மாய உலகம் said...

//உயிர்காக்கும் நட்பாகவும் அவதாரம் எடுக்கிறது. சில சமயங்களில் நட்பு முதுகில் குத்தும் எதிரியாகவும் மாறுகிறது. நட்பிற்கும் எல்லை இருக்கிறது. அன்பும் பாசமும் எல்லை மீறினால் அந்த நட்பில் விரிசல்கள் விழுவதைத் தடுக்க இயலாது. சார்ந்திருக்கும் நட்பை விட கூடவே இருந்து பலப்படுத்தும் நட்பு மிகவும் சிறந்தது! //

நட்பிற்கு ஒரு இலக்கணமாய் உங்கள் பதிவு அமைந்து இருக்கிறது.....ஒவ்வொரு பருவங்களில் வரும் நட்பையும்..உங்கள் அனுபவ நட்பையும் சொகத்துடன் பகிர்ந்துள்ளீர்கள்... சந்தோசத்தை விட சோக நிகழ்வுகளே...மனதில் ஆறாத வடுவாக அமைந்து விடுகிறது.. பகிர்வுக்கு நன்றியுடன் வாழ்த்துக்கள் மேடம்

சாந்தி மாரியப்பன் said...

அழகான பகிர்வு மனோம்மா,

அறியா பிள்ளைப்பிராயத்துல இருக்கற களங்கமில்லா நட்பு எப்போ நினைச்சாலும் அடிக்கரும்பாத்தான் இனிக்குது :-)

'பரிவை' சே.குமார் said...

amma
natpu pathivil manam kanakkum sila natpugalai solli irunthalum arumaiyana pakirvu...

தமிழ் உதயம் said...

நட்பு குறித்து மிக சிறப்பாக எழுதி இருந்தீர்கள் மேடம்////

நீங்கள் குறிப்பிட்ட உயர்ந்த மனிதன் பட "அந்த நாள் ஞாபகம்" பாடலை எழுதியவர் கவிஞர் வாலி.

ஸாதிகா said...

அக்கா,நட்புகளைப்பற்றி எழுதி இருந்தது சுவாரஸ்யமாக ,மனம் கனக்கும் அளவு,ஆச்சரியப்படும் அளவு இப்படி பல் சுவையில் கலந்து கட்டி இடுகையை சுவாரஸ்யமிக்கதாக்கிவிட்டீர்கள்.அறுசுவை தள நிறுவனர்,மற்றும் சகோ ஹைஷ் அறிமுகங்கள் ஏற்கனவே அறிந்திருப்பின் உங்கள் எழுத்துக்களின் வடிவில் படிக்கும் பொழுது மிக சுவாரஸ்யமாக இருந்த்து.

athira said...

மனோ அக்கா, அழைப்பை ஏற்று, தொடரைத் தொடர்ந்தமைக்கு முதலில் என் நன்றிகள்.

நண்பர்களைப் பற்றி மட்டும் சொல்லாமல், நட்பைப் பற்றியும் அழகாக விளக்கம் கொடுத்திருக்கிறீங்க.

வீண் அலட்டல் இல்லாமல், அழகாக ஒவ்வொன்றையும் சோட் அண்ட் சுவீட்டாக முடித்திருப்பது நன்றாக இருக்கு.

நட்பும் பின்னாளில் சொந்தமாவதுபற்றி.... நாங்களும் எல்லோரும் ஒருதடவை செக் பண்ணோனும்:)), இங்கு ஆரெல்லாம் சொந்தக்காரர், இன்னும் நட்பென இருக்கிறோமே தெரியேல்லையே...

ஸாதிகா அக்கா முதல்ல அட்ரஸ் தாங்க..:))).

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நட்பு சுவாரஸ்யங்க...
வாழ்த்துக்கள்..

ஸாதிகா said...

//ஸாதிகா அக்கா முதல்ல அட்ரஸ் தாங்க..:))).// ஹையோ..உடம்பெல்லாம் புல்லரிக்குது.அதீஸ் முதல்லே என் கிட்டேதான் அட்ரஸ் கேட்டிருக்காங்க.என்ன பாசம் என்ன பாசம்.மனோ அக்கா பக்கம் வந்து கும்மி அடிக்கிறோம்.அக்கா கொம்பை தூக்கிக்கொண்டு வர்ரதுக்கு முன்னாடி நான் எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...

நிலாமகள் said...

உண்மையான நட்பு அந்தஸ்து பேதம் பார்ப்பதில்லை. அக்கறையும் கனிவும் அன்புமாய் நட்பை அமையப் பெற்றவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.//
:-))

ஜெய்லானி said...

//நட்பிற்கும் எல்லை இருக்கிறது. அன்பும் பாசமும் எல்லை மீறினால் அந்த நட்பில் விரிசல்கள் விழுவதைத் தடுக்க இயலாது. //

அதில் ஈகோ பிராப்ளம்தான் முதலில் வரும் :-))

//சார்ந்திருக்கும் நட்பை விட கூடவே இருந்து பலப்படுத்தும் நட்பு மிகவும் சிறந்தது! //

இது மிக சிலருக்கே வாய்க்கிறது ..என்ன செய்வது .இதை கண்டு உணரும் போது காலம் பல சென்றிருக்கும் .

அருமையான பதிவு :-)

ஜெய்லானி said...

//நட்பும் பின்னாளில் சொந்தமாவதுபற்றி.... நாங்களும் எல்லோரும் ஒருதடவை செக் பண்ணோனும்:)), இங்கு ஆரெல்லாம் சொந்தக்காரர், இன்னும் நட்பென இருக்கிறோமே தெரியேல்லையே...
//

அதீஸ்...அதுக்கு முட்டை பிரியாணியுடன் ஒரு பதிவர் சந்திப்பு வைக்கனும் ..வரூவீங்களா..!!

//ஸாதிகா அக்கா முதல்ல அட்ரஸ் தாங்க..:))).//

மீனம்பாக்கம் நெடுஞ்சாலை ,
டி நகர் குருக்கு சந்து ,
பாரிஸ்கார்னர்.
சாந்தோம் அருகில்
சென்னை .102 .
மறக்காம மொட்டைமாடியில பிளேனை லேண்ட் செய்யனும் :-)) ”மிஸ் அப்ரோச்” ஆனா ஹைஷ் அண்ணணை கேக்கவும் ஹா..ஹா.. :-)))

Karthikeyan Rajendran said...

நல்ல பதிவு . தொடருங்கள்,,,,,,

வை.கோபாலகிருஷ்ணன் said...

//‘உயர்ந்த மனிதன் ’ திரைப்படத்தில் வரும்
“அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே! நண்பனே! நண்பனே!”//

பாடலை நினைவூட்டியதற்கு நன்றி. பாடல் வசன நடையாக இருந்தாலும், அதில் சிவாஜியும் மேஜர் சுந்தரராஜனும் என்ன ஜோராக நடித்து அசத்தியிருப்பார்கள்! அந்தப்படத்தின் (நாளை இந்த வேளை பார்த்து ஓடிவா நிலா... வெள்ளிக்கிண்ணந்தான் தங்கக்கைகளில்..... என் கேள்விக்கென்ன பதில் போன்ற) அனைத்துப்பாடல்களுமே மிகவும் அருமையாக இருக்கும்.

நட்பு பற்றிய தங்களின் இந்தப்பதிவு மிக அருமையாக உள்ளது. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

மனோ அக்கா மன்னிக்கவும்.

எனக்கு நீலக்கல்லு:), பச்சைப் பூப்:) பதிவுகளைப் படித்ததும், ”வால்” லெவ்ட்டூஊ..:) ரைட்டூஊஊஊஉ:) என இருபக்கமும் படக் படக் என அடிக்குது, ஆனாலும் கஸ்டப்பட்டு இது மனோ அக்காவின் பக்கம் என்று வாலை ஆட்டாமல் அடக்கி வச்சிருக்கிறேன்:)(பதிலிடாமல்).

தானாடாவிட்டாலும் தசையாடுமெல்லோ... அதனாலதான் என்னையும் மீறி இதை எழுதிட்டேன்.. மனோ அக்கா குறை நினைக்க மாட்டா என நினைத்து.

Yaathoramani.blogspot.com said...

சிலருடிய பதிவுகளை தொடர்கையில்
மனம் லேசாகிப் போவதைப் போன்ற உணர்வையும்
மிக நெருங்கிய உறவினகளிடம் உறவாடுவதைப்போன்ற
உணர்வையும் ஏற்படுத்தும்.அத்தகைய பதிவுகளில்
உங்கள் பதிவு முதன்மையானது
நட்பு குறித்த தங்கள் பதிவு மிக மிக அருமை
என்னையும் தொடர் பதிவிடஅழைத்தமைக்கு
மிக்க நன்றி. இரண்டு நாளில் பதிவிட்டுவிடுகிறேன்
நல்ல பதிவினைத் தந்தமைக்கு வாழ்த்துக்கள்

ஹுஸைனம்மா said...

நட்புகள் பல சமயங்களில் - முக்கியமாக கவலையான சந்தர்ப்பங்களில் - மிகப் பெரிய பலம். என்னையும் அழைச்சிருக்கீங்க, சீக்கிரமே எழுதுறேன்க்கா.

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

நல்ல நட்பு என்பது வரம். பலம.

மாய உலகம் said...

வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் சகோதரி

Yaathoramani.blogspot.com said...

அன்பார்ந்த மனோசாமினாதன் அவர்களுக்கு
தங்களை இன்று வலைச்சரத்தில்
அறிமுகப் படுத்த கிடைத்த வாய்ப்பை
பெரும் பேறாகக் கருதுகிறேன்

வெங்கட் நாகராஜ் said...

நான் சில நாட்கள் முன்னரே இந்தத் தொடர் பதிவினை எழுதி இருக்கிறேன். இங்கே இருக்கிறது பதிவின் சுட்டி...

http://venkatnagaraj.blogspot.com/2011/07/blog-post.html

படியுங்களேன்...

அழைப்பிற்கு மிக்க நன்றி.

Chitra said...

நட்பிற்கும் எல்லை இருக்கிறது. அன்பும் பாசமும் எல்லை மீறினால் அந்த நட்பில் விரிசல்கள் விழுவதைத் தடுக்க இயலாது. சார்ந்திருக்கும் நட்பை விட கூடவே இருந்து பலப்படுத்தும் நட்பு மிகவும் சிறந்தது!

...Precious words. :-)

vidivelli said...

அம்மா நட்பைப்பற்றி சுவாரசிகமாகவும் ,மனதை கலங்கவைக்கும் சம்பவங்களையும் மிக அழகாக சொல்லியிருக்கிறீங்கள்..
அருமையான பதிவு...

சிவகுமாரன் said...

சிறு வயது நட்பு தான் கடைசி வரைக்கும் நிலைக்கிறது.பிரதி பலன் எதிர்பாரா அந்த உறவுக்கு முன்னாள் மற்ற எல்லாமே தூசு.
- அருமையான பதிவு மேடம்

ADHI VENKAT said...

நட்பு பற்றிய அழகான பகிர்வு. ஒவ்வொரு வயதிலும் கிடைக்கும் நட்பு வித்தியாசமானது.

RAMA RAVI (RAMVI) said...

நட்பு பற்றி மிக அழகாக விளக்கியுள்ளீர்கள். நட்பு பற்றி தொடர் பதிவிர்கான அழைப்புக்கு மிகவும் நன்றி.நான் இந்த மாதத்தின் 18ம் தேதி என்னுடைய பதிவில் நண்பர்கள் பற்றி எழுதிவிட்டேன். உங்கள் அழைப்புக்கு நன்றி மேடம்.

மனோ சாமிநாதன் said...

விரிவான கருத்திற்கு அன்பு நன்றி ராஜேஷ்!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்கும் கருத்துக்கும் அன்பு நன்றி அமைதிச்சாரல்!!

மனோ சாமிநாதன் said...

கருத்துக்கும் அன்பான பாராட்டிற்கும் இனிய நன்றி தமிழ் உதயம்! எனக்கும் ' வாலி' என்று தான் நினைவு. எதற்கும் அது சரி தானா என்று கூகிளில் தேடிப் பார்த்ததில் ஒரு வலைத்தளத்தில் 'கண்ணதாசன்' என்று போட்டிருந்ததால் அப்படியே எழுதி விட்டேன். நீங்கள் எழுதியதும் அதைத் திருத்தியும் எழுதி விட்டதை கவனித்திருப்பீர்களென நம்புகிறேன்.
த‌வறினை சுட்டிக்காண்பித்ததற்கு அன்பு நன்றி!!

ஸ்ரீராம். said...

//"வசந்த கால நட்பை விட இலையுதிர்க்காலத்து நட்பு ரொம்பவும் ஆழமானது"//

அருமை.
பிள்ளைப் பிராய நட்பு கள்ளம் கபடம் அறியாதது. அதுவே கடைசி வரை தொடருமாயின் அதை விட பாக்கியம் ஏது?

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

" ...கோக்கேனோ அற்று விழுந்த அறுமணிகள் மற்றவற்றைப் போக்கேனோ வெஞ்சமத்து புக்கு” என்றானே கர்ணன் தன் தாயிடம்? அதுவல்லவோ நட்பு?

மோகன்ஜி said...

மனோ மேடம்! நட்புக்கு ஒரு நவரத்த்ன ஹாரம் சூட்டியிருக்கிறீர்கள். நன்று!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கும் பாராட்டுக்கும் அன்பு நன்றி ஸாதிகா!

மனோ சாமிநாதன் said...

வாழ்த்துக்களுக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் இனிய நன்றி அதிரா!

மனோ சாமிநாதன் said...

வாழ்த்துக்களுக்கும் பாராட்டிற்கும் மனமார்ந்த நன்றி சகோதரர் செளந்தர்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கு அன்பு நன்றி நிலாமகள்!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுரைக்கும் கருத்துரைக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி சகோதரர் ஜெய்லானி!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கும் வருகைக்கும் அன்பு நன்றி ஸ்பார்க் கார்த்தி!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!
நீங்கள் சொன்னது போல எனக்கும் உயர்ந்த மனிதனில் வரும் அத்தனை பாடல்களும் பிடிக்கும். அந்தப் படமே மிகவும் பிடிக்கும்!!

மனோ சாமிநாதன் said...

அதிரா! எனக்குப் புரியவேயில்லை, அதென்ன நீலக்கல்லு, ப்ச்சைப்பூ?

மனோ சாமிநாதன் said...

"சிலருடிய பதிவுகளை தொடர்கையில்
மனம் லேசாகிப் போவதைப் போன்ற உணர்வையும்
மிக நெருங்கிய உறவினகளிடம் உறவாடுவதைப்போன்ற
உணர்வையும் ஏற்படுத்தும்.அத்தகைய பதிவுகளில்
உங்கள் பதிவு முதன்மையானது"

என்னை மிகவும் கெளரவப்படுத்தி எழுதியதற்கு நான் தனியாக நன்றி சொல்ல வேண்டும்!
வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் இதயங்கனிந்த நன்றி சகோதரர் ரமணி!!!

மனோ சாமிநாதன் said...

கருத்துக்கு அன்பு நன்றி ஹுஸைனம்மா!

மனோ சாமிநாதன் said...

கருத்துக்கு அன்பு நன்றி ஹுஸைனம்மா!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துக்கும் இனிய நன்றி வித்யா!

மனோ சாமிநாதன் said...

திரும்பவும் 'வலைச்சரத்தின் அறிமுகத்திற்காக' வாழ்த்துக்கள் சொன்ன உங்களுக்கு இதயப்பூர்வமான நன்றி மாய உலகம்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கு அன்பு நன்றி சகோதரர் வெங்கட் நாகராஜ்!

மனோ சாமிநாதன் said...

ரொம்ப நாட்களுக்குப் பிறகு வந்து பாராட்டுக்கள் தந்து உற்சாகப்படுத்தியதற்கு அன்பு நன்றி சித்ரா!

மனோ சாமிநாதன் said...

அன்பான பாராட்டுக்களுக்கு இதயம் நிறைந்த நன்றி விடிவெள்ளி!!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு இனிய நன்றி சிவகுமாரன்!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கும் கருத்துக்கும் இதயம் நிறைந்த நன்றி ஆதி!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்கு மனமார்ந்த நன்றி ராம்வி!

மனோ சாமிநாதன் said...

அருமையான கருத்திற்கும் பாராட்டிற்கும் உளமார்ந்த நன்றி சகோதரர் ஸ்ரீராம்!

மனோ சாமிநாதன் said...

அழகிய கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் ராமமூர்த்தி!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கும் வருகைக்கும் இனிய நன்றி சகோதரர் மோகன்ஜி!