Sunday, 17 July 2011

மனம் கவர்ந்த முன்னுரைகள்..

தினந்தோறும் வாழ்க்கையின் புறத்தேடல்களுக்காக மின்னலாய் தோன்றி மறையும் இயந்திர நிமிடங்களுக்கிடையே, அகத்தேடல்களுக்கும் அறிவுப்பசிக்கும் போதுமான நேரத்தை ஒதுக்க முடிவதில்லை. அதுவும் பெண்களுக்கு தார்மீகக்கட்டுப்பாடுகளும் சுயமாய் நிர்ணயித்துக்கொண்ட கடமைகளும் அதிகம்.

தினசரி வாழ்க்கையிலிருந்து மறந்து போன அல்லது ஒதுங்கிப்போன சில அருமையான விஷயங்களை மீண்டும் இதயம் தேடும்போது ஏற்படும் புத்துணர்ச்சிக்கு எல்லையேயில்லை. இந்தப் புத்துணர்ச்சிக்கு வழி வகுத்த சினேகிதி திருமதி.வித்யா சுப்ரமண்யத்திற்கு என் அன்பு நன்றி!

அறிவு ஜீவிகளின் எழுத்துத் தாக்கங்கள், கடினமான சொற்பிரயோகங்கள், நிதர்சனத்தை தோலுரித்துக்காட்டும் வார்த்தைச் சாடல்கள்- இவற்றையெல்லாம் தவிர்த்து, சிறு வயதில் என்னை பதப்படுத்திய, வழிகாட்டிய, அன்பென்பதையும் உண்மையென்பதையும் சத்தியமென்பதையும் தங்கள் எழுத்து மூலம் மனதில் வளர்த்த எழுத்தாளர்களில் சிலரையும், அதன் பிறகு என்னைப் பாதித்த எழுத்தாளர்களில் சிலரையும் சில முன்னுரைகள் மூலம் அடையாளம் காட்ட இங்கே ஆசைப்படுகிறேன்.



முதலில் நான் என்றுமே ரசிக்கும் கல்கியின் சிவகாமியின் சபதம்.


இதுவரை எத்தனை முறைகள் இந்த சரித்திர நாவலைப் படித்திருப்பேன் என்று எனக்கே தெரியாது. ஒவ்வொரு தடவை படிக்கும்போதும் புதியதாக, அதே ரசனையுடன் அதே ஆழத்துடன் ரசிக்கக்கூடியதாக இருப்பதுதான் சிறந்த நாவலுக்கான அடையாளமாக நான் கருதுகிறேன். பழந்தமிழர்களின் சிறந்த அடையாளங்களாய் நிறைந்து நின்ற வீரமும் கலையும் எப்படி காதலில் அமிழ்ந்து போயின, அதே காதல் எப்படி வீரத்திற்கும் கலைத்தாகத்திற்கும் ஏற்பட்ட செருக்கான மோதலில் அழிந்து போனது என்பதுதான் ஒரே வரியில் இந்தக் கதைக்கான களம்.



இந்தக் கதை உருவானது பற்றி தனது முன்னுரையில் கல்கி இப்படி கூறுகிறார்:

‘ நீல வானத்திலிருந்து பூரண சந்திரன் அமுத கிரணங்களை பொழிந்து கொண்டிருந்தான். பூவுலகம் மோகன நிலவினிலே மூழ்கி அமைதி கொண்டு விளங்கியது. எதிரே எல்லயின்றி பரந்து கிடந்த வளைகுடாக்கடலில் சந்திர கிரணங்கள் இந்திர ஜாலத்தை செய்து கொண்டிருந்தன.

கடலோரத்து வெண்மணலில் நானும் ரசிக மணி டி.கே.சியும் சில நண்பர்களும் அமர்ந்திருந்தோம். ரசிகமணி, கோபாலகிருஷ்ண பாரதியாரின்

‘ விதியின் எழுத்தை கிழிச்சாச்சு!-முன்பு
விட்டகுறை வந்து தொட்டாச்சு! ’

என்ற வரிகளை எடுத்துரைத்தபோது, அந்த வரிகள் ஒரு சக்தி வாய்ந்த மந்திரம் போல என்னை மதியிழக்கச் செய்தது. கடலில் ஆயிரமாயிரம் படகுகளும் கப்பல்களும் திடீரென்று காட்சி அளித்தன. சற்று தூரத்தில் மாட மாளிகைகளும் கூடகோபுரங்களும் எழுந்தன. அவற்றின் உச்சியில் ரிஷபக்கொடிகளும் சிங்கக்கொடிகளும் உல்லாசமாய்ப் பறந்தன. இனிமை ததும்பிய இசைக்கருவிகளினின்றும் எழுந்த சங்கீதம் நாற்புறமும் சூழ்ந்து போதையை உண்டாக்கியது. எங்கோ யாரோ காலில் கட்டிய சதங்கைகள் ஒலிக்க நடனமாடிக்கொண்டிருந்தார்கள்..’

நான்கு பாகங்களால் உருவான தனது ‘சிவகாமியின் சபதம்’ உருவாகக் காரணமாயிருந்த அந்த நொடிப்பொழுதை கனவு மயக்கத்துடன் வர்ணிக்கும் கல்கி,  இறுதியில்

‘இத்தனை பாரத்தையும் ஏறக்குறைய 12 வருடங்களாக என் உள்ளத்தில் தாங்கிக் கொண்டிருந்தேன். கடைசி பாகத்தின் கடைசி அத்தியாத்தின் கடைசி வரியை எழுதி ‘முற்றும்’ என்று முடித்தபோது தான் 12 ஆண்டுகளாக நான் சுமந்து கொண்டிருந்த பாரம் என் ‘ அகத்திலிருந்து’ நீங்கியது’ என்கிறார்.

இரண்டாவது எழுத்தாளர் ‘அகிலனின்’ எங்கே போகிறோம்?”



எழுத்தாளர் அகிலன் ‘வேங்கையின் மைந்தன்’, ‘வெற்றித்திருநகர்’, ‘கயல்விழி’ போன்ற சரித்திர நாவல்களையும் ஞானபீடப்பரிசு உள்பட ஏராளமான விருதுகள் பெற்ற நாவல்களை எழுதியவர். அவரது ‘வேங்கையின் மைந்தன்’ நாவலின் முடிவு வாசகர்களை பாதித்ததால் அவர்களது வேண்டுகோளுக்கிணங்கி அதைப் புத்தகமாய் வெளியிட்டபோது, முடிவை மாற்றி எழுதி வெளியிட்ட பெருமை இவருக்கு உண்டு.

‘எங்கே போகிறோம்’ 1973-ல் வெளி வந்த, ராஜா சர் அண்ணாமலை செட்டியார் இலக்கியப் பரிசு பெற்ற நாவல். தன் உடலை மூலதனமாக்கிப் பொருள் குவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்ட ஒரு பெண்தான் இந்தக் கதைக்கு தலைவி.

அகிலன் தன் முன்னுரையில் இப்படி கூறுகிறார்:

“ இந்த நாவலின் இலக்கிய வடிவம் பற்றியோ, உத்தி, உட்கருத்து பற்றியோ அளக்க முன்வருவோர், தீர்ப்பு கூற வருவோர், அவரவர் அளவுகோல்களின் பலவீனத்தையே இதில் கண்டு கொள்ள முடியும். எச்சரிக்கையுடன் இதனை நெருங்குங்கள். எரிமலையிலிருந்து வெடித்து, இன்னும் தன் சத்திய ஆவேச வெப்பம் தணியாத நிலையில் இருக்கும் ஒரு அக்னிக் குஞ்சு இது. ‘ஆன்மாவின் வெளிப்பாடு தான் கலை; சத்தியத்தில் அழகைத் தேடிப்பார்; புறக்கண்களுக்கு சத்தியத்தின் உருவம் அழகில்லாதது போலத் தோன்றினாலும் அகக்கண்களால் அதன் அழகைத் தேடிச்செல்’ என்ற காந்தியடிகளின் இலக்கியக் கொள்கையை இந்த நாவலில் நான் பரிசோதித்துப் பார்க்க முயன்றிருக்கிறேன். சத்தியமும் அசத்தியமும் ஒன்றோடொன்று கலந்து, உண்மையும் பொய்மையும் ஒன்றோடொன்று சங்கமமாகி, காக்காய்ப்பொன் பத்தரை மாற்றுத் தங்கம் போலவும் பத்தரை மாற்று பசும்பொன் துருப்பிடித்த இரும்பு போலவும் காட்சியளிக்கும் இந்த நாளில் அவற்றை இனம் பிரித்துக் காட்டுவது என் கடமை என்று தோன்றியதால் இதை செய்துள்ளேன்.”

கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு முன்பே, மாறிப்போன மனிதர்களைப்பற்றியும் நாட்டைப்பற்றியும் இத்தனை கவலைப்பட்டிருக்கிறார் அகிலன். இன்று உயிரோடிருந்தால் என்ன எழுதுவார்?

மூன்றாவதாய் எழுத்தாளர் ஜெயகாந்தனின் 'சக்கரம் நிற்பதில்லை'.

என் ஆதர்ச எழுத்தாளர்களிடமிருந்து சற்று விலகி, அதன் பின் புகழ்பெற்று விளங்கிய எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு வருகிறேன். இவரின் ‘ யாருக்காக அழுதான்’, ‘ கருணையினால் அல்ல’ போன்ற நாவல்கள் மனதை மிகவும் பாதித்தவை. முரண்பாடுகளும் உண்மையை நெஞ்சை சுடுமாறு எழுதுவதும் இவரது தனி முத்திரைகள். அவரின் முன்னுரையில்கூட ‘ பாரதியின்’ திமிர்ந்த ஞானச் செருக்கு' புலப்படுகிறது! தன் சிறுகதைத் தொகுதிகளில் ஒன்றான ‘சக்கரம் நிற்பதில்லை’யில் அவர் இப்ப்டிக் கூறுகிறார்.

“ இலக்கியமும் எழுத்தும் இந்தப் பத்திரிகைகளை அண்டியில்லை. எழுத்தையும் இலக்கியத்தையும் நம்பி நமது பத்திரிகைகள் உயர வேண்டும் என்பதே என் விருப்பம். மேலும் அபிமானமுடைய எழுத்தாளர்களும் தேர்ந்த ரசனையுடைய வாசகர்களும் நமது தமிழ்ப் பத்திரிகைகளில் இலக்கியம் தேடுவதை இன்னும் விட்ட பாடில்லை. அவர்கள் என்னையேனும் கண்டு ஓரளவு ஆறுதலடையட்டும் என்ற இலக்கியப் பொறுப்பினால் செய்யப்படும் நிஷ்காம்ய கர்மமாகவே நான் இந்த அச்சு வாகனத்தின்மீது ஆரோகணித்திருக்கிறேன். ஆனால் தரிசனம் என்பது இந்த ஊர்கோலம் மட்டுமல்ல, அது விஸ்வரூபம்..!”

நான்காவதாய் கவிஞர் வைரமுத்துவின் ‘கல்வெட்டுக்கள்’ என்ற கட்டுரைத் தொகுப்பு.

தன் முன்னுரையில் தனது இளம் வயதில் பெய்த மழையில் மறுபடியும் நனையப்போவதாய் சொல்லி, அந்த அனுபவத்திற்கு நம்மையும் அழைக்கிறார். அந்த அனுபவத்தை பதிவு செய்யும் விதத்தை அத்தனை அழகாய்ச் சொல்லுகிறார்.. . ..

“ இந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுவதற்கும் பதிவு செய்வதற்கும் ஏற்ற வாகனம் எது என்று நான் யோசிக்கிறேன். நான் அபிநயம் படிக்க வேண்டுமென்றால் எனக்கு கவிதை வேண்டும். ஆனால் கைவீசி நடக்க வேண்டுமென்றால் எனக்கு கட்டுரை வேண்டும். தன்னில் இருப்பதை விட அதிகமாய்க் கற்பனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்வது கவிதை; தன்னில் இருப்பதைத் தவிர எதையும் கற்பனை செய்து கொள்ளக்கூடாது என்று கட்டளையிடுவது கட்டுரை. “

கட்டுரை இலக்கியம் அவ்வளவாகப் புகழடையவில்லை என்ற தன் ஆதங்கத்தை

“ வாழ்க்கையைப்பற்றிய அகப்பார்வைகளுக்கு கொடுக்கிற முக்கியத்துவத்தை வாழ்க்கையைப்பற்றிய புறப்பார்வைகளுக்கு நாம் தரவில்லை என்பதே கட்டுரை இலக்கியக் குழந்தை இன்னும் தொட்டிலை விட்டு வெளிவராத துயரத்திற்குக் காரணம். முத்தமிழின் முதற்றமிழாக இருக்கிற இயற்றமிழ் நான்காம் தமிழாக ஆகி நசிந்து விடக்கூடாது” என்று தெரிவிக்கிறார்.

ஐந்தாவதாய், இறுதியாய் எழுத்தாளர் வித்யா சும்ரமணியத்தின் ‘ உன்னிடம் மயங்குகிறேன்’ என்ற சமூக நாவல்.

இதற்கு எழுத்தாளர் பாலகுமாரன் முன்னுரை எழுதியிருக்கிறார்.  நானும் சில வரிகள் முன்னுரையாக எழுத விரும்புகிறேன். வித்யா தவறாக நினைக்க மாட்டாரென்று நம்புகிறேன். 15 வருடங்களுக்கு முன் என்று நினைக்கிறேன், இந்த நாவலைப்படித்து விட்டு, அவரை சந்தித்து நேரில் பாராட்டி வந்தேன்.

தன்னை வளர்த்த பெரியப்பாவை தெய்வமென்ற உயரிய நிலையில் வைத்து பூஜிக்கும் மகளும் தன் கடமையில் உறுதியாய் நிற்கும் பெரியப்பாவும்தான் இக்கதையின் நாயகன் -நாயகி. இரட்டைக்குதிரைகள் பூட்டிய அழகிய ரதம் ராஜபாட்டையில் அதிவேகமாய் செல்லுவது போல இவரது கதை ஆரம்பத்திலிருந்து இறுதி வரை பறந்து செல்கிறது. பார்வையை விட்டு அகன்று போனால்கூட சில மலர்களின் நறுமணம் பின்னாலேயே தங்கி நெஞ்சை நிரப்புவது போல, இவரின் கதாபாத்திரங்களின் அன்பும் பாசமும் அதனால் ஏற்படும் தர்க்க நியாயங்களும் இதயத்தில் அப்படியே தங்கி விடுகின்றன.

 ‘சுகம், துக்கம், இன்பம், துன்பம், நன்மை, தீமை எதைக்கண்டும் நிலை தடுமாறாது ஒரே மாதிரியான மனோபாவத்துடன் இருப்பவரையே கீதை ‘ஸ்திதபிரக்ஞன்’ என்று கூறுவதாய் இறுதியில் சொல்கிறார். எல்லாவற்றையும் கடந்த ஒரு நிலை தான் ஸ்திதபிரக்ஞன் ஆவது. ஆனால் வாசகர்களை இந்த நிலைக்கு அழைத்துச் செல்ல வித்யா முயற்சிக்கிறார். 90 சதவிகிதம் அவரது கதாநாயகி அவ்வாறிருக்க முயற்சிப்பதாகச் சொல்லும்போது, அதுவரை மனங்கனிந்து போயிருக்கும் வாசகனும் அந்த நிலைக்கு 50 சதவிகிதம் முயற்சித்தால்கூட, அதுவே அவருடைய எழுத்துக்கு வெற்றி தானே?

இக்கதையின் ஆச்சரியமே, கடைசி நாலைந்து பக்கங்களில்தான் இக்கதையின் இரண்டாவது நாயகி வருகிறார். தன் செய்கைகளினாலும் பேச்சினாலும் திடீரென்று முதல் கதாநாயகியாகவே ஆகி விடுகிறார். இவர் மூலம் வித்யா ஒரு மலையாளக்கவிதையின் தமிழாக்கத்தை கடைசியில் சொல்லி தன் மனசின் ஆதங்கத்தை ஒரு நேர்மையான எழுத்தாளராய்க் கூறுவது தான் இந்த நாவலின் சிறப்பு!.

“எத்தனை ஜென்மம் கூளத்தில் கழிந்தது!
எத்தனை ஜென்மம் ஜலத்தில் கழிந்தது!
எத்தனை ஜென்மம் மண்ணில் கழிந்தது!
எத்தனை ஜென்மம் மரங்களாய் நின்றது!
எத்தனை ஜென்மம் மிருகமாய் வாழ்ந்தது!
அத்தனையும் கழிந்து அன்னையின் கர்ப்ப வாசம்!'

கவிதையை எழுதியவர் மேலும் கூறுகிறார்;

'இந்த அரிய உயரிய மானிடப் பிறவி அவ்வளவு இலேசில் கிடைத்ததில்லை. இதற்கு முன்பு எத்தனை ஜென்மங்கள் எப்படியெல்லாம் இருந்திருக்கிறோமோ, குப்பை கூளத்தில் புழுவாய், ஜலத்தில் மீனாய், மண்ணுள் பூச்சியாய், மரங்களாய், மிருகங்களாய்..

தன்னைத்தானே அறியும் அரிய குணம் கொண்ட ஒரே ஒரு பிறவி இந்த உயர்ந்த மானிடப்பிறவி தான். அப்படிப்பட்ட உயர்ந்த பிறவி எடுத்த பின் பூர்வ ஜன்ம வாசனைகளை வர விடலாமோ?”

மனிதப்பிறவி எடுத்ததன் அர்த்தத்தை மிக அழகாய்ச் சொல்லும் இந்த நாவல் மிகச் சிறந்ததொன்று என்பதில் சந்தேகமேயில்லை!!!

இந்த தொடர்பதிவில் பங்கேற்குமாறு நான் அன்புடன் அழைக்கும் தோழமைகள்:

1. திரு.வை.கோபாலகிருஷ்ணன்[ வை.கோபால‌கிருஷ்ண‌ன்]


2. திரு.மோகன்ஜி [வான‌வில் ம‌னித‌ன்]


3. திரும‌தி. நிலாம‌க‌ள் [ப‌ற‌த்த‌ல் ப‌ற‌த்த‌ல் நிமித்த‌ம்]


4. திரும‌தி.சாக‌ம்ப‌ரி [ம‌கிழ‌ம்பூச்ச‌ர‌ம்]

40 comments:

R. Gopi said...

Nice!

ராமலக்ஷ்மி said...

//பதப்படுத்திய, வழிகாட்டிய, அன்பென்பதையும் உண்மையென்பதையும் சத்தியமென்பதையும் தங்கள் எழுத்து மூலம் மனதில் வளர்த்த எழுத்தாளர்களில்//

முன்னுரைகளுக்கான முன்னுரையே பகிர்ந்து கொண்ட எழுத்துக்களுக்கு சிறப்பு சேர்த்து விட்டுள்ளன.

அருமையான பதிவு. நன்றி.

ரிஷபன் said...

தன்னைத்தானே அறியும் அரிய குணம் கொண்ட ஒரே ஒரு பிறவி இந்த உயர்ந்த மானிடப்பிறவி தான். அப்படிப்பட்ட உயர்ந்த பிறவி எடுத்த பின் பூர்வ ஜன்ம வாசனைகளை வர விடலாமோ?”

அற்புத வரிகள்.
சுவாரசியமாய் தொகுத்து தந்த தங்களுக்கு வாழ்த்துகள்

சாகம்பரி said...

//வாழ்க்கையைப்பற்றிய அகப்பார்வைகளுக்கு கொடுக்கிற முக்கியத்துவத்தை வாழ்க்கையைப்பற்றிய புறப்பார்வைகளுக்கு நாம் தரவில்லை // வைரமுத்துவின் வருத்தம் எனக்கும் இருக்கிறது. இதனை கவனத்திற்கு கொண்டு வந்ததற்கு நன்றி. ஒரு கட்டுரை வெளியிட்டால் அடுத்த பதிவாக கவிதை பதிவு செய்து பார்வையாளர்களை தக்க வைக்க வேண்டியதாக உள்ளது.

//‘ பாரதியின்’ திமிர்ந்த ஞானச் செருக்கு' புலப்படுகிறது// வேறுவிதமாக வாழ்க்கையை பார்க்க வைத்த ஜெயகாந்தனின் எழுத்துக்கள் எந்த கட்டத்திலும் எந்த வித காம்ப்ரமைஸும் செய்து கொள்ளவில்லை என்பதும் உண்மை. அவருடைய பயணத்தில் சேர்ந்து கொள்வது என்பது நம் விருப்பம் மட்டுமே. ஆனால் பாரதி நிறைய சமயங்களில் கை பிடித்து அழைத்து செல்வதையும் , தலையில் குட்டி புரிய வைப்பதையும் உணர்ந்திருக்கிறேன் உ-ம், "கண்ணன் என் சீடன்"ல் ஞான செருக்கு முற்றிலும் குறைந்துபோய் சற்றே நகைச்சுவை தொனிக்க சினேகிதம் கொள்ள வைக்கிறார்.

ஒரு படைப்பினுடனான தொடர்பையும் தாண்டி படைப்பாளியுடன் கை குலுக்கும் அனுபவத்தையும் தரும் முன்னுரைகள் - தங்கள் பதிவு அழகாக புரிய வைக்கிறது. தங்கள் அழைப்பிற்கும் நன்றி மனோ மேடம். கூடிய விரைவில் பதிவிடுகிறேன்.

'பரிவை' சே.குமார் said...

சுவாரசியமாய் தொகுத்து தந்த அருமையான பதிவு.

MANO நாஞ்சில் மனோ said...

அருமையான தொகுப்பு வாழ்த்துக்கள்.....

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகப் பிரபலமான எழுத்தாளர்களைப்பற்றியும், அவர்களின் படைப்புகள் பற்றியும், தங்களின் மனம் கவர்ந்த முன்னுரைகள் பற்றியும், தாங்கள் தங்களுக்கே உரிய தனிப்பாணியில் எழுதியுள்ளது மிகவும் பொருத்தமாகவே உள்ளது.

தங்களின் இந்தப்பதிவு எங்களுக்கும் மனம் கவர்வதாகவே அமைந்துள்ளது.

மிகப்பிரபலங்களின் படைப்புகளை இதுவரை அதிகமாக நான் படித்தது இல்லை. சந்தர்ப்பம் கிடைக்காமலும், ஆர்வம் இருந்தும் நேர அவகாசமும் இல்லாமல் இருந்தது தான் முக்கியக்காரணங்கள் என்பது தான் உண்மை.

இருப்பினும் இவற்றையெல்லாம் தேடி அலையாமல் இருந்ததற்கு, என்னைப் பொருத்தவரை வேறு சில பிரத்யேகக்காரணங்களும் உண்டு. அவற்றையெல்லாம் இங்கு கூற எனக்கு விருப்பம் இல்லை.

மிகச் சாதாரணமானவனாகிய நான், அதுவாகவே அன்புடன் என்னைத்தேடி வந்த ஒரு சில நூல்களை மட்டும் படித்துள்ளேன். பொக்கிஷங்களாப் பத்திரப்படுத்தியுள்ளேன். அவற்றைப்பற்றி நேரம் கிடைக்கும் போது எழுத முயற்சிக்றேன்.

என்னை அன்புடன் தொடர் பதிவுக்கு அழைத்ததற்கு என் நன்றிகள்.

என்றும் அன்புடன் தங்கள் vgk

இராஜராஜேஸ்வரி said...

இதுவரை எத்தனை முறைகள் இந்த சரித்திர நாவலைப் படித்திருப்பேன் என்று எனக்கே தெரியாது. ஒவ்வொரு தடவை படிக்கும்போதும் புதியதாக, அதே ரசனையுடன் அதே ஆழத்துடன் ரசிக்கக்கூடியதாக இருப்பதுதான் சிறந்த நாவலுக்கான அடையாளமாக நான் கருதுகிறேன்.//
அந்த நாவலைப் பலமுறை படித்த காலத்திற்கும், முழு நிலவுநாளில் மகாபலிபுரம் சிற்பங்களில் தோய்ந்தும், ஆயனச்சிற்பியின் உளியின் ஓசையும் சிந்தை மயக்கிய நாளுக்கும் அருமையாய் அழைத்துச் சென்றது பகிர்வு. பாராட்டுக்கள்.

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

நன்றி மனோ. சந்தேகமே இல்லாமல் இது ஒரு பயனுள்ள தொடர்தான். உன்னிடம் மயங்குகிறேனையும் குறிப்பிட்டதற்கு நன்றி. அதற்குப் பிறகு எவ்வளவோ எழுதியிருந்தாலும் இன்னும் அது தங்கள் மனதில் பதிந்திருக்கிறது என்றறியும் போது சந்தோஷமாயிருக்கிறது. அந்தக் கவிதையின் முதல் வரியில் அச்சுப்பிழை ஏற்பட்டு விட்டது.
"எத்தனை ஜென்மம் மலத்தில் கழிந்தது" என்றிருக்க வேண்டும். இது பூந்தானம் எழுதிய ஞானப்பான என்கிற புகழ் பெற்ற தத்துவப் பாடலின் தமிழாக்கம்.

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

மனோ அக்கா... அழகாகச் சொல்லிட்டீங்க.. சிவகாமியின் சபதம் படிக்க எனக்கும் விருப்பம்.... சின்ன வயதிலிருந்தே நினைக்கிறேன், சந்தர்ப்பம் கிடைக்குதில்லை, நெட்டில இருக்கென நினைக்கிறேன்.... அதில படிச்சு முடிப்பது கஸ்அம்.

கண்ணதாசன் எழுத்துக்கள் பிடிக்காதோ?
---------------------------
உங்களையும் அழைத்தேன் முடிந்தால் எழுதுங்கோ, இல்லையெனில் பறவாயில்லை...

http://gokisha.blogspot.com/2011/07/blog-post_15.html

மாய உலகம் said...

'இந்த அரிய உயரிய மானிடப் பிறவி அவ்வளவு இலேசில் கிடைத்ததில்லை. இதற்கு முன்பு எத்தனை ஜென்மங்கள் எப்படியெல்லாம் இருந்திருக்கிறோமோ, குப்பை கூளத்தில் புழுவாய், ஜலத்தில் மீனாய், மண்ணுள் பூச்சியாய், மரங்களாய், மிருகங்களாய்..

தன்னைத்தானே அறியும் அரிய குணம் கொண்ட ஒரே ஒரு பிறவி இந்த உயர்ந்த மானிடப்பிறவி தான். அப்படிப்பட்ட உயர்ந்த பிறவி எடுத்த பின் பூர்வ ஜன்ம வாசனைகளை வர விடலாமோ?”


அற்புதம்....மனதில் தோன்றும் எண்ணங்களை வரிகளாக பிரதிபலிக்க வைத்த எழுத்தாரை மானசீகமாக வணங்கலாம்...

ஸாதிகா said...

அக்கா,வித்தியாசமாக யோசித்து தொகுத்து இருப்பது அருமை.

நிலாமகள் said...

அழைப்புக்கு ந‌ன்றி ச‌கோத‌ரி... கிடைக்கும் வாய்ப்பை ப‌ய‌ன்ப‌டுத்திக் கொள்ள‌ விழைகிறேன் விரைவில்.

க‌ல்கி, அகில‌ன், ஜெய‌காந்த‌ன், வைர‌முத்து, வித்யா சுப்ர‌ம‌ணிய‌ம் என‌ த‌ங்க‌ள் கோர்ப்பு, முத்துக்க‌ளின் மேன்மையைப் பிர‌காச‌மாக்கும் வ‌ண்ண‌ம் இருக்கிற‌து. பாராட்டுக‌ள்! தினந்தோறும் வாழ்க்கையின் புறத்தேடல்களுக்காக மின்னலாய் தோன்றி மறையும் இயந்திர நிமிடங்களுக்கிடையே, அகத்தேடல்களுக்கும் அறிவுப்பசிக்கும் போதுமான நேரத்தை தேடிக் க‌ண்ட‌டைவோம்... நாம்!

மோகன்ஜி said...

மிக சுவையான தொகுப்பாய் முன்னுரைகளை வழங்கியிருக்கிறீர்கள். முன்னுரைகளின் நல்ல தேர்வு .நன்றி!

உங்கள் தொடர் பதிவு அழைப்புக்கு வந்தனம். விரைவில் எழுதுகிறேன் மேடம்!

Yaathoramani.blogspot.com said...

முன்னுரை குறித்த தங்கள் பதிவு அருமை
மிகச் சிறந்த நாவலாசிரியர்களின் முன்னுரையை
மிகச் சரியாகத் தேர்ந்தெடுத்துத் தந்தமைக்கு நன்ற்
வாழ்த்துக்கள்

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

எனக்கு கதைகளை விட முன்னுரை தான் ரொம்ப பிடிக்கும்..
கதைகள் அருஞ்சுவை பால் என்றால், அந்த முன்னுரை நறும்தேன்!

RAMA RAVI (RAMVI) said...

வணக்கம் மேடம்.நான் திரு.வை கோபாலகிருஷ்ணன் அவர்களின் வலைபதிவில் உங்களை பற்றி குறிப்பிட்டிருந்ததை பார்த்து உங்கள் பதிவுகளை படிக்க ஆரம்பித்துள்ளேன். மிகவும் அருமையாக இருக்கிறது.

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரர் கோபி!

மனோ சாமிநாதன் said...

உங்களின் மனப்பூர்வமான பாராட்டிற்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றி ராமலக்ஷ்மி!

மனோ சாமிநாதன் said...

வாழ்த்துக்களுக்கும் பாரட்டுக்களுக்கும் மனமார்ந்த நன்றி சகோதரர் ரிஷபன்!

மனோ சாமிநாதன் said...

பின்னூட்டத்தின் வழியே அருமையான அலசலும் இனிமையான தமிழும் என்னை மகிழ வைத்தது சாகம்பரி! உங்களுக்கு அன்பு நன்றி!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துக்கும் அன்பு நன்றி மாதவி!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கும் கருத்துக்கும் நெஞ்சார்ந்த நன்றி சகோதரர் குமார்!!

மனோ சாமிநாதன் said...

வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் இனிய நன்றி சகோதரர் மனோ!

மனோ சாமிநாதன் said...

கருத்துக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்களுக்கும் கருத்திற்கும் இதயங்கனிந்த நன்றி ராஜராஜேஸ்வ‌ரி!

மனோ சாமிநாதன் said...

'உன்னிடம் மயங்குகிறேன்' இன்னும் மனதில் பதிந்து இருப்பதற்கு அது தெரிவிக்கிற உயரிய கருத்துக்களும் அன்பும்தான் காரணம் வித்யா!

மனோ சாமிநாதன் said...

அன்பான வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் அன்பு நன்றி அதிரா! சிவகாமியின் சபதத்தை அவசியம் ஒரு முறை படித்துப் பாருங்கள். அதைப்பற்றி நான் இவ்வளவு எழுதியிருப்பதன் காரணம் அப்போதுதான் புரியும்! 'கண்ண‌தாசன்' மட்டுமல்ல, இன்னும் மனதைக்கவர்ந்த‌ எழுத்தாளர்கள் ஏராளமாய் இருக்கிறார்கள். அத்தனை பேரையும் இங்கே குறிப்பிட முடியாதல்லவா? அதனால்தான் என் மனதை மிகவும் பாதித்த சில எழுத்துக்களைப்பற்றி மட்டும் குறிப்பிட்டிருக்கிறேன்!


நட்பு பற்றிய தொடர்பதிவிற்கு அழைத்ததற்கு அன்பு நன்றி! சீக்கிரம் அதைப்பற்றி எழுதுகிறேன்!

மனோ சாமிநாதன் said...

மாய உலகின் கருத்துக்கள் மனதுக்கு மகிழ்வைத்தந்தது! தங்களுக்கு என் இனிய நன்றி!!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்கு அன்பு நன்றி ஸாதிகா!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கும் கருத்துக்களுக்கும் அன்பு நன்றி நிலாமகள்!!

மனோ சாமிநாதன் said...

அன்பார்ந்த கருத்துரைக்கு இனிய நன்றி சகோதரர் மோகன்ஜி!

மனோ சாமிநாதன் said...

அன்பான கருத்துரைக்கு மனங்கனிந்த நன்றி சகோதரர் ரம்ணி!

மனோ சாமிநாதன் said...

முன்னுரைகளை நறுஞ்சுவைத் தேன் என்று வர்ணணித்தது அருமை! கருத்துக்கு அன்பு நன்றி சகோதரர் ராமமூர்த்தி!!

மனோ சாமிநாதன் said...

அன்பு சகோதரி ராம்வி!

முதல் வருகைக்கும் அன்பான பாராட்டிற்கும் என் மகிழ்வான நன்றி! அவசியம் அடிக்கடி வாருங்கள்!!

Unknown said...

அருமையாக தொகுத்திருக்கீங்க அம்மா. நானும் சரித்திர நாவல்களின் தீவிர விசிறி. அதிலும் கல்கி அவர்களின் சிவகாமியின் சபதமும், பொன்னியின் செல்வனும் எத்தனை முறைப் படித்தாலும் திகட்டாதவை.

kowsy said...

கையில் பேனா எடுத்தால், அது மற்றவர் கவனத்தைக் கவருவது மட்டுமன்றி, மற்றவர்களில் கரிசனையும் கொண்டதாய் இருக்கவேண்டும். வாசகர் பயன் கருதி நீங்கள் தந்த இப்படைப்பு மனதுக்கு மகிழ்ச்சியைத் தருகின்றது.

மனோ சாமிநாதன் said...

சிவகாமியின் சபத்தைப்பற்றி எழுதியிருந்தது மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது ஜிஜி! பாராட்டிற்கு அன்பு நன்றி!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுரைக்கும் இனிய கருத்திற்கும் அன்பார்ந்த நன்றி சந்திரகெளரி!

ADHI VENKAT said...

நல்ல தொகுப்பு அம்மா.

பகிர்வுக்கு நன்றி.

http://kovai2delhi.blogspot.com/2011/07/blog-post_23.html