Wednesday, 4 May 2011

பெயர்க்காரணம்-தொடர் பதிவு!

திரு.கோபி ராமமூர்த்தி இந்தப் பெயர்க்காரணம் தொடர்ப்பதிவில் என்னையும் பங்கேற்குமாறு சில மாதங்களுக்கு முன்பு கேட்டிருந்தார். அவருக்கு என் உளமார்ந்த நன்றி! தயக்கத்தினாலேயும் எந்த விதமான அதிக சுவாரஸ்யமான நிகழ்வுகளோ, நினைவுகளோ அதிகம் இல்லாததாலும் இதுவரை இந்த தொடர்பதிவை எழுத முனையவில்லை நான்! அப்புறம் தொடர்ந்து வந்த பெயர்க்காரணத் தொடர்பதிவுகளைப்படித்த போது இதைத் தொடருவதும் எழுதுவதும் ஒரு புதிய அனுபவமாக இருக்குமெனத் தோன்றியதால் இதோ எழுத வந்து விட்டேன்!!

 சில பேருக்கு தன் பெயரை நினைக்கும்போதே பெருமிதமாக இருக்கும். சிலருக்கோ அதை சட்டப்பூர்வமாக நீக்கி விட்டு வேறு அழகான பெயரை பதிவு செய்யத் தோன்றும்!! சில பெயர்கள் தேவையில்லாத குளறுபடிகளை ஏற்படுத்தும்!

 சில நாட்கள் முன் ஒரு மருத்துவ மனை சென்று மருத்துவருக்காகக் காத்திருந்தபோது, நர்ஸ் வந்து “ அம்மா செல்லம் யாரும்மா?” என்று கேட்டதும் எல்லோருடைய முகத்திலும் புன்னகை மலர்ந்தது. அது யார் அம்மா செல்லம் என்ற பெயருடையவர் என்று ஆவலாகக் காத்திருந்த போது, வந்த அம்மா செல்லமோ 75 வயது பாட்டி!! இது போலத்தான் என் பெயரான ‘ மனோரமா’ என்பதும் ஒரு நிமிடம் எதிரே இருப்பவரை புன்னகை செய்ய வைக்கும் எப்போதும்!

 சிறு வயதில் இந்தப் பெயர் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. பள்ளிப் பருவத்தின் இறுதியில்தான் பிரச்சினைகள் ஏற்பட்டன. நானும் என் தங்கையும் பள்ளி செல்லும்போது ‘ நாகேஷ் எங்கே காணோம்?” என்ற கேள்விக்கணைகள் பின்னாலேயே வரும். முதலில் புரியவில்லை. அது என் பெயருக்கான கிண்டல்தான் என்று புரிந்தபோது ஆத்திரமும் அவமானமும் பொங்கியெழுந்தன. நேரே அம்மாவிடம் சென்று கோபமும் அழுகையுமாக புலம்பினேன். என் அம்மா ரொம்பவும் சர்வ சாதாரணமாக “ நான் படித்த காலத்தில் இது பிரபலமான பெயர். அதுவும் உன் பெயருக்கான அர்த்தமே ‘ மனதுக்கு ரம்யமானவள்’ என்பதனால்தான் அந்தப் பெயரை வைத்தோம். இந்த மாதிரி நாகேஷ் என்ற ஒரு ஆள் வருவாரென்றோ, உன் பெயரைக் கிண்டல் செய்வார்கள் என்றோ எங்களுக்குத் தெரியுமா என்ன?” என்று சொல்லி விட்டார்கள். கூடவே “ யார் கிண்டல் செய்தார்கள் என்று சொல்லு. அப்பாவிடம் சொல்லி போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து இரண்டு தட்டு தட்டலாம்” என்று சொல்லவும் அவசர அவசரமாக நகர்ந்து விட்டேன். என் தந்தை ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் என்பதுதான் அதற்குக் காரணம்! ஏற்கனவே ஒரு ஆசிரியர் ஏதோ அதட்டி விட்டாரென்ற ஒரு காரணத்துக்காக என் தந்தை அந்த ஆசிரியரை போலீஸ் ஸ்டேஷனுக்கே வரவழைத்து ஒரு குற்றவாளியை விசாரிப்பதுபோல விசாரித்து எச்சரிக்கை செய்தவர். அப்புறம் அந்த ஆசிரியரிடமிருந்து வந்த கிண்டல்கள் எனக்குத்தானே தெரியும்!! இதனாலேயே இது போன்ற பிரச்சினைகளை வீட்டில் சொல்லவே பயமாக இருக்கும்!



உயர் நிலைப்பள்ளியைத் தொடர்ந்து கல்லூரியிலும் இந்த பிரச்சினை தொடர்ந்தது. நாகேஷ் பின்னால் வந்து கொண்டே இருந்தார்! திருமணமானதும் என் பெயரை பாதியாக சுருக்கிக் கொண்டு விட்டேன். என் கணவரின் பெயரை பின்னால் இணைத்ததும் கம்பீரமாக என் பெயர் மாறி விட்டது போல ஒரு பிரமை!


இருந்தாலும் எனக்கு கோபத்தை வரவழைக்க வேண்டுமானால் என் கணவர் என் முழுப்பெயரையும் சொல்லி அழைப்பது திருமணமான புதிதில் வழக்கமாயிருந்தது. ஒரு முறை ஷார்ஜாவில் ஒரு மருத்துவரிடம் சென்றபோது, பெயரைக் கேட்டதும் “ ஓ! ஆச்சி வந்திருக்கிறீர்களா?” என்று கேட்டு வெறுப்பேற்றினார்!


நீண்ட அனுபவங்களுக்குப் பிறகு பெயரில் எதுவுமில்லை, பெயரின் அர்த்ததிற்கேற்ப வாழ்வதில்தான் உண்மையான சிறப்பிருக்கிறது என்று புரிந்தது!!







26 comments:

வெங்கட் நாகராஜ் said...

உங்கள் அம்மா சொன்னது போல நிஜமாகவே ரம்மியமான பெயர்தான். முழுதாகவே வைத்து இருக்கலாம்.....பெயர் பற்றிய உங்கள் பகிர்வு நிஜமாகவே ரம்மியமாகத்தான் இருந்தது.

ஹுஸைனம்மா said...

இதை எழுதியதிலிருந்து உங்களுக்கு ஹாஸ்யமும் நல்லாவே வரும்னு தெரிஞ்சுகிட்டேன்!!

உங்க பேர் மனோரமான்னு இப்பத்தான் தெரிஞ்சுகிட்டேன். ஆச்சி கேட்டால் ரொம்ப சந்தோஷப்படுவார்.

Yaathoramani.blogspot.com said...

பெயர் காரணத்தை மிக அழகாக விளக்கியிருக்கிறீகள்
பிரபலங்களின் பெயர்களை சூட்டுவதில் உள்ள
சங்கடங்களையும் மிக அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்
தாஜ் மஹாலின் சிறப்பே வடிவமைப்போ சலவைக் கற்களோ அல்ல
இன்னொன்று அதைப்போல உலகில் இல்லை என்பதுதான்
இதனையே நீங்கள் வேறு வகையில் விளக்கியிருக்கிறீர்கள்
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

தமிழ் உதயம் said...

ஆம். சில பெயர்கள் கேலி பேசுவதற்கே வைத்தது போலிருக்கும். நல்ல பதிவு.

வை.கோபாலகிருஷ்ணன் said...

தங்களின் முழுப்பெயர் மனோன்மணியாகவோ, மனோரமாவாகவோ தான் இருக்கும் என்று சந்தேகப்பட்டேன். இப்போது என் சந்தேகம் தீர்ந்தது.

சினிமா நடிகை மனோரமா சாதாரண ஆளா என்ன, மிகச்சிறந்த நகைச்சுவை நடிகையல்லவா !

அந்தப்பெயர் ராசிதானோ என்னவோ தாங்களும் அனைத்துறைகளிலும் பிரபலமானவராகவே திகழ்கின்றீர்கள்.

வாழ்த்துக்கள். அன்புடன் vgk

vanathy said...

உங்க பெயர் இப்ப தான் தெரிஞ்சுகிட்டேன். நல்ல நகைச்சுவையா எழுதி இருக்கிறீங்க, அக்கா.

Chitra J said...

//என் கணவரின் பெயரை பின்னால் இணைத்ததும் கம்பீரமாக என் பெயர் மாறி விட்டது போல ஒரு பிரமை!//

Gone thru this... Nalla Pahiru.

CDJ

ஸ்ரீராம். said...

நல்லதொரு சாதனையாளரின் பெயர். பெயரினால் சிறுவயதில் ஏற்பட்ட சங்கடத்தை அழகாக சொல்லியுள்ளீர்கள்.

Menaga Sathia said...

நல்ல பகிர்வு!! உங்க முழுப்பெயரையும் தெரிந்துக்கொண்டேன் அம்மா...

பத்மநாபன் said...

ஆச்சியின் பேர் வழக்கில் ரேர் ஆக இருந்தாலும் உச்சியை தொட்ட பெயரல்லவா... சினிமா பெயர் பள்ளிக் காலத்தில் ஏற்பட்ட சங்கடத்தை இயல்பாக எடுத்து சொல்லியுள்ளீர்கள்

ADHI VENKAT said...

நல்ல பகிர்வு. ரம்மியமான பெயர் தான் அம்மா.

பிலஹரி:) ) அதிரா said...

உங்கட பெயர் எழுத்துக்கள்கூட, ஒரு எழுத்தும் மாறாமல்... அவவின் எழுத்தாகவே(மனோரமா) இருக்கே மனோ அக்கா.

raji said...

arumaiyaana peyarkkaaranam madam.
irunthaalum en manathil mano enpathe ondri vittadhu.enakku adhudhaan mika ramyamaaka irukkirathu.
enakku neengal mano madam dhaan

ஸாதிகா said...

அக்கா.பதிவு கண்டு சிரிப்பு வந்தது.எனக்கும்தான் உங்கள் முழுப்பெயர் தெரிந்து கொள்ள ஆசை.ஆனால் மனோரமா..நான் எதிர்பார்க்காத பெயர்தான்.அதிலும் திருமணத்திற்கு பின் மனோ சுவாமிநாதன் கம்பீரமாக மாறிவிட்டது என்பது உண்மைதான்.உங்கள் கணவர் உங்கள் முழுப்பெயர கூறி அழைத்து கோபத்தை வரவழைப்பது...ஹா ஹா ஹா

middleclassmadhavi said...

பொருத்தமான பெயர் தான்!

Asiya Omar said...

மனோ அக்கா உங்கள் பெயர் எனக்கு மிக்க மகிழ்வைத் தந்தது,பெயரும் பெயர்க்காரணமும் அருமையான பகிர்வு.நானும் அக்கா பெயர் மனோன்மணியாக இருக்குமோ,மனோரஞ்சிதமாக இருக்குமோன்னு யோசித்து இருக்கேன்,ஆனால் இப்படி சூப்பர் பெயராக இருக்கும்னு எதிப்ர்பார்க்கலை.
மனோரமாக்கா ...நானும் ஒரு முறை ஆசையாக கூப்பிட்டுக்கறேனே...

மனோ சாமிநாதன் said...

ரொம்பவும் நன்றி வெங்கட் நாகராஜ் பாராட்டிற்கும் ரம்யமான விமர்சனத்திற்கும்!

மனோ சாமிநாதன் said...

ந‌கைச்சுவை ர‌ச‌னை என்ப‌து என‌க்கு ரொம்ப‌வும் கிடையாது ஹுஸைன‌ம்மா! அத‌னால் உங்க‌ள் பாராட்டு என‌க்கு சந்தோஷ‌மாக‌வே இருக்கிற‌து!

மனோ சாமிநாதன் said...

தாஜ்மஹாலை ஒப்பிட்டு செய்திருக்கும் பாராட்டு விமர்சனம் மகிழ்வைத்தந்தது சகோதரர் ரமணி! தங்களுக்கு என் அன்பு நன்றி!

மனோ சாமிநாதன் said...

கருத்துக்கு அன்பு நன்றி தமிழ் உதயம்!

மனோ சாமிநாதன் said...

என் பெயரை மிகச் சரியாக ஊகித்தது ஆச்சரியமாக இருக்கிறது சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்! பாராட்டுக்கு அன்பு நன்றி!!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்கும் கருத்துக்கும் அன்பு நன்றி வானதி!

மனோ சாமிநாதன் said...

அன்பான பாராட்டிற்கும் முதல் வருகைக்கும் இனிய நன்றி சித்ரா!

இராஜராஜேஸ்வரி said...

அழகான ரம்யமான பெயர். வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

மனோ சாமிநாதன் said...

இந்த இடுகையில் இணைந்து ஓட்டுமளித்த அன்புத் தோழமைகள்
Sriramanandhaguruji, vengkat nagaraj, KarthikVK,
RVENGKATBOSS, BSR, RDX,
அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி!!

இமா க்றிஸ் said...

அழகான பகிர்வு அக்கா. சுவைபட எழுதி இருக்கிறீர்கள்.