Tuesday 2 November 2010

ஜாதகமும் நானும்-2

என் சினேகிதியரில் ஒருவர் நான் எப்போது ஊருக்குச் சென்றாலும் கோவையிலிருந்து வந்து என்னுடன் நிறைய நாட்கள் தங்குவார். அவர் அதுபோல என்னுடன் தங்கியிருந்தபோது, ஒரு நாள் அவர் பெண்ணுக்கு திடீரென ஒரு வரன் வந்துள்ளதாக அவர் கணவர் ஊரிலிருந்து ஃபோன் செய்தார். கூரியர் மூலம் வந்த மாப்பிள்ளையின் விபரங்கள் எல்லாமே நன்கிருந்தன. என் சினேகிதி பிராமண குலம் என்பதாலும் அவர் சமூகத்தில் இதெல்லாம் தவிர்க்கமுடியாதவை என்பதாலும் ஒரு நல்ல ஜோதிடரிடம் போக வேண்டும் என்றார். தெரிந்த ஒருவரிடம் கேட்டு அவர் சொன்ன மிகப் பிரபலமான ஜோதிடரிடம் சென்றோம். அவர் ‘பெண்ணின் ஜாதகத்தையும் பையனின் ஜாதகத்தையும் கொடுத்து விட்டு செல்லுங்கள். நாளை வாருங்கள்’ என்றார். அதன்படியே மறு நாள் சென்றோம். கூட்டம் வேறு இருந்தது. ஜோதிடர் என் சினேகிதியிடம் ‘ உங்கள் பெண்ணுக்கு மூன்று வருடங்கள் கழித்துத்தான் திருமணம் நடக்கும். இதுபோல சில ஜாதகங்களை நம்பி கல்யாணத்தில் இறங்க வேண்டாம். பொருத்தம் இருப்பது மாதிரி தோன்றும் அதை நம்பி நீங்கள் திருமணம் செய்தால் பையன் உங்கள் பெண்ணை விட்டு விட்டு ஓடிப்போய் விடுவார். “ என்று ஒரேயடியாக குண்டைப் போட்டார். என் மகனின் ஜாதகத்தையும் முதன் முதலாக காண்பித்தேன். என் மகனின் ஜாதகத்தில் எந்தப்பிரச்சினையும் இல்லையென்றும் ஆனால் எப்படி முயன்றாலும் மூன்று வருடங்கள் கழித்துத்தான் திருமணம் நடக்கும் என்றார். எனக்கு இதில் எல்லாம் பழக்கமோ, நம்பிக்கையோ இல்லையென்பதால் என் மனதில் எந்த பாதிப்புமில்லை. ஆனால் வீட்டுக்குச் சென்றதிலிருந்து இரவு முழுவதும் என் சினேகிதியின் விழிகளிலிருந்து கண்ணீர் மழைதான் பொழிந்து கொண்டிருந்தது. நான் எவ்வளவு சமாதானம் சொன்னாலும் மனம் ஆறவில்லை அவருக்கு! ‘ கவலைப்படாதே, நாம் வேறு ஒரு நல்ல ஜோதிடரைத் தேடுவோம்’ என்று சமாதானம் செய்தேன்.

[ஆனால் உண்மையில் நடந்ததென்னவோ, என் மகனுக்கு ஆறு மாதங்கள் கழித்து திருமணம் நடந்தது. அதன்பின் மூன்று மாதங்கள் கழித்து என் சினேகிதியின் பெண்ணுக்குத் திருமணம் நடந்து கழிந்த இரண்டு வருடங்களில் ஒரு அழகான ஆண் குழந்தைக்கும் தாயாகியுள்ளார்! ]

மறுபடியும் வேறு ஒரு சினேகிதியின் பரிந்துரை பேரில் ஊருக்கு வெளியே ஒரு ஜோதிடரைப்பார்க்கச் என்றோம். சிவப்பழமாக வயதானவராக அமர்ந்திருந்தார் அவர். பக்கத்தில் நிறைய ஜோதிட புத்தகங்கள், நோட்டுக்கள், கடவுள் சிலைகள்! அவர் ஒரு தொலைபேசி அழைப்பை ஏற்கச் சென்றபோதுதான் பார்த்தேன், அவரின் இடப்பக்கம் வெளிநாட்டு மது வகைகள் பல தினுசில் இருந்ததை! உடனேயே சினேகிதியிடம் விபரம்கூட சொல்லாமல் எழுந்து வந்து விட்டேன். அப்புறம் வீட்டுக்கு வந்து சேர்ந்தபோது ஒரு பக்கம் தாங்க முடியாத கோபம், மறு பக்கமோ சிரிப்பு வேறு!

எந்த விஷயத்திலுமே நம்பிக்கை இருப்பதும் இல்லாமலிருப்பதும் மனமும் அறிவும் சார்ந்த விஷயங்கள். ஆனால் என்னவென்றே தெரியாமல் ஒரு விஷயத்தில் ஈடுபடுவது மிகவும் முட்டாள்தனமாகத் தோன்ற ஆரம்பித்தது. ஜாதகங்களைப்பற்றி ஓரளவாவது தெரிந்து கொள்ள ஆரம்பித்தேன். நிறைய புத்தகங்கள், இண்டர்னெட், இவைகள் எல்லாம் உதவிகள் செய்தன. எப்படி ஆத்திக வாதங்களுக்கும் நாத்திக வாதங்களுக்கும் இன்று வரை ஒரு முடிவில்லையோ, அதுபோலத்தான் இதுவும். ஜாதகங்களில் நம்பிக்கை உள்ளவர்களுக்கு, அதை உறுதி செய்ய நிறைய வாதங்கள் உள்ளன. அதே சமயம் அதில் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு எதிர்வாதங்களும் கேள்விகளும் நிறைய இருக்கின்றன. அதனால் அதிகம் மூளையைக் குழப்பிக்கொள்ளாமல் அதைப்பற்றிய விஷயங்களை ஓரளவு தெரிந்து கொள்ளவே இந்த ஆராய்ச்சிகளைச் செய்தேன்.

20 வருடங்களுக்கு முன்னால்வரை இந்த பழக்கம் குறிப்பிட்ட சமுதாயத்தில் மட்டுமே அதிகமாக இருந்தது. இப்போதோ ஜாதகப்பொருத்தம் பார்க்காத ஜாதிகளே இல்லை. முதலில் ஜாதகப்பொருத்தம் பார்த்து, பொருத்தம் சரியாக இருந்தால் மட்டுமே, பெண்னையோ, மாப்பிள்ளையையோ பார்ப்பதற்கும் மற்ற விஷயங்களையும் பற்றிப் பேசவும் இரு தரப்பிலும் சம்மதிக்கின்றனர். அதுவும் என் விஷயத்தில் பெண் வீட்டை அழைத்துப் பேச முற்படும்போதே, ‘ மாப்பிள்ளை வீடான நீங்கள்தான் முதலில் ஜாதகம் பார்க்க வேண்டும், அதன் பின் தான் நாங்கள் பார்ப்போம். அதனால் பார்த்ததும் திரும்பக் கூப்பிடுங்கள்’ என்றுதான் சொல்கிறார்கள்.

பொதுவாக திருக்கணித முறைப்படியும் பாம்பு பஞ்சாங்க[வாக்கியப்பஞ்சாங்க] முறைப்படியும்தான் ஜாதகங்கள் கணிக்கப்படுகின்றன. இதில் திருக்கணித முறையை ஒட்டித்தான் அனைத்து கம்யூட்டர் ஸாப்ட்வேர்களிலும் ஜாதகங்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த முறைப்படி தயாரிக்கப்படும் ஜாதகங்கள் பெரும்பாலும் ஒன்றுக்கொன்று சரியாகவே இருக்கும். வைதீகர்களும் பண்டிதர்களும் பின்பற்றுவது வாக்கியப்பஞ்சாங்கத்தை மட்டுமே. இதில் ஒருவரின் கணிப்புபோல மற்றவருடைய கணிப்பு இருப்பதில்லை. இவர்கள் திருக்கணித முறையை ஒத்துக்கொள்ளுவதில்லை. ஒருவரின் ஜாதகம் இந்த இரு முறைகளிலும் வேறுபடும்.

மற்ற மதங்களிலும் வெளி நாடுகளில் சிலவற்றிலும் ஜாதகம் பார்ப்பதைக் கேள்வியுற்றபோது மிகுந்த ஆச்சரியமாக இருந்தது. என் வீட்டில் வேலை செய்யும் கிறிஸ்தவப்பெண்[தெலுங்கு], அவர்கள் சமூகத்தில் ஜாதகம் பார்க்காமல் யாருமே திருமணம் செய்வதில்லை என்றார்.

இப்படி ஜோதிட முறைகளில் பல வகைகள் இருக்கும்போது, ஜோதிடர்களின் பாண்டித்யங்களில் பல வேறுபாடுகள் இருக்கும்போது, பாண்டித்யமே இல்லாத, காசை மட்டுமே பிரதானமாக எண்ணும் சாதாரண ஜோதிடர்களின் கணிப்புகள் என்ற விபரீதங்களுக்கிடையே, ஒரு பெண்ணுடைய வாழ்க்கையும் ஒரு ஆணுடைய வாழ்க்கையும் எதிர்காலத்தில் இப்படித்தான் இருக்கும் என்று எப்படி முடிவெடுப்பது? இப்படி எடுக்கும் முடிவு சரியானதுதானா என்று எத்தனை பேருக்குத் தெரியும்? ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் பாம்பு பஞ்சாங்கத்தில் பொருத்தம் அவ்வளவாகச் சரியில்லையென்று கண்டு பிடிக்கும் ஒரு சாதாரண ஜோதிடர் தனக்கு சாதகமாக திருக்கணித முறைப்படி பொருத்தம் பார்த்து 8 அல்லது 9 பொருத்தம் இருப்பதாக சொல்வதை எதுவுமறியாத மக்கள் அப்படியே ஏற்றுக் கொள்ளுகிறார்கள். இன்றைக்கு தற்போது பல ஜோதிடர்கள் இப்படித்தான் வியாபாரத்திற்காகச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

எனக்கும் அதுபோல ஒரு அனுபவம் அதற்குப்பிறகு ஏற்பட்டது. நான் ஏற்கனவே சொல்லியிருக்கும் திருச்சி சூர்யா தகவல் மையத்திலிருந்து அதன் நிறுவனர் என்னை அழைத்து, தர்மபுரியில் ஒரு பெண் உள்ளது என்றும் எட்டு பொருத்தங்கள் இருப்பதாயும் பெண் வீட்டில் பெண் பார்க்க வரச்சொல்லுவதாயும் சொன்னார். போகும் வழியில் அவர் பெண்ணின் ஜாதகத்தையும் என் மகனின் ஜாதகத்தையும் பொருத்தம் பார்த்த விபரங்களையும் என்னிடம் கொடுத்துப்பார்க்கச் சொன்னார். அவரே வாக்கியப் பஞ்சாங்க முறையில் கணித்த ஜாதகம் முதல் பக்கத்தில் இருந்தது. அடுத்தது பெண்ணின் ஜாதகம். மூன்றாவது பக்கத்தில் என் மகனின் ஜாதகம் திருக்கணித முறையில் எடுக்கப்பட்டு அந்தப்பெண்ணின் ஜாதகமும் இணைக்கப்பட்டு 8 பொருத்தங்கள் உள்ளதாக விபரங்கள் எழுதப்பட்டு இருந்தன. நான் அப்போது ஒன்றுமே சொல்லவில்லை. பேசாமல் என் கைப்பையில் வைத்துக்கொண்டேன். பெண் பார்த்து விட்டுத் திரும்பும்போதும், அவரைக் காரிலிருந்து அவர் இருப்பிடத்திற்கு அருகில் இறக்கி விட்டபோது, அவரிடம் அவைகளைக் காண்பித்து, ‘ இதென்ன முதலில் என் மகனுக்கு வாக்கியப் பஞ்சாங்க முறைப்படி ஜாதகம் தயாரித்துக் கொடுத்தீர்கள். இப்போது என்னவென்றால் திருக்கணிதமுறையில் வேறு ஒரு ஜாதகம் தயாரித்துப் பொருத்தம் பார்த்திருக்கிறீர்கள்?’ என்று கேட்டதும் அவர் அப்படியே ஸ்தம்பித்துப்போனார்.

‘ இல்லைம்மா. அது அவ்வளவா பொருந்தவில்லை. அதனால்தான் இப்படி..” என்றார்.

‘அப்படியானால் வசதிக்குத்தகுந்தப்படி ஜாதகத்தை மாற்றிக்கொள்வீர்களா? இது இருவர் வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயம், எப்படி உங்கள் வசதிக்குத் தகுந்தபடி மாற்றலாம்?’ என்று கேட்டதும் அவரால் ஒன்றும் சொல்ல முடியவில்லை.

எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. இப்படி எத்தனை பேர் வெறும் பணத்திற்குச் செய்கிறார்களோ? எத்தனை பேர் விபரம் தெரியாமல் ஏமாறுவார்கள்! என் மகனுக்கு அவ்வளவாகப் பிடித்தம் இல்லாததால் இந்தத் திருமணம் நடக்கவில்லை. ஆனாலும் பெண்ணின் அம்மாவைக்கூப்பிட்டு விபரம் சொல்லி எதிர்காலத்தில் கவனமாக இருப்பதுடன் வேறு ஒரு நல்ல ஜோதிடரைப்பார்த்து விபரங்கள் தெரிந்து கொள்ளச் சொன்னேன்.

இத்தனை அனுபவங்களுக்குப்பிறகு, அதிர்ச்சிகளுக்குப்பிறகு, ஒரு தரமான ஜோதிடரை விசாரிக்க முயன்றதில் கிடைத்தவர் ஒரு இஸ்லாமிய ஜோதிடர். ஐந்து தலைமுறைகளாய் ஜோதிடம் பார்த்துச் சொல்லும் குடும்பமென்றும், மரியாதை, தொழிலில் அக்கறை எல்லாம் நிரம்பியவர், செல்வந்தர்கள் என்றாலும் ஏழைகள் என்றாலும் ஒரே மாதிரிதான் நடத்துவார் என்றெல்லாம் கேள்விப்பட்டதும் என் சினேகிதியுடன் அவரைப்பார்க்கச் சென்றேன். அவரிடம் பேசிய போது, ‘ நான் திருக்கணித முறையைத்தான் பின்பற்றுகிறேன்.’ என்று சொல்லி என் மகனின் ஜாதகத்தையும் வாங்கி ஆராய்ந்து பார்த்தார்.. ‘ இது சரியான ஜாதகம். திருக்கணித முறைப்படித்தான் எழுதப்பட்டிருக்கிறது. உங்கள் மகனின் திருமணம் இன்னும் ஆறு மாதங்களில் முடிவாகி விடும். தூரத்து சொந்தத்தில் பெண் அமையும்.’ என்றார்.

வீட்டுக்கு வந்து யோசனை செய்ததுதான் மிச்சம். சொந்தத்திலோ, தூரத்து சொந்தத்திலோ எந்தப்பெண்ணும் இல்லை.

ஆனால் அவர் சொன்னதுபடியே தான் நடந்தது. என் கணவரின் அண்ணிக்கு நெருங்கிய உறவு- எப்போதோ விட்டு விலகிப்போன உறவில் பெண் அமைந்தது. அதுவும் அவர் சொன்ன மாதிரி ஆறாம் மாதம் முடிவதற்கு இரண்டு நாட்கள் முன்பு திருமணம் முடிவானது. என் சினேகிதியின் பெண்ணுக்கும் அவர் சொன்ன மாதிரியே தான் திருமணம் நடைபெற்றது.

ஜாதகத்தில் நம்பிக்கையோ, பற்றோ இப்பொழுதும் இல்லையென்றாலும் இப்படி நடந்தவைகளெல்லாம் இன்று நினைத்தாலும் ஆச்சரியமான விஷயங்களாகவே இருக்கின்றன. வாழ்க்கையின் வழி நெடுகக் கிடைக்கும் வியப்புகளும் அனுபவங்களும் நிறைய! ஆனாலும் கற்றுக்கொண்டதோ அதையும் விட நிறைய!!




தோழமைகள் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!!


நன்றி: www.eegarai.net

32 comments:

தமிழ் உதயம் said...

ஜாதக நம்பிக்கை இயற்கையாகவே இருந்தால் பரவாயில்லை. நம்பிக்கை இல்லாதவரிடம் அதை திணித்தல் தவறு.

kavisiva said...

ஜாதக விஷயங்களில் எங்கள் வீட்டில் யாருக்குமே அவ்வளவு நம்பிக்கை கிடையாது. ஆனால் மகன் மகள் வாழ்க்கை என்று வரும் போது ரிஸ்க் எடுக்க அப்பா அம்மா தயாரில்லை :(.

ஜாதகம் பார்ப்பதைத் தொழிலாகக் கொள்ளாத நண்பர் ஒருவர் என் ஜாதகத்தைப் பார்த்து விட்டு சொன்னது அப்படியே நடந்தது. ஆனாலும் இன்னும் ஏனோ எனக்கு அவ்வளவாக ஜாதகங்களில் நம்பிக்கை இல்லை.

புவனேஸ்வரி ராமநாதன் said...

நிறைய விஷயங்கள் தெரிந்துகொள்ள முடிந்தது. அருமையான பகிர்வு. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

CS. Mohan Kumar said...

Happy Diwali Madam!!

ஹுஸைனம்மா said...

போன பதிவில் சொன்னமாதிரியே சுவாரஸ்யம்தான்!!

சென்ற தலைமுறையில் சிலர் - முஸ்லிம்கள் - பொருத்தம், ஜோதிடம் பார்ப்பதுண்டு என்று அறிந்திருக்கிறேன். இந்தத் தலைமுறையில் நிறைய மாற்றம். ஆனால், இஸ்லாமிய ஜோதிடர் - முதல்முறை கேள்விப்படுகிறேன்.

அதிலும், ஜோதிடம் பார்க்கும் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கணித்தது நடக்கவில்லை; ஜோதிடம் பார்க்ககூடாத முஸ்லிம் கணித்தது நடந்திருக்கிறது. உலகமே முரண்களால் சூழப்பட்டதுதான் என்பது சரிதான் போல அக்கா!!

எனது கிறிஸ்தவ தோழி ஒருவர் ஆடி மாசத்தில் புதுவீடு குடிபுக மாட்டோம் என்று சொன்னது ஆச்சர்யமாயிருந்தது. கேட்டதற்கு, இன்னும் இதுபோல நிறைய நம்பிக்கைகளைச் சொன்னார்!!

மனிதர்கள் பலவிதம் என்பதுபோலவே, நம்பிக்கைகளும் பலவிதம் போல!! யாரையும் காயப்படுத்தாமல் இருபப்துதான் முக்கியம்.

பொதுவாகப் பெண்ணுக்கு மாப்பிள்ளை அமைவதுதான் சிரமம் என்று சொல்வார்கள். அது அந்தக் காலம் போல!! இப்ப யாரைக் கேட்டாலும் பையனுக்கு பெண் அமைவதுதான் சிரமம் என்கிறார்கள்!!

உண்மையைத் தெரிந்துகொள்வதற்காக நீங்களே ஜோதிட அடிப்படைகளைத் தெரிந்துகொண்டதும் ஆச்சர்யம்தான்!! மொத்தத்தில் இந்தப் பதிவுகளில் நிறைய தெரிந்து கொண்டேன் அக்கா!!

'பரிவை' சே.குமார் said...

அருமையான பகிர்வு. இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

ராமலக்ஷ்மி said...

ஜோதிடம் ஆச்சரியப்படுத்துகிற ஒரு அறிவியல்தான். ஆனால் சரியான நபரைக் கண்டறிவது பெரிய சவால். அல்லாது போனால்.. என்பதை உங்கள் அனுபவங்களுடன் அழகாகப் பகிர்ந்து கொண்டு விட்டீர்கள்.

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

Asiya Omar said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்,தீபாவளி பலகாரம் செய்ய ஆரம்பிச்சாச்சா அக்கா?நல்ல பலகார குறிப்பு ஒன்று தீபாவளி ஸ்பெஷலாக கொடுங்கள்.

Chitra said...

வாழ்க்கையின் வழி நெடுகக் கிடைக்கும் வியப்புகளும் அனுபவங்களும் நிறைய! ஆனாலும் கற்றுக்கொண்டதோ அதையும் விட நிறைய!!

...... உங்கள் பதிவுகள் சுவாரசியமாக இருக்கின்றன.

இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்!

Anisha Yunus said...

//இத்தனை அனுபவங்களுக்குப்பிறகு, அதிர்ச்சிகளுக்குப்பிறகு, ஒரு தரமான ஜோதிடரை விசாரிக்க முயன்றதில் கிடைத்தவர் ஒரு இஸ்லாமிய ஜோதிடர். //

இறைவனின் அருளினால் உங்களின் மகனுக்கும், உங்களைன் சினேகிதி மகனுக்கும் திருமணம் நடந்து இருவரும் தத்தம் குடும்பத்தில் மகிழ்ச்சியாக இருப்பது சந்தோஷம் அளிக்கிறது. ஆனாலும், இங்க இஸ்லாமிய ஜோதிடர் என்று கூறியுள்ளவரைப் பற்றியதே என் வருத்தம்.

மனோ அக்கா, விதண்டாவாதம் செய்வதாக நினைத்துக்கொள்ள வேண்டாம். உண்மையை சொல்ல வேண்டியது கடமை என்பதால் சொல்கிறேன்.

இஸ்லாம் என்றாலே அதன் பொருள் 'சரண்டைதல்', அதாவது எந்த வித முரண்பாடுமின்றி அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு ஏற்ப தன் வாழ்க்கையை அமைத்தல். பிறப்பினால் மட்டும் ஒருவர் இஸ்லாமியராகி விட மாட்டார். அவரின் வாழ்க்கையில் எல்லா வேளைகளிலும், வேலைகளிலும் அல்லாஹ்க்கு அடிபணிந்து வாழ்பவரே இஸ்லாமியராவார். பரம்பரை பரம்பரையாய் இருப்பதால் அல்ல.
இன்னும் இஸ்லாத்தில் ஜோசியத்திற்கு இடமில்லை. வாஸ்து, ஜோதிடம், சூனியம் போன்ற எல்லாமே
இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளன. இதை மீறி இவற்றில் நம்பிக்கை வைப்பவர்கள் இஸ்லாமியராக முடியாது.
அவர்கள் ஐவேளை தொழுபவராக இருப்பினும் சரி. தன்னுடைய இறைவனின் கட்டளைக்கே மாறுபட்டு வாழ நினைப்பவர்களை எந்த விதத்தில் நாம் நம்பலாம் என்றும் எனக்கு புரியவில்லை. இதை நீங்கள் ஏற்க வேண்டும் எனவோ, அவரை விட்டுவிடுங்கள் எனவோ நான் கூறவில்லை. இந்த விஷயத்தை தெளிவுபடுத்த மட்டுமே முயன்றுள்ளென். தங்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை பகிர்ந்து அதன் மூலம் இஸ்லாத்தை தெளிவாக்க ஒரு வாய்யப்பு தந்தமைக்கு நன்றி அக்கா.

தினேஷ்குமார் said...

அம்மா ஒன்னே ஒன்னு சொல்றேன்மா ஜோதிடர்களை பொருத்தவரை நம்பகத்தன்மை குறைவுதான் யவர்க்கும்
எனக்கு ஜோதிடம் பற்றி அவ்வளவாக தெரியாது ஆனால் நண்பர் ஒருவர் அங்கசாஷ்திரம் என்னும் புத்தகம் ஒன்றை வைத்திருந்தார் நானும் படிக்க கேட்டு என்னிடம் தந்தவர் இனி உன் ஜாதகம் உன்னால் கணிக்கப்படும் என்றார்............

அவர் கூறியது உண்மையோ பொய்யோ எனக்கு இப்போ 28 வயதுதான் ஆகிறது என் 23 வது வயதில் அங்கசாஷ்திரம் படித்தேன் இதுவரை நான் கணிக்கும் என்னுடைய பலன்கள் 75% கணிசமாக உள்ளது கடவுளின் அனுகூலத்தாலும் என் தவறுக்கு தனக்குத்தானே தண்டனை கொடுப்பதாலும்......

ஜனித்த ஜாதகம் சரியாக பயன் படுத்தப்பட்டால் ஜகம் ஆள்வார்கள் யவரும்.............

R. Gopi said...

தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

நல்லா சப்புக் கொட்டி சாப்பிடுற மாதிரி ஒரு நாலு ஸ்வீட், நாலு காரம் குறிப்புப் போடுங்க!

மனோ சாமிநாதன் said...

தங்களின் கருத்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரர் தமிழ் உதயம்!!

மனோ சாமிநாதன் said...

நீங்கள் எழுதியதெல்லாம் மிகவும் சரியானது கவிசிவா! பெற்றோர்கள் எப்போதுமே அப்படித்தான். தன் குழந்தைகள் என்று வரும்போது நிறைய விஷயங்களில் compromise செய்து கொள்கிறார்கள்!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்கு அன்பு நன்றி புவனேஸ்வரி! உங்களுக்கும் என் இதயங்கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள்!!

மனோ சாமிநாதன் said...

அன்பு நன்றி மோகன்குமார்! உங்களுக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!

மனோ சாமிநாதன் said...

உங்களின் நீண்ட பதிவு எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத்தந்தது ஹுஸைனம்மா!

நீங்கள் சொல்வது மாதிரி முரண்பாடுகள் நிறைந்ததுதானே வாழ்க்கை! இந்த மாதிரி நம்பிக்கைகள் மொழிகளைத்தாண்டி, மதங்களைத்தாண்டி நாடுகளையும் தாண்டி பலவிதங்களில் வேறுபட்டிருக்கின்றன! யாரும் காயப்பட்டுவிடக்கூடது என்பதில் உங்களை மாதிரியே தான் நானும் நினைக்கிறேன்.

அப்புறம் ‘இந்த காலத்தில் மணமகள் கிடைப்பதுதான் கடினம்’ என்று அழகாக சொல்லியிருக்கிறீர்கள். இதுவும் நூற்றுக்கு நூறு உண்மை! என் அனுபவங்களும் அப்படித்தான் சொல்லின.அதுவும் இந்த ஜாதகம் என்ற விஷயத்தின் குறுக்கீடால் கசப்பும் அலைச்சலுமாக நிறைய அனுபவங்கள். அத்தனை அனுபவங்களில் ஒரு பகுதியைத்தான் நான் இங்கே வெளிப்படுத்தியிருக்கிறேன்.

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்கும் தீபாவளி வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி சகோதரர் குமார்! உங்களுக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!

மனோ சாமிநாதன் said...

பதிவிற்கும் தீபாவளி வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி ராமலக்ஷ்மி! உங்களுக்கும் என் இதயங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!

மனோ சாமிநாதன் said...

தீபாவளி வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி ஆசியா! நான் முதலிலேயே சொல்லியிருக்கிற மாதிரி நாங்கள் தீபாவளி கொண்டாடுவதில்லை! அதனால் அதற்காக பலகாரம் எதுவும் செய்யவில்லை!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்கும் அன்பு வாழ்த்துக்களுக்கும் அன்பான நன்றி சித்ரா! உங்களுக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!!

மனோ சாமிநாதன் said...

அன்பு அன்னு!

உங்கள் நீண்ட பதிலைப் படித்தேன். இதை விதண்டாவாதம் என்று நினைப்பதற்கு என்ன இருக்கிறது? உங்களின் கருத்தை நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள்.

நான் எனது அனுபவங்களை மட்டுமே இங்கு பகிர்ந்து கொண்டிருக்கிறேன். இதில் யாரும் வருத்தப்படக்கூடும் என்று நான் நினைத்துப்பார்க்கவே இல்லை. இதிலெல்லாம் நம்பிக்க இல்லாத குடும்பத்தைச் சார்ந்தவள் நான் என்பதையும் எப்படி சூழ்நிலைகள் என்னை ஜாதகங்களைப்பற்றி அறிய வைத்தன என்பதையும்தான் நான் இங்கு சொல்லியிருக்கிறேன்.

அந்த முஸ்லீம் பெரியவரின் மீது எனக்கு மரியாதை அதிகம் ஆனதற்கு காரணமே உயர்தர அதிகாரிகளுக்கும் காரில் வந்து காத்திருப்பவர்களுக்கும் ஒரு சாதாரண ஏழைக்கும் ஒரே மரியாதையைத் தருவதினால்தான். அவர் ஜோதிடம் சொல்வதே மசூதிக்கு அருகில்தான். அந்த மசூதி நிர்வாகமே அவருக்கு அதைச் சார்ந்த, அருகிலுள்ள வளாகத்தில் இடம் ஒதுக்கிக்கொடுத்திருப்பதுடன் அவருக்கு உதவியாளரையும் நியமித்துக்கொடுத்திருக்கிறது. இப்படி உங்களைச் சார்ந்த நிர்வாகமே அவருக்கு மரியாதையைக் கொடுத்திருக்கிறது. இருந்தாலும் நீங்கள் அவரைக் குறைத்துப் பேசியிருப்பது உங்கள் கருத்து. இதில் எனக்கு வருத்தமோ வேறு அபிப்பிராயங்களோ இல்லை!

மனோ சாமிநாதன் said...

உங்களின் நீண்ட பதிவிற்கும் கருத்துக்களுக்கும் அன்பு நன்றி தினேஷ்குமார்!!

மனோ சாமிநாதன் said...

உங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் கோபி ராமமூர்த்தி!

எம் அப்துல் காதர் said...

"சகோதரி மனோ சாமிநாதன், தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினர்கள் அனைவர்களுக்கும் எங்களின் மனங்கனிந்த 'தீபாவளி' நல் வாழ்த்துகள்"

R.Gopi said...

ஜாதக நம்பிக்கை இருக்கலாம்... ஆனால் அளவோடு..

அளவை தாண்டினால் அமுதும் விஷமன்றோ!!

பதிவு சூப்பர்....

உங்களுக்கும், குடும்பத்தார்க்கும், வலையுலக தோழமைகள் அனைவருக்கும் என் மனம் கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

என் வாழ்த்து இதோ :

ந‌ண்ப‌ர்க‌ள் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய‌ தீபாவ‌ளி ந‌ல்வாழ்த்துக்க‌ள்.
http://edakumadaku.blogspot.com/2010/11/blog-post.html

கூடவே மற்றொரு வலையில் நெடுநாட்களுக்கு பிறகு பதிந்த பதிவு இதோ :

மன்மத அம்பு - கப்பலில் காதல் http://jokkiri.blogspot.com/2010/11/blog-post.html

Anisha Yunus said...

//அவர் ஜோதிடம் சொல்வதே மசூதிக்கு அருகில்தான். அந்த மசூதி நிர்வாகமே அவருக்கு அதைச் சார்ந்த, அருகிலுள்ள வளாகத்தில் இடம் ஒதுக்கிக்கொடுத்திருப்பதுடன் அவருக்கு உதவியாளரையும் நியமித்துக்கொடுத்திருக்கிறது. இப்படி உங்களைச் சார்ந்த நிர்வாகமே அவருக்கு மரியாதையைக் கொடுத்திருக்கிறது. //

என்ன சொல்வதென்றே தெரியவில்லை அக்கா. நபிகளார்(ஸல்) வாழ்வில் அபூ பக்கர் (ரலி) என்று ஒரு தோழர் இருந்தார். ஒரு நாள் அவருக்கு அவருடைய பணியாள், தன் வீட்டிலிருந்து தயாராகிய உணவு என்று கொண்டு வந்து கொடுப்பார். சாப்பிடும்பொழுது அபூ பக்கர்(ரலி) அவர்கள் கேட்பார்கள், இந்த உணவிற்கு பணம் எப்படி சம்பாதித்தாய் என்று. அப்பொழுது தான் ஜோதிடம் பார்த்து சம்பாதித்தாக அந்த பணியாள் சொல்வார். உடனே அபூ பக்கர்(ரலி) அவர்கள் வாயில் விரலை விட்டு எல்லா உணவையும் வெளியில் எடுத்து விடுவார்கள். இந்த செய்தி நபிகளாருக்கு (ஸல்) கிடைத்தவுடன் அவர் சொல்வார், அபூ பக்கர்(ரலி), "சித்தீக்" (தமிழில் உண்மையானவர்) ஆயிற்றே, அவர் உடலில் ஹராமான உணவு சேராது என்று. அந்த சம்பவம் நினைவுக்கு வருகிறது.

இந்த சூழ்நிலையில் தடுக்க வேண்டிய மசூதி நிர்வாகமே அதற்கு இடம் தந்துள்ளது, இஸ்லாத்தை விட்டுவிட்டு மனம் போன வழியில் அவர்கள் வாழ்வதையே காட்டுகிறது. இஸ்லாமியராகட்டும், அல்லது வேறெந்த மதத்தினர் ஆகட்டும், அல்லது கடவுள் இல்லை, மூட நம்பிக்கை இல்லை என்று சொல்பவர்களாகட்டும், தாம் கடைப்பிடிக்கும் கொள்கையில் சரியாக இருத்தல் அவசியம். ஆதாயத்திற்காக அதை காம்ப்ரமைஸ் செய்து கொள்வதில் அவர்களின் நமபகத்தன்மையும், அவர்கள் அந்த கொள்கைக்கு எவ்வளவு தூரம் விசுவாசமாயிருக்கிறார்கள் என்பதும் தெள்ளத்தெளிவாகிறது. இறைவன்தான் இவர்களை நல்வழிப்படுத்த வேண்டும்.

நியூட்ரலாய் நீங்கள் என் கருத்தை அணுகியதில் மகிழ்ச்சி அக்கா. பதிவை விட்டு வேறு திசையில் இந்த மறுமொழி சென்றதில் வருத்தமே எனினும், எனக்கு தெரிந்ததை நேரம் வரும்போது மற்றவரிடத்திலும் பகிர்வது என் கடமையே. வாய்ப்பளித்ததற்கு நன்றி. :)

Aashiq Ahamed said...

அன்பு அம்மா அவர்களுக்கு,

தங்கள் மீதும் தங்களின் குடும்பத்தினர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.

தங்களுடைய பதிவை கண்டேன். மிகுந்த மன வருத்தத்தை அளித்தது. இஸ்லாமில் ஜோதிடம் போன்றவற்றிற்கு இடமில்லை அம்மா. நீங்கள் சொன்ன ஜோதிடர்களை போன்றவர்கள் இறைவனின் சொல்லிற்கு மாறாக நடப்பது மிகுந்த வருத்தத்தை தருகின்றது. இந்த ஜோதிடரையும், பள்ளி நிர்வாகத்தையும் சந்தித்து அவர்களுக்கு தூய்மையான இஸ்லாமை எடுத்துரைக்க வேண்டுமென்று நினைக்கின்றோம். அதற்கு தங்களுடைய உதவியை நாடுகின்றேன். நீங்கள் சொன்ன இந்த ஜோதிடரின் விலாசம் வேண்டும் அம்மா. இஸ்லாம் சகோதரத்துவத்தை முன்நிறுத்தும் மார்க்கம். நிச்சயமாக என்னுடைய சகோதரர் ஒருவர் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு மக்களை தவறான வழியில் செலுத்திகொண்டிருப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவரை சந்தித்து இது தவறு என்று விளக்கம் சொல்ல ஆசைப்படுகின்றோம். அதனால் அம்மா, அவருடைய விலாசத்தை எனக்கு தருமாறு கேட்டுக்கொள்கின்றேன்
(aashiq.ahamed.14@gmail.com).

உங்களுடைய மெயில் id இல்லாததால் இதனை பின்னூட்டமாக பதிக்கின்றேன். இதனை பிரசுரிக்க வேண்டாம். உங்களுக்கு தர்ம சங்கடத்தை உருவாக்கமேண்டுமேன்பது என்னுடைய நோக்கமில்லை. புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்....

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

Vijiskitchencreations said...

mano அக்கா இன்னும் இந்த பதிவு படிக்கவில்லை. மெல்ல அவசியம் படிப்பேன்,படிக்கிறேன்.
இப்ப வந்து வாழ்த்து சொல்லாம் என்று வந்தால் வாவ் இது படிக்கனும் படிக்காமல் பதிவு போட முடியாது,

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

என்ன பலகாரம் என்று கெதியா வந்து சொல்ல்லுங்க.

Vijiskitchencreations said...

ம்னோ அக்கா வாழ்த்துக்கள். உங்கள் ஆர்டிகிலை நான் லேடிஸ் ஸ்பெஷல் நவம்பர் மாத இதழில் வந்துள்ளதை படித்தேன். நல்ல கருத்து. தேனம்மை லஷ்மனன் தொகுத்திருக்கிறார். அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
மேலும் மேலும் புகழோங்க வாழ்த்துக்கள்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ஜோதிடம் என்பது ஒரு அருமையான சயின்ஸ் தான்.
ஆனால் ஜோதிடர்கள் அப்படி அல்ல!!


ஆர்.ஆர்.ஆர்.
http://keerthananjali.blogspot.com/

ஜெய்லானி said...

இதை இப்போதுதான் படிச்சேன்.. கமெண்ட் போடலாமுன்னு வரும் போது சகோ அன்னு அவர்களும் மிகச் சரியாக சொல்லி விட்டார். அதனால் அவரின் கருத்தே எனது கருத்தும்..!! :-))


(( சாரி லேட் )) தீபாவளி வாழ்த்துக்கள்...!!