Wednesday, 27 October 2010

ஜாதகமும் நானும்!

நான் புகுந்த வீடு என் சொந்த அத்தை வீடு தான் என்றாலும் பெரியாரின் கொள்கை வழி நடப்பவர்கள், ஜாதகம் என்பதிலெல்லாம் நம்பிக்கை இல்லாதவர்கள் என்ற நிலையில் என் வீட்டுக்கு முற்றிலும் வேறான சூழ்நிலைகளுள்ள இல்லத்தில் குடி புகுந்தேன். பெரிய அளவில் கூட்டுக்குடும்பமாக அப்போது எங்கள் கிராமத்தில் திகழ்ந்த வீடு என்பதால் இந்த நம்பிக்கைகள் எல்லாவற்றையும் மீறிய பாசத்திலும் மகிழ்விலும் அதிலேயே ஒன்றிப்போக முடிந்ததுடன் ‘அன்பே உலகம், உழைப்பே கடவுள்’ என்ற நினைப்பில் வாழவும் வளரவும் முடிந்தது. என் மகனுக்குத் திருமண வயது வருகிற வரையில் எந்தப் பிரச்சினையும் இல்லை.

அதற்கப்புறம் தான் ஜாதகப்பிரச்சினைகள் எல்லாம் ஆரம்பமாயின. ஜாதகம், ஜோதிடம் என்பதிலெல்லாம் நம்பிக்கை இல்லாத குடும்பம் என்பதால் பிறந்ததும் என் மகனுக்கு ஜாதகமெல்லாம் எழுதவில்லை.

முதல் கட்டமாக சில முக்கிய திருமண மையங்களில் என் மகனின் விபரங்களைப் பதிவு செய்தேன். சில மாதங்கள் கழித்து வடலூர் அருகில் ஒரு பெண் வீட்டிலிருந்து பேசினார்கள். தந்தை பொறியியல் வல்லுனராக இருந்து இறந்தவர். மற்ற விஷயங்கள் எல்லாம் பிடிக்கவே நானும் எங்கள் இல்லத்தைப் பற்றி, எங்கள் நம்பிக்கைகளைப் பற்றிச் சொன்னேன். அதற்கு பெண்ணின் தாயார், ‘ எனக்கு இந்த ஜாதகப்பொருத்தம் மற்றதெல்லாம் தேவையேயில்லைங்க. நான் கடவுளிடம் பூ போட்டு பார்த்தேன். எல்லாம் சுபமாகவே வந்தது. எனக்கும் என் பெற்றோருக்கும் சம்மதம். நீங்கள் உங்கள் கணவருடன் சென்னைக்கு என் அப்பா வீட்டுக்கு வாருங்கள். மகனையும் வரச்சொல்லுங்கள்’ என்றார். கிட்டத்தட்ட முடிவான விஷயம் என்பதால் என் மகனையும் துபாயிலிருந்து வரச்சொல்லி மூவருமாகப் போய் பெண் பார்த்தோம். ஆனால் பெண்ணின் முகத்திலும் பெண்ணின் அம்மா முகத்திலேயும் உற்சாகமேயில்லை. நாங்கள் திரும்ப ஊருக்கு வந்து சேர்ந்ததும் பெண்ணின் அம்மா கூப்பிட்டு
“என் சொந்தங்கள் அத்தனை பேரும் ஜாதகப்பொருத்தம் சரியில்லை என்கிறார்கள். அவர்களை மீறிக்கொண்டு என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை.” என்று அழுதார். நான் “ பின் ஏன் ஜாதகப் பொருத்தம் தேவையில்லை என்று சொன்னீர்கள்? இதனால் எங்களுக்கு எத்தனை செலவு, அலைச்சல், மனக்கஷ்டம்? நாங்களும் எங்கள் சொந்தக்காரர்களுக்கு என்ன பதில் சொல்வது?” என்று வருத்தப்பட, மறுபடியும் அவர்கள் அழ, அதற்குப்பிறகும்கூட நான் ஜாதகத்தைப்பற்றி ஒன்றும் நினைக்கவில்லை.

அதற்குப்பின் என் சினேகிதி ஒருவருடன் திருச்சியிலுள்ள ஒரு திருமண மையம் சென்றேன். அங்கிருந்த விபரங்களைப் பார்த்துக்கொண்டிருந்த போது, ஒரு முதியவர் என்னருகில் வந்து அமர்ந்தார்.

‘ அம்மா, நான் சொல்வதைத் தப்பாக எடுத்துக்கொள்ளாதீர்கள். உங்களுடைய மகனின் தகுதிகள் அனைத்தும் ரொம்பவும் நன்றாக இருக்கிறது என்று கூறி, இங்கு வருபவர்கள் ஜாதகம் இல்லையென்றதும் வேண்டாமென்று போய் விடுகிறார்கள். எதனால் நீங்கள் ஜாதகம் வைக்கவில்லை?’ என்று கேட்டார். நான் எங்கள் குடும்பத்தைப்பற்றி சொன்னதும் அவர் ‘ அம்மா, உலகம் முழுவதும் இப்போது ஜாதகத்தில்தான் இயங்கிக்கொண்டிருக்கிறது. அது உங்களுக்கு தெரியவில்லை. ஆடையில்லா உலகத்தில் ஆடையணிந்தவன் தான் பைத்தியக்காரன். உலகத்தோடு அதன் போக்கில் நிறைய சமயங்களில் நாமும் போக வேண்டியிருக்கிறது. நீங்கள் அடுத்த முறை வரும்போது ஜாதகம் எடுத்து வாருங்கள்” என்றார். எனக்கு திருவள்ளுவரின் ‘ உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பல கற்றும்’ குறள் தான் ஞாபகம் வந்தது.

என் சினேகிதி தனக்குத் தெரிந்த ஒரு பெரியவரிடம் ஜாதகம் கணித்து எடுத்து வந்து தந்தார். இடையே திருச்சியில் வேறொரு திருமண மையத்தில்[ சூர்யா மையம் என்று வைத்துக்கொள்வோம்] அதன் நிறுவனர் ‘ நான் முதலில் வரனின் ஜாதகத்தைக் கணித்து வைத்துக் கொண்டு, அதன் பிறகுதான் பெண்களின் வீட்டுக்கு எடுத்துச் செல்வேன்” என்றார். அவர் அதுபோல பெண்கள் வீட்டுக்கும் பையன்களின் வீட்டுக்கும் ஜாதகங்களை எடுத்துச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். நானும் அந்த ஜாதகத்தையும் கையில் எடுத்து வந்தேன். இடையே என் உறவினர் அவருடைய நண்பரிடம் [ஜாதகம் கணிப்பதில் சூரப்புலி என்று பெயர் வாங்கியவர் ] ஜாதகம் எழுதி வாங்கி வந்தார். ஆக மூன்றாவது ஜாதகமும் வந்து சேர்ந்தது. இடையே எனக்கு பல வருடங்களாக பழக்கமான பெரியவர் ஒருவர்- அமெரிக்காவில் இருப்பவர்- என் வேண்டுகோளுக்காக அவரும் ஜாதகம் கணித்து அனுப்பியிருந்தார்.இடையே ஒரு நாள் மயிலாடுதுறையில் இருக்கும் ஒரு தகவல் மையத்திலிருந்து ஒரு பெண்ணைப்பற்றிய தகவல்களை எடுத்து வந்திருந்தேன். அதன் நிறுவனர் தெரிந்தவர்தான் என்றாலும் நான் எடுத்து வந்தபோது அவர் இல்லை. தகவல்களை ஆராய்ந்தபோது, பெண்ணின் வீட்டில் ஏழு பேர் கூடப்பிறந்தவர்கள் என்றும் பெண் முதுகலைப்பட்டம் பெற்றவர், அழகானவர், நல்ல குடும்பம் என்றும், ஆனால் வசதியாக இருந்து நொடித்துப்போன குடும்பம் என்றும் தெரிய வந்தது. அந்தப் பெண் வசித்த ஊரிலிருந்த என் உறவினர்கள், தெரிந்தவர்கள், ‘ பெரிய குடும்பம், வசதியில்லை, வேண்டாம்’ என்று கூற, நான் ‘ நான் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. முதலில் பெண்னை பார்த்து விட்டு வந்து அப்புறம் முடிவு செய்து கொள்ளலாம் என்று சொல்லிவிட்டேன். பெண்ணின் தகப்பனாரைத் தொடர்பு கொண்டு பேசியபோது, அவர் என் மகனின் தகவல்களை அனுப்பச் சொன்னார். அதன்படியே அனுப்பி விட்டு உட்கார்ந்தால், திருமண தகவல் மைய நிறுவனர் என்னை அழைத்து ‘ அந்தப் பெண் வேண்டாம். நம் குடும்பத்திற்கு சரியாக வராது’ என்றார். அப்போதும் நான் மறுத்து, ‘ முதலில் நான் போய் பார்த்து விட்டு வந்து விடுகிறேன். அப்புறம் முடிவு செய்து கொள்ளலாம்’ என்றதற்கு அவர் ஒரேயடியாக மறுத்துப்பேசினார். ஃபோனை வைத்ததும் ஒரே யோசனை மேல் யோசனை! அப்போதுதான் திடீரென்று அந்த எண்ணம் வந்தது! அருகில் அமர்ந்திருந்த என் சினேகிதியிடம் சொன்னேன், ‘ எல்லா ஜாதகங்களையும் எடுத்துப்பார்ப்போம் எல்லாம் ஒரே மாதிரி இருக்கிறதா என்று ஆராயலாம்’ என்று!! நான்கு ஜாதகங்களையும் எடுத்துப்பார்த்தால் தலை சுற்றியது. சந்திரனும் சூரியனும் குருவும் ஒவ்வொரு ஜாதகத்திலும் வெவ்வேறு இடங்களில் அமர்ந்திருந்தார்கள். ஒவ்வொன்றும் வித்தியாசமாக இருந்தது! அப்படியென்றால் எது சரியானது என்று எப்படித்தெரியும்?

தன் நண்பரிடம் ஜாதகம் என் மகனுக்கு எழுதி வாங்கி வந்த என் உறவினரிடம் சென்று அனைத்து ஜாதகங்களையும் தந்து, “ எது சரியானது, ஏன் இப்படி ஒன்றுக்கொன்று வித்தியாசமாக இருக்கின்றன என்று உங்கள் நண்பரிடம் கேட்டு வாருங்கள்” என்று சொன்னேன்.

அவர் வந்து சொன்ன பதில் எனக்கு இன்னுமே தலை சுற்ற வைத்தது!

‘என்னுடைய நண்பர் தூக்கக்கலக்கத்தில் இந்த ஜாதகத்தில் சில தவறுகள் செய்து விட்டாராம். இப்போது சரியாக எழுதிக் கொடுத்திருக்கிறார். உன் அமெரிக்க நண்பர் எழுதிக்கொடுத்ததுதான் சரியானதாம்!’

எனக்கு எப்படி இருந்திருக்கும்? அவரிடம் வருத்தப்பட்டுக்கொண்டு வெளியே வந்தேன். அந்த பெண் வீட்டுக்கு இவர் எழுதிக்கொடுத்த ஜாதகத்தைத்தான் அனுப்பியிருந்தேன். எல்லோரும் சொல்கிற மாதிரி அந்தப் பெண் அமைய வேண்டாம் என்றிருக்கிறது போலிருக்கிறது என்று நினைத்துக்கொண்டேன்.

அடுத்த நாளே அந்தப் பெண்ணின் தகப்பனாரிடமிருந்து ஃபோன்!

‘ அம்மா, எங்கள் பக்கத்தில் என் பெண்ணின் ஜாதகத்துடன் உங்கள் பையனின் ஜாதகம் மிக நன்றாகப்பொருந்தியிருக்கிறது, எப்போது பெண் பார்க்க வருகிறீர்கள்?’

நான் அனுப்பியதே தவறான ஜாதகம் என்று எப்படிச் சொல்லுவது? ‘ எங்கள் ஜோதிடர் அவ்வளவாகப் பொருந்தவில்லை என்று கூறுகிறார்’ என்று உளறி பேச்சை முடித்தேன்!!

மறுபடியும் தொடரும்.. .. .. ..

47 comments:

ராமலக்ஷ்மி said...

மிக நல்ல பகிர்வு. தொடருங்கள்.

//சந்திரனும் சூரியனும் குருவும் ஒவ்வொரு ஜாதகத்திலும் வெவ்வேறு இடங்களில் அமர்ந்திருந்தார்கள். ஒவ்வொன்றும் வித்தியாசமாக இருந்தது! //

அது போல ஒரே ஜாதகத்துடன் நான்கு பேரிடம் கேட்கப் போனால் வெவ்வேறான பலன்கள் கிடைக்கும் என்பதும் பரவலாக அறியப் படும் ஒன்று. குழப்பமானது ஜாதக உலகம்.

LK said...

இதில் இன்னொன்றும் இருக்கிறது எந்தப் பஞ்சாங்கத்தை உபயோகிக்கிறார்கள் என்று. சிற்சில மாற்றங்கள் உண்டு. என்றும் நன்றாக தெரிந்த ஒரே ஒரு ஜோசியரிடம் கணிப்பது நல்லது (இந்தக் காலத்து கணினி ஜோஷியர்களை தவிர்ப்பது இன்னும் நல்லது )

asiya omar said...

அக்கா,எல்லாம் பகிர்ந்து விட்டு தொடர் போட்ட மாதிரி முடித்து விட்டீர்கள்,...குழப்பத்திலும் நீங்க நல்ல தெளிவாக செயல்பட்டது நல்லது.

வித்யா said...

ம்ம்ம். தொடருங்கள்...

ஹுஸைனம்மா said...

இண்ட்ரெஸ்டிங்!!

சிலவற்றைச் சிலர் வெறுமே தம்பட்டம் மட்டுமே அடித்துக்கொண்டிருக்க, உங்களைப் போன்ற பலர் நிறைகுடம் தளும்பாது என்று நிரூபிக்கிறீர்கள்.

கக்கு - மாணிக்கம் said...

பெரும்பாலான குடும்பங்களில், குழந்தை பிறந்த பின்னர் ரொம்பவும் சிரத்தையாக ஜாதகங்களை குறித்து வைத்தாலும் கல்யாண வயதில் இது போன்ற குழப்பங்கள் சகஜம். ஒரு விஷயம் மட்டும் எனக்கு புரியவில்லை, பெண் வீட்டாரும் பிள்ளை பெற்றவர்களும் இணங்கி போகும்போது மற்ற "உறவினர்கள்" பற்றி நாம் ஏன் கருதவேண்டும்?
உண்மையில் இந்த "உறவினர்கள்" எவருக்கும் உண்மையான அன்போ, அக்கறையோ இருக்காது. வெறுமனே ஏதாவது குற்றம் குறைகளை சொல்லிக்கொண்டு தாங்கள் மிகவும் அக்கறையானவர்கள் போல காட்டிகொண்டு தங்கள் பொறாமை குணத்தை காட்டாமல் காட்டி ,வம்படிதுவிட்டு வநத காரியத்தை கெடுதுவிட்டுபோவார்கள். நிறைய பார்த்தாகி விட்டது. இவர்களை அதிகம் பேசாதவண்ணம் நாம் கொண்டு செல்ல வேண்டும்.

ஜாதகத்தில் ஆரம்பித்து, புது ஜவுளிகள், நகைகள் மற்றும் பத்திரிக்கை டிசைன் அதோடில்லாமல் என்னவகையான சாப்பாடு , என்ன வகை கறி, கூட்டு, என்னவகை பாயசம் என்று இவர்கள் பண்ணும் கொடுமைகள் நிறைய. நாம் பணத்தையும் செலவு பண்ணி , நொந்து, மனம் வருந்தி, இந்த "உறவினர்களிடம் " இறுதியில் அவப்பெயரும்தான் வாங்க வேண்டும்.

பயணங்களின் போது குறைந்த அளவு சுமைகளே பயணத்தை எளிதாக இனிமையாக ஆக்குகின்றன. நம் வாழ்கை பயணத்திலும் குறைந்த அளவு "உறவினர்கள்" போதும். உறவுகளும் இனிக்கும். அதிக உறவினர்கள் என்பது வெறும் பந்தாமட்டுமே அவைகளில் விளையும் தொல்லையும் மன உளைச்சலும் வேதனையும் அதிகம்.ஆனால் நம் நண்பர்கள் நம் பக்கம் என்றும் நிற்பார்கள். சொந்த அனுபவம்.

இமா said...

;) நடந்த மீதியையும் அறிந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன் அக்கா.

Gopi Ramamoorthy said...

தொடருங்கள்

Chitra said...

நான் அனுப்பியதே தவறான ஜாதகம் என்று எப்படிச் சொல்லுவது? ‘ எங்கள் ஜோதிடர் அவ்வளவாகப் பொருந்தவில்லை என்று கூறுகிறார்’ என்று உளறி பேச்சை முடித்தேன்!!

....தொடர்ந்து சொல்லுங்க.... நல்லா எழுதுறீங்க.....

Mrs.Menagasathia said...

ம்ம்ம்...தொடருங்கள்!!

தேனம்மை லெக்ஷ்மணன் said...

ஆமாம் சில சமயம் அடுத்தவரின் தவறுக்கும் நாமே பொறுப்பேற்க வேண்டியிருக்கும்.. என்ன செய்வது மனோ..

vanathy said...

நல்லா இருக்கு, அக்கா. இவ்வளவு சிக்கல்களா ஜாதகம் இல்லாவிட்டால்???

dineshkumar said...

ஜாதகம் இல்லாட்டியும் சிக்கல் இருந்தாலும் சிக்கல் ஆனா ஒன்னும்மா நாம மட்டும் ஜாதகத்த நம்புறோம்னு சொன்னா அது தப்பு உலகத்தின் எல்லா நாடுகளிலும் நம்பறாங்க அம்மா இது உண்மை அறிவியல் ரீதியாகவும் உண்மைன்னு சொல்றாங்க நானும் அனுபவபட்டிருக்கேன்.....

அன்னு said...

//நான் அனுப்பியதே தவறான ஜாதகம் என்று எப்படிச் சொல்லுவது? ‘ எங்கள் ஜோதிடர் அவ்வளவாகப் பொருந்தவில்லை என்று கூறுகிறார்’ என்று உளறி பேச்சை முடித்தேன்!! //
சரியான ஜாதகம் அனுப்பினால் பொருந்தவில்லை என்று ஒதுக்குகிறார்கள், தப்பான ஜாதகம் என்றாலும் பொருந்தி விட்டால் சரியென்கிறார்கள், கணவன் மனைவியாகப் போகிறவர்க்ளின் மனம் மட்டுமே பொருந்தினால் போதும் என்கிற சூழ்நிலை வரவே மனம் விரும்புகின்றது. இந்த ஜாதக கொடுமையினால் என் தோழிகள் பலபேர் வருடங்களெல்லாம் காத்திருந்ததை பார்த்து, அவர்கள இளங்கலை, முதுகலை படிக்க வைத்த பெற்றோர், இதில் மட்டும் இன்னும் பின்னோக்கியே இருக்கின்றார்களே என்றுதான் கோபம் வந்தது, வருகிறது. என்ன செய்ய?? தொடரின் மறு பகுதியில் எல்லோரும் பயன்படுத்தும் முறையில் ஒரு சிந்தனையையும் தாங்க அக்கா.
:)

இலா said...

எவ்வளவு படித்தாலும் ஜாதகம் போன்ற விசயங்களில் இப்படி இருப்பதால் பல ஆண்/பெண் வாழ்க்கை ஒரு சூதாட்டம் போல ஆகிவிடுகிறது. நல்ல மனங்கள் பல இப்படி ஜாதகம் குறி கேட்பது என்று குதறப்படுகிறது. கல்யாணத்தின் போது ஜாதகம் பொருந்தி பின்னர் குழந்தை பாக்கியம் காலம் தாழ்ந்தால் கோவிலில் குறி கேட்டோம் லேட்டா தான் இருக்குமாம் என்று சொல்லி குற்றப்படுத்தப்படுவதும் சாதாரணம். ஜாதகம் பார்க்க வேண்டாம் என்று சொன்னால் என்ன குறை பையனுக்கு/பெண்ணுக்கு இது தான் முதல் கேள்வி.
திருத்த‌ முடியாத‌ விச‌ய‌ங்களில் இதுவும் ஒன்று.

Kanchana Radhakrishnan said...

நல்ல பகிர்வு.

Krishnaveni said...

interesting.......

Vijiskitchen said...

நீங்களும் ஒரு வழியாக ஜாதகம் என்கிற வலையில் விழுந்திட்டிங்க. ம்.. கண்டின்யூவீட்டிக்கா வெயிட்டிங்.

Krishnaveni said...

It clearly shows your pain as well, because it your own son's marriage....

சே.குமார் said...

ஜாதகம் எல்லாருக்குமே சாதகமாக அமைவதில்லை அம்மா.
ஜாதகமே இல்லாமல் வளர்ந்து இன்று ஏகப்பட்ட ஜாதகங்களை வைத்திருக்கிறார் உங்கள் அன்பு மகன். உங்களையும் ஜாதகம் பிடித்துக் கொண்டுவிட்டதோ.

எது எப்படியோ நல்ல பகிர்வு.

ஸாதிகா said...

அக்கா,அனுபவத்தை வெகு சுவாரஸ்யத்துடன் பகிர்ந்து இருக்கின்றீர்கள்.எங்கள் சமூகத்தில் ஜாதகம்,ஜோதிடம் போன்றவற்றில் யாருக்கும் நம்பிக்கை இல்லை.பார்க்கவும் கூடாது.இறுதியில் உங்கள் மாடுப்பொண்னை ஜாதகம் பார்த்துத்தான் எடுத்தீர்களா?அடுத்த பதிவை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.

மனோ சாமிநாதன் said...

நீங்கள் சொல்வது உண்மைதான் ராமலக்ஷ்மி! நிறைய பெற்றோர்கள் ஒரே ஜோதிடருடன் திருப்தி அடைவதில்லை. பல ஜோதிடர்களைப்பார்த்து குழப்பிக் கொள்கிறார்கள்!! இதுதான் இன்று பரவலாக நடக்கிறது!

மனோ சாமிநாதன் said...

நீங்கள் சொல்வது சரிதான் எல்.கே!
வைதீகர்கள், மிக வயதானவர்கள் இன்னும் தொடர்வது வாக்கியப்பஞ்சாங்கம்தான்! அந்தப் பஞ்சாங்கத்தைப்பார்த்து பலன் சொல்வதிலேயே நிறைய வித்தியாசங்கள்! குளறுபடிகள்!!

மனோ சாமிநாதன் said...

பதிவிற்கு அன்பு நன்றி ஆசியா!

மனோ சாமிநாதன் said...

அன்பு நன்றி வித்யா!

மனோ சாமிநாதன் said...

உண்மைதான் ஹுஸைனம்மா! இதில் ஏகப்பட்ட அனுபவங்கள், திருப்பங்கள் என்று சுவாரஸ்யங்களுக்கு பஞ்சமில்லை!

மனோ சாமிநாதன் said...

அன்புச் சகோதரர் சுக்கு மாணிக்கம்!

உறவுகளினால் தொல்லைகளும் மனக்கஷ்டங்களும் ஏற்படுவது உண்மைதான். ஆனால் அதே சமயம் துன்பங்கள் வரும்போது உடனேயே ஓடி வந்து உதவி அரணாக நிற்கும் உறவினர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்! ‘ ரத்த பந்தங்களுக்கு’ இருக்கும் வலிமை மற்ற உறவுகளுக்கு இருப்பதில்லை! இதையும் எத்தனையோ பேர் நிரூபணம் செய்திருக்கிறார்கள்!
‘குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை’ என்ற அற்புதமான பழமொழியே இருக்கிறது!
நட்பும் அது மாதிரிதான்! எப்படி அது அருமையானதாகவும் சிறந்ததாகவும் இருக்கிறதோ, அதே மாதிரி அதுவே சில சமயம் முதுகில் குத்தும் துரோகமாகவும் மாறுகிறது!
இத்தனை அனுபவங்களையும் வாழ்க்கை நமக்கு தொடர்ந்து கொடுத்துக்கொண்டேதான் இருக்கிறது! அருமையான உறவுகளையும் நண்பர்களையும் கிடைக்கப்பெற்றவர்கள்தான் உண்மையிலேயே பாக்கியம் செய்தவர்கள்!!

மனோ சாமிநாதன் said...

அன்பு நன்றி இமா!
சில சமயம் சில உண்மைகள் நம்மை ஆச்சரியப்படுத்துவதுண்டு. அந்த மாதிரிதான் இந்த அனுபவங்களும்!!
அதை நீங்கள் அடுத்த பகுதியில் பார்ப்பீர்கள்!!

மனோ சாமிநாதன் said...

அன்பு நன்றி சகோதரர் கோபி ராமமூர்த்தி!!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்கு அன்பு நன்றி சித்ரா!

மனோ சாமிநாதன் said...

அன்பு நன்றி மேனகா!

மனோ சாமிநாதன் said...

உண்மைதான் தேனம்மை! சில சந்தர்ப்பங்கள் அப்படியும் அமைந்து விடுகின்றன!!

மனோ சாமிநாதன் said...

அன்பு நன்றி வானதி! ஜாதகம் என்பது தற்போது எல்லா சமூகத்தினரையும் ஆட்டிப்படைக்கிறது! இதனால் இதில் நம்பிக்கை இல்லாதவர்களுக்குக்கூட எத்தனை சிக்கல்கள் என்பதை விளக்கத்தான் இந்தப்பதிவை எழுதிக்கொண்டிருக்கிறேன்!!

மனோ சாமிநாதன் said...

ஜாதகம் இருந்தாலும் சிக்கல், இல்லாவிட்டாலும் சிக்கல் என்று மிக அழகாக சொல்லி விட்டீர்கள் தினேஷ்குமார்!
நீங்கள் சொன்னதும் உண்மைதான். பல நாடுகளுக்கு இதில் நம்பிக்கை இருக்கிறது என்று சமீபத்தில்தான் படித்தேன். இஸ்ரேல் நாட்டில்கூட ஒன்பது ராசிகளையும் தபால்தலைகளாக வெளியிட்டுள்ளார்கள்!! அறிந்தபோது ஆச்சரியமாக இருந்தது!

சித்தூர்.எஸ்.முருகேசன் said...

ராமலட்சுமி அவர்களே,
நட்பு புனிதமானது. நண்பர்கள் துரோகிகளாக மாறலாம்.
காதல் புனிதமானது காதலர்கள் துரோகம் செய்யலாம்.
ஜோதிடம் புனிதமானது .ஜோதிடர்கள்தவறு செய்யலாம். ( நான் உள்பட)

பொத்தாம் பொதுவாக ஜோதிடத்தை சந்தேகாஸ்பதமானதாக்கிவிடாதீர்கள். நீங்கள் எதை ஜோதிடம் என்று நினைத்துள்ளீர்களோ அது ஜோதிடமே அல்ல.

ஐ.பி.சியை விட தெளிவான விதிகள் ஜோதிடத்தில் உள்ளன.

பொறுப்புள்ள ஜோதிடர்கள் முதலில் ஜாதகத்தின் நம்பகத்தன்மையை தான் சோதிப்பார்கள் .

நான் டேட் ஆஃப் பர்த்தையே சோதிப்பது வழக்கம். ஏன்னா ஸ்கூல்ல பையனை/பெண்ணை சேர்க்க போனப்ப (ஜூன் மாதம்) ஹெட் மாஸ்டரே ஜூன் மாசத்துல நல்ல நாளா (?) பார்த்து எழுதிட்டிருப்பாரு

சித்தூர்.எஸ்.முருகேசன் said...

சாதிகா அவர்களே,
உங்களிடம் பொய் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லை. என் க்ளையண்ட்ஸ்ல அதிக சதவீதம் கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் தான்.

அவர்களுக்காக புதுபுது பரிகாரங்களையெல்லாம் கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது.

உ.ம்: சனி சரியில்லைன்னா நல்லெண்ணெய் தீபம் ஏற்றச்சொல்லமுடியாதே. அதனால கிறிஸ்தவங்களுக்கு நீல கலர் கேண்டில்ஸ் ஏத்த சொல்றேன்

முஸ்லீமா இருந்தா தர்காவுக்கு இரும்பு பொருள் வாங்கிதரசொல்றேன்

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

இது போன்று நாம் எதிர்பாராமல் ஏற்படும் மாற்றங்கள்தான் பல வியப்புகளை ஏற்படுத்திவிட்டு சென்றுவிடும் . எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன் தங்களின் அடுத்தப் பதிவிற்காக

மனோ சாமிநாதன் said...

பதிவிற்கும் சிந்தனைகளுக்கும் அன்பு நன்றி அன்னு! ஜாதகம் பார்க்கும் பழக்கம் பல்லாண்டுகளாக வேரோடிப்போயிருக்கும் பழக்கம். முன்பின் அறிமுகம் இல்லாத இருவரை இணைப்பது திருமணம். அதில் மனம் ஒன்று படுதல் என்பது திருமணத்திற்கு முன் நடக்க வாய்ப்பில்லை. இப்போதெல்லாம் நிச்சயம் செய்து 3 மாதங்களுக்குப்பிறகே திருமணம் என்ற ஒன்று நடக்கிறது. இதில் புரிந்து கொள்ளுதல் நடக்கிறதோ இல்லையோ, நிறைய பிரச்சினைகளும், மன முறிவுகளும் நடக்கின்றன. அதனால்தான் நிறைய பெற்றோர் ஜாதகத்தை நம்புகின்றனர். ஆனால் அதை மட்டும் நம்புவதுதான் பிரச்சினை!

மனோ சாமிநாதன் said...

ஆமாம் இலா! திருத்த முடியாத பழக்கம் இது! பையனின் /பெண்ணின் குணம், பண்பு இவற்றை விசாரித்து அறிவதை விடவும் ஜாதகம் அது மாதிரி சொல்கிறதா என்று தான் அனைவரும் பார்க்கிறார்கள்!!

மனோ சாமிநாதன் said...

அன்பு நன்றி காஞ்சனா!

மனோ சாமிநாதன் said...

Dear Krishnaveni!

Thank you very much for understanding the pain which i felt deeply when I was searching a suitable bride for my son!

மனோ சாமிநாதன் said...

அன்பு விஜி!

இன்னொருவரின், அது என் மகனாகவே இருந்தாலும் என் கொள்கைகளால் தடைப்படுவதும் பாதிக்கப்படுவதும் எந்த விதத்திலும் நியாயமில்லை என்பதை உணர்ந்ததால்தான் எனக்கு முற்றிலும் அந்நியமான விஷயத்தில் நான் நுழைய வேண்டி இருந்தது. அதன் கூடவே இந்த ஜாதகங்கள் பார்ப்பதால் ஏற்படும் பாதிப்புகள், அதனால் ஏற்படும் ஏமாற்றங்கள்-இவைகளை மற்றவர்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற உணர்வே இந்தப்பதிவை எழுதத்தூண்டியது!

மனோ சாமிநாதன் said...

அன்புச் சகோதரர் குமார்!

உங்களுக்கான பதில்தான் நான் மேலே எழுதியிருப்பது. ஜாதகத்தால் எத்தனை பிரச்சினைகள் என்பதை விளக்கவே இந்தப் பதிவு!

மனோ சாமிநாதன் said...

அன்புள்ள ஸாதிகா!

உங்கள் கருத்துக்கு பதில் நான் இப்போது தரப்போவதில்லை. சஸ்பென்ஸே அங்குதான் இருக்கிறது! அடுத்த பதிவில் அதைப்பற்றி எழுதுகிறேன்.

என் மகனுக்கு, ஒரு பெண் வீட்டில் எத்தனையோ ஜாதகங்களுக்கிடையில் என் மகனின் ஜாதகம்தான் அதிக பொருத்தமாக இருப்பதாககூறி அவர்களே பேசுவதற்கு நேரில் வந்து விட்டார்கள்! அந்தப்பெண் தான் என் மருமகள் ஆனாள்!!

மனோ சாமிநாதன் said...

அன்புள்ள சகோதரர் பனித்துளி சங்கர் !

முதல் வருகைக்கும் அன்பான கருத்துக்களுக்கும் இதயங்கனிந்த நன்றி!

நீங்கள் எழுதியிருப்பதுபோல நாம் எதிர்பாராத மாற்றங்கள் பல வியப்புகளை மட்டுமல்ல, மறக்க முடியாத அனுபவங்களையும் கற்றுக்கொடுக்கின்றன!

அன்னு said...

//ஆனால் அதை மட்டும் நம்புவதுதான் பிரச்சினை! //
சரியாக சொன்னீர்கள் மனோ அக்கா. நானும் அதையே சொல்ல வந்தேன். கண்டிப்பாக திருமணத்திற்கு முன் மனம் ஒத்துபோகுமா என டெஸ்ட் பண்ண முடியாது. ஆனால் ஒத்து போகாது என்று தெரிந்தும் சமுதாயத்திற்காக, பணத்திற்காக புகழுக்காக என மகன் / மகள் வாழ்க்கையை பாதாளத்தில் செல்ல விடுகிறார்களே அதை கூறினேன். ஹ்ம்ம்... நீங்கள் சொல்வது போல....வேரூன்றியிருக்கும் ஒரு விஷயத்தை அப்படி நிறுத்த சொல்வதும் சொல்லில் முடியுமே ஒழிய செய்வது மிக மிக கடினமாகவே தோன்றுகிறது :((

ஜெய்லானி said...

இப்போதுதான் பார்க்கிறேன் ((உபயம் ஹுஸைனம்மா))அட இந்த பதிவு எப்படி என் கண்ணுக்கு தெரியாம போச்.. :-(

கிட்டதட்ட இதே அலைவரிசையில் நானும் ஒரு பதிவிட்டிருக்கிறேன் :-)