Tuesday, 8 June 2010

இதுவும் பெண்கள் கையில்தான் இருக்கின்றது!!


கொஞ்ச காலமாகவே எந்தப் பத்திரிக்கையைப் பிரித்தாலும் விவாகரத்து வழக்குகள், கோரிக்கைகள் அதிகமாகத் தென்படுகின்றன. காரணங்களைப் படிக்கும்போது சகிப்புத்தன்மையும் விட்டுக்கொடுத்தலும் இல்லாததும் அவசர வாழ்க்கையும் தனி மனித ஈகோவும்தான் பெரும்பாலான வாழ்க்கையில் விளையாடி அருமையான பல எதிர்காலங்களை அழிக்கும் சக்திகளாய் இருக்கின்றன என்பது புரியும்போது மனது வேதனையுறுகிறது.


பல வருடங்களுக்கு முன் எழுத்தாளர் சிவசங்கரி எழுதிய ‘பாலங்கள்’ என்ற நாவல் நினைவுக்கு வருகிறது. தன் தாத்தா பாட்டி காலத்து வாழ்க்கை முறைகள், தன் அப்பா-அம்மா காலத்து வாழ்க்கை முறைகள், அன்றைய காலத்து வாழ்க்கை முறைகள் என்று சுவைபட வித்தியாசங்களையும் மறந்து போன நல்ல விஷயங்களையும் எழுதியிருப்பார்.

எத்தனை நல்ல விஷயங்களை இப்போதைய தலைமுறை மறந்து போயிருக்கிறது, இழந்திருக்கிறது என்பதை கடந்து போன வருடங்களைத் திரும்பிப்பார்க்கையில் நன்றாகவே உணர முடிகிறது.

துள்ளி விளையாடும் குழந்தைப் பருவத்தை குழந்தைகள் இழந்து வருகிறார்கள். அவர்களுக்கு எங்கள் காலத்தில் அனுபவித்த நிலாச்சோறு, பாண்டி ஆட்டம், ஆற்றில் குதித்து நீச்சலில் புரண்ட சந்தோஷம், கொடுக்காபுளியும் புளியங்காயும் நண்பர் குழுவோடு போட்டி போட்டுக்கொண்டு பறித்து உண்ட திருப்தி-இப்படி எதுவுமே இன்றில்லை. இந்த மாதிரி விலையாட்டுக்களினாலும் நீச்சலினாலும் உடலளவில் ஏற்பட்ட பயிற்சி, தெம்பு இன்றைய குழந்தைகளிடம் இல்லை. கம்ப்யூட்டர் அவர்கள் உடலைக் கெடுப்பதுடன் எதிர்கால நோய்களுக்கு வழி வகுக்கிறது. கம்ப்யூட்டரில் விளையாடிக்கொண்டே பக்கத்தில் நொறுக்குத்தீனிகளையும் ஒரு கை பார்ப்பது இன்னும் மோசம். அவர்களின் அதிக புத்தகச்சுமைகளும் பாடங்களும் அவர்களை இப்போதிலிருந்தே ஒரு எந்திர வாழ்க்கைக்குத் தயாராக்கிக்கொண்டு வருகின்றன.

இப்படி வளரும் குழந்தைகளுக்கு படிப்பும் அதைச்சார்ந்த விஷயங்களும்தான் முன்னுக்குத் தெரியும். இவர்களே வளர்ந்து ஆளாகும்போது இந்தப்படிப்பைத்தவிர மற்ற நல்ல விஷயங்கள் அவர்களுக்குத் தெரிவதில்லை. சொல்லித்தரப்படுவதில்லை.அதனால் ஏதாவது சொன்னாலும் அவர்கள் அறிவைப்பயன்படுத்தி விவாதங்கள் செய்து அவற்றைப் புறந்தள்ளுகிறார்கள். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையப்போவதில்லை.

சில வருடங்களுக்கு முன் சென்னையிலிருந்து திரும்பிக்கொண்டிருந்த ரயில் பயணத்தில் 15 வயது சிறுமி என் அருகில் அமர்ந்திருந்தாள். பேசும்போது அந்தப் பெண்ணின் அறிவு என்னை அசத்தியது. திகைக்க வைத்ததென்றே சொல்ல வேண்டும். ஒரு பக்கம் கல்கியின் சரித்திர நாவல்கள், திருக்குறள் பற்றிய அலசல்கள், மறு பக்கம் நான் வழக்கமாகப் படிக்கும் ஆங்கில நாவலாசிரியர்களைப் பற்றி ஆர்வமாகத் தெரிந்து கொண்டு தான் படிக்கும் நாவலாசிரியர்களை சிபாரிசு செய்த ஆர்வம், இன்றைய மாணவர்களின் ஒழுக்கக்கேடுகள், ஒழுங்கீனங்கள், ஊனமுற்றோருக்கான உதவி மையத்தில் உதவி செய்ய தான் இணைந்திருப்பது பற்றிய உற்சாகம்-இப்படிப்பட்ட அறிவுப்பூர்வமான அந்த பெண்ணின் உடைகளில் மட்டும் நேர்த்தி இல்லாததுடன் முகத்தையும் சுளிக்க வைத்தது என்றுதான் சொல்ல வேண்டும். பிறர் கவனம் படாமல், கண்ணியமாக உடையணிய அவள் சொல்லித்தரப்படவில்லை. இப்படித்தான் இன்று நிறைய பெண் குழந்தைகள் வளர்கின்றார்கள். இவர்கள் இளம் பெண்களாக மாறும்போது பொறுமை, நிதானம், பணிவு-இவை தவிர்த்து இந்த அறிவுப்பூர்வமான விவாதங்கள் மட்டும் தீவிரமாகத் தொடர்கின்றது. பெற்றோரிடம் சண்ட மாருதமாக புயலாக தர்க்கிக்க வைக்கிறது.

ஒரு முறை என் மகனுக்கு பெண் தேடிக்கொண்டிருந்த சமயம்-ஒரு திருமணப் பதிவு மையத்திற்கு ஒரு பெண்ணும் அவளுடைய பெற்றோர்களும் வந்திருந்தார்கள். மாப்பிள்ளைக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும் என்று அவளுடைய பெற்றோர் சொல்ல முனைந்த போது அந்தப்பெண் இடை மறித்து, ‘ அதெல்லாம் நானே சொல்லி விடுகிறேன், இவர்களுக்கு அதெல்லாம் ஒழுங்காக சொல்லத் தெரியாது. என் கருத்துக்களைப்பற்றியும் புரியாது’ என்று முகத்தில் அடித்த மாதிரி பேச, ஒதுங்கிய பெற்றோரின் கண்களில் அத்தனை வேதனை!

இப்படிப்பட்ட மனப்பான்மையுடன் திருமணத்திற்குள் புகும் பெண்ணிடம் எப்படி விட்டுக்கொடுத்தலும் சகிப்புத்தன்மையும் புரிந்து கொள்ள முயற்சித்தலும் இருக்கும்? எங்கோ பிறந்து திருமணத்தில் புதிதாக இணையும் இளைஞனிடம் எப்படி எதிர் வாதங்கள் இல்லாமல் இருக்கும்? இப்படித்தான் விவாகரத்துக்களும் அதற்கானக் காரணங்களும் சங்கிலித்தொடராய்த் தொடர்கின்றன. பெண் சுதந்திரம், ஆணும் பெண்ணும் சரி நிகர் சமானம் என்றெல்லாம் பேசி சாதாரணப்பிரச்சினைகளை சூறாவளியாக்கி திருமண வாழ்க்கை என்ற கடைசி வரைத் தொடரும் பந்தத்தை இன்று விவாகரத்து என்ற வடிவில் பாதியிலேயே அழிப்பதுதான் நடந்து வருகிறது.

நான் ஏன் பெண் குழந்தைகள் பற்றி குறிப்பாய் எழுதுகிறேன் என்றால் அவர்களைத்தான் நான் எதிர்காலக் குடும்பங்களின் தூண்களாய்க் கருதுகிறேன். ‘ஆளும் வளரணும், அறிவும் வளரணும், அது தாண்டா வளர்ச்சி ‘ என்று பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் சொன்ன வரிகள் நினைவுக்கு வருகின்றன. அவர் சொன்ன மாதிரி ஆளும் வளர்ந்தாலும் அறிவும் வளர்ந்தாலும் மனம் வளராமல் இருப்பதனால்தான் மன முறிவுகள் ஏற்படுகின்றன.

பெண் அன்பிலே கனிந்து போகிறவள். அதுவே அவளை பலமாக்குகிறது. அடிப்படை குணங்கள், பண்புகளுடன் வளர்க்கப்பட்ட, விட்டுக்கொடுத்தலும் சகிப்புத்தன்மையும் புரிந்து கொள்ளுதலும் இருக்கும் பெண்களின் இல்லங்கள் என்றுமே சொர்க்கமாய்த் திகழ்கின்றன.

என்றுமே ஒரு ஆண் பொருளீட்டுவதன் பொருட்டு வெளியில் எங்காவது, அல்லது ஏதாவது ஒரு தேசத்திற்கு என்று காலம் காலமாகப் போக நேரிடுகிறது. பல இன்னல்கள்,இழப்புகள், காயங்களை அவன் எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது. அத்தனைக்கும் அவன் வடிகாலாய்த் தேடுவது தன் வீட்டைத்தான். தனது குடும்பத்தைத்தான். இளம் வயதில் இப்படி என்றால் தேகம் தளர்ந்து வேலையை விட்டு விலகி வெளிப்புற சகவாசங்கள் குறைந்து இல்லத்திலேயே இருக்கவேண்டிய நிலை வந்ததும் அவன் இன்னும் தன் குடும்பத்தைச் சார்ந்து தன் மனைவியைப் புதிதாகப் புரிந்து தவித்து நிற்கிறான். இப்படி எல்லா தருணங்களிலும் பெண் என்பவளை ஒரு ஆண் ஒரு வடிகாலாக சார்ந்து நிற்கிறான். பெண் ஒரு சக்தியாக, தோள் கொடுப்பவளாக, புரிந்து கொண்ட சினேகிதியாக நடக்க முயற்சித்தால் மெல்ல மெல்ல விவாகரத்துக்களும் இனி சாகாதோ?

சில மாதங்களுக்கு முன் ‘தேவதை’ இதழில் வந்த இந்த கவிதை என் மனதை அப்படியே பிரதிபலித்தது. என்னோடு நீங்களும் பகிர்ந்து கொள்ளுங்கள்!

தலைமுறை தள்ளாட்டம்

"சரித்திரமே இல்லை தாத்தா பாட்டிக்கிடையில் சண்டை வந்ததாய்!

சண்டைகளும் சமாதாங்களும் அறைக்குள்ளேயே நடந்து முடிந்தன

அம்மா அப்பா வாழ்வில்!

எங்களுக்குள் புரிதலில் சேதமாகி விரிசலானபோது

பெரியவர்கள் புரிய வைத்ததில் இல்லாமல் போயிற்று எல்லா பிரச்சினைகளும்!

அறிவுரைகள் எடுபடாமல் விவாகரத்தே தீர்வாயிற்று என் மகள் விவாகரத்தில்.. ..

அன்பு, புரிதல், சகிப்புத்தன்மை, மனிதம் குறுகிப்போக,

கல்வி, சுயநலம், கர்வம், சம்பாத்தியம் பெருகியதைப்போலத்தான்

பெருகியிருக்கிறது விவாகரத்துக்கள்!"




31 comments:

ஜெய்லானி said...

//இவர்களே வளர்ந்து ஆளாகும்போது இந்தப்படிப்பைத்தவிர மற்ற நல்ல விஷயங்கள் அவர்களுக்குத் தெரிவதில்லை. சொல்லித்தரப்படுவதில்லை//

இது இங்கேயே (யூ ஏ ஈ ) நிறைய நடக்குதே!! அதுவும் படித்த பெற்றோர் உள்ள குடும்பத்திலேயே . பிறகு கிராமத்தை என்ன சொல்றது

//இப்படி எல்லா தருணங்களிலும் பெண் என்பவளை ஒரு ஆண் ஒரு வடிகாலாக சார்ந்து நிற்கிறான். பெண் ஒரு சக்தியாக, தோள் கொடுப்பவளாக, புரிந்து கொண்ட சினேகிதியாக நடக்க முயற்சித்தால் மெல்ல மெல்ல விவாகரத்துக்களும் இனி சாகாதோ?//

சாகித்ய அகாடமி விருது குடுக்க ஏத்த வரிகள். அதிகம் வருவது ஈகோ பிரச்சனைகள்தான்...

Chitra said...

பெண் அன்பிலே கனிந்து போகிறவள். அதுவே அவளை பலமாக்குகிறது. அடிப்படை குணங்கள், பண்புகளுடன் வளர்க்கப்பட்ட, விட்டுக்கொடுத்தலும் சகிப்புத்தன்மையும் புரிந்து கொள்ளுதலும் இருக்கும் பெண்களின் இல்லங்கள் என்றுமே சொர்க்கமாய்த் திகழ்கின்றன.



...... ம்ம்ம்ம்ம்ம்....... யோசிக்க வைக்கும் வரிகள். :-)

ராமலக்ஷ்மி said...

எல்லோரையும் சிந்திக்க வைக்கும் நல்ல பதிவு.

தமிழ் உதயம் said...

காலமாற்றம்- நல்லதை மட்டுமல்ல கெட்டதையும் தரும்.

ஸாதிகா said...

//எத்தனை நல்ல விஷயங்களை இப்போதைய தலைமுறை மறந்து போயிருக்கிறது, இழந்திருக்கிறது என்பதை கடந்து போன வருடங்களைத் திரும்பிப்பார்க்கையில் நன்றாகவே உணர முடிகிறது.//சத்தியமான உண்மை அக்கா.விஞ்ஞான முன்னேற்றம் பல நலன்களை தந்தாலும் கூடவே பல கேடுகளையும் தருகின்றது.நல்லது கெட்டது பிரித்தறிந்து பார்த்தல் சுபம்.ஆனால் இளைய தலைமுறையினரை நினைக்கையில் தான் அனைவருக்கும் பயம் வருகின்றது.

Anonymous said...

வரிக்கு வரி உங்கள் கருத்துக்களோட உடன்படுகிறேன் சகோதரி!

Asiya Omar said...

பெண் ஒரு சக்தியாக, தோள் கொடுப்பவளாக, புரிந்து கொண்ட சினேகிதியாக நடக்க முயற்சித்தால் மெல்ல மெல்ல விவாகரத்துக்களும் இனி சாகாதோ?
-உண்மையான வரிகள்.
எழுதிய அத்தனையும் அனுபவத்தில் விளைந்த முத்துக்கள்.

Menaga Sathia said...

சிந்திக்க வைக்கும் நல்ல பதிவு!!

மனோ சாமிநாதன் said...

அன்புள்ள ஜெய்லானி அவர்களுக்கு!

நீங்கள் சொல்வது உண்மைதான். மேற்கத்திய கலாச்சாரம், பணத்தின் செழுமை, வயதுக்கு மீரிய அறிவு, பெற்றோரில் செல்லம்- இதெல்லாம் இங்கும் நம் இந்திய பெண் குழந்தைகளை நிறையவே மாற்றி விட்டன! எங்கிருந்து களை எடுக்க முடியும்? பெற்றோர்கள் மாறினால்தான் உண்டு!

ஒரு காலத்தில் எழுத்தாளராக ஆனந்த விகடன் மற்றும் பல பத்திரிக்கைகளில் உருவெடுத்து, விபத்தினால் இடையிலேயே நிறுத்திய எனக்கு, தங்களின் பாராட்டு உண்மையிலேயே மன நிறைவை அளித்ததுடன் மேலும் மேலும் எழுதத் தூண்டுகிறது. தங்களுக்கு என் இதயங்கனிந்த நன்றி!!

மனோ சாமிநாதன் said...

தங்களின் பாராட்டிற்கு என் மனமார்ந்த நன்றி, ராமலக்ஷ்மி!!

மனோ சாமிநாதன் said...

பதிவிற்கும் கருத்துக்கும் என் அன்பு நன்றி, சித்ரா!

மனோ சாமிநாதன் said...

“காலமாற்றம்- நல்லதை மட்டுமல்ல கெட்டதையும் தரும்.”

உன்மைதான்! அவ்வப்போது உலகில் எல்லா நிலைகளிலும் மாற்ரங்கள் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கின்றன! பழையன கழிதலும் புதியன புகுதலும்தான் வாழ்க்கை. ஆனால் பழையனவற்றின் சிறப்புகளை மறக்காதிருத்தலும் புதியனவற்றின் தாக்கங்களில் முழுமையாகக்கரையாதிருத்தலும்தான் வாழ்க்கையின் சிறப்பு.

தங்களின் பதிவிற்கு என் அன்பு நன்றி!!

மனோ சாமிநாதன் said...

உண்மைதான் ஸாதிகா! ‘அளவுக்கு மீறினால் அமுதமும் விஷம்’ என்பதற்கேற்ப இன்றைய மின்வேக உலகின் புதுப்புது மாற்றங்களும் கவர்ச்சிகளும் நம் இன்றைய இளம் தலைமுறையினரை மிகவும் பாதித்து வருகின்றன! புதியதோர் உலகம் சீக்கிரம் பிறக்க வேண்டும்!

அன்புப் பதிவிற்கு என் நன்றி, ஸாதிகா!

மனோ சாமிநாதன் said...

ஒரே வரியிலேயே அருமையாக எழுதிவிட்டீர்கள், நாஸியா! தங்களுக்கு என் அன்பு நன்றி!

மனோ சாமிநாதன் said...

அன்புப்பதிவிற்கும் கருத்திற்கும் என் மனமார்ந்த நன்றி, ஆசியா!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கு என் அன்பு நன்றி, மேனகா!

Unknown said...

அருமை சகோதரி இப்படி ஒரு இடுக்கையை உங்களிடம் இருந்து நான் எதிர்பார்க்கவில்லை. ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுக்கும் தன்மை மிக குறைவாக உள்ளது. நவீன நாகரிகம் என்று கூறி கொண்டு ,அவர் அவர் எடுக்கும் முடிவுகள் பெரும் சீரழிவை ஏற்படுத்தி உள்ளது . கணவன் மனைவி பிரச்சினைகள் அவர்கள் இருக்கும் அறையை விட்டு வெளியில் தெரிய கூடாது. கணவன் மனைவிகள் இடையே ஒளிவு மறவு இருக்க கூடாது. அன்றைய காலத்தில் வாழ்ந்தவர்களுக்கும் இன்றைய காலத்தில் வாழ்பவர்களுக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது.ஆடையை பற்றி கூறியிருந்திர்கள்,எது நாகரிகம் .தாங்கள் நாகரிகத்தில் வளந்த நாடு என்று கூறும் அமெரிக்க மற்றும் ஐரோப்பியா இன்று எவ்வளவு சீரழிவுக்கு ஆழாகி உள்ளது. நோ family பிளேன் என்று கூறிய நாடுகள் ,எய்ட்ஸ் நோயால் சின்னா பின்னமாக ஆகி உள்ளது. விவாகரத்து எதற்கு எடுத்தாலும் விவாகரத்து. கட்டில் சுகம் மட்டும் வாழ்க்கை என்று வாழ்பவர்கள் மட்டும் தான் இந்த முடிவை எடுக்கிறார்கள் ,அது ஆணாகவும் இருக்கலாம் பெண்ணாகவும் இருக்கலாம்.

a

Jaleela Kamal said...

மனோ அக்காஅ இந்த பதிவு எல்லோருக்கும் சென்றடையனும் சீக்கிரம் தமிலிஷ் ஆட் கொடுங்க , கொஞ்ச்ம் பேராவது படிப்பாங்க

டிரஸ் விஷியத்தில் கண்டிப்பாக பெற்றோர்கள் சிறிது கவனம் கொண்டு பிள்ளை களை வழிநடத்தனும்.

ஹுஸைனம்மா said...

//ஏதாவது சொன்னாலும் அவர்கள் அறிவைப்பயன்படுத்தி விவாதங்கள் செய்து அவற்றைப் புறந்தள்ளுகிறார்கள்.//

ரொம்பச் சரி அக்கா!! அறிவை, வீண்விவாதம் செய்யத்தான் பயனபடுத்துகீறார்கள்!!

என்னவோ ஒரு சலிப்பும், பயமும்தான் வருது அக்கா. பெண்ணீயம், சுதந்திரம், கருத்துரிமை, நாகரீகம் எல்லாத்தையுமே தவறாப் புரிஞ்சு, தவறாவே செயல்படுத்துறாங்க பெரும்பாலான இன்றைய தலைமுறையினர்!!

/நான் ஏன் பெண் குழந்தைகள் பற்றி குறிப்பாய் எழுதுகிறேன் என்றால் அவர்களைத்தான் நான் எதிர்காலக் குடும்பங்களின் தூண்களாய்க் கருதுகிறேன்.//

வெளியே சொல்லிப்பாருங்க, அது ஏன் பொண்ணுதான் இப்படி இருக்கணுமா, ஆணுக்கு என்ன கொம்பா முளைச்சிருக்குன்னு வரிஞ்சுகிட்டு வருவாங்க!!

ஜெயா said...

சிந்திக்க வைக்கும் அறிவு பூர்வமான பதிவு.....

இலா said...

ரொம்ப அருமையான பதிவு! என்ன சொல்ல... யாருக்குமே மன முதிர்ச்சி இல்லை அதுவும் இந்த கால இளம் தலை முறைக்கு... அதுக்கு ஏற்ற மாதிரி சரியான முன்னுதாரணங்கள் இப்ப யார் வாழ்விலும் இல்லை. என்னதான் உலகமே மாறினாலும் மகிழ்ச்சியாய் வாழ்வது நம் கையில் அதுக்கு என்ன் செய்யணும்ன்னு யாரும் நினைப்பதில்லை...எனக்கு கல்யாணம் ஆனதும் என் கணவர் சொன்னார் எங்க ஆச்சியும்/அப்பாவும் ( சித்தி/சித்தப்பா) ஒரு நாளும் வாக்குவாதம் செய்ததில்லை அதுபோல இருக்கணும் என்று.... அப்ப யோசிச்சா எப்படி இப்படி இருக்க முடியும்ன்னு...படிச்ச பெண்கள் பலர் தப்பு செய்வது இந்த இடத்தில தான் ரொம்பவே அனலிடிகல் மூளையை குடும்பத்தில் புகுத்திடுவாங்க... அன்பு இருக்கும் இடத்தில் அனலிடிகல் மூளைக்கு வேலை இல்லை... ஒரு திருமண உறவில் பல நேரம் பிரச்சனைகள் வரலாம்... ஆனால்...ஒவ்வொரு நாளும் அந்த உறவை பலப்படுத்த வேலைசெய்ய வேண்டும்... அந்த ஆதாரத்தை/நக்கூரத்தை ஆழ பாய்ச்சணும்... அது தான் ரொம்ப கடினமான வேலை.

மனோ சாமிநாதன் said...

அன்புள்ள தூயவன் அவர்களுக்கு!

நீங்கள் எழுதியதுபோல விட்டுக்கொடுத்தல் என்பது இரு தரப்பிலும் குறைந்து வருவதால்தான் இன்றைக்கு விவாகரத்துக்கள் பரவலாக அதிகரித்துள்ளன. இதில் பெண்களுக்கு பொறுப்புகள் அதிகம் என்று தான் நான் வலியுறுத்தியுள்ளேன். ஒரு பெண் கவிஞரான ஒளவையார்கூட ‘இல்லாள் சரியில்லையென்றால் துறவறம் கொள்’ என்றுதான் ஆண்மகனுக்குச் சொல்லியிருக்கிறார்! அந்த அளவுக்கு பொறுப்புகள் பெண்ணுக்குக் கூடுதலாகவே இருக்கின்றன. தன்னையும் தன் கடமைகளையும் உணரும் பெண்களுக்குப் பிரச்சினைகள் வருவதில்லை!

மனோ சாமிநாதன் said...

அன்பு ஜலீலா!

சீக்கிரம் ‘தமிழீஷ்’ இணைக்கப் பார்க்கிறேன். தங்கள் கருத்துக்கும் பதிவிற்கும் அன்பு நன்றி!!

மனோ சாமிநாதன் said...

“பெண்ணீயம், சுதந்திரம், கருத்துரிமை, நாகரீகம் எல்லாத்தையுமே தவறாப் புரிஞ்சு, தவறாவே செயல்படுத்துறாங்க பெரும்பாலான இன்றைய தலைமுறையினர்!!”

மிகச்சரியான வரிகள், ஹுஸைனம்மா! இதில் தவறு அவர்களிடம் இல்லை. அவர்களை வளர்க்கும் பெற்றோரிடம்தான் இருக்கிறது!! வளையும் வயதில் அடிப்படைப் பண்புகளைச் சொல்லிக்கொடுக்கத்தவறுவதுதான் இத்தனை பிரச்சினைகளுக்கும் காரணம்!!

மனோ சாமிநாதன் said...

அன்புப் பதிவிற்கும் கருத்திற்கும் மனமார்ந்த நன்றி, ஜெயா!

மனோ சாமிநாதன் said...

“ஒரு திருமண உறவில் பல நேரம் பிரச்சனைகள் வரலாம்... ஆனால்...ஒவ்வொரு நாளும் அந்த உறவை பலப்படுத்த வேலைசெய்ய வேண்டும்... அந்த ஆதாரத்தை/நக்கூரத்தை ஆழ பாய்ச்சணும்... அது தான் ரொம்ப கடினமான வேலை.”

அழகான வரிகள், இலா!
உண்மைதான். திருமண பந்தம் என்பது கடைசியில் உயிர் பிரியும்வரை நிலைத்திருக்க வேண்டிய உன்னதமான சொந்தம். நீங்கள் கூறிய மாதிரி இந்த பந்தம் நிலைத்திருக்க எத்தனை முயற்சிகள் எடுக்க வேண்டும்! அதைத்தான் இன்றைய இளைய தலைமுறையினர் ரொம்ப சுலபமாக வெட்டி விடுகின்றனர்!

Krishnaveni said...

Very good post. must read article...written very well.

மனோ சாமிநாதன் said...

Thanks a lot for the nice feedback, Krishnaveni!

Mahi said...

நல்ல பதிவு..காலங்கள் மாற,மாற இப்படி மாற்றங்களும் தவறான வழிகளில் மாறிக்கொண்டிருக்கின்றன.

பாலங்கள் நானும் படித்திருக்கேன்..மூன்று தலைமுறைகளின் வாழ்க்கை முறைகளையும் அழகாய் இணைத்து சிவசங்கரி அவர்கள் எழுதிய கதை.

மனோ சாமிநாதன் said...

அன்புள்ள மகி!

முதல் வருகைக்கும் பாராட்டுப்பதிவிற்கும் என் அன்பு நன்றி!!

goma said...

வரி விடாமல் வாசித்தேன்.
ஆராய்ந்து ஆணித்தரமாக எழுதியிருக்கிறீர்கள்.பாராட்டுக்கள்
இது போல் மேலும் எழுத வாழ்த்துக்கள்.