அருகிலுள்ள குவைத்திற்கும் ஈராக்கிற்கும் இடையே ஏற்பட்ட வளைகுடாப்போரின் போது குவைத்திலிருந்து வெளியேறப் படாதபாடு பட்டு ஒரு வழியாக வெளியேறி நம் தாயகமான இந்தியாவை வந்தடைந்தவர்கள் ஆயிரக்கணக்கில் இருந்தார்கள். வருமானத்தை, வளமான வாழ்க்கையை, நிம்மதியை, மோசமான கனவு போல திடீரென ஒரு நள்ளிரவு தொலைத்தவர்களில் ஒருத்தர்தான் நம் கதாநாயகன்!
இவரை நாங்கள் வளைகுடா போர் முடிந்து மூன்று வருடங்களுக்குப் பிறகு தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில் ஒரு நண்பரது இல்லத்தில் சந்தித்தோம். குவைத்தில் ஒரு பணக்காரரின் இல்லத்தில் காரோட்டியாய் வேலை பார்த்து வந்தவர் இவர். நள்ளிரவு ஏற்பட்ட ஈராக்கின் ஆக்ரமிப்பினால் அவசரம் அவசரமாக வெளியேறிய ஆயிரக்கணக்கானவர்களில் இவருடைய முதலாளியும் ஒருத்தர். உயிருக்கே பயந்து ஓடும்போது தன் கீழ் வேலை செய்யும் மற்றவர்களைப்பற்றி அவர்களால் கவலைப்பட முடியவில்லை. நம் நண்பருடைய பாஸ்போர்ட்டும் அவருடனேயே போய் விட்டது. திண்டாடி திணறி ஒரு வழியாக இண்டியன் எம்பஸியை அடைந்திருக்கிறார்.
அந்த சமயம் இதுபோல நிராதரவான இந்தியர்களுக்காக, அவர்கள் அந்த நாட்டை விட்டு வெளியேற outpass வசதியையும் அம்மான் ஏற்போர்ட்டிலிருந்து இலவச ஏர் இந்தியா விமான பயணத்தையும் இந்திய அரசாங்கம் ஏற்பாடு செய்திருந்தது. இவர் இந்தியன் எம்பஸியை அடைந்து இந்த சலுகைகளுக்கான பேப்பர்களைக் கேட்டிருக்கிறார். அவர் இந்தியர்தான் என்பதற்கான சான்றுகளை அங்கே கேட்கவும் பாஸ்போர்ட் தொலைந்த கதையை இவர் சொல்ல, இவருக்கு உதவி செய்ய மறுத்து விட்டது இந்தியன் எம்பஸி. தன்னுடைய பாஸ்போர்ட்டே தொலைந்த நிலையில் தான் ஒரு இந்தியக் குடிமகன் தான் என்று எப்படி நிரூபிப்பது? ‘ஜன கண மன’ பாடுகிறேன். அப்போதாவது நான் ஒரு இந்தியன் என்று நம்புவீர்களா?’ என்றெல்லாம் சொல்லி அழுதிருக்கிறார். எப்படியோ கெஞ்சிக்கூத்தாடி அந்த பேப்பர்களைப் பெற்று, பல நூறு மைல்களை யார் யாருடைய கார்களிலோ ஒட்டிக்கொண்டு பிரயாணம் செய்து அம்மானை அடைந்து, விமானத்தில் ஏறி டில்லி வந்து சேர்ந்து, பின் இலவச ரயில் பயணம் மூலமாக தாயகம் வந்திருக்கிறார்.
ரயிலில் வந்த கதையை இப்படி சொன்னார்.
“ வரும் வழியெல்லாம் ந்ம் நாட்டின் ஒவ்வொரு மாநிலத்தையும் ரயில் கடந்தபோது எங்களின் நிலைமையைக் கேள்விப்பட்டு பழங்களையும் உணவுப்பொட்டலங்களையும் கதவைத் திறந்து மூட்டை மூட்டையாக கொட்டினார்கள். ஆனால் சென்னையில் யாருமே இல்லீங்க! தமிழக அரசு எதுவுமே செய்யவில்லை. ஒரு அனாதை போல வெளியே வந்து ஒரு ஆட்டோவைப் பிடித்து நண்பர் வீடு சென்று காசு வாங்கி ஆட்டோவுக்குக் கொடுத்தேன்.”
வாழ்க்கைக் கவலைகளூம் வருமானமின்மையும் துரத்த மறுபடியும் பாஸ்போர்ட் அலுவலகத்திற்குச் சென்று புது பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பித்து அதற்காகக் கேட்ட லஞ்சம் 1500 ரூபாயையும் கொடுத்திருக்கிறார். அதற்கான சான்றுகளையும் வைத்துக்கொண்டு லஞ்சம் கேட்டுப்பெற்றவரை கோர்ட்டுக்கு இழுத்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். ஒரு வழியாக தய்லாந்தும் வந்து வேலையையும் கிடைத்து விட்டது.
எப்போது கல்யாணம் என்று கேட்டோம்.
‘தாய்லாந்து பெண்ணைத்தான் கல்யாணம் பண்ணிக்கொள்ளப்போகிறேன். பெண்ணும் முடிவாகி விட்டது’’ என்று அவர் சொன்னதும் தூக்கிவாரிப்போட்டது.
‘இதென்ன இப்படி முடிவு?’ என்று கேட்டதும் அவர் சொன்னார்.
‘ இந்த ஊர்ப்பெண்ணை மணமுடித்தால் பெண் வீட்டில் வரதட்சிணை கொடுக்கிறார்கள். இந்த அரசாங்கம் குடியுரிமை வழங்குகிறது. வசதியான வாழ்க்கை. இந்த வசதி எனக்கு இங்குதான் கிடைக்கிறது. நம் நாட்டில் என்ன கிடைக்கும்?’
மனசு ஏனோ கனமானது. “ நாடென்ன உனக்கு செய்தது என்று பார்க்காதே. நீ உன் நாட்டிற்கு என்ன செய்தாய் என்று பார் ” என்ற புகழ் பெற்ற வரிகள் திடீரென நினைவுக்கு வந்தன!
அவரின் தார்மீகக் கோபமும் அவர் பட்ட கஷ்டங்களின் வலிகளூம் அவலங்களும் எனக்குப் புரிந்தது. ஆனால் தாய்மண்ணையே வெறுக்கும் அளவுக்கு அவரின் சீற்றம் நியாயமானதா?
35 comments:
அன்பு அக்கா வாழ்க்கையில் ஒப்பிட்டு பார்பதே தவறு. அது நிம்மதியை குலைத்து விடும். அதிலும் தாயையும், தாய் நாட்டையும் ஒப்பிட்டு பார்ப்பது சிறப்புடையது அல்ல.
வாழ்க வளமுடன்
அவரின் தார்மீகக் கோபமும் அவர் பட்ட கஷ்டங்களின் வலிகளூம் அவலங்களும் எனக்குப் புரிந்தது. ஆனால் தாய்மண்ணையே வெறுக்கும் அளவுக்கு அவரின் சீற்றம் நியாயமனதா?
...... அது சீற்றமா, இல்லை காயம்பட்ட மனதில் உள்ள வலியின் முனகல் சத்தமா என்று தெரியாமல் எப்படி பதில் சொல்வது?
அக்கா, அவராவது அடிபட்டதால் குடியுரிமையை மாற்றுகிறார். நம்மில் எவ்வளவு பேர் அமெரிக்க, ஆஸ்திரேலிய, கனடா etc. நாடுகளின் குடியுரிமையை வேண்டிப் பெறவில்லையா? அவர்களிடம் இந்தக் கேள்வி நாம் கேட்பதில்லையே?
குவைத்தை விட்டு நம் நாடு வந்து அவர் ஊரில் சந்தித்த அவலங்கள் தான் இந்த முடிவை எடுக்க தூண்டியிருக்க வேண்டும்இதில் கருத்து சொல்ல எனக்கு தெரியவில்லை,அவருடைய சூழ்நிலை அவருக்கே வெளிச்சம்.எப்படியோ மனுஷன் நிம்மதியாக வாழ்ந்தால் போதும்.பிறப்பின் பயனை அடையட்டும்.
It is his life...his decision....right or wrong? i don't know...but he needs peaceful life
//ஆனால் தாய்மண்ணையே வெறுக்கும் அளவுக்கு அவரின் சீற்றம் நியாயமானதா? //
ஒரு தமிழறாய் யோசிச்சிருக்கீங்க ..அதுக்கு வாழ்த்துக்கள்.. இதுக்கு ஒரிரு வரி பதில சொல்ல முடியாது.
உங்களிடம் அவர் சொன்னது பாதி இருக்கும். சொல்லாதது மீதி , அவர் மனநிலையில் அது சரியா இருக்கலாம் . ஹுஸைனம்மாவின் பதிலே என் கருத்தும்
“ வாழ்க்கையில் ஒப்பிட்டு பார்பதே தவறு. அது நிம்மதியை குலைத்து விடும். அதிலும் தாயையும், தாய் நாட்டையும் ஒப்பிட்டு பார்ப்பது சிறப்புடையது அல்ல. “
அன்பு சகோதரர் அவர்களுக்கு!
அருமையான கருத்துக்களை எழுதியிருக்கிறீர்கள்! இதேதான் என் மன நிலையும். அதனால்தான் என் மனம் வேதனைப்பட்டது. தாய் நாட்டைப் பழித்து இன்னொரு நாட்டை சரணடைவது சரியில்லையல்லவா?
அன்புள்ள சித்ரா!
அவருக்கு தான் பட்ட கஷ்டங்களினால் நம் நாட்டின் மீது அதிக கோபம் இருந்தது. அதைத்தான் நான் ‘சீற்றம்' என்று தலைப்பிட்டு எழுதினேன்.
மனோ அக்கா, என் மனதில் கிடைக்கும் கருத்துக்களையும் கொட்டி விடுகிறேனே...
என்னைப்பொறுத்து, எங்கள் இடத்தில் இருந்து சிந்திக்காமல், அவரது நிலைமையில் இருந்து சிந்திக்கும்போது, அவர் செய்ததில் தப்பில்லை எனத்தான் படுகிறது.. ஏனெனில் அவர் பாஸ்போட் இல்லாமல் பட்ட வேதனை... அந்த நிமிட வேதனைகள்... அவருக்குத்தானே தெரியும், ஒருவேளை அந்நேரம் அவர் கடுமையாக சிந்தித்து சித்த சுவாதீனமாகக் கூட போயிருக்க வாய்ப்பிருக்கே... அப்படியாயின் தாய் நாடு பொறுப்பெடுத்திருக்குமோ?
எங்கேயோ படித்த ஞாபகம், பெரியவர்கள் சிறியவர்கள் மேல் பொழியும் அன்பைப்பொறுத்துத்தான், அவர்களும் திரும்ப இரட்டிப்பாக்கிப் பொழிகிறார்கள் என, அதேபோல், இவர் சொந்த மண்ணுக்குத் திரும்பியபோது, இவரை நன்கு உபசரித்து, நிழல்கொடுத்திருந்தால், நடப்பது நடக்கட்டும், என் மண்ணைவிட்டு நான் எங்கேயும் போகப்போவதில்லை, என்ற முடிவுக்கும் வந்திருக்கலாம்.
இது, அதைவிட போன இடத்தில் அதிகம் சந்தோசம் கிடைத்ததினால்கூட இருக்கலாம்.
எக்காரணம் கொண்டும், தாய் மண்ணையும் உறவுகளையும் மறக்கக்கூடாது, ஆனால் சந்தர்ப்பம் சூழ்நிலைதானே மனிதனை மாற்றுகிறது.....
அன்புள்ள ஹுஸைனம்மா!
நீங்கள் சொல்லுவது போல நம்மில் எத்தனையோ பேர் இன்றைய தேதியில் வளமான வாழ்க்கைக்காக மற்ற நாடுகளில் குடியேறி குடியுரிமை பெறவும் செய்கிறார்கள். ஆனால் 90 சதவிகிதம் பெற்றோர் தேடித்தந்த துணையுடன் அல்லது தனக்குத்தானே தேடிக்கொண்ட தன் நாட்டுத்துணையுடன் தான் அடுத்த நாடுகளில் குடியேறுகிறார்கள். வசதிக்காகவும் வாய்ப்பிற்காகவும் மொழி தெரியாத இன்னொரு நாட்டைச் சேர்ந்த பெண்ணை மணப்பதும் நம் நாட்டையே பழிப்பதும்தான் என் மனதை சற்று வேதனைக்குள்ளாக்கிய விஷயங்கள். இன்னொரு நாட்டில் வளமான வாழ்க்கைக்காக வேலை தேடிக்கொள்வதும் குடியுரிமை பெறுவதும் ஒத்துக்கொள்ளப்பட வேண்டிய விஷயங்களே! ஆனால் தாய் மண்ணைப் பழித்து அந்நிய நாட்டில் காலூன்றிக்கொள்வது நம் தாயையே பழித்துரைப்பதற்கு சமமல்லவா?
அன்புள்ள ஆசியா!
சந்தர்ப்ப சூழ்நிலைகள் எல்லோருடைய வாழ்க்கையிலும் புயல்போல திடீரென்று வந்து பாதிக்கத்தான் செய்யும். எப்படிப்பட்ட பாதிப்பிலும் சில நியாயங்கள் ஆலமரம் மாதிரி உறுதியாக நிற்க வேண்டும். அதுதான் சிறந்த வாழ்க்கை.
Yes! He has the right to lead his life peacefully Krishnaveni! But every one should have at least a pinch of patriotism as well as some maturity in selecting his most important decisions of his life.
அன்புள்ள சகோதரர் ஜெய்லானி அவர்களுக்கு!
தங்கள் வாழ்த்துக்களுக்கு என் அன்பு நன்றி! நான் ஒரு இந்தியராகத்தான் யோசித்திருக்கிறேன். ஹுசைனம்மாவுக்கும் என் கருத்துக்களை எழுதியிருப்பதையும் பார்த்திருப்பீர்கள்.
அவரிடம் நாங்கள் பேசிக்கொண்டிருந்த 4 மணி நேரங்களில் இந்தியா மீதிருந்த அவருடைய கோபத்தைத்தான் உணர்ந்தோம். இந்தியாவைக் குறைத்துப்பேசி வெளி நாட்டு வாழ்க்கை சிறந்தது என்ற அவரின் கருத்து தான் மனதை நெருடியது.
எந்த ஒரு வலியும் வேதனையும் அனுபவித்தவருக்கு மட்டுமே புரியும் அக்கா. வெளியே இருந்து பார்க்கும் போது தப்பாக தெரியும் சில விடயங்களை நாமும் அனுபவிக்கும் போது அவர் செய்தது சரியோ என யோசிக்கவும் வைக்கும்......
//எந்த ஒரு வலியும் வேதனையும் அனுபவித்தவருக்கு மட்டுமே புரியும்// ரிப்பிட்ட்...
இந்திய நாடு அவரை பாஸ்போர்டே இல்லாமல் இலவசமாக ஏர் இந்திய விமானத்திலும், அதன்பின் இலவச ரயிலிலும் சென்னை வரை கொண்டு வரும் போது மற்ற மாநிலங்கள் அனைத்து உணவு பொருட்களை வழங்கியது.
இந்திய அரசு அவரை கைவிட்டு இருந்தால் அங்கே எதோ ஒரு சிறைசாலையில் காலம் தள்ளி இருப்பார். இன்று இந்தியா மீது சீற்றம் கொள்ளவோ அல்லது தாய்லாது பெண்ணை மணக்கவோ முடியாது. இதில் இருந்தே தெரிகிறது நமது நாட்டு சுதந்திரத்தை எவ்வளவு அனுபவிக்கிறோம் என்பது.
உங்கள் விளக்கம் ஏற்றுக் கொள்ளக்கூடியதே..!!ஒரு வேளை நல்ல பாதையை காட்டக்கூடிய சரியான ஆட்கள் அவருக்கு கிடைக்காதது அவரது துரதிஷ்டமே..
அதிரா! உங்களின் இத்தனை பெரிய பதிவு எனக்கு மிகவும் மகிச்சியைத்தந்தது.
நீங்கள் சொல்வது உண்மைதான். நாம் விதைக்கும் விதையைப்பொறுத்துத்தான் நமக்குக் கிடைக்கும் பலன்கள் அமையும்.
அன்பு சகோதரர் ஹைஷ் உங்கள் கேள்விகளுக்கு சரியான பதிலளித்திருக்கிறார்கள்!
பாஸ்போர்ட் இல்லாமல் அவர் பட்ட வேதனையைப் பற்றி எழுதியிருக்கிறீர்கள்! அதை என்னை விட வேறு யாராலும் அத்தனை நுட்பமாக உணர முடியாது! ஏன் தெரியுமா? இந்த கட்டுரையின் முகப்பில் தாய்லாந்தில் அவரை சந்தித்ததாக எழுதியிருந்தேன். எப்படித் தெரியுமா? அதற்கு முதல் நாள்தான் தாய்லாந்தை விட்டுக் கிளம்பும்போது எங்கள் [நான், என் கணவர், என் மகன்] அத்தனை பேருடைய பாஸ்போர்ட்டுகள், ஆயிரக்கனக்கான டாலர்கள், டிக்கட்டுகள் அடங்கிய என் கைப்பை கண் இமைக்கும் நேரத்தில் திருட்டுப்போய், எங்கள் பயணம் ரத்தாகியது! எங்களுக்கு டூப்ளிகேட் பாஸ்போர்ட்டுகளைப் பெறுவதற்காக இந்தியத் தூதரகத்திற்கு தினமும் அலைந்ததும் இந்தியத் தூதரகம் பேருக்குக்கூட அனுதாபம் காட்டாது கடுமையாக நடந்து கொண்டதும் இப்போதுதான் நடந்தது மாதிரி இருக்கிறது! வெளியேற வழியில்லாமல் முன்பின் தெரியாத ஒரு நாட்டில் பல நாட்கள் மாட்டிக்கொண்டு பட்ட வேதனைகள், அதற்குப்பின் இங்கு வந்து சேர்ந்ததும் டூப்ளிகேட் பாஸ்போர்ட்டினால் எற்பட்ட தொடர் பாதிப்புகள் ஏராளம்!
இதனாலெல்லாம் நம் நாட்டை வெறுத்து விட முடியுமா?
ஜெயா!
உங்களுடைய கருத்துக்கான பதிலை அதிராவிற்கு எழுதியுள்ளேன்.
மற்றவர்களின் வலிகளையும் வேதனைகளையும் நாமும் அனுபவித்துத்தான் புரிந்து கொள்ள வேண்டுமென்பதில்லை. அதை உணர மனதில் சிறிதளவு கருணை இருந்தாலே போதும்!!
மேனகா!
அன்பு பதிவிற்கு என் நன்றி!! உங்களுடைய, ஜெயாவுடைய கருத்துக்களுக்கான பதிலை நான் அதிராவிற்கு எழுதியுள்ளேன்
அன்புச் சகோதரர் ஹைஷ் அவர்களுக்கு!
மறுபடியும் மிகச்சரியான கருத்துக்களை எழுதிய தங்களுக்கு என் அன்பு நன்றி!!
அன்புச் சகோதரர் ஜெய்லானி அவர்களுக்கு!
தங்களின் கருத்து மிகவும் சரியானதே. நல்ல பாதையை காண்பித்து வழி நடத்தக்கூடிய ஆட்களும் அவருக்கு அமையவில்லை!!
இவர் ஹீரோ அல்ல, என்னை பொறுத்தவரை ஜீரோ. தனி நபர் செய்யும் தவறுக்கு தாய் நாட்டையே குறை கூறுவதை என்னால் ஏற்று கொள்ள முடியாது. அவர் பட்ட கஷ்டத்தையும் அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சல்களுக்கும் நான் மதிப்பு கொடுக்கின்றேன். அவர் தாய்லந்து நாட்டு பெண்ணை திருமணம் செய்து, அந்த நாட்டு குடியுரிமை பெற்று விட்டால்? அவர் அந்த நாட்டின் மண்ணின் மைந்தனாக ஆகிவிட முடியுமா? அவர் எடுத்த முடிவை நினைத்து பார்த்தேன், இது அவரின் அறியாமை என்றே தோன்றுகிறது.
எந்த ஒரு வலியும் வேதனையும் அனுபவித்தவருக்கு மட்டுமே புரியும்// ரிப்பிட்ட்...
//எந்த ஒரு வலியும் வேதனையும் அனுபவித்தவருக்கு மட்டுமே புரியும்// ரிப்பிட்ட்...
நல்ல பதிவு... என்னை பொறுத்தவரை திருமணம் என்பது பெற்றோர் அமைத்து கொடுத்தாலும் சரி/ அவர்களாவே துணையை தேடிக்கொண்டாலும் சரி.. அன்பு இருக்க வேண்டும். வரவை பார்த்து திருமணம் செய்துகொள்ள இது வியாபாரமல்ல...
அவர் செய்வது அவருக்கு சரியாகவே படும்... சந்தர்ப்ப சூழ்நிலையால் ஒரு அருமையான கலாச்சாரத்தை அவர் ஒதுக்குகிறார்.. இதனால் அவருக்கு இப்ப பயன் இருக்கு போல இருந்தாலும் அவர் எதிர்காலம் என்னவென்பதுயாராலும் கணிக்க முடியாத ஒன்று....
மனம் போல அமையட்டும்...
அன்புள்ள தூயவன் அவர்களுக்கு!
“ தனி நபர் செய்யும் தவறுக்கு தாய் நாட்டையே குறை கூறுவதை என்னால் ஏற்று கொள்ள முடியாது.”
அருமையான வரிகளை எழுதியிருக்கிறீர்கள்.
தங்களின் பதிவிற்கு என் அன்பு நன்றி!
கருத்துக்கு மிக்க நன்றி காஞ்சனா!
குமார் அவர்களுக்கு,
அன்பான பதிவிற்கு மனமார்ந்த நன்றி !
அருமையாக எழுதியிருக்கிறீர்கள் இலா!
ரொம்பவும் அனுபவசாலி போல தெளிவான எழுத்துக்கள்!!
நீங்கள் சொல்வது மாதிரி எந்த உறவும் அன்பை மட்டும் அடிப்படையாகக் கொண்டு பிறக்கும்போதுதான் வாழ்க்கை இனிக்கும்!
மனோ அக்கா நல்ல பதிவு. அவரவருக்கு எது நல்ல படுதோ அதை செய்துவிடுகிறார்கள். பின்னால் ஒரு நாள் கண்டிப்பா அவரை நினைக்க வைக்கும். இருந்தாலும் அவரின் தற்போதைய சூழ்நிலையில் நல்ல மனதுக்கு ஆறுதல் கிடைத்திருக்கிறது. அதனால் அவர் ஆன் தி ஸ்பாட் மனதை மாற்றி தன்னுடைய்ய மனதை மாற்றி கொண்டுள்ளார்.
ரொம்ப ஆழமான பதிவு...அருமையான எழுத்து...
i did To Submit Tamilish...
அன்புள்ள விஜி!
இள ரத்தத்துக்கு அனுபவங்களின் முதிர்ச்சியோ தாக்கமோ கிடையாது. அதனால்தான் இப்படிப்பட்ட முடிவுகள் எடுக்கப்படுகின்றன!
தங்களின் பதிவிற்கு நன்றி!!
அன்புச் சகோதரர் இர்ஷாத்!
தங்களின் பாராட்டுப்பதிவிற்கும் தமிழீஷில் ஒட்டளித்ததற்கும் என் அன்பு நன்றி!!
Post a Comment