நெகிழ வைத்த முதல் முத்து:
இது ஒரு சிறு கதை! ஒரு மாத மலரில் படித்தேன். தினமும் நாம் பார்க்கிற கதை தான்! ஆனால் சொல்லப்பட்டிருக்கும் கோணம் புதியது! படித்த பின் மனம் கனமாகியது. நீங்களும் படியுங்கள்.
இது மரத்தின் கதையல்ல!
அந்த மரத்தடியில் ஒரு சிறுவன் வந்து தினமும் ஆடிப்பாடி, விளாயாடி விட்டு செல்வான். அவனைப்பார்க்கும்போதெல்லாம் அந்த மரத்துக்கு மனம் ஆனந்தத்தால் பொங்கும். சில நாட்களாக அந்த சிறுவன் வரவில்லை. மரம் அவனுக்காக ஏங்கியது. வெகு நாட்கள் கழித்து அவன் வந்தான். மரம் அவன் வராததைப்பற்றி விசாரித்து, அவனுடைய பிரச்சினையைக் கேட்டது. அவனுடைய நண்பர்கள் எல்லோரும் பொம்மைகள் வைத்து விளையாடுவதாகவும் அவனிடம் மட்டும் ஒரு பொம்மை கூட இல்லை என்றும் அவன் சொன்னான். உடனேயே மரம் ' கவலைப்படாதே. இந்த மரத்திலுள்ள பழங்களை எடுத்துச் சென்று கடையில் விற்று பொம்மை வாங்கிக் கொள். என்னைப் பார்க்க அடிக்கடி வந்து கொண்டிரு' என்று சொன்னது. அவனும் மகிழ்ச்சியுடன் பழங்களை பறித்துச் சென்றான்.
நாட்கள் சென்றன. அவன் மட்டும் வரவேயில்லை. மரம் அவனுக்காக ஏங்கியது. சில வருடங்கள் கழித்து அவன் திரும்ப வந்தான். அவன் இப்போது வளர்ந்திருந்தான். முகத்தில் மட்டும் கவலை தெரிந்தது. மரத்திற்கு அவன் வருகையில் ஏக சந்தோஷம். " வா, வந்து விளையாடு. என் கிளைகளில் ஏறி அமர்ந்து பாட்டு பாடு" என்றது. அவனோ " இல்லை. எனக்கு திருமணம் ஆகி விட்டது. எனக்கு மனைவி, குழந்தைகள் இருக்கிறார்கள். எனக்கென்று வீடு மட்டும் கட்ட முடியவில்லை. வீடு கட்டுவதற்கு பணமில்லை' என்றான். மரம் உடனேயே' உனக்கு கொடுக்க என்னிடம் கிளைகள் இருக்கின்றன. அவற்றை வெட்டி எடுத்துச் சென்று வீடு கட்டிக்கொள்' என்றது. அவன் கிளைகளை வெட்டத்தொடங்கும்போது, " இப்படி ஒரேயடியாக என்னை பார்க்காமல் இருக்காதே. வருடம் ஒரு முறையாவது வந்து செல்" என்றது.
அவன் சில வருடங்களாக வரவேயில்லை. அவன் வருவான் வருவான் என்று மரமும் தினம் காத்திருந்தது. பல நாட்களுக்குப்பின்னர் அவன் மீண்டும் வந்தான். மரம் ஆனந்தக் கூத்தாடியது. அவன் எப்போதும்போல சோகமாக இருந்தான். மரம் ஏனென்று விசாரித்ததற்கு, " என் மீன்பிடி படகு உளுத்து விட்டது. அதனால் மீன் பிடிக்க முடியாததால் எனக்கு வருமானமில்லாமல் போய் விட்டது. நாங்கள் மிகவும் கஷ்டபப்டுகிறோம்" என்றான். மரம் துடித்துப்போனது. " நான் இருக்கிறேன். என் அடிமரத்தை எடுத்துக்கொள். அதைக்கொண்டு படகு கட்டிக்கொள்" என்றது. அவன் அடிமரத்தை வெட்டும்போது " இப்படி வருடங்களுக்கு ஒரு முறை என்றில்லாமல் என்னை அடிக்கடி பார்க்க வந்து கொண்டிரு" என்று சொன்னது.
அதற்குப்பிறகும் அவன் பல வருடங்கள் வரவேயில்லை. மரத்திற்கு மெல்ல மெல்ல நம்பிக்கை குறைந்து போனது.
அப்போது தான் அவன் வந்தான். தலை நரைத்து, கூன் விழுந்து, தளர்வடைந்திருந்தான்.
மரத்திற்கு அழுகை வந்தது. " இப்போது உன்னிடம் கொடுக்க என்னிடம் பழங்களோ, கிளைகளோ, அடி மரமோ இல்லையே! " என்று சொல்லி வருந்தியது.
அவன் சொன்னான். " இப்போது பழங்களை கடித்து சாப்பிட என்னிடம் பற்கள் இல்லை. கிளைகளையும் அடிமரத்தையும் வெட்டுவதற்கு என்னிடம் சக்தி இல்லை. எனக்கு இப்போது ஓய்வு மட்டும்தான் தேவைப்படுகிறது" என்றான்.
" அப்படியா? இதோ தரையில் கிடக்கும் என் வேர்களில் படுத்துக்கொள்" என்று சொன்னது மரம். அவன் உடனேயே அந்த மரத்தின் வேர்களில் தலை வைத்து படுத்துக்கொண்டான். இந்த சுகத்துக்குத்தான் அந்த மரம் பல வருடங்களாகத் தவித்தது. இப்போது அந்த ஏக்கம் நிறைவேறியதில் மரம் ஆனந்தக் கண்ணீரை உகுத்தது.
ஆசிரியரின் குறிப்பு:
இது மரத்தின் கதையல்ல. நிஜ வாழ்க்கையில் நம் பெற்றோர்களின் கதை. இந்த சிறுவனைப்போல் நாமும் சிறு வயதில் பெற்றோருடன் ஆனந்தமாக விளையாடுகிறோம். பெரியவனானதும், நமக்கென குடும்பம், குழந்தை வந்ததும் ஒதுங்கி விடுகிறோம். அதன் பின் ஏதாவது தேவைகள் அல்லது பிரச்சினைகள் என்று வந்தால்தான் அவர்களைத் தேடிச் செல்கிறோம்.
நம்மிடம் இருப்பவை எல்லாம் நம் பெற்றோர் கொடுத்தது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். நம்மால் அவர்களுக்கு எதுவும் கொடுக்க முடியாது, நம்முடைய அன்பு, பாசம், நேரம் தவிர. அவர்கள் விரும்புவதும் அதை மட்டும்தான்!!
14 comments:
//நம்மிடம் இருப்பவை எல்லாம் நம் பெற்றோர் கொடுத்தது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். நம்மால் அவர்களுக்கு எதுவும் கொடுக்க முடியாது, நம்முடைய அன்பு, பாசம், நேரம் தவிர. அவர்கள் விரும்புவதும் அதை மட்டும்தான்!..//
உண்மை.. உண்மை..
மரம் சொல்லும் கதை அருமை.
படிக்கும்போதே புரியும் உருவகம். அருமை. நானும் படித்திருக்கிறேன் இந்தக் கதையை.
இதுவும் படிச்சிருக்கேன். அருமையான கதை. மனசு வேதனையில் ஆழ்ந்தது. தன்னையே கொடுத்து வாழ வைக்கும் மரம் போன்ற மனிதர்களும் உண்டே!
உண்மை. உருக்கமான கதை.
வாழ்வியல் யதார்த்தம்
வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் அன்பு நன்றி சகோதரர் துரை.செல்வராஜ்!
இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி கோமதி அரசு!
இனிய கருத்துரைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி சகோதரர் ஸ்ரீராம்!
எனக்கும் இந்தக் கதையைப் படித்து முடித்ததும் மனம் வேதனையில் ஆழ்ந்தது கீதா!இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி!
கருத்துரைக்கு இனிய நன்றி ராமலக்ஷ்மி!
உண்மைதான்! இது போன்ற வேதனை நிரம்பிய நிகழ்வுகள் எல்லாம் தற்போது யதார்த்த வாழ்க்கையாகி விட்டது!
கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார்!
அருமை... மனித வாழ்க்கை மரத்திற்கு ஈடாகாது...
இனிய கருத்துரைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி தனபாலன்!
Post a Comment