Monday 14 January 2019

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!

இந்த முறை அம்மாவின் பிறந்த நாளுக்கு தஞ்சை வரவேண்டியிருந்ததால் மகன், மருமகள், பேரன், பேத்தியுடன்  துபாயில் எப்போதும் கொண்டாடும் பொங்கல் விட்டுப்போய் விட்டது. அதனால் நாங்கள் இருவரும் மட்டும் தஞ்சையில் பொங்கலைக்கொண்டாடப்போகிறோம்!


" பொங்கல் என்ற சொல், தமிழில் சோறு பொங்குவதையோ, பால் பொங்குவதையோ மட்டும் குறிப்பதல்ல. வளர்தல், உயர்தல், எழுதல், பொழிதல், நிறைதல், என பல அர்த்தங்களுடன் உள்ளும், புறமும் உற்சாகத்தை பொங்கவைக்கும் ஒரு சொல். மண்ணும், மனமும் இயற்கையால் நிறைந்து வழிவதை சொல்வது." என்று படித்தேன்! உண்மையிலேயே இந்த விளக்கத்தைப்படித்த போது மனம் நிறைவாக இருந்தது.



ரொம்ப நாட்களுக்குப்பிறகு பொங்கல் ஊரில் கொண்டாடுவதால் பழைய பொங்கல் நினைவுகள் அலைமோதுவதைத் தவிர்க்க முடியவில்லை! மார்கழி மாதத்திலிருந்தே இங்கெல்லாம் பொங்கல் உற்சாகம் வந்து விடுகிறது! ஆனால் நிறைய வீட்டு வாசல்களில் வெறும் கோலங்களைத்தான் பார்த்தேன். சாணம் பிடித்து அதன் மீது பரங்கிப்பூ வைப்பதைப்பார்க்கவில்லை.



கிராமங்களில் பரங்கிப்பூ வைக்கும் பழக்கம் இன்னும் தொடர்கிறது என்று நினைக்கிறேன்! முன்பெல்லாம் அந்த சாணத்தையும் ராட்டியாகத்தட்டி, காய்ந்த பரங்கிப்பூவை பத்திரப்படுத்தி வைப்பார்கள். கன்னிப்பொங்கல் அன்று, கன்னிப்பெண்கள் இவற்றை உபயோகித்து பொங்கலும் படையலும் செய்தால் திருமணம் விரைவில் கூடி வருமென்பது அன்றைய நம்பிக்கை!

நாங்கள் அடிக்கடி துபாய்க்கும் தஞ்சைக்கும் பயணங்கள் செய்து கொண்டிருப்பதால் அவ்வப்போது வீட்டை சுத்தம் செய்து கொண்டேயிருப்போம். அதனால் போகிப்பண்டிகைக்கு முன்பிலிருந்தே எல்லோர் வீட்டிலும் வீட்டையே தலைகீழாக புரட்டிப்போட்டு சுத்தம் செய்வதைப்பார்க்கும்போது வேடிக்கையாக இருக்கிறது!



அடுத்ததாக நான் பார்த்து அசந்து போவது, திருமணமாகி புகுந்த வீட்டில் இருக்கும் பெண்ணுக்கு செய்யும் சீர்வரிசை! புதிதாக மணம்முடித்த பெண்ணுக்கு, பிறந்த வீட்டில் இருந்து, இரண்டு வெண்கல பொங்கல் பானைகள், கரண்டிகள்,  பச்சரிசி, கரும்பு, மஞ்சள் குலை, வாழைத் தார், ஆகியவற்றோடு சாப்பாட்டுக்குரிய காய்கறிகள், வெல்லம், நெய், துணிமணி என அனைத்தும் இந்த சீரில் இடம்பிடிக்கிறது!



சில கிராமங்களில் பொங்கலுக்கு முன்பாக வரும் பதினைந்து, ஒன்பது, ஏழு என வசதிப்பட்ட ஒற்றைப்படை நாளில், சொந்த பந்தங்களை அழைத்துக் கொண்டு, பெண்ணைக் கட்டிக்கொடுத்திருக்கும் வாழ்க்கைப்பட்டிருக்கும் வீட்டுக்குச் சென்று இந்த சீர்வரிசையை கொடுக்கிறார்கள்!

பெற்றவர்கள் உயிருடன் இருந்தால் அவர்கள் தான் பெண்ணின் சகோதரர்களையும் அழைத்துக்கொண்டு தங்கள் பெண்ணின் புகுந்த வீடு சென்று பொங்கல் சீர்வரிசை வைப்பார்கள். அவர்கள் காலத்துக்குப்பின்னும் சகோதரர்கள் தங்கள் வசதிக்கேற்ப பணமோ, பொருள்களோ, துணிமணிகளோ சீர்வரிசை பல்லாண்டு காலமாகக் கொடுத்து வருவது இன்னும் தஞ்சைப்பக்கத்தில் இருந்து வருகிற ஒரு பழக்கம்!



இப்படி பல சிறப்புகளுடன் வழக்கம்போல பொங்கல் திருநாள் நாளை
உதயமாகிறது! புத்தரிசிப்பொங்கலைப்போல, வாழ்க்கை முழுவதும் இனிமையான நினைவுகள் பொங்கிப்பெருக, அனைத்து வலையுலக அன்புள்ளங்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த இனீய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!


படங்கள்:கூகிளுக்கு நன்றி!

8 comments:

Yaathoramani.blogspot.com said...

படங்களுடன் பொங்கல் குறித்த விரிவானப் பதிவு அருமை தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

KILLERGEE Devakottai said...

பொங்கலைக் குறித்த நிறைய விடயங்கள் அறிந்தேன் நன்றி சகோ.
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

கோமதி அரசு said...

உங்களுக்கும் உங்கள் குடுமபத்தினர்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
பொங்கல் சிறப்பு பகிர்வு மிக அருமை.

ஸ்ரீராம். said...

பொங்கல் வார்த்தைக்கான அர்த்தம் நன்று. வாழ்த்துகளுக்கு நன்றி. உங்களுக்கும் எங்கள் வாழ்த்துகள்.

Avargal Unmaigal said...

இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்

priyasaki said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் மனோஅக்கா.
தெரியாத தகவல்கள் அறிந்தது கொண்டேன். நன்றி

முற்றும் அறிந்த அதிரா said...

இனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள் மனோ அக்கா.

மனோ சாமிநாதன் said...

வாழ்த்துக்கள் அளித்த அன்புள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றி!