Saturday 21 April 2018

பாட்டி வீடு!!

சின்ன வயதில் தாத்தா, பாட்டி வீடென்றால் எல்லோருக்குமே அந்த நினைவுகள் இளம் பருவத்தின் கவலையில்லா, மகிழ்ச்சிகரமான நாட்களைக்கொண்டதாக மட்டுமேயிருக்கும். அதனால் இந்தப் பெயரைப்பார்த்ததும் எல்லோருக்கும் ஆச்சரியமாக இருக்கும். உண்மையில் இது சென்னையில் சமீபத்தில் தோன்றியிருக்கும் சைவ உணவகம்.

முகப்பு
என் மகன் துபாயிலிருந்து அனுப்பியிருந்த தகவல் பார்த்து, துபாய் புறப்படுவதற்கு முன் முதல் நாள் இந்த உணவகம் சென்றோம்.
பழமையும் புதுமையுமான தோற்றம். தி.நகரில், பாகீரதி அம்மாள் தெருவில் அமைந்திருக்கிற்து இந்த அழகிய உணவகம். முன்கூட்டியே பதிவு செய்திருந்தால் மட்டுமே அங்கே சாப்பிட முடியும்.

உள்ளேயிருந்து வாசல், பதிவு செய்யும்/உள்ளே அனுப்பும் வரவேற்பாளர்
காலையிலேயே பதிவு செய்த போது,  “12-1.30 ஸ்லாட்டில் சாப்பிடுகிறீர்களா அல்லது 1.30-3.00 ஸ்லாட்டில் சாப்பிடுகிறீர்களா, ஏனென்றால் சாப்பிட்டு முடிக்க எப்படியும் ஒன்றரை மணி நேரமாகி விடும் “ என்றார்கள். நாங்கள் 12 மணிக்கு பதிவு செய்து விட்டு சாப்பிடச் சென்றோம்.

ஆனால் சாப்பாட்டிற்கு இன்னும் சிறிது நேரமாகும் என்று சொல்லி முன்புறம்


இருந்த கொட்டகையில் அமர வைத்து மணம் மிக்க மோர் குடிக்கக் கொடுத்தார்கள். அதன் பின் உள்ளே சாப்பிட நுழைந்தோம்.

உணவகம் செல்லும் நுழைவாயில்!!
பழமையும் புதுமையும் கலந்த அலங்காரம்.






கலர் கலராய் ஜிகினா வேலைப்பாடு அமைந்த இளைஞர்கள் பரிமாறினார்கள். முதலில் WELCOME DRINK வந்தன. இளநீர் பானகம், தர்பூசணி வெள்ளரி சாறு, மாங்காயிலிருந்து செய்யப்பட்ட ‘ பன்னா’ எனும் சாறு என்று சிறு கிண்ணங்களில் வந்தன. அவை குடித்து முடித்ததும், சோளமும் சீஸும் கலந்து செய்த பகோடா ஒன்று, ஜவ்வரிசி வடை ஒன்று, பிடி கொழுக்கட்டை ஒன்று சிறு கிண்ணங்களில் வந்தன.


அவை உண்டு முடித்ததும் ஒரு சப்பாத்தி முருங்கைக்காய் மசாலாவுடனும் ஒரு இடியாப்பம் சொதியுடனும் வந்தன.


அதன் பிறகு குதிரைவாலி அரிசியில் செய்த பிஸிபேளா சாதம் வடகங்களுடனும் உருளைக்கிழங்கு வருவலுடனும் வந்தன.
அவற்றை சாப்பிட்டு முடித்ததும் வேப்பம்பூ ரசமும் தக்காளி ரசமும் இரு கிளாஸ் தம்ளர்களில் ஆவி பறக்க வந்தன. இவற்றின் சுவை பிரமாதம்!


அதன் பின் பாட்டி வீட்டு தட்டு எனப்படும் MAIN COURSE வந்தது. ஒரு கப் சாதம், பலாக்காய் பொரியல், கிள்ளிப்போட்ட சாம்பார், வாழைக்காய் வறுவல், கடைந்த கீரை, மாம்பழ மோர்க்குழம்பு, பருப்பு துகையல், முட்டைக்கோஸ் பருப்பு உசிலி, தயிர் சாதம் எல்லாம் வந்தன.

கை கழுவ வால் பாத்திரத்தில் தண்ணீரும் பித்தளை போகிணியும்!!
சாப்பிட்டு முடிந்ததும் காஃபி மூஸ், கருப்பட்டி ஹல்வா, இளநீர் பாயசம் போன்ற இனிப்பு வகைகளுடன் இறுதியாக ஆவி பறக்கும் ஃபில்டர் காஃபி அதி அற்புதமான சுவையுடன்!




நிறைகள்:

எல்லா உணவு வகைகளும் தரத்துடன் ருசியாகவே இருந்தன. மற்றவற்றின் ருசிக்கு முன் சாப்பாடு, காய்கறி வகைகள் கொஞ்சம் ருசி கம்மி தான்! ஒரு வித்தியாசமான அனுபவம்!

குறைகள்:

ஒன்று முடிந்து இன்னொன்று வருவதற்கு நிறைய நேரம் பிடித்தது. அதற்குள் நமது பசியும் பறந்து விடும்போல இருந்தது! என் கணவருக்கு பொறுமை பறி போய் விட்டது. சாப்பிடுவதற்கு ஒன்றரை மணி நேரம் என்பதை அவர்களால் பொறுத்துக்கொள்ளவே முடியவேயில்லை. எப்போதும் எதையுமே, நேரம் உள்பட வேஸ்ட் பண்ணாதவர்கள். அவர்களை சமாதானப்படுத்துவது தான் பெரிய வேலையாக இருந்தது.
விலை கொஞ்சம் தான்! ஒரு சாப்பாடு ரூ 891. குழந்தைகளுக்கு பாதிக்கட்டணம் என்று சொன்னதாக நினைவு. முன்கூட்டியே விசாரித்துக்கொள்ள வேண்டும்! வயதானவர்களுக்கு இந்த சாப்பாடு கொஞ்சம் அதிகம்!

16 comments:

KILLERGEE Devakottai said...

பிரமாண்டமாகத்தான் இருக்கிறது நாகரீக வளர்ச்சி எல்லாம் பணம் படுத்தும்பாடு... பயனுள்ள தகவலை பகிர்தமைக்கு நன்றி.

வெங்கட் நாகராஜ் said...

இந்த மாதிரி Concept-ல் நிறைய உணவகங்கள் இந்தியாவில் வர ஆம்பித்திருக்கிறது. குஜராத்தில் இப்படியான உணவகம் ஒன்றில் சாப்பிட்டு இருக்கிறேன். ரொம்பவே நன்றாக இருந்தாலும் விலை கொஞ்சம் அதிகம் தான்.

அத்தனையும் சாப்பிடவும் முடியாது என்பதையும் சொல்ல வேண்டும்.

தி.தமிழ் இளங்கோ said...

'பாட்டி வீடு' என்ற தலைப்பைப் பார்த்ததும், மலரும் நினைவுகளாகத் தான் இருக்கும் என்று நினைத்து விட்டேன். எல்லாமே புதுமைதான். புதிய தகவலும் கூட.

ஸ்ரீராம். said...

எங்கள் வாட்ஸாப் க்ரூப்பில் இதைப் பகிர்ந்திருந்தேன். பார்க்க, படிக்க நன்றாக இருக்கிறது. விலை சற்று அதிகம்!

Yarlpavanan said...

படங்கள், குறிப்புகள் அருமை
உணவு நாவூற வைக்கிறதே!

கரந்தை ஜெயக்குமார் said...

விலை அதிகமாகத்தான் தோன்றுகிறது

கோமதி அரசு said...

இவ்வ்வளவு அயிட்டங்களை நம்மால் சாப்பிட முடியாது என்பாதால் தான் நேரம் கழித்து ஒவ்வொன்றும் கொடுக்கிறார்கள் போலும். இத்தனையும் சாப்பிட முடியாது, அவ்வளவு நேரம் காத்து இருக்க முடியாது.

ஏதாவது பேசிக் கொண்டும், அதை கேட்டுக் கொண்டும் இருக்க ஆசைபடுபவர்கள் வெயிட் செய்து சாப்பிடலாம்.(சிறியவர்கள்) பெரியவர்களுக்கு முடியாது.

படங்கள் அழகு.

Kasthuri Rengan said...

அருமையான ஹோட்டல்
புதிதாக ஆரம்பிக்கும் பொழுது தாமதம் இருக்கும்தான்

மனோ சாமிநாதன் said...

இனிய க‌ருத்துரைக்கு அன்பு நன்றி கில்லர்ஜி!

மனோ சாமிநாதன் said...

உண்மை தான் வெங்கட்! இந்த மாதிரி conceptல் வித்தியாசமான சாப்பாட்டு வகைகள் வெவ்வேறு உணவகங்களில் பரிமாறுகிறார்கள்! நீங்கள் சொன்ன மாதிரி அத்தனை வகைகளையும் சாப்பிட முடியவில்லை. வ‌யது குறைவானவர்கள் நிறைய சாப்பிட முடியும் என்று தோன்றுகிறது.
கருத்துரைக்கு அன்பு நன்றி வெங்கட்!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் இளங்கோ!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி ஸ்ரீராம்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் இனிய பாராட்டிற்கும் அன்பு நன்றி சகோதரர் யாழ்ப்பாவணன்!

மனோ சாமிநாதன் said...

விலை அதிகம் தான் சகோதரர் ஜெயக்குமார்! முதலில் இந்த உண‌வகம் செல்ல மறுத்து விட்டேன். என் மகனின் வற்புறுத்தலுக்குப் பிறகு தான் சென்றோம்!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கும் பராட்டிற்கும் அன்பு ந்ன்றி கோமதி அரசு!!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கு அன்பு ந்ன்றி சகோதரர் மது!