Sunday, 21 January 2018

குடுமியான்மலை!!!

ரொம்ப நாட்களாக போக வேன்டுமென்று நினைத்த கோவில். மூன்று மாதங்களுக்கு முன்பு தான் செல்ல முடிந்தது. ஆனால் உண்மையில் இத்தனை சிறப்பு வாய்ந்ததாக இந்தக்கோவில் இருக்குமென நான் நினைத்ததில்லை. செல்வதற்கு முன் குடுமியான்மலைக் கோவிலைப்பற்றிய குறிப்புகளை எடுத்த பிறகும் சரி, நேரில் அந்தக்கோவிலைப்பார்த்தபோதும் சரி அதன் சிறப்புகள் என்னை பிரமிக்க வைத்தன! மலை மேலுள்ள கோவில்களை மட்டும் பார்க்க இயலவிலை. இப்போது நேராகக் கோவிலுக்குச் செல்லலாம்.

குடுமியான்மலை புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகாவில் இருக்கும் ஒரு சிற்றூர். புதுக்கோட்டை திருச்சி சாலையில் 20 கிலோ மீட்டர் தூரத்தில் விராலி மலை வழியாக இந்த சிற்றூரை சென்றடையலாம்.இந்த ஊர் முழுதும் ஒரு மலைக்குன்றைச் சுற்றி அமைந்துள்ளது. அந்தக் குன்றின் அடிவாரத்தின் கிழக்குப் பகுதியில்தான் புகழ் பெற்ற குடுமியான்மலை கோயில்வளாகம் அமைந்துள்ளது.மலையடிவாரத்திலுள்ள பெரிய கிணற்றில் ஒரு பொருளைப் போட்டால் மலைக்கு மறுபுறம் உள்ள கிணற்றில் அதை எடுக்கலாம் என்ற கதை இந்தப் பகுதியில் நிலவுகிறது. இதை அண்ணன் கிணறு, தம்பி கிணறு என்கிறார்கள்.

கோவிலுக்கு முன் உள்ள நந்தி மண்டபம். தற்போது நந்தியின்றி புனரமைப்பு வேலைகள் நடைபெற்று வருகின்றன.
'பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி' என்னும் பாண்டிய மன்னனின் ஆட்சியின்கீழ் இந்த ஊர் இருந்தது. இந்த ஊரில் இருந்துகொண்டு இவன் யாகம் செய்ததால் இவனைக் 'குடுமிக் கோமான்' என்று போற்றி மகிழ்ந்தனர். இவன் சிறந்த கொடையாளி. பெரும்வழுதி காலத்திலிருந்து இந்த சிற்றூர் குடுமி என்றழைக்கப்பட்டது. பின் பாண்டிய மன்னர்கள் அரசாண்ட காலத்தில் இந்த ஊர் திருநாலக்குன்றம் என்றழைக்கப்பட்டது. இரண்டாம் ராஜ ராஜ சோழன் காலத்தில் சிகை நல்லூர் என்று இவ்வூரின் பெயர் மாற்றியமைக்கப்பட்டது. நவக்கிர‌கங்களின் அடிப்படையில் சனி ஸ்தலமாக கொள்ளப்பட்டுள்ள தலம்.  தற்போது குடுமியான் மலை என்றும் அழைக்கப்படுகிறது.

நுழைவாயில்
சனீஸ்வரனால் சோதனை மிகுந்து காணப்பட்ட காலத்தில் நளன் இத்தலம் வந்து சிகாநாதரை வணங்கி அருள் பெற்றான் என்பது புராண காலக் கதை.



இத்திருக்கோயில், குன்றின் அடிவாரத்தில் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. குன்றின் மேல், அதன் அருகில் என மொத்தம் நான்கு கோயில்கள் அமைந்துள்ளன. அவற்றுள் ஒரு குடைவரைக் கோயிலும், கலை நயம் மிக்க சிலைகளை உடைய சிகாநாதசுவாமி கோயில் என்ற பெரிய சிவன்கோயிலும் அடங்கும். இம்மலைமீது குலசேகரபாண்டியன் காலத்தில் கட்டப்பட்ட முருகன்கோயில் ஒன்று உள்ளது. இது எழுநூறு ஆண்டுகள் பழமையானது.



குடைவரைக் கோயிலில் காணப்படும் இசைக் கல்வெட்டுகள், இந்திய இசை வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகும். குடுமியான்மலையில் ஏறக்குறைய 120 கல்வெட்டுகள் உள்ளன.இந்தக் கல்வெட்டுகள், குடுமியான்மலை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளின் வரலாற்றை உறுதிசெய்ய உதவுகின்றன. இசைக் கல்வெட்டுகளும், பிற பாண்டியக் கல்வெட்டுகளும் (ஏழு-எட்டாம் நூற்றாண்டு), குடுமியான்மலைக் கோயில் மற்றும் நகரமைப்பின் தொடக்கத்தை ஏழாம் நூற்றாண்டின் ஆரம்பத்திற்கு இட்டுச்செல்கின்றன.



சிற்பக்கலையில் சிறந்து விளங்கும் குடுமியான்மலை நிறைய மக்களுக்கு சென்றடைந்துள்ளதா என்று தெரியவில்லை. இத்திருக்கோயிலின் பழமையினால், சிற்பங்களின் செழுமையினால் இந்திய தொல்பொருள்துறையின் கீழ் கொண்டுவந்துள்ளனர். தற்போது இங்கு திருக்கோயிலை செப்பனிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.



திருக்கோயில் கோபுர வாசலை தாண்டி, உள்ளே உள்ள மண்டபத்தில் அத்தனைவிதமான சிற்பங்களின் அணிவகுப்பு. அத்தனை சிலைகளிலும் அப்படி ஒரு தத்ரூபம். குதிரை மேல் அமர்ந்த வண்ணம் உள்ள வீரனின் சிலை கல்கி அவதாரமாகவே எண்ணப்படுகிறது



மயில் மேல் அமர்ந்த ஆறுமுகனின் சிற்பம்.



இராவணனின் பத்து தலை வடிவ சிற்பம்.



திருக்கோயில் பிரகாரத்தினை சுற்றி வரும் போது, மலையின் மேல் ஏறிப் பார்க்கவேண்டிய அவசியமில்லாமல் பிரகாரத்தில் இருந்தே அறுபத்துமூன்று நாயன்மார்களின் வடிவங்கள், ரிஷப வாகனத்தின் மேல் சிவன்,பார்வதி வடிவம் மலையில் செதுக்கப் பட்டுள்ள அற்புதம். பொதுவாக எல்லா சிவன் கோயில்களிலும் பிரகாரத்தில்தான் இந்த அறுபத்துமூவர் சிலைகளை காணும் வாய்ப்பு நமக்குக் கிடைக்கும். அதுவும் ஒரே நேரத்தில் காண முடியாத வண்ணம் நீண்டு காணப்படும். ஆனால் ஒரே பார்வையில் அத்தனை நாயன்மார்களையும் ரிஷபத்தில் அமர்ந்த சிவன் பார்வதி, என அனைவரையும் பார்க்க முடிவது தமிழகத்தில் இந்தக் கோயிலில் மட்டும்தான். இது ஒரு சிற்ப அதிசயம்.

இணையத்திலிருந்து எடுத்தது.
முகப்பு மண்டபத்தை அடுத்து ஆயிரங்கால் மண்டபம் உள்ளது.  இவற்றில் தற்போது ஆயிரத்திற்கும் குறைவான தூண்களே உள்ளன.  எஞ்சிய தூண்கள் காலத்தில் சிதைந்திருக்கலாம் என அறிய முடிகின்றது.



முகப்பு மண்டபமும், ஆயிரங்கால் மண்டபமும் நாயக்க மன்னர்கள் காலத்தில் திருப்பணி செய்யப்பட்டவை என கருதப்படுகின்றது. திருக்கோயில் முழவதும் அத்தனை சிலைகளும் நிறைய இடங்களில் சிதிலமடைந்துள்ளன.

திருத்தல வரலாறு: [ [இணையத்திலிருந்து ]

முன்னொரு காலத்தில் இக்கோயில் அர்ச்சகராக இருந்த ஒருவர் சிவனுக்கு நாள்தோறும் தனது பணிகளை செய்து கொண்டிருந்தார். அந்நிலையில் ஒருநாள் இரவு இறைவனுக்கு நடக்கும் அர்த்தஜாம பூஜைக்கு அரசர் வர கால தாமதம் ஏற்படவே, சுவாமிக்கு வைத்திருந்த பூவினை தனது காதலிக்கு எடுத்துச் சென்று கொடுத்துவிட்டார். திடீரென அரசர் கோயிலுக்கு வரவே என்ன செய்வதென்று தெரியாமல், அப்பெண்ணிடம் கொடுத்த பூவினை திரும்ப எடுத்து வந்து இறைவனுக்கு சூட்டி பூஜை செய்து மன்னனுக்கு பிரசாதமாகக் கொடுத்தார். அப்போது அந்தப் பூவில் ஒரு முடி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்ற அரசர் இது என்ன என்று வினவினார் மன்னர் அர்ச்சகரிடம்.

என்ன செய்வதென்று தெரியாமல் விழித்த அர்ச்சகர் அது, சிவனின் குடுமியில் இருந்து வந்த முடிதான் எனவும், இக்கோயில் சிவனுக்கு குடுமி உள்ளது எனவும், அர்ச்சகர் கூறினார். சந்தேகம் விலகாத மன்னர் இன்று இரவு தான் இங்கேயே தங்க உள்ளதாகவும், விடியற்காலை சன்னதி திறந்ததும், தனக்கு இறைவனின் குடுமியை காட்டவேண்டும் எனவும், கட்டளை இட்டார். இல்லையெனில் அடுத்த நாள் சிரச்சேதம் செய்யப்படுவாய் என்றும் ஆணையிட்டார். அரசர் சொன்னது போல அங்கேயே தங்கியும் விட்டார். தான் எத்தனை பெரிய தவறு செய்து விட்டோம் என்பதை உணர்ந்த அர்ச்சகர், முக்கண்ணனின் காலடியினைப் பிடித்து தன்னை இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து காக்கும்படி வேண்டினார். அவர் முன் தோன்றிய பெருமான், ''நீ உன் தவறை உணர்ந்ததால் வெறும் மூன்று நாழிகை மட்டும் நான் குடுமியுடன் இருப்பேன், அதற்குள் நீ உன்னைக் காப்பாற்றிக் கொள்'', என்று கூறி மறைந்தார்.

அடுத்த நாள் காலை மன்னனனிடம் சிவனுக்கு குடுமி உள்ளது என்பதைக் காண்பித்தார் அர்ச்சகர். ஆனாலும் சந்தேகம் நீங்காத அரசர் குடுமியை இழுக்த்துப் பார்த்தார். இழுத்த வேகத்தில் சிவனின் தலையில் இருந்து இரத்தம் பீறிட்டது. இதனைக் கண்ட அனைவரும் அதிர்ச்சியுற்றனர். மன்னரும் சிவனின் தலையில் குடுமி இருப்பது உண்மைதான் என்பதை உணர்ந்து, சுவாமி தன்னை மன்னித்தருள வேண்டினார். தன் கருணை உள்ளத்துடன் அனைவரையும் மன்னித்தருளிய இறைவன் இது தனது திருவிளையாடல் என்பதையும் அனைவருக்கும் உணர்த்தினார். அன்று முதல் அழகிய குடுமியுடன் காணப்படுகிறார் இக்கோயில் சிவபிரான்.

மேலும் கோவிலைப்பற்றிய செய்திகள்:

சங்கீதம் பற்றிய விதிமுறைகள் எழுதப்பட்ட கல்வெட்டுக்கள் இக்கோயிலில் உள்ளது. அவை கிரந்த எழுத்தில் காணப்படுகின்றன. ருத்ராச்சாரியார் என்பவரின் சீடரான பரம மகேஸ்வரன் என்ற மன்னன் இந்த கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள ராகங்களைப் பாடியுள்ளதாக வரலாறு கூறுகிறது.



கற்கோயிலின் பின்புறம் அமைந்துள்ள குடைவரைக் கோயில் அமைந்துள்ள நிலப் பகுதியை அப்போது ஆண்ட அரசர் ஏலம் விட நினைத்தார். ஏலம் விட்ட பணத்தில் அம்மனுக்கு தனிக் கோயில் கட்ட நினைத்தார் அரசர். இதனைக் கேள்வியுற்ற உமையாள்நாச்சி என்ற தேவதாசி தன்னிடம் இருந்த நகைகள் மற்றும் நிலப் பத்திரங்களை அரசரிடம் கொடுத்து கோயில் நிலத்தை ஏலம் விடவேண்டாம் எனவும், தன்னிடம் உள்ள இந்த சொத்துக்களை வைத்து அம்மனுக்கு தனிக் கோயில் கட்ட வேண்டியுள்ளார். இதனை ஏற்ற அரசர் அந்தப் பெண்மணி கொடுத்த செல்வத்திலேயே தாயாருக்கு தனிக் கோயில் அமைத்து அப்பெண்ணின் பெயரிலேயே திருக்காமக் கோட்டத்து அருவுடை மலைமங்கை நாச்சியார் என்ற பெயரிலேயே குடைவரைக் கோயில் தாயாரின் பெயர் விளங்கியது. இப்பெயர் மறைந்து பிற்காலத்தில் சௌந்தரநாயகி என்ற பெயருடன் விளங்குகிறது. குடைவரைகோயில் பெருமான் திருநலத்து நாயனார் திருமேற்றளி என்ற பெயருடன் விளங்குகிறார்.





22 comments:

ஸ்ரீராம். said...

கோவிலைப் பார்க்கும் ஆவல் வருகிறது. பிப்ரவரி 2,3,4 தேதிகளில் ஒரு வாய்ப்பு இருக்கிறது. முடிகிறதா என்று பார்க்கிறேன்!

KILLERGEE Devakottai said...

குடுமி புராணம் ஆச்சர்யமூட்டுகின்றது சகோ.

துரை செல்வராஜூ said...

குடுமியான் மலைக்கு எம்மையும் அழைத்துச் சென்று தரிசனம் செய்யவைத்தமைக்கு நன்றி..
அழகிய படங்கள்.. நேர்த்தியான தகவல் தொகுப்பு..

வாழ்க நலம்..

தி.தமிழ் இளங்கோ said...

தல புராணம், வரலாற்று குறிப்புகள் மற்றும் விவரமான படங்கள் என அருமையான பதிவு. முருகன், இராவணன் கற்சிற்பங்களைக் கணடவுடனேயே இந்த கோயிலின் சிறப்பை உணர்ந்து கொள்ள முடிந்தது. சந்தர்ப்பம் அமையுமானால் நானும் இந்த தலத்திற்கு சென்று வரலாம் என்று இருக்கிறேன்.

// மலை மேலுள்ள கோவில்களை மட்டும் பார்க்க இயலவிலை. //

என்ற காரணத்தைச் சொன்னால், நான் செல்லும் போது இந்த தகவல் எனக்கு உதவியாக இருக்கும்.

மனோ சாமிநாதன் said...

அவசியம் சென்று பார்த்து வாருங்கள் சகோதரர் ஸ்ரீராம்! நடை சாத்தும் நேரம் 12 மணி என்கிறார்கள். அதனால் காலையிலேயே நல்ல வெளிச்சத்தில் செல்வது நல்லது. புதுக்கோடை நகரினுள்ளேயே திருக்கோகர்ணம் கோவிலும் உள்ளது. அதுவும் சிற்ப நுணுக்கத்தில் நம்மை அசத்துகிறது.

மனோ சாமிநாதன் said...

எனக்கும் இந்த தலபுராணம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது கில்லர்ஜி! வருகைக்கு அன்பு நன்றி!!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி சகோதரர் துரை.செல்வராஜ்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் இனிய பாராட்டிற்கும் அன்பு நன்றி சகோதரர் தமிழ் இளங்கோ!

மலை மேலே ஏறுவதை பற்றி யோசித்த போது சிலர் நடை சாத்தும் நேரம் என்றார்கள். அப்போது 11.30 ஆனது. 12 மணிக்கு நடை சாத்துவார்கள் என்றார்கள். எனக்கு முழங்கால் வலி இருந்ததால் இந்த ரிஸ்க் வேண்டாம் என்று என் கணவர் தடுத்து விட்டார்கள்.

அதற்கு முன் புதுக்கோட்டையிலேயே நகரினுள்ளேயே திருக்கோகர்ணம் எனும் சிற்பங்கள் அழகுற விள‌ங்கும் கோவில் உள்ளது. அதைப்பார்க்கத்தவறாதீர்கள். இது ஒரு பெரிய் பாறையில் செய்த பெரிய‌ குடவரைக்கோயில் என்பதோடு, இதற்கு மாடிப்பகுதியும் அதிலும் தெய்வங்களின் உருவங்களும் உண்டு என்பது ஆச்சரியமான விஷயம்.

இளமதி said...

வணக்கம் அக்கா!

வியப்பிலாழ்த்தியது கோயில் வரலாறு!
படங்களும் தெள்ளத்தெளிவாய்ப் பதிவிற்குச் சிறப்புச் சேர்த்திருக்கிறது!
அத்தனையையும் பார்த்துப் படித்து அறிந்துகொண்டேன்.
இப்படியாயினும் இவையெல்லாம் எனக்கும் அறியக் கிடைத்ததே!..:)

அரிய அருமையான பதிவும் பகிர்வும் அக்கா!
நன்றியுடன் நல் வாழ்த்துக்கள்!

Anuprem said...

மிக அழகிய படங்களுடன்....

சிறப்பான தகவல்கள் ....

நன்றி....

நெல்லைத் தமிழன் said...

"குடுமியான் மலை" பேரைக் கேள்விப்பட்டிருக்கிறேனே தவிர, அத் தலத்தைப் பற்றி நிறைய விஷயங்களை இந்தப் பதிவில்தான் அறிந்துகொண்டேன். வாய்ப்பு கிடைக்கும்போது தரிசனத்துக்குச் செல்லவேண்டும்.

ராமலக்ஷ்மி said...

அருமையான பகிர்வு. தகவல்களுக்கும் படங்களுக்கும் நன்றி.

Chitra J said...

Wow. Very nice post. Time traveled to Thanjai and then to Pandiya Period in few minutes. What a glory period and how pious the people were irrespective of their profession and how they were treated with humility!! Its heart breaking to think where we lost all those nobilities. Thank you for the very nice write up.

சிகரம் பாரதி said...

தகவல்களும் விளக்கப் படங்களும் சிறப்பு. தொடருங்கள்...

மேகராகம்
https://www.sigaram.co/preview.php?n_id=263&code=XIsLcwYo
பதிவர் : கி.பாலாஜி
#sigaramco #tamil #poem #kbalaji #சிகரம் #சிகரம்CO #கவிதை #தமிழ் #பாலாஜி

மனோ சாமிநாதன் said...

விரிவான பாராட்டுரைக்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி இளமதி!!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கு அன்பு நன்றி அனுராதா பிரேம்குமார்!!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் விரிவான கருத்துரைக்கும் அன்பு நன்றி நெல்லைத்தமிழன்!!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி ராமலக்ஷ்மி!!

மனோ சாமிநாதன் said...

Thanks a lot for the nice feedback Chithra!

மனோ சாமிநாதன் said...

முதல் வருகைக்கும் இனிய பாராட்டிற்கும் அன்பு நன்றி சிகரம் பாரதி!!

Thulasidharan V Thillaiakathu said...

குடுமியான் மலை பற்றிக் கேட்டதுண்டு. தகவல்களும் அறிந்ததுண்டு. என்றாலும் தங்கள் பதிவு நேரடியாகச் சென்று கண்டு வந்து எழுதும் பத்வு இல்லையா... அருமை படங்களும் அழகு. தகவல்களும் அப்படியே! சென்று வரும் ஆவல் உண்டு. நாங்கள் புதுக்கோட்டைப் பதிவர் விழா சென்ற போது போலாம் என்றால் நேரம் இல்லாமல் போனது. நல்ல விவரங்கள் சகோ/மனோ அக்கா...

மிக்க நன்றி பகிர்விற்கு

'பரிவை' சே.குமார் said...

கோவிலைக் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்ற ஆவல் வந்துவிட்டது அம்மா...
இந்த முறை ஊருக்குப் போகும்போது செல்ல வேண்டும்.