Monday, 26 December 2016

உலகின் இன்னொரு அதிசயம்!!!



உலகிலேயே மிகப்பெரிய, பரந்த தீம் பார்க் ஒன்றை கடந்த ஆகஸ்ட் மாதம் துபாயில் திறந்துள்ளார்கள். அது தான்

 IMG WORLDS OF ADVENTURE!!!

ஒரு நாளைக்கு 20000 பேர்கள் வருகை தந்து ரசிக்கக்கூடிய அளவிற்கு கொள்ளளவு உடைய பிரம்மாண்டமான பார்க்காக இது விளங்குகிறது. அமீரகத்தின் மிகப்பெரிய செல்வந்தர்களான கலதாரி குழுமம் இதனை பெருஞ்செலவு செய்து நிர்மாணித்திருக்கிரார்கள். இன்னும் ஐந்து வருடங்களில் இது இன்னும் மிகப்பெரிய தீம் பார்க்காக உருவெடுக்கும் என்கிறார்கள்.ஒரு லட்சத்து நாற்பதாயிரம் சதுர மீட்டர் இடத்தில் இந்த கனவுலகம் அமைந்திருக்கிறது.  





இதன் கூரை சவுண்ட் ப்ரூஃப் செய்யப்பட்டது. நிறைய இடங்கள் அங்கங்கே அமரவும் உணவகங்கள் அங்கங்கே உண்ணவும் இருக்கின்றன.

ENTRANCE!
உலக நாடுகளின் அத்தனை பேர்களும் சாப்பிடக்கூடிய வகையில் அவை அமைந்துள்ளன. சில இடங்களில் மொபைல், காமிரா அனுமதிக்கப்படுவதில்லை. அவற்றையும் உடமைகளையும் பத்திரமாக வைத்து பாதுகாக்க அங்கங்கே கட்டணத்துடன் கூடிய லாக்கர்களையும் அமைத்திருக்கிறார்கள். உள்ளே முழுவதுமாக குளிர்ப்பதனம் செய்யப்பட்டிருப்பதால் அதுவும்  சில இடங்களில் மிகவும் சில்லென்று இருப்பதால் ஸ்வெட்டர் தேவைப்படுகிறது. அங்கங்கே கேரளாவின் 'டீக்கடை' கூட சூடாக டீ குடிப்பதற்கும் சமோசா உண்பதற்கும்  இருக்கிறது!



நுழைவுக்கட்டணம் 300 திர்ஹம்ஸ் [ கிட்டத்தட்ட 6000 ரூபாய்] பண்டிகை காலங்களிலும் முக்கியமான நாட்களிலும் 50 அல்லது 100 திரஹம்ஸ் நுழைவுக்கட்டணத்தில் குறைக்கிறார்கள். காலை பத்து மணிக்கு உள்ளே நுழைந்தால் இரவு ஒன்பது வரை அங்கே விளையாடிக்கொண்டிருக்கலாம்! ஒவ்வொரு விளையாட்டிற்கும் ஷோவிற்கும் சிறுவர்கள் இத்தனை அடி உயரம் இருக்க வேன்டும், இத்தனை வயதிற்கு மேற்பட்டு இருக்க வேன்டும் என்பது போல நிறைய சட்ட திட்டங்கள் எல்லாம் உண்டு!



இது 4 உலகமாக பிரிக்கப்பட்டிருக்கின்றன.

முதலாவது டிஸ்னி மார்வெல் எனப்படுவது.  [ Marvel zone ]





 இதில் அமெரிக்காவில் உள்ள டிஸ்னிலான்டுடன் இணைந்து டிஸ்னி உலகமாய் பல வித விளையாட்டுக்கள், பொழுது போக்குத் திட்டங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. தெருக்கள் பழங்கால அமெரிக்க நகரத்து சாலைகள் வடிவில்! ஸ்பைடர்மேன், Incredible HULK போன்ற சாகச வீரர்களை தியேட்டரில் அமர்ந்து பார்த்து ரசிக்கலாம். அவர்கள் சாகசங்களை ரசிக்கலாம். நாங்கள் Incredible HULK ஐப் பார்க்கச் சென்றோம்.



இரு வட்டங்களான சோபாவில் உட்கார்ந்ததும் சீட் பெல்ட் போட்டிருக்கிறோமா என்று செக்யூரிட்டிகள் வந்து பரிசோதித்த பிறகு ஷோ ஆரம்பிக்கிறார்கள். கும்மிருட்டில் பறந்து பறந்து 3டி ல் சண்டை போடுகிறார் Incredible HULK!! . சோஃபா அப்படியே சுற்றுகிற‌து. வட்டமடிக்கிறது. அந்த அனுபவம் பிரமிப்பாய், அசத்தலாய் மிக அருமை!

என் பேரன்!
[CARTOON NETWORK ]

அடுத்தது கார்ட்டூன் நெட்வொர்க்குடன் இணைந்து செய்திருக்கிறார்கள்.
 மிகப்பெரிய தியேட்டர், விளையாட்டுக்கள் அடங்கிய பகுதி. சிறுவர்களின் கூட்டத்தை அதிக அளவில் காணலாம் இங்கே.



மூன்றாவது Lost Valley என்ற தனி உலகம். [ LOST VALLEY]

கலதாரி என்ற அரேபிய சகோதர்கள் தங்கள் கனவுலகமாக தனிப்பட்ட முறையில் இதை நிர்மாணித்திருக்கிறார்கள். பழங்கால டயனோஸர்கள் உலகமாக பல பாகங்களாக இது அமைந்திருக்கிறது.  FORBIDDEN TERRITORY என்ற இடத்திற்குள் நாங்கள் நுழைந்தோம்.



மேற்புறம் திறந்த ஒரு பழங்கால வான் போன்ற அமைப்பில் நாங்கள் ஏறி அமர்ந்து ஸீட் பெல்ட் போட்ட‌தும் எதிரே கோட்டைக்கதவு போன்றதொரு கதவு திறக்க, உள்ளே நாங்கள் அமர்ந்திருந்த ஆட்டமாடிக் வாகனம் நுழைந்தது!.



கும்மென்ற இருட்டில் காடு. அங்கங்கே மெல்லிய வெளிச்சம். உறுமுகின்ற, பறக்கின்ற, தாவுகின்ற, விலங்கினங்கள்! டயனோஸர்கள்! மிக அருகே ராட்சஸ சிலந்திகள்! எங்கள் வாகனம் சுற்றுகிறது, சுழல்கிறது, திடீரென்று அந்த விலங்கினங்களுக்கேற்ப முன்னே ஒரு தாவல், பின்னே ஒரு பதுங்குதல்! என் பேரன் என் கைகளை கெட்டியாகப் பிடித்துக்கொண்டார். அற்புதமான இந்தப்பயணம் விசித்திரமான காட்டில் 15 நிமிடங்கள் சுற்றி விட்டு ஏறிய இடத்திற்கு வந்து சேர்ந்தது!



இது போல நிறைய உலகங்கள்!



நான்காவதாக இருப்பது IMG BOULEVARD!!

இங்கே தான் டீன் ஏஜ் இளைஞர்கள் மட்டுமல்ல, பெரியவர்களின் கூட்டமும் அலை மோதுகிறது. அதற்குக் காரணம் அங்கேயுள்ள‌ The Haunted Hotel! 

இதற்குள் நுழைந்தால் அதற்குள் இருக்கும் ஆவிகள், மயிர்கூச்செரியும் பயங்கர கூக்குர‌ல்கள், தடுமாறச்செய்யும் அனுபவங்கள் காரணமாக, 'தைரியம் உள்ள‌வர்கள் மட்டுமே உள்ளே செல்ல வேண்டும். இதய நோயுள்ளவர்கள் உள்ளே செல்லுதல் கூடாது' என்று எழுதி வைத்திருக்கிறார்கள். வரிசையில் நின்று கொண்டிருந்த‌ கூட்டத்தைப்பார்த்து விட்டு சலிப்புடன் என் மகன் வெளியே வந்து விட்டார். மகனும் மகளும் பேரனுடன் வேறு பகுதியில் விளையாடச் செல்ல, நானும் என் கணவரும் ஓய்வெடுப்பதற்காக டீயும் சமோசாவும் வாங்கிக்கொண்டு அருகிலுள்ள சிறு பார்க் போன்ற பகுதியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். திடீரென்று எங்கள் பின்னாலுள்ள கதவு திறந்தது. நடுங்கிக்கொண்டிருந்த ஒர் பெண்ணை செக்யூரிட்டி ஒருத்தரும் ஒரு பெண்ணும் கொண்டு வந்து பக்கத்து பெஞ்சில் அமர வைத்து தண்ணீர் குடிக்க வைத்தார்கள். அப்புறம் தான் தெரிந்தது அந்தப் பெண் அந்த Haunted Hotel உள்ளே சென்று பார்த்த அனுபவத்தால் பாதிக்கப்பட்டவர் என்று! ரொம்ப நேரம் நடுக்கம் குறையவேயில்லை. தெளிந்ததும் அந்தப்பெண் சின்ன சிரிப்புடன் நகர்ந்து சென்று விட்டது.
அப்புறம் இன்னொரு பெண் அதே போல்! . மூன்றாவதாக வந்த பெண் எழுந்திருக்கவே இல்லை. அழுகையும் நடுக்கமும் மிரட்சியும் நிற்கவேயில்லை. அப்புறம் ஒரு சிறு ஆம்புலன்ஸ் கொன்டு வந்து அந்தப்பெண்ணை அனுப்பி வைத்தார்கள்!!



முற்றிலும் வித்தியாசமான,  திரும்பவும் விரும்பிச் செல்லும் அனுபவமாக அமைந்தது இந்த பயணம்!!

9 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஒவ்வொன்றையும் மிகவும் ரஸித்து அருமையாகச் சொல்லியுள்ளீர்கள். உண்மையிலேயே படிக்கும்போதே எல்லாமே அதிசயமாகத்தான் தெரிகின்றன. பகிர்வுக்கு நன்றிகள்.

வெங்கட் நாகராஜ் said...

கனவு உலகம்! :) சிறப்பான தகவல்கள் பகிர்வுக்கு நன்றி.

கரந்தை ஜெயக்குமார் said...

கனவு உலகமாக மட்டுமல்ல
திகில் உலகமாகவும் இருக்கும் போலிருக்கிறது
நன்றி சகோதரியாரே

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையான தகவல்கள்... நன்றி...

Yaathoramani.blogspot.com said...

படங்களுடன் பதிவைப் படிக்க
நிச்சயம் பார்க்கவேண்டும் என்கிற
உற்சாகம் பற்றிக் கொண்டது

நுழைவுக் கட்டணம்தான்....

அற்புதமான பகிர்வுக்கு
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

கோமதி அரசு said...

உலகின் அதிசயத்தை பற்றிய விரிவான தகவலுக்கு நன்றி.
படங்கள் அருமை.

சாரதா சமையல் said...

படங்களும் பதிவும் அருமை அக்கா.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

எங்களை அழைத்துச் சென்றமைக்கு நன்றி. அருமையான புகைப்படங்கள், விளக்கங்கள்.

துரை செல்வராஜூ said...

அழகான படங்கள்.. இனிய பதிவு.. வாழ்க நலம்..