Tuesday, 18 October 2016

முத்துக்குவியல்- 43!!

தகவல் முத்து:

இன்றைய காலத்தில் கலப்படங்கள் எப்படியெல்லாம் செய்கிறார்கள் என்பதற்கு சில உதாரணக்களும் அவற்றுக்கான தீர்வுகளும்:

தரமான கடுகை கைகளில் வைத்து அழுத்திப்பார்த்தால் அதன் உட்புறம் மஞ்சளாக இருக்கும். அர்ஜிமோன் விதகள் கலக்கப்பட்டிருந்தால் கைகளில் வைத்து கசக்கிப்பார்க்கும்போது அதன் உட்புறம் வெள்ளையாக இருக்கும்.

மிளகில் பப்பாளி விதைகள் கலக்கப்படுகின்றன. மிளகை மெருகேற்றுவதற்கு மினரல் ஆயில் எனப்ப‌டும் பெட்ரோலியப்பொருள் கலக்கப்படுகிறது. முகர்ந்து பார்த்தால் மிளகு பெட்ரோல் வாடை அடிக்கக்கூடாது. 50 மில்லி தண்ணீரில் சில மிளகுகளைப்போட்டால் அது தண்ணீரில் மூழ்கினால் அவை நல்ல மிளகு. மிதந்தால் அது பப்பாளி விதை.

சீரகத்தில் குதிரை சாணமும் அடுப்புக்கரியும் கலக்கப்படுகின்றன. தனியாவிதைகளில் சல்ஃபர் ஆக்ஸைடும் மரத்தூளும் கலக்கப்படுகின்றன. மஞ்சள் தூளில் மெட்டாலிக் யெல்லோ எனப்படும் ரசாயனம் கலக்கப்படுகிறது. பால் அதிக நேரம் கெடாமலிருக்க அதில் காஸ்ட்க் சோடா, டிட்டர்ஜென்ட், யூரியா கலக்கப்படுகின்றன. மிளகாய்த்தூளில் புற்று நோயை உண்டாக்கும் சூடான் டை கலக்கப்படுகின்றன. 

தேங்காய் எண்ணெயை ஒரு கண்ணாடிக் கிண்ணத்தில் ஊற்றி வைத்தால் தடிமனான கெட்டியான படிமம் மேலே படர்ந்திருந்தால் அது நல்ல எண்ணெய். அப்ப‌டியில்லாமல் நீர்த்த நிலையில் அபப்டியே இருந்தால் அது மலிவான சில எண்ணெய்கள் கலக்கப்பட்டிருக்கும் தேங்காய் எண்ணெய்.
பஞ்சை தேனில் நனைத்து தீயில் காட்டினால் அது எரிந்தால் அது நல்ல தேன். எரியும்போது சடசடவென்று சப்தம் வந்தால் அது கலப்படத் தேன். தேனை தண்ணீரில் விட்டால் அது கரையாமல் அடிவரை சென்று தங்கினால் அது நல்ல தேன். கரைந்தால் அது வெல்லப்பாகு.

அவசிய முத்து:

நான்கு பேர் நடுவே நன்றாக நடந்து கொண்டும் பேசிக்கொண்டிருக்கும் ஒருவர் திடீரென்று தள்ளாடினாலோ, கீழே விழுந்தாலோ, அதை சாதாரணமாக எண்ணி விட வேண்டாம். அது ஒரு வேளை ஸ்ட்ரோக் ஆக இருக்கலாம். மூளைக்குச் செல்லும் இரத்தக்குழாயில் அடைப்போ அல்லது ஏதேனும் பிரச்சினைக‌ளோ இருக்கலாம்.


ஒரு சிறப்பு நரம்பு மருத்துவர் கூறுவது என்ன வென்றால், இந்த மாதிரி திடீர் தாக்குதல்களுக்குள்ளானவர்களை இனம் கண்டு உடனே மூன்று மணி நேரத்திற்குள் அவரை மருத்துவமனையில் சேர்த்து விட்டால் அவரை அதிகம் பாதிப்புகள் இல்லாமல் பிழைக்க வைத்து விடலாம் என்பதே.
சம்பந்தப்பட்டவரை முதலில் சிரிக்கச் சொல்ல வேண்டும். பின் ஒரு முழு வாக்கியத்தை சொல்லச் சொல்ல வேண்டும். அதன் பின் இரு கைகளையும் தூக்கச் சொல்ல வேண்டும். சம்பந்தப்பட்டவர் இதில் ஏதேனும் ஒன்றை செய்ய முடியாமல் கஷ்டப்ப்ட்டால் சற்றும் தாமதிக்காது அவரை உடனே மருத்துவமனையில் எமெர்ஜென்ஸியில் சேர்க்க வேண்டும். அதோடு சம்பந்தப்பட்டவர்ன் நாக்கை வெளியே நீட்டச்சொல்லி பார்க்கவும். அவர்களின் நாக்கு, பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அவர்களால் சரியாக நாக்கை நீட்ட முடியாது.

பயன் தரும் முத்து:

இரவு நேரத்தில் பயணம் செய்யும்போது இறங்க வேண்டிய இடத்தைத் தவற விட்டு விடுவோமோ என்ற கவலை இருக்கும் பலருக்கு. அதற்கு ஒரு நிவாரணம் இருக்கிறது.உங்கள் மொபைலிலிருந்து 139 என்ற எண்ணுக்கு டயல் செய்யுங்கள். அதில் கூறும் வழிமுறைகளின்படி பயண டிக்கெட்டில் இருக்கும் பி.என்.ஆர் எண்ணை பதிவு செய்யுங்கள். நீங்கள் இறங்க வேண்டிய இடம் நெருங்கியதும் உங்களுக்கு எச்சரிக்கை அழைப்பு வரும். இதனால் நீங்கள் இறங்க வேண்டிய இடம் குறித்து கவலை இல்லாமல் பயணம் செய்யலாம்.

ரசித்த முத்து:

சமீபத்தில் 'விவேக சிந்தாமணி'யைப்படித்துக்கொண்டிருந்தேன். அதில் ரசித்த ஒரு பழம் பாடல் இதோ!

குக்கலைப்பிடித்து நாவிக்
கூண்டினில் அடைத்து வைத்து
மிக்க‌தோர் மஞ்சள் பூசி
மிகு மணம் செய்தாலுந்தான்
அக்குலம் வேற தாமோ?
அதனிடம் புனுகுண்டாமோ?
குக்கலே குக்கல் அல்லால்
குலந்தன்னில் பெரியது ஆமோ?

[குக்கல்=நாய், நாவி=புனுகுப்பூனை, புனுகுநறுமணப்பொருள்

 

14 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

தகவல் முத்து:

ஒரு கிலோ மிளகு விலை ரூ. 820/-, ஒரு கிலோ சீரகம் விலை ரூ. 280, ஒரு கிலோ கடுகு விலை ரூ. 80/- என தற்சமயம் விற்கப்படுகிறது. அன்றாடம் பெரும்பாலான வீடுகளில் பாமர மக்கள் அனைவருமே சமையலுக்கு உபயோகப்படுத்தும் இவை ஒவ்வொன்றிலும்கூட கலப்படம் என்றால் நாம் என்னதான் செய்வது? கேட்கவே மிகவும் கொடுமையாக உள்ளது.

தாமதிக்காமல் இருந்தால் ஓர் மனித உயிரைக் காக்க முடியும் என்பதால் அவசிய முத்து பற்றி அனைவருமே மிகவும் அவசியமாகத் தெரிந்துகொள்ள வேண்டும்.

பயன் தரும் முத்து உண்மையிலேயே சம்பந்தப்பட்டவர்களுக்கு, குறிப்பாக இரவு நேர இரயில் பயணத்தில் மிகவும் பயனளிக்கக்கூடியதும், வரவேற்கத்தக்கதும் ஆகும்.

பயனுள்ள முத்துக்குவியல் பகிர்வுக்கு நன்றிகள், மேடம்.

பரிவை சே.குமார் said...

முத்துக்கள் அருமை....
இங்கும் மிளகு வாசமாய் இருப்பதில்லை... மலையாளிகள் பப்பாளி விதை கலந்துதான் விற்கிறார்கள்....

கரந்தை ஜெயக்குமார் said...

பயனுள்ள பதிவு
நன்றி சகோதரியாரே

Dr B Jambulingam said...

அருமையான பயனுள்ள முத்துகள். நன்றி.

துரை செல்வராஜூ said...

பயனுள்ளதாக அழகிய முத்து மாலை..

வாழ்க நலம்!..

கோமதி அரசு said...

முத்துக்குவியலில் பகிர்ந்த அனைத்தும் மிக அருமை.

அருள்மொழிவர்மன் said...

அனைத்தும் அருமை, மிகவும் பயனுள்ள முத்துக்கள்!!

கலப்படங்களைப் பற்றிக் கேட்கும்பொழுது பயமாக இருக்கிறது. யூரியா, பெட்ரோலியப் பொருட்கள் இன்னும் என்னென்னப் பொருட்களை உட்கொள்கிறோமோ? நீங்கள் குறிப்பிட்டது சரிதான், ஆனால் பொருட்களனைத்தும் பிளாஸ்டிக் உறையினுள் இருப்பதால் சோதித்துப் பார்த்து வாங்குவது சிரமம்! ப்

யதார்த்தத்தைக் கூறும் அருமையான பாடல்.

மனோ சாமிநாதன் said...

அழகான விரிவான விமர்சனத்துக்கு அன்பார்ந்த நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி குமார்!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார்!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரர் ஜம்புலிங்கம்!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரர் துரை செல்வராஜ்!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கு அன்பார்ந்த நன்றி கோமதி அரசு!

மனோ சாமிநாதன் said...

விரிவான கருத்துரைக்கும் இனிய பாராட்டிற்கும் அன்பு நன்றி அருள்மொழிவர்மன்!