Saturday, 13 August 2016

சாவி அவர்களுடன் மலரும் நினைவுகள்!

மறைந்த எழுத்தாளர் சாவி அவர்களைப்பற்றி எல்லோரும் நிறையவே எழுதி விட்டார்கள். எங்கள் இல்லத்திலும் முக்கியமாக எனது குறுகிய பத்திரிகைப்பயணத்தில் அவருக்கு முக்கிய இடம் உண்டு.



எழுபதுகளின் தொடக்கத்தில் திருமணத்திற்கு முன் நான் ஓவிய ஆசிரியையாக அரசுப்பள்ளியில் பணி புரிந்த சமயம் தினமணி கதிர் இதழ் அழகிய ஓவியங்களுடன் வாராவாரம் வெளி வந்து கொண்டிருந்தது. ஓவியங்களில் வண்ணக்கலவைகள் அத்தனை அற்புதமாக இருக்கும். சாவி அவர்கள் ஆசிரியராகப் பொறுப்பேற்ற பிறகு தான் அட்டைப்படம் அழகிய ஓவியங்களில் பிரகாசித்தது. நான் அப்போது  ' பிரிந்த பாதைகள் இணைவதில்லை' என்ற சிறுகதையை எழுதி அனுப்பியிருந்தேன். இது தான் எனது முதல் சிறுகதை! அனுப்பி ஒரு மாதத்திலேயே ஜெயராஜின் ஓவியத்துடன் என் சிறு கதை பெரும்பாலும் எந்த மாற்றங்களுக்கும் ஆட்படாமல் வெளி வந்தது. தன் முதல் குழந்தையைப்பார்த்த ஒரு தாயின் பரவசத்தில் நான் திக்குமுக்காடிப்போனேன். ஆசிரியரின் கடிதம் என்னை அடுத்த கதையை அனுப்ப உற்சாகப்படுத்தியது.

அந்தக்கதையின் தலைப்பை 'கல்யாணத்தேதியை கவனித்தேன்' என்று மாற்றி பிரசுரித்தார்கள். அந்த சமயம் தினமணி கதிரில் கறுப்பு வெள்ளை வண்ணக்கலவையில் தொடர்ந்து வரைந்து கொண்டிருந்த ஓவியர் பாலு அந்தக்கதைக்கு வரைந்திருந்தார். வாழ்க்கையின் மாற்றங்கள் என் எழுத்துப்பாதையை மாற்றின. வெளி நாட்டுக்குத் தொடர்ந்த வாழ்க்கைப்பயணம் என் எழுத்துலகப்பயணத்தை கொஞ்ச காலத்துக்குத் தள்ளி வைத்தன.

1984 என நினைக்கிறேன், சாவி அவர்கள் 'சாவி' வார இதழை ஆரம்பித்த பிறகு மறுபடியும் ஒரு சிறுகதை அனுப்பினேன். உடனேயே அது பிரசுரமாயிற்று. கூடவே சாவியில் வைத்த ஓவியப்போட்டிக்கும் ஓவியம் அனுப்பினேன். முதல் பரிசு கிடைத்தது.

சாவியில் பரிசு பெற்ற ஓவியம்
அதன் பின் வலது கை சுட்டு விரலில் ஏற்பட்ட ஒரு விபத்தால் ஓவியம், கதை எல்லாவற்றுக்கும் ஒரு நீண்ட இடைவெளி விட வேன்டியதாயிற்று.

1990 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஷார்ஜாவில் தமிழக நற்பணி மன்றம் சாவி அவர்களை விருந்தினராக அழைத்திருந்தது. மதியம் எங்கள் இல்லத்தில் விருந்து. அவருக்கு என்ன பிடிக்கும் என்று கேட்டறிந்து நிறைய பூண்டு போட்டு வற்றல் குழம்பும் கீரை கூட்டும் செய்திருந்தேன்.

சாவி அவர்கள் வலது புறம் என் கணவர், மகனுடன் நான்!!
ரசித்து, சுவைத்து சாப்பிட்டவர் என் தாயார் கையால் சாப்பிட்ட அற்புதமான உணவிற்குப்பிறகு இப்போது தான் இத்தனை சுவையாக சாப்பிடுகிறேன்' என்று அவர் மனதார பாராட்டியது என் பாக்கியமாக இப்போதும் கருதுகிறேன். அதற்கப்புறம் வீட்டிலிருக்கும் என் ஓவியங்களைக்கண்டு ரசித்தவர் என் குறுகிய கால பத்திரிகைப்பயணம் கேட்டு ஆச்சரியப்பட்டார்.



பத்திரிகைகளில் வெளி வந்த என் ஓவியங்களைப்பார்த்து விட்டு அப்போது பிரபலமாயிருந்த ஒரு ஓவியரைக்குறிப்பிட்டு ' அவர் கூட உங்கள் அளவிற்கு இத்தனை அழகாக வரைய முடியாது. முக்கியமாக நீங்கள் வரைந்த பெண்களின் விரல்கள் அத்தனை நளினமாக இருக்கிறது' என்று பாராட்டியதும் என்றும் என் நினைவில் இருக்கிறது.

உள்ள‌த்தால் பல விஷயங்களில் உயர்ந்திருந்த அந்தப்பெரியவர் என்றும் எல்லோரது நினைவிலும் நிலைத்து நிற்பார்!



























25 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

அழகான அற்புதமான மலரும் நினைவுகளை நன்கு ’சாவி’ கொடுத்துச் சொல்லியுள்ளீர்கள். ஒவ்வொன்றையும் படிக்கப்படிக்க சந்தோஷமாக உள்ளது.

மனம் நிறைந்த பாராட்டுகள். இனிய நல்வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

S.P.SENTHIL KUMAR said...

பாக்கியவான் நீங்கள்..!

கரந்தை ஜெயக்குமார் said...

மகிழ்ந்தேன்
வாழ்த்துக்கள் சகோதரியாரே

Yarlpavanan said...

அருமையான பதிவு
தொடருங்கள்

வெங்கட் நாகராஜ் said...

இனிய நினைவுகள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றிம்மா....

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

அனுபவப்பகிர்வு அருமை. இவ்வாறான பெருமனிதர்களைச் சந்திக்கும், பழகும் வாய்ப்பு கிடைப்பு அரிதே. பகிர்ந்தமைக்கு நன்றி.

தி.தமிழ் இளங்கோ said...

உங்கள் இல்லத்தில் எழுத்தாளர் சாவியுடன் சந்திப்பும், உபசரிப்பும் மகிழ்வான, பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டியவைதாம். நானும் சாவியின் வாசகன்தான். .

காமாட்சி said...

எவ்வளவு நல்ல அனுபவம். உங்களைப் பற்றியும் விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது. ஸந்தோஷமாக உணருகிறேன். சாவியின் ரஸிகைதான் நானும். அன்புடன்

அருள்மொழிவர்மன் said...

தங்களின் அருமையான நினைவுகளை பகிர்ந்தமைக்கு நன்றி!

நீங்கள் குறிப்பிட்ட `பிரிந்த பாதைகள் இணைவதில்லை` சிறுகதையை இவ்வலைப்பூவில் பிரசுரிக்கலாமே! வாசிக்க ஆர்வமாக உள்ளது.

Yaathoramani.blogspot.com said...

படிக்கும் எங்களுக்கே மிக மிக
மகிழ்வூட்டும் நிகழ்வாய் இருக்கையில்
உங்களுக்கு எப்படி இருக்குமெனச்
சொல்லத் தேவையே இல்லை

மனம் நிறைவைத் தந்த பதிவு
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

G.M Balasubramaniam said...


ஒருவரைப் பற்றித் தெரிந்து கொள்ளும்போது ஒரு அன்னியோன்யம் வளர்கிறது. அண்மையில் டாக்டர் கந்தசாமியின் பதிவில் நீங்கள் வரைந்திருந்த ஓவியம் பிரமிப்பை ஏற்படுத்தியது வாழ்த்துகள்

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கும் வாழ்த்துக்களுக்கும் அழகிய பின்னூட்டத்திற்கும் அன்பு நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!

மனோ சாமிநாதன் said...

நீங்கள் சொன்னது போல நான் பாக்கியம் செய்தவள் தான் செந்தில்குமார்!

மனோ சாமிநாதன் said...

வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார்!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கு அன்பு நன்றி யாழ்ப்பாவணன்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி வெங்கட்!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கும் அழகிய பின்னூட்டத்திற்கும் அன்பு நன்றி சகோதரர் ஜம்புலிங்கம்!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் தமிழ் இளங்கோ!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் அன்பு நன்றி காமாட்சி அம்மா!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி அருள்மொழி வர்மன்! விரைவில் ' பிரிந்த பாதைகள் இணைவதில்லை!' சிறுகதையினை இங்கே வெளியிடுகிறேன்!

மனோ சாமிநாதன் said...

அருமையான கருத்துரைக்கும் நல்வாழ்த்துக்களுக்கும் மனம் நிறைந்த நன்றி சகோதரர் ரமணி!

மனோ சாமிநாதன் said...

சகோதரர் பாலசுப்ரமணியம் அவர்களுக்கு,

என் ஓவியத்தினை ரசித்ததற்கும் தங்களின் இனிய பாராட்டுதல்களுக்கும் மனம் நிறைந்த நன்றி!

கோமதி அரசு said...

பத்திரிக்கையில் ஓவியம் முதல் பரிசு, பத்திரிக்கையில் கதைகள் என்று எப்படி இருந்து இருக்கிறீர்கள்? பன்முக திறமை வாய்ந்த உங்களுக்கு வாழ்த்துக்கள். உங்கள் மலரும் நினைவுகள் படங்கள், ஓவிய பகிர்வுக்கு நன்றி.
சாவி சாரை பற்றிய நினைவலைகள் அருமை.

சிவகுமாரன் said...

உங்களின் பன்முகத்திறமை வியக்க வைக்கிறது. குறிப்பாய் அந்த ஓவியம். மிரண்டேவிட்டேன். தங்களின் வித்தைக்கு தலை வணங்குகிறேன் மேடம்.

Thulasidharan V Thillaiakathu said...

ஓவியம் அருமை! உங்கள் பன்முகத்திறமை கண்டு வியப்பு!! உங்கள் எழுத்துலகப் பயணம் அதுவும் சாவி அவர்களுடன்!! ஆஹா அருமை...பாக்கியசாலி நீங்கள்!! வாழ்த்துகள். இப்போதும் தொடரலாமே உங்கள் ஓவியம், கதைகள் என்று....பகிர்விற்கு மிக்க நன்றி...