Tuesday, 2 August 2016

பயணங்கள் முடிவதில்லை!!!

சில மாதங்களுக்கு முன் சகோதரர் தமிழ் இளங்கோ அவர்களது வலைத்தளத்தில் பயணம் பற்றிய தொடர்பதிவு ஒன்றில் கலந்து கொண்டு அதன் கேள்விகளுக்கு பதில்கள் எழுதி பதிவு செய்து, என்னையும் அதில் கலந்து கொள்ளச் சொல்லி எழுதினார்கள். பல வித சூழ்நிலைகள் காரணமாக என்னால் இதுவரையில் அதில் பதிவெழுத இயலவில்லை. இப்போது தான் அந்தத் தொடர்பதிவிலிருந்த கேள்விகளுக்கு  பதிலெழுதுகிறேன். எனக்கு இந்த வாய்ப்பளித்ததற்கும் தொடர்பதிவு எழுதச் சொல்லி என்னை அழைத்ததற்கும் சகோதரர் அவர்களுக்கு என் மனங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

பயணம் என்றதும் உடலால் செல்லும் பயணம் உடனே நினைவுக்கு வருவதில்லை! வாழ்க்கைப்பயணம் தான் உடன் நினைவுக்கு வருகிறது! வாழ்க்கையென்னும் பயணத்தில் யாரைல்லாம் நம்முடன் கூடவே வருவார்கள் என்று நம்புகிறோமோ அவர்கள் ரயில் பயணம் மாதிரி இடையிலேயே இறங்கி விடுகிறார்கள். இவர்களுடைய பிரியமெல்லாம் நிலைக்காது என்று யாரை நினைக்கிறோமோ அவர்கள் இடையிலேயே இறங்கி விடாமல் வழித்துணையாக கூடவே இணைந்து வருகிறார்கள்! வாழ்க்கையின் விசித்திரமும் நிதர்சனமும் இது தான்!

இந்தப் பயணத்தை வைத்து எத்தனை அருமையான திரைப்படங்கள் வந்திருக்கின்றன! பாலச்சந்தரின் 'ரயில் சினேகம்' எனக்கு மிகவும் பிடித்தமான சீரியல் என்றுமே! விமானப்பயணமும் கடலில் சிறு படகுப்பயணமும் இணைந்த ' பாண்டிஷ்' என்ற பழைய பாகிஸ்தானிய திரைப்படம் என்றுமே எனக்கு மறக்க முடியாத காவியம்! விரைவில் அதை ஒரு பதிவாக எழுதுவேன். 1976ல் காலஞ்சென்ற எம்.எஸ்.விஸ்வநாதன் ' பயணம் ' பற்றி ஒரு பாடல் பாடியிருக்கிறார். அதில் வரும் சில வரிகள்...

"ஆரம்பம் பள்ளிக்கு பயணம்!பின்பு
அடுத்தது ஆசையின் பயணம்!
இளம் காதலர் கண்களில் பயணம்!அந்த
கலக்கத்தில் கண்ணீரில் பயணம்!
இறைவனும் மனிதனும் பயணம் செய்தாலே
எவரை எவர் வெல்லுவாரோ!"

கண்ணதாசன் எழுதிய பாடல் இது!

இனி கேள்விகளுக்கு பதில்கள்!

1.பயணங்களில் ரயில் பயணம் எப்போதும் அலாதி தான். உங்கள் முதல் ரயில் பயணம் எப்போது என நினைவிருக்கிறதா?

முதல் பயணம் என்பதெல்லாம் நினைவில் இல்லை. சின்னஞ்சிறு  வயதில் என் நாத்தனாரின் திருமணம் நீடாமங்கலத்தில் நடந்தது. அப்போது எனக்கு 11 வயதிருக்கும். அதன் பின் மாப்பிள்ளை வீடிருக்கும் திருவையாறு சென்று பின் தஞ்சையில் நீடாமங்கலம் செல்ல இரயிலேறியது நினைவில் எழுகிறது. எல்லோரும் என்னையும் என் தங்கையையும் பாடச் சொல்ல ' பொண்ணு மாப்பிள்ளை ஒண்ணா போகுது ஜிகு ஜிகு வண்டியிலே, பொருத்தமானதொரு ஜோடி போகுது குபுகுபு வண்டியிலே' என்ற பிரபலமான பாடலை நாங்கள் பாட, மணப்பெண் [12 வருடங்கள் கழித்து என் நாத்தனாரானார்!] கழுத்தில் மணமாலையுடன் வெட்கத்தில் தலை கவிழ, அனைவரும் கைதட்டிச்சிரித்த அந்தக் காட்சி இன்னும் பசுமையாக நினைவில் உள்ளது!                                      

 2.மறக்கமுடியாத மகிழ்ச்சியான பயணம் எது? 

திருமணம் ஆனதும் எங்களின் முதல் ரயில் பயணம் சென்னையிலிருந்து மும்பை செல்லும் தாதர் எக்ஸ்பிரஸ்ஸில் ஆரம்பித்தது. பசுமையான மரங்களும் அண்ணாந்து பார்த்து ரசித்த‌  அழகிய மலைகளும் அந்த மலைகளினூடே ரயில் மெதுவாக உள்நுழைந்து போனதும் இயற்கை அழகில் அப்படியே சொக்கிப்போய் பிரமித்து அமர்ந்திருந்தது எப்போதுமே மறக்க முடியாத விஷயம்!
3.எப்படி பயணிக்கப் பிடிக்கும்?

இளம் வயதில் ரயில் கம்பிகளில் சாய்ந்து கொண்டு   நிலவைப் பார்த்துக்கொண்டே பயணம் செய்த போது அத்தனை சுகமாக இருக்கும். அப்புறம் கண்ணாடித்தடுப்புகள். குளிர்ப்பதனம் செய்யப்பட்ட பெட்டிகள் தான் பயணம் என்றாகி விட்டது. 40 வருடங்களுக்கு மேல் வெளிநாட்டு வாழ்க்கை என்பதால் விமானப்பயணங்கள் அலுத்து விட்டது. கார்ப்பயணங்கள் என்றால் நல்ல பாட்டுக்கள் ஒலித்துக்கொண்டிருக்க வேண்டும். அப்போது தான் இயற்கை அழகை முழுமையாக ரசிக்க முடியும் எனக்கு. மாட்டு வண்டி பயணங்கள் கிராமங்களில் அத்தனை ரம்மியமாக இருக்கும். விடியற்காலை நேரத்தில்  இளங்காற்று முகத்தில் மோத, வயல்களின் நாற்றுக்கள் வாசத்தை நுகர்ந்து கொண்டே செல்லும் பேருந்து பயணங்களும் மிகவும் பிடிக்கும்!!
4.பயணத்தில் கேட்க விரும்பும் இசை?

எப்போதுமே தமிழ்த்திரையிசைக்குத்தான் முதலிடம். சிலசமயம் மலையாளப்பாடல்கள், ஹிந்திப் பாடல்கள் கேட்பதுண்டு.1965லிருந்து இன்றைய பாடல்கள் வரை தமிழின் மென்மையான பாடல்கள் எப்போதுமே என்னுடன் பயணத்தில் சிடி வடிவத்தில் வரும். பெரும்பாலும் எங்கள் காரில் போகாமல் தெரிந்தவர் ஒருவரின் காரில் தான் செல்வோம். கிளம்பியதுமே அவர் என்னிடம் ரிமோட்டைக் கொடுத்து விடுவார். நான் மாற்றி மாற்றி அவரிடம் சிடி கொடுத்துக்கொண்டிருப்பேன். இப்படித்தான் பயணம் இனிமையாக, இசையுடன் செல்லும் எப்போதும்!

 5.விருப்பமான பயண நேரம்?

விடியற்காலைப்பயணம் தான் ரசனையாக இருக்கும்! ஆனால் எங்களுக்குள் ஒரு உறுதிப்பாடு உண்டு. எங்கு பயணித்தாலும் மாலை 6 மணிக்கு மேல் பயணம் செய்ய மாட்டோம். இரவு நேரங்களைக் கட்டாயமாகத் தவிர்த்து விடுவோம்!

6.விருப்பமான பயணத்துணை?

கணவரின் துணையில் பரிவும் பாதுகாப்பும் இருக்கும். மகனின் துணையில் அன்பும் அக்கறையுமிருக்கும். தோழியருடனான உரையாடல்களில் சிரிப்பும் புரிதலுமிருக்கும். இசையில் மன நிறைவிருக்கும்!7.பயணத்தில் படிக்கவிரும்பும் புத்தகம்?

நீண்ட நேர விமானப்பயணம் என்றால் நிச்சயம் ஒரு ஆங்கில நாவல் இருக்கும். [ ஆங்கில நாவல் என்றால் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கும். தமிழ் நாவலென்றால் விரைவிலேயே முடிந்து விடும்.] நம் ஊர்ப்பயணங்கள் என்றால் புத்தகங்களைத்தொடுவதில்லை! ஆனால் கை வசத்தில் இரண்டு நாவல்கள் எப்போதும் இருக்கும்!

8.விருப்பமான ரைட் அல்லது டிரைவ்?

அப்படி எதுவுமில்லை!

9.பயணத்தில் நீங்கள் முணுமுணுக்கும் பாடல்?

நல்ல பாடல்களைக் கேட்கும்போது தானாகவே அதோடு சேர்ந்து மெதுவாகப் ஹம்மிங் பண்ணுவதுண்டு!

10.கனவுப் பயணம் ஏதாவது ?

தமிழ்நாட்டில் நிறைய கிராமங்களுக்கு பயணித்து, அங்குள்ள உண‌வு முறைகள், பழக்க வழக்கங்கள், சரித்திரப்புகழ் பெற்ற கோவில்கள் இவற்றையெல்லாம் பார்க்க வேன்டும் என்ற ஆவல் உண்டு!28 comments:

KILLERGEE Devakottai said...

பயணத்தைக்குறித்த தங்களது அனுபவத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி

வை.கோபாலகிருஷ்ணன் said...

’பயணங்கள் முடிவதில்லை!!!’ என்ற தலைப்பினில் தங்களின் எழுத்துக்கள் படிக்க சுவையாகவும் சுவாரஸ்யமாகவும் உள்ளன. பகிர்வுக்குப் பாராட்டுகள் + நன்றிகள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//பாலச்சந்தரின் 'ரயில் சினேகம்' எனக்கு மிகவும் பிடித்தமான சீரியல் என்றுமே! //

எனக்கும்தான். :)))))

துரை செல்வராஜூ said...

நல்ல பதிவு - இயற்கை வர்ணனைகளுடன்!..

வாழ்க நலம்!..

தி.தமிழ் இளங்கோ said...

தொடர்பதிவு எழுதும்போது, நீங்களும் எழுதுங்கள் என்று கேட்டுக் கொள்ளும்போது, அப்போதைக்கு எழுதுவேன் என்று சொல்லி விட்டு, நேரம் கிடைக்காமல் எழுதாமல் போனவர்கள்தான் அதிகம். நீங்கள் மறக்காமல், தொடர்பதிவை எழுதியமைக்கு நன்றி.
சுவாரஸ்யமான பதிவு. பன்னிரண்டு வருடம் கழித்து இவர்தான் நாத்தனாராக வருவார் என்று யாருக்குத் தெரியும்? அப்போது அவருக்காக ஒரு பாடலை நீங்களும் உங்கள் தங்கையும் பாடியது போன்று, உங்கள் கல்யாணத்தின் போதும் அவர் உங்களுக்காக ஏதேனும் ஒரு பாடல் அல்லது இதே பாடலை பாடியிருப்பாரே?

மாட்டுவண்டிப் பயணம் பற்றி நீங்கள் சொல்லும்போதே , மரங்கள் அடர்ந்த அந்த காலத்து ரஸ்தாக்கள் நினைவுக்கு வந்தன.

// மாலை 6 மணிக்கு மேல் பயணம் செய்ய மாட்டோம். இரவு நேரங்களைக் கட்டாயமாகத் தவிர்த்து விடுவோம்! //

என்ற உங்கள் யோசனையை எல்லோரும் கடைபிடிக்க வேண்டும். உங்கள் கனவுப் பயணம் நிறைவேற வாழ்த்துகள்.

அருள்மொழிவர்மன் said...

சுவாரசியமான பதிவு.
~ நம் ஊர்ப்பயணங்கள் என்றால் புத்தகங்களைத்தொடுவதில்லை!~, உண்மைதான் எனக்கும் இதே பழக்கமுண்டு, பெரும்பாலான நேரம் வெளியுலகைப் பார்வையிடுவதிலும், சுற்றியிருக்கும் சக பயணிகளைப் பார்ப்பதிலும் சென்றுவிடும்.
அம்மாவின் கனவுப் பயணம் விரைவில் நிறைவேற வாழ்த்துகள்!

ஸ்ரீராம். said...

நீண்ட நாள் கழித்துத் தொடர்ந்திருக்கிறீர்கள். சுவாரஸ்யம்.

பரிவை சே.குமார் said...

நீண்ட நாட்களுக்கு முன் வந்த தொடர்பதிவு என்றாலும் அதை அப்படியே கிடப்பில் போடாமல் எழுதியதற்கு வாழ்த்துக்கள் அம்மா...

ஒவ்வொரு கேள்விக்கான பதிலும் அருமை...

கனவுப் பயணம் விரைவில் நிறைவேறட்டும் அம்மா...

நிலாமகள் said...

பயணத்தை, எதிர்பார்ப்பவர்களுடன் தொடர முடியாமல் போவதும், எதிர்பாராதவர்களுடன் தொடரும் படி ஆவதும் வாழ்வின் முரண்.

விருப்பமான பயணத் துணை கேள்விக்கான பதில் வெகு அர்த்தப்பூர்வமாக வெளிப்பட்டிருக்கிறது.

பதிவின் கருத்தழகை படங்கள் மெருகூட்டுகின்றன.

Ramani S said...

நினைவில் தொடர்ந்த பயணம்
சுவாரஸ்யமாய் இரசித்துப்
பதிலாய் தொடர்ந்த விதம்
மனம் கவர்ந்தது

வாழ்த்துக்களுடன்...

Kanchana Radhakrishnan said...

பதில்கள் அருமை.

சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Country said...

தாமதப் பகிர்வாக இருந்தாலும் பதில்கள் பொருத்தமாக இருந்தன.

Anuradha Prem said...

மகிழ்வான பதில்கள்...அருமை

வெங்கட் நாகராஜ் said...

தாமதமாக எழுதினாலும் சிறப்பாக எழுதி இருப்பது சிறப்பு.

பயணம் பற்றிய தொடர்பதிவு சம்பந்தமான பதிவுகள் மீண்டும் நினைவுக்கு வந்தது.

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு அன்பு நன்றி கில்லர்ஜி!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி சகோதரர் துரை.செல்வராஜ்!

மனோ சாமிநாதன் said...

விரிவான இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் தமிழ் இளங்கோ!

மனோ சாமிநாதன் said...

வாழ்த்துக்களுக்கும் சுவையான பின்னூட்டத்திற்கும் அன்பு நன்றி அருள்மொழி வர்மன்!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி ஸ்ரீராம்!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி குமார்!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி நிலாமகள்!

மனோ சாமிநாதன் said...

ரசித்து வாழ்த்துக்கள் சொன்னதற்கு அன்பு நன்றி சகோதரர் ரமணி!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி காஞ்சனா ராதாகிருஷ்ணன்!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் ஜம்புலிங்கம்!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி அனுராதா!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி வெங்கட்!

Thulasidharan V Thillaiakathu said...

ஸ்வாரஸ்யமான பதிவு....தெளிவாகச் சிறப்பாக எழுதியுள்ளீர்கள்.

உங்கள் பதிவுகளை எப்படியோ தவற விட்டு விடுகிறோம். மின் அஞ்சல் பெட்டி சப்ஸ்க்ரிப்ஷன் இல்லாத தளங்களின் பதிவுகள் மிஸ் ஆகி விடுகின்றன. இனி கவனமாக எங்கள் தளத்தில் ப்ளாகர் அப்டேட் பார்த்து வர வேண்டும் என்று நினைத்திருக்கிறோம்...