Tuesday, 27 January 2015

முத்துக்குவியல்-34!!

அதிசய‌ முத்து:

பொதுவாகவே சனி பகவானின் பார்வை நம் மீது பட்டு விட்டால் எண்ண‌னற்ற துன்பங்களை அடைய நேரிடும், செல்வங்களை இழக்க நேரிடும் என்பது தான் நம் மக்களீன் கருத்தாக உள்ளது. ஆனால் மராட்டிய மாநிலத்தில் சிங்னாபூர் என்ற பகுதி மக்கள் சனி பகவானுக்கு ஈடு இணையான கடவுள் வேறு இல்லை என்கிறார்கள். ஒட்டு மொத்த கிராமமும் அதிலுள்ள ஹோட்டல், க‌டைகள் எல்லாமே கதவுகள் அகற்றப்பட்டு திறந்த நிலையிலேயே வைத்திருக்கிறார்கள். சனீஸ்வரரின் கடைக்கண் பார்வை இருக்க திருட்டு பயமில்லை என்கிறார்கள் இவர்கள். திறந்திருக்கும் வீடுகள், கடைகளினுள் கெட்ட எண்ணத்துடன் யாராவது நுழைந்தால் அவர்கள் ரத்த வாந்தி எடுத்து உயிர் விடுவார்கள் என்பது இவர்களின் ஆழ்ந்த நம்பிக்கை.

கதவுகள் அமைக்க முனைவோருக்கு சனீஸ்வரன் கடுமையான சோதனைகளை அளித்துள்ளாராம். அன்றைய காலத்தில் ஒரு ஆடு மேய்க்கும் சிறுவன் ஒரு கல்லை தன் குச்சியால குத்த ரத்தம் பீரிட்டு எழுந்ததாம். அன்று இரவே சிறுவனின் கனவில் சனீஸவ்ரர் வந்து தான் சுயம்புவாக எழுந்தருளிப்பதாகவும் இனி நோய், திருட்டு என்ற எந்த கவலையுமின்றி மக்கள் வாழ்லாம் என்று கூறி, ' என்னை ஒரு கட்டுமானத்துக்குள் அடைக்க வேண்டாமென்றும் வானமே கூரையாகவும் பூமியில் எங்கும் தன் பார்வை படுமாறும் இருக்க வேண்டும்' என்றாராம். அதன்படியே அவரை ஐந்தரையடி சுயம்புவாக வெட்ட வெளியில் வைத்து மக்கள் வழிபட்டு வருகிறார்கள். சனி பகவானே பாதுகாவல் தருவதால் இந்த ஊர் சனி சிங்னாபூர் என்று அழைக்கப்படுகிறது.

வருத்த வைத்த முத்து:

கடல் கடந்து பல வருடங்கள் கணவன் தொடர்ந்து வேலை செய்யும் நிலை ஏற்படும்போது, இக்கரையில் சில சமயங்களில் குடும்பத்தின் அல்லது மனைவியின் போக்கு மாறி விடுகிறது. சில சமயம் மனைவிக்கு தேவைகளே பேராசையாகும்போது, அல்லது பாதை மாறி விடும்போது அதன் விளைவுகள் சகிக்க முடியாததாகி விடுகின்றன. இந்த மாதிரி நிகழ்வுகளை நாங்கள் கடந்த 40 வருடங்களில் நிறைய பேரிடம் பார்த்திருக்கிறோம். ஏமாந்து நின்ற அந்த ஆண்மகனை பார்க்க நேரும்போது நமக்கு மனது கனமாகி விடும்.

எங்கள் உணவகத்தில் ஒரு தமிழர் பல வருடங்களாக சாப்பிட்டு வந்தார். மாலையில் வந்தால் தமிழ்ப்பேப்பரை ஒரு வரி கூட விடாமல் படித்து முடித்து விட்டு, அதன் பின் என் கணவரிடம் அரசியல் கதைகள் பேசி விட்டு அப்புறமாகத்தான் சாப்பிட உட்காருவார். சம்பாத்தித்ததையெல்லாம் மனைவி பேரில் தான் சொத்துக்கள் வாங்கினார். நண்பர்கள் பலர் ' உன் பேரிலும் கொஞ்சம் சொத்துக்கள் வாங்கிப்போடு' என்று உபதேசித்தும் அவர் அதைக் காதில் போட்டுக்கொள்ளவேயில்லை. அவருக்கும் அறுபதுக்கும் மேல் வயதாகி விட்டதால்  சமீபத்தில் தான் வேலையை விட்டு ஊருக்கு வந்தார். வந்த பின் செலவுக்குக் கூட மனைவி பணம் தர மறுத்ததால் தினசரி சண்டை என்று வாழ்க்கை ரணகளமாகியிருக்கிற‌து.  திருமணம் செய்து கொடுத்த பெண் வீட்டில் அடைக்கலமாகியிருக்கிரார். அங்கும் அவரின் மனைவி சென்று தகராறு செய்யவே, மனம் நொந்து விஷம் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டு விட்டார். இரன்டு நாட்களுக்கு முன் இந்த செய்தியைக் கேள்விப்பட்டு எங்கள் இருவருக்கும் மனமே சரியில்லாமல் போய் விட்டது. இன்னும் இந்த அதிர்ச்சி சரியாகவில்லை. வளைகுடா நாடுகளில் வாழும் எத்தனையோ தமிழர்களீன் வாழ்க்கை இப்படித்தான் திசைமாறிப்போகிறது.

ஆச்சரிய முத்து:

சீனாவைச் சேர்ந்த 30 வயது இளைஞர் ஒருவர் தன் தொழிலை மேம்படுத்துவது தொடர்பாக இரவும் பகலும் ஒரு வார காலம் சரியாக உறங்கக்கூட இல்லாமல்  இணையத்திலேயே இருந்து வந்திருக்கிறார். இது அவரை 2013ல்ல் கோமாவில் தள்ளி விட்டது. ஓராண்டுக்கு மேல் அவர் கண் விழிக்கவில்லை. அவருக்கு சிகிச்சை செய்து வந்த‌ மருத்துவர்கள் அவர் மிகவும் நேசிக்கும் பொருள் என்னவென்று கேட்டிருக்கிறார்கள். உறவினர்கள் 'பணம்' என்றதும் 100 யென் நோட்டை அவர் நாசிக்கு அருகில் சென்று அதன் வாசனையை முகரச் செய்திருக்கிறார்கள் மருத்துவர்கள். அந்த நோட்டை அவர் காதுக்கருகில் கொண்டு சென்று அதை க‌சக்கியிருக்கிரார்கள். அந்த சப்தத்தை அவரின் செவி கேட்டது. வாசனையை நாசி உணர்ந்ததும் அவரின் கை அந்த நோட்டை வாங்க அசைந்ததையும். கண்களையும் அவர் திறக்க முயற்சித்ததையும் பார்த்த‌ மருத்துவர்கள் அப்படியே ஸ்தம்பித்துப்போனார்களாம். இப்போது அவரின் உடல்நிலையில் வேகமான முன்னேற்ற‌ம் ஏற்பட்டு வருகிறதாம். பணம் பத்தும் செய்யும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இப்படி கோமாவில் கிடக்கும் மனிதனையே உயிர்ப்பிக்கும் சக்தி கொண்டதா அது?

குறிப்பு முத்து:

பல்லியை ஒழிக்க:

காப்பிப்பொடியில் புகையிலைப்பொடியைக்கலந்து நீர் சேர்த்து உருட்டி அங்கங்கே வைக்கவும். பல்லித்தொல்லை அகன்று விடும்!

37 comments:

துரை செல்வராஜூ said...

தங்களை வருந்த வைத்த சம்பவம் எம்மையும் வருந்த வைத்தது.

அன்னாருடைய ஆத்மா சாந்தியடைவதாக!..

வெங்கட் நாகராஜ் said...

இரண்டாம் முத்து எங்களையும் வருந்தச் செய்தது.... கடைசி செய்து பார்க்க வேண்டும் - தில்லியில் ஹிமாலய சைசில் பல்லிகள் உண்டு! :)

ஸ்ரீராம். said...

1. உண்மையிலேயே ஆச்சர்யம்தான். பயம் போல பாதுகாப்பில்லை!

2. வருத்தமாக இருக்கிறது. பிறரின் அனுபவங்களையும் பாடமாக எடுக்க வேண்டும்.

3. ஆச்சர்ய முத்து 2? ஹா..ஹா..ஹா... சிரிப்பும் வருகிறது!

4. பல்லி என்ன செய்யப் போகிறது என்று விட்டு விடுகிறோம்!

Yaathoramani.blogspot.com said...

தங்களை வருத்திய சம்பவம் போல
கண்டு மிக வருந்தி இருக்கிறேன்
என்ன செய்வது சிலர் நிலைமை
இப்படித்தான் முடியவேண்டி விதி இருக்கிறது
என்கிற கூற்றை நம்பத்தான் வேண்டி இருக்கிறது

ஆச்சரிய முத்து நிச்சயம் ஆச்சரியம்தான்
நானும் அந்த ஊர் போய் வந்திருக்கிறேன்
யார் வீட்டிலும் கதவு இல்லாதது ஆச்சரியமளித்தது

குறிப்பு முத்தை பயன்படுத்திப் பார்க்கப்போகிறேன்
தகவலுக்கு நன்றி
வாழ்த்துக்களுடன்

கே. பி. ஜனா... said...

சுவாரசியம்...

வை.கோபாலகிருஷ்ணன் said...

வருத்த வைத்த முத்து:

இது வெளிநாட்டில் வாழ்வோருக்கு மட்டுமல்ல, எல்லோருக்குமே ஓர் படிப்பிணைதான்.

மனைவியாவது, மகனாவது, மகளாவது, மருமகளாவது, மருமகனாவது ..... யாரையும் நம்பியோ அண்டியோ இருத்தல் கூடவே கூடாது.

நம் கையில் காசு இருந்தால் தான் நமக்கு மதிப்பு என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.

எப்போதும் மிகவும் சுதாரிப்பாகவே விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்.

priyasaki said...

அதிசயம்தான் சனி பகவான் மீதான நம்பிக்கை. 2வது முத்து மிகவும் மனதைக்கனக்க வைத்துவிட்டது.
சீன இளைஞருக்கு பண ஆசை அவர் ஆழ்மனதில் ஆழப்பதிந்துவிட்டது.
முத்து தகவல்கள் அருமை மனோக்கா. நன்றி.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

தங்களை வருந்த வைத்த முத்து எங்களையும் வருந்தவைத்துவிட்டது. உள்ளூரில் இதுபோன்ற நிகழ்வினைக் காணமுடிகிறது. நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை.

திண்டுக்கல் தனபாலன் said...

அதிசய‌ முத்தும், ஆச்சரிய முத்தும் வியக்க வைத்தது...

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் ஆறுதலான வார்த்தைகளுக்கும் அன்பு நன்றி சகோதரர் துரை செல்வராஜ்!

மனோ சாமிநாதன் said...

செய்து பாருங்கள் வெங்கட்! இங்கும் பல்லித்தொல்லைகள் நிறைய உண்டு. முன்பு முட்டை ஓடுகளைப்போட்டு வைத்தால் பல்லித்தொல்லை அகன்று விடும் என்றெழுதியிருந்தேன். அது நிறைய பலன்களைக் கொடுத்தது. கருத்துரைக்கு அன்பு நன்றி!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு அன்பு நன்றி ஸ்ரீராம்! இது மாதிரி சம்பவங்களை நீங்கள் சொல்லியிருப்பது போல பாடமாகத்தான் எடுத்துக்கொள்ள‌ வேண்டும்.

மனோ சாமிநாதன் said...

நீங்கள் சிங்னாபூர் சென்று வந்திருப்பது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது! வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி சகோதரர் ரமணி!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் இனிய நன்றி ஜனா!

மனோ சாமிநாதன் said...

//மனைவியாவது, மகனாவது, மகளாவது, மருமகளாவது, மருமகனாவது ..... யாரையும் நம்பியோ அண்டியோ இருத்தல் கூடவே கூடாது.

நம் கையில் காசு இருந்தால் தான் நமக்கு மதிப்பு என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.

எப்போதும் மிகவும் சுதாரிப்பாகவே விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்.//

பொன்னான அனுபவக்கருத்துக்களுக்கு மனம் நிறைந்த நன்றி சகோதர் வை.கோபாலகிருஷ்ணன்!

மனோ சாமிநாதன் said...

அழகிய கருத்துக்களுக்கு அன்பு நன்றி பிரியசகி!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் இனிய நன்றி தனபாலன்!

மனோ சாமிநாதன் said...

வாழ்க்கை இப்ப‌டித்தான் என்ற‌றிந்திருந்தாலும் சில மரணங்கள் மனதை மிகவும் கனக்கச் செய்து விடுகிறது. வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி சகோதரர் ஜம்புலிங்கம்!

Madhavan Elango said...

வலைச்சரத்தில் என்னுடைய தளம் பற்றியும், எழுத்தைப் பற்றியும் குறிப்பிட்டதற்கு மிக்க நன்றி அம்மா!

வாழிய நலம்!

அன்புடன்,
மாதவன் இளங்கோ.

Thulasidharan V Thillaiakathu said...

அருமையான முத்துக்கள்! மஹாராஷ்ட்ரா சனி பகவான் குறித்துக் கேள்விப்பட்டுள்ளோம். வருத்தமான முத்துப் பகிர்வு கிட்டத்தட்ட எங்கள் இடுகை அக்கருத்தைப் பற்றியதுதான்....இப்படியும் பெண்கள்...ம்ம் என்ன சொல்ல...

ஆச்சரிய முத்து ஹஹ்ஹஹ் பணம் என்றால் பிணமும் வாய் பிளக்கும் என்பார்கள் அது சரியோ?!!ஹஹ்ஹ்

பல்லி...ம்ம் போனால் போகிறது....சாப்பாட்டு பொருட்களை பத்திரமாகப் பார்த்து வைத்துக் கொள்கின்றோம்....ஆனால் பரவாயில்லை தீங்கு விளைவிக்காத ஒரு குரிப்பு/....

KILLERGEE Devakottai said...


வருத்த வைத்த முத்து படித்து மனம் கணத்து விட்டது ஆனாலும் உண்மைதானே நானும் நிறைய பேரின் வாழ்க்கையில் இப்படி சம்பவத்தை பார்த்திருக்கிறேன்.
எனது புதிய பதிவு மான்செஸ்டர்

Anonymous said...

பணம் பத்தும் செய்யும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இப்படி கோமாவில் கிடக்கும் மனிதனையே உயிர்ப்பிக்கும் சக்தி கொண்டதா அது? wonderful
Vetha.Langathilakm

'பரிவை' சே.குமார் said...

முத்துக்கள் அருமை அம்மா...

'பரிவை' சே.குமார் said...

வருத்தப்பட வைத்த முத்து படித்ததும் ரொம்ப வருத்தமாப் போச்சும்மா... வருடக்கணக்கில் இங்கிருந்து குடும்பத்துக்காக உழைத்து ஓடாகி அங்கு போய் நிம்மதியில்லாமல் தற்கொலை முடிவெடுப்பது என்பது வருத்தத்திற்குரிய விஷயம்.... பாவம் அந்த மனிதர். வாழ்வில் எல்லாம் இழந்து கடைசியில் தன் வாழ்வையே இழந்திருக்கிறார்.

Thenammai Lakshmanan said...

அருமையான டிப்ஸ்.

இப்படி மோசமான மனைவியும் உண்டா பாவம் அவர் ..

Ranjani Narayanan said...

பணம் பத்தும் செய்யும் தான் போலிருக்கிறது. கணவனின் பணத்தை மட்டுமே காதலித்த மனைவியையும் உருவாக்கும்; உயிருக்குப் போராடி வரும் மனிதரையும் உயிர்ப்பிக்கும்!

எல்லா முத்துக்களும் அருமை!

மனோ சாமிநாதன் said...

என் தளம் வந்து கருத்துரை சொன்னதற்கு அன்பு நன்றி மாதவன் இளங்கோ!

மனோ சாமிநாதன் said...

விரிவான கருத்துரைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி துளசிதரன்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி கில்லர்ஜி!

மனோ சாமிநாதன் said...

பணத்தின் வலிமை பற்றி வாழ்க்கை நெடுக பார்த்துக்கொன்டே தான் இருக்கிறோம். ஆனால் கோமாவில் கிடக்கும் மனிதனையே உயிர்ப்பிக்கும் சக்தி கொண்டது என்பதை அறிந்த போது எனக்கும் மிகவும் ஆச்சரியமாக இருந்தது வேதா! வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி!

மனோ சாமிநாதன் said...

அவர் அதுவும் அறுபது வயதிற்கு மேல் இந்த முடிவை எடுத்தது தான் மிகவும் வேதனையாக இருக்கிறது குமார்! அவ்வளவு சீக்கிரம் இதை ஜீர‌ணித்துக்கொள்ள‌ முடியவில்லை!

கருத்துரைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் பாராட்டிற்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி தேனம்மை!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி ரஞ்சனி!

ஆறுமுகம் அய்யாசாமி said...

பல்லித்தொல்லை டிப்ஸ் பயன்படுத்திப் பார்க்கிறேன் மேடம், நன்றி.

மோகன்ஜி said...

அந்த சம்பவம் நெகிழ் வைக்கிறது.

பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும்போது ,அந்த ' "கோமாந்தகன்" விழித்ததில் வியப்பேது?!

saamaaniyan said...

நுகர்வோர் கலாச்சாரம் மேலோங்கிய இன்றைய காலகட்டத்தில் " போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து " என்பதெல்லாம் மலையேறி இரண்டாம் முத்து சம்பவங்கள் அதிகம் நிகழ்கின்றன.

மூன்றாம் முத்து சம்பவம் போன்ற ஒன்றை என் தோழி ஒருவர் சொல்லக்கேட்டேன்... நீங்கள் குறிப்பிட்டதை போலவெ கணினி தொழிலை மேம்படுத்தும் பொருத்து இரவும் பகலும் உழைத்த இளைஞருக்கு மனநிலை பிழன்றுவிட்டது ! அளவுக்கு மீறினால் எதுவும் ஆபத்தாகவே முடியும் என்பதற்கான உதாரணம் !!

எனது புதிய பதிவு : மதமாற்றம் மனமாற்றமாகுமா ?
http://saamaaniyan.blogspot.fr/2015/01/blog-post_21.html
தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள்.


நன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr

சரணாகதி. said...

உஙக பக்கம் இன்று தான் வரூகிறெனு நினைககிறென் எல்லா முத்துக்களுமே நல்லா இருககு