Saturday, 22 September 2012

ஆல்ப்ஸ் மலைகளூடே ஒரு பயணம்!!


பகுதி-1:
என் மகன் ரொம்ப நாளாகவே எங்கள் எல்லோரையும் ஸ்விட்சர்லாந்து நாட்டிற்கு அழைத்துச் சென்று சுற்றிக்காண்பிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டுக் கொண்டிருந்தார். என் கணவருக்குத்தான் அதற்கான நேரத்தை அத்தனை சீக்கிரம் ஒதுக்க முடியவில்லை. ஒருவழியாக ஆகஸ்ட் இறுதியில் ஸ்விட்சர்லாந்து நாட்டிற்கு சுற்றிப்பார்க்க கிளம்பலாமென முடிவு செய்தோம். அப்படியே பிரான்ஸ் நாட்டிலும் 2 நாட்கள் சுற்றிப்பார்க்கத் திட்டம் போட்டுக் கிளம்பினோம். ஸ்வெட்டர்கள், ஜாக்கெட்கள், பனிக்குல்லாய்கள், கையுறைகள், காலுறைகள், காலணிகள் எல்லாம் சேகரித்துக்கொண்டு கிளம்பினோம்.
என் மகன் ஸ்விட்சர்லாந்தில் தான் பட்டப்படிப்பும் பட்ட மேற்படிப்பும் முடித்ததாலும் பிரஞ்சு மொழி கற்றிருப்பதாலும் முதலில் தனியாகவே பயணம் மேற்கொள்ளலாம் என்று நினைத்தோம். ஆனால் Cox and kings, Make my trip, SOTC போன்ற நல்ல டிராவல் கம்பெனிகள் மூலம்  கிளம்பினால் நிச்சயம் அவர்களே ஒரு வேளையாவது இந்திய உணவிற்கு வழி செய்து விடுவார்கள் என்பதால் எம் மகன் Make my trip மூலம் இந்த சுற்றுப்பயணத்தை ஏற்பாடு செய்திருந்தார். இருப்பினும் முதலில் நாங்கள் ஸ்விட்சர்லாந்தின் முக்கிய நகரமான ஜூரிக் [ ZURICH ] சென்று இரு நாட்கள் சுற்றிப்பார்த்து விட்டு, அதன் பிறகு டிராவல் கம்பெனி வகுத்திருக்கும் சுற்றுப்பயணத்திட்டத்தில் மற்றவர்களுடன் சேர்ந்து கொள்ளலாம் என்று எண்ணினோம். அதனால் துபாயிலிருந்து நேரடியாக ஆகஸ்ட் மாதம் 28ந்தேதி மதியம் ஜுரிக் சென்றடைந்தோம்.
ஸ்விட்சர்லாந்து நாட்டைப்பற்றி சில வரிகள்..
ஸ்விட்சர்லாந்து நாடு மேற்கே பிரான்ஸ், கிழக்கே ஆஸ்திரியா, வடக்கே ஜெர்மனி, தெற்கே இத்தாலி நாடுகளை எல்லைகளாய்க் கொண்ட ஒரு சிறிய ஐரோப்பிய நாடு.
இந்த் நாட்டில் CANTONS என்றழைக்கப்படும் 26 மாநிலங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு மாநிலத்துக்கும் நம் இந்தியா போலவே தனி கோர்ட், தனிக்கொடி, தனி தலைநகரம், என்று அதிகாரங்கள் எல்லாமுமே தனிப்பட்ட முறையில் உள்ளன. இந்தக்கூட்டமைப்பின் அதிகாரத் தலைமையிடம் பெர்ன் நகரமாக இருந்தாலும் வர்த்தகத் தலைமையிடங்களாக ஜூரிக், ஜெனிவா நகரங்கள் இருக்கின்றன. இந்த நாட்டிற்கென்று தனியான மொழி எதுவும் இல்லை. ஜெர்மனி நாடு அருகே இருக்கும் பகுதிகள் ஜெர்ம்ன் மொழியைப் பேசுகின்றன. இத்தாலி அருகே இருப்பவையின் பேச்சு வழக்கு இத்தாலியாக உள்ளது. பிரான்ஸ் அருகே இருக்கும் ஜெனீவாவில் பிரெஞ்சு மொழி பேசுபவர்கள் அதிகம்.
பூகோள ரீதிப்படி, இந்த நாடு 60 சதவிகிதம் ஆல்ப்ஸ் மலைத்தொடர், 30 சதவிகிதம் சமவெளி, 10 சதவிகிதம் ஜுரா மலைத்தொடர்கள் என்று அமைந்திருக்கிறது. மலையிலிருந்து அருவிகள் பல ஆறுகளாய் ஏரிகளில் வந்து கொட்டுவதால் நிறைய இடங்களில் ஏரி நீரை அப்படியே குடிக்கலாம், அத்தனை சுத்தமானது என்கிறார்கள்.
விமான நிலையத்தில் உள்ளே நுழைந்ததும் அதி வேக ரயிலில் ஏறி வேறொரு பகுதிக்கு வந்து தான் நம் பாஸ்போர்ட்கள் பரிசீலிக்கப்பட்டு, நாம் வெளியே வர முடிகிறது.

குழந்தைகள் அமரும் பெரிய வண்டி
விமான நிலையத்திற்கு வெளியே வந்து சுற்றும் முற்றும் பார்த்தபோது அங்கு நிலவிய அமைதியும் எளிமையும் ஆச்சரியத்தைத் தந்தது. ஸ்விட்சர்லாந்தின் மிக நீளமான, பெரிய விமான நிலையம் என்பதற்கான சுவடே இல்லை. ஒரு நிமிடம் துபாய் விமான நிலையம் ஞாபகத்துக்கு வந்தது. ஆரவாரமும் ஆர்ப்பரிப்பும் அலங்கார விளக்குகளும் அலை மோதும் கூட்டமுமாய் எந்நேரமும் தகதகக்கும் துபாய் விமான நிலையம்!!

சாலைகள் எங்கும் இடையே செல்லும் டிராம் வண்டிகள்
விமான நிலையத்தை விட்டு வெளியே வந்ததுமே முதல் பிரச்சினை ஆரம்பமாகியது. குழந்தை இருப்பதால் எந்த டாக்ஸியும் எங்களை ஏற்ற மறுத்தது. குழந்தையை ஏற்றுவதற்கென்றே, அதற்காக தனி ஸீட் பொருத்தப்பட்டு பெரிய கார்கள் இருக்கின்றன. அதில் தான் செல்ல வேண்டும் மீறி ஏற்றிச் செல்வது அந்த நாட்டு சட்டப்படி குற்றம் என்றும் உடனடியாக அபராதம் கட்ட வேண்டும் என்றும் சொன்னார்கள். ஒரு வழியாக க்யூவில் நின்று வரிசைப்படி மிகப்பின்னால் நின்று கொண்டிருந்த ஒரு பெரிய காரில் ஏறி எங்களுக்காக ரிஸர்வ் செய்திருந்த ஹோட்டலைச் சென்றடைந்தோம்.
அடுத்த ஆச்சரியம் எங்களுக்காக அங்கே காத்திருந்தது. பொதுவாக உலகெங்கும் உள்ல நட்சத்திர ஹோட்டல்களில் நாம் ரிசப்ஷனில் அனைத்து formalities ஐயும் முடித்த பின் நம் சாமான்களை அங்குள்ள ட்ராலியில் வைத்து bell boy அல்லது concierge நம் அறைக்குத் தள்ளி வருவார்கள். ஆனால் இங்கே ஸ்விட்சர்லாந்து ஹோட்டலில் நம் பெட்டிகளை நாமே தான் நம் அறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும். இது பெரும்பாலும் எல்லா ஹோட்டலிலும் அமுலுக்கு இருந்தது. இது மட்டுமல்ல, நிறைய ஒழுங்கு முறைகள், எளிமை, உழைப்பு எல்லாமே இங்கு காணக்கிடைக்கின்றன! சைக்கிளில் எல்லா இடங்களுக்கும் பரவலாக இளைஞர்கள் மட்டுமல்ல, முதியவர்களும் செல்கிறார்கள்.

அம்மாவும் பிள்ளையுமாய் சைக்கிளில்!!
எல்லா இடங்களுக்கும் எளிதாகப் போய் வர ட்ராம் இருக்கின்றன. மற்றபடி எல்லாமே சிறிய கார்கள் தான்.

பூச்செடிகள் நிரம்பியிருக்கும் பால்கனிகள்
காரில் பயணம் செய்கையில் எல்லாம் வயதானவர்கள் தங்கள் வீட்டை ஒட்டடை அடிப்பது, பெயிண்ட் அடிப்பது முதலிய வேலைகளைச் செய்வதைப்பார்த்தேன்.

தொடரும்.. .. .

32 comments:

அம்பாளடியாள் said...

மிகவும் ரசித்தேன் !..மேலும் தங்கள் பயண அனுபவம் தொடர வாழ்த்துக்கள் .மிக்க நன்றி பகிர்வுக்கு .

Angel said...

வயதானவர்கள் தங்கள் வீட்டை ஒட்டடை அடிப்பது, பெயிண்ட் அடிப்பது முதலிய வேலைகளைச் செய்வதைப்பார்த்தேன்.//


ஆமாம் அக்கா சுவிஸ்/ஜெர்மனியில் தொண்ணூறு வயது ஆண் /பெண் தனியே தங்கள் வேலைகளை செய்வார்கள் ..நானும் முதலில் இதனைக்கண்டு ஆச்சர்யப்பட்டு போனேன் ..தொடருங்க உங்க பயண அனுபவங்களை

Seeni said...

nalla pakirvu!
thodarungal...

எல் கே said...

சைக்கிள் உடலுக்கு நல்லது, சுற்றுபுறத்துக்கும் நல்லது. சைக்கிள் செல்ல தனி ட்ரேக் இருக்கும் அங்க

ஸாதிகா said...

அக்காவின் ஸ்விஸ் பயண அனுபவமா?ரொம்ப சுவார்ஸ்யமாக படித்தேன்.சீக்கிரத்தில் முடித்து விடாமல் நன்கு விரிவாக எழுதுங்கள் அக்கா.

VijiParthiban said...

மிகவும் ரசித்தேன் !..மேலும் தங்கள் பயண அனுபவம் தொடர வாழ்த்துக்கள் .

Anonymous said...

வயதானவர்கள் வேலை செய்வது மட்டுமல்ல, பேருந்தில் இருக்கப் போகிறீர்களா என்று கேட்டுத் தான் இடம் கொடுக்க வேண்டும்.பாவம் வயதானவர் என்று கொடுத்தால் அவமானப் படுவீர்கள். தேவையில்லை என்று நிர்தாட்சண்யமாக மறுப்பார்கள்.. (இங்கு நாம் அனுபவிப்பது.)மிக தன்னம்பிக்கை வாய்ந்தவர்கள். எழுதுங்கள் தொடருவேன் . சுவிஸ் ஊடாகப் பயணித்துள்ளோம் காரில். உள்ளே போகவில்லை.
வேதா. இலங்காதிலகம்.

'பரிவை' சே.குமார் said...

ரசித்து எழுதியிருக்கிறீர்கள் அம்மா....
தொடருங்கள்...
தொடர்கிறோம்...

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

அழகான படங்கள், நாங்களும் உங்களுடன் பயணம் செய்த நிறைவை தந்தது. தொடருங்கள், நன்றி

திண்டுக்கல் தனபாலன் said...

ரசிக்க வைக்கும் பகிர்வு...

மிக்க நன்றி அம்மா... தொடர்கிறேன்...

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

படங்களும், கட்டுரையும் அருமை !

எனக்கும் குடும்பத்துடன் சுவிஸ், பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்குச்

செல்லும் ஆசை உண்டு ! எப்போது நிறைவேறும்

என்று தெரியவில்லை !

கே. பி. ஜனா... said...

அமர்க்களமா ஆரம்பிக்குது உங்க 'ஆல்ப்ஸ் மலைகளூடே ஒரு பயணம்'

நிலாமகள் said...

அழ‌கிய‌ ப‌ய‌ண‌ அனுப‌வ‌ங்க‌ள்...! முதியோர் முதுமையைக் கார‌ண‌ம் காட்டாம‌ல் உழைப்ப‌து போற்றுத‌ற்குரிய‌து. ப‌ய‌ண‌ங்க‌ளின் த‌லையாய‌ ப‌ய‌னே ப‌ல‌ ம‌க்க‌ளைப் ப‌டித்த‌றிய‌ முடிவ‌து தான். நெல்லுக்கு இறைத்த‌ நீராய் எங்க‌ளையும் வ‌ந்த‌டைகிற‌து ப‌திவின் மூல‌ம்.

மனோ சாமிநாதன் said...

இந்தப் பதிவை ரசித்து எழுதியதற்கும் வாழ்த்துக்கள் சொன்னதற்கும் அன்பார்ந்த நன்றி அம்பாளடியாள்!!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு அன்பு நன்றி ஏஞ்சலின்!!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு இனிய நன்றி சீனி!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு அன்பு நன்றி எல்.கே!

மனோ சாமிநாதன் said...

அன்பான யோசனைக்கு இனிய நன்றி ஸாதிகா!

மனோ சாமிநாதன் said...

வாழ்த்துக்களுக்கும் கருத்துக்களுக்கும் இனிய நன்றி விஜி பார்த்திபன்!!

மனோ சாமிநாதன் said...

உங்கள் கருத்துக்கள் சுவாரஸ்யமாக இருந்தன வேதா! அன்பு நன்றி!!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துக்கு அன்பு நன்றி ச‌கோதரர் குமார்!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுரைக்கு அன்பு நன்றி தங்கமணி!!

மனோ சாமிநாதன் said...

ரசித்ததற்கு அன்பு நன்றி தனபாலன்!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்கு இனிய நன்றி சகோதரர் ராமமூர்த்தி! உங்கள் ஆசை சீக்கிரம் நிறைவேற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுடன் கூடிய இனிய கருத்துக்கு அன்பு நன்றி சகோதரர் ஜனா!

மனோ சாமிநாதன் said...

வழக்கமான தமிழ்தேன் சொட்டும் இனிய கருத்துரை நிலா! அன்பு நன்றி!!

ஸ்ரீராம். said...

படங்கள் ஊரின் அழகைக் காட்டுகின்றன. அந்த அமைதியும், அழகும் சுத்தமும் கூட்டமில்லாத சாலையும்...... பொறாமையாய்த்தான் இருக்கின்றது!

Kanchana Radhakrishnan said...


படங்களும், கட்டுரையும் அருமை

Asiya Omar said...

பயணத்தொடர் சுவாரசியமாக உள்ளது. தொடருங்கள் அக்கா..

Jaleela Kamal said...

ரொம்ப சூப்பரான பயண அனுபவம் மனோ அக்கா, நானும் உங்களுடனே சுற்றி பார்க்கிறேன். அடுத்த பதிவை எதிர் பார்க்கிறேன்.
சைக்கிளில் பின்னாடி குழந்தைக்கு சேஃப்டியாக சீட் வைத்துள்ளது அருமையாக இருக்கு.

வை.கோபாலகிருஷ்ணன் said...

அழகழகான படங்களுடன் கூடிய அர்புதமான பயணக்கட்டுரை.

மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது.

//விமான நிலையத்திற்கு வெளியே வந்து சுற்றும் முற்றும் பார்த்தபோது அங்கு நிலவிய அமைதியும் எளிமையும் ஆச்சரியத்தைத் தந்தது. ஸ்விட்சர்லாந்தின் மிக நீளமான, பெரிய விமான நிலையம் என்பதற்கான சுவடே இல்லை.

ஒரு நிமிடம் துபாய் விமான நிலையம் ஞாபகத்துக்கு வந்தது. ஆரவாரமும் ஆர்ப்பரிப்பும் அலங்கார விளக்குகளும் அலை மோதும் கூட்டமுமாய் எந்நேரமும் தகதகக்கும் துபாய் விமான நிலையம்!!//

ஆம் துபாய் ஷார்ஜா அபுதாபி விமான நிலையங்களை 2004 ஆம் ஆண்டு நேரில் பார்த்திருக்கிறேன். மிகவும் வியந்து போய் இருக்கிறேன்.

திருச்சியில் ஏறும் போது விமானத்தில் ஓர் படிக்கட்டு இருந்தது. அதில் தான் ஏறி, விமானத்திற்குள் சென்றோம்.

ஆனால் நான் ஷார்ஜா சர்வதேச விமான நிலையத்தில் வந்து இறங்கும் போது விமனத்திலிருந்து இறங்கும் படிக்கட்டே இல்லை.

ஆனால் சுலபமாக இறங்கி விட்டோம்,

என் பெரிய பிள்ளையிடம் இதுபற்றி வியந்து போய்க் கேட்டேன். விளக்கிவிட்டு, அது தான் துபாய் என்றான்.

பகிர்வுக்கு நன்றிகள். பாராட்டுக்கள்.
வாழ்த்துகள். தொடருங்கள்.

அன்புடன்
VGK

இமா க்றிஸ் said...

சுவாரசியமாகச் சொல்லுகிறீர்கள்.