Friday, 7 September 2012

சாம்பார் சாதம்:


செவிக்கும் அறிவுத்திறனுக்குமான அலசல்களுக்கும் ஆராய்ச்சிகளுக்கும் சற்று இடைவேளை கொடுத்து, வள்ளுவரின் வாக்குக்கேற்ப சிறிது வயிற்றுக்கும் ஈவதற்கு என்ன விருந்து படைக்கலாம் என்று யோசித்தபோது, மிகவும் ருசிகரமான ‘ சாம்பார் சாதத்தை அளிக்கலாம் சமையல் முத்தாக ‘ என்று தோன்றியது.
சாம்பார் சாதத்திற்கான குறிப்பு கொடுக்கும் முன் அதைப்பற்றி சில வரிகள்.. ..
சூடான சாதத்தில் உருக்கிய நெய்யூற்றி, மணமணக்கும் சாம்பாரை ஊற்றிப் பிசைந்து சாப்பிடுவதல்ல சாம்பார் சாதம். அதற்காக தனியாக மசாலாப்பொருள்கள் தயார் செய்து காய்கறிகளுடன் கலந்து வேக வைத்து, தனியே வேகவைத்த பருப்பும் அரிசியும் நெய்யுடன் கலந்து செய்வதே சாம்பார் சாதம். சிலர் சாம்பார் சாதத்தில் எல்லா விதமான காய்கறிகளும் கலப்பார்கள். முள்ளங்கி சாம்பார் நிறைய பேருக்கு பிடிக்கும். ஆனால் அது சாம்பாரின் ஒரிஜினல் மணத்தை சற்று மாற்றி விடும். கத்தரிக்காய் காய்க்கு காய் ருசி மாறுபடும். சரியான ருசியான கத்தரிக்காய் அமையா விடில் சாம்பாரின் ருசி குறைந்து விடும். முருங்கைக்கீரைக்கும் முருங்கைக்காய்க்கும் கூட அப்படிப்பட்ட குணம் இருக்கிறது. காரட், பலாக்கொட்டை, வெண்டைக்காய், முதலிய காய்கள் சாம்பாரின் ருசியை அதிகரிக்கும். பச்சை கொத்துமல்லி கிள்ளிப்போடுவது கூட, ஜனவரி மாதம் கிடைக்கும் குட்டையான கொத்துமல்லியென்றால் சாம்பாரின் வாசம் கொஞ்சம் தூக்கலாக இருக்கும். இனி சாம்பார் சாதம் பற்றிய குறிப்பு:
 
சாம்பார் சாதம்:
தேவையான பொருள்கள்:
பச்சரிசி- 2 கப்
துவரம்பருப்பு- 1 கப்
வெங்காயம்-1
சின்ன வெங்காயம்- 1 கை
பொடியாக அரிந்த தக்காளி- 1 கப்
கீறிய பச்சை மிளகாய்-4
பொடியாக அரிந்த கொத்தமல்லி- கால் கப்
சிறிய பிஞ்சு கத்தரிக்காய்-4
புளி- 2 நெல்லிக்காயளவு
தேவையான உப்பு
எண்ணெய்-3 மேசைக்கரண்டி
நெய்- 2 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை- சில இலைகள்
மஞ்சள் தூள்- அரை ஸ்பூன்
உருளைக்கிழங்கு [ சற்று பெரியது]-1
காரட் [ சற்று பெரியது]-1
பொன்னிறமாக கால் ஸ்பூன் எண்ணெயில் வறுத்துப்பொடிக்க வேண்டிய பொருள்கள்:
வெந்தயம்- 1 ஸ்பூன், கடுகு- அரை ஸ்பூன், மிளகாய் வற்றல்-8, தனியா விதை- 4 ஸ்பூன், கடலைப்பருப்பு- 2 ஸ்பூன், பொட்டுக்கடலை- 2 ஸ்பூன், மிளகு- 8, பெருங்காயம்- 2 பட்டாணியளவு
செய்முறை:
உருளைக்கிழங்கு, காரட்டை சற்று பெரிய துருவலாக துருவிக்கொள்ளவும்.
வறுப்பதற்கான சாமான்களை வறுப்பதற்கு முன், கால் ஸ்பூன் எண்ணெயில் முதலில் பெருங்காயத்தை வறுத்து எடுத்துக்கொண்டு, அதன் பிறகு மற்ற சாமான்களை வறுத்தெடுத்து அதன் பின் பொடிக்கவும்.
அரிசியையும் பருப்பையும் நன்கு கழுவி, 6 கப் நீர் ஊற்றி குக்கரில் 6 விசில் வரை நன்கு வேகவைக்கவும்.
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடாக்கவும்.
எண்ணெயை ஊற்றி பொடியாக அரிந்த வெங்காயம், சின்ன வெங்காயம், பச்சை மிளகாயைப் போட்டு வதக்கவும்.
நன்கு வதங்கியதும் தக்காளியையும் கொத்தமல்லி, சிறிய துண்டுகளாய் அரிந்த கத்தரிக்காய்கள் இவற்றைப்போட்டு மஞ்சள் தூளும் சேர்த்து கறிவேப்பிலையும் சேர்த்து, தக்காளி நன்கு குழைந்து மசியும் வரை நன்கு வதக்கவும்.
அதன் பின் காரட், உருளைத்துருவல்கள் சேர்த்து ஒடு பிரட்டு பிரட்டவும்.
புளியைக்கரைத்து ஊற்றி சிறிது உப்பும் சேர்த்து வேக வைக்கவும்.
மசாலா சற்று கெட்டியானதும் வெந்த சாதம், உருக்கிய நெய் சேர்த்து, போதுமான உப்பும் சேர்த்து, குறைந்த தீயில் அனைத்தும் சேரும் வரை ஐந்து நிமிடங்கள் கிளறவும்.
கமகமக்கும் சாம்பார் சாதம் தயார்!!
இதற்கு தொட்டுக்கொள்ளவென்று தனியாக எதுவும் தேவையில்லை. அருமையான ஊறுகாய், அப்பளம், வற்றல்கள் போதும். 

45 comments:

Yaathoramani.blogspot.com said...

பக்குவம் சொன்னவிதமும் படமும்
நிச்சயம் செய்து பார்க்கத் தோன்றுகிறது
இந்த வாரம் ஞாயிறு சாம்பார் சாதமாகத்தான் இருக்கும்
பகிர்வுக்கு நன்றி

Unknown said...

சாம்பார் சாதம் ரொம்ப ருசியாக இருக்கு.. Inviting you to join my event " Party snacks",more detais : http://en-iniyaillam.blogspot.co.uk/2012/08/party-snacks-event-announcement.html

Radha rani said...

சாம்பார் சாத சுவைக்கும் மணத்திற்கும் இவைதான் காரணமா...கம,கமன்னு சாம்பார் சாத வாசம் பசியை தூண்டுது மேடம்..

ஸாதிகா said...

அக்கா நலமா ரொம்ப நாள் கழித்து வந்து மணக்க மணக்க பிசிபேளாபாத் குறிப்புக்கொடுத்து இருக்கீங்க.கண்டிப்பாக உங்கள் முறையில் செய்து பார்த்து விடணும் சாம்பார் சாதமென்றால் எம் டி ஆர் மசாலா பவுடர்தான். பருப்பு,சாத காய்கலவையில் மசாலா சேர்த்து தாளித்துக்கொட்டி சாப்பிடுவோம்.உங்கள் முறையில் அவசியம் பண்ண வேண்டும்.:)

குறையொன்றுமில்லை. said...

சாம்பார் சாதம் செய்முறை விளக்கம் இப்பவே செய்து பார்க்க சொல்லுது.

எல் கே said...

இன்னிக்கு வீட்டில் சாம்பார் சாதம் பண்ண சொல்லிவிட்டு இங்கு வந்தால் உங்கள் குறிப்பு. சின்ன வெங்காயம் போட்டா அந்த மணமே தனிதான்

வெங்கட் நாகராஜ் said...

வாவ்.... சொல்லும்போதே வாசனையும் சுவையும் ஜோரா இருக்கு...

செஞ்சுட வேண்டியதுதான்....

ஸ்வர்ணரேக்கா said...

முருங்கைக்காயும், முள்ளங்கியும் போட்டது தான் ஒரிஜினல் சாம்பார் என்று நினைத்துக் கொண்டிருந்தேன் நான்...

வெண்டைக்காயை தவிர மற்ற அனைத்தும் சாம்பாரை ருசிக்க செய்யும் என்பது என் கருத்து...

ருசியான விளக்கங்கள்...

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் செய்முறை படி செய்து பார்ப்போம்... வீட்டில் குறித்துக் கொண்டார்கள்... மிக்க நன்றி...

Vijiskitchencreations said...

நலமா? நீண்ட நாட்கள் கழிந்து நல்ல கமகம சாததோடு எல்லோர் நாவிலும் சாம்பார் சாதம் சாப்பிட வைச்டிங்க. அவசியம் உங்க முறையில் செய்து பார்க்கிறேன். என் குழந்தைகளுக்கு சாம்பார் சாதம் என்றால் ரொம்ப பிடிக்கும்.
வெள்ளை பூசனி கூட நாங்க சாம்பாரில் போடுவோம். அதுவும் வேற தனி சுவை.
முருங்காய், கத்தரிக்காய், வெண்டைக்காய் இதெல்லாம் தனி தனியே போட்டு செய்வாங்க எங்க வீட்டில். முருங்கை சாம்பார் செய்யும் போது வீடே ஒரே மணமா இருக்கும்.

ADHI VENKAT said...

மணக்கும் சாம்பார்சாதம். சிலமுறை செய்திருக்கிறேன். உங்க பக்குவத்திலும் கண்டிப்பாக செய்து பார்க்கிறேன் அம்மா.

SNR.தேவதாஸ் said...

அன்புடையீர் வணக்கம்.
இது நாள் வரை நான் சாப்பிட்டுக்கொண்டிருந்ததுதான் சாம்பார் சாதம் என நினைத்து சாப்பிட்டு வந்தேன்.இப்பொழுதுதான் தெரிகிறது நான் சாப்பிட்டது டுபாக்கூர் என்பது.
தங்களது பதிவுகளை எனது மெயிலுக்கு
அனுப்பித் தர இயலுமா?
வாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்
snrmani@rediffmail.com

ஹுஸைனம்மா said...

சாம்பாருக்கு முள்ளங்கி மாதிரி சில காய்கள் ஒத்துவராது. கத்தரிக்காயின் காறலும் சிலசமயம் சொதப்பிவிடும். ஆனால்,
//ஜனவரி மாதம் கிடைக்கும் குட்டையான கொத்துமல்லியென்றால் சாம்பாரின் வாசம் கொஞ்சம் தூக்கலாக இருக்கும்//

கொத்துமல்லியை இப்படிக் கூட நுணுக்கமாகப் பார்த்துச் சேர்ப்பீர்களா? ஆச்சரியமாக இருக்கிறது.

சாம்பார் சாதம் செய்து பார்க்கணும். இதைப் புழுங்கலரிசியில் செய்யலாமா?

மனோ சாமிநாதன் said...

சாம்பார் சாதம் செய்து பார்த்து விட்டு சொல்லுங்கள் சகோதரர் ரமணி! கருத்துரைக்கு அன்பு நன்றி!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்கு அன்பு நன்றி சினேகிதி!

மனோ சாமிநாதன் said...

இனிமையான கருத்துரைக்கு அன்பு நன்றி ராதா!

'பரிவை' சே.குமார் said...

சாம்சார் சாதம் நீங்கள் சொன்னவிதத்தில் மணக்கிறதம்மா.

Asiya Omar said...

சாம்பார் சாதம் பார்க்கவே சூப்பர்.மசாலா பொருட்கள் கொடுத்திருப்பதால் செய்து பார்க்க தூண்டுகிறது,கேரட்,உருளை துருவி சேர்ப்பது நல்ல குறிப்பு.பகிர்வுக்கு நன்றி அக்கா.அக்கா காரம் நீங்க அதிகமாக சேர்ப்பீங்களா?எங்க வீட்டில் காரம் மிகக் குறைவு.

Asiya Omar said...

சாம்பார் சாதம் பார்க்கவே சூப்பர்.மசாலா பொருட்கள் கொடுத்திருப்பதால் செய்து பார்க்க தூண்டுகிறது,கேரட்,உருளை துருவி சேர்ப்பது நல்ல குறிப்பு.பகிர்வுக்கு நன்றி அக்கா.அக்கா காரம் நீங்க அதிகமாக சேர்ப்பீங்களா?எங்க வீட்டில் காரம் மிகக் குறைவு.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

சாம்பார் சாதம் அருமை !

நிறைய புத்தகங்கள் சமைத்துப் பார் என்று தான் தலைப்பே !

உங்கள் மெனுவைப் பார்த்தால் சாப்பிட்டுப் பார் என்று தைர்யமாய் வைக்கலாம் ! அது சரி ..இதுவும் பிசிபேளாஹொவ்ளி யும் ஒன்றா அல்லது வெவ்வேறா ?

ஸ்ரீராம். said...

குறித்துக் கொண்டேன். உபயோகமாக இருக்கும்!

ஸ்ரீராம். said...

//கத்தரிக்காய் காய்க்கு காய் ருசி மாறுபடும். சரியான ருசியான கத்தரிக்காய் அமையா விடில் சாம்பாரின் ருசி குறைந்து //

தஞ்சாவூர்க் கத்தரிக்காய்க்கு ஈடாகுமா!!!!

நிலாமகள் said...

க‌டுகும் வ‌றுத்துப் பொடிந்து கொள்ள‌ வேண்டுமென்ப‌தை ம‌ன‌தில் குறித்துக் கொண்டேன். எங்க‌ பிள்ளையார் கோயில் ஐய‌ர் பிர‌சாத‌மாக‌ செய்யும் சாம்பார்சாத‌த்தில் மொச்சைகொட்டை, சுண்டைக்காய் வ‌ற்ற‌ல் கூட‌ சேர்ப்பார். சாத‌த்தில் ஊற்றிப் பிசைந்து சாப்பிடும் சாம்பாரைவிட‌ இந்த‌ சாம்பார்சாத‌க் க‌ல‌வை த‌னிச் சுவைதான்.

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

சாம்பார் சாதம் மிக அருமை மனோ அக்கா. இவ்வளவு தூரம் பக்குவமாக நேரம் ஒதுக்கிச் செய்தால் நல்ல சுவையாகத்தான் இருக்கும்.

Unknown said...

super

மோகன்ஜி said...

அடடா! நான் செய்யுறது தான் சாம்பார்ன்னு நெனச்சுக்கிட்டிருந்தேன். இவ கூட ஒண்ணுமே சொன்னதில்லையே??

இனி பாருங்க அசத்தறேன்..

ரொம்ப நாளாச்சு உங்க வலைக்கு வந்து.. நலம் தானே?

மனோ சாமிநாதன் said...

நம் தமிழ்நாட்டு சாம்பார் சாதம் இது ஸாதிகா! நீங்கள் சொல்லும் ' பிஸி பேளா பாத்' க‌ர்நாடக மாநிலத்துத் தயாரிப்பு! அதில் மசாலாப்பொருள்களில் அன்னாசிப்பூ, பட்டை, கசகசா எல்லாம் சேர்த்து செய்வார்கள். அரிசி,
பருப்பு அளவு முறை கூட வேறு படும்!!

அன்பான பின்னூட்டத்திற்கு இனிய நன்றி!!

மனோ சாமிநாதன் said...

இனிய பின்னூட்டத்திற்கு அன்பு நன்றி லக்ஷ்மிம்மா!

மனோ சாமிநாதன் said...

உண்மை தான் எல்.கே! சின்ன வெங்காயத்துக்கு அப்படிப்பட்ட ருசி இருக்கிறது! உற்சாகமளித்த பின்னூட்டத்திற்கு அன்பு நன்றி!!

மனோ சாமிநாதன் said...

ஆதியை செய்யச் சொல்லி ருசி பார்த்து சொல்லுங்கள் சகோதரர் வெங்கட் நாகராஜ்!!

மனோ சாமிநாதன் said...

முதல் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் பாராட்டுக்கும் அன்பு நன்றி ஸ்வர்ணரேகா!

மனோ சாமிநாதன் said...

செய்து பார்த்து விட்டுச் சொல்லுங்கள் சகோதரர் தனபாலன்!

மனோ சாமிநாதன் said...

வாங்க விஜி! ரொம்ப நாளைக்கப்புறம் இந்தப் பக்கம் வந்திருக்கீங்க!
பூசணி சாம்பார் நன்றாக இருக்கும்தான்! ஆனால் பூசணி தண்ணீர் விடும் த‌ன்மை கொண்டது! அதனால் சாம்பார் சிறிது தண்ணீராகி விடும்.

கருத்துரைக்கு அன்பு நன்றி!!

மனோ சாமிநாதன் said...

அவசியம் செய்து பார்த்து விட்டு சொல்லுங்கள் ஆதி!
வருகைக்கும் கருத்துரைக்கும் இனிய நன்றி!

மனோ சாமிநாதன் said...

அன்புள்ள‌ சகோதரர் தேவதாஸ் அவர்களுக்கு!

வருகைக்கும் கருத்துரைக்கும் இனிய நன்றி!

எந்த பதிவுகளைக் கேட்கிறீர்கள்?
சமையல் பதிவுகளையா?

மனோ சாமிநாதன் said...

புழுங்கலரிசியில் சாம்பார் சாதம் செய்தால் பச்சரிசியில் செய்கிற மாதிரி அத்தனை ருசி கிடையாது ஹுஸைனம்மா!
ஜனவரியில் ஊருக்குப் போகும்போது கொத்துமல்லியையை தேடிப்போய் வாங்கி ஊறுகாய் போடாமல் இருப்பதில்லை நான்! அதை சிறிது கசக்கி விட்டு கையை முகர்ந்து பாருங்கள், அத்தனை வாசமாயிருக்கும்!!
கருத்துரைக்கு இனிய நன்றி!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் குமார்!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்கும் கருத்துக்கும் அன்பு நன்றி ஆசியா! நான் காரம் அதிகம் சேர்க்க மாட்டேன் ! எல்லா சமையல் முறைகளிலும் காரம் மிகவும் குறைவு தான்!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்கு அன்பு நன்றி சகோதரர் ராமமூர்த்தி!
பிஸிபேளி பாத் கர்நாடக மாநில சமையல். மசாலா பொருட்களில் பட்டை, அன்னாசிப்பூ எல்லாம் இருக்கும். பருப்பின் அளவும் வேறுபடும்!

மனோ சாமிநாதன் said...

உண்மை தான் ஸ்ரீராம்! தஞ்சாவூர் பக்கத்து நாட்டுக்கத்தரிக்காயின் ருசியே தனி! ஒவ்வொரு முறையும் விமானம் ஏறும்போது 2 கிலோவாவது இங்கு கொண்டு வந்து விடுவேன்!

மனோ சாமிநாதன் said...

உண்மை தான் நிலா! சாதத்தில் ஊற்றி சாப்பிடும் சாம்பார் சாதம் ஒரு சுவை என்றால், இந்த சாம்பார் சாதம் ருசியில் ஒரு படி மேல் தான்! கருத்துக்கு அன்பு நன்றி!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்கும் வருகைக்கும் அன்பு நன்றி மோகன்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துக்கும் அன்பு நன்றி மோகன் ஜி!
ரொம்ப‌ நாளைக்க‌ப்புற‌ம் உங்க‌ளை இங்கு பார்ப்ப‌தில் என‌க்கும் அதிக ம‌கிழ்ச்சியே! உட‌ல் ந‌ல‌ம் பூர‌ண‌ குண‌ம் அடைந்து விட்டீர்க‌ளா?

Easy (EZ) Editorial Calendar said...

நீங்கள் சொன்ன விதம் நல்லா இருக்கு...நான் கண்டிப்பா செய்து பார்த்துட்டு சொல்லறேன்...உங்கள் பகிர்வுக்கு நன்றி....

நன்றி,
மலர்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

Asiya Omar said...

http://blogintamil.blogspot.ae/2013/06/blog-post_23.html
இன்று வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்,அருமை. பகிர்வுக்கு நன்றி.