Sunday 16 September 2012

அசத்திய குறும்படங்கள்!!


வேகமாய் தினமும் பறந்து செல்லும் இயந்திர நிமிடங்களுக்கிடையே, சில நல்ல ரசனைகள், சில நல்ல விஷயங்கள், சில அன்பான உள்ளங்கள், சில நல்ல செயல்கள் தான் நம்மை இந்த இயந்திரத்தன்மை அப்படியே இயந்திரமாக்காமல் உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன.
நல்ல ரசனைகள் என்பதில் ஜீவனுள்ள திரைப்படங்கள், நம்மையே மெய்மறக்கச் செய்யும் விதமாக அமைந்த இசை, படித்து முடித்த பிறகும் வேறெங்கும் நம்மை நகர விடாமல் ஓரிரு நிமிடங்கள் நிக்ழ்காலத்தினின்றும் வேறுபடுத்தி அப்படியே அடித்துப்போடும் புதினங்கள்- இவை எல்லாமே அடக்கம். அந்த வரிசையில் சென்ற வாரம் நான் பார்த்த சில குறும்படங்களும் சேர்ந்து விட்டன!
கலைஞர் தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் ‘ நாளைய இயக்குனர்’ என்ற நிகழ்ச்சி சில வருடங்களாகவே ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது. திறமையான இளம் இயக்குனர்களை ஊக்குவிக்கும், தேடிக்கண்டு பிடிக்கும் நிகழ்ச்சி தான் இது. பிரபலமான இயக்குனர்கள் நடுவர்களாக அமர்ந்திருக்க, ஒவ்வொரு வாரமும் அன்றைய சிறந்த குறும்படங்கள் தேர்வாகி, திறமையான இயக்குனர் அறிவிக்கப்படுவார் வெற்றி பெற்றவராக! நாளாக நாளாக, எண்ணிக்கைகள் வடிகட்டப்பட்டு, குறுகி, சிறந்த குறும்படங்கள் ஃபைனலுக்கு தேர்வாகும். பிறகு மெகா ஃபைனல். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு 2 லட்சம், ஒன்றரை லட்சம், ஒரு லட்சம் என்று பரிசுத்தொகைகள் பிரபலங்களால் தரப்படுகின்றன.
நான் எப்போதும் இந்த நிகழ்ச்சியை கவனித்ததில்லை என்பதை விட, இந்த நிகழ்ச்சிக்கு அத்தனை முக்கியத்துவம் தந்ததில்லை என்பதுதான் உண்மை. கால அவசரங்களால் வேறு ஏதேனும் வேலைகளை கவனிக்கவே சரியாக இருக்கும். யதேச்சையாக, இந்த நிகச்சியின் மெகா ஃபைனலுக்கு வந்த ஒரு குறும்படத்தைப் பார்க்க நேர்ந்தது. மிக நுணுக்கமான உணர்வுகளைப் பிரதிபலித்த அந்தக் குறும்படம் என்னை அப்படியே அசத்தி விட்டது. பொறுத்திருந்து அஹனால் காத்திருந்து அதற்கடுத்த வாரமும் மற்ற இரு குறும்படங்களையும் பார்த்து முடித்தேன். இளைஞர்களின் திறமை, கற்பனாசக்தி, அதை விஷுவலாக, நுணுக்கமான கலையழகுடனும் பல வித மன உணர்வுகளுடனும் கொண்டு வந்து நம்மை அசத்தும் விதமாய் நிதர்சன வாழ்க்கையைப் பிரதிபலித்த புத்திசாலித்தனம்- நான் நிறைய வாரங்களை, ஏன் வருடங்களைக்கூட சில நல்ல ரசனையான விஷயங்களை ரசிப்பதில் தவற விட்டு விட்டேன் என்பதை உணர்ந்தேன்!!
முதல் குறும்படம்:
தலைப்பு:
புன்னகை வாங்கினால் கண்ணீர் இலவசம்.
வயதான் தாய். இரண்டு மகன்கள். மூத்த மகன் மேடை தோறும் ‘ ஒரு நல்ல குடும்பம் எப்படி இருக்க வேண்டும்’ என்பதைப் பேசிப் பேசி கைத்தட்டல்கள் எப்போதும் வாங்குபவர். புகழ் பெற்றவர். இந்த நிலையில் அவரின் தந்தை இறந்த ஒரு மாதத்தில் தாய்க்கு உடல் நலம் சரியில்லாததற்காக மருத்துவரிடம் செல்லும்போது, அவரின் தாய் மூன்று மாத கர்ப்பிணி என்பதையும் அதை அகற்றுவது கூட உயிருக்கே தீங்கு விளைவிக்கும் என்பதையும் அறிய நேரிடும்போது அவர் துடித்துப்போகிறார். மேடையில் பேசும் வசனங்கள் மறந்து போகின்றன. தகப்பனின் புகைப்படத்தை வீசி எறிகிறார். கூனிக்குறுகி, வெட்கி நிற்கும் தாயை தீக்கங்குகளாய் வார்த்தைகளைக் கொட்டி இன்னும் கண்ணீருடன் கூனிக்குறுக வைக்கிறார். தாயைத் தனியறையில் வைத்து வெளியே தாழ்ப்பாள் போடுகிறார். யாராவது வீட்டு வாசல் கதவைத் தட்டினால் அந்த அம்மாவே அறைக்குள் போய் கண்ணீருடன் ஒளிந்து கொள்கிறார். இருந்தாலும் மனைவியிடம் பேசும்போது கொஞ்சம் மனசாட்சி எட்டிப்பார்க்கிறது.
‘ என் அம்மா பாவம்டி!. கஷ்டப்பட்டு எங்களை வளர்த்தது ’ என்கிறார். மனைவியோ இகழ்வாக மேலும் பேசி, வெளியூரிலிருந்து மாப்பிள்ளை சில நாட்களில் வீட்டுக்கு வந்தால் மிகவும் கேவலம் என்று சொல்லி அந்த அம்மாவை எங்காவது கொண்டு விட்டு வரச் சொல்லுகிறாள். இவரும் காரில் அம்மாவை வைத்துக்கொண்டே, அனாதை ஆசிரமங்கள், தொண்டு நிறுவனங்கள் என்றெல்லாம் சென்று, மகன் என்றும் தூரத்து உறவு என்று சொல்லிச் சொல்லி தாய்க்கு ஒரு இடம் கேட்டும் அன்று முழுவதும் இடம் கிடைக்காமல் சோர்ந்து போகிறார். இறுதியில் ஊரின் ஒதுக்குப்புறமான இடம் ஒன்றுக்குச் சென்று, அம்மாவிடம் ‘ பாத்ரூம் போவதானால் போய் வா அம்மா’ என்கிறார். அம்மா அழுதவாறே ‘ ஏண்டா, நான் போனதும் என்னை அப்படியே விட்டு விட்டு போவதற்காகத்தானே இப்படி சொல்லுகிறாய்? ‘ என்று கேட்டு உடைந்து அழுகிறார். ‘ ‘என்னை விட்டு விட்டு போய் விடு’ என்று அழுகிறார். மகனும் அழுது கொண்டே ஒரு பையை எடுத்து கட்டு கட்டாய் பணம் அதன் மேல் வைத்து விட்டு காரை எடுத்துச் செல்லுகிறார்.
இடையில் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்து, குழந்தையில்லாத ஒரு தாய்க்குப் பரிசாக கொடுத்து விட்டு அம்மா மறைகிறார் என்பதை விஷுவலாக காண்பிக்காமல் இறுதிக்காட்சியில் மறைமுகமாய் காண்பிக்கிறார் இயக்குனர்.
பல வருடங்கள் கழித்து அந்த மகன் வழக்கம்போல கைத்தட்டல்களுடன் ஒரு மேடையில் பேசுகிறார்.
“ கடவுள் எங்கே, கடவுள் எங்கே என்று மனிதன் எதற்குத் தேடுகிறான்? ஒவ்வொருத்தன் வீட்டிலேயே இரண்டு தெய்வங்கள் குடியிருக்கின்றன. ஒன்று அவனைப்பெற்றெடுத்த அவன் அம்மா. இரண்டாவது, அவனே பெற்றெடுத்த அவனின் குழந்தை! “ என்கிறார். கைத்தட்டல் காதைப் பிளக்கிறது. கூட்டம் முடிந்து கிளம்பும்போது, ஒரு இளம் பெண் ஓடி வந்து, தன் குழந்தை அவருக்குப் பரிசு கொடுக்க விரும்புவதாகச் சொல்லுகிறாள்.
அவர் அந்தக் குழந்தையின் உயரத்துக்கு அமர்ந்து ‘ என்ன கிஃப்ட் அது? கொடும்மா! என்கிறார். அந்தக் குழந்தை மெதுவாய் அவர் பல வருடங்களுக்கு முன் அவர் தன் தாயிடம் கொடுத்த அதே பையையும் பணக்கட்டையும் அவரின் கரங்களில் வைக்கிறது.
திகைத்துப்போய் அவர் பார்த்துக்கொண்டிருக்கும்போதே விழியோரங்களில் கசியும் கண்ணீரைத் துடைத்தவாறே அந்தக் குழந்தை திரும்பச் செல்கிறது.. .. ..
அந்த அவலமான தாய்க்கு, தனக்குப்பிறந்த குழந்தையை, ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க முடியாதவளிடம் கொடுக்க முடிகிற காருண்யம் இருக்கிறது. மேடையில் அன்பைப்பற்றி பேசும் புலமை இருக்கிற மனிதனுக்கு, தன்னைப் பெற்ற தாயிடம் பொழிவதற்கு மனசில் அந்த கருணை மழை இல்லை!! 
இரண்டாவது குறும்படம்:
தலைப்பு:
 ‘ ஆ’
கிராமத்து நாவிதர் அவர். தன் மகன் ஆங்கிலப்பள்ளியில் படிக்க வேண்டும், அவன் பேசுகிற ஆங்கிலத்தில் கிராமமே அசந்து போக வேண்டும் என்று கனவு காணுபவர். கொஞ்சம் பணத்தைத் தேத்திக்கொண்டு, சென்னையில் நல்ல ஆங்கிலத்தைக் கற்பிக்கும் பள்ளி எது என்று விசாரித்துக்கொண்டு மகனை சென்னைக்கு அழைத்துச் செல்லுகிறார்.
போகிற வழியில் மகனிடம் பேசிக்கொண்டே செல்கிறார்.
“ தம்பி, நீ நல்லா இங்கிலீஷ் படிச்சா சாமி உனக்கு எல்லாம் நல்லதே செய்யும்!"
மகன்: ‘ ஏம்பா, சாமிக்கு தமிழ் தெரியாதாப்பா?’
சென்னையில் ரயில்வே ஸ்டேஷனில் படிகளில் ஏறி நடக்கும்போது, தாடியும் மீசையும் பரட்டைத்தலையுமான ஒரு பிச்சைக்காரன் அந்த வழியே நடப்பவர்களிடம் பிச்சை எடுத்துக்கொண்டிருப்பான். ஒருத்தன் காலி தண்ணீர் பாட்டிலை அவன் பக்கத்தில் போட்டு விட்டு போனதும் அதில் தண்ணீர் இல்லையென்று கண்டு பிச்சைக்காரன் நொந்து புலம்புவான். இதைப்பார்த்துக்கொண்டிருந்த அந்த சிறுவன், தன் அப்பாவிடம் ஐஸ்கிரீம் கேட்பான். அப்பா ரொம்பவும் யோசித்து, கையில் இருக்கிற காசை எல்லாம் கணக்கு பார்த்து, ‘ ஏம்பா, உனக்கு ஜுரம் இருக்குப்பா, ஐஸ்கிரீம் வேண்டாம்பா!’ என்பார்.
மகன் உடனேயே, ‘ஏம்பா, ஐஸ்கிரீம் வாங்க காசு இல்லையா?’ என்று கேட்டதும் தந்தையால் பொறுக்க முடியாமல் ஐஸ்கிரீம் வாங்கித் தருவார். அவன் அதை வாங்கி ஓடிச்சென்று அந்த பிச்சைக்காரனிடம் தருவான்.
பக்கத்தில் தான் அந்தப் பள்ளிக்கூடம் இருக்கும். ஒரு வழியாக, அங்கே உள்ள பியூனை பணம் கொடுத்து சரிகட்டி, மகனை வெளியே விட்டு விட்டு, உள்ளே தந்தை செல்வார். பிரின்ஸ்பாலிடம் தான் படித்தவன் என்று காண்பித்துக்கொண்டு, ஒரு வழியாக சமாளித்த பின், அவர் கொடுக்கும் அப்ளிகேஷன் ஃபாரத்தைப்பார்த்தவருக்கு அதிர்ச்சியாக இருக்கும்! எல்லா கேள்விகளுமே ஆங்கிலத்தில் இருக்கும் அந்த பேப்பரைப்பார்த்ததும் அவர் கண்களில் கண்ணீர் வழியும்! கலங்கிப்போய் வெளியே வந்தவர், தன் மகன் அதே பிச்சைக்காரன் முதுகில் ஏறி விளையாடுவதைப்பார்த்ததும் ஆத்திரத்தோடு ஓடிச் சென்று அவனை தாறுமாறாகத் திட்டியவாறே அடிக்க ஆரம்பிப்பார். பிச்சைக்காரன் உடனேயே கோபமாக ஆங்கிலத்தில் கத்துவான். அவர் அதுவரை தான் ஆராதித்த ஆங்கிலம் அந்த பிச்சைக்காரனிடமிருந்து வெள்ளமாக வெளிவருவதைப்பார்த்து அப்படியே திகைத்துப்போனவர், நெகிழ்ந்து போய் அவனை அமர வைத்து, ஒரு சமர்ப்பணம் போல தன் நாவிதர் வேலையைச் செய்து அவனின் தாடி, மீசை, பரட்டைத்தலையை அகற்றுவார். அடுத்த காட்சியில் அவர் மகன் அவரின் கிராமத்துப்பள்ளியில் தரையில் அமர்ந்து தமிழ் படிப்பதாக படம் நிறைவடைகிறது!!
மூன்றாவது குறும்படம்:
இதன் தலைப்பு மறந்து விட்டது. இது ஒரு வித்தியாசமான காதல் கதை. மரணம் சம்பவிக்கும் வீடுகளில் பறையடித்து வெட்டியான் வேலை பார்க்கும் ஒரு இளைஞனுக்கும் ஒப்பாரிப்பாடல்களை ஆராய்சி செய்ய வந்த ஒரு இளம் பெண்ணுக்கும் இடையே காதல் நுழைகிறது.
ஒப்பாரி இசை, பறையடிப்பு, துக்கத்துக்கு வந்தவர்களிடையே தொடர்ந்த புலம்பல்கள் பின்னணியில் அவர்கள் பார்வைப் பரிமாற்றங்கள் நிகழ்கின்றன.
மரணமடைந்தவரைக் குளிப்பாட்டி, ஆடை அணிவித்து தலையில் துண்டைக்கட்டி முடிச்சு போடும்போது, அவள் கழுத்தில் மூன்று முடிச்சு போடுவது போல அவனுக்குத் கற்பனையில் தோன்றுகிறது.
இடையே, ஒரு இறப்பு நடந்த வீட்டில் நடக்கும் அத்தனை யதார்த்த நிகழ்வுகளையும் சிறிது நகைச்சுவை கலந்து அசத்தலாகக் காட்டுகிறார் இயக்குனர்.
கதாநாயகனின் நண்பன் சொல்கிறான், ‘ எப்படி நீங்கள் இருவரும் இனி சந்திக்க முடியும்? இப்படி ஏதாவது ஒரு மரணம் சம்பவித்து, அங்கே இருவரும் பார்த்துக்கொண்டால் தானுண்டு!’ என்கிறான்!
துக்கம் நேர்ந்த வீட்டிலிருந்து இறந்தவர் உடலை மயானத்துக்கு எடுத்துச் சென்ற பிறகு வீடு முழுவதையும் கழுவி விடுவார்கள். இறந்தவரின் மனைவி யாரையோ திட்டிக்கொண்டே வேகமாக வந்தவர் சறுக்கி விழுந்து அதே கூடத்தில் இறந்து போகிறார்.
மறுபடியும் அதே நாயகன், நாயகி அதே காதல் பார்வைகளுடன் சந்திக்க வாய்ப்பு ஏற்பட்டு விடுகிறது!
குறிப்பு:
இந்த குறும்படங்களில் முதலாவதாய் உள்ள ‘ புன்னகை வாங்கினால் கண்ணீர் இலவசம்’ என்ற படத்துக்கு முதல் பரிசு கிடைத்தது. இரண்டாவது, மூன்றவது பரிசு பெற்றவைகளை நான் சரியாக கவனிக்க முடியவில்லை.

33 comments:

ஹுஸைனம்மா said...

முதல் படம் இங்கு யார் பிளாக்கிலோ பகிர்ந்திருந்தது பார்த்தேன். மனதை மிகவும் அதிகம் பாதித்துவிட்டது.

முன்காலங்களில் அம்மாவும், மகளும் அல்லது மாமியாரும் மருமகளும் ஒரே நேரத்தில் குழந்தை பெறுவார்கள். அதெல்லாம் இழிவாக யாரும் நினைத்ததில்லை. நாகரீக வளர்ச்சியில் வயதானபின் முறையான வழியில் குழந்தை பிறப்பதைக் கூட மறைக்க வேண்டியிருக்கிறது. அட்லீஸ்ட் கண்காணா இடத்தில் வைத்தாவது அவரைப் பராமரித்திருக்கலாம்.

இருபது வருடங்களுக்கு முன்பே, என் தோழி வேலை பார்த்த மருத்துவமனயில் இதுபோன்ற வயதான தம்பதியர் கருக்கலைப்புக்கு வருவதைச் சொன்னாள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

தாங்கள் வர்ணித்துள்ள மூன்று குறும்படங்களும் வெகு அருமை.

முதல் படம் பரிசுபெற்றதில் ஆச்சர்யமே இல்லை. அவ்வளவு அருமையாக உள்ளது.

மற்ற் இரண்டுமே நல்ல கதைக் கருவுடன் எடுக்கப்பட்டுள்ளதாகவே தெரிகிறது.

நேரில் நாங்களும் படம் பார்த்ததைப் போலவே உணர்வினை ஏற்படுத்தி எழுதி அசத்தியுள்ளீர்கள்.

பகிர்வுக்கு மிக்க நன்றி.

பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

அன்புடன்
vgk

'பரிவை' சே.குமார் said...

முதல் படம் பார்த்தேன்... மற்ற படங்கள் பார்க்கவில்லை,
பகிர்வு நல்லாயிருக்கும்மா...

MARI The Great said...

>>>புன்னகை வாங்கினால் கண்ணீர் இலவசம்<<<

எழுத்துக்களில் வாசிக்கும் போதே எனக்கு புல்லரிக்கிறது! விஷுவல் நிச்சயம் பார்த்தோரின் நெஞ்சை உலுக்கியிருக்கும் என்றே அவதானிக்கிறேன்!

மகேந்திரன் said...

முதல் பரிசுக்கு சரியான
குறும் படத்தைத் தான்
தேர்வு செய்திருந்தார்கள்...
இதுபோன்ற குறும்படங்களுக்கு
ஆதரவு பெருக வேண்டும்...

நிலாமகள் said...

முத‌ல் ப‌ட‌ம் ம‌ன‌தில் முத‌ல் இட‌ம். க‌ல‌ங்கித் தான் போகிற‌து ம‌ன‌சு. அத் தாயின் த‌ன்மான‌ம் சுட்டெரிக்கிற‌து. வாய்ச்சொல்லில் வீர‌ர்க‌ளாய் இருப்ப‌வ‌ர்க‌ள் செய‌லிலும் த‌னிப்ப‌ட்ட‌ வாழ்க்கையிலும் கோழைக‌ளாக‌வே இருந்து விடுகின்ற‌ன‌ர்.

ப‌ட‌ங்க‌ளை இய‌க்கிய‌வ‌ர்க‌ளுக்கும் வாழ்த்துக்க‌ள்!

தொலைக்காட்சியில் இப்ப‌டியான‌ ஒளிப‌ர‌ப்புக‌ளும் அருகியிருந்தாலும் இருக்கிற‌தே என‌ ஆறுத‌லாக‌ உள்ள‌து.

ஸ்ரீராம். said...

அந்த நிகழ்ச்சி பற்றித் தெரியும் என்றாலும் பார்க்கும் பொறுமை எனக்கும் இருந்ததில்லை. ஆனாலும் நீங்கள் முதலில் சொல்லியுள்ள குறும்படம் கதை அருமை. எவர்க்ரீன் கருவல்லவா..!

ஹுஸைனம்மா சொல்வது சரி. என்னுடைய மாமன் என்னுடைய அண்ணனை விடச் சிறியவன்! என்னை விட நான்கு வயதே மூத்தவன். என்னுடைய சித்தி என்னுடைய அக்காவை விட ஒரு வயதுச் சிறியவள்! ஸாரி... சிறியவர்!

எல் கே said...

இந்த ப்ரோக்ராம் பாக்கறது இல்லை. முதல் படம் யூ டியூப்ல இருந்தா பாக்கணும்

கீதமஞ்சரி said...

முதல் குறும்படத்தை சமீபத்தில் பார்த்திருந்தேன். மனதை மிகவும் நெகிழ்த்திய கருவும் நடிப்பும். முதல் பரிசு பெற்றமைக்கு பாராட்டுகள். மற்றப் படங்களை இனிதான் பார்க்கவேண்டும். அருமையான குறும்படங்களை அறிமுகப்படுத்தியமைக்கு மிகவும் நன்றி மேடம். பாழாய்ப்போன சில திரைப்படங்களைப் பார்த்து நொந்துபோவதற்குப் பதில் இதுபோல் நல்ல குறும்படங்களைப் பார்த்து மனம் நிறைக்கலாம்.

வெங்கட் நாகராஜ் said...

முன்பு சில குறும்படங்களைப் பார்த்திருக்கிறேன். சமீபத்தில் பார்க்கவில்லை.

படங்களைப் பற்றி நீங்கள் தந்துள்ள விமர்சனம் படங்களைப் பார்க்கத் தூண்டுகின்றன. யூட்யூபில் தேடிப் பார்க்கிறேன்...

Easy (EZ) Editorial Calendar said...

வாழ்த்துக்கள்....

நன்றி,
மலர்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

மனோ சாமிநாதன் said...

கொஞ்ச நாட்களுக்கு முன் கூட குழந்தையில்லாத 60 வயதைக்கடந்த தம்பதியர் செயற்கை முறையில் குழந்தை பெற்று, பூரிப்பாய் பத்திரிகைகளில் பேட்டி கொடுத்திருந்ததைப் படித்தேன். தாங்கும் கணவன் அருகிலிருக்கும் வரை பிரச்சினை இல்லை. தனியாக இருக்கும் கர்ப்பிணிப் பெண்கள் இளம் வயதாக இருந்தாலே நம் சமூகத்தில் ஆயிரம் பிரச்சினைகள்! 60 வயதைக் கடந்து விட்டால் கேட்கவா வேன்டும்? அடுத்தவர் பிரச்சினைகளின் வலியை தன் வலியாக உணராதவரை இந்த மாதிரி நிகழ்வுகளுக்கு பஞ்சமேயில்லை ஹுஸைனம்மா!

கருத்துரைக்கு அன்பு நன்றி!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்கும் வாழ்த்துக்களுக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்! உங்களின் பாராட்டு, மேலும் மேலும் இது போன்ற பதிவுகள் எழுத என்னை உற்சாகப்படுத்துகிறது!!

மனோ சாமிநாதன் said...

மற்ற பதிவுகளையும் முடிந்தால் பாருங்கள் சகோதரர் குமார்! பாராட்டுக்கும் கருத்துக்கும் அன்பு நன்றி!!

மனோ சாமிநாதன் said...

உண்மை தான்! பார்த்த போது முதல் படம் மனதைப் பிசைந்தது. இரண்டாவது நெகிழ்ச்சியையும் மூன்றாவது புன்னகையையும் உருவாக்கியது!
கருத்துரைக்கு அன்பு நன்றி வரலாற்றுச் சுவடுகள்!!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு அன்பு நன்றி மகேந்திரன்!

ADHI VENKAT said...

முதல் குறும்படம் மிகவும் அருமை. அந்தக் காலங்களில் இருந்தது, இப்போது அசிங்கமாக படுகிறது. அதற்காக அந்த தாயை இப்படி செய்திருக்க வேண்டாம்.

பகிர்வுக்கு நன்றிம்மா.

Yaathoramani.blogspot.com said...

மூன்று குறும்படங்களையும் பார்க்கவில்லை
தாங்கள் சொல்லிச் சென்றவிதமே
நேரடியாகப் பார்க்கிற உணர்வைத் தந்தது
பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
தொடர வாழ்த்துக்கள்

முற்றும் அறிந்த அதிரா said...

அழகான அலசல்.

Menaga Sathia said...

உங்கள் குறும்பட விமர்சனம் மிக அருமை,பகிர்வுக்கு மிக்க நன்றிம்மா!!

Asiya Omar said...

மூன்று குறும்படங்கள் கதையும் வித்தியாசமான கருத்தை முன் வைத்து மனதில் நிற்கிறது.நல்ல பகிர்வு.

மனோ சாமிநாதன் said...

அருமையான கருத்துரைக்கு இனிய நன்றி நிலாமகள்!
வாழ்க்கையில் இப்படித்தான், வெறும் வாய்ப்பேச்சில் முன்னணியில் சூரப்புலியாய் இருப்பவர்கள் பின்னணியில் கோழைகளாக இருப்பார்கள்!

மனோ சாமிநாதன் said...

உண்மை தான் ஸ்ரீராம்! இப்படி எத்தனையோ நிகழ்வுகள் வீட்டுக்கு வீடு இருக்கின்றன. இருந்தாலும் அதை ஒத்துக்கொள்ள இயலாத சில கோழைகளும் நாட்டில் இருப்பதைத் தான் அந்த குறும்படத்தில் அழகாகச் சொல்லியுள்ளார்கள்!
இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி!

மனோ சாமிநாதன் said...

You Tube-ல் இருக்கிறது எல்.கே! அவசியம் பாருங்கள். இரண்டாவதும் கிடைக்கிறது. மூன்றாவது தான் எனக்கு தலைப்பு தெரியாததால் ம‌றுபடியும் பார்க்க இயலவில்லை!

மனோ சாமிநாதன் said...

உண்மை தான் கீதமஞ்சரி! சில பிரபல திரைப்படங்களைக் காட்டிலும் இந்த குறும்படங்கள் எவ்வளவோ மேல்! கருத்துரைக்கு அன்பு நன்றி!!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் வெங்கட் நாகராஜ்! Tube-ல் முதலாவதும் இரண்டாவதும் கிடைக்கிறது!

மனோ சாமிநாதன் said...

வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி மலர்!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு இனிய நன்றி ஆதி!

மனோ சாமிநாதன் said...

வாழ்த்துக்களுக்கும் கருத்துப்பகிர்வுக்கும் மனமார்ந்த நன்றி சகோதரர் ரமணி!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்கு அன்பு நன்றி அதிரா!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்கும் கருத்துரைக்கும் இனிய நன்றி மேனகா!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கு அன்பார்ந்த நன்றி ஆசியா!

http://bharathidasanfrance.blogspot.com/ said...

வணக்கம்

மேடைநிறை தமிழைப் பேசும்
மேன்மைமிகு கவிஞன் என்னைக்
கூடைநிறை மலா்கள் துாவிக்
கும்பிட்டு மகிழும் காட்சி!
ஓடைநிறை மரையைப் போன்றறே
உயிர்கவ்வும் பதிவைக் கண்டேன்!
கோடைநிறை சூட்டைப் போக்கிக்
குளிர்விக்கும் இளநீா் என்பேன்!


கவிஞா் கி.பாரதிதாசன்
தலைவா். பிரான்சு கம்பன் கழகம்
http://bharathidasanfrance.blogspot.fr/
kavignar.k.bharathidasan@gmail.com
kambane2007@yahoo.fr