Monday 30 July 2012

முத்துக்குவியல்கள்!!

இன்றைய முத்துக்குவியல் ஒரு தகவல் முத்துடனும் ஒரு அனுபவ முத்துடனும் ஒரு மருத்துவ முத்துடனும் மலருகிறது.

அனுப‌வ‌ முத்து:

சில சமயம் என்றோ நடந்த ஒரு நிகழ்வு பல வருடங்களுக்குப் பிறகு மறுபடியும் வேறொரு சூழ்நிலையில் நினைவுக்கு வந்து நம்மை அதிசயப்படுத்தும். பல வருடங்களுக்கு முன்னால் நடந்த அதே மாதிரி நிகழ்வு
ஒன்று இப்போது நினைவுக்கு வருகிறது....

திருமணமான புதிது. ஏழு கொழுந்தனார்களும் ஒரு நாத்தனாரும், அவர்கள் குழந்தைகளும் மாமியாரும் அடங்கிய பெரிய கூட்டுக்குடும்பம் என்னுடையது. விடுமுறை நாட்களில் அனைவரும் கிராமத்துக்கு வந்து விடுவார்கள்.

அல்லது நாங்கள் இங்கிருந்து [ வெளிநாட்டிலிருந்து ] செல்லும்போது அனைவரும் வீட்டுக்கு வந்து ஒரே கலகலப்பாயிருக்கும் வீடு.

அந்த மாதிரி ஒரு நாளிரவு நடந்த சம்பவம் இது. மின்வெட்டு காரணமாக, அரிக்கேன் விள‌‌க்கு உதவியுடன் நாங்கள் சமைத்து முடித்ததும் வரிசையாக முதலில் குழந்தைகள், பிறகு பெரியவர்கள் அனைவரும் சாப்பிட்டு முடித்தனர். அதன் பிறகு பெண்களாகிய நாங்கள் சாப்பிட அமர்ந்ததும் உடனே மின்னொளி வந்து சமயலறை முழுவதும் ஒளியைப் பாய்ச்சியது. பானையிலிருந்து சாதத்தை எடுத்ததும் என் சின்ன அக்கா அலறினார்கள். எல்லோரும் உள்ளே பார்க்க‌,உள்ளே பல்லி ஒன்று முழுவதுமாக வெந்திருந்தது. அடித்துப்பிடித்துக்கொன்டு வெளியே ஓடி, வெளியே அமர்ந்திருந்த ஆண்களிடம் விஷயத்தைச் சொல்ல, ஒரு நொடியில் வீடே களேபாரமானது.

உடனேயே மாட்டு வண்டி பூட்டி, ஐந்து கிலோ மீட்டர் தூரத்திலுள்ள‌ நீடாமங்கலம் சென்று மருத்துவரை அழைத்து வந்தார்கள். அவர் வருவதற்குள் குழந்தைகள் ஒருத்தர் மாற்றி ஒருத்தர் வாந்தி எடுப்பதும், வயிற்றுப்போக்குமாய் அவதியுறுவதுமாய் அவஸ்தைப்பட ஆரம்பித்திருந்தார்கள். ஒரு வழியாய் மருத்துவர் வந்து வரிசையாக குழந்தைக‌ள் எல்லோரையும் நிற்க வைத்து ஊசி போட்டு, பெரியவர்கள் எல்லோருக்கும் மருந்துகள் கொடுத்து முடித்தார். ' பல்லி விஷமெல்லாம் கிடையாது, யாரும் பயப்பட வேன்டியதில்லை' என்று சொல்லிச் சென்றார். இன்றைக்கும் பயந்து கொன்டு குழந்தைகள் எல்லோரும் நின்ற அந்த காட்சி மறப்பதில்லை.

12 வருடங்கள் கழித்து, பொள்ளாச்சியிலுள்ள என் சினேகிதி வீட்டிற்கு 8 வயதான என் மகனை அழைத்துச்சென்றிருந்தேன். போன இடத்தில், மகனுக்கு உடல் நலம் சரியில்லாததால் மருத்துவரிடம் அழைத்துச் சென்றிருந்தேன். பார்த்ததுமே, அவர் என்னை எங்கோ பார்த்த மாதிரி இருக்கிறதென்றார். மேலும் விசாரித்ததில், ' அந்தப் பல்லி விழுந்த சாதத்தை சாப்பிட்ட வீடா நீங்கள்?" என்றாரே பார்க்கலாம்! உலகம் எத்தனை சிறியது என்று என்னை அதிசய வைக்க வைத்த சம்பவம் இது!

தகவல் முத்து:

பெட்டிக்குள் இருக்கும் அம்மன்
காரைக்கால் அருகேயுள்ள ஊரான திருமலைராயன் பட்டிணத்தில் ஆயிரம் காளியம்மன் திருக்கோவில் உள்ளது. ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை ஒரு பெட்டியிலிருந்து அம்மனை
எடுத்து வழிபாடு நடத்துகிறார்கள்.. மற்ற நாட்களில் கோவிலுக்குச் சென்று பெட்டியை மட்டும் வணங்குகிறார்கள்.. வைகாசி மாதம் வள‌ர்பிறை திங்கட்கிழமை மட்டும்தான் ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை அம்மனை வெளியே எடுத்து பூஜை செய்கிறார்கள். இந்த அம்மனுக்கு எதைப் படைத்தாலும் ஆயிரம், இரண்டாயிரம், மூவாயிரம் என்ற எண்ணிக்கையில்தான் படைக்க முடியும். எனவே தான் இந்த அம்மன் ஆயிரம் காளியம்மன் என்று அழைக்கப்படுகிறாள்.

மருத்துவ முத்து:

அடிக்கடி வரும் தலைவலிக்கு:
அரை ஸ்பூன் சீரகம், 1 கிராம்பு, 2 மிளகு-இவற்றைப் பசும்பால் விட்டு அரைத்து பற்று போடவும்.


34 comments:

Yaathoramani.blogspot.com said...

ஒருவகையில் உலகம் மிக மிக சிறியதுதான்
இத்தனைஆண்டு கழித்து அவர் ஞாபகம் வைத்திருந்தது
ஆச்சரியமளிக்கக் கூடியதாக் இருந்தது
மனம் கவர்ந்த முத்துச்சரம்
தொடர வாழ்த்துக்கள்

vanathy said...

பல்லி விஷம் இல்லையா? இப்ப தான் கேள்விப்படுறேன்.
தலைவலி எனக்கு அடிக்கடி வரும். அடுத்த முறை உங்கள் வைத்தியம் செய்து பார்க்கிறேன். நல்ல பதிவு அக்கா.

MANO நாஞ்சில் மனோ said...

சில சமயம் என்றோ நடந்த ஒரு நிகழ்வு பல வருடங்களுக்குப் பிறகு மறுபடியும் வேறொரு சூழ்நிலையில் நினைவுக்கு வந்து நம்மை அதிசயப்படுத்தும்//

எனக்கும் இதே போல பல சமயம் தோணியது உண்டு....சில கனவில் நான் காணுமிடங்கள் நேரில் பார்த்து குழம்பியதும் உண்டு....இது ஒரு ஆச்சர்யம்தான்....!

Seeni said...

anupavam!

ஸ்ரீராம். said...

அனுபவ முத்து - மின்வெட்டான சமயத்தில் பார்த்து பல்லி சமையலில் கலப்பது விதிதான் போலும். கலவரமாக இருந்திருக்கும்!

அம்மன் தகவல் ஆச்சர்யம்

நிறையப் பேரைப் போல நானும் தலைவலிக்காரன்தான் . குறிப்பு உதவியாக இருக்கும். நாங்கள் சுக்கு மட்டுமோ மிளகு மட்டுமோ இழைத்து பற்று போடுவோம்!

இராஜராஜேஸ்வரி said...

பெரிய கூட்டுக்குடும்பம் -எங்களுடையதும் --


முத்துக்குவியல் அனுபவ்ங்கள் மிளிர்கின்றன்...

ஸாதிகா said...

ஒரு நொடியில் வீடே களேபாரமானது. //இதனைப்படித்தன் என் மனதும் களேபாரமானது.இத்தனை ஆண்டுகள் கழித்தும் ஞாபகத்தில் வைத்திருக்கின்றாரே அந்த மருத்துவர்.!!!!!!!

sathishsangkavi.blogspot.com said...

அனுபவம் புதுமை... அத்தனையும் இனிமை....

Radha rani said...

டாக்டரின் ஞாபகத்திறன் அதிசயபடக் கூடிய விஷயம்தான்..தலைவலிக்கு நல்ல நிவாரணம் தரும் மருத்துவ முத்து.

மனோ சாமிநாதன் said...

வாழ்த்துக்களுக்கும் இனிய கருத்துரைக்கும் அன்பு நன்றி சகோதரர் ரமணி!

மனோ சாமிநாதன் said...

பல்லி விஷம் என்று நானும் அது வரை அப்படித்தான் நினைத்துக்கொண்டிருந்தேன் வானதி! அன்றைக்கு குழந்தைகள் எதுவும் பாதிக்கப்படாமல் இருந்ததினால் மருத்துவர் சொன்னது உண்மை தான் என்று அப்போது நினைக்கத் தோன்றியது! இருந்தாலும் இதைத் தெளிவறத் தெரிந்து கொள்ள வேண்டும்.
கருத்துரைக்கு இனிய நன்றி வானதி!

மனோ சாமிநாதன் said...

நீங்கள் சொல்வது சரி தான் சகோதரர் மனோ! எனக்கும் கனவுகள் சிலவற்றை நிதர்சனமாகப் பார்த்துக் குழம்பிய அனுபவம் உன்டு!

க‌ருத்துரைக்கு அன்பு ந‌ன்றி!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு இனிய நன்றி சகோதரர் சீனி!

மனோ சாமிநாதன் said...

உங்களின் மருத்துவக் குறிப்பும்கூட தெரிந்து கொள்ள‌ வேண்டிய தகவல்தான் Sriram! விரிவான பின்னூட்டத்திற்கு மனமார்ந்த நன்றி!!

மனோ சாமிநாதன் said...

உங்களுடையதும் பெரிய கூட்டுக்குடும்பம் என்பதால் இந்த மாதிரி அனுபவங்களுக்கு கணக்கில்லாமல்தான் இருந்திருக்கும் ராஜ‌ராஜேஸ்வரி! கருத்துரைக்கு அன்பு நன்றி!

மனோ சாமிநாதன் said...

ஆமாம் ஸாதிகா! எனக்கும் நினைக்கும்போதெல்லாம் ஆச்சரியமாக இருக்கும்! தமிழ்நாட்டின் ஒரு கோடியிலிருந்து மறு கோடிக்கு போய் விட்டாலும்கூட அந்த சந்திப்பு நடந்த விதம் மிகவும் ஆச்சரியம்!
கருத்துரைக்கு அன்பு நன்றி!

மனோ சாமிநாதன் said...

வெகு நாட்களுக்குப்பிற‌‌கான தங்கள் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் அன்பு நன்றி சங்கவி!!

குறையொன்றுமில்லை. said...

மலரும் நினைவுகள சுவாரசியமா சொல்லி இருக்கீங்க.

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி ராதா!

MARI The Great said...

இப்போதும் கூட பலருக்கு தெரிவதில்லை பல்லி மனிதனை கொள்ளும் அளவிற்கு அத்தனை விஷத்தன்மை கொண்டது இல்லை என்று!

நிலாமகள் said...

முத்துக்க‌ள் மூன்றும் வெவ்வேறு நிற‌ங்க‌ள்!

ப‌ல்லிக‌ள் அதிக‌ம் ந‌ட‌மாடும் சுவ‌ர்க‌ளில் ம‌யிலிற‌கை ஒட்டி வைத்தால் ம‌ட்டுப்ப‌டும். என் அக்கா ம‌க‌ள் சிறுவ‌ய‌தில் குளிர்பான‌ம் குடித்து பாட்டில் அடியில் ப‌ல்லி இருக்க‌ ப‌ய‌ந்து வைத்திய‌ம் செய்த‌து நினைவுக்கு வ‌ந்த‌து ச‌கோ. உயிர் போகாதெனினும் ப‌ய‌ம் இருக்கிற‌த‌ல்ல‌வா ந‌ம‌க்கு! அம்ம‌ருத்துவ‌ரின் நினைவாற்ற‌லை விய‌க்கிறேன். ச‌டாரென‌ நினைவுக‌ளின் பின்னோக்கிய‌ ப‌ய‌ண‌ம் ம‌றுப‌டியுமொரு உண‌ர்குவிய‌லைத் த‌ரும். என்ன‌... ந‌ட‌ந்து முடிந்த‌தென்ப‌தால் எட்ட‌ நின்று வேடிக்கை பார்ப்ப‌து போன்ற‌தொரு ம‌னோநிலை.

திண்டுக்கல் தனபாலன் said...

அனைத்தும் கருத்துள்ள முத்துக்கள்....
நன்றி அம்மா....


பாடல் வரிகளை ரசிக்க : உன்னை அறிந்தால்... (பகுதி 2)

Menaga Sathia said...

அடிக்கடி தலைவலி வரும்...பயனுள்ள குறிப்புக்கு மிக்க நன்றிம்மா...

VijiParthiban said...

முத்துக்கள் அனைத்தும் அருமை அம்மா . கூட்டு குடும்பம் என்பது எனக்கு மிகவும் பிடிக்கும்... ஆஹா குழந்தைகளின் தவிப்பு எப்படி இருந்திருக்கும் .... அதைவிட மருத்துவரின் ஞாபக சக்தி ஒரு வியப்புதான் நமக்கு....
அருமையான பதிவு... அதில் ஓர் மருத்துவக்குறிப்பு இன்னும் அருமை.....

'பரிவை' சே.குமார் said...

முத்துக்கள் மூன்றும் அருமை...

முதலாவது முத்து மருத்துவரின் ஞாபக சக்தியை நினைத்து மலைக்க வைத்தது.

இரண்டாவது முத்து அம்மன் குறித்த புதிய தகவலை அறிய வைத்தது.

மூன்றாவது முத்து எனக்கு தேவைப்படுவதுதான் என்றாலும் இங்கு பசும்பாலுக்கு எங்கு போவது.

கீதமஞ்சரி said...

பல வருடங்களுக்கு முன் சந்தித்த ஒருவரை மருத்துவர் நினைவில் வைத்திருப்பது மிகவும் வியப்பான தகவல். பல்லி விஷமில்லை என்று தியோடர் பாஸ்கரன் அவர்கள் தான் எழுதிய புத்தகமொன்றில் குறிப்பிட்டிருக்கிறார். உணவில் பல்லி என்ற எண்ணமே நம்மைப் பதறவைத்து அருவறுப்பு, பயம் இவற்றால் வாந்தி வருவதாக அறிகிறேன்.

திருமலைராயன் பட்டிணத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சிலதடவை சென்றிருக்கிறேன். ஆயிரம் காளியம்மன் பற்றிய செய்தியை இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.

பகிர்வுக்கு நன்றி மேடம்.

மனோ சாமிநாதன் said...

பாராட்டுதல்களுக்கு அன்பு நன்றி லக்ஷ்மிம்மா!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துக்கு அன்பு நன்றி வரலாற்றுச்சுவடுகள்!

மனோ சாமிநாதன் said...

உங்களுக்கும் இந்த அனுபவம் இருக்கிறதா நிலா?
நானும் எங்கள் வீட்டில் [தஞ்சையில்] மயில்பீலிகளை அங்கங்கே ஒட்டி வைத்திருக்கிறேன் இந்தப் பல்லிகளுக்கு பயந்து கொண்டு!!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுதல்களுக்கு அன்பு நன்றி சகோதரர் தனபாலன்!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு அன்பு நன்றி மேனகா!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டுக்கு மனம் நிறைந்த நன்றி விஜி!

மனோ சாமிநாதன் said...

விரிவான கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் குமார்!

மனோ சாமிநாதன் said...

விரிவான கருத்துரைக்கு இனிய‌ நன்றி கீதா!