Monday 23 July 2012

பாலைவனத்தில் பணிப்பெண்கள்!!

நம் தமிழ்நாட்டில் இப்போதெல்லாம் வீட்டு வேலைக்கு பணிப்பெண்கள் கிடைப்பதில்லை. வீட்டு வேலையைக்காட்டிலும் கட்டிட வேலையில் அதிகம் சம்பாதிக்க முடிகிறது என்பதால்தான் வீட்டு வேலைக்கு பெண்கள் வர மறுப்பதாகச் சொல்லுகிறார்கள். மீதி இருப்பவர்கள் இருக்கும் சொத்தையெல்லாம் விற்று, பல ஏஜென்சிகள் மூலம் பல நிபந்தனைகளுக்குட்பட்டு, வீட்டு வேலைக்கு அமீரகத்திற்கு வருகின்றனர். இவர்கள் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு இங்கு வந்தார்கள் என்பதற்கு பல விதமான சோகக்கதைகள் இருக்கின்றன.



இங்கே அமீரகத்தில் வீட்டு வேலைகள் செய்யும் பணிப்பெண்களின் கூட்டம் அதிகமாகி வருகிறது. பெரும்பாலும் இந்தியப் பெண்களும், மற்றும் இலங்கை, பிலிப்பைன்ஸ் நாடுகளிலிருந்து வந்த இளம் பெண்களும் தான் இந்த வேலைகளைச் செய்து வருகின்றனர். ஒரு வீட்டில் குளியலறை, டாய்லட் கழுவுவது, வீட்டை சுத்தம் செய்வது, பாத்திரங்கள் கழுவுவது, துணிகளைத்துவைத்து காயவைப்பது, காய்ந்த துணிகளை மடித்து வைப்பது என்று தினமும் வேலைகள் செய்கிறார்கள். வெள்ளிக்கிழமைகள் இங்கே அரசு விடுமுறை என்பதால் அன்று மட்டும் விடுமுறை எடுத்துக்கொள்கிறார்கள். அன்றைய தினம் அவர்களின் வீட்டை சுத்தம் செய்வது, துணி துவைப்பது, சொந்த வேலைகளை கவனிப்பது என்றாகி விடுகிறது. இன்னும் சில பெண்கள் வாரம் முழுவதும் ஒரே வீட்டில் தங்கி வேலைகள் செய்வது, வெள்ளிக்கிழமைகளில் மட்டும் தன் அறைக்கு வந்து போவது என்றிருக்கிறார்கள். சில பேர்கள் குழந்தையை கவனிப்பதும் மட்டும் செய்கிறார்கள். இன்னும் சில பேர்கள் சமையலுக்கு மட்டும் வீடுகளுக்குச் சென்று செய்கிறார்கள். நான்கு பேர்களாக ஒரு அறை என்று பல அறைகள் கொண்ட வில்லா ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கிக் கொள்கிறார்கள். ஒரு அறைக்கு மாத வாடகை 1000 திரஹம் [ஏறத்தாழ 13000ரூ] செலவாகிறது இவர்களுக்கு. அதை மற்றவர்களுடன் பங்கு போட்டுக்கொள்கிறார்கள்.



ஒரு வீட்டில் ஒன்றரை மணி நேரம் வேலை செய்ய பெரும்பாலும் மாதம் 500 திரஹம் வாங்குகிறார்கள். ஒரு நாளைக்கு ஆறிலிருந்து எட்டு வீடுகள் வரை வேலை செய்கிறார்கள்.

கணவனைப்பிரிந்து, குடும்பத்தைப்பிரிந்து, உழைக்க ஆரம்பித்த இவர்கள், தங்கள் குழந்தைகள் கல்லூரியில் படிப்பதைப் பெருமையுடன் சொல்லிக்கொள்கிறார்கள். பெண் குழந்தைகள் என்றால், நகைகள் திருமணத்தின்போது வாங்கி சீதனமாகக் கொடுக்க வேண்டுமென்பதால், அவற்றை வாங்கி கொஞ்சம் கொஞ்சமாக சேமித்து வருவதைச் சொல்கிறார்கள். இதில் கடுமையான நோய்களுடன் சிலர் வேலைகளைச் செய்து வருவதைப்பார்க்கையில் பரிதாபமாகவே இருக்கிறது. கொஞ்சம் சாமர்த்தியமுள்ள பெண்கள், தாங்கள் வேலை செய்யும் வீடுகளில் சொல்லி கணவனுக்கும் மெல்ல மெல்ல விசா வாங்கி இங்கு அழைத்துக்கொள்கிறார்கள். அவர்களின் வாழ்க்கைச் சக்கரத்தை கொஞ்சம் சுலபமாக சுழல வழி செய்து கொள்கிறார்கள். எத்தனை சம்பாதித்துக் கொடுத்தாலும் திருப்தி படாத அம்மா, எத்தனை சம்பாதித்து அனுப்பினாலும் அதைக் குடித்தே அழிக்கும் கணவன்கள்-வாழ்க்கை இவர்களுக்கு நெருஞ்சி முள்ளாய்த்தான் நகருகின்றது. சிறு வயதில் பிரிந்து, வளர்ந்து வந்த மகள் பூப்பெய்தியதை அறிந்து கண்களில் கண்ணீர் வழிய புலம்பி பேசுவதைக் கேட்கையில் மனம் கனமாகின்றது.




சென்ற மாதம் என் வீட்டில் வேலை செய்யும் பெண் சொன்னது. தெரிந்த பெண் ஒன்று ஒரு அரேபியர் வீட்டில் வேலை செய்கிறதாம். அந்தப் பெண்ணை வீட்டில் காவலுக்கு வைத்து விட்டு அடிக்கடி வெளியே செல்வது அவர்களுக்கு வழக்கம். ஒரு முறை அந்த மாதிரி அவர்கள் சென்றதும் இந்தப் பெண் வீட்டைப் பூட்டிக்கொண்டு படுத்திருக்கிறது. அது வரை அந்தப் பெண்ணுக்கு சர்க்கரை நோய் இருப்பது அதற்கே தெரிந்திருக்கவில்லை. அன்றைக்கு அதற்கு சர்க்கரை மிக அதிகமாகி, படுத்ததுமே கோமாவில் அந்தப் பெண் விழுந்து விட்டதாம். மறு நாள் வீட்டுக்கு உரியவர்கள் கதவை உடைத்துக்கொண்டு வந்து உள்ளே தேடி, இந்தப் பெண் நினைவிழந்து கிடப்பதைப்பார்த்து உடனேயே மருத்துவ மனையில் சேர்த்திருக்கிறார்கள். பல நாட்கள் கோமாவிலேயே கிடந்து, ஒரு நாள் நினைவு திரும்பியது அந்தப் பெண்ணுக்கு!! அது வரை அந்தப்பெண்ணின் குடும்பத்தினருக்கு இந்த செய்தியைத் தெரிவிக்கவில்லை!! பாவம், இந்தியாவில் அவர்கள் கனவு தானே கண்டு கொண்டிருந்திருப்பார்கள்?

பொதுவாய் நம் நாட்டவர் யாராவது ஒரு முழு வீட்டையோ அல்லது ஒரு வில்லாவையோ வாடகைக்கு எடுத்து, இது மாதிரி ஒரு அறையில் மூன்று பேர், நான்கு பேர் என்று வாடகைக்கு விட்டு அதிகம் சம்பாதிப்பது இங்கு பரவலாக இருக்கிறது. என் வீட்டில் வேலை செய்யும் பெண் பெயர் குமாரி. மூன்று குழந்தைகளுக்குத் தாய். காலை 7 மணிக்கு எழுந்து வேலை செய்யப்போனால் மாலை வீட்டுக்குத் திரும்பும்போது, மொத்தம் 8 வீடுகளில் வேலைகள் முடிந்திருக்கும். ஒரு நாள், குமாரி வழக்கம்போல வீடுகளில் வேலை செய்து விட்டுத் திரும்பிய போது, அந்தப்பெண் குடியிருக்கும் வில்லாவிற்கு முழுவதுமாய் வாடகை கொடுத்துக்கொண்டிருக்கும் ஒருவன் அந்தப்பெண்ணையும் மற்ற பெண்களையும் உள்ளே நுழைய வேண்டாம் என்று சொல்லி விட்டான். கேரள நாட்டவனான அவன் “ வேலை செய்யும் பெண்களுக்கு ஏன் வீட்டை வாடகைக்குக் கொடுப்பது நான் ஏதோ வேறு தொழில் செய்து சம்பாதிப்பதாய் அரசு அதிகாரிகளுக்கு செய்தி போயிருக்கிறது. அவர்கள் இன்னும் ஓரிரு நாட்களில் சோதனையிட வரப்போகிறார்கள். அதனால் நான்கு நாட்கள் கழித்து எல்லோரும் வாருங்கள்’ என்று சொல்ல இந்தப் பெண்கள் எல்லோருமே திகைத்துப்போய் ‘ அதுவரை நாங்கள் எங்கே போய் இருப்போம்?’ என்று கேட்க, அவனோ ரொம்ப சாதாரணமாக ‘ அது உங்கள் பிரச்சினை’ என்று சொல்லி கதவை அடைத்துக்கொண்டிருக்கிறான். மாற்றுத்துணிகள்கூட எதையும் எடுத்துக்கொள்ள அவன் அனுமதிக்கவில்லை. அந்த நான்கு நாட்களும் தெரிந்த மற்ற பணிப்பெண்கள் வீட்டில் தங்கி, வீடு திரும்ப கிடைக்குமா, கிடைக்காதா என்ற பயத்திலும் தவிப்பிலும் அவர்கள் அவஸ்தையுடன் நேரத்தைக் கழித்ததைப்பற்றி அறிந்த போது மிகவும் பரிதாபமாக இருந்தது இந்த பணிப்பெண்களை நினைத்து!!

சாண் வயிற்றுக்காக என்பதை விட, தாய் நாட்டில் தன் குடும்பம் நன்றாக வாழ வேண்டும் என்ற நினைப்புடன் கடும் குளிரிலும் தகிக்க வைக்கும் சூட்டிலும் மொழி தெரியாத இடத்தில், அலைந்து திரிந்து கடுமையாக உழைத்து சம்பாதிக்கும் இந்தப் பெண்கள் உண்மையிலேயே பாராட்டுக்குரியவர்கள்!!



28 comments:

Radha rani said...

தாய் மண்ணை பிரிந்து உடல்,பொருள்,ஆவி அனைத்தையும் அர்பணித்து இவர்களுக்கு பின் வரும் சந்ததிகள் தழைக்க இத்தனை கஷ்டங்களையும் தாங்கும் இவர்களின் வாழ்க்கை பாராட்டிற்குரியதே.. ஒரு வகையில் பரிதாபமானதே..

சேகர் said...

இங்கு நம்மை பிழைக்க விடாததால் தான் நாம் இது போன்று பாலைவனம் நோக்கி செல்கிறேன்.

ஸாதிகா said...

சாண் வயிற்றுக்காக என்பதை விட, தாய் நாட்டில் தன் குடும்பம் நன்றாக வாழ வேண்டும் என்ற நினைப்புடன் கடும் குளிரிலும் தகிக்க வைக்கும் சூட்டிலும் மொழி தெரியாத இடத்தில், அலைந்து திரிந்து கடுமையாக உழைத்து சம்பாதிக்கும் இந்தப் பெண்கள் உண்மையிலேயே பாராட்டுக்குரியவர்கள்!!///உண்மைதான்.எங்கள் வீட்டில் இங்கு வேலை செய்யும் பெண் காலை ஐந்தரைமணிக்கு எந்ழுது வேலைக்கு சென்றால் பத்து வீடுகளிலும் வேலை ச்ய்து வீடு திரும்ப மணி இரண்டாகி விடும்.மாதம் பனிரெண்டாயிரத்துக்கும் மேல் சம்பாதிக்கிறாள்.மாலை நேரம் பூ வியாபாரம். வேறு.இப்படி அசுர உழைப்பாளிகள் எங்கும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

MARI The Great said...

என்ன செய்வது உலகில் பிறந்தாயிற்று.. இனி இறக்கும் வரை வாழ வேண்டுமே!

ஸ்ரீராம். said...

பரிதாபத்துக்குரியவர்கள்.

வெங்கட் நாகராஜ் said...

பரிதாபமான நிலை கண்டு மனம் கலங்குகிறது. வேறென்ன சொல்ல...

vanathy said...

Very sad to read. Very nice post.

குறையொன்றுமில்லை. said...

ரொம்பவே கஷ்ட்டமான விஷயம்தான் நானும் வெளி நாடு போனப்போ பாத்திருக்கேன் ஆனா டெய்லி வர மாட்டாங்க வாரத்துக்கு ஒரு முறைதான் வருவாங்க ஒரு மணி நேரத்துக்கு இவ்வளவுன்னு பணம் கொடுக்கனும்.

pudugaithendral said...

ரொம்பவே கஷ்டமான விஷயம்தான்.

இலங்கையில் இந்தமாதிரி வேலைக்காக வெளிநாடு செல்லும் பெண்கள் ரொம்ப அதிகம். பலவீடுகளில் பெண்கள்தான் ப்ரெட் வின்னர்களாக இருக்காங்க. பல கதைகள் நானும் கேள்விபட்டிருக்கேன்.

என் தோழிகள் சிலர்க்கு வேறுமாதிர்யான அனுபவங்களும் உண்டு. வெளிநாடுகளில் வீட்டுவேலைகள் செய்பவர்களுக்கும் கூட சில ரூல்ஸ் இருப்பதால், “என்னை அடித்தார்,கொடுமை படுத்தினார்”என போலீஸ் கம்ப்ளையெண்ட் கொடுத்து அநியாயமாக பணம் பிடுங்கி போன வேலைக்காரர்களும் உண்டு.

:((

திண்டுக்கல் தனபாலன் said...

வேதனைதரும் விசயங்கள்...
ஒரு சாண் வயிற்றுக்கு என்னென்ன பாடுபட வேண்டியிருக்கு...

unknown said...

வணக்கம்
நிலைமையை சரியாக சொன்னிர்கள் -
தங்கள் வலைப்பதிவு மிக அருமை
என்னுடைய புதிய வலை பதிவு ( blog ) .
என் கவிதுளிகளின் தொகுப்பு இங்கே ,
வாசிக்க இங்கே சொடுக்கவும்
http://kavithai7.blogspot.in/
புது கவிதை மழையில் நனைய வாருங்கள்
நீங்கள் தமிழர் என்ற பெருமிதத்துடன்
என்றும் அன்புடன்
செழியன்.....

VijiParthiban said...

ஆமாம் மனோஅம்மா அவர்களை பார்க்கும் பொழுதே கஷ்டமாக இருக்கு நமக்கு.... அவர்களின் அனுபவத்தை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி....

நிலாமகள் said...

நாம் அறியாத‌வைக‌ளும் அனுப‌விக்காத‌வைக‌ளும் காணும் போதும் கேட்கும் போதும் அதிச‌யித்தும் அனுதாபித்தும் நெக்குருகுகிறோம். அனைவ‌ரும் ஜீவ‌ காருண்ய‌த்துட‌னும் நேர்மையுட‌னும் ந‌ட‌க்க‌ (முடியாதெனினும்) முய‌ற்சித்தால் பெரும்பான்மை இம்சைக‌ள் ம‌ட்டுப்ப‌டும்.

ந‌ம் பாதை செப்ப‌னிட‌ப்ப‌ட்டுள்ள‌தா பிற‌ர் எக்கேடு கெட்டாலென்ன‌ என்றிறாம‌ல் ச‌க‌ ம‌னித‌ர்க‌ளைக் க‌ருணையோடு க‌வ‌னிக்கும் த‌ங்க‌ள் குண‌ம் போற்ற‌த் த‌க்க‌தே.

'இவ்வ‌ள‌வு த‌ர‌வேண்டியிருக்கிற‌தே' என‌ எளிய‌வ‌ர்க‌ளை க‌ண்டு பெருமூச்சாவ‌து விடாம‌ல் இருக்க‌ச் செய்யும் த‌ங்க‌ள் ப‌திவு.

அயோக்கிய‌ர்க‌ள் எங்குதானில்லை. இர‌ங்க‌த்த‌க்க‌வ‌ர்க‌ளும் எங்கும் நிறைந்திருக்கின்ற‌ன‌ர்.

Anonymous said...

மிக சோகம், பயங்கரமான நிலை பற்றி எழுதியுள்ளீர்கள். எங்கும் இது நடக்கிற சோகமே ஒவ்வொன்றும் ஒவ்வோரு மாதிரி. பெண்களிற்கு மனதைரியம் கிட்டட்டும்.
வேதா. இலங்காதிலகம்.

மனோ சாமிநாதன் said...

விரிவான கருத்துரைக்கு அன்பான நன்றி ராதாராணி!!

மனோ சாமிநாதன் said...

உண்மைதான் சேகர், ஆனால் வெளி நாட்டில் நிறைய சம்பாதிக்க வாய்ப்பிருக்கிறது என்பதும் ஒரு உண்மை!

கருத்துரைக்கு அன்பு நன்றி!

மனோ சாமிநாதன் said...

உண்மை தான் ஸாதிகா! மென்மையானவர்கள் என்ற சொல்லுக்கு நேரெதிராக அசுர உழைப்பாளிகளாய்தான் இந்தக் கீழ்மட்ட பெண்கள் வாழ்கிறார்கள்!

கருத்துரைக்கு இனிய நன்றி!

மனோ சாமிநாதன் said...

வரலாற்றுச்சுவடுகளின் கருத்துரைக்கு இனிய நன்றி!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி சகோதரர் வெங்கட் நாகராஜ்!

மனோ சாமிநாதன் said...

Thanks a lot for the nice feedback Vanathy!

மனோ சாமிநாதன் said...

நாட்டுக்கு நாடு மாறுபடுகிறது போலிருக்கு லக்ஷ்மிம்மா! கருத்துரைக்கு அன்பு நன்றி!!

மனோ சாமிநாதன் said...

விரிவான பின்னூட்டம் ம‌ன மகிழ்வைத் தருகிறது புதுகைத் தென்றல்!

நீங்கள் சொல்வது மாதிரி இங்கும் நடக்கின்றன! நான் ஒரு பக்கத்தை மட்டும்தான் எழுதியிருக்கிறேன். இவர்களின் புகார்களுக்கு இங்கும் அதிகம் நியாயம் கொடுக்கப்படுகின்றன அதிகம் விசாரிக்கப்படாமலேயே! நிறைய சமயங்களில் வேலைக்கு வைத்துக்கொள்பவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதும் உண்மை!

மனோ சாமிநாதன் said...

முதல் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் அன்பு நன்றி செழியன்!!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி தனபாலன்!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கும் வருகைக்கும் அன்பு நன்றி விஜி!

மனோ சாமிநாதன் said...

விரிவான க‌ருத்துரைக்கு அன்பு நன்றி நிலா!

மனோ சாமிநாதன் said...

அனுதாபத்துடன் கூடிய கருத்துப்பகிர்வுக்கு இனிய நன்றி வேதா!

RajalakshmiParamasivam said...

வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்