ஸ்வாலே- Swa Le!
REPORTER, என்பது
இதன் அர்த்தம்.
2009-ல் வெளி வந்த இந்த மலையாளத் திரைப்படத்தை சமீபத்தில்
பார்த்தேன். ஒரு ரிப்போர்ட்டராக, செய்திகள் சேகரிப்பவராக வாழும் மனிதனுக்கு எத்தனை
நிர்ப்பந்தங்கள், சுமைகள், கவலைகள் என்பதை இந்தத் திரைப்படம் மிக அருமையாக
சித்தரிக்கிறது. நடிகர் திலீப் ஆசாபாசங்களுக்கு இடையே சிக்கித் தவிக்கும் மனிதனாக
இதில் வாழ்ந்து காட்டியிருக்கிறார். நல்லொழுக்கமும் நல்ல பழக்க வழக்கங்களும் உயர்ந்த
சிந்தனைகளும் உடைய மனிதனாய் வாழ்ந்து கொண்டிருந்தாலும் தொடர்ந்து அப்படி வாழ்வது ஒரு
மனிதனுக்கு எத்தனை சிரமம் இந்த வாழ்க்கையில் என்ற கரு தான் கதையின் அடி நாதம்.
இன்றைய வாழ்க்கையின் அத்தியாவசியப் பொருளான ‘கைபேசி’
என்ற ஒன்று இல்லாத எண்பதுகளில் நடந்த கதையாக இந்தப் படம் செல்லுகிறது.
வீட்டை எதிர்த்து, வெளியேறி காதாநாயகன் திலீப்பும்
அவர் நேசித்த பெண்ணான கோபிகாவும் திருமணம் செய்து கொண்டு ஒரு சிறிய கிராமத்தில்
வீடு பிடித்து வாழுகிறார்கள். ஒரு சிறு ஆற்றைக் கடந்து தினமும் கதாநாயகன் தன்
பத்திரிகை அலுவலகம் வந்து தனக்கான பயணங்களையும் அலுவல்களையும் மேற்கொள்ள வேண்டும்.
இளம் மனைவி தாய்மையடைந்து, அருகேயிருந்து பார்த்துக்கொள்ள யாருமேயில்லாத சூழ்நிலையில்
ஒரு சாதாரண பத்திரிகை அலுவலகத்தில் குறைந்த சம்பளத்தில் தினமும் கதாநாயகன் அல்லல்படும்
வாழ்க்கையிலிருந்து தொடங்குகிறது கதை.
ஞானபீட விருது பெற்ற அறிஞரும் எழுத்தாளருமான
சிவசங்கரன் பிள்ளை, எல்லா உறுப்புக்களும் மெல்ல உயிர் விட்ட நிலையில் இறப்பை
நோக்கி நினைவிழந்து கிடக்கிறார். அவரின் இறப்பு தன் பத்திரிகையில்தான் முதலில் வர
வேண்டும் என்று ஒவ்வொரு பத்திரிகையும் தன் ரிப்போர்ட்டரை அவர் இல்லத்தருகே
நாட்கணக்காக தவம் கிடக்க வைக்கிறது. ஒவ்வொரு ரிப்போர்ட்டரும் அலைபேசி வசதியின்றி,
குடும்பத்துடன் பேச வழியின்றி பல வித மன உளைச்சல்களுடன், அவசரங்களுடன் ஆதங்கக்குமுறல்களுடன்
தவித்து நெகிழ வைக்கிறார்கள். கடைசிப் பதிவு பத்திரிகையில் ஏற வேண்டிய,
விடியற்காலை 3 மணி வரை காத்திருந்து விட்டு, அதன் பின் தன் சைக்கிளில் தன்
கிராமத்துக்குப் பறக்கும் கதாநாயகன், அந்த சிறிய ஆற்றைக் கடக்க பகலில் அடிக்கடி
வந்து செல்லும் படகு இல்லாததால் நீந்தியே அதைக்கடந்து, வீட்டை அடைந்து தன் மனைவி
அமைதியாக தூங்குவதைப்பார்த்ததும் ‘ அப்பாடா’ என்று பெருமூச்செறிகிறான். ஒரு
அன்பான, அக்கறையான நியாயமான பயம் அது!
எழுத்தாளர் சிவசங்கரன் கதாநாயகனின் சிறு வயதில்
அவனுக்கு ஒரு ஆதர்ச குருவாக இருந்து அறிவையும் எழுத்தையும் சில காலங்கள் சொல்லிக்
கொடுத்தவர். அவர் இப்படி அசையாது கிடப்பதைப் பார்க்கும் திலீப் கண் கலங்கி அவர்
நலமாக உயிர்த்தெழ வேண்டி முதலில் பிரார்த்தனை செய்து கொள்கிறான். நாளாக நாளாக, மனைவியின்
அனாதரவான நிலையும் தன் கையாலாகாதத் தனமும் அவனின் நல் உனர்வுகளை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்க
ஆரம்பிக்கிறது. ஒரு கட்டத்தில் ‘ எப்போது தான் இவர் இறந்து போவார்?’ என்ற சலிப்பு
அவனுக்கே ஏற்பட்டதும் அவன் மனது கலங்கிப்போகிறது. தன் சக ரிப்போர்ட்டரிடம் ‘
நாமெல்லாம் கூட பினம் தின்னிக்கழுகுகள் மாதிரி தான் இல்லை?’ என்று கசந்து போய்
சொல்லுகிறான். மேலும் சில நாட்கள் அப்படியே கடந்து செல்ல, மனைவின் பிரசவ பயமும்
அவளை அருகேயிருந்து கவனிக்க முடியாத தன்னிரக்கமும், சட்டென்று அந்த வேலையை உதறி
விட முடியாத ஆத்திரமும் ‘ ஒன்றுமேயில்லாத, எல்லா உறுப்புகளும் செயலற்றுப்போன அந்த
மனிதரை நாமே தான் கொன்றால் என்ன?’ என்று முடிவெடுக்க வைக்கிறது. நள்ளிரவில் அந்த
முடிவை செயல்படுத்த அவரின் வீட்டிற்குள் புகுந்த அவன், தன் சிறு வயதில் பார்த்த
அவரின் புகைப்படத்தைப் பார்க்கிறான். அவர் சொல்லிக்கொடுத்த அனைத்தும் நினைவுக்கு
வருகையில் மனம் கூசிப்போகிறான் அவன். திரும்ப நினைக்கும்போது, யாரோ உள்ளிருந்து
ஓடுவதைப் பார்த்து அவனைத் துரத்துகிறான். பிடிபட்டது, அவனுடன் பழகிய சக
ரிப்போர்ட்டர்தான். கதறி அழும் அவன் திலீபிடம் ‘ என்னால் குடும்பத்தை விட்டு
இப்படி மன உளைச்சல் தினம் தினம் பட முடிய வில்லை. அதனால்தான் அப்படி செய்தேன். அவரைக்
கொன்று விட்டேன். நீயே உன் பத்திரிகை ஆபிஸில் சொல்லி முதல் செய்தியாக போட்டுக்கொள்.
எனக்கது வேண்டாம். நான் தான் இந்தக் கொலையைச் செய்தேன் என்று மட்டும் யாரிடமும்
சொல்லி விடாதே’ என்று காலைப்பிடித்துக் கண்ணீர் விடுகிறான்.
படம் இதோடு முடியவில்லை. பின்னாளில் திலீப் அதே
எடிட்டர் நாற்காலியில் அமர்ந்து,‘ தன் மனைவியைப் பார்க்க மருத்துவ மனை செல்ல
வேண்டும்’ என்று கெஞ்சும் இளம் ரிப்போர்டரிடம் ‘ உன் மனைவியை யார் வேண்டுமானாலும்
பார்த்துக்கொள்ளலாம். இந்த செய்தியை நம் பத்திரிகை தான் போட வேண்டும் முதலில். அதற்கான
வழியைப்பார்’ என்று அதட்டும் ஒரு முதலாளியாக மாறிய திலீப்புடன் முடிகிறது!!
சந்தர்ப்பங்களும் தத்தளிப்புகளும் மட்டும் ஒரு மனிதனை
மாற்றுவதில்லை, பதவியும் பணமும்கூட அவனை மாற்றுகிறது என்பதை முகத்தில் அறைவது போல
இந்தப்படம் சொல்லி முடிக்கிறது.
அனைவரும் பார்க்க வேண்டிய அருமையான திரைப்படம் இது!!
26 comments:
//சந்தர்ப்பங்களும் தத்தளிப்புகளும் மட்டும் ஒரு மனிதனை மாற்றுவதில்லை, பதவியும் பணமும்கூட அவனை மாற்றுகிறது என்பதை முகத்தில் அறைவது போல இந்தப்படம் சொல்லி முடிக்கிறது.//
யதார்த்தத்தை சொல்லும் வரிகள்
எப்படியாவது இந்த படத்தை பார்க்கவேண்டும் என்று ஆவலை தூண்டுகிறது அக்கா உங்கள் விமரிசனம் .
சந்தர்ப்பங்களும் தத்தளிப்புகளும் மட்டும் ஒரு மனிதனை மாற்றுவதில்லை, பதவியும் பணமும்கூட அவனை மாற்றுகிறது//
உண்மைதான். அருமையான விமர்சனம்!
அக்கா,நான் படமே பார்ப்பதில்லை.உங்களின் இந்த விமர்சனம் வரிவிடாமல் படித்து விட்டேன்.
//சந்தர்ப்பங்களும் தத்தளிப்புகளும் மட்டும் ஒரு மனிதனை மாற்றுவதில்லை, பதவியும் பணமும்கூட அவனை மாற்றுகிறது என்பதை முகத்தில் அறைவது போல இந்தப்படம் சொல்லி முடிக்கிறது.
// அருமையாக சொல்லி முடித்து இருக்கின்றீர்கள்.
//சந்தர்ப்பங்களும் தத்தளிப்புகளும் மட்டும் ஒரு மனிதனை மாற்றுவதில்லை, பதவியும் பணமும்கூட அவனை மாற்றுகிறது என்பதை முகத்தில் அறைவது போல இந்தப்படம் சொல்லி முடிக்கிறது.//
உங்கள் பார்வையும் விமர்சனமும் அழகா இருந்ததது. வாழ்த்துக்கள் சார். கண்டிப்பாக இந்தப் படம் பார்கிறேன்
சென்னை சிங்காரச் சென்னை
படம் பார்க்கும் ஆவலை தூண்டுகிறது உங்கள் விமர்சனம் நன்றி...!!!
எவ்ளோ அருமையா இருக்கு கதை. அதை நீங்க சொன்ன விதமும் தான் ! நீங்கள் ஒரு நல்ல கதை சொல்லி என்பது தெரிகிறது மேடம்.
இத்தகைய படங்கள் மலையாளத்தில் தான் பார்க்க முடியும். முடிவும், கடைசியில் இன்னொரு ரிப்போர்டரிடம் அதே மாதிரி திலீப் பேசுவதும் செம !
படம் பார்க்க வேண்டும் என்கிற ஆவலை தூண்டுவதாக இருக்கு உங்க விமர்சனம்.
// சந்தர்ப்பங்களும் தத்தளிப்புகளும் மட்டும் ஒரு மனிதனை மாற்றுவதில்லை, பதவியும் பணமும்கூட அவனை மாற்றுகிறது என்பதை முகத்தில் அறைவது போல இந்தப்படம் சொல்லி முடிக்கிறது.//
சிறப்பாக இருக்கு.
உங்களின் விமரிசனமே படம் பார்த்ததுபோல இருக்கு.
இந்தப் படம் குறித்து தங்கள் பதிவின் மூலமே அறிகிறேன்
தாங்கள் கதை சொல்லிச் சென்ற விதம் அவசியம்
படத்தைப் பார்க்கவேண்டும் என்கிற
எண்ணத்தைத் தூண்ப்டிப் போகிறது
பகிர்வுக்கு நன்றி
தொட்ர வாழ்த்துக்கள்
முடிவில் சொன்ன கருத்து சற்று உறுத்தலாக இருந்தாலும் அது தான் பலர் வாழக்கையில் உண்மையாகி விடுகிறது மனோ அக்கா.
படத்தைப் பார்க்கத் தூண்டுவது போல அமைந்திருக்கும் விமர்சனம் என்றெழுதியதற்கு அன்பு நன்றி ஏஞ்சலின்! அவசியம் படத்தைப் பார்த்து விட்டுச் சொல்லுங்கள்!!
கருத்திற்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி நிலாமகள்!!
பாராட்டிற்கு மனமார்ந்த நன்றி ஸாதிகா! திரைப்படம் எதுவும் பார்ப்பதில்லை என்பது ஆச்சரியமே! நிறைய, இது போன்ற நல்ல திரைப்படங்களை மிஸ் பண்ணிக்கொண்டிருக்கிறீர்கள் என்பது மட்டும் உண்மை!!
கருத்துரைக்கு அன்பு நன்றி சீனு குரு!
அன்பான கருத்துரைக்கும் நீண்ட நாட்களுக்குப் பின்னான வருகைக்கும் அன்பார்ந்த நன்றி நாஞ்சில் மனோ!!
உங்களின் விமர்சமும் அருமை மோகன்குமார்! உண்மை தான்! இத்தைகைய தாக்கம் மிகுந்த படங்களை மலையாள சினிமாவில்தான் நிறைய பார்க்க முடியும். கருத்திற்கும் பாராட்டுதலுக்கும் இனிய நன்றி!!
பாராட்டுதலுக்கு அன்பு நன்றி ரமா!
பாராட்டுதலுக்கு இனிய நன்றி லக்ஷ்மிம்மா!
அவசியம் படத்தைப் பாருங்கள் சகோதரர் ரமணி! என் விமர்சனத்தையும் விட படம் மிகவும் நன்றாக இருக்கும்! கருத்துரைக்கு அன்பு நன்றி!
நீங்கள் சொல்வது உண்மை தான் ஆசியா! படத்தின் இறுதியில் நிதர்சனத்தைக் காட்டினாலும் அது ரசிக்கவில்லைதான்!
நிஜம் எப்போதும் முகத்தில் அறைகிறது பலமாய்..
பல மலையாளத் திரைப் படங்கள் மிக இயல்பான கதை அம்சத்தைக் கொண்டு வெளிவருகின்றன. அதில் ஒன்று இதுவும் போலும். நல்ல அறிமுகம்.
அருமையான திரைப்படம் . அதனை அழகாகக் கொண்டு வந்திருக்கின்றீர்கள். கடமை என்று வருகின்றபோது மனமும்கல்லாகிப் போகுமென்று நினைக்கின்றேன். மனித மனம் எப்படியும் மாறக்கூடியது தான் என்பதும் உண்மையே. நன்றி
நல்ல விமரிசனம் மிக்க நன்றி.
வேதா. இலங்காதிலகம்.
படம் பார்த உணர்வு வந்தது உங்களது விமர்சனம் படித்த போது
அருமையான விமர்சனம்.
அருமையான விமர்சனம்.
Post a Comment