Sunday, 26 February 2012

முருங்கைக்காய் தொக்கு

சமையலுக்கென தனியான வலைப்பதிவும், 2002லிருந்து எழுதி வரும் இன்னொரு வலைப்பதிவு இருந்தாலும், முத்துச் சிதறலில் கொடுக்கும் சமையல் முத்துக்களை மட்டும் மிகச் சிறந்ததாகவே இது வரை கொடுத்து வருகிறேன்.


அந்த வகையில் இந்தப் பதிவில் நான் தரவிருப்பது முருங்கைக்காய்த்தொக்கு. இந்த குறிப்பை என் சினேகிதி எனக்குத் தந்து பல மாதங்களாகியும் இது வரை நான் அதை செய்து பார்க்காமலேயே இருந்தேன். நல்ல சதைப்பற்றாக, ருசிகரமான, இளசான முருங்கைக்காய்



 இங்கே இலேசில் கிடைக்காது. கிடைக்கும்போது, வேறு வேலைகள் குறுக்கிட்டு இந்தக் குறிப்பை செய்வதை தள்ளிப்போட்டுக் கொண்டே வந்தேன். சென்ற வாரம்தான் இதை எப்படியும் செய்து விடுவது என்ற முடிவில் இறங்கி, தமிழ்நாட்டைச் சேர்ந்த கடையொன்றில் முருங்கைக்காய்களை தேடிப்பிடித்து வாங்கி இந்த தொக்கை செய்து முடித்தேன். செய்ததும் தான் தெரிந்தது இத்தனை நாட்களாக எந்த அளவு இதை மிஸ் பண்ணியிருக்கிறோம் என்று!! அவ்வளவு அபாரமான சுவை!! இதை சாதத்திற்கும் தொட்டுக்கொள்ளலாம். சூடான சாதத்தில் நெய் ஊற்றி பிசைந்தும் சாப்பிடலாம். சூடான இட்லிக்கு தொட்டுக்கொள்ள அருமையான பக்க துணை!!



தேவையானவை:

முருங்கைக்காய்-5

புளி- 2 எலுமிச்சம்பழ அளவு

மிளகாய்த்தூள்- 2 மேசைக்கரண்டி

மஞ்சள் தூள்- அரை ஸ்பூன்

வறுத்த வெந்தயம்- 1 ஸ்பூன்

பெருங்காயம் வறுத்தது- அரை நெல்லியளவு

நல்லெண்ணெய்- கால் கப்

தேவையான உப்பு

பொடியாக அரிந்த சின்ன வெங்காயம்- 1 1/2 கப்

செய்முறை:

புளியை 2 மணி நேரம் 2 கப் வெந்நீரில் ஊறவைத்து கெட்டியாக கரைக்கவும்.

சின்ன வெங்காயங்களைப் பொடியாக அரிந்து கொள்லவும்.

முருங்கைக்காய்கலை சிறு சிறு துண்டுகளாக வெட்டி தண்ணீர் சேர்க்காமல் ஒரு பாத்திரத்தில் போட்டு குக்கரில் வைத்து 2 விசில் வரை வேக வைக்கவும்.

ஆறியதும் சதையை வழித்தெடுத்து சின்ன வெங்காயத்துடன் சேர்த்து வைத்துக்கொள்ளவும்.

வெந்தயத்தையும் பெருங்காயத்தையும் நன்றாக பொடி செய்து கொள்லவும்.

வாணலியில் சூடாக்கி எண்ணெயை ஊற்றவும்.

அது சூடானதும் வெங்காய முருங்கைக்கலவையைப் போட்டு மிதமான தீயில் வெங்காய நெடி போகும் வரை வதக்கவும்.

கரைத்த புளித்தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும்.

கெட்டியாக வரும்போது மஞ்சள், மிளகாய்த்தூள்கள், உப்பு சேர்த்து சிறு தீயில் சமைக்கவும்.

நன்கு கெட்டியானதும் வெந்தயத்தூளைச் சேர்த்து மேலும் ஐந்து நிமிடங்கள் சிறு தீயில் வைக்கவும்.

சுவையான முருங்கைக்காய்த்தொக்கு இப்போது தயார்!

41 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

முருங்கைக்காய் தொக்கு செய்முறையைப் படித்ததுமே நாக்கில் நீர் ஊற ஆரம்பித்துவிட்டது.

இதுவரை செய்ததும் இல்லை, சாப்பிட்டதும் இல்லை.

மஹாமுரடாக உள்ள தொக்கு மாங்காயை வாங்கி தோல் சீவி, சதைப்பகுதியை சிறுசிறு துண்டங்களாக சீவி வேக வைத்து உப்பு காரம் போட்டு கடுகு தாளித்து தொக்கு போடுவது வழக்கம். டேஸ்ட் படு சூப்பராக இருக்கும்.

அதே செய்முறை தான் மாங்காய் சதைப்பகுதிக்கு பதில் முருங்கைக்காய் சதைப்பகுதியை சேர்க்கச்சொல்லுகிறீர்கள் என்று நினைக்கிறேன்.

மாங்காய்த் தொக்கு காரசாரமாக, சற்று புளிப்பாக ஜோராக இருக்கும்.

அதுபோல ருசியான சதைப்பத்தான கொடிக்காய் முருங்கை என்று சற்று குட்டை கட்டையாக இருக்கும். அதை போட்டு சாம்பார் வைத்தால் கொதிக்கும் போதே, கமகமவென்ற வாசனையுடன், நாக்கில் நீர் ஊறும்.

முருங்கைக்காய் தொக்கு இதுவரை கேள்விப்பட்டதே இல்லை.

இருப்பினும் பகிர்வுக்கு நன்றிகள். பாராட்டுக்கள்.

Menaga Sathia said...

வித்தியாசமா இருக்கும்மா..நிச்சயம் செய்து பார்ப்பேன்.

முருங்கைகாய் சதைப்பகுதியும்+சின்ன வெங்காயத்தையும் அரைக்க வேண்டுமா??

மனோ சாமிநாதன் said...

மாங்காய்த்தொக்கின் செய்முறையை அருமையாக எழுதியிருக்கிறீர்கள் சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்! ஓரள‌வு செங்காயான ஒட்டு மாங்காயை துண்டு துண்டாக சீவி நல்லெண்ணெயில் வதக்கும்போதே வாசம் ஊரைக் கூட்டும். இந்த முருங்கைக்காய்த்தொக்கில் முருங்கைக்காய்களின் சதையுடன் சின்ன வெங்காயமும் சேர்ப்பதால் சுவை இரட்டிப்பாகிறது!!

மனோ சாமிநாதன் said...

அவசியம் செய்து பாருங்க‌ள் மேனகா! முருங்கைக்காய் சதையையும் பொடியாக அரிந்த சின்ன வெங்காயத்தையும் கலந்து வைத்துக் கொள்ல வேண்டும்.

கீதமஞ்சரி said...

முருங்கைக்காய் தொக்கு இதுவரை கேள்விப்பட்டதில்லை. ஆனாலும் செய்முறையைப் படிக்கும்போதே அதன் வாசம் நாசியை எட்டி நாவில் நீரூறச் செய்கிறது. இங்கே ஃப்ரஷ் முருங்கைக்காய்கள் கிடைப்பது அரிது. கிடைக்கும்போது நிச்சயமாய் செய்யவேண்டும். பகிர்வுக்கு மிகவும் நன்றி மேடம்.

middleclassmadhavi said...

Interesting. Will try

வெங்கட் நாகராஜ் said...

அட புதியதாய் இருக்கிறதே முருங்கைக்காய் தொக்கு.... இன்றே முருங்கைக்காய் வாங்கி வந்து விடுகிறேன்...

செய்துவிட வேண்டியது தான்....

ஸாதிகா said...

படத்திப்பார்த்தும் என்னடா முருங்கைக்காய் தொக்கில் அக்கா முருங்கைகாய் போட மறந்துவிட்டார்களோ என்று நினைத்தவாறே மேலும் படிக்கையில் முருங்கைக்காய் சதையை மட்டும் சேர்க்கச்சொல்லி இருக்கின்றீர்கள்.வித்தியசமான குறிப்பு.

குறையொன்றுமில்லை. said...

முருங்கை தொக்கு இப்பதான் கேள்வி படுரேன் செய்துபாக்கனும்.

RAMA RAVI (RAMVI) said...

நல்ல பயனுள்ள சமையல் குறிப்பு.நன்றி பகிர்வுக்கு.

Jaleela Kamal said...

மிக மிக அருமை ,கண்டிப்பாக செய்து பார்க்கனும் மனோ அக்கா.
முருங்காய கறி சேர்த்து சமைப்போம் வாசனயே கம கமன்னு இருக்கும்.

நான் இதுவ் அரை தொக்கு செய்ததில்லை
சூப்,ரசம் மட்டன் சிக்கனுடன் தான், இன்று கூட சிக்கன் முருங்கககா சால்னா தான்.

ADHI VENKAT said...

சுவையான குறிப்பு. செய்து பார்த்து விடுகிறேன்.

vanathy said...

முருங்கைக் காய் கிடைப்பது கஷ்டம். கிடைத்தால் முயற்சி செய்கிறேன். நல்ல ரெசிப்பி.

Asiya Omar said...

முருங்கைக்காய் தொக்கு புதுசாக இருக்கு மனோ அக்கா.இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள,சாதத்தில் பிசைந்து சாப்பிட அருமையாக இருக்கும்.பார்த்தாலே தெரிகிறது.

Vijiskitchencreations said...

வாவ் சூப்பர். இந்த தொக்கு என் பாட்டி செய்வாங்க. எங்க வீட்டில் வெங்காயம் சேர்க்காமல் செய்வாங்க.எங்க பழைய வீட்டில் முருங்கமரம் இருந்தது நிறய்ய முருங்ககாய கிடைக்கும் அப்ப இதை செய்து நாங்க சாப்பிட்டு இருக்கோம்.
சூப்பர் & ஹெல்தியான ரெசிப்பி.

நிலாமகள் said...

ஒரு ஸ்பூன் சீர‌க‌த்தையும் சேர்த்து பொடித்துக் கொண்டால் மேலும் சுவை கூட்டும் ச‌கோத‌ரி! முருங்கை ம‌ர‌த்தில் மித‌மிஞ்சிய‌ காய்ப்பு இருந்தால் அல்ல‌து அதிக‌ அள‌வு முருங்கைக் காய்க‌ளை வீணாக்காம‌ல் (சாம்பார், வ‌ற்ற‌ல் குழ‌ம்பு போன்ற‌வ‌ற்றுக்கு இர‌ண்டு, நான்குக்கு மேல் செல‌வாகாது அல்ல‌வா) ச‌மைக்க‌ இப்ப‌க்குவ‌ம் ந‌ல்ல‌ வ‌ழி! இட்லி தோசைக்கு தொட்டுக் கொள்ள‌வும், சாத‌த்தில் பிசைந்து சாப்பிட‌வும், ச‌ப்பாத்திக்கு சைட் டிஷ் ஆக‌வும் க‌டைசி ஸ்பூன் வ‌ரை வீணாக்காம‌ல் காலி செய்து விட‌லாம்.

மனோ சாமிநாதன் said...

அவசியம் நல்ல முருங்கைக்காய் கிடைக்கும்போது செய்து பாருங்கள் கீதா! அதன் சுவையை ரசித்ததனால்தான் சொல்கிறேன். அன்பான பின்னூட்டத்திற்கு நன்றி!!

மனோ சாமிநாதன் said...

Thanks a lot for the nice feedback madhavi!

மனோ சாமிநாதன் said...

செய்து பார்த்த பின் சுவை எப்படியிருந்தது என்று சொல்லுங்கள் சகோதரர் வெங்கட் நாகராஜ்!!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு அன்பு நன்றி ஸாதிகா!

மனோ சாமிநாதன் said...

செய்து பார்த்து சொல்லுங்கள் சகோதரி லக்ஷ்மி!!

மனோ சாமிநாதன் said...

அன்பான கருத்துக்கு இனிய நன்றி ரமா!

மனோ சாமிநாதன் said...

இது எனக்கு புதிய குறிப்பு. ஜலீலா! செய்து பார்த்ததும் சுவையைப்பார்த்து அசந்து விட்டேன். அவசியம் செய்து பாருங்கள்!

மனோ சாமிநாதன் said...

அவசியம் செய்து பாருங்கள் ஆதி!!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு அன்பு நன்றி வானதி!

மனோ சாமிநாதன் said...

ஆமாம் ஆசியா! இது மிகவும் சுவையாக இருக்கிறது. கருத்துரைக்கு அன்பு நன்றி!!

மனோ சாமிநாதன் said...

நீங்களும் இதை சாப்பிட்டிருப்பது மகிழ்வாய் இருக்கிறது விஜி! கருத்துரைக்கு அன்பு நன்றி!!

மனோ சாமிநாதன் said...

குறிப்புக்கும் க‌ருத்துக்கும் அன்பு நன்றி நிலாமகள்!!

ஜெய்லானி said...

முருங்கையில் எது செய்தாலும் பிடிக்கும் . இதையும் டிரைசெய்து பார்த்திடவேண்டியதுதான் .
((இது ராஜஸ்தானி சமையல் மாதிரி தெரியுதே )) :-)

Yaathoramani.blogspot.com said...

முருங்கைகாயை இந்த வகையில் அதிகமாக யாரும்
பயன்படுத்தி இருக்கமாட்டார்கள்
அனைவருக்கும் பயன்படும் அருமையான சமையல் குறிப்பு
பகிர்வுக்கு நனறி வாழ்த்துக்கள்

Menaga Sathia said...

இந்த சுவையான தொக்கினை சமைத்து ருசித்தேன்.முருங்கைக்காய் பிரியையான என் பொண்ணு விரும்பி சாப்பிட்டாங்க.விரைவில் என் ப்ளாகில் பதிவிடுகிறேன்,மிக்க நன்றிம்மா!!

Guna said...

HUMM ennaya mathiri thanikattaigalukku ithu rombs useful.. ini next mnt irunthu ithe ellathayum try pannuren..

மனோ சாமிநாதன் said...

செய்து பார்த்ததற்கு அன்பு நன்றி மேனகா! நன்றாக வந்தது பற்றி மிகவும் மகிழ்ச்சி!

மனோ சாமிநாதன் said...

அவசியம் எல்லா குறிப்புகளையும் செய்து பார்த்துச் சொல்லுங்கள் குணா!!

Ranjani Narayanan said...

புகைப்படத்தைப் பார்த்தாலே நாக்கி ஜாலம் வருகிறதே!

செய்து பார்த்துவிட வேண்டியதுதான்.

எனது வலைத்தளம்:
ranjaninarayanan.wordpress.com

இராஜராஜேஸ்வரி said...

சுவையான பகிர்வுக்கு பாராட்டுக்கள்..

அப்பாதுரை said...

கேள்விப்பட்டது கூட இல்லை. செய்து பார்க்கிறேன். ஐந்து முருங்கைக்காயில் எத்தனை ஸபூன் சதை கிடைக்கும்?

மனோ சாமிநாதன் said...

முதல் வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் இனிய நன்றி ரஞ்சனி நாராயணன்! விரைவில் உங்கள் வலைப்பூவிற்கு வருகிறேன்!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்களுக்கு அன்பு நன்றி ராஜராஜேஸ்வரி!

மனோ சாமிநாதன் said...

முதல் வருகைக்கு அன்பு நன்றி சகோதரர் அப்பாத்துரை! பொதுவாக ஐந்து முருங்கைக்காய்களில் எடுக்கும் சதை ஒரு கிண்ணம் அளவிற்கு இருக்கும்! முருங்கைக்காயின் சதைப்பற்று, அளவைப்பொறுத்து கூடவோ, குறைவாகவோ, அளவு மாறும்! அவசியம் செய்து பார்த்து விட்டுச் சொல்லுங்கள்!

cheena (சீனா) said...

அன்பின் மனோ சாமிநாதன் - முருங்கைக்காய் தொக்கு கேள்விப்படாத ஒன்று - பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா