Wednesday 24 August 2011

ரசனையில்.....‍ நிஜமும் நிழலும்!!

சமீபத்தில் ரசித்த இரண்டு வெவ்வேறான விஷயங்களை மறுபடியும் இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

ரசித்த முத்து-1

சில மாதங்களுக்கு முன் ஒரு தன்னார்வலத் தொண்டு நிறுவனம் செய்து வரும் வித்தியாசமான சேவையைப் பற்றிப் படித்த போது மனதில் ஆச்சரியம் மட்டுமல்ல, மகிழ்ச்சியும் ஏற்பட்ட‌து.

பொருளாதாரம் பின் தங்கிய குடும்பங்களில் பலவற்றில் அதிக குடிப்பழக்கத்தினாலும் பெற்றோரின் பொறுப்பற்ற தன்மையாலும் குடும்பத்தின் நிலைமையே சீர் குலைந்து போகிறது. அதில் பாதிக்கப்படுவது அக்குடும்பத்திலுள்ள குழந்தைகள்தான். அதுவும் படிக்கும் குழந்தைகள் என்றால் அவர்களின் படிப்பும் இடை நிறுத்தம் செய்யப்படுகின்றது. கேள்விக்குறியாகி விட்ட அவர்களின் எதிர்காலத்தை ஆச்சரியக்குறியாக மாற்றிக்கொன்டிருக்கிறது இந்த நிறுவனம். புதுச்சேரியில் இந்திரா காந்தி சிலை அருகே செயல்பட்டுக்கொண்டிருக்கும் இந்த அமைப்பின் பெயர் 'டாக்டர் ரெட்டிஸ் ஃபவுண்டேஷன்'. முற்றிலும் இலவசமாக இந்த சேவையை செய்வதே இந்த நிறுவனத்தின் சிற‌ப்பு அம்சம்.

இந்த மாதிரி குழந்தைகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு ஆங்கில பேச்சுப்பயிற்சி, மற்றும் சில பயிற்சிகள் மூன்று மாதங்கள் வரையில் கொடுத்து, தகுந்த நிறுவனக்களில் வேலையும் வாங்கித் தருகிறது இந்த நிறுவனம். உணவுக்கோ, உடைக்கோ பணம் கொடுத்து அந்தந்த நிமிடங்களில் பிரச்சினையாக உள்ள சிலவற்றைத் தீர்ப்பதைக்காட்டிலும் இந்த சேவை மிகவும் உயரியதாகத் தோன்றுகிறது. இதன் மூலம் ஒரு குடும்பமே நிம்மதியாக உட்கார்ந்து சாப்பிட வழி கிடைக்கிறது. இந்த விபரம் பலருக்குச் சென்றடைவதன் மூலம் இந்த மாதிரி சில குழந்தைகளுக்காவது சிலரின் கருணையான மனதினால் சிறப்பான பொருளாதாரச் சூழ்நிலை ஏற்படுமென்ற நம்பிக்கையும் மனதில் பிறந்திருக்கிறது!

ரசித்த முத்து-2

10 நாட்களுக்கு முன் ஒரு மலையாளப்படம் பார்க்க நேர்ந்தது. பெயர். 'கதை தொடருன்னு..'[கதை தொடர்கிறது].





மனதை அப்படியே ஆக்ரமித்து, நெகிழச்செய்த ஒரு அழகிய காவியம் இது என்று தான் சொல்ல வேன்டும். காலத்தால் அழியாத நடிப்பாலும் கதையாலும் புகழ் பெற்ற பல படங்கள் மலையாளத் திரையுலகில் வருவதுண்டு. அதுவும் முன்னணி கதாநாயகர்களான மோகன்லால், மம்மூட்டி, ஜெயராம், திலீப் போன்ற அனைவருமே இந்த மாதிரி திரைக்கதைகளுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். சில திரைப்படங்கள் மனதை அதிர வைக்கும். சில படங்களோ நம் மனதை நெகிழ்த்தி நெக்குருக வைக்கும். சில படங்களோ முடிவை நம் ஊகத்திற்கே விட்டு ஒரு தொடர்கதை போன்ற வேதனையை சில நிமிடங்களுக்குக் கொடுத்து மறையும். அந்த மாதிரியான திரைப்படமிது.

மருத்துவம் பயிலும் ஒரு இந்து சமூகத்தைச் சார்ந்த மாணவிக்கும் முன்னுக்கு வந்து கொன்டிருக்கும் ஒரு இஸ்லாமிய சமூகத்தைச் சார்ந்த இள‌ம் இசையமைப்பாளருக்கும் ஏற்படும் காதல் அவர்களின் பெற்றோர் அவர்களைத் தலை முழுகிய நிலையில் நிறைவேறுகிறது. ஐந்து வருடங்கள் போல் ஒரு பெண் குழந்தையுடன் மகிழ்வுடன் கழிந்த அவர்கள்  திருமண வாழ்க்கை, திடீரென்று விபத்தொன்றினால் அவனுக்கு மரணம் ஏற்பட முற்றுப்பெறுகிறது.



அந்தப் பெண் குழந்தையை வைத்துக் கொன்டு, அந்தக் குழந்தையின் படிப்பு கெடாதிருக்கவும் பசியாற்றவும் அந்தப் பெண் நடத்தும் போராட்டங்களும் மனப்போராட்டங்களும்தான் அதற்க‌ப்புறம் வரும் தொடர்கதை. அவள் பணம் கொடுக்காமல் ஏமாற்றும் ஆட்டோ ஓட்டுனர் ஜெயராம் அவளின் கதை கேட்டு நெகிழ்ந்து போய் அவளைத் தன் காலனிக்கு வந்து குடியேற்றுகிறார். அந்தக் காலனி மக்கள் அனைவருமே பல வேதனைகளில் இருந்தாலும்கூட அவளிடமும் அவள் குழந்தையிடமும் அன்பு காட்டுவதுடன் எல்லோருமே சேர்ந்து அவளின் தடைப்பட்ட சில மாதங்களின் படிப்பையும் முடிக்க வைத்து அவளை மருத்துவராக்கி விடுகிறார்க‌ள்.

அந்த சமயத்தில் அந்தப் பேரக்குழந்தையைப்பார்த்த அவளின் கணவனின் பெற்றோர் அந்தக் குழ‌ந்தை தன் மகனின் வாரிசு என்று உரிமை கோரி நிர்ப்பந்தம் செய்ய‌ஆரம்பிக்கிறார்கள். அந்த சிக்கல்களிலிருந்து அவளை காப்பாற்ற நினைக்கும் அவளின் சினேகிதி தன் கணவர் பணியாற்றும் வெளிநாட்டு மருத்துவ மனையில் அவளுக்கும் வேலை வாங்கி கொடுத்து அவளை அதற்கு ஒத்துக்கொள்ள‌ச் சொல்லி வாதிடுகிறாள். தன் சேவை இந்தக் காலனிக்குத்தான் சொந்தம், தன் நன்றியுணர்வும் இனி அவர்களுக்குத்தான் என்று சொல்லிக் கலங்கும் கதாநாயகியை அந்த காலனிவாசிகள் மாற்றுகிறார்கள். ஜெயராம் மனதிலிருக்கும் மெல்லிய காதல் அப்படியே கதிகலங்கிப்போனாலும், மனதில் மெதுவாக சமாதானமாகி அவ‌ளை அனுப்புவதுடன் கதை முடிகிற‌து. கதாநாயகி மனதிலும் அந்தக் காதல் இருக்கிறதா என்று இயக்குனர் சொல்லாமலேயே கடைசி வரை இருந்து விடுகிறார். ஜெயராம் இதயம் முழுக்க அவளின் நினைவுகளுடன் காத்திருப்பதாய் திரைப்படம் முடிகிறது.

முற்றிலும் யதார்த்தமான‌ காட்சிகளுடன் மென்மையாக பூக்கும் உணர்வுகளுடன் அழகாய் சென்று அற்புதமாய் முடிகிறது இந்தப்படம்.

14 comments:

குறையொன்றுமில்லை. said...

முத்துக்கள் அருமை. பகிர்ந்து
கொண்டதற்கு நன்றி.

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_23.htm

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

நல்ல பதிவு மனோ. மலையாளப் படங்கள் எல்லாமே யதார்த்தமானவையே.

வை.கோபாலகிருஷ்ணன் said...

தாங்கள் பதிவிட்டுள்ள தங்கள் “ரசனையில் .. நிஜமும் நிழலும்!!” இரண்டுமே அருமை என்றாலும், என்னைப்பொருத்தவரை எனக்கு நிஜத்தை விட நிழல் மிகவும் பிடித்தமாக இருந்தது.

அந்த மளையாளக்கதை வெகு அருமை. ஜயராம் தனக்கான நடிப்பையும்/காதல் உணர்வுகளையும் மிக நன்றாகச் செய்திருப்பார் என்பதை கற்பனை செய்து பார்த்தேன்.

இதுபோன்ற விஷயங்களில் முடிவு சொல்லாமல் முடிப்பது தான் பொருத்தமாக இருக்கும். மக்களை அவரவர் விருப்பப்படி, மனசாட்சிப்படி, நியாயப்படி, காலத்திற்கேற்றபடி தீர்ப்பளிக்கும்படிச் செய்வதாகவும் இருக்கும்.

தங்கள் வர்ணனைகள் நேரில் படம் பார்த்த திருப்தியை அளித்தது.

முதல் முத்துவில் நல்லதொரு இலவசச்சேவையை அனைவரும் அறிய வைத்துள்ளீர்கள். சமுதாயத்திற்கு தெரியவேண்டிய அவசியமான விஷயம் தான்.

பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். vgk

CS. Mohan Kumar said...

உங்கள் பதிவில் அதிசயமா நிறைய எழுத்து பிழைகள்; குறிப்பாக சினிமா குறித்த பகுதியில்..

ADHI VENKAT said...

இரண்டு முத்துக்களுமே நன்று.

"உணவுக்கோ, உடைக்கோ பணம் கொடுத்து அந்தந்த நிமிடங்களில் பிரச்சினையாக உள்ள சிலவற்றைத் தீர்ப்பதைக்காட்டிலும் இந்த சேவை மிகவும் உயரியதாகத் தோன்றுகிறது. இதன் மூலம் ஒரு குடும்பமே நிம்மதியாக உட்கார்ந்து சாப்பிட வழி கிடைக்கிறது."

உண்மையான கருத்து.

RAMA RAVI (RAMVI) said...

இரண்டுமே அருமை, மனோ மேடம். பகிர்வுக்கு நன்றி.

ரைட்டர் நட்சத்திரா said...

நல்ல பதிவு ங்கோ. பகிர்வுக்கு நன்றி

Chitra said...

அந்த படத்தை சமீபத்தில் நானும் பார்த்தேன். யதார்த்த நடிப்பினால், சாதாரண கதையாக இருந்தும், படத்தில் ஒன்றி விட முடிந்தது.

'பரிவை' சே.குமார் said...

முத்துக்கள் அருமை அம்மா.

Yaathoramani.blogspot.com said...

இரண்டு உயரிய விஷயங்களை
நாங்களும் ரசித்து மகிழும்படி
பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்

ஜெய்லானி said...

அழகிய விமர்சனம் .ஒரு முழு படத்தையே எளிமையா விளக்கி இருக்கீங்க .

:-)

ChitraKrishna said...

அருமை மனோ.. அடுத்த வேலை - அந்த படத்தை பார்க்க போகிறேன். நன்றி

சமுத்ரா said...

முத்துக்கள் அருமை. பகிர்ந்து
கொண்டதற்கு நன்றி.