Sunday 12 June 2011

இது என்று சொர்க்க பூமியாகும்?

சில மாதங்கள் முன்பு, ஒரு மங்கையர் இதழில் திருமதி.ரேவதி சங்கரன் எழுதியிருந்த சில வரிகள் மனதை மிகவும் நெகிழ வைத்தன.அவர்கள் மூன்று தலைமுறைக்கு முன்னால் நம் பாட்டிமார்கள் வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றி அழகாக எழுதியிருந்த விபரங்கள் நம் பழந்தமிழ் வாழ்க்கையை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தன என்று தான் சொல்ல வேண்டும்!


அந்த வரிகள்.. .. ..


" சம்பாத்தியம் என்பது ஆண்களின் இலக்கணம் என்றாலும் அன்று வீட்டுப் பொருளாதாரத்தின் அச்சாணியாக விளங்கியவள் பெண்தான். கையில் வரும் பொருள், கழனியிலிருந்து வரும் விளைச்சல், பட்டுவாடா, சேமிப்பு இதிலெல்லாம்


அவள் தான் மதி மந்திரி. உப்பு, புளி, மிளகாய் போன்ற சாமான்களை மொத்தமாக வாங்கி அவற்றை சேமித்த திறமையில் அவள் உணவு மந்திரி. கையில் இருப்பு அதிகமானால் அவற்றை குழந்தைகளுக்கு நகைகளாய் வாங்கி சேமித்த நிதி மந்திரி. சாதாரண உடல் நலக்குறைவுகளுக்கு மருத்துவச் செலவு ஆகாமல் கை வைத்தியம் பார்த்து சமாளித்த வகையில் சுகாதார மந்திரி. இப்படி தனக்கென வாழாத தன்மைதான் அன்றைய காலக்கட்டத்தில் பெண்களின் வாழ்க்கையாக இருந்தது! அதற்கு பிறந்த வீடு தான் பயிற்சிக் களம். புகுந்த வீடு கற்றவைகளை செயலாக்கிய ஆடுகளம்!"


உண்மைதான்!


என் மாமியார் அந்தக் காலத்தில் கொசுத்தொல்லைகளை நீக்க வரட்டிகளைக் கொளுத்தி மூட்டம் போடுவார்களாம். அதற்காகத் தொழுவத்திலுள்ள அத்தனை பசுஞ்சாணத்தையும் சுத்தம் செய்யும் பெண்களிடம் வரட்டி தட்டச் சொல்லி, மூன்றில் ஒரு பங்கை அவர்களுக்குக் கொடுத்து விடுவார்களாம். வரட்டிக்கு வரட்டியும் ஆயிற்று! காசு செலவழிக்காமல் மிச்சம் பிடித்த திருப்தியும் கிடைத்தாயிற்று! இது போலவே தென்னை மரங்களில் அசடு எடுக்கும்போது சில கீற்றுக்களும் கீழே விழும். அவற்றையெல்லாம் சேகரித்து, ஆட்களிடம் கொடுத்து ஓலைகளை நீக்கி, குச்சிகளைச் சேர்த்துக்கட்டி துடைப்பங்கள் ஒரு வருடத்திற்கு சேகரித்து விடுவர்களாம். கூலி அதே மூன்றில் ஒரு பங்கு துடைப்பங்கள்தான்! அது போலவே அம்பாரமாய்க் குவிந்து கிடக்கும் புளியை நார், கொட்டைகள் நீக்கி பெண்களை வைத்து சுத்தம் செய்வதற்கும் இதே கணக்கு தான்.

சுத்தம் செய்த புளியை இத்தனை நாட்களுக்கு இவ்வளவு என்று கணக்கிட்டு உருண்டைகள் பிடித்து பானைகளில் வைக்கப்பட்டு பரணில் ஏற்றி வைத்து விடுவார்களாம். மிளகாய்களை மூட்டையாய் கட்டித் தொங்க விட்டு முடிச்சு போட்ட இடத்தில் ஒரு வரட்டியையும் சொருகி வைப்பார்களாம். மேலியிலிருந்து எலி வந்து தாவும்போது அது முதலில் வரட்டியில் தான் விழும். அதால் பாலன்ஸ் பிடிக்க முடியாமல் மூட்டையைக்கடிக்க முடியாமல் எலி கீழே விழவே இந்த ஏற்பாடு! எத்தனை புத்திசாலித்தனம்! எத்தனை முன் யோசனை!! பால், தயிர், ஜீனி போன்ற பொருள்களை வலை பீரோவில் வைத்து அதன் நான்கு கால்களும் தண்ணீரில் பதிந்திருக்குமாறு வைத்து விடுவார்களாம். இந்த இயற்கையான பாதுகாப்பு அரண்கள் பொருள்களை அன்றைக்கு ரொம்ப நாட்களுக்கு கெடாமல் பாதுகாத்தன.


இன்றைக்கோ காசு கொடுத்து வாங்கிய குளிர்சாதனப்பெட்டியைக்கூட பாதுகாக்க நிறைய பேருக்குத் தெரிவதேயில்லை. அசுத்தமாயும் அத்தனை குப்பைகளும் அங்கே தான் குவிந்திருக்கிறது!

யாரும் சொல்லித்தராமலேயே நல்ல பழக்க வழக்கங்களையும் ஒழுக்கத்தையும் அன்றைய வாழ்க்கை சொல்லித்தந்தது. புத்தகங்கள் சொல்லித் தந்தன. ஏன், சில நல்ல திரைப்படங்கள்கூட சொல்லித்தந்தன என்பேன்!


பள்ளிக்கூட வாழ்க்கையை நினைத்துப் பார்க்கிறேன். நான்கைந்து கிலோ மீட்டர்கள் நடந்து போக வேன்டும். ஒரு கையில் சாப்பாட்டுடனும் மறு கையில் புத்தகச்சுமைகளுடனும் போகும் போது வழியில் தென்படும் காட்சிகளை ரசித்துக் கொண்டே போனதில் சோர்வை உணர்ந்ததேயில்லை! வழியெல்லாம் வீதிகளின் இரு மருங்கிலும் வீட்டு வாசல்களில் கோலங்கள் அழகாய்ப்போட்டிருப்பார்கள். அதுவும் எப்படி? கரியைப் பொடித்துக் குழைத்து மண்ணாலான வாயிற்புறத்தை மெழுகி, மேடு கட்டி அதன் பிறகு வாசலை அடைத்து சிக்குக்கோலம் போட்டிருப்பார்கள். கருமை நிறப்பின்னணியில் வெண்ணிறக் கோலம் பூக்களும் சித்திரங்களுமாய் அத்தனை அழகாயிருக்கும். இதையெல்லாம் பார்த்துப்பார்த்தே கோலம் கற்றுக்கொண்டு வீதியடைத்து போடும் பழக்கம் வந்தது.

புலர்ந்தும் புலராத நேரத்தில் எதிரே இருந்த குளத்திற்கு பாத்திரங்களைக் கழுவ எடுத்துக்கொண்டு போகும்போது தினந்தோறும் வைகறையின் அழகையும் புள்ளினங்கள் பறப்பதையும் கீழ்திசையில் சிவந்த ஒளிக்கீற்றுக்களையும் ரசிக்கும் பழக்கம் வந்தது. காலை பத்து மணிக்கு தோழியருடன் குடங்களை எடுத்துக் கொண்டு ஆற்றுப்பக்கம் சென்று, ஆசை தீர நீந்தி விட்டு, துவைத்த துணிகளையும் நல்ல தண்ணீரையும் எடுத்துக்கொண்டு வருவது வழக்கமாயிருந்தது. நீச்சல் இப்படித்தான் கற்க முடிந்தது. இப்படி எத்தனை நல்ல பழக்க வழக்கங்களை இயற்கை சொல்லிக்கொடுத்தது! சின்ன வயதில் அன்றைய பிரபல நாதஸ்வர வித்வான் கர்நாடக சங்கீதம் கற்றுத்தர தினந்தோறும் வீட்டுக்கு வருவார். பன்னிரெண்டு வயதில் வெளியே விளையாடப்போகாமல் இப்படி சங்கீதம் கற்றுக்கொள்வது அன்றைக்கு வேப்பங்காயாக இருந்தாலும் முடியாது என்றோ பிடிக்கவில்லை என்றோ வீட்டில் சொல்லி விட முடியாது. சொல்லவும் தெரியாது. அன்றைக்கு அப்படி கற்றதன் பலன் இன்றைக்கும்கூட ராகங்களை பிரித்தறிந்து ரசிக்க முடிகிறது! நல்ல விதைகள் என்றைக்காவது பூவுடனும் காயுடனும் பூத்துக்குலுங்கி நமக்குப் பலன் தருமென்பது நிச்சயம்!


சமையலும் அப்படித்தான். ஒரு சின்ன பாராட்டு தந்தையிடமிருந்து கிடைத்து விட்டால் போதும், அம்மாவிற்குத் தெரியாமல் அடுப்படி புகுந்து விதம் விதமாக சமைத்துப்பழகும் ஆர்வம் தானாகவே வந்தது. நூலகம் சென்று வாசிக்கும் பழக்கம் அந்த வயதிலேயே வந்தததால் Keats, Milton, Robert Browning, wordsworth போன்ற ஆங்கில கவிஞர்களும் பாரதியும் அகிலன், கல்கி, ராஜம் கிருஷ்ணன், நா.பார்த்தசாரதி, கிருஷ்ணா போன்ற அருமையான தமிழ் எழுத்தாளர்களும் சின்ன வயதிலேயே பரிச்சயமாகி மனதுக்கு நெருங்கியவர்களாய் ஆனார்கள். இவர்களின் எழுத்துக்கள் அருமையான மன உணர்வுகளையும் சத்தியக்கோட்பாடுகளையும் மனதில் என்றுமே வளர்த்துக்கொண்டிருந்ததால் வாழ்க்கைப்பள்ளியில் இவர்களுமே நல்ல ஆசான்களாக வலம் வந்தனர்.


இன்றைக்கு வாழ்க்கையை ரசிக்கவும் நல்ல பழக்கங்களைக் கற்கவும் அவற்றை செயலாக்கவும் குழந்தைகளுக்கு அவற்றைச் சொல்லிக் கொடுத்து மனதில் பதிய வைக்கவும் எங்கே நேரமிருக்கிறது?


எத்தனை மாற்றங்கள் அன்றைக்கும் இன்றைக்கும்! மாற்றங்கள் இல்லாமல் வாழ்க்கை இல்லைதான்! புதிய மாற்றங்களும் புதிய கண்டுபிடிப்புகளும் புதிய தலைமுறைகளால் உருவாக்கப்பட்டு வாழ்க்கை நடைமுறையில் புது இரத்தம் பாய்ந்தால்தான் வளரும் தலைமுறைகள் சிறந்து வாழ்வார்கள் என்பதும் உண்மைதான்! ஆனால் உயர்ந்த சிந்தனைகளும் நல்ல பழக்க வழக்கங்களும் ஏன் அழிய வேண்டும்? “பழையன கழிதலும் புதியன புகுதலும்” என்ற வாக்கே இருக்கிறது. பழையனவற்றில் நல்லவை நீடித்தலும் புதியனவற்றில் நல்லதல்லாதவை அழிதலும் உண்டானால் நம் தாய் நாடு சொர்க்க பூமியாகி விடாதா?










55 comments:

A.R.ராஜகோபாலன் said...

""என் மாமியார் அந்தக் காலத்தில் கொசுத்தொல்லைகளை நீக்க வரட்டிகளைக் கொளுத்தி மூட்டம் போடுவார்களாம். அதற்காகத் தொழுவத்திலுள்ள அத்தனை பசுஞ்சாணத்தையும் சுத்தம் செய்யும் பெண்களிடம் வரட்டி தட்டச் சொல்லி, மூன்றில் ஒரு பங்கை அவர்களுக்குக் கொடுத்து விடுவார்களாம். வரட்டிக்கு வரட்டியும் ஆயிற்று! காசு செலவழிக்காமல் மிச்சம் பிடித்த திருப்தியும் கிடைத்தாயிற்று! இது போலவே தென்னை மரங்களில் அசடு எடுக்கும்போது சில கீற்றுக்களும் கீழே விழும். அவற்றையெல்லாம் சேகரித்து, ஆட்களிடம் கொடுத்து ஓலைகளை நீக்கி, குச்சிகளைச் சேர்த்துக்கட்டி துடைப்பங்கள் ஒரு வருடத்திற்கு சேகரித்து விடுவர்களாம். கூலி அதே மூன்றில் ஒரு பங்கு துடைப்பங்கள்தான்! அது போலவே அம்பாரமாய்க் குவிந்து கிடக்கும் புளியை நார், கொட்டைகள் நீக்கி பெண்களை வைத்து சுத்தம் செய்வதற்கும் இதே கணக்கு தான். ""

படிக்கவே ஆச்சர்யமாய் இருக்கும் விஷயங்கள் செயலில் இருந்த போது எப்படி இருந்திருக்கும் , இன்னும் இந்த பதிவிற்கு மகுடம் வைக்கும் இன்னொரு செய்தி உங்கள் மாமியாரை பற்றி பெருமையாய் பேசி இருப்பது, நிகழ்காலத்தில் இதெல்லாம் சாத்தியமா

A.R.ராஜகோபாலன் said...

""சமையலும் அப்படித்தான். ஒரு சின்ன பாராட்டு தந்தையிடமிருந்து கிடைத்து விட்டால் போதும், அம்மாவிற்குத் தெரியாமல் அடுப்படி புகுந்து விதம் விதமாக சமைத்துப்பழகும் ஆர்வம் தானாகவே வந்தது. நூலகம் சென்று வாசிக்கும் பழக்கம் அந்த வயதிலேயே வந்தததால் Keats, Milton, Robert Browning, wordsworth போன்ற ஆங்கில கவிஞர்களும் பாரதியும் அகிலன், கல்கி, ராஜம் கிருஷ்ணன், நா.பார்த்தசாரதி, கிருஷ்ணா போன்ற அருமையான தமிழ் எழுத்தாளர்களும் சின்ன வயதிலேயே பரிச்சயமாகி மனதுக்கு நெருங்கியவர்களாய் ஆனார்கள். இவர்களின் எழுத்துக்கள் அருமையான மன உணர்வுகளையும் சத்தியக்கோட்பாடுகளையும் மனதில் என்றுமே வளர்த்துக்கொண்டிருந்ததால் வாழ்க்கைப்பள்ளியில் இவர்களுமே நல்ல ஆசான்களாக வலம் வந்தனர்""

இந்த மாதிரித்தான் என் பெண்ணும் வளர வேண்டும் என விரும்புகிறேன் அம்மா, மிக்க நன்றி பகிர்ந்தமைக்கு

நிரூபன் said...

தாய் நாட்டின் மீதான வளர்ச்சி பற்றிய எண்ணங்களை வேண்டி நிற்கிறது உங்கள் பதிவு,
அனைத்து மக்களும் கல்வியறிவு பெற்று அபிவிருத்தி பற்றிச் சிந்திக்கையில் பழையன கழிந்து புதியன புகும் என்பதில் மாற்றமில்லை.

வை.கோபாலகிருஷ்ணன் said...

திருமதி ரேவதி சங்கரன் அவர்களின் எழுத்தும், தொலைகாட்சிகளில் அவரின் பேச்சும் எனக்கு மிகவும் பிடிக்கும். நல்லவற்றை நல்ல விதமாக மனதில் பதியும்ப்டி, வெகு அழகாகச்சொல்வதில் வல்லவர்கள்.

நமது பாட்டிமார்கள் அதிகம் படிக்காமல் போனாலும், மதி/ நிதி/ சுகாதார மந்திரிகளாகவே செயல்பட்டவர்கள் தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

தங்கள் மாமியார் பற்றிய இந்தப்பதிவும் நல்ல நினைவலைகள்.

விராட்டி, துடைப்பம், புளி, மிளகாய், நெல், பருப்பு போன்றவை சேகரித்தல், பாதுகாத்தல், வாசல் கோலங்கள், வாய்க்கால் குளியல், சிக்கனம், சுத்தம், சுகாதாரம், பூனை எலிக்கு பயந்து வலைக்கம்பியில் செய்த பீரோவில் பொருட்கள் பாதுகாப்பு முதலியன, என் அம்மா & மாமியார் காலம் வரை [even 15-20 years back] மிகச்சிறப்பாக கடைபிடித்து வந்த நல்ல முன்னுதாரணங்களே.

நல்ல பசுமையான நினைவுகளைக் கொண்டுவந்து கண் முன் நிறுத்தியுள்ள உங்களுக்கு என் நன்றிகள், பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

அந்த நாளும் வந்திடாதோன்னு பாட வேண்டியது தான். No chance at all.

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
இன்றைய தலைமுறைக்கு வேலையை ரசிக்கும் தன்மை போய் விட்டது.

எல் கே said...

//பழையனவற்றில் நல்லவை நீடித்தலும் புதியனவற்றில் நல்லதல்லாதவை அழிதலும் உண்டானால் நம் தாய் நாடு சொர்க்க பூமியாகி விடாதா? //

எங்க யாரு கேக்கறா ? பழசை சொன்னா வாய மூடு , பிற்போக்கு வாதின்னு பட்டம் கட்டிடுவாங்க

உலக சினிமா ரசிகன் said...

எழுத்தாளர் சுஜாதா கதையை திருடி வெள்ளைக்காரர்கள் ஹாலிவுட் படமாக்கியிருக்கிறார்கள்.முழு விபரம் அறிய எனது வலைப்பக்கம் வாருங்கள்.

Yaathoramani.blogspot.com said...

சூப்பர் பதிவு
ஏற்றி வைத்த விளக்கிலிருந்துஅடுத்த விளக்கை ஏற்றுதல் போல்
திருமதி ரேவதி சங்கரன் அவர்கள் வைத்த புள்ளியிலிருந்து
எத்தனை அழகான கோலமிட்டிருக்கிறீர்கள்
பழமையில் நல்லனவற்றை நிலை நிிறுத்த முயல்தலும்
புதியவைகளில் ஏற்கத் தக்கவைகளை ஏற்றுக்கொளுதலும்
என்கிற தங்கள் கருத்து இன்றைய நிலையில்
அவசியம் அனவரும் உணரவேண்டிய கருத்து
தொடர வாழ்த்துக்கள்

தமிழ் உதயம் said...

அன்றைக்கு இருந்த வாழ்க்கை முறை - இந்திய வழி. ஆனால் இன்றைக்கு அதை தொலைத்து விட்டோம் அல்லது அவை தேவை இல்லை என்கிற நிலைக்கு வந்து விட்டோம்.

பத்மநாபன் said...

ரேவதி சங்கரன் அவர்கள் காலையில் மங்கையர்உலகம் தொடர் நிகழ்ச்சியில் வாழ்க வளமுடன் என ஆரம்பித்து .. அன்றைய சமையல் குறிப்பை ஓரு சினிமா பாடல் மெட்டில் பாடி தொடர்வது அருமையாக இருக்கும் . உண்மையில் மங்கையர் ராணித்தேனீ க்களாகவே இருந்திருக்கிறார்கள் ...நல்ல பகிர்வு

ஸாதிகா said...

அக்கா,எவ்வளவு ரசித்து எழுதி இருக்கீங்க.//
இன்றைக்கு வாழ்க்கையை ரசிக்கவும் நல்ல பழக்கங்களைக் கற்கவும் அவற்றை செயலாக்கவும் குழந்தைகளுக்கு அவற்றைச் சொல்லிக் கொடுத்து மனதில் பதிய வைக்கவும் எங்கே நேரமிருக்கிறது? // சரியாக சொன்னீர்கள்.நேரம் மட்டுமல்ல மனமும் இருப்பதில்லை .

GEETHA ACHAL said...

அருமையான பதிவு...சூப்பராக சொன்னீங்க...அந்த கால வாழ்கையினை பற்றி...

குறையொன்றுமில்லை. said...

மனோமேடம் உங்க பதிவு படித்ததும்
நானும் என் சின்னவய்சுக்கு போயிட்டேன். அவங்க முன் யோசனைக்கு அளவே கிடையாதுதான்
வாசலில் கோலம் போடுவதில் தொடங்கி
எல்லாவற்றிலும் ஒரு விஷயம் இருக்கும்
குனிந்து நிமிர்ந்து புள்ளி கணக்கு வைத்து கோலம்போடுவது மன்சும் ஒருமுகப்படும்,உடலுக்கு எக்ஸர்ஸசாவும் இருக்கும்.ஆத்தங்கரைக்கு குளிக்கபோக குறைந்தது ஒரு கிலோ மீட்டராவது நடந்து போக வேண்டியிருக்கும் நல்லா மார்னிங்க் வாக் ஆயிடும்
வாரம் ஒருமுறை எண்ணைக்குளியல்
இப்ப எல்லாரும் பியூட்டி பார்லர் நோக்கி ஓடுவதை அந்தக்காலத்தில் எவ்வளவு அழகா சொல்லி இருக்காங்க.

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

அறிவியல் வளர்ச்சிகள் குறைந்திருந்தாலும், அந்தக் காலம் கொடுத்த இனிமைக்கு ஈடு இணை இல்லை எனலாம்.

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

அற்புதமான நிதானத்துடன் எழுதப்பட்ட அழகான சிந்தனைகள் மனோ அக்கா.

என் பாட்டி தாத்தா மற்றும் அம்மா அப்பாவின் காலத்தில் நீங்கள் குறிப்பிட்ட க்ரமங்களையெல்லாம் எறும்புகள் போல் விடாது திட்டமிட்டு செயல்பட்ட காட்சிகள் கண்முன்னே ஓடின.

என் அப்பா இன்று வரை பெருமையாய்ச் சொல்வார். என் சித்தப்பாவின் படிப்பு-வேலை-கல்யாணம்-என்னுடைய மற்றும் என் இரு சகோதரிகளின் படிப்பி-கல்யாணம் எல்லாம் முடித்துவிட்டேன். ஒரு பைசா கடன் வாங்கியதில்லை என்று.

சரியான திட்டமிடலும் விரலுக்கேற்ற வீக்கமும் இருந்தால் மகிழ்ச்சியான வாழ்க்கைதான்.

இனி தொடர்ந்து வாசிப்பேன் மனோ அக்கா. (எனக்கு அக்கா இல்லை. உங்களை இப்படி அழைக்க ஆட்சேபணை இல்லை என்றால் எனக்கு அக்கா உண்டு)

வெங்கட் நாகராஜ் said...

ஒவ்வொரு விஷயமும் பார்த்துப் பார்த்து செய்வாங்க என்னுடைய அம்மாவும்.. அது எல்லாம் நினைவுக்கு வந்தது உங்கள் பகிர்வு படித்தவுடன்.... நல்ல பகிர்வும்மா..

பாராட்டுகள்.

ADHI VENKAT said...

நல்ல பகிர்வு அம்மா. இன்றைய வாழ்க்கையில் இழந்தவைகள் நிறைய. என் மாமியாரும் நிறைய அவரது சிறு பிராயத்து கிராமத்து வாழ்க்கையை பற்றியும் சிக்கனத்தை பற்றியும் கூறுவார்.

நிலாமகள் said...

வ‌ரும் த‌லைமுறையின‌ர் ப‌டித்தேனும் தெரிந்து கொள்ள‌ ப‌ய‌னுறும் அத்தியாவ‌சிய‌ ப‌திவு ச‌கோத‌ரி! இவ‌ற்றையெல்லாம் கேட்டும் பார்த்துமிருக்கிறேன் நானும் என‌து சிறு பிராய‌த்தில்... மிள‌காய் மூட்டையில் வ‌ர‌ட்டி க‌ட்டுவ‌து த‌விர‌. த‌லைமுறை த‌லைமுறையாக‌ த‌த்த‌ம் அனுப‌வ‌ அறிவைக் க‌ட‌த்த‌வும் சேமிக்க‌வும் க‌ற்ற‌வ‌ர்க‌ள் ந‌ம் முன்னோர்க‌ள். அவ‌ர்க‌ளின் நுட்ப‌மும் திட்ட‌மிட‌லும் எந்த‌ப் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌த்திலும் இல்லாத‌ பாட‌திட்ட‌ம். எந்த‌ சிக்க‌லையும் சிர‌ம‌ங்க‌ளையும் ச‌ம‌யோசித‌மாய் ச‌மாளித்த‌ அம்மாக்க‌ளையும் பாட்டிக‌ளையும் கொண்டாடுவோம் நாமெல்லாம்.

ஹுஸைனம்மா said...

அக்கா, உண்மைதான் அக்கா. காலையில் ஆற்றுக்குப் போய் குளித்து வரும் சுகம் இருக்கே.. வார்த்தைகளில் சொல்ல முடியாது.

அதுபோலத்தான் மற்ற செயல்களும் - நெல் புழுங்கவைத்து குத்துவது, மாவு இடிப்பது, வறுப்பது, பணியாரம் செய்வது என்று பலதும்...

//அன்றைக்கு வேப்பங்காயாக இருந்தாலும் முடியாது என்றோ பிடிக்கவில்லை என்றோ வீட்டில் சொல்லி விட முடியாது. சொல்லவும் தெரியாது//
ஆமாக்கா. அம்மா/அப்பா சொல்தான் வேதவாக்கு போல!! இப்போவெல்லாம், குழந்தைகளின் மனம் கோணாமல் நடப்பது எப்படி என்று பெற்றோர்களுக்கு கிளாஸ் எடுக்கிறாங்க!! :-(((

இந்த மாற்றத்துக்கெல்லாம் தொடக்கப்புள்ளி வீட்டுக்கு வந்த டிவியிலருந்துதான் நினைக்கிறேன். மேலும், பெண்களை மதிக்காமல், அடிமைகளைப் போல நடத்தவும் தலைப்பட்டவர்களால்தான் இம்மாதிரி மாற்றங்கள் தொடங்கியது என்றும் சொல்லலாம்.

'பரிவை' சே.குமார் said...

நல்ல பகிர்வு அம்மா.

தளிகா said...

எவ்வளவு அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.உண்மை தான்.இன்று எனக்கே கூட எனது பாட்டி சொன்ன கதைகளும் அவருடைய வாழ்க்கை முறையும் ஆழமாக பதிந்து கிடக்கிறது.நவீன யுகத்தில் எதையெதையோ பறிக்கப் போய் எதையெதையோ இழக்கிறோம் என்பது உண்மை.ரொம்ப அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.என்னுடைய ப்லாகில் எனக்கு லாகின் செய்யவே முட்வதில்லை அதனால் பதிலும் கொடுக்காமல் இருக்கிறேன்

மனோ சாமிநாதன் said...

உங்களின் பின்னூட்டம் எனக்குத் தனிப்பட்ட மகிழ்வைக் கொடுத்தது சகோதரர் ராஜகோபாலன்! காரணம் நீங்கள் "இந்த மாதிரித்தான் என் பெண்ணும் வளர வேண்டும் என விரும்புகிறேன் அம்மா" என்றும் எழுதியிருந்தது தான்! தற்போது
பெரும்பாலான பெண்கள் இந்த மாதிரி வளர்க்கப்படவில்லை என்பதுவும் உண்மை!

மாமியாரைப்பற்றிப் பெருமையாகப் பேசியதைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தீர்கள். அந்தக்கால வளர்ப்பு பற்றி மறுபடியும் இங்கே குறிப்பிட்டே ஆகவேண்டும். திருமணமாகிப் புகுந்த வீடு செல்லும் முன்னரேயே 'மாமியார்‍ மாமனாரை எப்படி மதிக்க வேன்டும், புகுந்த வீட்டில் எப்படி நடந்து கொள்ள‌ வேண்டும், மரியாதை எப்படி செலுத்த வேண்டும் என்றெல்லாம் பலவிதமாக ஒரு வகுப்பே எடுத்துத் தான் அனுப்புவார்கள். அதனால் அதன்படி வாழ சிரமம் இருந்ததேயில்லை. அதோடு ஒரு நல்ல மருமகள் தான் நல்ல மாமியாராகவும் இருக்க முடியும்!

மனோ சாமிநாதன் said...

நீங்கள் சொன்னது மாதிரி அபிவிருத்தி மட்டும்தான் நம் நாட்டில் இப்போது இலக்காயிருக்கிறது சகோதரர் நிரூபன்! அந்த‌ வேகத்தில் அருமையான பழக்க வழக்கங்களும் நல்லெண்ன சிந்தனைகளும் அழிந்து கொண்டே வருகின்றன!
அன்பான கருத்துக்கு நன்றி!

மனோ சாமிநாதன் said...

அன்பான கருத்துக்களுக்கு மனமார்ந்த நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்னன்! நீங்கள் கூறியுள்ள‌து போல ' அந்த நாளும் வந்திடாதோ" என்றுதான் பெருமூச்செறிய வேண்டியிருக்கிறது இன்றைக்கு பல நிகழ்வுகளைப் பார்க்கும்போதெல்லாம்!

மனோ சாமிநாதன் said...

தங்களின் பின்னூட்டம் என் பதிவிற்கு பெருமை சேர்க்கிறது சகோதரர் ரத்னவேல்! தங்களுக்கு என் அன்பார்ந்த‌ நன்றி!!

மனோ சாமிநாதன் said...

நிச்சயம் பிற்போக்குவாதி என்ற பட்டங்களுக்குப் பஞ்சமில்லை சகோதரர் எல்.கே!
90 வயதுக்கு மேலான என் அம்மாவிற்கு இப்போதுதான் கால் வலி வருகிறது அவ்வப்போது என்று சொல்கிறரகள். எனக்கு 50 வயதில் வந்தது. என் மருமகள், உறவு முறைப்பெண்கள் எல்லோருக்குமே 30 வயது முடிவதற்குள் கால் வலி வ‌ருகிறது! இது தான் இன்றைய வாழ்க்கை!
இனிய‌ க‌ருத்துக்கு அன்பு ந‌ன்றி!!

மனோ சாமிநாதன் said...

"ஏற்றி வைத்த விளக்கிலிருந்து அடுத்த விளக்கை ஏற்றி வைத்ததாக" அழகான உவமையுடனும் பாராட்டுடனும் வந்த தங்களின் அன்பான பின்னூட்டத்திற்கு என் இதயங்கனிந்த நன்றி சகோதரர் ரமணி!

மனோ சாமிநாதன் said...

அன்றைக்கிருந்த நல்ல விஷயங்களை நிகழ்கால பிரமிப்புகள், அதிசயங்கள், வசதிகளின் நடுவே தொலைத்து விட்டோம் என்பது தான் சரி தமிழ் உதயம்! உங்கள் கருத்துக்கு மனமார்ந்த நன்றி!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்கு அன்பு நன்றி சகோதரர் பத்மநாபன்! குடும்பத்திற்கு பெண் அச்சாணி போன்றவள். அந்தப் பெருமையை இன்றைய பெண்களில் பெரும்பாலோர் உணராமலிருப்பது தான் நிகழ்காலத்தின் சோகம்!

kowsy said...

ஆஹா அற்பதம். சிறந்த ஆக்கம். உங்கள் மூளை சிறைப்பிடித்தவை. எங்கள் மூளைக்குள் வந்து சிறையாகிவிட்டன.

vidivelli said...

நல்லாயிருக்குங்க...........

நம்ம பக்கமும் காத்திருக்கு உங்க கருத்துக்காக

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்கு அன்பு நன்றி ஸாதிகா!

நீங்க‌ள் சொல்வ‌து மாதிரி ந‌ல்ல‌ விஷ‌ய‌ங்க‌ளைக் க‌ற்றுத்த‌ர‌ ம‌ன‌மும் இன்றைய‌ பெற்றோருக்கு இருப்ப‌தில்லை. ப‌டிப்பைத்த‌விர‌ மற்ற‌‌ ந‌ல்ல‌ விஷ‌ய‌ங்க‌ள் மீது இன்றைய‌ பெற்றோர் க‌வ‌ன‌மும் செலுத்துவ‌தில்லை.

மனோ சாமிநாதன் said...

அருமையான பாராட்டால் ம‌னதை மகிழ்வித்த உங்களுக்கு என் இனிய நன்றி கீதா!!

மனோ சாமிநாதன் said...

உங்கள் க‌ருத்து தான் என் கருத்தும் சகோதரி லக்ஷ்மி!

நீங‌ள் சொன்ன‌து மாதிரி கோல‌ம் போடுவ‌தும் ஆற்றுக்கு துணி துவைக்க‌ப் போவ‌தும் உட‌ம்புக்கு எத்த‌னை ப‌யிற்சி! அதெல்லாம் இன்று காற்றோடு போய் விட்ட‌து!

மனோ சாமிநாதன் said...

உண்மைதான்! அந்தக் காலம் கொடுத்த சந்தோஷங்க‌ளுக்கும் கற்றுக்கொடுத்த நல்ல பழக்க வழக்கங்களுக்கும் ஈடேயில்லை விதயா!

தளிகா said...

உங்களை போன்றவர்கள் இம்மாதிரி பதிவுகளை நிச்சயம் எங்களுக்கு தர வேண்டும்.இது இளைய தலைமுறையினறை சிந்திக்க வைக்கும்.குழந்தைகளுக்கு அந்த காலத்தில் டயப்பர் ஏது வைப்ஸ் ஏது இருந்தும் ஆறு ஏழு பெற்று எல்லோரையும் பஸ்ஸில் ஏற்றிக் கொண்டு தான் பிறந்த வீட்டுக்கு போக வேண்டுமாம்..இன்று டயப்பர் என்ன வைப்ஸ் என்ன இருந்தாலும் டயப்பர் மூட்டை காலை முதல் இரவு வரை குழந்தையோடேயே இருக்கும் அதை மாற்ற கூட இன்று அலுப்பு

மனோ சாமிநாதன் said...

"சரியான திட்டமிடலும் விரலுக்கேற்ற வீக்கமும் இருந்தால் மகிழ்ச்சியான வாழ்க்கைதான்."

உண்மையான‌ வார்த்தைக‌ள் சுந்த‌ர்ஜீ! மனந்திறந்த‌‌ பாராட்டுக்க‌ளுக்கு என் ம‌கிழ்வான‌ ந‌ன்றி!

ச‌கோத‌ரி என்ற‌ உற‌வு ரொம்ப‌வும் அருமையான‌து! என‌க்கும் உட‌ன் பிறந்த‌‌ ச‌கோத‌ர‌ர் இல்லை. என்னைப் பொதுவாக‌ அம்மா என்று தான் இங்கு எல்லோரும் அழைப்பார்க‌ள். அம்மா என்ற‌ழைத்தலில் பெருமிதம் என்றால் அக்கா என்றழைத்தலில் மிகுந்த மகிழ்ச்சி இருக்கிறது! தாராளமாக நீங்கள் என்னை அக்கா என்றே அழைக்கலாம்!

என்றென்றும் உங்கள் எல்லென்... said...

பெண்ணிற்கு கச்சேரி செய்யும் அளவிற்கு இல்லை என்றாலும் ரசிக்கும் அளவிற்காவது பாடத் தெரிந்திருக்க வேண்டும் என்று நினைத்துதான், அந்த காலத்தில்”பெண்ணுக்கு பாடத்தெரியுமா?” என்ற கேள்வி பெண் பார்க்கும் படலத்தில் கேட்கப்படும். பாடத்தெரிந்த பெண் எதிர்காலத்தில் எந்த பிரச்னையையும் மிக சுலபமாக எதிர்கொள்வாள் என்பது அனுபவ உண்மை.

'HATS OFF' மேடம்...ஓர் அருமையான இடுகையை அளித்ததற்கு...

மோகன்ஜி said...

அற்புதமான பதிவு மேடம்! என் அம்மா,சித்தி, பாட்டி என்று எல்லோரையும் நினைத்து பார்க்க வைத்து விட்டீர்கள். நன்றி

Matangi Mawley said...

ரேவதி சங்கரனின் வரிகள் பிரமாதம்-என்றால்- தங்கள் பதிவு, அதை விடப் பிரமாதம்... நீங்கள் இங்கே குறிப்பிட்டுள்ள விஷயங்களில் நூற்றில் ஒரு பங்கு கூட எனக்கு பரிச்சயம் இல்லை. ஆனால்-- அந்த கால social set up பின் ஒரு மிக அழகான documentation உங்களின் இந்த பதிவு, என்று தோன்றியது, எனக்கு.


Brilliant!

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

மனோ தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறேன். விவரங்கள் எனது புதிய போதிவில்.

மனோ சாமிநாதன் said...

உண்மை தான்! மரங்களுடன் பேசக்கற்றுக்கொடுத்த உங்களின் தாயார் பற்றிய நினைவுகள் நிச்சயம் இந்தப் பதிவைப் படிக்கும்போது வரத்தான் செய்யும்! அன்புடன் அறிவையும் கற்றுக்கொடுக்கும் தாய்மைதான் எத்தனை சிறந்தது! கருத்திற்கு அன்பு நன்றி சகோதரர் வெங்கட் நாகராஜ்!

மனோ சாமிநாதன் said...

உண்மை தான்! மரங்களுடன் பேசக்கற்றுக்கொடுத்த உங்களின் தாயார் பற்றிய நினைவுகள் நிச்சயம் இந்தப் பதிவைப் படிக்கும்போது வரத்தான் செய்யும்! அன்புடன் அறிவையும் கற்றுக்கொடுக்கும் தாய்மைதான் எத்தனை சிறந்தது! கருத்திற்கு அன்பு நன்றி சகோதரர் வெங்கட் நாகராஜ்!

மனோ சாமிநாதன் said...

நீங்கள் சொல்வது போல இன்றைய வாழ்க்கையின் அவசரங்களில் பல அருமையான விஷயங்களை இழந்து விட்டோம் ஆதி! காலம் தான் இதை சரி செய்ய வேண்டும்!

மனோ சாமிநாதன் said...

அன்பான கருத்துக்கு நெஞ்சார்ந்த நன்றி நிலாமகள்! நீங்கள் சொன்னது மாதிரி நம் மூதாதையர்கள் கடை பிடித்த நெறிமுறைகளில் சிறிதேனும் நாம் கடைபிடித்தால் அதுவே அவர்களுக்கு நன்றி தெரிவித்த மாதிரி தான்!

மனோ சாமிநாதன் said...

நீங்கள் சொன்ன அத்தனை கருத்துக்களும் உண்மை ஹுஸைனம்மா!

நெல் குத்துவது, அரிசி புடைப்பது, சின்ன யந்திரத்தில் அரிசி உடைப்பது என்று பழங்கால வேலைகள் எல்லாம் இன்றைக்கு புழக்கத்தில் இல்லாமலேயே போய் விட்டது. அதோடு, நிலாவில் ஆடிப் பாடித்திரிவதும் ஆற்றில் குதித்து நீச்சல் அடிப்பதும் போன்ற சிறு வயது சந்தோஷங்களையெல்லாம் இந்தக் கால குழந்தைகள் நிறையவே இழந்து விட்டார்கள்!

மனோ சாமிநாதன் said...

ரொம்ப நாளைக்குப் பிறகு உங்களை இங்கே பார்க்கும்போது மகிழ்வாயிருக்கிறது சகோதரர் குமார்! கருத்துப் பகிர்வுக்கு அன்பு நன்றி!!

மனோ சாமிநாதன் said...

"நவீன யுகத்தில் எதையெதையோ பறிக்கப் போய் எதையெதையோ இழக்கிறோம் என்பது உண்மை. உங்களை போன்றவர்கள் இம்மாதிரி பதிவுகளை நிச்சயம் எங்களுக்கு தர வேண்டும்.இது இளைய தலைமுறையினறை சிந்திக்க வைக்கும்.."

உங்கள் கருத்துக்கு என் அன்பு நன்றி தளிகா! உங்களின் பின்னூட்டமும் அருமையாக இருந்தது. நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல இந்த மாதிரி பதிவுகளை அவசியம் அடிக்கடி கொடுப்பேன்.

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டுக்கும் முதல் வருகைக்கும் என் இதயங்கனிந்த நன்றி சந்திரகெளரி!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்கு மனமார்ந்த நன்றி விடிவெள்ளி! அவசியம் உங்கள் வலைத்தளத்திற்கு அடிக்கடி வ‌ருவேன்!

மனோ சாமிநாதன் said...

கருத்துப்பகிர்வுக்கும் பாராட்டுக்கும் என் உளமார்ந்த நன்றி சகோதரர் லக்ஷ்மி நாராயணன்!

மனோ சாமிநாதன் said...
This comment has been removed by the author.
மனோ சாமிநாதன் said...

த‌ங்க‌ளின் உள‌மார்ந்த‌‌ பாராட்டிற்கு இத‌ய‌ங்கனிந்த‌‌ ந‌ன்றி ச‌கோத‌ர‌ர் மோகன்ஜீ!

மனோ சாமிநாதன் said...

உங்களின் மனந்திறந்த பாராட்டு எனக்கு மகிழ்வையும் உத்வேகத்தையும் அளிக்கிறது மாதங்கி! பாராட்டிற்கும் முதல் வ‌ருகைக்கும் என் அன்பு நன்றி!

மனோ சாமிநாதன் said...

என்னைத் தொடர் பதிவுக்கு அழைத்ததற்கு அன்பு நன்றி வித்யா! விரைவில் வந்து பங்கேற்கிறேன்!!