Wednesday 7 April 2010

முதுமை!


இன்றைய இளம் பெண்களுக்கு!

காலச்சுழற்சிகளில் வசந்த காலம் மறைந்து இலையுதிர்காலத்தில் உடல் வலிமை, மன வலிமை குறைந்து ஆயிரம் ஏக்கங்களுடனும் வலிகளுடனும் தன் நாட்களை கழிக்கும் முதியவர்களை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா?

அந்தக் காலத்தில் கூட்டுக்குடும்பங்களாய் வாழ்ந்த காலத்தில் முதுமையிலும் குடும்பத்தில் அவர்களுக்கு பங்கிருந்தது. ஆக்கப்பூர்வமான சிறுசிறு வேலைகள் உற்சாகத்தைத் தந்து அவர்கள் மனதை பாதுகாத்தன. பேரக்குழந்தைகள் அவர்களுக்கு பாரமாக இருந்ததில்லை. ஆனால் இன்றோ, மகன் மருமகள் தத்தம் பணிகளுக்குச் செல்வதால் அவர்கள் குழந்தைகளைப் பார்த்துக்கொள்வது அவர்களுக்கு முழு நேர கடமையாகி விடுகிறது. வயதின் சுமை, பல வருட உழைப்பு இவைகளெல்லாம் தினசரி வேலைகளை சுவாரஸ்யமே இல்லாததாக ஆக்கி விடுகின்றன. இன்னுமே உழைப்பா, இனியும் ஓய்வில்லையா என்ற கேள்விகளும் சார்ந்திருத்தலும் அவர்களை தளர வைத்து விடுகின்றன.

ஒரு ஹிந்திப் படம். பெயர் நினைவில்லை. அமிதாப் பச்சன் நடந்து போகும்போது சற்று தடுமாறுவார். அருகில் இருந்த மகன் அவரைத் தாங்கி உதவும்போது அமிதாப் அந்த உதவியை மறுப்பார். அப்போது அந்த மகன் ‘ நான் சின்னப் பையனாக இருந்தபோது இப்படி தடுமாறியபோது நீங்கள்தானே என்னை நடை பழக்கி என்னை தடுமாறாமல் நடக்க வைத்தீர்கள். அதை இப்போது நான் உங்களுக்குச் செய்யக் கூடாதா?’ என்று கேட்பார். இந்த அன்பும் அக்கறையும் பரிவும் ஒவ்வொரு மகனிடமும் மருமகளிடமும் இருக்குமானால் இன்றைக்கு முதியோர் இல்லங்கள் பெருகியிருக்கத் தேவையில்லை.

கொஞ்ச நாட்களுக்கு முன்னால் ஒரு முதியோர் இல்லத்திற்குச்சென்று அங்குள்ள அனைவருக்கும் உணவளித்தபோது மனம் அப்படியே கனத்துப் போனது. எத்தனை வலி அந்த கண்களில்! அந்த இல்லத்தில் அவர்களை நன்றாகப் பார்த்துக்கொள்கிறார்கள்தான். அடிக்கடி போவதால் அதைப்பற்றி எனக்கும் நன்றாகத் தெரியும். ஆனால் கவனிப்பும் வேளாவேளைக்கு சாப்பாடும் மட்டும் அவர்களுக்கு இந்த வயதில் போதுமா? கருணை மட்டும் அவர்களுக்கு மன நிறைவைத் தந்து விடுமா?அவர்களின் மன வலி எதனால் போகும்? தன் ரத்த உறவுகளின் அன்பான கவனிப்பினால்தானே போகும்? இது ஏன் இன்றைய இளம் ரத்தங்கள் நிறைய பேருக்கு புரிவதில்லை? வயதாக வயதாக, ஒரு சிறு குழந்தையின் மனமும் உடலுமாக, உடல் குறுகி, நோய் பெருகி தள்ளாட்டமாய் நடக்கையில் அவர்கள் நெஞ்சில் தேன் வார்ப்பது எது? அவர்களின் பிள்ளைகளின் அன்புதானே?

உட்கார்ந்து நலம் விசாரித்து, அன்பும் அக்கறையுமாக பேசக்கூடிய மகன்கள் இன்றைக்கு குறைந்து வருகிறார்கள். தலைமுறை இடைவெளியை மதிக்கத் தெரிந்த இளையவர்கள் இன்று பெரும்பாலும் அருகிவிட்டார்கள். சுயநலம், அவசர யந்திரத்தனமான வாழ்க்கை, இதெல்லாம் தன்னைப் பெற்று வளர்த்தவர்களையே மறக்க வைக்கிறது.

ஒருமுறை எங்கள் குடும்ப நண்பர் என்னிடம் ‘நீங்களெல்லாம் மஞ்சள் குங்குமத்துடன் போய்ச்சேர வேண்டும் என்பீர்கள்! அது எத்தனை சுய நலம்! இத்தனை வருடங்கள் உங்களையே சார்ந்து வாழப் பழகி விட்டோம். எங்களுக்கு உடல் நலமில்லாது படுக்கையில் சாய்ந்தால் திருமணமாகிச் சென்று விட்ட மகளும் துடைத்து விட முடியாது. மருமகளும் செய்ய முடியாது. ஆனால் நாங்களே இல்லாமல்போனால்கூட, அவர்களால் உங்கள் உடம்பை துடைக்கவும் வாந்தி எடுத்தால்கூட அருவருப்பிலாமல் செய்யவும் முடியும்’ என்று சொன்னது நினைவுக்கு வருகிறது.

இங்குதான் நான் இன்றைய இளம் பெண்களிடம் வருகிறேன்.

உங்களை எப்படி உங்கள் பெற்றோர் அருமை பெருமையாக வளர்த்து ஆளாக்கி திருமணம் செய்து கொடுக்கிறார்களோ, அதே மாதிரிதான் உங்கள் கணவரைப் பெற்றவர்களும் சீரும் சிறப்புமாக வளர்த்து தங்கள் மகனை உங்கள் கையில் ஒப்படைக்கிறார்கள். உங்கள் பெற்றோர் உங்களைப் பிரிந்த போது அவர்களுக்கு எந்த அளவு மன வலி இருந்ததோ, அதே அளவு உங்கள் கணவரைப் பெற்றவர்களும் மன வலியால் அவதிப்படுகிறார்கள். இதில் இன்னும் கொடுமை, அவர்கள் மகனுடன் அருகிலேயே இருந்தாலும், மனதால் அவனைப் பிரிந்திருக்க வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு இருக்கிறது. இந்த விலகல் மகனுக்குத் திருமணம் செய்யும் ஒவ்வொரு தாயுன் தந்தையும் அனுபவிப்பதுதான். படித்தவர்களும், அனுபவமடைந்தவர்களும், அதிக சகிப்புத்தன்மை உடையவர்க்ளும் இந்த விலகலை சமாளித்துக் கொள்கிறார்கள். பக்குவமற்றவர்களாலும் அனுபவம் குறைந்தவர்களாலும் திடீரென்று வந்த இந்த விலகலை சீரணித்துக்கொள்ள முடிவதில்லை.

நீங்கள் எப்படி இப்போது உங்கள் குழந்தையை சீராட்டி வளர்க்கிறீர்களோ, அதே மாதிரிதான் அவர்கள் 30 வயது வரை தங்கள் மகனை வளர்த்து உங்களிடம் ஒப்படைக்கிறார்கள். அதுவரை இருந்த நெருக்கம், மனம் திறந்த பேச்சு, பகிர்தல் எல்லாமே திடீரென்று குறையும்போது அந்த மாமியாரால் அதை சமாளிக்க முடியாமல் திணறுகிறாள். தோழமைக்கு நேரம் குறையும்போது மாமனாருக்கோ மகனின் விலகல் சோர்வைக் கொடுக்கிறது. கோபம், ஆங்காரம், போட்டி, பொறாமை, பாதுகாப்பின்மை, கொந்தளிப்பு-இதெல்லாம் உருவாகுவது இப்படித்தான்.

இதன் காரணமாக அவர்கள் வார்த்தைகளை வீசி இறைப்பதையும் கோபத்தில் கொந்தளிப்பதையும் குறைகள் எதற்கெடுத்தாலும் கண்டுபிடிப்பதையும் நான் நியாயமென்று சொல்ல வரவில்லை. பாதுகாப்பின்மையென்ற உணர்வினால் அவர்கள் செய்கிற தவறுகளை நீங்கள் மன்னிக்க முயற்சி செய்யுங்கள். அவர்கள் செய்கின்ற தவறுகளை கண்ணீருடனோ அல்லது மென்மையாகப் பேசியோ அவர்களை மாற்ற முயற்சி செய்யுங்கள். அதுவரை வளர்ந்த இடத்திலிருந்து ஒரு செடியை அப்படியே வேரோடு பிடுங்கி வேறொரு இடத்தில் நட்டு வைப்பதுபோல, புதிய இடத்திற்கு நிறைய எதிர்பார்ப்புகளுடன் வந்த உங்களுக்கு கடுஞ்சொற்களும் அலட்சியப்போக்கும் நிச்சயம் காயப்படுத்தும்.

ஆனால் மனித இதயம் அளவற்ற கருணையால்தான் முழுமை அடையும். உங்களுக்கு மன வலிமையும் உடல் வலிமையும் அதிகம். அவர்களை சிறு குழந்தையாக எண்ணி உங்களின் உள்ளத்துக் கருணையெல்லாவற்றையும் அவர்களிடம் காண்பியுங்கள். ஒரு தாயாக அவர்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள். உள்ளம் குளிர அவர்கள் சிரிக்கும் சிரிப்பு உங்களை பல்லாண்டு காலம் நலமுடன் வாழ வைக்கும். குடும்பம் ஒரு கோவிலாக இருந்தால் முதியோர் இல்லங்கள் எப்படி பெருகும்? ஆதரவு யாருமே இல்லாது போனவர்களுக்குத்தான் முதியோர் இல்லங்கள். ரத்தமும் சதையுமாக பெற்ற மக்கள் இருப்பவர்களுக்கு அல்ல.

படத்துக்கான நன்றி விக்கிபீடியாவிற்கு!!39 comments:

ஸாதிகா said...

///ஆனால் மனித இதயம் அளவற்ற கருணையால்தான் முழுமை அடையும். உங்களுக்கு மன வலிமையும் உடல் வலிமையும் அதிகம். அவர்களை சிறு குழந்தையாக எண்ணி உங்களின் உள்ளத்துக் கருணையெல்லாவற்றையும் அவர்களிடம் காண்பியுங்கள். ஒரு தாயாக அவர்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள். உள்ளம் குளிர அவர்கள் சிரிக்கும் சிரிப்பு உங்களை பல்லாண்டு காலம் நலமுடன் வாழ வைக்கும். குடும்பம் ஒரு கோவிலாக இருந்தால் முதியோர் இல்லங்கள் எப்படி பெருகும்? ஆதரவு யாருமே இல்லாது போனவர்களுக்குத்தான் முதியோர் இல்லங்கள். ரத்தமும் சதையுமாக பெற்ற மக்கள் இருப்பவர்களுக்கு அல்ல.///அககா சத்தியமான உண்மை.உங்கள் பதிவு என்னை நெகிழ வைத்துவிட்டது.நாளைக்கு நமக்கும் முதுமை வரும் என்ற நினைவும் பயமும் மனசாட்சியும் இருக்கும் பிள்ளைகள் கண்டிப்பாக பெற்றோர்களை முதியோர் இல்லங்களில் சேர்க்க மாட்டார்கள்.கணவரிடம் இருந்து அன்பையும் பொருளையும் தான் மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்ற மனநிலை கொண்ட பெண் கண்டிப்பாக வெற்றிகண்ட பெண்ணல்ல.

பித்தனின் வாக்கு said...

ரொம்ப நல்லா சொல்லியிருக்கீங்க. அனுபவப் பூர்வமான உண்மைகள். அனைவரும் படிக்க வேண்டிய கட்டுரை இது.

மன்னார்குடி said...

சிந்தனை முத்துக்கள்.

ஜெயா said...

இன்று சாதாரணமாக அநேகமான வீடுகளில் நடக்கும் பிரச்சினையை மிகவும் அழகாகவும் இன்றைய இளம் மருமகள்களுக்கு புரியும் படியும் எடுத்து சொல்லி இருக்கின்றீர்கள். கண்டிப்பாக எல்லோரும் படிக்க வேண்டிய நல்ல பதிவு. வாழ்த்துக்கள் மனோ அக்கா...

மனோ சாமிநாதன் said...

உண்மைதான், ஸாதிகா! வாழ்க்கையில் வெற்றி என்பதற்கு பல அர்த்தங்கள் இருக்கலாம். ஆனால் எப்பேர்ப்பட்ட மனதையும் தன் அன்பினால் வெல்பவளே வாழ்க்கையில் வெற்றி அடைந்த பெண் என்று நான் சொல்வேன். இதற்குப்பின்னால் மற்ற வெற்றிகள் தானாய்த் அவளைத்தேடி வரும்.

உணர்ச்சிப்பூர்வமாக இந்தப்பதிவில் கருத்துகளைச் சொன்னதற்கு என் அன்பு நன்றி!!

மனோ சாமிநாதன் said...

அன்புள்ள பித்தன் அவர்களுக்கு!

முதன் முதலாக வருகை தந்து இந்தப்பதிவின் உண்மைகளுக்கு ஊக்கம் கொடுத்து கருத்துரை எழுதியதற்கு என் அன்பான நன்றி!

மனோ சாமிநாதன் said...

அன்புள்ள மன்னார்குடி அவர்களுக்கு!

தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் என் உளமார்ந்த நன்றி!

மனோ சாமிநாதன் said...

அன்பு ஜெயா!

பெற்றோரின் சரியான வழி நடத்துதல் இல்லாத பெண் புகுந்த வீட்டில் நுழையும்போது இந்த பிரச்சினைகள் அதிகமாகி விடுகின்றன. முதியோர்களின் அவலம் மனதை சோர்வடையச் செய்கிறது. சமீபத்தில்கூட ஒரு பிரபல பெண் எழுத்தாளர்-தன் எழுத்துக்காக பல விருதுகளை அந்த காலத்தில் பெற்றவர்-தன் உறவுகளிடம் தான் சம்பாதித்தையெல்லாம் தொலைத்து, இப்போது சாப்பாட்டிற்கே மிகவும் கஷ்டப்படுபவராக ஒரு முதியோர் இல்லத்தில் வாழுகிறார். 80 வயதுக்கும் மேலான அவருக்கு, அவர் நிலை கேள்விப்பட்டு சமீபத்தில்தான் முதலமைச்சர் உதவித் தொகை வழங்கினார். படித்தவர்களுக்கே இந்த கதி என்றால் படிக்காதவர்களை நினைத்துப்பார்க்கவே பயமாக இருக்கிறது. புறக்கணிப்பு ஒரு பக்கம் கொடுமை என்றால், அவர்களை கடைசி வரை சுரண்டி விட்டு, பிறகு நடுக்காட்டில் தத்தளிக்க விடும் மனிதர்களை எந்த பெயரிட்டு அழைப்பது?

உங்களின் பதிவு மறுபடியும் ஒரு குட்டிப்பதிவை போடச் செய்து விட்டது. உங்களின் அருமையான பதிவிற்கு என் அன்பு நன்றி, ஜெயா!

Krishnaveni said...

Excellent article everyone must read. Thanks for the article madam and perfect picture

மங்குனி அமைச்சர் said...

நல்ல பதிவு

மனோ சாமிநாதன் said...

Dear Krishnaveni!

Thanks a lot for yr valuable opinion as well as genuine appreciation.

மனோ சாமிநாதன் said...

பாரட்டுக்கு மிக்க நன்றி, மங்குனி அமைச்சர் அவர்களே!

Asiya Omar said...

மனோ அக்கா,நல்ல அருமையான பதிவு,அந்த கடைசி பாரா படிப்பவரை நெகிழச்செய்யும்,மனதை உடைத்து விடும் வலிமையுடையது..மாமாவிற்கு உடல் நலமில்லை என்று போனவருடம் வந்தேன்,இப்பொழுது உடல் தேறியாச்சு,ஊரில் மகள் இருக்காங்க,இந்த வருடம் என் மகன் +2 ,மகன் அங்கு இருப்ப்பதால் கிளம்ப வேண்டிய சூழ்நிலை.மிகவும் குழம்பி மாமாவிடம் கேட்டதில் போய் வாம்மா என்று சொன்னதால் கிளம்ப முடிவெடுத்தாச்சு.உங்கள் இந்த இடுகை என்னை ரொம்ப யோசிக்க வைத்தது.நன்றி மனோ அக்கா.கனத்த மனதுடன் தான் கிளம்புகிறேன்.

மனோ சாமிநாதன் said...

அன்பு ஆசியா!

மனம் நெகிழ்ந்து எழுதியிருந்த உங்களின் பதிவை படித்தேன். ஒரு நல்ல மருமகளாக, உங்கள் மாமனார் உடல் நலிவுற்றபோது பக்கத்தில் இருந்து ஒரு வருடம் நன்கு கவனித்து விட்டுத்தானே புறப்படுகிறீர்கள்! அப்புறம் ஏன் கவலைப்படுகிறீர்கள்? இந்த அக்கறையும் பரிவும்தானே அவர்கள் வேண்டுவது! அதைப் பொறுப்புடன் செய்து முடித்து விட்டீர்கள். என் வாழ்த்துக்கள்!

இங்கு வந்ததும் ஃபோன் செய்யுங்கள்.

Jaleela Kamal said...

மனோ அக்கா நல்ல பகிர்வு, எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டிய பதிவு.
நல்ல விளக்கமாக பகிர்ந்து இருக்கீங்க.

மனோ சாமிநாதன் said...

அன்பு ஜலீலா!

உங்களின் கருத்துக்களுக்கு என் அன்பு நன்றி!!

Kanchana Radhakrishnan said...

எல்லோரும் படிக்க வேண்டிய நல்ல பதிவு. வாழ்த்துக்கள் .

எல் கே said...

//பெற்றோரின் சரியான வழி நடத்துதல் இல்லாத பெண் புகுந்த வீட்டில் நுழையும்போது இந்த பிரச்சினைகள் அதிகமாகி விடுகின்றன/

நிறைய இடங்களில் பெற்றோரே மகளை தவறாக வழிநடத்துகின்றனர் நல்ல பதிவு அம்மா

Menaga Sathia said...

அவசியம அனிவரும் படிக்க வேண்டிய பதிவு.நல்லா சொல்லிருக்கிங்க அம்மா....

'பரிவை' சே.குமார் said...

நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.

மனோ சாமிநாதன் said...

அன்புள்ள காஞ்சனா!

தங்களின் அன்பான கருத்துக்கும் வருகைக்கும் என் உளமார்ந்த நன்றி!

மனோ சாமிநாதன் said...

அன்புள்ள LK!

தங்களின் முதல் வருகைக்கும் கருத்திற்கும் என் இதயங்கனிந்த நன்றி!

மனோ சாமிநாதன் said...

கருத்திற்கு என் அன்பு நன்றி, மேனகா!

மனோ சாமிநாதன் said...

அன்புள்ள குமார் அவர்களுக்கு!

தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் என் இதயப்பூர்வமான நன்றி!

மன்னார்குடி said...

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

மனோ சாமிநாதன் said...

அன்புள்ள மன்னார்குடி அவர்களுக்கு!
தங்களுக்கும்
இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

Krishnaveni said...

Wish you a Happy Tamil New Year and thanks very much for your wishes madam

ஹுஸைனம்மா said...

அக்கா, வயதான காலத்தில், துணை மறைந்து, ஒருவர் மட்டும் தனித்திருப்பது மிகவும் வெறுமை தரும் விஷ்யம்தான். நான் பயப்படுவதும் அது நடக்கக்கூடாது என்றே!! இறைவன் காக்கட்டும்.

மற்றபடி, புதுமணப் பெண்ணாக நான், அனுசரித்துப் போகவேண்டும் என்ற என் தாயின் அறிவுரையோடு (ஏன், மிரட்டல் என்றே சொல்லலாம்) என் மாமியார் வீட்டில் அடியெடுத்து வைத்தாலும், அந்த அறிவுரையை, என் மாமியாரும் பொறுமையானவராக இருந்ததினாலேயே இன்றும் என்னால் நடைமுறைப்படுத்த முடிகிறது. மருமகளைவிட அனுபவமும், பக்குவமும் மாமியாருக்கு அதிகம் இருக்கும். இப்பொழுதும் என் மாமியாரின் விருப்பத்திற்கு நான் முதலிடம் கொடுக்கக் காரணம், அவரின் ஆரம்பகால பரிவும், பொறுமையுமே.

என் மாமியாரைப் போல நானும் எதிர்காலத்தில் இருக்கவேண்டுமே என்ற பயமும் உள்ளூர இருக்கத்தான் செய்கிறது!!

மனோ சாமிநாதன் said...

Thanks a lot for yr wishes, krishnaveni!

மனோ சாமிநாதன் said...

அன்புள்ள ஹுஸைனம்மா!

உங்களின் பதிவு எனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளித்தது.

நான் புகுந்த வீடு செல்லும்போது என் பாட்டி, அவர்களுக்கு திருமணமான புதிதில் அவர்கள் தந்தை எழுதிக்கொடுத்த வாசகங்கள் அடங்கிய பேப்பர் ஒன்றை என் கையில் கொடுத்து, படிக்கச் சொல்லி இப்படித்தான் நீ புகுந்த வீட்டில் வாழ வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார்கள். எதிர்கேள்வி கேட்காமல் சொன்னதைக் கேட்டு, பணிந்து புகுந்த வீட்டில் நல்ல பெயர் எடுக்க அந்த தலைமுறையால் முடிந்தது. என் கவலையெல்லாம் இன்றைய தலைமுறை பற்றித்தான்!

கவலைப்படாதீர்கள், எப்போது உங்களால் ஒரு நல்ல மருமகளாய் இருக்க முடிந்ததோ, நிச்சயம் உங்களால் நல்ல மாமியாராகவும் இருக்க முடியும்!

மனோ சாமிநாதன் said...

அன்புள்ள ஹுஸைனம்மா!

உங்களின் பதிவு எனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளித்தது.

நான் புகுந்த வீடு செல்லும்போது என் பாட்டி, அவர்களுக்கு திருமணமான புதிதில் அவர்கள் தந்தை எழுதிக்கொடுத்த வாசகங்கள் அடங்கிய பேப்பர் ஒன்றை என் கையில் கொடுத்து, படிக்கச் சொல்லி இப்படித்தான் நீ புகுந்த வீட்டில் வாழ வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார்கள். எதிர்கேள்வி கேட்காமல் சொன்னதைக் கேட்டு, பணிந்து புகுந்த வீட்டில் நல்ல பெயர் எடுக்க அந்த தலைமுறையால் முடிந்தது. என் கவலையெல்லாம் இன்றைய தலைமுறை பற்றித்தான்!

கவலைப்படாதீர்கள், எப்போது உங்களால் ஒரு நல்ல மருமகளாய் இருக்க முடிந்ததோ, நிச்சயம் உங்களால் நல்ல மாமியாராகவும் இருக்க முடியும்!

ஹுஸைனம்மா said...

நன்றி அக்கா வாழ்த்துக்கு!! என் கருத்தை எப்படி எடுத்துக்குவீங்களோன்னு தயக்கமா இருந்தேன்.

//என் கவலையெல்லாம் இன்றைய தலைமுறை பற்றித்தான்!//

ஆனாலும் பயங்காட்டுறீங்க பாருங்க, எனக்கு வரப்போற மருமகளைப் பத்தி!! :-)))

மனோ சாமிநாதன் said...

பயம் காட்டவில்லை, நிதஎசமான உண்மைதான் ஹுஸைனம்மா!

இன்றைய இளம் பெண்கள் நிறைய பேரின் பெற்றோர்கள் அவர்களுக்கு படிப்பைத்தவிர, எதையுமே சொல்லித்தராமல்தான் புகுந்த வீட்டிற்கு அனுப்புகிறார்கள். குடும்ப நிர்வாகம், சமையல் என்று எதுவுமே தெரியாமல் வருபவர்களுக்கு, தன் மன அழுத்தங்களை மனதிலேயே அமிழ்த்திக்கொண்டு, எல்லா விஷயங்களையும் கற்றுத்தர முயற்சிக்கும்போது பல மடங்கு மன அழுத்தத்திலும் பிறகு உடல் நலமின்மையிலும் விழும் மாமியார்கள் இன்றைக்கு ஏராளம்.

பல வருடங்களாக நான் ஒரு ஆங்கிலத்தளத்தில் சமையல் சார்ந்த கேள்விகளுக்கு பதிலும் சமையலும் எழுதிக்கொண்டிருக்கிறேன். நம்ப மாட்டீர்கள், என்னிடம் சாதம் எப்படி வடிப்பது என்று கேட்டவர்கள் உண்டு.

சமீபத்தில் எனக்கு மிகத் தெரிந்த குடும்ப நண்பர் வீட்டுப் பெண்ணுக்கு, நெருங்கி வரும் அவளின் திருமணத்திற்கு பரிசளிக்கச் சென்றபோது, சமையல், குடும்ப நிர்வாகம் எல்லாம் சொல்லித்தருகிறீர்களா என்று கேட்டேன். உடனேயே அந்த பெண்ணின் அம்மா ‘எப்படியும் மாமியார் வீட்டுக்குப்போய் கஷ்டப்படத்தான் போகிறது. கல்யாணம் வரைக்குமாவது கஷ்டப்படாமல் நம் வீட்டில் சுகமாக இருக்கட்டுமே’ என்றார்கள். நான் உடனேயே ‘ கல்யாணம் ஆனால் மாமியார் வீடு சென்றாலே கஷ்டம்தான் என்று ஏன் உங்கள் பெண்ணின் மனதில் விதைக்கிறீர்கள்? அப்புறம் மாமியார் வீடு சென்று எதையும் செய்யத் தெரியாமல் நின்று அவர்கள் கோபித்துக் கொண்டால் மட்டும், ‘மாமியார் கொடுமை’ என்று உடனேயே சொல்வதற்கா? என்ன நியாயம் இது? ‘என்று கேட்டேன். உடனேயே அவர்கள் வீட்டுப் பெரியவர்கள் எல்லாம் என்னைச் சூழ்ந்து கொண்டு, ‘நன்றாகச் சொல்லுங்கள் அம்மா, இவள்தான் பெண்ணைக் கெடுத்துக் கொண்டிருக்கிறாள்’ என்றார்கள். நிறைய வீடுகளில் இன்றைய நிலைமை இது. அந்த மாமியார் என்ற தாயார் மகனின் மனமும் வாடாமல் மருமகளை நிறையவே அனுசரித்து ஒரு வழியாகி விடுவதுதான் இன்று நடக்கிறது.

R.Gopi said...

மனோ மேடம்...

மனதை பிசைய வைத்த எழுத்து....

படிக்கும் போதே நெஞ்சு கனத்தது... இன்று பெற்றோரை முதியோர் இல்லங்களில் அடைக்கலப்படுத்தும் இவர்களை, நாளை இவர்கள் பிள்ளைகள் எவ்வாறு வைத்து காப்பாற்றுவார்கள் என்று நம்புகிறார்கள்... முற்பகல் செய்யின், பிற்பகல் விளையுமல்லவா??

இதை வைத்து, ஒரு கதை எழுதலாம் என்றிருக்கிறேன்...

மனோ சாமிநாதன் said...

அன்புள்ள கோபி அவர்களுக்கு!

இந்தப் பதிவின் கருத்தை அருமையாக அலசல் செய்திருந்தது எனக்கு மகிழ்வை அளித்தது.
சில வருடங்களுக்கு முன் குமுதம் ‘ஜங்க்ஷன்’ இதழில் படித்த உண்மைச் சம்பவம்-
மனைவியின் போதனையால் மகன் தன் படிக்காத கிராமத்துத்தாயை ஏமாற்றி சென்னைக் கடற்கரையில் தனியாக விட்டுத் திரும்பி விட்டான். இரவெல்லாம் -உணவும் இன்றி, கையில் பணமும் இல்லாது அப்படியே தவிக்க விட்டுப்போன மகனுக்காக காத்திருந்த அந்த மூதாட்டியின் நிலைமை கண்டு ஆதறவற்றோர் இல்லத்தில் ஒரு போலீஸ்காரர் சேர்த்து விட்டிருக்கிறார். அந்தத் தாயின் கண்ணீரைக் கண்டு, பேட்டி எடுத்துக்கொண்டிருந்த பத்திரிக்கையாளர், ‘ அதுதான் உங்களை ஒரு நல்ல இடத்தில் சேர்த்து விட்டிருக்கிறார்களே, இங்கு தான் நன்றாக கவனித்துக்கொள்கிறார்களே, அப்புறம் ஏனம்மா அழுகிறீர்கள் ‘என்று கேட்டதற்கு, அந்த மூதாட்டி, ‘ ஒரு வேளை என்னை விட்டுச் சென்ற மகன் என்னை அங்கு வந்து தேடினால் என்னைக் கானாமல் தவிப்பானே’ என்றாராம். அந்தப் பத்திரிக்கையாளரால் பதிலே சொல்ல முடியவில்லை. இதுதான் தாயின் இதயம். ஆனால் ஒரு கொடிய மிருகத்தை விட கேவலமாகிப் போன மகனை என்னவென்று பேர் சொல்லி அழைப்பது? இதைப்படித்த அன்றிரவு என்னால் உறங்க முடியவில்லை.

அவசியம் இதை வைத்துக் கதை எழுதுங்கள்.

கோமதி அரசு said...

ஆதரவு யாருமே இல்லாது போனவர்களுக்குத்தான் முதியோர் இல்லங்கள். ரத்தமும் சதையுமாக பெற்ற மக்கள் இருப்பவர்களுக்கு அல்ல. //

உண்மை உண்மை.

மனதை கனக்க வைத்த பதிவு.

ezhil said...

வளரும் பருவத்தில் எத்தனையோ விஷயங்களை பொறுமையுடன் சொல்லிக்கொடுத்த பெரியவர்களின் ஒரு கேள்விக்குக் கூட பொறுமையாக பதிலளிக்க நம்மால் முடியவில்லை ஒரே நிமிடம் நாளை நமக்கும் இதே நிலைதான் என்பதை யோசித்தால் முதியோர் இல்லங்களுக்கான அவசியம் இருக்காது அறிவுரையான பதிவு

Asiya Omar said...

வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்,என் மனதை தொட்ட இந்த பகிர்வுக்கு மிக்க நன்றி அக்கா.

கோமதி அரசு said...

இந்த நல்ல விழிப்புணர்வு பதிவு வலைச்சரத்தில் இடம்பெற்றதற்கு வாழ்த்துக்கள்.