Wednesday, 31 March 2010

வீட்டு உபயோக குறிப்புகள்

நமது அன்றாட வாழ்க்கையில் சில பிரச்சினைகளை, தொந்தரவுகளை, வீட்டில் புழங்குகையில், உடல் நலக் குறைவில் மேலும் பல வகைகளிலும் சந்திக்கிறோம். சில சமயம் அவற்றை சரி செய்ய பணமும் தேவையில்லாமல் செலவு செய்கிறோம். அந்த மாதிரி நேரங்களில் நமக்குத் தெரிந்தவர்கள் யாராவது ரொம்பவும் சாதாரணமாகச் சொல்லும் ஒரு தீர்வு கூட அசந்து போகிற மாதிரி பலன் அளிக்கிறது. அந்த மாதிரி குறிப்புகளைத்தான் மற்றவர்களுக்கும் பயன்பட வேண்டும் என்ற நோக்கத்தில் இங்கே எழுத ஆரம்பித்திருக்கிறேன்.

1. கல் தோட்டில் எண்ணெய் இறங்கி விட்டால், அதை ஒரு வெள்ளைத் துணியில் குப்புற வைத்து, அந்த வெள்ளைத் துணியை ஒரு இட்லிப் பாத்திரத்தில் வைத்து 15 நிமிடங்களுக்கு ஆவியில் வைத்தால், தோட்டில் இறங்கியிருந்த எண்ணெய் முழுவதும் துணியில் இறங்கி விடும்..

2. தங்க நகைகள் அழுக்கடைந்து விட்டால் ஏதேனும் பற்பசையைத் தடவி ப்ரஷால் தேய்த்தால் அழுக்கெல்லாம் நீங்கி நகைகள் புதிதுபோல மின்னும்.
3.. பல்லிகள் அதிகம் வராமல் தடுக்க; கடுக்காயைத் தூள் செய்து பொடித்த கற்பூரத்தை சம அளவில் கலக்கவும். இதில் ஒரு தேக்கரண்டிக்கு ஒரு டம்ளர் தண்ணீர் என்ற விகிதத்தில் தேவையான அளவில் கலந்து, வீட்டைக் கழுவிய பிறகு ஆங்காங்கே ஜன்னல்கள், கதவுகள் ஓரமாகத் தெளித்தால் பல்லிகள் நடமாட்டம் வெகுவாகக் குறையும்.


4. கண்ணாடி டம்ளர்கள் ஒன்றுக்குள் ஒன்று புகுந்து எடுக்க வராவிட்டால், கீழ் டம்ளரை கொதிநீரில் வைத்து, மேலுள்ள டம்ளரில் மிகக்குளிர்ந்த நீர் ஊற்றி சிறிது நேரத்தில் மேல் டம்ளரை இழுத்தால் எளிதாக வந்துவிடும்.

5. புத்தக பீரோவில் புகையிலைத் துண்டுகளைப் போட்டு வைத்தால் பூச்சிகள் வராது.

6. தூபக்காலில் நெருப்புத் துண்டங்களைப் போட்டு அதன் மீது கிராம்புத்தூளைத் தூவவும். அந்த புகைக்கு ஈக்கள் ஓடிவிடும்.

7. உப்பு கலந்த நீரை சமையலறையில் சுவர்களோரம் தெளித்தால் எறும்புகள் வராதிருக்கும்.


8. வாஷ் பேசின் அடைத்துக்கொண்டால் அரை கப் வினீகரில் 2 ஸ்பூன் சமையல் சோடா கலந்து வாஷ் பேசினின் துவாரங்களில் ஊற்றவும்.
அரை மணி நேரம் கழித்து கொதிக்கும் வென்னீர் 1 லிட்டர் அதில் ஊற்றவும். அடைப்பு நீங்கி விடும்.

9. தேனீ அல்லது தேள் கடிக்கு: புகையிலையை ஒரு சிட்டிகை எடுத்து ஒரு சொட்டு நீரில் கலந்து கடிவாயில் வைத்து ஒரு பாண்ட் எய்டின் உதவியால் அழுத்தமாக ஒட்டவும். வலி உடனடியாக மறையும்.

10. வீட்டில் பல்லிகள் வருகை அதிகமிருந்தால் ஆங்காங்கே மயிலிறைகை போட்டு வைப்பது அவற்றின் வருகையை நிறைய குறைத்து விடும். சுவற்றின்மீது கூட அலங்காரமாக ஒட்டி வைப்பது நல்ல பலனைத் தரும்.

15 comments:

asiya omar said...

முத்துச்சிதறல் சூப்பராக இருக்கே.வாசமிகு வாடாமலர்களை பெற்று எம் வரவேற்பறையில் வைத்தாயிற்று.

மன்னார்குடி said...

பயனுள்ள குறிப்புகளை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

மனோ சாமிநாதன் said...

முத்துச்சிதறலை பாராட்டியதற்காக இன்னும் கொஞ்சம் வாசமிகு மலர்களை அனுப்பியிருக்கிறேன், ஆசியா! பெற்றுக்கொள்ளுங்கள்!!

மனோ சாமிநாதன் said...

மன்னார்குடி அவர்களுக்கு!

பாராட்டுக்கும் வருகை புரிந்ததற்கும் என் அன்பு நன்றி!

ஜெயா said...

பயன் உள்ள தகவல்கள். மிக்க நன்றி..

மனோ சாமிநாதன் said...

அன்பு ஜெயா!

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் என் அன்பு நன்றி!!

செந்தமிழ் செல்வி said...

நல்ல பயனுள்ள குறிப்புகள்.
பேரன் வந்தாச்சா?

மனோ சாமிநாதன் said...

கருத்துக்கும் பதிவுக்கும் நன்றி, செல்வி!
பேரன் நேற்று வந்தாச்சு. வேறு எந்த வேலையும் புரியவில்லை. இந்த பதிவை இரவு. 11.30க்குத்தான் கொடுக்க முடிந்தது..

Kanchana Radhakrishnan said...

பயன் உள்ள தகவல்கள்.

மனோ சாமிநாதன் said...

கருத்துக்கும் பதிவிற்கும் என் அன்பு நன்றி, காஞ்சனா!

asiya omar said...

மனோஅக்கா,உங்க கிச்சன் எங்கே?

R.Gopi said...

//தங்க நகைகள் அழுக்கடைந்து விட்டால் ஏதேனும் பற்பசையைத் தடவி ப்ரஷால் தேய்த்தால் அழுக்கெல்லாம் நீங்கி நகைகள் புதிதுபோல மின்னும்.//

மனோ மேடம்... ஷாம்பூ கூட லேசாக போட்டு அழுக்கு எடுக்கலாமோ!!

அனைத்து குறிப்புகளும் மிக அருமை...

நன்றி மேடம்....

மனோ சாமிநாதன் said...

ஆசியா!

சமையல் குறிப்புகள்தானே கேட்கிறீர்கள்? அடுத்த பதிவு அதுதான். உங்களுக்காக ஒரு இனிப்பைத்தான் வழங்கலாமென்று இருக்கிறேன்.

மனோ சாமிநாதன் said...

அன்புள்ள கோபி அவர்களுக்கு!

ஷாம்பூ உபயோகித்தாலும் அதே பலன் கிடைக்குமென்றுதான் நினைக்கிறேன். ஒரு சமயம், ‘பந்த்’ அடைப்பால் பாங்க் லாக்கரைத் திறக்க முடியாமல் போக, வீட்டிலிருந்த நகைகளை சுத்தம் செய்ய வீட்டில் வேலை செய்த பெண் சொன்ன குறிப்பு இது! சுத்தம் செய்த பின் நகைகள் ‘பளிச்’ சென்று மின்னியதைப் பார்த்து அசந்து போனோம்!
புதிய கருத்திற்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி!!

parhti zplus said...

சிறப்பான பகிர்வு... பகிர்ந்து கொண்டதற்கு வாழ்த்துக்கள்.... சில தினங்களுக்கு முன் http://www.valaitamil.com/udalnalam_health-tips என்ற இணையதளத்தை பார்த்தேன் அதில் உள்ள சில உடல் நலக் குறிப்புகள் என்னை மிகவும் கவர்ந்தது.