Wednesday, 31 March 2010

மூட்டு வலி பற்றி!

மருத்துவப் பகுதியில் இந்த பிரச்சினையைத்தான் முதலில் எழுத வேண்டுமென நினைக்கிறேன். இன்று பலரையும் பாதிப்பது மூட்டு வலிதான். மூட்டுக்களில் ஏற்படும் வலிகள் மெல்லப்பரவி தீராத முதுகு வலிக்கும் காரணமாகி விடுகின்றன. பெரியவர்களுக்குத்தான் என்றில்லை. சிறியவர்களையும் தற்போது இது அதிகமாகவே பாதிக்கிறது. மூட்டு வலி ஏற்படுவதற்கான காரணங்களையும் எனக்குத் தெரிந்த மருத்துவக் குறிப்புகளையும் எழுதியுள்ளேன். இவை பலரையும் சென்றடைய வேண்டுமென்பதுதான் என் நோக்கம். இவை போக, சகோதர சகோதரிகள் தங்களுக்குத் தெரிந்த வைத்தியங்களையும் இங்கு எழுதினால் மற்றவர்களுக்கு அது மிகவும் உபயோகமாக இருக்கும்.

மூட்டுவலிக்கான காரணங்கள்:
எலும்புகளை ஒன்றோடு ஒன்றாக இணைக்கும் தசை நார் கிழிவதாலும் மூட்டுகளில் நோய் தொற்று ஏற்படுவதாலும், எலும்பில் உள்ள திசுக்கள் கிழிவதாலும் மூட்டு எலும்புகளுக்கிடையே சுரக்கும் திரவம் குறைவதாலும் மூட்டு வலி ஏற்படுகிறது.
இதில் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுவோருக்கு, "ஆஸ்டியோ ஆர்த்தரைட்டிஸ்' மூட்டு வலி ஏற்பட வாய்ப்பு உண்டு.

கருத்தடை, கர்ப்பப்பை அறுவை சிகிச்சைகள் செய்து கொண்ட பெண்களுக்கும் மிக அதிகமான வேலைகளை தொடர்ந்து செய்துகொண்டிருப்பதைப் பழக்கமாகக் கொண்ட ஆண்கள், பெண்களுக்கும் உடல் எடை அதிகமானவர்களுக்கும் மூட்டு வலி சீக்கிரமாகவே வந்து விடுகிறது.

இதன் தொடர்பு வலிகளான இடுப்பு வலி, முதுகு வலி, தோள் பட்டை வலி முக்கியமாக பெண்களை மிகவும் பாதிக்கிறது.

வலியை அதிகப்படுத்தும் செயல்களை தினமும் அதை உணராமலேயே செய்வது, குதிகால் செருப்புகளைப் பயன்படுத்துவது இடுப்பு மற்றும் கால் மூட்டுகளில் அழுத்தத்தை ஏற்படுத்தும் என்பதை உனராமலேயே அவற்றை உபயோகிப்பது, தவறான posture- அதாவது நிற்கும்போது ஒரு காலில் மட்டும் எடை அதிகாகுமாறு மறுகாலை மடித்தோ, சாய்த்தோ நிற்பது, அதிக நேரம் உட்கார்ந்த நிலையிலேயே இருப்பது, காலை மடித்து அடிக்கடி சம்மணம் போட்டு உட்காருவது, நிமிர்ந்து உட்காராமல் அதிகம் சாய்ந்த நிலையிலேயே எப்போதும் அமர்ந்து பழகுவது, கூன் போட்டு உட்காருவது-இதெல்லாம் மூட்டு வலியை மேலும் மேலும் அதிகரிக்கின்றன.

மூட்டு வலிக்கான தீர்வுகள்:
1. கடுகு எண்ணெய் மூட்டு வலிக்கு மிகவும் சிறந்தது. சில பூண்டு பற்களுடன் மிதமான சூட்டில் அதைக் காய்ச்சி, சற்று ஆற வைத்து மிதமான சூட்டில் பாதிப்பு இருக்குமிடத்தில் தினமும் இரண்டு முறை தேய்த்து வந்தால் வலி நிறைய குறையும்.
2. முருங்கைக்கீரை, கொள்ளு, முடக்கத்தான் கீரை, மீன், பூண்டு இவற்றை தினமும் சாப்பாட்டில் எந்த முறையிலாவது அதிகம் எண்ணெய் சேர்க்காமல் தயாரித்து உண்ணுவது மூட்டு வலிக்கு மிகவும் நல்லது.

3.வெதுவெதுப்பாக சுட வைத்த தேங்காய் எண்ணெயில் சிறிது கற்பூரத்தை போட்டு நன்கு மூட்டில் தேய்த்தால் வலி குறையும்.

4. மூட்டு வலி, முதுகு வலிக்கு அக்குப்ரஷர் வைத்தியம் சிறந்த பலனைக் கொடுக்கிறது. பாதிக்கப்பட்ட இடத்திலோ அல்லது பாதிக்கப்பட்ட உறுப்புகள் இருக்கும் புள்ளிகளிலோ கை விரல்களால் அழுத்தம் கொடுக்கும்போது வலி நிறைய குறைந்து விடுகிறது. இந்த முறை எனக்கும் மிகவும் பலனளித்தது என்றுதான் சொல்ல வேண்டும்.
4. என் சினேகிதி சொன்ன வைத்தியம் இது.
ஒரு கை நொச்சி இலை, ஒரு கை பச்சை துளசி இலை, ஒரு கை முருங்கைக்கீரை, ஒரு கை வேப்பிலை, ஒரு கை புதினா இலை-இவற்றை மையாக அரைத்து நாட்டுக்கோழி முட்டையின் வெள்ளை கரு ஒன்றை ஊற்றி பிசைந்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி, உலர்ந்ததும் கழுவ வேண்டும். தினமும் இரண்டு முறை செய்தால் நல்லது.

5. ஒரு கப் வேப்பெண்ணெயில் ஒரு கைப்பிடி நொச்சி இலை, சிறிது கஸ்தூரி மஞ்சள், சில பூண்டு பற்கள் அரைத்துச் சேர்த்து காய்ச்சி தடவி வந்தால் வலி நிறைய குறைகிறது.மூட்டு வலி ஏற்படாமலிருக்கவும் அதிகரிக்காமலிருக்கவும் நம் பழக்க வழக்கங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.

முதுகுத் தண்டை நிமிர்த்தியபடி உட்காருவதாலும் எந்த வேலையையும் ஒரேடியாக செய்யாமல் சிறிது இடைவெளி விட்டு செய்வதாலும். நல்ல பலன் கிடைக்கும். இதைத்தான் அலோபதி மருத்துவர்களும் வற்புறுத்திச் சொல்கிறார்கள்.. அதிக நேரம் உட்கார்ந்தபடி பணியாற்றுபவர்கள், அவ்வப்போது எழுந்து காலார நடந்துவிட்டு வந்து உட்கார்ந்து வேலைகளைச் செய்ய வேண்டும்.7 comments:

ஜெயா said...

பயன் உள்ள மருத்துவக்குறிப்புகள். மிக்க நன்றி

மனோ சாமிநாதன் said...

கருத்துக்கும் பதிவிற்கும் என் அன்பு நன்றி, ஜெயா!

R.Gopi said...

பெண்கள் எடையளவை சரியாக வைத்திருத்தல் மிக முக்கியமான ஒன்று...

நிறைந்த எடையளவை கால்கள் தாங்கும் நிலை வரும் போது, மூட்டு வலி வருதல் தவிர்க்க முடியாதது...

மனோ சாமிநாதன் said...

அன்புள்ள கோபி அவர்களுக்கு!

மற்றுமொரு முக்கியமான கருத்தை எழுதிய தங்களுக்கு என் அன்பு நன்றி!!

ஹைஷ்126 said...
This comment has been removed by the author.
ஹைஷ்126 said...

அன்பு அக்கா அருமையான பதிவு. என் சில கருத்துகள், நாம் இதுவரை உண்ட உணவுதான் இன்றய நம் உடல், சரியான் உணவு உண்டால் எந்த உபாதையும் வராது என்பது எவ்வளவு உண்மையோ அதே போல் உடல் உழைப்பு (அல்லது உடல் பயிற்சி) மிக அவசியம், என்ன தான் புதிய BMW காரை வாங்கி தினமும் துடைத்து பாலீஷ் போட்டு வைத்தாலும், ஓடாவிட்டல் துருதான் பிடிக்கும் அது போல்தான் உடலுழைப்பு இல்லாவிட்டால் நம் உடலின் அணு அடுக்குகள் சீர்கெட்டுவிடும்.

உணவு, உழைப்பு, உறக்கம் சரியாக இருந்தாலே எந்த வியாதியும் வரவே வராது.
18 June 2010 05:58

மனோ சாமிநாதன் said...

அன்பு சகோதரர் ஹைஷ் அவர்களுக்கு!

தங்களின் வருகையும் பதிவும் மகிழ்வை அளிக்கிறது!

நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை!
நம் ஊரில் மதியம் சாப்பிட்டதும் ஒரு பாயை விரித்து உடனே தூங்குபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்! இதயம் இரண்டு மடங்காக வேலை செய்ய நேரிடும்போதுதான் இரத்த அழுத்தம் அதிகமாகி ஹார்ட் அட்டாக் வருகிறது என்பது தெரிந்துமே இந்த தப்பை செய்கிறார்கள்!!