அசைவத்தில் நிறைய பேருக்கு
மிகவும் பிடித்தது மீன் குழம்பு தான். தஞ்சைப் பக்கத்தில் கடல் மீன் குழம்பில் போட
மாட்டார்கள். குறவை, ஜிலேபி கெண்டை இப்படி பல வகைகள் இருந்தாலும் குளத்தில் பிடித்து
சுத்தம் செய்த விரால் மீன் தான் தஞ்சை ஸ்பெஷல் மீன் குழம்பு!! அதுவும் கிராமங்களில்
இரவு நேரம் தான் மீன் பிடித்து வருவார்கள். அந்த நேரம் அம்மியில் மிளகாய் அரைத்துப்போட்டு
சுடச்சுட மீன் குழம்பு பல வீடுகளில் தயாராகிக்கொண்டிருக்கும். இப்போது விரால் மீன்
கிலோ 600 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
புதுப்புளியைக்கரைத்து
ஊற்றி மாங்காய்த்துண்டுகள், அதுவும் ஒட்டு மாங்காய்த்துண்டுகள் செங்காயாகப் போட்டு
தயாரிக்கப்படும் மீன் குழம்பு அலாதி ருசியாக இருக்கும்! சிலர் தேங்காய் அரைத்துச் சேர்ப்பார்கள்.
அதுவும் தனிச்சுவையாக இருக்கும். மண் சட்டியில் தான் கிராமங்களில் மீன் குழம்பைத் தயாரிப்பார்கள்.
மீதமிருக்கும் குழம்பை மறு நாள் வைத்து சாப்பிடுவது அத்தனை ருசி என்பார்கள்!!
நான் இங்கு எழுதும்
குறிப்பு தேங்காய் போடாதது!
இனி சமையலறைக்குச்
செல்லலாம்!
தேவையானவை:
மீன் துண்டுகள்-10
புளி- ஒரு பெரிய எலுமிச்சம்பழம்
அளவு
மிளகாய்த்தூள்- 1 மேசைக்கரண்டி
கொத்தமல்லித்தூள்-
1 ½ மேசைக்கரண்டி
மஞ்சள் தூள்- அரை ஸ்பூன்
தேவையான உப்பு
நல்லெண்ணெய்- கால்
கப்+ 1 ஸ்பூன்
வெந்தயம்- 1 ஸ்பூன்
கறிவேப்பிலை சிறிது
மாங்காய்த்துண்டுகள்-5
நறுக்கிய சிறிய வெங்காயம்-
1 கப்
பொடியாக அரிந்த தக்காளி-
1 கப்
செய்முறை:
புளியை போதுமான நீரில்
ஊறவைத்து கெட்டியாக கரைக்கவும்.
அதில் தூள்களைப்போட்டு
கரைத்து வைத்துக்கொள்ளவும்.
வாணலியில் நல்லெண்னையை
ஊற்றி சூடாக்கவும்.
வெந்தயத்தைப்போட்டு
அது பொரிய ஆரம்பித்ததும் வெங்காயத்தையும் கறிவேப்பிலையையும் போட்டு வதக்கவும்.
பிறகு தக்காளியை மஞ்சள்
தூளுடன் சேர்த்துப் போட்டு அது நன்கு குழைந்து மேலே எண்ணெய் தெளியும் வரை வதக்கவும்.
இப்போது தூள்கள் கலந்த
புளி நீரை ஊற்றி மாங்காய்த்துண்டுகள் சேர்த்து போதுமான உப்பும் போட்டு கொதிக்க விடவும்.
குழம்பு தண்ணீராகவும்
இல்லாமல் கெட்டியாகவும் இல்லாமல் நடுத்தரமாக இருக்க வேண்டும்.
மாங்காய்த் துண்டுகள்
முக்கால் வாசி வெந்ததும் மீன் தூண்டுகள் சேர்த்து தீயை மிதமாக வைக்கவும்.
மீன் வெந்ததும் குறைந்த
தீயில் சில வினாடிகள் வைக்கவும்.
மீதமிருக்கும் 1 ஸ்பூன்
எண்ணெயைப்பரவலாக ஊற்றவும்.
சுவையான மீன் குழம்பு
தயார்!!