Monday 29 July 2024

முத்துக்குவியல்-71!!!

 

சாதனை முத்து:

கேரளாவின் 28 வயது இளைஞர் ரஞ்சித். கேரளாவின் காசர்கோடு பகுதியின் மலைக்கிராமம் தான் அவரின் சொந்த ஊர். அவரின் தந்தை தையல்காரர், அம்மா தினக்கூலி. பூச்சு கூட இல்லாத செங்கல் கொண்ட சுவர், ஓடுகள் வேயப்பட்டிருந்தாலும் ஆங்காங்கே இருக்கும் ஓட்டையால் மழையில் வீடு ஒழுகாமல் இருக்க பொத்தப்பட்டிருக்கும் தார்ப்பாய், கதவில்லாத வாசல். இது தான் தான் ரஞ்சித்தின் வீடு. அந்த வீடு தான் ரஞ்சித்தின் பயணத்தை ஆரம்பித்து வைத்துள்ளது.



தையல்காரராக பணிபுரிந்த ராமச்சந்திரன் நாயக்கிற்கும், கிராமப்புற வேலை உத்தரவாத திட்டத்தின் கீழ் தினசரி கூலித் தொழிலாளியாக இருந்த பேபி ஆர் என்பவர்களுக்கு பனதூரில் உள்ள கேலபங்காயத்தில் பிறந்தார் ரஞ்சித். மராத்தி பட்டியல் பழங்குடியினத்தைச் சேர்ந்த இந்த தம்பதியினர் 5 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்தனர். இருப்பினும், கல்வியின் முக்கியத்துவத்தை அவர்கள் அறிந்திருந்ததால், ரஞ்சித்தை வெல்லாச்சலில் உள்ள பழங்குடி சமூகங்களைச் சேர்ந்த சிறுவர்களுக்காக அரசு நடத்தும் மாதிரி குடியிருப்புப் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தனர். அரசு  உதவியால் பள்ளிப்படிப்பை முடித்த பின் கல்லூரியில் பொருளாதாரப்பிரிவில் பி.ஏ சேர்ந்தார். இனி அவரின் மொழியில்.....

வீட்டில் இருக்கும் நிலைமையின் காரணமாக கல்லூரி சென்று படிப்பை தொடர்வது கடினம் என்பதை உணர்ந்த நேரம் அது. குடும்பத்திற்கு உதவுவதற்காக படிப்பை நிறுத்துவது தொடர்பாகக் கருதி கொண்டிருந்தபோது எனக்கு கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்தது.

பனத்தூரில் உள்ள பி.எஸ்.என்.எல் தொலைபேசி பரிமாற்றத்தில் இரவு காவலாளி வேண்டும் என்ற வேலை விளம்பரம் ஒன்றைக் கண்டேன்.
அதற்கு விண்ணப்பித்த எனக்கு ‘அதிர்ஷ்டவசமாக’, வேலை கிடைத்தது. நான் அங்கு ஒரு காவலாளியாக ஐந்து ஆண்டுகள் பணியாற்றினேன். நான் இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டம் பெறும் நாட்கள் வரை அந்த வேலையை பார்த்தேன். தினமும், காலையில் மாணவன், இரவில் வாட்ச்மேன். இது தான் அப்போது எனது வாழ்க்கை. ஆரம்பத்தில் வேலைக்குச் சேரும்போது எனது சம்பளம் மாதத்திற்கு ரூ.3,500 என்றாலும், ஐந்தாம் ஆண்டில் அது மாதத்திற்கு ரூ.8,000 ஆக உயர்ந்தது. நான் பகலில் படித்தேன், இரவில் வேலை செய்தேன்.

நான் இளநிலைப் படிப்பில் சேர்ந்த செயின்ட் பியஸ் எக்ஸ் கல்லூரி எனக்கு மேடைகளில் எப்படி பேச வேண்டும் என்பதை கற்றுக்கொடுத்தது என்றால், இந்த உலகம் இன்னுமும், இந்த இடத்தை தாண்டியும் இருக்கிறது என்பதை முதுநிலை படிப்பு படித்தால் என்ன பயன் என்பதை செண்ட்ரல் யூனிவர்சிட்டி ஆஃப் கேரளா எனக்கு கற்றுத்தந்தது.

அந்தப் படிப்பினையால் ஐஐடி மெட்ராஸ் என்ற பெரிய உலகத்தை அடைந்தேன். ஐஐடி ஒரு விசித்திரமான இடம். அங்கு சேர்ந்தபோது ஒரு கூட்டத்தின் நடுவில் தனியாக இருப்பதைப் போல முதல்முறையாக உணர்ந்தேன். என்னால் இனி இங்கு இருக்க முடியாது என என் மனம் என்னிடம் அடிக்கடி சொல்லத் தொடங்கிய காலகட்டம். சென்னைக்கு வருவதற்கு முன்பு, நான் மலையாளத்தில் மட்டுமே பேசப் பழகியவன் நான். அதனால் அங்கு நான் பேசக்கூட பயந்தேன். அதனால் பிஎச்டியை கைவிட முடிவு செய்தபோது தான் எனது வழிகாட்டி டாக்டர் சுபாஷ் சசிதரன் என் முடிவு தவறு என்பதை எனக்கு உணர வைத்தார். ஒருமுறை மதிய உணவிற்கு என்னை வெளியே அழைத்துச் சென்று தோல்வியை ஏற்றுக்கொள்வதற்கு முன்பு அதை எதிர்த்து ஒரு முறை போராடத் தூண்டினார். அப்போதிருந்து, வெற்றிபெறவும், அதற்கான போராட்டத்தை தொடரவும் முடிவெடுத்தேன். சுபாஷ் சாரின் மாணவர்கள் பலர் முதன்மையான நிறுவனங்களில் பணிபுரிந்தனர். நானும் அந்த இடங்களுக்குச் செல்ல விரும்பினேன்.

4
ஆண்டுகளில் பிஎச்டியை முடித்தேன். கடந்த அக்டோபரில், ஐ.ஐ.எம்-ராஞ்சியில் உதவி பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பித்தேன். அதன்படி பணியில் சேர்த்துள்ளேன். நான் செய்த முதல் விஷயம் என்னவென்றால், என் பெற்றோர் மற்றும் உடன்பிறப்புகளுக்கு ஒரு வீடு கட்ட கடன் வாங்க விண்ணப்பித்தேன். இந்த கடன் கிடைப்பதற்கு முன்பாகவே ஐ.ஐ.எம்-ராஞ்சியில் உதவி பேராசிரியர் பணி கிடைத்தது. பனத்தூர் மலைப்பகுதியில் இருந்து தொடங்கியது என்னுடைய இந்த பயணம். குடிசையில் இருந்து ஐஐஎம் ராஞ்சி வரையான இந்த பயணம் அவ்வளவு சுலபமானதாக இருந்துவிட வில்லை. ஆம், இந்தப்பயணத்தில் என்னுடன் சேர்ந்து என் பெற்றோர்களும் பாதிக்கப்பட்டனர். எங்களுடையது போலவே ஆயிரம் குடிசைகள் இருக்கின்றன. அந்த குடிசைகளில் இருந்த பல கனவுகள் தொடங்குவதற்கு முன்பாகவே மடிந்துள்ளது. இனி அப்படி நடக்க கூடாது. இனி இதுபோன்ற குடிசைகளில் இருந்து பல வெற்றிகரமான கதைகள் வரவேண்டும். எல்லோரையும் சுற்றி இடிந்து விழுந்த சுவர்கள் இருக்கலாம். அதை கண்டு பயந்து உங்களின் கனவை காண்பதை நிறுத்தாதீர்கள். நீங்கள் காணும் கனவு ஒருநாள் நிச்சயம் நனவாகும். சுயவிளம்பரத்துக்காகவோ, பெருமைக்காகவோ இதனை நான் பதிவு செய்யவில்லை. என்னுடைய வாழ்க்கை பலருக்கு உத்வேகத்தை அளிக்கும் என நண்பர்கள் கூறியதால், எனது பயணம், எனது வரிகள் இது ஒரு நபரின் கனவுகளுக்காவது உத்வேகம் கொடுக்கும் என்பதால் இதனை பொதுவெளியில் பதிவிட்டேன்
, “ 

எனக் கூறியிருக்கிறார் ரஞ்சித்.

மருத்துவ முத்து:

தொண்டை சளிக்கும் எப்போதும் தொல்லை குடுக்கும் தொண்டை கரகரப்பிற்கும் ஒரு எளிய மருத்துவம் இருக்கிறது!


நாட்டு மருந்து கடைகளில் கண்டங்கத்திரி பொடி கிடைக்கும். அதை அரை ஸ்பூன் எடுத்து அது கரையும் வரை சிறிது தேன் கலந்து கிளறி நாக்கில் வைத்து சப்பி சப்பி சாப்பிட வேண்டும். காலை
, இரவு ஆகாரத்திற்குப்பின் தண்ணீரெல்லாம் குடித்து முடித்து பிறகு இது போல செய்தால் தொண்டையிலே இந்த மருந்து தங்கி நிற்கும். இரண்டு வேளகளிலேயே நிறைய குணம் தெரியும்.

இசை முத்து:

தொண்ணூறுகளில் வெளி வந்த மலையாள திரைப்படம் மழையெத்தும் முன்பே’. இந்தப்படத்தில் மிக இனிமையான ஒரு பாடல்! எந்தினு வேறொரு சூர்தோயம்?’ என்று ஆரம்பிக்கும் இந்த பாடலை ஜேசுதாஸும் சித்ராவும் அத்தனை இனிமையாக பாடியிருப்பார்கள். சுத்த தன்யாசி ராகத்தில் அமைந்த இந்த பாடலை பலரும் பல மேடைகளில் பாடியிருக்கிறார்கள். இது மலையாள சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடிய பாடல். பாடலை ரசித்து கேட்பீர்கள் என்று நினைக்கிறேன்!!

 

25 comments:

வெங்கட் நாகராஜ் said...

சாதனை முத்து - மிகவும் நன்று. இது போல ஊக்கம் கொடுப்பவர்கள் இருந்தால் நிச்சயம் அவர் ஊர் மக்கள் வெற்றி பெறுவார்கள்.

கண்டங்கத்திரி வைத்தியம் - நல்ல குறிப்பு.

இசை - கேட்கிறேன்.

ஸ்ரீராம். said...

இளைஞர் ரஞ்சித்தைப் பாராட்டுவோம்.  மருத்துவ முத்து எளிமையானதாக இருக்கிறது.  உபயோகப்படுத்திப் பார்க்கலாம்.

ஸ்ரீராம். said...

பாடலைக் கேட்க ஆரம்பித்ததும் அதன் இனிமையில் சொக்கி இசை இளையராஜாவாக இருக்குமோ என்று ஒரிஜினலுக்குப் போனேன்.  இசை ரவீந்திரன் மாஸ்டர்.  எப்படி இனிமை இல்லாதிருக்கும்?   ,அபிமான மம்மூட்டி - அழகான ஷோபனா காட்சி அமைப்புடன் பாடலை யேசுதாஸ்- சித்ரா குரலிலேயே ரசித்தேன்.  வெகு இனிமை.

ஸ்ரீராம். said...

சாதாரணமாக சுத்த தன்யாசி என்றால் அதில் என் முத்திரைப் பாடலான ஹிமகிரிதனையே ஹேமலதே (GNB) பாடலுடன் ஒப்பிட்டுப் பார்ப்பேன்.  எனக்கு ஸ்வர ஞானம் எல்லாம் கிடையாது.  கேள்வி ஞானம்தான்.  மாஞ்சோலைக் கிளிதானோ பாடலோ, புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பாடலோ என் முத்திரைப் பாடல் வாசனையை அளிக்கவில்லை.  ஆனால் இந்தப் பாடலின் தொடக்கம் சரியாக அந்தப் பாடலை நினைவு படுத்துகிறது.  அதைவிட பாவமுலோனா வை நன்றாக  நினைவு படுத்துகிறது.

ஸ்ரீராம். said...

இதே படத்திலேயே யேசுதாஸ் ஸோலோ தர்பாரி கனடாவில் ஒன்று இருக்கிறதாம் அதையும் கேட்கப்போகிறேன்,.

மனோ சாமிநாதன் said...

அனைத்து முத்துக்களுக்கும் இனிய கருத்துரை தந்ததற்கு அன்பு நன்றி வெங்கட்!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு அன்பு நன்றி ஸ்ரீராம்!

மனோ சாமிநாதன் said...

நீங்கள் பாடலை கேட்டு ரசித்து ஒரிஜினலுக்கும் சென்று ரசித்தது மகிழ்வாய் இருக்கிறய்து ஸ்ரீராம்!

மனோ சாமிநாதன் said...

எனக்கு மிகவும் பிடித்த ராகம் சுத்த தன்யாசி தான்! இந்த ராகத்தில் நாதஸ்வரம், வயலின் என்று அனைத்து கலைஞர்களின் தொகுப்பும் என்னிடம் இருக்கிறது! தமிழில் ' கண்கள் எங்கே', ' தொட்டால் பூ மலரும்' பாடல்கள் எல்லாம் சுத்த தன்யாசி ராகத்தில் அமைந்தது தான். கர்நாடக சங்கீதத்தில் ' வினரோ பாக்யமு விஷ்னு கதா' பாடல் மிக இனிமையாக இருக்கும். கேட்டுப்பாருங்கள்.

மனோ சாமிநாதன் said...

தர்பாரி கானடா பாடலை கேட்டு விட்டீர்களா? தமிழில் ' மலரே மெளனமா' பாடலும் தர்பாரி கானடா ராகத்தில் அமைந்தது தான்!

ஸ்ரீராம். said...

கேட்டு விட்டேன்.  எல்லா பாடல்களையும் கேட்டுப் பார்த்தேன்.  எனக்கு அவையெல்லாம் அவ்வளவு ரசிக்கவில்லை.  தர்பாரி கானடா அவ்வளவு இனிமையான ராகம் என்றாலும் அந்தப் பாடல் எடுபடவில்லை.  படத்தில் சுத்ததன்யாசி மட்டும்தான் இனிமை. ' வினரோ பாக்யமு விஷ்னு கதா' கேட்கிறேன்.  யார் பாடி இருக்கிறார்கள்?    என் ஃபேவரைட் பாலமுரளி, ஜி என் பி, மதுரை மணி, அபிஷேக் ரகுராம், ரித்விக் ராஜா, சஞ்சய் சுப்பிரமணியம், பாம்பே ஜெயஸ்ரீ  

எனக்குப் பிடித்த ராகங்கள் ஹிந்தோளம், கரகரப்ரியா, சிவரஞ்சனி, ஆபேரி ஆபோகி, ஆரபி.

சின்னஞ்சிறிய வண்ணப்பறவை கூட தர்பாரி கானடா தானே?  அப்புறம் சீர்காழி பாடிய சிவசங்கரி...

மனோ சாமிநாதன் said...

' வினரோ பாக்யமு ' பாடலை சங்கீதா சிவகுமார், சுத ரகுநாதன் பாடக்கேட்டிருக்கிறேன். இத்துடன் சுதாவின் பாடலுக்கு லிங்க் கொடுத்திருக்கிறேன்.
எனக்கும் சுத்த தன்யாசிக்குப்பிறகு ஹிந்தோளம், கானடா, மோஹனம், ஆபேரி, ஆபோகி ராகங்கள் மிகவும் பிடிக்கும்.

மனோ சாமிநாதன் said...

https://www.youtube.com/watch?v=JVOKHEuphUQ&list=RDJVOKHEuphUQ&start_radio=1
இது தான் ' வினரோ பாக்யமு ' பாடலுக்கான லிங்க் ஸ்ரீராம்!

ஸ்ரீராம். said...

நன்றி. கேட்கிறேன்.

ஸ்ரீராம். said...

கேட்டேன், ரசித்தேன்.  நன்றாக இருந்தது.  அன்னமாச்சார்யா கீர்த்தனை என்று தெரிகிறது.  இவரது கீர்த்தனைகளில் வேறு சில பிரபல பாடல்கள் கேட்பேன். பத்ரசாலர், புரந்தரதாஸர்  கீர்த்தனைகள் ரொம்பப் பிடிக்கும்.  

Thulasidharan V Thillaiakathu said...

மனோ அக்கா, முதல் செய்தி முத்து வாசித்திருக்கிறேன். அந்த இளைஞர் ரஞ்சித் பற்றி எபியில் சனிக்கிழமை பாசிட்டிவ் செய்திகளில் வந்திருந்த நினைவு,

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

கண்டங்கத்தரி பயன் அருமை. சொல்வதுண்டு இதன் மருத்துவ பயன்கள்.

மலையாள பட உலகில் 90 களில் வந்த பாடல்கள் பெரும்பாலும் சூப்பர் ஹிட் பாடல்கள். பெரும்பாலும் ராகங்களில் அமைந்திருக்கும். அந்த சமயத்தில் வந்த படங்களும் மிக நன்றாக இருக்கும்.

இந்தப் பாடலும் கேட்டிருக்கிறேன். இப்போதும் கேட்டு ரசித்தேன். பாட்டு ரொம்ப பிடித்த பாடல்.ரவீந்திரன் மாஸ்டர் பற்றி சொல்ல வேண்டுமா!

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

ஆமாம் ஸ்ரீராம் அந்தப் பாடலும் அருமையா இருக்கும்.

மனோ அக்கா சொல்லியிருப்பது போல் மலரே மௌனமா...

கீதா

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைகளுக்கு அன்பு நன்றி கீதா!
கண்டங்கத்திரி வைத்தியம் நானே பலன்களை அனுபவித்த பிறகு தான் இங்கே சொல்லியிருக்கிறேன்.
பாடலை மறுபடியும் அனுபவித்து ரசித்தது மகிழ்வாக இருந்தது கீதா!

கரந்தை ஜெயக்குமார் said...

இளைஞர் ரஞ்சித் பாராட்டிற்கு உரியவர். மற்ற இளைஞர்களுக்கு ஒரு வழிகாட்டியார் இருக்கக்கூடியவர். வாழ்த்துவோம்

கோமதி அரசு said...

அனைத்து முத்துக்களும் அருமை.
சாதனை முத்து எல்லோருக்கும் தன்னம்பிக்கை, ஊக்கம் தரும். அவரின் வெற்றிகள் திடரட்டும்.
மருத்துவ முத்து எளிமையான வீட்டு வைத்தியம்.
இசை இனிமையாக இருக்கிறது.

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார்!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார்!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கும் கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றி கோமதி அரசு!

ராமலக்ஷ்மி said...

சாதனையாளர் ரஞ்சித் மற்றவர்களுக்கு சிறந்த முன் உதாரணம். பயனுள்ள மருத்துவக் குறிப்பு. இசை முத்து இனிமை.