Sunday 1 October 2023

சமயங்களும் அன்பும் !!!- பகுதி-1

 தமிழர்கள் வாழ்வியலில் சமயத்துக்கான முக்கியத்துவம் முன்பு இருந்ததில்லை. மனிதமும் மனிதாபிமானமும் நல்லிணக்கமுமே பெரிதாய் இருந்தது. அரசியலும் புல்லுருவிகளுமே இந்த அன்பைத்தகர்த்து சமயங்களை பிரித்தன. ஆனால் இதற்கெல்லாம் இன்னும் மசியாமல் ஒருத்தருக்கொருத்தர் பரஸ்பரம் இணைந்து சமயங்களும் அன்பும் ஒன்றாய் இணைந்து வாழ்வது இன்னும் நம் தமிழகத்தில் அங்கங்கே இருப்பதறிந்தபோது வியப்பாக இருக்கிறது! கீழ்க்கண்டவை அவற்றின் சாட்சியங்கள்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கோட்டைப்பட்டணம் என்னும் ஊரில் உள்ள தர்க்கா, ராவுத்தர் அப்பா தர்க்கா என அழைக்கப்படுகிறது. அதன் அருகே முனியய்யா கோவில் உள்ளது. இந்த முனியய்யாவும் ராவுத்தர் அய்யாவும் நண்பர்கள். அதனால் இந்து இஸ்லாமிய பண்டிகைகளின் போது இந்த இரு கோவில்களுமே அலங்கரிக்கப்படுகின்றன. கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் முதலில் தர்க்காவிற்கு சென்று விட்டுத்தான் கோவிலுக்கு செல்கிறார்கள். இந்த தர்க்காவின் கந்தூரி விழா காலங்காலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் முதல் நாள் மண்டகப்படியை அங்குள்ள பத்தர் குடும்பத்தார்தான் செய்து வருகிறார்கள். 


ஈரோடு மாவட்டத்திலுள்ள தாளவாடி நடுவில் ஒரே வளாகத்தில் மாரியம்மன் கோவிலும் தர்க்காவும் அமைந்துள்ளது. மாரியம்மன் கோவிலின் குண்டம் தர்க்காவின் வாசல் பகுதியில் அமைந்துள்ளது. தர்க்காவின் வலப்பக்கம் வேணுகோபால சுவாமி கோவில் உள்ளது. ரம்ஜான் தொழுகையின் போது இந்து மக்களும் தொழுகைக்கு செல்வதும் மாரியம்மன் கோவில் விழாவில் இஸ்லாமியர்களும் இந்துக்களும் இணைந்து கொண்டாடுவதும் இங்கு ஆண்டு தோறும் நடக்கும் அற்புதம்!!


ராசிபுரம் அருகேயுள்ள குருசாமிப்பாளையத்தில் உள்ள சிவசுப்ரமண்யர் கோவிலில் விழா தொடங்குமுன்பாக ஊர்மக்கள் எல்லோரும் ஒன்று கூடி தேங்காய்ப்பழத்தட்டுடன் பள்ளிவாசலுக்குச் சென்று அழைப்பு விடுப்பார்கள். பங்குனி உத்தரத்தின் போது இஸ்லாமியர்கள் வெள்ளக்கொடி ஏந்தி கோவிலிலிருந்து வாத்தியங்கள் முழங்க புறப்பட்டுச் சென்று கடைகளின் வாசலில் சந்தனம் பூசி, இந்துக்களும் இஸ்லாமியர்களும் ஒருவருக்கொருவர் மாலை மரியாதை செய்து கொள்கிறார்கள்!


சிவகங்கை மாவட்டத்திலுள்ள வஞ்சினிப்பட்டியில் 10 நாள் பூக்குழி திருவிழாவாக அல்லாசாமி பூக்குழி திருவிழா கடந்த 350 வருடங்களாக நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின்போது இந்துக்களும் இஸ்லாமியர்களும் மாறி மாறி ஒருவருக்கொருவர் விருந்து வைத்துக்கொள்வார்கள். பூக்குழி தினத்தன்று அனைத்து மக்களும் மல்லிகைப்பூ, சர்க்கரை வைத்து அல்லாவிடம் பாந்தியா ஓதி பின் சுவாமிக்கு பூக்குழி வளர்க்கப்படுகிறது. பூக்குழிக்குப்பிறகு சாம்பலை அள்ளி இந்துக்களுக்கு இஸ்லாமியர்கள் பூசி விடுவதும் வழக்கமாக இருக்கிறது.


ராமநாதபுரம் அரண்மனையிலுள்ள சேதுபதி மன்னர்களது குடும்பக் கோயிலான ராஜராஜேஸ்வரி ஆலயத்தில் நடைபெறும் நவராத்திரி திருவிழாவின் போது முதல் பிரசாதம் கன்னிராசபுரம் நாட்டாமைக்கே வழங்கப்பட்டது. போர் ஒன்றில் அப்துல் கனி என்ற அந்த நாட்டாண்மை முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதிக்கு உதவீயாக செய்த அருஞ்செயலுக்காக இந்த தனிச்சிறப்பு செய்யப்பட்டது. 

மதுரை கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தில் நிறைய இந்துக்கள் விசேஷ அலங்காரங்களுடன் கூடிய ஆடைகளை அணிந்து கலந்து கொள்வது வழக்கம். அந்த ஆடைகளை இன்றளவும் மதுரையில் இருக்கும் புது மண்டபத்தில் பல தலைமுறைகளாக இஸ்லாமியர்கள் தான் தைத்து வருகிறார்கள். அந்தப்பகுதியில் இந்துக்களும் இஸ்லாமியர்களும் மாமா, மாப்பிள்ளை என்று ஒருத்தருக்கொருத்தர் அழைத்துக்கொள்வது தான் வழக்கம்!

தொடரும்-


17 comments:

ஸ்ரீராம். said...

ஆம்.  அரசியல்வாதிகள்தான் தங்கள் பிழைப்பிற்காக மதங்களையும் ஜாதிகளையும் கட்டிக் காத்து வருகிறார்கள்.  ஆனால் மக்கள் தெளிவாகி விட்டால் இன்றைய பதிவு போல இன்னும் ஜனங்கள் ஒற்றுமை அதிகமாகலாம்.  இன்றைய பதிவைப் படித்தபோது மனதில் எந்த பதட்டமும் இன்றி அமைதியாக படிக்க முடிந்தது.  உள்ளே நிலவும் அந்த சாந்தியும், மகிழ்ச்சியும் நிலைக்க வேண்டும், பெருக வேண்டும்.

கோமதி அரசு said...

அருமையான பதிவு. மத வேறுபாடு இன்றி அத்தை, மாமா, பெரியம்மா, பெரியப்பா என்று எல்லோரையும் அழைத்து பண்டிகை சமயங்களில் ஒருத்தருக்கு ஒருத்தர் பலகாரங்களை பகிர்ந்து இன்பமாய் இருந்த நாட்களை நினைத்து பார்க்கிறேன். இப்போது பள்ளியில் ஜாதி, அக்கம்பக்கத்தில் என்ன ஜாதி என்பது போல கேள்விகள் எழுவது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது.

எங்கள் தெருவில் இருந்த ஆட்டுத்தோல் வியாபாரி இஸ்லாமியர் அவர் காலை வியாபாரத்துக்கு போகும் முன் தெருவில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலில் விளக்கு ஏற்றி விட்டு வணங்கி விட்டுத்தான் போவார். கிருஷ்ணஜெயந்தி நடக்கும் பஜனை மடத்தில் அதற்கு நிதி உதவி செய்வார்.

எல்லோருடனும் நல்ல நட்புடன் அவர்கள் நல்லது கெட்டதுகளில் கலந்து கொள்வார். நாங்களும் அவர்கள் வீட்டு நல்லது கெட்டதுகளில் கலந்து கொள்வோம்.
நம்பிக்கையுடன் எந்த கடவுளையும் வணங்கலாம். எல்லாமதமும் அன்பை தான் போதிக்கிறது.

Thulasidharan thilaiakathu said...

மனோ அக்கா அழகான படங்கள் விவரங்கள். உண்மையாகவே மக்களிடையே எந்தவிதப் பேதமும் இல்லை. நீங்கள் சொல்லியிருப்பது போல் நம் அரசியல்வாதிகள் தான் மதங்கள் ஜாதிகள் என்று தங்கள் சுயலாபத்துக்காக மக்களைப் பிரித்து ஆள்கிறார்கள். மக்கள் இதனைப் புரிந்துகொண்டு விட்டால் மத நல்லிணக்கம் எப்போதும் இருக்கும்.

பதிவை மிகவும் ரசித்து வாசித்தேன் மனோ அக்கா. படங்களைப் பார்க்கும் போதே மக்களின் மனமும் மகிழ்ச்சியும் ஒரு பாசிட்டிவ் உணர்வு தோன்றுகிறது மனமும் ம்கிழ்ச்சி அடைகிறது

கீதா

Thulasidharan thilaiakathu said...

மனோ அக்கா, நீங்க எபியில் கொடுத்திருந்த வாழைக்கால் பால் கறி சூப்பர் ரெசிப்பி. நோட் செய்து கொண்டேன். என் அம்மா, அத்தை செய்வாங்க கூடவே ஒரு பொடி போடுவாங்க. ஆனால் அதைத் தெரிந்து கொள்ளாமல் விட்டுவிட்டேன். இப்ப ரெண்டுபேருமே இல்லை. என் பாட்டி அம்மா, அத்தைகள் என்று பல குறிப்புகளைக் கேட்டு வாங்கிச் சேமிக்காமல் போய்விட்டேனே என்று இப்போது நினைத்துக் கொள்கிறேன.

கீதா

திண்டுக்கல் தனபாலன் said...

தமிழ்நாட்டில் மதம் பார்ப்பது இல்லை என்பது உண்மை தான்... ஆனால், வடக்கு போல இங்கும் நாசமாக்க முயற்சி மட்டும் நடக்கிறது... அதற்கு இங்குள்ள ஒரு குறிப்பிட்ட சமூகம் மட்டும் உதவுகிறது...

மனோ சாமிநாதன் said...

வாருங்கள் ஸ்ரீராம்! மதவாதிகளாலும் அரசியலாலும் பாப்ரி மசூதி இடிக்கப்பட்ட பின் இந்த ஒற்றுமை பல இடங்களில் கேள்விக்குறியாகப்போனதை நானும் அனுபவித்திருக்கிறேன். ஆனாலும் அது நடந்து பல வருடங்களுக்குப்பின்பும் இரு மதங்களிடையே உள்ள அன்பு இன்னும் தழைத்தோங்குவதை பார்க்கும்போது மனிதம் இன்னும் மரணிக்கவில்லை என்ற அமைதி உள்ளத்தில் பிறக்கத்தான் செய்கிறது. இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி !

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி கோமதி அரசு! ஆமாம், அந்தக் காலங்களில் தீபாவளி சமயங்களில் பலகாரங்களைக் கொண்டு சென்று இஸ்லாமிய நண்பர்கள் வீட்டிற்குச் சென்று கொடுத்து விட்டு வரும் நினைவுகள் மனதில் அலை மோதுகின்றன.

மனோ சாமிநாதன் said...

//நம் அரசியல்வாதிகள் தான் மதங்கள் ஜாதிகள் என்று தங்கள் சுயலாபத்துக்காக மக்களைப் பிரித்து ஆள்கிறார்கள். மக்கள் இதனைப் புரிந்துகொண்டு விட்டால் மத நல்லிணக்கம் எப்போதும் இருக்கும்.//
ரொம்பவும் அழகாக எழுதியிருக்கிறீர்கள் கீதா!

பாவ மன்னிப்பு படத்தில் வரும்

" மனிதன் மாறி விட்டான்
மதத்தில் ஏறி விட்டான்'
பாடல் தான் நினைவில் எழுகிறது!

மனோ சாமிநாதன் said...

' பால் வாழைக்காய் ' பற்றி சொல்லியவை சுவாரஸ்யமாக இருந்தன. செய்து பார்த்து விட்டு சொல்லுங்கள்.

துரை செல்வராஜூ said...

எப்படியோ நன்றாக இருந்தால் சரி..

துரை செல்வராஜூ said...

மனம் மாறிச் சென்றவர்களது முன்னோர்களது அடிப்படைக் குணங்களே தொடர்கின்றன..

இந்து சமய வழிபாட்டினை இஸ்லாமியர்கள் தங்களது வீட்டுக்குள் செய்து கொள்வதில்லை..

துரை செல்வராஜூ said...

அவர்களது கொள்கைகளை ஏற்றுக் கொள்ளாதவர்கள் இன்னார் என்று அடையாளம் காட்டப்பட்டு மேல் நடவடிக்கைகள் சொல்லப்பட்டிருக்கும் போது நமக்கென்ன அன்பு வேண்டிக் கிடக்கின்றது?..

இதெல்லாம் சும்மா உள்ளூர் நிகழ்வுகள் தானே தவிர இவற்றை அரபு வம்சத்தினர் ஒத்துக் கொள்ளவதில்லை..

கரந்தை ஜெயக்குமார் said...

இந்து முகமதியர் உறவினை திட்டமிட்டு சிதைக்க முயல்கிறார்கள். சிலர் துணை போகின்றனர்
இருப்பினும் இவ்வுறவு தொடரும்

மனோ சாமிநாதன் said...

வாருங்கள் தனபாலன்! நீங்கள் சொல்வது உண்மை தான்! முயற்சிகள் நடந்து கொண்டு தானிருக்கின்றன! நான் சொல்ல வந்தது, அந்த முயற்சிகளையும் மீறி அவற்றுக்கு மசியாமல் இன்னும் பல மதங்கள் ஒருத்தருக்கொருத்தர் இணைந்து கொள்கிறார்கள் என்பது தான்!

மனோ சாமிநாதன் said...

வாருங்கள் சகோதரர் துரை.செல்வராஜ்! கசப்பும் வெறுப்பும் அவரவர் அனுபவங்களால்தான் ஏற்படுகிறது என்பதில் எனக்கு ஆழ்ந்த நம்பிக்கை இருக்கிறது. அரபு நாட்டில் கடந்த 47 வருடங்களுக்கு மேலாக வியாபாரம் செய்து வருகிறோம். இது வரை ஒரு சின்ன இடைஞ்சல் கூட எந்த ஒரு அரேபியராலும் நிகழ்ந்ததில்லை.

2013ல் என் கணவர் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அந்த நாட்களில் அரபுச்சகோதரிகள் தான் சுற்றிலும் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்கள்.

மதங்களைத்தாண்டி வருவது தானே அன்பும் கருணையும்?

மனோ சாமிநாதன் said...

வாருங்கள் சகோதரர் கரந்தை ஜெயக்குமார்! உங்கள் கருத்து உற்சாகத்தை அளித்தது. உண்மையில் துபாய் அரசு பல கோடிகள் மதிப்புள்ள இடத்தை சில ஆண்டுகளுக்கு முன், 2015ல் இந்தியப்பிரதமரிடம் நம் கோவிலைக்கட்டுவதற்காக பரிசாகக் கொடுத்தது. 2019ல் அடிக்கல் நாட்டிய பின் தற்போது சிற்பங்களும் ரோஸ் வண்ண கற்களும் இத்தாலியன் மார்பிளும் கொண்டதாய் தளங்கள் உருவாகிக்கொண்டு வருகின்றன. இதற்கான பொருட்செலவு திர்ஹம்ஸ் 400 கோடியைத்தாண்டுகிறது என்றும் 2024ல் இந்தக்கோவில் கட்டி முடிக்கப்படுமென்றும் அறிவித்திருக்கிறார்கள்.

துரை செல்வராஜூ said...

/// ஒரு சின்ன இடைஞ்சல் கூட எந்த ஒரு அரேபியராலும் நிகழ்ந்ததில்லை.. ///

உண்மை தான்..
அரேபியர்கள் எவ்விதப் பிரச்னையும் செய்வதில்லை..

நான் அறிவேன்..

தங்கள் அன்பினுக்கு நன்றி..