Monday, 28 November 2022

பாசிப்பருப்பு பணியாரம்!!!

 பணியாரங்களில் பல வகைகள் இருக்கின்றன. இனிப்பும் காரமுமாய் நிறைய பண்ண முடியும். அரிசியில் மட்டுமல்ல,  ரவா, சிறு தானிய வகைகள், சோளம், கோதுமை, ராகி என்று நிறைய பணியார வகைகள் சமையல் உலகில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இதில் ரொம்ப சுலபமானது இட்லி மாவில் செய்வது தான். இந்த பாசிப்பருப்பு பணியாரமும் அந்த முறையில் தான் செய்ய வேண்டும். ரொம்பவும் வித்தியாசமான சுவையுடன் காலை நேரத்தில் களை கட்டும் டிபன் இது. இப்போது பாசிப்பருப்பு பணியாரம் செய்முறையைப் பார்க்கலாம்.


பாசிப்பருப்பு பணியாரம்:

தேவையான பொருள்கள்:

நல்லெண்ணெய்- 2 மேசைக்கரண்டி

கடுகு- 1 ஸ்பூன்

உடைத்த உளுத்தம்பருப்பு- 1 ஸ்பூன்

கடலைப்பருப்பு- 1 மேசைக்கரண்டி

பெருங்காயத்தூள்- அரை ஸ்பூன்

கறிவேப்பிலை- ஒரு கொத்து

பொடியாக அரிந்த கொத்தமல்லி இலை- 2 மேசைக்கரண்டி

பொடியாக அரிந்த சின்ன வெங்காயம்- ஒரு கை

பொடியாக அரிந்த பச்சை மிளகாய்-2

இலை இலையாக வேக வைத்த பாசிப்பருப்பு- அரை கப்

இட்லி மாவு- 3 கப்

தேவையான உப்பு

பணியாரம் செய்யத்தேவையான எண்ணெய்


செய்முறை:

வாணலியை சூடு பண்ணி 2 மேசைக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி கடுகு போடவும். அது வெடித்ததும் உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காயம் போட்டு இலேசாக சிவந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய் , கறிவேப்பிலை, மல்லி போட்டு வதக்கவும். இலேசாக சிவந்ததும் வெந்த பாசிப்பருப்பை போட்டு தேவையான உப்பு போட்டுக்கலக்கவும். தீயை விட்டு இறக்கி ஆற வைக்கவும். ஆறினதும் இட்லி மாவை விட்டு நன்கு கலக்கவும். இட்லி மாவில் உப்பு இருக்குமென்பதால் மேலும் உப்பு சேர்க்கத் தேவையில்லை. 

பணியாரச்சட்டியை சூடு பண்ணவும். மிதமான சூடு இருந்தால் போதும். 

ஒவ்வொரு குழியிலும் அரை ஸ்பூன் எண்ணெய் விட்டு பணியாரங்களை சுட்டு எடுக்கவும். நன்றாக வெந்து இலேசான சிவந்த நிறம் வரும்போது பணியாரங்களை எடுத்தால் சரியாக இருக்கும். 

தொட்டுக்கொள்ள தக்காளி சட்னியும் தேங்காய் சட்னியும் மிகவும் பொருத்தமாக இருக்கும். 



9 comments:

Thulasidharan V Thillaiakathu said...

ஆஹா என்ன பொருத்தம் என்ன பொருத்தம் மனோ அக்கா!!!!!

வெகு அருமையாக வந்திருக்கிறது. உங்கள் கைவண்ணம் பற்றிச் சொல்ல வேண்டுமா!!!!!

என்ன பொருத்தம் என்றால்.....நேற்றுதான் இட்லிக்கும் அரைத்து கூடவே தனியாகப் பணியாரத்திற்கு என்று அதன் அளவில் ஊற வைத்து அரைத்தேன். அதில் இன்று வழக்கமான பாசிப்பருப்பிற்குப் பதில் பச்சைப்பயறு போட்டு இனிப்பும், காரமும் இன்று செய்தேன். பச்சைப்பயறு கொஞ்சம் கூடுதலாகப் போட்டேன். மாவின் அளவில் அரைப்பங்கு....

இனிப்பில் வெல்லமும், கொஞ்சம் தேங்காயும் சேர்த்து, காரத்தில் எப்போதுமே சின்ன வெங்காயம்தான் சேர்ப்பது கிட்டத்தட்ட உங்கள் பக்குவத்தில்தான்...

எபிக்கு திங்க பதிவுக்கு அனுப்பலாமோ என்று ஃபோட்டோ எடுக்க நினைத்தேன் ஆனால் நேரமில்லை எனவே எடுக்க முடியவில்லை.

ஆந்திரா ஸ்டைலில் பணியாரமாவில் வெந்த வேர்க்கடலை போட்டும் செய்வதுண்டு. அதுவும் ஒரு சுவை. வேர்க்கடலை போட்டால் அதில் இனிப்பு செய்வதில்லை. காரம்தான்

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

பள்ளியில் படிக்கும் போது என் தோழி ஒருவர் இட்லிக்குள் பச்சைப்பயறு இனிப்பு, காரம் ஸ்டஃப் செய்து கொண்டு வந்து அதைச் சுவைத்து அதன் பின் நான் செய்யக் கற்றுக் கொண்டேன். அதையே பணியாரத்திலும் செய்து பார்த்தேன். நம் வீட்டில் புதிய செய்முறைகள் உணவுப் பதார்த்தங்கள் விரும்பிச் சாப்பிடுவார்கள் என்பதால் இப்படி நிறைய தெரிந்து கொள்ள விரும்புவேன்.

கீதா

மனோ சாமிநாதன் said...

வாருங்கள் கீதா! உங்களின் உற்சாகமான பின்னூட்டம் என்னுள்ளும் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியது. அன்பு நன்றி!

நமக்குள் ஏற்பட்டிருக்கும் இந்த பொருத்தம் ஆச்சரியமானது தான்!!

பச்சை பயறு சேர்த்து பணியாரம்! அதுவும் காரமும் இனிப்புமாக! உங்கள் குறிப்புகளை தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்! விரைவில் பதிவு போடுங்கள்!

இதே பச்சை பயறு பூரணம் செய்து இட்லி மாவில் வைத்து வேக வைத்து பின் பால் கலவை செய்து அதன் மேல் ஊற்றி பால் இட்லி செய்வதுண்டு.

நீங்கள் சொன்ன மாதிரி வேர்க்கடலை போட்டு பணியாரம் செய்ததில்லை. செய்து பார்க்க வேண்டும்!
சுவையான தகவல்களுக்கு மீண்டும் நன்றி!!

திண்டுக்கல் தனபாலன் said...

செய்முறை அருமை...

ஸ்ரீராம். said...

இட்லியில் அடுத்த செய்முறை.. சூப்பர். பாஸிடம் சொல்கிறேன்.

Geetha Sambasivam said...

அருமையான செய்முறை. பாசிப்பருப்புச் சேர்த்துப் பண்ணினதில்லை. இட்லி மாவு அடுத்த தரம் அரைக்கையில் செய்து பார்க்கணும். நேற்றுத்தான் இருந்த மாவில் ரவை+சாமான்களை நெய்யில் வறுத்துச் சேர்த்து ரவா இட்லி பண்ணித் தீர்த்தேன். இட்லிக்குள் பயறு பூரணம் வைத்தும் செய்து பார்த்ததில்லை. காய்கறிகளை உப்புக்காரம், மசாலாப் பொடி போட்டு வதக்கிக் கொண்டு இட்லி உள்ளே வைத்து வேக வைத்து நான்காக நறுக்கிக் கொண்டு எண்ணெயில் வறுத்துக் கொடுத்திருக்கேன்.

கோமதி அரசு said...

பாசிபருப்பு பணியாரம் செய்முறையும் படமும் நன்றாக இருக்கிறது.
பச்சைபயிறை வேகவைத்து வெல்லம், தேங்காய்பூ, ஏலக்காய் எல்லாம் போட்டு இட்லி வேக வைக்கும் போது நடுவில் வைத்து மேலும் இட்லி மாவை மேலே ஊற்றி வேக வைப்பார்கள். அதற்கு பெயர் சினை இட்லி. குழந்தை உண்டாகி இருக்கும் பெண்ணுக்கு கொடுப்பார்கள். சத்துள்ள ஆகாரம் என்று.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

இப்படியும் உள்ளதோ? ரசித்தேன், ருசித்தேன்.

சோழ நாட்டில் பௌத்தம் என்ற என்னுடைய நூல் அச்சேற்றப்பணி காரணமாக சில மாதங்களாக வலைப்பூக்களின் பக்கங்கள் வர இயலா நிலை. பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன். அண்மையில் இந்நூல் வெளியாகியுள்ளது. இனி தொடர்ந்து பதிவுகள் மூலமாகச் சந்திப்போம்.

ராமலக்ஷ்மி said...

அருமையான குறிப்பு. செய்து பார்க்கிறேன்.