Friday, 23 September 2022

துபாயில் ஒரு புதிய கோவில்!!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் 30 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் வசித்து வருகின்றனர். இந்நாட்டில் வசிக்கும் வெளிநாட்டவர்களுக்கான மக்கள் தொகையில்  இந்தியர்களே முதலிடம் வகிக்கின்றனர். இங்கு இந்துக்களுக்காக அபுதாபி அருகே பிரமாண்ட கோயில் கட்டப்பட்டு வருகிறது. பாரத பிரதமர் மோடி ஏற்கனவே இதற்கு அடிக்கல் நாட்டியிருப்பது பற்றி ஏற்கனவே ஒரு பதிவெழுதியிருக்கிறேன். அதேபோன்று, 2வதாக புதிய கோயில் ஐக்கிய அரபு அமீரகத்தின் வர்த்தக நகராக கருதப்படும் துபாய் நகரத்தின் ஜெபல் அலி பகுதியில், 25 ஆயிரம் சதுர அடி பரப்பளவில்  ரூ.149 கோடி செலவில் பிரம்மாண்டமான‌ இந்து கோயில் கட்டமைப்பு பணிகள் நிறைவு பெற்று வரும் அக்டோபர் மாதம் 4ந்தேதி திறக்கப்பட உள்ளது.


சீக்கிய குருநானக் தர்பார் அருகே அமைந்துள்ளள இந்த‌ கோயில் பாரம்பரிய இந்திய கலை நுணுக்கங்களுடனும் சற்று அரேபிய கலையழகுடனும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.




1950 களில் திறக்கப்பட்ட ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பழமையான இந்து கோவில்களில் ஒன்றான பர் துபாயின் ஸூக் பனியாஸில் உள்ள சிந்தி குரு தர்பார் கோயிலின் விரிவாக்கம் இந்த கோயில்.

இது வரை துபாயில் இயங்கி வரும் பழமையான குருநானக் தர்பார்

துபாய் நகருக்குள் இருக்கும் பழைய துபாயிலுள்ள சிவன் கோவிலில்

இந்திய தொழிலதிபரும் சிந்தி குரு தர்பார் கோயிலின் அறங்காவலர்களில் ஒருவருமான ராஜு ஷிராஃப் “ “உள்ளூர் பொருளாதாரத்திற்கு நாங்கள் திருப்பித் தர விரும்புகிறோம். மத சகிப்புத்தன்மையைக் கொண்டாடியதற்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைமைக்கு நாங்கள் வைத்திருக்கும் நன்றியைத் திருப்பிச் செலுத்துவதற்கான எங்கள் வழி இது” என்று கூறியுள்ளார்.

வழிபாட்டாளர்கள் 4,000 சதுர அடி விசாலமான விருந்து மண்டபத்தை கலாச்சார நிகழ்வுகள், மதக் கூட்டங்கள் மற்றும் சமூக கூட்டங்களுக்கு பயன்படுத்தலாம்.

இந்த கோயில் கிழக்கு நோக்கிய கட்டமைப்பாகும், இது இந்திய கோயில் கட்டிடக்கலை மற்றும் இந்து வாஸ்து சாஸ்திரத்தின் விதிமுறைகளின்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. கோவில் கட்டமைப்பில் இரண்டு அடித்தளங்கள் உள்ளன, ஒரு தரை தளம் மற்றும் முதல் தளம். கோயிலின் மொத்த உயரம் 24 மீட்டர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது..


14 comments:

KILLERGEE Devakottai said...

சிறப்பான தகவல்கள் தந்தமைக்கு நன்றி

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை

Thulasidharan V Thillaiakathu said...

நல்ல தகவல்கள் மனோ அக்கா

கோயில் மிளிர்கிறது. அழகாக இருக்கிறது. கண்ணைக் கவர்கிறது

கூடவே ஓர் எண்ணமும் வருகிறது. அதைச் சொல்வது சரியா தவறா என்று தெரியவில்லை. இப்படிக் கட்டுபவர்கள், வெளிநாட்டில் என்றாலும் சரி உள் நாட்டில் என்றாலும் சரி, நம் நாட்டில் இருக்கும் மிகவும் பழைய கோயில்களை அரசர்கள் காலத்துக் கோயில்களை பாழடைந்த கோயில்கள், பல புத்த ஸ்தூபிகள், சமணர்கள் வாழ்ந்த பாறைக் கோயில்கள் எல்லாம் செப்பனிடலாமோ பராமரிக்கலாமோ என்று தோன்றும்

கீதா

கோமதி அரசு said...

புதிய கோவில் அழகு. கோவில் செய்திகள் பகிர்வு அருமை.

சீராளன் said...

ஆகா எத்தனை அழகு...
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
மகிர்வுக்கு நன்றி

ஸ்ரீராம். said...

விவரங்கள் தெரிந்து கொண்டேன்.  இந்தியக் கோவில் அமைப்பு கொஞ்சம்தான் பயன்படுத்தப் பட்டிருக்கிறது போல..  ஒரு ஹோட்டல் போல, தாங்கும் விடுதி போல தாஜ்மஹால் தோற்றத்துடன் வெளியிலிருந்து பார்க்கும்போது தெரிகிறது.  இனி புதிய வகைக் கோவில்கள் வர ஆரம்பிக்கும் போல..   முன்பு இந்தியாவில் கட்டபப்ட்ட பழங்காலக்கோவில்கள்தான் கோவில்கள் எனும் நிலை மாறலாம்.  அந்த அந்த நாட்டிற்கேற்ற வசதிகள், கலைகளுடன் கட்டிடம்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி கில்லர்ஜி!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரர் கரந்தை ஜெயக்குமார்!

மனோ சாமிநாதன் said...

நீங்கள் சொல்வது சரி தான் கீதா! இதைச் சொல்வதில் என்ன தயக்கம்? இன்னும்கூட, ஓரளவுக்கு வசதியானவர்கள் தங்கள் கிராமத்துக் கோவில்களை பழுது பார்த்து கும்பாபிஷேகம் செய்து கொண்டு தானிருக்கிறார்கள்!
இதுவும்கூட அப்படித்தான்! அயல்நாட்டில், அதுவும் வேறு மதம் உள்ள நாட்டில் வாழ்ந்தாலும் தங்கள் அடையாளத்தையும் விடாமல் தங்கள் கடவுளர்களுக்காக கோவில் கட்டுகிறார்கள் அல்லவா?
இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி கீதா!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் இனிய பாராட்டிற்கும் அன்பு நன்றி கோமதி அரசு!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் அன்பு நன்றி சீராளன்!

மனோ சாமிநாதன் said...

அருமையாக எழுதியிருக்கிறீர்கள் சகோதரர் ஸ்ரீராம்! அது உண்மையும் கூட!
சொல்லப்போனால் சரித்திரம் திரும்புகிறது! இந்தியாவில் நுழைந்து ஆட்சியை ஸ்தாபித்தபோது அக்பர், பாபர் முதலிய பேரரசர்கள் இந்தியக் கட்டடக்கலையைப்பார்த்து பிரமித்து, தங்கள் கட்டிடங்களை அந்த சாயலில் எழுப்பினார்கள் என்று படித்திருக்கிறேன். இப்போது இந்து கோவில்களில் அரேபிய கட்டிடக்கலையின் சாயலும் கலந்து கட்டப்படுகிறது!

மாதேவி said...

புதிய கோவில் அமைத்தது மகிழ்ச்சி.

அரேபிய இந்து கட்டிடக்கலை சேர்ந்த கோவில் அவ்வவ் நாட்டுக்கு ஏற்ற வகையில் .அமைத்தது சிறப்பு.