Friday 26 November 2021

ரஸமலாய்!!!

 ரொம்ப நாளாகிறது ஒரு சமையல் குறிப்பு போட்டு. அதனால் ஒரு இனிப்பான குறிப்பாக ‘ ரஸமலாய்’ பற்றி பதிவு பண்ணலாம் என்று நினைத்தேன். 

இனி ரஸமலாய் பற்றி:

ரஸமலாய் ஒரு பிரசித்தி பெற்ற பெங்காலி இனிப்பு. பொதுவாக எந்த CHEFம் பாலை திரைய வைத்து வடிகட்டி பனீராய் திரட்டி பிசைந்து உருட்டி செய்வார்கள். பாலைத்திரைய வைக்க வினீகர் அல்லது எலுமிச்சை சாற்றை உபயோகிப்பார்கள். சிலர் ரிக்கோட்டா சீஸ் உபயோகித்து செய்வார்கள். இது தான் பொதுவான முறை. இங்கு நான் கொடுத்திருப்பதோ முற்றிலும் வேறு முறை. இது மிகவும் சுலபமானதும் கூட. பாலைக்காய்ச்சும் வேலையுமில்லை. திரைய வைக்கவும் தேவையில்லை. ஒரு அரை மணி நேரத்தில் செய்து முடித்து விடலாம். 35 வருடங்களுக்கு முன் என் சகோதரியிடம் கற்றுக்கொண்டது இந்த குறிப்பு. அன்றிலிருந்து இன்று வரை ரஸமலாய் செய்ய வேறு எந்த குறிப்பையும் நான் பயன்படுத்துவதில்லை இதைத்தவிர!

இனி குறிப்பிற்கு போகலாம்.

ரஸமலாய்:


தேவையானவை:

FULL CREAM பால் பவுடர் -1 1/4 கப் [ 315 ml ]+ 12 மேசைக்கரண்டி

மைதா- 1 ஸ்பூன்

பேக்கிங் பவுடர் -1 ஸ்பூன்

சீனி- 8 மேசைக்கரண்டி

குங்குமப்பூ- கால் ஸ்பூன்

முட்டை- 1

சமையல் எண்ணெய்- 1 மேசைக்கரண்டி

ஏலப்பொடி- அரை ஸ்பூன்

பொடியாக நறுக்கிய பிஸ்தா பருப்பு 2 மேசைக்கரண்டி

செய்முறை:

1 1/4 கப் பால் பவுடர், மைதா, பேக்கிங் பவுடர் மூன்றையும் ஒன்று சேர்த்து மூன்று தடவைகள் சலிக்கவும். பின் சலித்த பால் பவுடரை ஒரு தட்டில் கொட்டி எண்ணெய் சேர்த்து பவுடர் முழுவதும் கலக்குமாறு பிசிறவும். பின் முட்டையை உடைத்து ஊற்றி பிசைவும். பிசைந்த பிறகு ஒரு முறை கையை கழுவி நீரில்லாமல் துடைத்து பின் பிசைந்தால் நன்கு பிசைய வரும். பிசைந்த மாவு மெழுகு போல இருக்க வேன்டும். அது தான் பதம். ஒரு ஈரத்துணியால் மூடி வைக்கவும். பிறகு பலிங்கி சைஸுக்கு உருண்டைகள் உருட்டி மூடி வைக்கவும். உருண்டைகள் உருட்டும்போது அழுத்தி உருட்டக்கூடாது. இலேசாக அழுத்தி உருட்ட வேண்டும். 


ஒரு அகன்ற பாத்திரத்தில் 4 கப் வெதுவெதுப்பான நீரைக் கொட்டி பாக்கியுள்ள பால் பவுடரையும் சீனியையும் கொட்டி நன்கு கலக்கவும். கட்டியில்லாமல் ஆனதும் அதிலிருந்து கால் கப் பாலை எடுத்து வைத்துக்கொண்டு பாக்கியை அடுப்பிலேற்றி கொதிக்க வைக்கவும். கால் கப் பாலில் மேலும் கால் கப் கொதிக்கும் நீர் கலந்து குங்குமப்பூவை அதில் போட்டு ஊற வைக்க‌வும். பால் கொதிக்க ஆரம்பித்தததும் ரஸ மலாய்களை ஏழெட்டு எடுத்து அதில் போடவும். ஐந்து நிமிடத்தில் அவை மேலெழும்பியதும் அடுத்த பாட்ச் போடவும். இதே போல எல்லா உருண்டைகளையும் போட்டு முடிக்கவும். எல்லா உருண்டைகளும் அளவில் பெரியதாகி மேலே மிதக்க ஆரம்பிக்கும். இலேசாக தீயைக்குறைத்து குங்குமப்பூ கலந்த பாலையும் ஏலப்பொடியையும் சேர்த்து கவனமாக கிளறவும். ஒரு சில நிமிடங்களுக்கு பிறகு ஒரு அகன்ற பாத்திரத்தில் கொட்டி மேலே பிஸ்தாவைத்தூவவும். குளிர்சாதனப்பெட்டியில் வைத்து பரிமாறவும்.


20 comments:

ஸ்ரீராம். said...

சுலபமான செய்முறை.  முட்டை இல்லாமல் செய்ய முடியாதா?

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

மனோ சாமிநாதன் said...

முட்டை இல்லாமல் இந்த முறையில் ரஸமலாய் செய்ய முடியாது சகோதரர் ஸ்ரீராம்! முட்டை இல்லாமல் செய்ய வேண்டுமானால் வழக்கமான வழியைத்தான் நாட வேண்டும். நான் சொன்ன மாதிரி ரிக்கோட்டா சீஸ் உபயோகித்து ரஸமலாய் செய்யலாம். அதில் முட்டை கிடையாது. அதன் லிங்க் கீழே கொடுத்திருக்கிறேன்.

https://www.arusuvai.com/tamil/node/12626

இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் இனிய பாராட்டிற்கும் அன்பு நன்றி தனபாலன்!

ஸ்ரீராம். said...

நன்றி.

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை
சுவைக்கத் தூண்டுகிறது

Geetha Sambasivam said...

முட்டையோ வினிகரோ இல்லாமலேயே ரஸமலாய் செய்யலாம். பாலை ஒரு முறை எலுமிச்சம்பழம் பிழிந்து திரித்துக் கொண்டு அந்த நீரை எடுத்து வைத்துப் பின்னால் ஒவ்வொரு முறை ரஸகுல்லா, ரஸமலாய் பண்ணும்போதெல்லாம் பயன்படுத்தலாம்.அந்த நீரில் எலுமிச்சம்பழம் பிழிந்து தேன்/சர்க்கரை சேர்த்துப் பருகினால் வயிற்றுக்கோளாறுகளுக்கு நல்லதொரு மருந்தாகும்.

Geetha Sambasivam said...

பால் பவுடரில் செய்ததே இல்லை. பாலில் தான் செய்திருக்கேன். பால் பவுடரில் எப்போவானும் குலாப்ஜாமூன் செய்வது உண்டு. இப்போப் பால் பவுடரே வாங்குவது இல்லை.

கோமதி அரசு said...

முட்டை இல்லாமல் இந்த முறையில் செய்ய முடியாது என்று சொல்லி விட்டீர்கள்.
படம் அருமை.

ராமலக்ஷ்மி said...

புதிய சுலபமான செய்முறைக் குறிப்பு. அருமை.

Thulasidharan V Thillaiakathu said...

மனோ அக்கா ரஸமாலாயில் முட்டை என்பது முதல் முறையாகக் கேள்விபடுகிறேன்!! இந்த முறையில் முட்டை இல்லாமல் செய்ய முடியாது என்றும் சொல்லிட்டீங்க. ஸோ....

மற்ற முறைகளில் செய்ததுண்டு.

படம் சூப்பர்.

கீதா

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார்!

மனோ சாமிநாதன் said...

வாருங்கள் கீதா!
whey water பற்றி சொல்லியிருக்கிறீர்கள். பொதுவாக பனீர் தயார் செய்ய அதைத்தான் உபயோகிப்பார்கள். மற்றபடி 90 சதவிகிதம் எலுமிச்சை சாற்றைத்தான் ரஸமலாய் செய்ய உபயோகிப்பது வழக்கம். நான் மட்டும் தான் முட்டை உபயோகிக்கிறேன்.
நான் குலோப்ஜான் பால் பவுடரில் தான் செய்வேன். வீட்டில் சிறு வயது பேத்தி இருப்பதால் எப்போதும் வீட்டிலேயே இருக்கும்.
வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி ராமலக்ஷ்மி!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி கீதா!

Bhanumathy Venkateswaran said...

இதே முறையில்தான் ஆனால் முட்டையில்லாமல் நான் ரசமலாய் செய்வேன். அந்த குறிப்பை எ.பி.க்கு அனுப்ப வேண்டும் என்று நினைத்துக் கொண்டேயிருக்கிறேன்.

Bhanumathy Venkateswaran said...

முட்டை இல்லாமல் செய்யலாம். முட்டை சேர்த்து செய்யும் பொழுது மிகவும் சாஃப்டாக இருக்கும்.

Bhanumathy Venkateswaran said...

என்னுடைய பின்னூட்டம் என்னவானது?
பால் பவுடரில் முட்டை சேர்க்காமல் ரசமலாய் செய்திருக்கிறேன். நன்றாக வரும்.

Bhanumathy Venkateswaran said...

என்னுடைய பின்னூட்டம் வரவில்லையே? ரஸமலாய் பார்க்கவே நன்றாக இருக்கிறது. நான் பால் பவுடரில் முட்டை
முட்டை சேர்க்காமல் ரஸமலாய் செய்திருக்கிறேன்.

துரை செல்வராஜூ said...

ரச மலாயில் முட்டையா?..

ஏதும் வெளிநாட்டுச் சதியாக இருக்குமோ!..