கருணையும் இரக்கமும் மனிதநேயமும் கிலோ என்ன விலை என்றாகி விட்ட இன்றைய உலகத்தில் எங்கேனும் ஒரு இடத்தில் புனிதமான மழைத்துளியைப்போல உண்மையான மனித நேயத்தையும் கருணையையும் தரிசிக்க நேரும்போது உண்மையிலேயே கண்கள் கலங்குகின்றன!! நெஞ்சம் நெகிழுகிறது!!
அப்படிப்பட்ட ஒரு செய்தி தான் இது!
மனித நேயம்-1
சிறுவாணி தண்ணீரில், மிருதுவான இட்லியை தயாரித்து, அடுப்பு தீயின் நடுவே ஆவி பறக்க, பறக்க ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பவர் கமலாத்தாள் பாட்டி. பல இடங்களில் இட்லியின் விலை 6 முதல் 10 ரூபாய் வரை இருக்க, பாட்டியோ யார் எப்படி விலை வைத்து விற்றாலும் நான் ஒரு ரூபாய்க்குத் தான் இட்லி விற்பேன் என்று இன்று வரை அதை செய்து வருகிறார். கோவை ஆலாந்துறையை அடுத்துள்ள வடிவேலாம்பாளையத்தை சேர்ந்த கமலாத்தாள் பாட்டி. 85 வயதாகும்
ஊரடங்கால் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்ந்துள்ளது. ரூ.100-க்கு விற்றுவந்த பொட்டுக்கடலை மற்றும் உளுந்து இப்போது ரூ.150-க்கு விற்கப்படுகிறது. அதேபோல, ரூ.150-க்கு விற்கப்பட்ட மிளகாய் இப்போது ரூ. 200-க்கு விற்கப்படுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் கமலாத்தாள் பாட்டி ஒரு ரூபாய்க்குதான் இட்லியை விற்று வருகிறார். யாருமே உதவிக்கு இல்லாமல் தனி ஆளாகவே 30 வருஷமாக இந்த இட்லி கடையை நடத்தி வருகிறார். அவரே இட்லி, சட்னி, சாம்பார் தருகிறார். ஆரம்பத்தில் ஒரு இட்லி 25 பைசாவுக்கு விற்று வந்தார். அதற்கு பிறகுதான் விலையைகூட்டி இருக்கிறார்.
சமைக்க கேஸ் அடுப்பு கிடையாது, மாவு அரைக்க கிரைண்டர் கிடையாது, சட்னி அரைக்க மிக்சி கிடையாது, எல்லாமே அடுப்பும், ஆட்டுக்கல்லும்தான். சுடச்சுட ஆவி பறக்க சுவையான இட்லி, சாம்பார் விடியற்காலையிலேயே தயார் செய்து விற்று வந்தார். இவரது இந்த கைப்பக்குவத்துக்கு சுற்றியுள்ள பகுதியில் இருந்து பலர் வந்து செல்கிறார்கள். வெளியூரில் இருந்து வந்தவர்கள் மற்றும் உள்ளூரில் இருப்பவர்கள் எனத் தினமும் 400 பேருக்கு மேல் உணவளித்து பம்பரமாகச் சுழன்று கொண்டிருக்கிறார் கமலாத்தாள்.
ஊரடங்கு உத்தரவால் கமலாத்தாள் பாட்டியும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளார். இதையடுத்து, அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்து உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.
கமலாத்தாள் பாட்டியின் இந்த சேவையை அறிந்து குடியரசு துணை தலைவர் வெங்கய்ய நாயுடு பாராட்டினார். அப்போது தான் எல்லோருக்கும் கமலத்தாள் பாட்டி அறிமுகமானார். இந்நிலையில், கோவையில் ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி விற்பனை செய்து வரும் கமலாத்தாள் பாட்டியின் சேவையை அறிந்த மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர், அவரை தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு வாழ்த்தியதோடு, விறகு அடுப்புக்கு மாற்றாக சமையல் எரிவாயு அடுப்பு, கிரைண்டர், மிக்சி, ஆகியவற்றை கமலாத்தாளுக்கு வழங்கினார்.
"நாங்கள் எல்லாம் சோளக்களி, ராகி, கம்பஞ்சோறு போன்ற உணவுகளை சாப்பிட்டு வளர்ந்தோம். இதனால்தான் இன்றும் என் உடலில் தெம்பு இருக்கிறது." என்று தான் இந்த வயதிலும் திடமாக உழைக்கும் ரகசியத்தை தெரிவிக்கிறார் கமலாத்தாள் பாட்டி.
மேலும், தற்போதெல்லாம் அனைவரும் அரிசி சோறே அதிகம் சாப்பிடுவதாகவும், அதனாலேயே யாருக்கும் தெம்பு இருப்பதில்லை என்று அவர் கூறுகிறார்.
இந்தக்கடையின் தினசரி வாடிக்கையாளர் ராமசாமி கூறுகையில், "இப்பவும் இங்க இட்லி ஒரு ரூபாய்தான். 10 ரூபாய் இருந்தால் வயிறு நிறைய இங்கு சாப்பிடலாம். இன்னிக்கு எங்கிட்ட காசு இல்ல, நாளைக்கு தரேன் என்று சொன்னால்கூட, அவர் ஒன்னும் சொல்லமாட்டார். என் கையில் 500 ரூபாய் இருந்தாலும், நான் இங்கு வந்துதான் சாப்பிடுவேன். காரணம் சுவை. ஆட்டுக்கல்லில்தான் மாவு அரைப்பார். அம்மிக்கல்லில்தான் சட்னி அரைப்பார். சாம்பாரும் மிகப் பிரமாதமாக இருக்கும்" என்கிறார்.
கோவையில் ஒரு ரூபாய்க்கு இட்லி சேவை புரிந்து வந்த கமலாத்தாள் பாட்டிக்கு மகேந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா நிலம் வாங்கி வீடு கட்டிக்கொடுக்க முன்வந்துள்ளார். அதற்கான ஆவணங்களும் அவரிடம் வழங்கப்பட்டுள்ளது.
மஹிந்திரா வழங்கியுள்ள நிலத்தில் கமலாத்தாளுக்கு வீடு மற்றும் இட்லிக் கடை நடத்துவதற்கான கட்டுமானப் பணிகளையும் அந்த நிறுவனம் தற்போது தொடங்கி உள்ளது. மக்கள் பசியாற சேவையாற்றும் கமலாத்தாள் அவர்களுக்கு மஹிந்திரா நிறுவனம் உதவும் செய்தி அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
13 comments:
இந்த செய்தி கூகிள் நியூஸில் வந்ததுக்கா.அதில் மேம்போக்கா படிச்சேன் விரிவான தகவல்களுக்கு நன்றி .பாட்டி நல்லா இருக்கணும் .அவருக்கு உதவும் நல்ல உள்ளங்கள் இப்படி நிறைய தேவையுள்ளோருக்கு உதவி செய்யவேணுமென்றும் பிரார்த்திப்போம் .
அரிய தகவலுக்கு மிக நன்றி அன்பு மனோ.
பாட்டி இன்னும் நல்ல திடத்துடன் இருக்க இறைவன் அருள்வான்.
என்ன ஒரு திண்மை.!!!!
உதவிய நெஞ்சங்களுக்கும் கரங்களுக்கும்
நம் வாழ்த்துகள்.
சமீபமாக இவரைப் பற்றிய தகவல்கள் சமூக வலைத்தளங்களிலும் அதிகம் பகிரப் பட்டு வருகின்றன. பாராட்டுக்கும் வணக்கத்துக்கும் உரியவர். அவருக்கும் அவருக்கு உதவ முன் வந்த மகேந்திரா நிறுவனத்திற்கும் வாழ்த்துகள்!
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர். சுயநலம், பேராசை இல்லாமல் வாழும் இதுபோன்றவர்கள் மனித தெய்வங்கள்.
இன்று கூட எனக்கு வாட்ஸப் செய்தி வந்து இருக்கிறது எனக்கு. முன்பே நிறைய பேர் இவர்களை பற்றி வீடியோக்கள் போட்டதை பார்த்தேன். அந்த அம்மாவை வணங்கவேண்டும். அவர்கள் மன உறுதி, மனபலம் கற்றுக் கொள்ள வேண்டியது.
//மஹிந்திரா வழங்கியுள்ள நிலத்தில் கமலாத்தாளுக்கு வீடு மற்றும் இட்லிக் கடை நடத்துவதற்கான கட்டுமானப் பணிகளையும் அந்த நிறுவனம் தற்போது தொடங்கி உள்ளது. மக்கள் பசியாற சேவையாற்றும் கமலாத்தாள் அவர்களுக்கு மஹிந்திரா நிறுவனம் உதவும் செய்தி அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.//
இந்த முதியவருக்கும் உதவும் நல்ல உள்ளம் வாழ்க!
பசியாற்றியவருக்கு கிடைத்த பரிசு மனதை நிகிழ வைத்து விட்டது. "இடலி தினத்தில் "இந்த அமாவின் சேவையை எல்லோரும் சொல்லி இருந்தார்கள்.
நல்ல பகிர்வு.
இவைதான் உயர்ந்த உள்ளங்கள்.. இப்படி
ஒருவருக்கொருவர் முகம் பார்த்து உதவிக் கொள்வதே வாழ்கையின் தத்துவம்...
இவர்கள் அனைவருக்கும் இறைவன் என்றும் துணையிருப்பானாக...
சிறப்பான சேவை. நானும் இந்தத் தகவலை, இணையத்தில் படித்தேன்.
வணங்குகிறேன்...
அவர் சொன்ன உழைப்பின் ரகசியமும் சிறப்பு...
வணங்குதலுக்கு உரியவர்
வணங்குவோம்
இவரைப் பற்றிய செய்திகள் சமீபமாக அடிக்கடி பார்க்கிறேன். பகிர்ந்தமைக்கு நன்றி.
இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி ஏஞ்சல்!
வாழ்த்துக்களுக்கும் இனிய கருத்துரைக்கும் அன்பு நன்றி வல்லிசிம்ஹன்!
இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி ராமலக்ஷ்மி!
Post a Comment