இது ஒரு உறவினர் ஒருவரின் வாழ்க்கையைப்பற்றியது. மனைவி 50 வயது முடிவதற்குள்ளேயே சர்க்கரை நோயால் இறந்து விட்டார். இரண்டு பிள்ளைகள், இரண்டு பெண்கள்., மூதத பிள்ளை தான் குடும்பத்தை தாங்கிய வேர். அந்தப்பிள்ளைக்கு சிறிய வயதிலேயே மார்க் 80 சதவிகிதம் எடுத்திருந்தாலும் ஏன் 90 சதவிகிதம் எடுக்கவில்லை என்று அடிமேல் அடி விழும். நோயுள்ள தாயின் வேலைகளை பள்ளிப்பருவத்திலேயே அந்தப்பிள்ளை செய்யும். மனதில் வலியோடு தான் வயதும் வளர்ந்தது. வியாபாரத்தில் நொடித்துப்போன அந்தப் பெரியவருக்கு உறவினர்கள் எல்லாம் உதவி செய்ய அந்தக் குழந்தைகள் எல்லாம் நல்லபடியாக படித்தார்கள். மூத்த மகன் வெளிநாடெல்லாம் சென்று பொருளீட்டி தன் அப்பா பெயரில் இடம் வாங்கி மிகப்பெரிய வீட்டையும் கட்டினார். மூத்த மகனின் திருமணத்தைப்பார்க்கக்கூட கொடுத்து வைக்காமல் அந்த தாயார் இறந்து போனார். மூத்த மகளின் திருமணமும் முடிந்தது.
அப்புறம் தான் பிரச்சினைகள், குடும்பத்தகராறுகள் எல்லாம் வரத்தொடங்கின. இத்தனைக்கும் மருமகளாக வந்த உறவுப்பெண் மிக நல்ல மாதிரி. அவரால் எந்தப்பிரச்சினையும் வரவில்லை. பிரச்சினையெல்லாம் அப்பாவுக்கும் மகனுக்கும் இடையில் தான். மூல காரணம் இளைய தங்கையின் தேவையற்ற பேச்சுக்கள் தான். அவ்வளவு பிரச்சினைகளும் முற்றிப்போய் ஒரு நள்ளிரவில் தன் தந்தையையும் திருமணமாகாத தன் தங்கையையும் வீட்டை விட்டு வெளியே அனுப்பினார் மகன். ஒடிந்து போனார் தந்தை. தங்கைக்கும் சரி, தம்பிக்கும் சரி, திருமணமோ அல்லது நல்ல வேலையில் அமர்த்துவதோ எதுவும் தன்னால் செய்ய முடியாது என்று மறுத்தும் விட்டார் அந்த மகன். இத்தனைக்கும் நல்ல வேலையில் சொந்த வீட்டுடன் மிக வசதியாக இருந்தார் அவர்.
வெளியேறி வந்த அந்த தந்தை யோசித்தார். 70 வயதைக்கடந்த நிலையில், தனக்கென்று எந்த சொத்தும் வாழ்வாதாரமும் இல்லாத நிலையில் என்ன செய்வது என்று தீவிரமாக யோசித்ததின் முடிவு எங்கள் எல்லோரையும் அதிர்ச்சியில் தள்ளியது. மகன் தன் பெயரில் கட்டிய வீட்டை மகனுக்குத் தெரியாமல் ரகசியமாக விற்றார். வந்த தொகையில் நான்கு மனைகள் வாங்கி ஒவ்வொருத்தருக்கும் ஒரு மனை என்று நான்கு பிள்ளைகளுக்கும் எழுதி வைத்தார். மீதியில் தனக்கென ஒரு பிளாட் வாங்கினார். பாக்கியை வங்கியில் போட்டு அதன் மூலம் வரும் வருமானத்தில் வாழ்க்கையை தொடர்வது என்று முடிவெடுத்தார். கடைசி பெண்ணுக்கும் பிள்ளைக்கும் சிக்கனமாக திருமணத்தையும் செய்து வைத்தார். ' நான் செய்தது உலகத்திற்கு இழிவாகத்தான் தெரியும். ஆனால் என்னைப்பொறுத்தவரை இது நியாயம்' என்று எழுதி வைத்தார் தந்தை.
வீட்டை விற்ற செய்தி கிடைத்ததுமே மூத்த மகன் பொங்கி எழுந்தார். தந்தைக்கும் மகனுக்குமிடையே நிறைய வாக்குவாதங்கள், கடிதங்கள் எல்லாம் நிகழ்ந்தன. அதன் பிறகும் சினம் தணியாத மகன் தந்தை மேல் வழக்கும் தொடர்ந்தார். எப்படியும் தந்தைக்கு தான் சாதகமாக வழக்கு முடியும் என்ற நிலையிலும் மகன் அதை ஒத்துக்கொள்ள மறுத்தார். இந்த வழக்கு சில வருடங்களாக இழுத்துக்கொண்டிருந்தது.
இடையே, நான் அந்த உறவினருடன் பேசிக்கொண்டிருந்த போது ' நீ வேண்டுமானால் அவனுடன் பேசிப்பார்க்கிறாயா? அவனுக்கு புரிகிற மாதிரி எல்லாவற்றையும் சொல்லி பேசிப்பார்க்கிறாயா?' என்று கேட்டார். இத்தனைக்கும் பிறகு அவருக்கு இன்னும் மகன் மீது பாசம் இருக்கிறது என்று புரிந்த போது, ஆச்சரியமாக இருந்தது. நானும் ஒத்துக்கொண்டேன். சென்னையில் இருந்த அவரின் மகனோடு தொலைபேசியில் பேசி, அவரின் தந்தையின் நிலைமையை புரிய வைக்க முயன்றேன். இறுதியில் ' நீ அவரிடம் தந்தையென்ற பாசம் கூட காண்பிக்க வேண்டாம், அன்பு என்று கூட வேண்டாம். ஒரு வயதானவரிடம் காட்டக்கூடிய கருணையையாவது காண்பிக்கலாமே? அந்தக் கருணையோடு அவருக்கு நீ சாப்பாடு போடலாமே? " என்று கேட்டேன். அதற்கு அவர் ‘ உங்களுக்குத் தெரியாது அவரைப்பற்றி. சாப்பிடுகிற சாப்பாட்டில் விஷம் வைக்கத் தயங்காதவர் அவர். அவர் தப்பு பண்ணியிருந்தால் கடவுள் அவரை தண்டிப்பார். நான் தப்பு பண்ணியிருந்தால் அதே கடவுள் என்னை தண்டிக்கட்டும்' என்றார். ' இதற்கு மேல் பேச முடியாது' என்று சொல்லி நான் பேசுவதை முறித்து விட்டேன். ஆனால் இந்த கடுமையான பேச்சுகளை நான் அந்தத் தந்தையிடம் சொல்லவில்லை. பூசி மழுப்பி விட்டேன்.
அதற்கப்புறம் ஓரிரு வருடங்களில் அவர் நோய்வாய்ப்பட்டு இறந்து போனார். தன் தந்தை மரணப்படுக்கையில் இருந்த போது கூட தனக்கு இழந்த சொத்தை இப்போதாவது அவர் திரும்பத்தருவாரா என்பதிலேயே தான் அந்த மகனின் நாட்டமிருந்தது.
அதற்கு அடுத்த வருடமே அந்த மகனுக்கு கல்லீரல் செயலிழந்து போனது. 2,3 வருடங்களாக மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறார். கல்லீரல் மாற்று சிகிச்சையும் அவருக்கு செய்தாலும் பலன் கிடைப்பது சந்தேகத்திற்கிடம் தான் என்று மருத்துவர்களும் சொல்லி விட்டார்களாம். உடலெல்லாம் நீர் தேங்கி அதற்காக அறுவை சிகிச்சைகள் செய்த நிலையில் சில மாதங்களுக்கு முன் அவரும் இறந்து போனார். எல்லா சொந்த பந்தங்களையெல்லாம் விட்டு ஒதுங்கி இருந்ததால் அவரின் இறப்பிற்கு மிக நெருங்கிய உறவுகள் கூட போகவில்லை. அந்த இறப்பு செய்தி கிடைத்த பிறகு ஒரு வாரம் வரை அதன் தாக்கம் எனக்கு இருந்து கொண்டே இருந்தது. ஒரு மகன் என்ன தப்பு செய்தாலும் அவன் பெற்றோர்களால் அதை மன்னிக்க முடிகிறது. தன் பெற்றோர்கள் தப்பு செய்தால் மட்டும் ஏன் அந்த மகனால் மன்னிக்க முடியவில்லை?
13 comments:
கடைசியில் கேட்கப்பட்டிருக்கும் கேள்வி சங்கடமானது. பிள்ளை மனம் கல்லுதான்! எப்படி எப்படியோ வாழ்ந்து முடிந்து போகிறார்கள். எல்லோருக்கும் தான் செய்ததுதான் சரி என்றும் நினைப்பு இருக்கிறது.
உறவுகளும் உணர்வுகளும் போகும் பாதை பற்றி ஒன்றும் புரிய வில்லையம்மா...
தந்தை என்ற positionஐ தவறாக உபயோகித்தால் அவர் மீது என்ன மரியாதை வரும்? அவர், தன் தாயை எப்படி நடத்தினார் என்பதும் காரணமாக இருக்கலாம்.
எப்போதுமே பாசம் கீழ் நோக்கித்தான் பாயும். உலக இயல்பின்படி மகன் மன்னிக்க வாய்ப்பு மிகவும் குறைவு.
தந்தை செய்தது தவறுதானே.... பொறுப்பற்ற தந்தைகளால்தான் குடும்பச் சிக்கல்கள் அதிகமாகின்றன
உண்மை நிகழ்வு கொஞ்சம் அதிர்ச்சியாகவும் இருக்கிறது. தேவையில்லாமல் குடும்பத்தைக் குலைத்துவிட்டாரே தந்தை..
இரக்கம் இல்லாத மனிதன்...
கருத்துரைக்கு அன்பு நன்றி ஸ்ரீராம்!
எப்படியோ இந்தக்குடும்பம் நன்றாக வாழ்ந்திருக்க முடியும். சினம் என்ற ஒன்று அன்பைச்சூழ்ந்திருந்த எல்லா வேலிகளையும் தகர்த்து விட்டது!
வாருங்கள் சகோதரர் துரை.செல்வராஜ்! உண்மையிலேயே நிறைய சமயங்களில் எனக்கும் உறவுகளும் உணர்வுகளும் போகும் பாதை புரிவதில்லை! அன்பென்பதும் கருணையென்பதும் நியாயமென்பதும் நல்ல வாழ்க்கையின் அர்த்தங்கள் இல்லையா என்ற கேள்வியும் அடிக்கடி பிறக்கிறது!
வாருங்கள் நெல்லைத்தமிழன்!
அந்தத் தந்தை தன் மனைவியை அவரது ஆக்ரோஷங்களையும் குறைகளையும் மீறி மிக நன்றாக இறுதி வரை நடத்தினார்.
எதுவுமே கையில் இல்லாத நிலையில் திருமணமாகாத கடைசி மகளுக்கு எப்படி திருமணம் நடத்துவது? இறுதி வரை சாப்பாட்டுக்கு என்ன வழி?
அப்போது தான் அவர் நியாயத்தை மீறிய செயலை செய்தார்!
ஆனால் மகனின் செயல் அசாதாரணமானது. தந்தை மரணப்படுக்கையில் இருந்த போது கூட தான் இழந்த பணம் கைக்கு வராதா என்று பலவழிகளிலும் முயற்சித்துக்கொண்டிருந்தார். ஏன், அவராலேயே அந்த மரணம் சீக்கிரமாக நிகழ்ந்து விட்டது என்பது தான் உண்மை!
இப்போதெல்லாம் இரக்கத்துக்கும் கருணைக்கும் வழியேயில்லாமல் போய் விட்டது தனபாலன்!
சும்மா ரோட்டில் நடந்து போகிற பிச்சைக்காரனுக்குக்கூட அழைத்து அன்னமிடுகிறோம். அதுவே, பெற்ற தந்தை என்று வரும் போது ஆயிரம் வாதப்பிரதிவாதங்கள் தோன்றுகிறது!
அந்த மகனுக்கு உறவினர்களிடன் உதவி கேட்டு கேட்டுத்தான் படிக்க வைத்தார் அவர்!
கருத்துரைக்கு அன்பு நன்றி !
வருத்தமான நிகழ்வுகள். இது போன்ற சம்பவங்களை அடிக்கடி சுற்றிலும் அறிய வர நேருகிறது. காழ்ப்புணர்வு கருணையை மறுக்கிறது. ஏறத்தாழ மனநோயாளிகளைப் போல நடந்து கொள்கிறார்கள். வேதனை!
வேதனையாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது
எத்தனை துயரங்கள். எல்லாம் கோபத்தினால் வந்த பாபம்.
முற்செய்யின் பின் விளைந்த கதை. யாருக்கும் பலனில்லாத வாழ்வு. பரிதாபம் தான்.
வேதனை தான் மிச்சம். மனிதர்கள் பணமென்றால் எப்படி எல்லாம் நடந்து கொள்கிறார்கள்.
வருத்தமான நிகழ்வுகள். சிறு வயதிலிருந்தே மறுக்கப்பட்ட அன்பும்,அக்கறையும் அந்த மகனின் மனதை கல்லாக்கி விட்டதோ..?
Post a Comment