Thursday 22 October 2020

முகங்கள்-3!!!!

 

என் கணவரின் நண்பர் அவர். கல்லூரி நண்பர். கல்லூரிக்காலங்களில் சீரான சிந்தனைகள் கொண்டிருந்தார்.  வெடிச்சிரிப்பும் கிண்டல் பேச்சுகளும் சுறுசுறுப்பும் அவரின் கூடப்பிறந்தவை. வங்கி அதிகாரியாக அவருக்கு வேலை கிடைத்தது.. அவரவர் திருமணங்களுக்குப்பிறகு சந்திப்புகள் குறைந்து விட்டன.  அதுவும் வெளிநாட்டில் வாழ்வதால் குறைந்து போன உறவுகளில் அவரின் நட்பும் ஒன்று.

ரொம்ப காலத்துக்குப்பிறகு, சமீபத்தில் என் கணவர் தன் கல்லூரி நண்பர்களையெல்லாம் தேடிப்பிடித்து சந்தித்துக்கொண்டிருந்தார்கள். அப்போது அவர் இருக்குமிடத்தையும் கண்டுபிடித்து அவரின் வீட்டுக்குச் செல்ல முடிவு பண்ணினோம்.

ஒரு வழியாய் தஞ்சைக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்திலுள்ள அவரின் வீட்டுக்குச் சென்றபோது கோலூன்றி எங்களை வரவேற்ற அவரைப்பார்த்ததும் ரொம்பவும் அதிர்ச்சியாக இருந்தது. தவறி விழுந்து கால் எலும்பு நொறுங்கி பல முறை அறுவை சிகிச்சைகள் செய்திருந்தார். அவற்றில் தவறுதலான வழிகாட்டுதல்களின் காரணமாக  சில தவறான சிகிச்சைகள் செய்ததால் அவருக்கு பாதிப்பு மிக அதிகமாக இருந்தது. மிகவும் சிரமப்பட்டுக்கொண்டிருந்த அவரைப்பார்த்தபோது மனது கனமாகிப்போனது. அவரின் மகன்கள் இருவரும் குடும்பத்துடன் சென்னையில் இருப்பதாயும் தன் மனைவியுடன் தான் தனியாக இருப்பதாயும் சொன்னார்.  எந்த நோய்க்கும் எந்த அறுவை சிகிச்சைக்கும் அவர் இரண்டாவது ஒப்பினியன் எந்த மருத்துவரிடமும் எடுக்கவில்லை என்பது புரிந்தது. அவரை தஞ்சையிலுள்ள எங்கள் உறவினரான அறுவை சிகிச்சை நிபுணரிடம் காட்டி கால்களை பரிசோதிக்க வைத்தோம். என் கணவர் அவருக்கு உடைகள் மாற்றவும் நடக்க வைக்கவும் உதவியபோது கண்கள் கலங்கி விட்டார்.



அப்புறம் தான் எங்களுக்கு ஒரு அத்திர்ச்சியான விஷயம் தெரிந்தது. 20 வருடங்களுக்கு முன் அவர் பக்கவாதம் வந்து பாதிக்கப்பட்டு மூளையிலும் பாதிப்பு ஏற்பட்டபோது மருத்துவர் அவர் குடும்பத்தினரிடம்
இவரைக் காப்பாற்ற ஒரே ஒரு வழியிருக்கிறது. ஒரு வீரியம் மிக்க ஊசி போடுவதன் மூலம் இவரின் உயிரைக் காப்பாற்றி விட முடியும். ஆனால் எப்போது வேண்டுமானாலும் இவரின் பார்வை போய் விடும். நீங்கள் சம்மதித்தால் மட்டுமே இந்த ஊசி போட முடியும்.” என்று சொல்ல, குடும்பத்தினர் அனைவரும் கூடிப்பேசி, சம்மதித்து அவருக்கு அந்த ஊசி போடப்பட்டு அவரின் உயிர் காப்பாற்றப்பட்டது.  கடந்த 20 வருடங்களுக்கு அவரின் பார்வை போகவில்லை என்பது மிகப்பெரிய ஆச்சரியம். கடந்த சில வருடங்களாகத்தான் அவர் பார்வை இலேசாக மங்கத்தொடங்க ஆரம்பித்திருக்கிறது. இதில் அதிர்ச்சியும் ஆச்சரியமுமான விஷயம் ஒன்றே ஒன்று தான். இந்த 20 வருடங்களில் அவரோ அவர் குடும்பத்திலுள்ளவர்களோ இதற்கான எந்த முயற்சியையும் எடுக்க வில்லை! ஒரு கண் மருத்துவரிடம் சென்று இதைப்பற்றி அலசி கண்களைக்காப்பாற்ற ஏதேனும் வழி இருக்கிறதா என்ற எந்த பிரயத்தனமும் செய்யவில்லை என்பதை நம்பவே முடியவில்லை. இத்தனைக்கும் நன்கு படித்த, அரசியல் செல்வாக்குள்ள குடும்பம்.  இப்போது அவருக்கு இலேசாக பார்வைக்குறைவு ஏற்பட்டிருக்கிறது. எங்களின் வற்புறுத்தலுக்கு சம்மதித்து என் சகோதரியின் மகளான கண் மருத்துவரிடம் சென்றார். கண் அறுவை சிகிச்சை நிபுணரான அவர் பார்வை குறையத்தொடங்கி விட்டது. இனி பார்வையைத்திரும்பப் பெற முடியாது  என்று ஆழ்ந்த பரிசோதனைக்குப்பின் உறுதியாகச் சொல்லி விட்டார்.  மிகவும் வருத்தமாக இருந்தது எங்களுக்கு.

இப்போது தன் முன்னே அருகில் வந்து நிற்பவர்களை மட்டுமே அவரால் அடையாளம் கண்டு கொள்ள முடிகிறது அவரால்.   எழுபதுகளில் இருக்கும் அவருக்கு சரியாக நடக்க முடியாத நிலையில் இதுவரை இருந்த பார்வையும் முழுமையாக இல்லாது போய் விட்டால், அப்புறம் மீதமிருக்கும் வாழ்க்கையை எப்படி அவரால் மனதளவிலும் உடலளவிலும் சமாளிக்க முடியும் என்பதை நினைக்கையில் மனம் வேதனையில் ஆழ்கிறது.

கண் பார்வை கொஞ்ச நஞ்சம் இருக்கும்போதே எங்கள் இல்லத்துக்கு வர வேண்டுமென்று ஆசைப்பட்டார். நாங்களும் சரியென்றோம். ஆனால் இந்தக் கொரோனாவால் வர இயலாமல் போய் விட்டது. இனி எப்போது பார்க்க நேரிட்டாலும் அப்போது அவரது பார்வை இருக்குமா?

17 comments:

Yaathoramani.blogspot.com said...

ஆம் ...செய்யவேண்டியதை காலமறிந்து சரியாகச் செய்யாது போனால் அதற்கு நாம் அதிக விலை கொடுக்க வேண்டியது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது...

வல்லிசிம்ஹன் said...

மிக மிக வேதனை மனோ!
ஆனால் நம் ஊரில் மிக சுலபமாக நடக்கவும, கடக்குவதுமாக நிகழும் செய்தி.
என் மாமியார் இரத்தம் பரிசோதனக்குத் தன்னை உட்படுத்திக் பிள்ளை மாட்டார். நானும் கணவரின் சகோதரிகளும் மிக வற்புறுத்தி
வைத்தியரிடம் செல்லும் போது சர்க்கரை நோய் இருப்பது தெரிய வந்தது.
கண் பார்வை. பாதிக்கப் பட்டு விட்டது.

மன வலிமை இழக்காமல் பேரன் கள், பேத்தி துணையில் உற்சாகமாகவே இருந்தார். இப்போதும்
மனம் வலிக்கும் அவரது கடைசி நாட்களை நினைக்கும் போது.

உங்கள் கணவரின் நண்பரை. இறைவன் காக்கட்டும்.

ஸ்ரீராம். said...

படிக்க வருத்தமாக இருக்கிறது.  அவருடனான உங்கள் சந்திப்பு கொஞ்ச வருடங்கள் முன்னாலேயே நடைபெற்றிருக்கக் கூடாதா?  இதுதான் விதி என்பதா?

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

சற்றே மனம் கனத்துவிட்டது.
கும்பகோணம் அருகே, என் பள்ளிக்கால நண்பன் பி.யு.சி.படித்தபோது உடல் நிலை சரியில்லாதபோது போட்ட ஊசியின் விளைவால் கண் பார்வை இரண்டும்போய்விட்டது.கண் மருத்துவர், கண் பார்வை சக்தி அவருக்குத் தர முடியாத அளவிற்கு பாதித்துள்ளதாகக் கூறிவிட்டார். 35 வருடங்களாக பார்வையின்றியே அனைத்து வேலைகளையும் கவனித்துக்கொள்கிறார். அசாத்திய தைரியம் கொண்டவர். நாங்கள் பலர் அவரை துணிவுக்கு முன்னுதாரணமாகக் கூறுவோம். இவர்களுக்கெல்லாம் இறைவன் துணைநிற்பான்.

KILLERGEE Devakottai said...

மனதுக்கு கஷ்டமான விசயம்.
எமது பிரார்த்தனைகள் வேறென்ன சொல்வது ?

திண்டுக்கல் தனபாலன் said...

இப்படியா அலட்சியமாக இருப்பார்கள்... வருத்தம் மேலோங்குகிறது...

Geetha Sambasivam said...

படித்ததுமே மனம் வேதனையில் ஆழ்ந்துவிட்டது. அவர் மனம் கலங்காமல் வாழ்க்கையை நடத்தப் பிரார்த்திப்போம். அதற்கு வேண்டிய தைரியத்தை இறைவன் அவருக்குக் கொடுக்கட்டும்.

Bhanumathy Venkateswaran said...

அடடா! படித்தவர்கள் கூட சில சமயம் தவறான மருத்துவ முடிவுகளை எடுப்பது வேதனை !

கரந்தை ஜெயக்குமார் said...

மனம் கனக்கிறது சகோதரி

ராமலக்ஷ்மி said...

ஆரோக்கியத்தில் கவனம் வைக்க வேண்டியதின் அவசியத்தை உணர்த்தும் பகிர்வு. பெரியவரின் நிலை வருத்தம் அளிக்கிறது. அவருக்காகப் பிரார்த்திப்போம்.

மனோ சாமிநாதன் said...

முற்றிலும் உண்மை சகோதரர் ரமணி! தன் உடல்நிலையை கவனிக்கத்தவறியதால் தற்போது அதற்கான விலையை இந்த சகோதரர் கொடுத்துக்கொண்டிருப்பதைப்பார்க்கையில் மனம் வேதனையுறுகிறது. கருத்துரைக்கு அன்பு நன்றி!

மனோ சாமிநாதன் said...

விரிவான கருத்துரைக்கு அன்பு நன்றி வல்லி சிம்ஹன்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி சகோதரர் ஸ்ரீராம்! நீங்கள் சொல்வது போல இந்த சந்திப்பு முன்னமேயே நடைபெற்றிருந்தால் விளைவுகள் இன்னும் நல்லவிதமாகக்கூட இருந்திருக்கக்கூடும். என்ன செய்வது!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் ஜம்புலிங்கம்!
தங்கள் பள்ளிக்கால நண்பரின் மன உறுதியைப்பாராட்டியே ஆக வேண்டும். இளம் வயதிலிருந்து பார்வைக்குறைவிற்கு மனதைப்பக்குவப்படுத்தி, அதோடு வாழ பழகிக்கொண்டு விட்டார்.
இவரோ முதிய வயது வரும்பவரை நல்ல பார்வைத்திறனுடன் இருந்தவர். இனி அந்திமக்காலத்தில் பார்வையற்ற‌ வாழ்க்கைக்கு எப்படி தயாராகிக்கொள்வார் என்பது தான் என் வேதனை!


மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி கில்லர்ஜி!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு அன்பு நன்றி தனபாலன்!

வெங்கட் நாகராஜ் said...

வேதனை தான். இப்படியும் மனிதர்கள். வேறென்ன சொல்ல.