Wednesday, 19 August 2020

தெரியாத செய்தியும் செய்யக்கூடாதவையும்!!!

வயது ஏறிக்கொண்டே இருந்தாலும் இன்னும் நாம் அறியாத,விஷயங்கள் கடலளவு இருக்கின்றன. சில ஆச்சரியமான நிகழ்வுகள் அவ்வப்போது நம்மை அசத்துகின்றன. சில சமயங்களில் அவற்றின் காரணங்களும் புரிவதில்லை. இங்கே இரண்டு செய்திகள். முதலாவது செய்தி நான் கேட்டறிந்தது. இரண்டாவது செய்தி நான் படித்தறிந்தது.

முதலாவது செய்தி:

இதைப்பற்றி நான் கேள்விப்பட்டதில்லை.  மிக இலேசாக அறிந்திருக்கிறேன். சமீபத்தில் என் அக்கா மருமகள் சொன்ன விஷயம் இது. அவர்கள் பக்கத்து கவுன்ஸிலர் வீட்டிலிருந்து திருமணப்பத்திரிக்கை கொண்டு வந்து வைத்து அழைத்தார்களாம். யாருக்குத்திருமணம் என்று நினைக்கிறீர்கள்? அவர்கள் வீட்டில் ஒட்டி வளர்ந்திருக்கும் வேப்ப மரத்துக்கும் அரச மரத்துக்கும் திருமணம். ஒவ்வொரு வருடமும் இது மாதிரி பத்திரிக்கை அடித்து கொண்டாடுகிறார்களாம். இப்படி திருமணம் செய்தால் நல்ல மழை வரும் என்பது ஐதீகமாம்! அரச மரத்தை ஆணாக பாவித்து அதற்கு புது வேட்டி சுற்றி வேப்ப மரத்துக்கு பட்டுப்புடவை சுற்றி அந்த வீட்டில் உரிமையாளரே வேப்ப மரத்துக்கு பொட்டு வைத்து தாலி கட்டினாராம். அனைவருக்கும் சாப்பாடு செய்திருக்கிறார்கள். நம் கல்யாணங்களில் செய்வது போல எல்லோரும் பணம் வைத்துக்கொடுத்திருக்கிறார்கள். கிளம்பும்போது வளயல்களும் பூவும் வைத்துக்கொடுத்தார்களாம்.


கோடி கன்னிகாதானங்கள் செய்வதால் கிடைக்கும் புண்ணியத்தை ஒரு அரசு-வேம்பு திருமணம் செய்வதால் பெறலாம். அரச மரமும் வேப்ப மரமும் இணைந்திருப்பது, சிவசக்தியின் வெளிப்பாடு என்கிறார்கள் ஆன்மிகப் பெரியோர். அரசமரம் சிவபெருமான். வேம்பு சக்தி எனப்படும் தேவி. தனக்கு அருகில் வேறெந்த மரத்தையும் வளரவிடாத அரசமரம் வேப்பமரத்தினை மட்டும்  தனக்குள்ளேயே வளர அனுமதிப்பது இந்த விஞ்ஞான உலகிலும் நாம் காணும் இயற்கை அதிசயங்களில் ஒன்று. பொதுவாக, அரசமரத்தையும் வேப்ப மரத்தையும் ஒன்றாக நட்டு வைப்பதில்லை. அவை தானாகவே ஒன்றிணைந்து வளருகின்றன என்று கூகிள் சொல்லுகிறது.

இரண்டாவது செய்தி:

சில சமயங்களில் போகிற போக்கில் நாம் பழக்கம் காரணமாக சில காரியங்களை செய்கிறோம். ஆனால் அப்படி செய்கிற காரியங்கள், பழக்கங்கள் சரியானவை தானா என்று நமக்குத் தெரிவிதில்லை. சமீபத்தில் மாத இதழில் படித்த தகவல் ஒன்று செய்யக்கூடாத செயல்கள் என்று சிலவற்றைக் கூறுகிறது. படித்துப்பாருங்கள்.

செய்யக்கூடாதவைகள்:

1. தலைக்கு வைக்கும் தலயணை மீது அமரக்கூடாது.

2. எண்ணெயிலும் நீரிலும் நம் நிழலைப்பார்க்கக்கூடாது. கோலம் போடக்கூடாது.

3. திருப்பதி, பழனி, திருத்தணி போன்ற திருத்தலங்களுக்குச் சென்றால் அங்கிருந்து நேரடியாக நம் வீட்டுக்குத்தான் வர வேண்டும். இத்தனால் புண்ணியங்கள் சேரும். வேண்டிக்கொண்ட விஷயஙள் நிறைவேறும்.

4. பூஜையறையில் வடக்குப்பார்த்து தெய்வப்படங்களை வைக்கக்கூடாது.

5. எப்போதும் கால், தொடை ஆட்டிக்கொண்டிருக்கக்கூடாது. நம் உடலிலுள்ள சக்தி வீணாகும். நம் மீதான மரியாதையும் மதிப்பும் குறையும்.

6. பாவி பாவி என்றுயாரையும் திட்டக்கூடாது. திட்டப்பட்டவன் பாவம் செய்திருந்தால் திட்டியவன் இன்னும் பாவியாகிறான். திட்டப்பட்டவன் பாவம் செய்யாதவனாக இருந்தால் இரு மடங்கு பாவம் சொன்னவனை சேரும்.

7. உணவைப்பிசைவது, உருட்டுவது, வழிப்பது, திட்டிக்கொண்டும் சிந்திக்கொண்டும் சாப்பிடுவது கூடாது. அடுத்த பிறவியில் உண்ணும் உணவுக்கு பஞ்சம் ஏற்படும். பிச்சை எடுத்தாலும்கூட உணவு கிடைக்காது.

8. துணியை தலையில் சுற்றிக்கொண்டு சாப்பிடக்கூடாது.

9. தீபத்தின் நிழலிலும் மனிதனின் நிழலிலும் தங்கக்கூடாது.

10. காலை, மாலை சந்தியாகால வேளையில் சாப்பிடுவதும் உறங்குவதும் கூடாது.

11. பந்தியில் உணவு பரிமாறும்போது ஒருவருக்கு அதிகமாகவும் ஒருவருக்கு குறைவாகவும் பரிமாறி  ஓரவஞ்சனை செய்யக்கூடாது. இது பட்டினிக்கு வழி வகுக்கும்.

12. உண்ணும்போது விளக்கு அணைந்தால் உண்ணுவதை நிறுத்தி விட வேண்டும். மறுபடியும் வெளிச்சம் வந்ததும் தட்டில் உள்ளதை மட்டுமே சாப்பிட வேண்டும். மறுபடியும் அதில் உணவை சேர்க்கக்கூடாது.


32 comments:

வல்லிசிம்ஹன் said...

அன்பு மனோ,
அருமையான சிந்தனை தூண்டும் பதிவு.
எங்கள் நட்புகளில் ஒரு பெண்ணுக்குத் திருமணம் கை கூடாத போது
இது போல அரசு வேம்பு திருமணம் செய்தார்கள்.
இரண்டு வருடங்களில் நடந்தது.

அரசு வேம்பு ,சில சிவன் கோவில்களில் பார்க்கலாம்.
எங்கள் மைலாப்பூர் அப்பர்சாமி கோவிலிலேயே
இது போல இருக்கிறது,

அடுத்தபடி சொல்லி இருக்கும் செய்திகள்
வழி வழியாகப் பெரியவர்கள் சொல்லி வருவதுதான்,
நல்ல படியாகப் பின் பற்ற வேண்டும். நன்மையே விளையட்டும்.

ஸ்ரீராம். said...

முதல் செய்தி கேள்விப்பட்டிருக்கிறேன்.   எங்கள் பழைய வீட்டின் பின்புறம் அரசமரமும், பக்கவாட்டில் வேப்பமரமும் இருந்தன.  இன்னொருபக்கம் நிலவேம்பு இருந்தது!

செய்யக்கூடாதவை பலவற்றுக்கு விஞ்ஞான பூர்வமாகவும் விளக்கம் சொல்லலாம்.

துரை செல்வராஜூ said...

வேம்பு அரசு கல்யாண வைபவம் இளைய தலைமுறையினருக்கு புதுமையாக இருக்கும்...

சமயத்தில் கேலிக் கூத்தாகவும் நினைக்கக் கூடும்...

அரசும் வேம்பும் சேர்ந்திருக்கும் இடத்தின் இயற்கைச் சூழல் கெட்டு விடக் கூடாது என்று தான் அங்கே பிள்ளையாரைப் பிரதிஷ்டை செய்வது என்பதும் முக்கியமானதாகும்...

ஆனால் நாகரிகம் மிதமிஞ்சிப் போன சமுதாயம் இதையெல்லாம் மூட நம்பிக்கை என்று சொல்லும்...

துரை செல்வராஜூ said...

செய்யக் கூடாதவைகளை ஏதோ பழைய நூல் ஒன்றில் படித்திருக்கிறேன்..

இன்னும் நிறைய உள்ளன...
சமைக்கும்போது செய்யக்கூடாதவை..
சாப்பிடும்போது செய்யக்கூடாதவை - என்று நிறைய இருந்தாலும்

அடிப்படை சுகாதாரத்தில் நாம் கோட்டை விட்டது...

வெளியே சென்று விட்டு வீடு திரும்பும் போது கால் கை கழுவுவது..

தலைக்கு மிஞ்சிப் போனால் குளித்து விட்டு வருவது...

முக்கியமாவை - சிறுநீர் கழித்தால் முழங்கால் வரையிலும் மலம் கழித்தால்
இடுப்பு வரையிலும் கழுவி வருவது..

இதிலிருந்துதான் அடிப்படை சுகாதாரம் ஆரம்பமாகின்றது...

இன்றைக்கு இவ்வாறு செய்வதற்கான சூழலே இல்லை...

அதிலும் பள்ளிப் பிள்ளைகளுக்குக் கூட ஷூ வை மாட்டி விட்டு ஆரோக்கியத்தைப் புறக்கணிக்கும் படிக்குச் செய்தது நவீனக் கல்வி முறை..

அதிலும் பெண்பிள்ளைகளின் நிலையோ பரிதாபம்...

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கும் இனிய கருத்துரைக்கும் அன்பு நன்றி வல்லி சிம்ஹன்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பார்ந்த நன்றி சகோதரர் ஸ்ரீராம்!

மனோ சாமிநாதன் said...

உங்கள் கருத்துக்கள் மிகவும் சிந்திக்க வைக்கின்றன. அதுவும் சுத்தம், சுகாதாரம் எல்லாம் வீட்டிலிருந்து தான் வர வேண்டும். அதையொட்டியே பிள்ளைகளும் பின்பற்றுகிறார்கள்.

அருமையான கருத்துக்களுக்கு அன்பு நன்றி சகோதரர் துரை.செல்வராஜ்!

திண்டுக்கல் தனபாலன் said...

அனைத்து தகவல்களும் அருமை...

சிலவற்றை சுயநலத்திற்காகவும் சொல்லப்பட்டவை...

இருந்தாலும் நம்பிக்கை மேல் நம்பிக்கை வைத்தால், வேறு எந்த நம்பிக்கையும் அவசியமில்லை...

Thulasidharan V Thillaiakathu said...

முதல் செய்தி அறியாத செய்தி.

செய்யக் கூடாதவை என்று சொல்லப்படுவது இப்போதுதான் அறிகிறேன்.

துளசிதரன்

Thulasidharan V Thillaiakathu said...

மனோக்கா முதல் செய்தி கேள்விப்பட்டிருக்கிறேன்.

செய்யக் கூடாதவை என்று சொன்னதற்கு விளக்கங்கள் தெரிந்தால் நன்றாக இருக்குமோ? லாஜிக்கலாகக் கூட.

கீதா

கோமதி அரசு said...

தகவல்கள் பகிர்வு அருமை.

பழைய காலத்தில் சொன்னவை எல்லாம் காரண காரியத்தோடுதான்.

Geetha Sambasivam said...

அரசு, வேம்புக்குத் திருமணம் பல இடங்களில் நடக்கும். நாங்க இருந்த அம்பத்தூரில் பிள்ளையார் கோயிலில் அரசும், வேம்பும் இணைந்து தானாக வளர்ந்தது. அவற்றுக்கு ஒவ்வொரு வருஷமும் திருக்கல்யாணம் செய்வார்கள். அந்தக் காலனிக்காரர்கள் கூடிப் பணம் போட்டுத் திருக்கல்யாணம் செய்து சாப்பாடு போடுவார்கள் அல்லது பிரசாதமாகக் கொடுப்பார்கள். நான் பருப்புத் தேங்காய் செய்து எடுத்துப் போய்க் கொடுத்திருக்கேன். வீட்டில் கல்யாணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் ஆகும் என்பார்கள்.

Geetha Sambasivam said...

1. தலைக்கு வைக்கும் தலையணை மேல் அமர்ந்தால் கடனும் தலைக்கு மேல் ஏறும் என்பார்கள். இதை நான் கல்யாணம் ஆகி வந்தப்போ என் குட்டி மைத்துனனிடம் சொன்னதுக்கு மாமியார், மாமனார் ஆகியோருக்குக் கோபம் வந்துவிட்டது. மைத்துனரிடம் மரியாதை இல்லாமல் பேசுகிறாள் என்றார்கள். ஆனால் இது எங்க பக்கம் கட்டாயமாய்க் கடைப்பிடிப்போம்.

2.எண்ணெயில், நீரில் நம் உருவத்தைப் பார்ப்பது என்பது அபர காரியங்களில் செய்வது. அதில் கோலம் போடுவதும் அப்போது தான். தானம் கொடுக்கும் இரும்புச் சட்டியில் எண்ணெயை ஊற்றிவிட்டு நம் உருவத்தை அதில் பார்த்ததும் தானம் கொடுக்கச் சொல்வார்கள். யாரெல்லாம் கர்த்தாவோ அவர்களும், அவர்கள் குடும்பமும் கட்டாயமாய்ப் பார்க்க வேண்டும்.

3. எனக்குத் தெரிந்து காளஹஸ்திக்குச் சென்றால் தான் நேரே வீட்டுக்கு வரணும் என்பார்கள். மேலும் சில பரிகாரத் தலங்கள் உள்ளன. இங்கே உள்ள திருப்பைஞ்ஞீலிக்குச் சென்றாலும் உடனே வீட்டுக்குத் தான் வரணும்.

4.அப்படி ஒண்ணும் தெரியலை. எங்க வீட்டில் வைச்சிருக்கோம். வடக்கு வாழ வைக்கும் என்பார்களே!

5.ஆமாம், கால் ஆட்டின வீடும், தொடை தட்டின வீடும் சிறப்பை இழக்கும் என்பார்கள். துரியோதனன் தன் தொடையைத் தட்டி அதில் அமர்ந்து கொள் எனத் திரௌபதியைக் கூப்பிட்டதில் தானே பிரச்னை அதிகம் ஆனது. அந்தத் தொடையைப் பிளந்து தானே பீமன் அவனைக் கொன்றான். தொடை தட்டிய வீடு உருப்படாது என வழக்குச் சொல்.

6.பொதுவாக எந்த அசுப வார்த்தைகளையும் அறச் சொற்களையும் சொல்லக் கூடாது என்பார்கள். நம் வீடுகளில் நாலா திக்கிலும் திரிந்து கொண்டிருக்கும் திக் தேவதைகள் அடிக்கடி "ததாஸ்து!" "அப்படியே ஆகட்டும்!" என்று சொல்லிக் கொண்டிருப்பார்களாம், நாம் அறச் சொல்லோ, அசுப வார்த்தையோ சொல்லி அப்போது திக் தேவதைகள் அப்படியே ஆகட்டும் என்று சொல்லிவிட்டால்? இது எங்க தாத்தா அடிக்கடி சொல்லுவது! அம்மாவழித் தாத்தா! முடியாது, மாட்டேன் என்றும் சொல்லக் கூடாது அவரிடம்.

7.உண்மை. உணவை நன்கு பிசைந்து உருட்டுவது அபர காரியத்தில் பிண்டம் வைக்கும்போது தான். வழிப்பதும் அப்போது தான்.

8.அபர காரியத்தின் போது துணியைத் தலையில் சுற்றிக்கொண்டோ, தலையை விரித்துப் போட்டுக் கொண்டோ, சொட்டச் சொட்ட ஈரத்துடனோ சாப்பிடுவார்கள், சாப்பாடு போடுவார்கள். மற்ற நேரங்களில் இது கட்டாயமாய்த் தவிர்க்க வேண்டியது.

9.இது குறித்துச் சரியாத் தெரியாட்டியும் நிழலைப் பார்க்கக் கூடாது என்பார்கள்.

10. ஆமாம், காலை உதயத்தின் போதும் சாப்பிடக் கூடாது என்பார்கள். ஆனால் முக்கியமாக அந்தி, சந்தி வேளை எனப்படும் மாலையும், இரவும் கூடும் நேரம் கட்டாயம் உண்ணக் கூடாது. நரசிம்மர் ஹிரண்யகசிபுவை அந்த நேரம் தான் வயிற்றைக் கிழித்து உயிரை எடுத்தார். அந்த நேரம் உறக்கமும் கூடாது. காலை வேளையில் சூரியோதயத்துக்கு முன்னரே எழுந்திருந்து கை, கால், முகம் கழுவி சுவாமி அறையில் விளக்கு ஏற்றித் தனி வீடாக இருந்தால் வாசல் மாடத்திலும் விளக்கைக் காட்டி வைக்க வேண்டும். புது நாளை வரவேற்கும் விதம்.

11.இதுக்கு என்ன சொல்லுவது? அநேக வீடுகளில் இந்த மாதிரி ஓரவஞ்சனை இப்போதும், அப்போதும், இனி எப்போதும் நடந்தது, நடக்கிறது, நடக்கும். நான் நிறைய அனுபவித்திருக்கிறேன். காஃபி கூட எனக்குக் கொடுக்கையில் தண்ணீரை விளாவிக் கொடுப்பார்கள். கண்ணாலே பார்த்திருக்கேன். :)))) இது அவரவர் மனோநிலையை மாற்றிக் கொள்ள வேண்டிய விஷயம். தானாக வரணும்.

12. ஆமாம், சரிதான். விளக்கில்லாமல் உணவு உண்ணக் கூடாது, அதே போல் உணவு உண்ணும்போது எந்த விளக்கையும் அணைக்கவும் கூடாது! பாவம் சம்பவிக்கும் என்பார்கள்.

Yaathoramani.blogspot.com said...

முன்னது கேள்விப்பட்டது..பின் சொன்னது அனுபவத்தின் அடிப்படையில் காலம் காலமாய் சொல்லப்படுபவை.பின்பற்றுவது அவரவர் நம்பிக்கை சார்ந்தது...

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் இனிய பாராட்டிற்கும் அன்பு நன்றி தனபாலன்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கு அன்பு நன்றி துளசிதரன்! செய்யக்கூடாதவை லிஸ்ட் மிக நீளமானது உண்மையிலேயே. வெள்ளிக்கிழமை என்ற ஒன்றை மட்டும் எடுத்துக்கொண்டாலே, அதில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை என்று நிறைய இருக்கின்றன. மேலே இதைப்பற்றி சகோதரர் துரை.செல்வராஜ் அருமையான விளக்கங்கள் கொடுத்திருக்கிறர்கள்.

மனோ சாமிநாதன் said...

வாருங்கள் கீதா! செய்யக்கூடாதவைகளுக்கு திருமதி. கீதா சாம்பசிவமும், சகோதரர் துரை.செல்வராஜும் இங்கே நிறைய விளக்கங்கள் கொடுத்திருக்கிறார்கள்.

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி கோமதி அரசு! ஒவ்வொரு செயலுக்கும் நம் முன்னோர்கள் நிறைய அர்த்தங்கள் கொடுத்து தான் வாழ்ந்திருக்கிறார்கள்!

மனோ சாமிநாதன் said...

விளக்கங்கள் மிக மிக அருமை கீதா சாம்பசிவம்! மிகவும் அறிவுப்பூர்வமாகவும் சுவாரஸ்யமாகவும்கூட இருக்கிறது அத்தன விளக்கங்களும்! அன்பு நன்றி!

'வடக்குப்பக்கம் பார்த்து கடவுள் படங்கள் வைக்கக்கூடாது'. இதற்கு என் சினேகிதி கொடுத்த விளக்கம்.
" வடக்குப்பார்த்து கடவுள் படங்கள் இருந்தால் நாம் தென் திசை நோக்கி வணங்க வேண்டும். தென் திசை யமன் திசை என்பதால் அப்படி வணங்குதல் கூடாது"

கரந்தை ஜெயக்குமார் said...

வேப்ப மரம் அரச மரம் திருமணம் அறிந்த செய்தி
ஆனால் மற்றைய செய்திகள் அறியாதவை
நன்றி சகோதரி

பிலஹரி:) ) அதிரா said...

மனோ அக்கா நலம்தானே? ஊருக்குத் திரும்பி விட்டீங்களோ? இல்லை இன்னும் தமிழ் நாட்டில்தானோ?

திருமணச் செய்தி அதிர்ச்சி தருகிறது... அது அவர்களின் நம்பிக்கை.

செய்யக்கூடாதவை என நிறைய விசயங்கள் சொல்லியிருக்கிறீங்கள், குறித்து வைக்கிறேன்.

Geetha Sambasivam said...

வடக்கே பார்த்துப்படங்கள், கடவுளரின் விக்ரஹங்கள் வைத்தாலும் நேரடியாக நின்று வணங்காமல் பக்கவாட்டில் நின்றோ அமர்ந்தோ வணங்கலாம். பூஜைகள், வழிபாடுகளில் அப்படித் தான் அமருவோம். கிழக்கு, மேற்காக ஸ்வாமி அலமாரி அமைந்திருந்தால் வடக்கே பார்த்து அமர்ந்து வழிபாடுகள் செய்கிறாப்போல் உட்காரச் சொல்லுவார்கள். ஆனால் நடராஜரும் சரி, ரங்கராஜரும் சரி (ஸ்ரீரங்கம்) தெற்கே தான் பார்த்து இருப்பார்கள்.

வெங்கட் நாகராஜ் said...

அரசு-வேம்பு திருக்கல்யாணம் - நெய்வேலியில் பார்த்ததுண்டு.

மற்ற தகவல்களில் சில வீட்டில் சொல்லக் கேட்டதுண்டு.

ராமலக்ஷ்மி said...

அரசு - வேம்பு திருமணம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

செய்யக் கூடாதவை பட்டியலில் சில புதிதாக அறிகிறேன்.

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் அன்பு நன்றி சகோதரர் கரந்தை ஜெயக்குமார்!

மனோ சாமிநாதன் said...

நலம் தான் அதிரா? என்னாச்சு? ரொம்ப நாட்களாக அதிராவைக்காணோம்?
நான் இன்னும் துபாய் செல்லவில்லை. தஞ்சாவூரில் தான் இன்னும் இருக்கிறேன். செப்டம்பர் முதல் வாரம் தான் துபாய் செல்கிறேன்.

மனோ சாமிநாதன் said...

அழகான விளக்கத்துக்கு அன்பு நன்றி கீதா சாம்பசிவம்! என் சினேகிதியும் இப்படித்தான் பக்கவாட்டில் இருந்து சாமி கும்பிடலாம் என்று சொன்னார்கள்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் இனிய நன்றி ராமலக்ஷ்மி!

Bhanumathy Venkateswaran said...

வேம்புக்கும், அரசுக்கும் திருமணம் செய்து வைப்பதை பற்றி கேள்விப் பட்டிருக்கிறேன். அப்படிப்பட்ட மரங்களின் கீழேதான் விநாயகரை பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்பார்கள். மற்ற நம்பிக்கைகள் குறித்து நானும் படித்திருக்கிறேன். தலையணை மீது உட்கார்ந்தால் கடன் வரும் என்றும், ஆசைப்பட்டது நடக்காது என்றும் கூறுவார்கள். ஒரு வேளை தலையணையை உட்கார பயன்படுத்தினால் அதன் சமமாக இருக்கும் தன்மை மாறிவிடும்,பிற அதையே தலைக்கு வைத்துக் கொண்டால் கழுத்து வலி போன்ற பிரச்சனைகள் வரலாம் என்பதால் சொல்லியிருக்கலாம். வீட்டில் கடவுள் படங்களை எந்த திசை நோக்கி வேண்டுமானாலும் வைக்கலாம், விளக்கு ஏற்றுவது கிழக்கு,மேற்காக இருக்க வேண்டும் என்பார்கள். 

koilpillai said...

மரங்களுக்குள் திருமணம் இரு மனங்களுக்குள் ஏற்படுவதை விட சிறந்ததாகவே இருக்கும் என நினைக்கின்றேன்., மரங்கள் மாறாது, மனங்கள் மாறும்.

சொல்லப்பட்ட அனைத்து செய்திகளும் சிறப்பு. அவற்றுள்: 5, 6, 8 புதிய செய்திகள். கோவிலுக்கு சென்றுவிட்டு நேரடியாக வீட்டிற்கு வருவதுதான் சிறந்தது, இடையில் கடைக்கு போவது, சினிமாவிற்கு போவது, ஓட்டலுக்கு போவது, நண்பர், உறவினர் வீட்டிற்கு போவதெல்லாம் ஆசிர்வாதத்தின் முழுமையை சிதைக்கும் செயல்கள் என அறிந்திருக்கிறேன்.

மனோ சாமிநாதன் said...

வேம்பு ஆல மரங்களின் கீழே வினாயகரை பிரதிஷ்டை செய்தல் மிகவும் சிறப்பு என்று நானும் படித்தேன். இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன்!

மனோ சாமிநாதன் said...

இரு மனங்களை விடவும் இரு மரங்களை இணைந்து செய்யப்படும் திருமணம் சிறப்பு என்று நீங்கள் குறிப்பிட்டிருப்பது சிந்தனைத் தூண்டுகிறது கோவில்பிள்ளை! வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் அன்பு நன்றி!