Thursday, 7 May 2020

முகங்கள்-3!!!

அந்தப் பெரிய மருத்துவமனையின் புகழ்பெற்ற இதய மருத்துவரைப்பார்ப்பதற்காக காத்துக்கொண்டிருந்தேன். நல்ல கூட்டம். மருத்துவர் வரிசைப்படி சில நோயாளிகளைப்பார்ப்பதும் நடுநடுவே எக்கோ கார்டியோக்ராம்,  டி.எம்.டி செய்ய அருகிலிருந்த வேறொரு அறைக்கு செல்வதுமாக இருந்தார். மணி மதியம் ஒன்றைத் தாண்டியது, திடீரென்று மருத்துவர் வெளியே சென்றார். அருகிலிருந்த வயதான பெண்மணி என் தேடுதலைப்பார்த்து ‘ மருத்துவர் வெளியே போயிருக்கிறாராம். வருவதற்கு 2 மணியாகுமாம்’ என்றார்.

நான் அப்போது தான் அந்தப் பெண்மணியை சரியாக கவனித்தேன். நெற்றியில் குங்குமம் இல்லாமல், சற்றே வெள்ளி நரைகளுடன் முகத்தில் கவலையுடன் காணப்பட்டார் அவர். அருகே ஒரு இளம் பெண். மென்னகையுடன் என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

‘ ஏம்மா, உங்களுக்கு உடம்பு ஏதும் சரியில்லையா?’ என்று கேட்டேன்.
அவர் அதே கவலையுடன் விவரித்தார்.

‘ எனக்கு ரொம்ப நாட்களாக நெஞ்சில் வலியிருக்கிறதம்மா. ‘பளிச் பளிச்சென்று ‘ சில சமயம் அதிகமாகவே வலிக்கும். இப்போதும் அப்படியே தானிருக்கிறதம்மா. ‘

‘ இதற்கு முன்னால் வேறு இதய மருத்துவரை பார்த்திருக்கவில்லையா?’ என்று நான் கேட்டதும், ‘  ஆறு மாதம் முன்பு தான் பார்த்தேம்மா. இதயத்தில் எந்தப்பிரச்சினையும் இல்லை என்று சொன்னார்கள். ஆனால் இந்த வலி வரும்போது பயமாகி விடுகிறது. அதனால் தான் இந்த டாக்டர் பெரிய இதய நிபுணர் என்று சொன்னார்கள். அவரிடமும் காட்டி விடுவோம் என்று வந்தேன்..’ என்று சொன்னவர் தன் அருகிலிருந்த பெண்ணை சுட்டிக்காட்டி, ‘ இவளுக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணி விட்டால் அப்புறம் கவலையில்லை. அதனால் தான் என் உடம்பை இப்படியெல்லாம் கவனித்துப்பார்க்க வேண்டியிருக்கிறது. ‘ என்றார் பெருமூச்சு விட்டபடி.

‘வேறு குழந்தைகள் இல்லையா?’ என்று நான் கேட்டேன்.

‘ இவளுக்கு மூத்தவளுக்கு நாலு வருஷங்களுக்கு முன் தான் கல்யாணம் பண்ணிக்கொடுத்தேன். என் கணவர் இருந்தவரைக்கும் பிரச்சினையில்லாமல் இருந்தது அவர் தாசில்தாராக இருந்தார். இவளையும் எம்.பி.ஏ படிக்க வைத்து விட்டேன். வேலைக்குப்போகிறாள்..’ என்றார்.

நான் ஆறுதலாக பேசியபடி அவருக்கு தைரியம் சொன்னேன்.
‘ கவலைப்படாதீர்கள். முன்பேயே உங்களுக்கு இதயத்தில் பாதிப்புகளில்லை என்று சொல்லியிருக்கிறார்கள். நிச்சயம் இந்த டாக்டரும் அதைத்தான் சொல்லப்போகிறார், பாருங்கள். எனக்கென்னவோ நீங்கள் தினமும் சாப்பிடும் உணவில் தான் பிரச்சினையிருக்கிறது என்று தோன்றுகிறது. நீங்கள் அடிக்கடி பருப்பு வகைகள், உருளைக்கிழங்கு, வாழைக்காய் இதெல்லாம் சாப்பிடுவீர்களா’ என்று கேட்டேன்.

அவர் பதில் சொல்லுமுன்பே அந்த பெண் ‘ ஆமாம் ஆண்ட்டி, அம்மாவுக்கு இதெல்லாம் ரொம்ப இஷ்டம். அதுவும் தினமும் சாம்பார் செய்யணும். கடலைப்பருப்பு சுண்டல் ரொம்ப இஷ்டம்!’ என்று சொல்லி சிரித்தது.

‘ என்னம்மா, அதெல்லாம் சாப்பிட்டால் இப்படியாம்மா நெஞ்சு வலிக்கும்?’ என்று அந்த அம்மா வெள்ளந்தியாகக் கேட்டார்.

‘ நமக்கு வயதாகிறதல்லவா? உடம்பு முன்போல இதையெல்லாம் அவ்வளவு சீக்கிரத்தில் ஜீரணம் பண்ணாது. அத்தனையும் வாயுவாக உடம்பில் அப்படியே தங்கும்’ என்று நானும் சிரித்தேன்.

அப்புறம் சொன்னேன், ’ டாக்டர் தன் சோதனைகளில் உங்களுக்கு ஒன்றும் இல்லையென்று சொல்லி விட்டால், வீட்டுக்குப்போனதும் இந்த உணவுப்பொருள்களையெல்லாம் நிறைய குறைத்து விடுங்கள். தினமும் 3 ஏலக்காய்களை அவை சக்கையாக போகுமளவு மென்று அதன் சாறை விழுங்குங்கள். இந்த வலி ஓடிப்போய் விடும். தினமும் அரை ஸ்பூன் சுக்குப்பொடி போட்ட மோர் இரண்டு வேளைகளாவது குடியுங்கள். ‘

அப்புறமும் அரை மணி நேரத்திற்கு அந்த இதய மருத்துவர் வராததால் அந்த அம்மாவிடம் சொல்லிக்கொண்டு சாப்பிடச் சென்றேன். திரும்பிய போது அவர்கள் சோதனைகளை முடித்து விட்டு மீண்டும் டாக்டரை பார்க்க அமர்ந்திருந்தார்கள்.

என்னைப்பார்த்ததுமே என் கைகளைப்பிடித்துக்கொண்டு, ‘ தெய்வம் போல வந்து நல்ல வார்த்தைகள் சொன்னீர்கள் அம்மா. எனக்கு இதயத்தில் எந்தப்பிரச்சினையுமில்லை என்று இவரும் சொல்லி விட்டார்’ என்றார்.

‘ அப்புறமென்ன, வீட்டிற்கு போனதும் நிம்மதியாகத்தூங்குங்கள். நான் சொன்னபடி தினமும் ஏலக்காய், சுக்கு எடுத்துக்கொள்ளுங்கள்’ என்றேன்.



அவர் என் கைகளை விடாமல், ‘அம்மா, உங்களிடம் ஒரு விஷயம் மறைத்து விட்டேன். எனக்கு ஒரு மகன் இருக்கிறானம்மா. அவன் தான் மூத்தவன். ஒரு பெண்ணைக் காதலித்தவன் அவளையே கல்யாணம் பண்ணிக்கொண்டு எங்கோ போய் விட்டான். எங்கிருக்கிறான் என்பதும் எனக்குத்தெரியாது’ என்றார்.

அவர் விழிகளோரம் கண்ணீர் எட்டிப்பார்த்தது.

அந்தக்கண்ணீரைப்பார்த்ததும் எனக்கு உடனே பதில் சொல்ல முடியவில்லை. எத்தனை வலி, எத்தனை ஏக்கம் அந்தக்கண்களில்!! இளைய மகளுக்கான பொறுப்பை தைரியமாக தோள்களில் சுமப்பவருக்கு, ஆசையாய் வளர்த்த மகன் கட்டறுத்துக்கொண்டு போய் எங்கோ இருந்தாலும் அந்த துரோகத்தை இன்னும் விழுங்க முடியவில்லை!

‘ விடுங்கம்மா. உங்களை அடியோடு மறந்து சென்றவரைப்பற்றி ஏன் நினைத்து கலங்குகிறீர்கள்? உங்கள் பெண் தான் மகனுக்கு நிகராக உங்களை இத்தனை அன்போடு கவனித்துக்கொள்கிறாளே?’ என்று ஆறுதலாக சொல்ல முயன்றேன்.

‘ பத்து மாதம் சுமந்து பெற்ற பிள்ளையம்மா அவன்! ‘

அந்த தாயின் ஏக்கத்தைப்பார்த்தபோது பதில் சொல்ல என்னால் முடியவில்லை.

நான் தஞ்சை வந்த பிறகு, அவரிடமிருந்து நான்கு நாட்கள் கழித்து எனக்கு ஃபோன் வந்தது.

‘ அம்மா, நீங்கள் சொன்ன வைத்தியத்தில் எனக்கு நெஞ்சு வலியே இப்போதெல்லாம் இல்லையம்மா’ என்று சந்தோஷத்துடன் பேசினார்.

மனசில் நிறைவு ஏற்பட்டாலும் அந்தக் கலங்கிய விழிகள் தான் என் முன்னே தெரிந்தன!

19 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நெகிழ்ந்தேன் அம்மா...

priyasaki said...

வாசிக்கும்போதே நெஞ்சை அடைக்கிறது. பெத்தமனம் பித்து பிள்ளை மனம் கல்லு என்பது தான் ஞாப்கம் வருகிறது. நீங்க தக்க சமயத்தில் நல்ல அறிவுரை சொல்லியிருக்கிறீங்க அக்கா. நெஞ்சுவலி என்றாலே எல்லாருக்கும் பயம்தான்.

ஸ்ரீராம். said...

நெகிழ வைக்கும் அனுபவங்கள். பாவம் அந்தத் தாய்.

கரந்தை ஜெயக்குமார் said...

மகிழ்ந்தேன் நெகிழ்ந்தேன் சகோதரி

Geetha Sambasivam said...

பாவம் அந்தத் தாய். பெற்ற மனம் பித்தாகத் துடிக்கிறது. அதன் காரணமாகக் கூட நெஞ்சு வலி அதிகம் ஆகி இருக்கலாம். எப்படியோ குறைந்தது சந்தோஷம். வயதானவர்களுக்குப் புரோட்டின் தேவை என்று எங்க மருமகள் எங்களைப் பருப்பு வகைகள் அதிகம் சாப்பிடச் சொல்வாள். நாங்கள் மென்மையாக மறுத்துவிடுவோம்.

கோமதி அரசு said...

அன்பான ஆறுதலான உங்கள் வார்த்தையும் பரிவான வைத்தியக் குறிப்பும் அந்த அம்மாவின் மனதை திறந்து பேச வைத்து விட்டது.

தாயின் அன்பை புரிந்து கொண்டு வாருவார் அந்த பையன்.


அருமையான வைத்தியக்குறிப்பு .

வெங்கட் நாகராஜ் said...

நெகிழ்ச்சி.

தாயின் அன்பு புரியாத மகன் - என்ன சொல்ல?

அவருக்கு உடல்நலம் நன்றாகவே இருக்கட்டும். எனது பிரார்த்தனைகளும்.

வல்லிசிம்ஹன் said...

துபாயில் உங்களுடன் உறையாடியது நினைவில் இருக்கு.
அன்பு மனோ மா. இப்பொழுது எங்கே இருக்கிறீர்கள்.

இதய நிபுணருக்காகக் காத்திருந்த காலங்கள் மந்தில் வந்து போகின்றன.
நம்மூரில் தான் எத்தனி வகையான காத்திருப்புகள்.!
அந்தப் பாச அன்னைக்கும் நீங்கள்
சொன்ன வைத்தியக் குறிப்பை நானும் எடுத்துக் கொள்கிறேன்.
சுக்குமோரும், ஏலக்காயும். மிக நன்றி மனோமா.
பிள்ளைகள் தரும் ஏமாற்றத்தை அந்தத் தாயால் தாங்க முடியவில்லை.

நல்ல ஆறுதல் கிடைக்கட்டும்.
அன்பு அணைப்புகளோடு வல்லிம்மா.

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் இடுகையை ரசித்ததற்கும் அன்பு நன்றி தனபாலன்!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி பிரியசகி!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் இனிய நன்றி சகோதரர் ஸ்ரீராம்!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார்!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி கீதா சாம்பசிவம்!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி கோமதி அரசு!
இது மிக அருமையானதொரு வைத்தியக்குறிப்பு என்பது உண்மை தான்! நான் இந்த ஏலக்காய் வைத்தியத்தை பல முறை பலரிடமும் சொல்லி அவர்களுக்கெல்லாம் நெஞ்சு வலி சரியாகி இருக்கிறது!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி வெங்கட்!

மனோ சாமிநாதன் said...

வாருங்கள் வல்லிசிம்ஹன்! துபாயில் நாம் பேசியது எனக்கும் நினைவில் உள்ளது. கணவர் உணவக உரிமையாளர் என்பதால் இப்போதும் துபாயில் தான் இருக்கிறேன். இந்த கொரோனா சமயத்தில், வீட்டில் ஒரு பகுதியில் கட்டுமானம் செய்ய வந்து நானும் என் கணவரும் தஞ்சையில் மாட்டிக்கொண்டிருக்கிறோம்!
அந்த ஏலக்காய் வைத்தியம் மிகுந்த பலன் கொடுக்கும். நெஞ்செரிச்சல், கனம் இதற்குமே இது சிறந்த தீர்வு. பலரும் இதனால் பயனடைந்திருக்கிறார்கள்!

Bhanumathy Venkateswaran said...

எளிய, உபயோகமான மருத்துவ குறிப்புக்கு நன்றி. 

மாதேவி said...

நெகிழ்ச்சியான சம்பவம்.

இராய செல்லப்பா said...

"நெற்றியில் குங்குமம் இல்லாமல், சற்றே வெள்ளி நரைகளுடன்...." இருந்தவரின் புகைப்படத்தில் குங்குமம் இருக்கிறதே!..

(2) உங்கள் ஏலக்காய் வைத்தியத்தை நானும் கடைப்பிடிக்கிறேன். எப்படியென்றால், மாலையிலோ அல்லது இரவிலோ நான் ப்ரெட், பன் முதலியவை சாப்பிட்டால், ராத்திரி முழுவதும் நெஞ்செரிச்சல் விடாமல் துன்புறுத்தும். (பகலில் சாப்பிட்டால் வராது.) ஒரு சித்த வைத்தியரிடம் சொன்னபோது, இரண்டே இரண்டு ஏலக்காய்களை வாயிலிட்டு சுவைத்துக்கொண்டே இருக்கச் சொன்னார். கடைசியில் சக்கையையும் விழுங்கிவிடச் சொன்னார். அதைப் பின்பற்றுகிறேன். இப்போது அந்தப் பிரச்சினை தீர்ந்துவிட்டது.