Thursday, 30 April 2020

மீண்ட சொர்க்கம்!

ஒவ்வொரு நாளும் விடியும்போது கொரோனா பற்றி கருத்துக்களும் காமெடியும் பாடல்களும் சிந்தனைகளும் காணொலிகளும் வாட்ஸ் அப் மூலம் ஏராளமாக வந்து கொண்டேயிருக்கின்றன. சில உண்மையிலேயே சிந்திக்க வைக்கின்றன! சில கலங்கவும் வைக்கின்றன. அதில் ஒரு குரல் என்னை மிகவும் ஈர்த்ததுடன் சுவாரஸ்யமாக கவனிக்கவும் வைத்தது. அந்தக்குரல் சொன்னதெல்லாம் மறுக்க முடியாத உண்மையும் கூட! அந்த நிதர்சனமான கருத்துக்களை இங்கே அப்படியே எழுதியிருக்கிறேன்! படித்துப்பாருங்கள்!



படுத்ததும் விடிந்து விட்ட நாட்களை எண்ணி  எத்தனை நாள் வருந்தியிருப்போம்!
விடிந்தும் விடியாமல் எழுந்து வந்து அடுப்பங்கரையில் சமைத்துக்கொண்டிருப்போம்!
காலை உணவைக்கூட கால நேரம் தெரியாமல் சாப்பிட்டு தொலைத்திருப்போம்!
அவதியாக கார், பைக், பேருந்து என ஏதாவதொன்றில் விடிந்தும் விடியாத கனவுகளுடன் பயணம் செய்து கொண்டிருந்திருப்போம்!
கூட்ட நெரிசல், டிராஃபிக் ஜாம் என அனுதினமும் ஏதாவது ஒன்றிற்காக காத்துக்கிடந்திருந்திருப்போம்!
எதிர்பாராத விபத்து, திடீர் மரணம் என ஏதாவதொன்றில் மனம் உடைந்து போயிருந்திருப்போம்!
வேலை முடிந்ததும் வீட்டை நோக்கி ஓடிக்கொண்டிருந்திருப்போம்!
குழந்தை, குடும்பம், பெற்றோர் என கால்கள் ஓய்வு கொள்ளும். மீண்டும் இரவு உணவு என வேலை ஓடிக்கொண்டிருக்கும்.

நீங்களே நினைத்தாலும் கனவிலும் கிடைக்காத வாய்ப்பை காலம் கொடுத்திருக்கிறது என நினைத்துக்கொள்ளுங்கள்!

அலாரம் வைத்து எழுந்து கொள்ளத்தேவையில்லை.

காலை சூரியன் எழுந்த பின்னும் அவதியின்றி அமர்ந்திருக்கிறோம்.

சாலைகளில் புகை கக்கும் வாகனமில்லை.

பகல் வேளையில் நிசப்தம் நிறைந்த சாலைகளைப் பார்க்க முடிகிறது.

அடிதடி, குத்து, வெட்டு குறைந்திருக்கிறது.

மதுக்கடை மூடிக்கிடக்கிறது.

நகைக்கடைகள் பூட்டியே கிடக்கின்றன.

ஜவுளிக்கடைகளின் விளம்பரங்களையே பார்க்க முடிவதில்லை.

நிரம்பி வழியும் மாநகர பேருந்துகளில்லை. படிகளில் தொங்கிய படி பயணம் செய்ய யாரும் இல்லை. 

தெருவெல்லாம் சுத்தமாக இருக்கிறது. 

சாக்கடைகள் தூர்வாரப்பட்டுகின்றன.

அரசியல்வாதிகள் நல்லது செய்ய நினைக்கிறார்கள்.

அடுத்தவன் பொருள் மேல் ஆசை வருவதில்லை.

எது வேண்டுமென்றாலும் வீட்டிலேயே சமைத்துக்கொள்கிறோம்.
தேவையில்லாமல் எதையும் வீணடிப்பதில்லை.
காவல் துறையை மதிக்கக்கற்றுக்கொண்டிருக்கிறோம்.
மருத்துவரை தெய்வமாக பார்க்க முடிந்திருக்கிறது.
செவிலியரை சகோதரியாக ஏற்றுக்கொண்டிருக்கிறோம்.
சுற்றியிருப்போர் யாராவது இருக்க வேண்டுமென்று வேண்டிக்கொண்டிருக்கிறோம்.
சுத்தமாக இருக்கப் பழகியிருக்கிறோம்.
சிட்டுக்குருவிகள் சுதந்திரமாக பறந்து திரிகின்றன.
பறவைகள் சப்தம் பலமாய் கேட்கின்றன.
பொழுது சாயும்போது எந்த இரைச்சலுமில்லை.
நீ எப்படி வருவாயோ என்ற பயம் உன் குடும்பத்திற்கு இல்லை.
போதை தேடி யாரும் செல்வதேயில்லை.
சிகிரெட் இருந்தும் தேடி அலைய மனமில்லை.
தெருவில் எச்சில் துப்ப யோசிக்க யோசிக்கிறோம்.
வெளி நாட்டிலிருந்து வந்ததை வெளியில் சொல்ல யோசிக்கிறோம்.
அகந்தை அழிந்து போயிருக்கிறது.
தான் என்ற கர்வம் தளர்ந்து போயிருக்கிறது.
சிறு வயது ஞாபகங்களை அசை போட துவங்கியிருக்கிறோம்.
தொட்டதற்கெல்லாம் மருத்துவமனை போவதை நிறுத்தியிருக்கிறோம்.
சிரிக்கக்கற்றுகொண்டிருக்கிறோம்.
சிந்திக்கப்பழகியிருக்கிறோம்.
மற்றவர்கள் வலி புரிந்திருக்கிறது.
மனசு நோகாமல் பேச பழகியிருக்கிறோம்.

இது மட்டும் போதாது.

அப்பாவிடம் னம் விட்டுப்பேசுங்கள்.
அம்மாவின் மடியில் தலை சாய்ந்து உறங்குங்கள்.
பிள்ளைகளின் தேவைகள் அறிந்து சொல்லிக்கொடுங்கள்.
மனைவியின் மனதுக்கு நெருக்கமாக இருங்கள்.
கணவரின் கைகள் பிடித்து நம்பிக்கை கொடுங்கள்.
பிரிந்த நண்பர்களின் நம்பர்களை தேடி எடுங்கள்.
மன்னிப்பு கேட்க நினைப்பவர்களிடம் கேட்டு விடுங்கள்.
யாரையாவது மன்னிக்க வேண்டுமென்று நினைத்தால் மன்னித்து விடுங்கள்.
ஒருவேளை விரைவில் உலகம் அழிந்து போவதாயிருந்தால் எப்படி உறவுகளை நேசித்திருப்பீர்களோ, அப்படி நேசித்துப்பாருங்கள்.
பக்கத்து வீட்டுக்காரர்களிடம் பகை தெரியாது.
எதிர் வீட்டுக்காரர்களிடம் ஏமாற்றம் புலப்படாது.
எல்லோரும் நிம்மதியாக இருக்கட்டும் என மனம் நினைக்கும்.
வஞ்சம் தோன்றாது.
வாழ வேண்டும் என்ற ஆசை மீண்டிருக்கும்.
வாழ்ந்து காட்ட வாய்ப்பு கிடைத்தது என்று மனம் சொல்லும்.
மீண்டும் தொடங்குங்கள்.
இங்கு எந்த தவறை செய்தீர்களோ, அதை திருத்திக்கொள்ளுங்கள்.
வீட்டில் இருப்பதற்கு வெறுப்பாக உள்ளது என்று புலம்பாதீர்கள்.
வீடே இல்லாதவர்களை நினைத்துப்பாருங்கள்.
நீங்கள் யார் என்று உங்களுக்கே உணர்த்துவதற்காக ஒரு வைரஸ் தேவைப்பட்டிருக்கிறது அன்பர்களே!



11 comments:

Avargal Unmaigal said...

நல்லதொரு பகிர்வு

வெங்கட் நாகராஜ் said...

இயற்கை நமக்கு நல்லதொரு வாய்ப்பைத் தந்திருக்கிறது.

நம்மை நாம் உணர்ந்து கொள்ள ஒரு வாய்ப்பு - நம் இல்லத்தினருடன் சேர்ந்து இருக்க வாய்ப்பு - நம் நட்புகளையும், சொந்தங்களையும் புரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு என பல வாய்ப்புகள். நல்லதாகவே யோசிப்போம்.

எனக்கும் இந்த வாட்ஸப் செய்தி வந்தது.

நலமே விளையட்டும் - அது மட்டுமே இப்போதைய தேவை.

ஸ்ரீராம். said...

அருமை. நெகிழ வைக்கும் நிஜங்கள்

திண்டுக்கல் தனபாலன் said...

கிட்டத்தட்ட பலமுறை வந்துகொண்டே இருக்கிறது - வெளிவராத பல உண்மைகள்...

துரை செல்வராஜூ said...

உண்மையில் மீண்ட சொர்க்கம் தான்..

இனியாவது நலம் வாழட்டும்...

கோமதி அரசு said...

நல்லதொரு பகிர்வு.
எல்லாம் நலமடைந்த பின்பும் அன்பும் ஆதர்வௌம் தொடரட்டும்.
வாழக் வையகம் வாழ்க வளமுடன்

கரந்தை ஜெயக்குமார் said...

கொரோனா நம்மை நாமே உணர்ந்து கொள்ள ஒரு மாபெரும் வாய்ப்பினை அளித்திருக்கிறது

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

சிறப்பான கருத்துகள் கேட்டிலும் உண்டோர் உறுதி என்பது போல சில நல்லவைகளும் நடக்கின்றன.
நான் கிருஷ்ணதேவராயன் வித்தியாசமான சரித்திரக் கதை-ரா.கி.ரங்கராஜன்

Bhanumathy Venkateswaran said...

Blessing in disguise எனலாமா?

மாதேவி said...

நல்ல பகிர்வு.நம்மை உணர்ந்து கொள்ள.

இயற்கை வளங்களை பாதுகாத்தால் அது நம்மைக்காக்கும்.'இந்திரா காந்தி இயற்கையோடு இயைந்த வாழ்வு' நண்பர் ஒருவரின் புத்தகம் .என் ஓய்வு நேரத்தில் இப்பொழுது என் கையில்.

இராய செல்லப்பா said...

ஆனாலும் ரொம்பத்தான் மகிழ்ந்து போகிறீர்கள். எல்லாம் மாயைதான்! ஊரடங்கை நீக்கியவுடன் பார்க்கத் தானே போகிறீர்கள் ! பழைய மந்தை வாழ்வுதான் திரும்பப் போகிறது. மனிதன் வரலாற்றிலிருந்து எப்போதாவது பாடம் கற்றுக் கொண்டிருக்கிறானா? ஆனால் நம்பிக்கையை இழக்கவேண்டாம்.