வாழ்க்கையில் நிறைய விசித்திரங்களைப்பார்க்கிறோம். சில சமயங்களில் அவற்றின் அர்த்தங்கள் புரிவதேயில்லை. இதுவும் அந்த மாதிரியான ஒரு விசித்திரம்.
35 வருடங்களுக்கு மேலாக எங்களுக்குப்பழக்கமானவர் அவர். அவரின் மனைவியைப்பற்றித்தான் இந்தக்கதை. திருமணம் ஆன போதே எல்லா தரப்பிலும் பிடித்து தான் திருமணம் ஆனது. ஆனால் நாகரீகம் அறியாத, அதிகம் படிக்காத, எதற்கும் குதர்க்கமாக பேசுகிற மனைவியால் இருவருக்குள்ளும் சச்சரவுகள் அதிகமாய் தொடர்ந்தன. இதில் இவரின் அம்மாவும் இந்த மாதிரி மருமகளுடன் நான் இருக்க மாட்டேனென்று அடிக்கடி வாதம் செய்ய பிரச்சினைகள் அதிகமானாலும் இல்லறமும் குடும்ப வாழ்க்கையும் தொடர்ந்து கொண்டு தான் இருந்தது. முக்கிய காரணம் அது கிராமம். விவாக ரத்து என்ற சொல்லுக்கே பயப்பட்ட காலம் அது. அதனால் இந்த இல்லறம் கசப்புகளுடன் தொடர்ந்து கொண்டிருந்தது. வருடங்கள் பறந்தன. அம்மா மறைந்தார். பெண்களுக்கு திருமணமாயின. இவர் மனைவிக்கு சர்க்கரை நோய் வந்தது. அதிக சர்க்கரையினால் உடல் நிலையில் நிறைய பாதிப்புகள். இவர் மனைவியை நன்றாக செலவழித்து கவனித்தார். ஆனாலும் அவர் மனைவி எந்த மாத்திரைகளையும் சாப்பிடாமல் அப்படியே வைத்திருப்பார். காலையில் 10 மணிக்கு எழுந்து தட்டு நிறைய பழையமுது சாப்பிடுவார். இந்த விஷயத்தில் கணவருடைய சொல்லையோ அல்லது வேறு. யாரும் எதுவும் சொன்னாலும் மதிக்க மாட்டார். மதிய சாப்பாடு மாலை 4 மணிக்குத்தான். நண்பர் அதனால் கிராமத்து டீக்கடை சென்று தன் சாப்பாட்டை பார்த்துக்கொள்வார். இதனால் வீட்டு நிலைமை வெளியில் தெரிந்த அவமானம் வேறு நண்பர் மனதுக்குள் புழுங்குவார். அவர் மனைவிக்கு மாத்திரைகளுடன் இன்சுலினும் கூடியது. அப்படியும் இரத்த சர்க்கரை அளவு 400க்கும் கீழே வரவில்லை. அதனாலெல்லாம் அவர் கவலைப்படவில்லை. நண்பருக்கும் அவர் மனைவிக்கும் பேச்சு வார்த்தை குறைந்து ஒரு நாள் நின்றே போனது.
ஒரு நாள் அவர் மனைவி இரத்த வாந்தி எடுக்க ஆரம்பித்ததும் மருத்துவமனைக்கு எல்லோரும் ஓடினார்கள். கல்லீரலில் 4 ஓட்டைகள் என்று சொல்லி மருத்துவமனையில் அதை அடைத்தார்கள். ஒழுங்காக மருந்துகளை உட்கொண்டால் 5 வருடங்கள் உயிருடன் இருக்கலாம் என்ற அறிவுறுத்தலுடன் திரும்ப வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.
மறுபடியும் அதே கதை தான். நண்பர் மருந்து மாத்திரைகள் வாங்கிக்குவிப்பதும் வெளியில் சாப்பிடுவதுமாக இருக்க, அவர் மனைவி வழக்கம்போல மருந்துகளை ஒழுங்காக எடுக்காமலும் நேரம் தவறிய சாப்பாடுமாக இருப்பதும் தொடர்ந்தது. அப்படியும் 4 வருடங்கள் எந்த விதப்பிரச்சினையுமில்லாமல் ஓடி விட்டன. நாலரை வருடங்கள் முடிந்த நிலையில் சென்ற மாதம் மறுபடியும் இரத்த வாந்தி எடுத்தார். இந்த முறை மிக அதிகம். நாங்கள் அவர் பிழைக்க மாட்டாரென்றே நினைத்தோம். செய்தி தொலைபேசி மூலம் நண்பர் சொன்னபோது வயிறு கலங்கி விட்டது.
மறுபடியும் அதே மருத்துவர் கல்லீரலில் ஏற்பட்ட 3 ஓட்டைகளை அடைத்தார். இந்த முறை 3 வருடங்கள் பிழைத்திருந்தாலே அதிகம் என்று எச்சரித்தும் சொல்லி விட்டார்.
நண்பரின் மனைவியும் வீட்டுக்கு நலமாக திரும்பி விட்டார்.
கணவனும் மனைவியும் பேச்சு வார்த்தையில்லாமலேயே கணவர் செலவு செய்ய, மனைவி நலமாகி விட்டார். வாழ்க்கையின் மிகப்பெரிய ஆச்சரியமாக இருந்தது எனக்கு.
எத்தனையோ பேர் தங்கள் உடல் நலத்தை கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொள்ளுகிறார்கள். கணவன் மனைவியையும் மனைவி கணவனையும் அன்புடனும் அக்கறையுடனும் கவனிக்கிறார்கள்! ஆனாலும் நிறைய பேருக்கு நோய் தணிவதில்லை. மரணங்களும் நிகழ்கின்றன. ஆனால் மருந்துகளும் ஒழுங்காக எடுக்காமல் சரியான உணவுமின்றி, இந்த அளவு பேராபத்திலிருந்து நண்பரின் மனைவி மீண்டது எப்படி? அவர் அதிர்ஷ்டக்காரர் என்று சொல்வதா? அல்லது கொடுத்து வைத்தவர் என்று சொல்லுவதா? இல்லை, அவரின் ஆயுசு கெட்டி என்று சொல்வதா? இதன் பொருள் உண்மையிலேயே விளங்கவில்லை எனக்கு!
9 comments:
ஆறுதல் என்பதை விட அன்பான உரையாடல், எதையும் சாதிக்கும்...
சில புதிர்களை விடுவிக்க முடியாது.
இது போன ஜென்மத்து பந்தம் போல!
மனதுக்குக் கஸ்டமாக இருக்கிறது அந்தக் குடும்பக்கதை படிக்க, இதனால ஆருக்கு என்ன லாபம், கடசிவரை வாழ்க்கையை வீணடித்து விட்டார்களே.. பரிய பாரதூரமாக பிரச்சனை எனில் பிரியலாம், இப்படி அற்பத்தனமான விஷயங்களால்.. இருவரும் ஒற்றுமை இல்லாமல் இருப்பது நினைக்க கஸ்டமாகத்தான் இருக்குது.. ஏதோ முற்பிறவிப்பலன் போலும்.
இப்படியும் சிலர். என்ன சொல்ல...
ஆச்சர்யம்தான். அவரவர்க்கு அவரவர் விதி!
கருத்துரை அளித்த அனைவருக்கும் அன்பு நன்றி!!
நமக்கு பதில் தெரியாத எத்தனையோ கேள்விகளில் இதுவும் ஒன்று.
மனைவியின் அறியாமைதான் .
Simple.avarai piditha kashtam ennum vidalai
Post a Comment