Thursday, 23 January 2020

முத்துக்குவியல்-55!!!!

அறிவிப்பு முத்து:
சென்ற பதிவுடன் நான் 400 பதிவுகளை முடித்து விட்டதை இப்போது தான் கவனித்தேன். கொஞ்சம் ஆச்சரியமாகவே இருந்தது. முக்கிய காரணங்களால் தமிழ்நாட்டுக்கும் அரபு நாட்டிற்கும் தொடர்ந்த பிரயாணங்கள் ஏற்பட்டதால் பிரயாணங்களையொட்டி மிகுந்த அலைச்சல்கள், உடல்நலக்குறைவுகள் எனத்தொடர்ந்து கொண்டேயிருந்ததில் மனம் விரும்பிய அளவு வலைத்தளத்தில் அதிக நேரம் என்னால் ஒதுக்க முடியவில்லை. அப்படியும் நானூறா என்று ஆச்சரியமாக இருக்கிறது. இனி அதிக நேரம் வலைத்தளத்தில் செலவு செய்ய வேண்டுமென்று நினைத்திருக்கிறேன். பார்க்கலாம். எனக்கு பக்க பலமாக நல்லதொரு பின்னூட்டங்கள் தொடர்ந்து கொடுத்து என் உற்சாகத்திற்கு காரணமாக இருக்கும் வலையுலக அன்புள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றி!

இசை முத்து:

 இப்போதெல்லாம் மிகத்திறமையான இளைஞர்கள் வயலின் வழியாக, புல்லாங்குழல் வழியாக, குரல்வழியாக சில சமயங்களில் ஃப்யூஷன் இசை வழியாக அருமையான ராகங்களையும் அதற்கான அற்புதமான பாடல்களையும் பதிவேற்றி அசத்தி வருகிறார்கள். இந்த ஃப்யூஷன் பாடல் அப்படித்தான் நம்மை அசத்துகிறது. இந்த பாடல் சந்திரகெளன்ஸ் ராகத்தில் வருகிறது. தர்பாரி கானடா போல வட இந்திய ராகம் இது. இதை இரவு ராகம் என்பார்கள். மனதை மயங்கச் செய்யும், சில சமயம் ஒரு விதமான வேதனை இருக்கும். கடவுளுக்கு ஆராதிக்கும் ராகம் என்றும் சொல்லப்படுகிறது.கேட்டு ரசியுங்கள்!!!அசத்தும் முத்து:

கேரளாவில்  ஆலப்புழை  மாவட்டத்தில்  உள்ள செட்டிகுலங்கார தேவி  கோயிலில் 11 அடி  உயரத்தில்  ஒரு விளக்கு  இருக்கிறது.  இந்த விளக்கு  1000  திரிகள் ஏற்றக்கூடிய  வகையில்  13 அடுக்கு வரிசைகளுடன்   அமைந்துள்ளது.  1500 கிலோ எடையுள்ள  கன்மெட்டல்  என்ற  உலோகத்தால் ஆன இந்த விளக்குதான் இந்தியக் கோயில்  விளக்குகளில்  மிகப்பெரியது.
இரண்டு பொற்கொல்லர்கள் 17 துணை ஆட்கள் உதவியுடன் 18 மாதங்களில் இந்த விளக்கை செய்து முடித்துள்ளார்கள். இதன் அகலம் 6.8 அடி. இதன் மிகச்சிறிய அடுக்கில் 108 திரிகள் ஏற்ற முடியும்.

எச்சரிக்கை முத்து:

தரமற்ற தண்ணீர் விற்பனை செய்தால்:

தண்ணீர் கான்களில் விற்பனை செய்யும் நிறுவனத்தின் பெயர், முகவரி, தயாரிக்கப்பட்ட தேதி, ஐ.எஸ்.ஐ முத்திரை, உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையத்தின் உரிமம் உள்ளிட்டவை கண்டிப்பாக அச்சடிக்கப்பட வேன்டும். அவ்வாறின்றியும் தரமின்றியும் தண்ணீர் வினியோகிக்கபடுவது தெரிய வந்தால் 94440 42322 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு புகார் அனுப்பலாம். விசாரணையில் விதிமீறலில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு சீல் வைப்பது மற்றும் சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் பாயும்.

ரசித்த முத்து:

இயக்கம் சிறப்புற தானம்,
பேராசை இல்லா சேமிப்பு,
ஆணவம் இல்லா அறிவு,
ஏமாளி ஆகாத இரக்கக்குணம்,
பூமியை வணங்கும் பக்தி,
மரங்களை நண்பனாக்கும் யுக்தி,
வாழ்வின் வளத்திற்கான அற்புத சக்தி!!!

19 comments:

ஸ்ரீராம். said...

நானூறு தரமான பதிவுகளைக்கொடுத்து வருகிறீர்கள்.  அது மேலும் மேலும் வளர வாழ்த்துகள்.

ராகத்துக்கான விளக்கம் அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

பார்த்தால் மின்விளக்குபோல இருக்கிறது!   திரியே ஏற்றலாமா?

ரசித்த முத்தை நானும் ரசித்தேன்.

ராமலக்ஷ்மி said...

நல்ல தொகுப்பு.

400 பதிவுகள் நிறைவு செய்து தொடரும் உங்கள் பயணம் மேலும் சிறக்கட்டுமாக. நல்வாழ்த்துகள்!

ஆயிரம் தீப விளக்கும் விவரங்களும் பிரமிக்க வைக்கின்றன. மிக அழகு.

KILLERGEE Devakottai said...

நானூறு பதிவுகளை கடந்தமைக்கு வாழ்த்துகள் சகோ.

முத்துகள் அனைத்தும் நன்று இசை கேட்டேன் அருமை.

priyasaki said...

அசத்தலான, பிரம்மாண்டமான விளக்கு. பாடல் இனிமையாக இருக்கு.இவ்ராகத்தில் தமிழ் பாடல் இருக்கா. கவிவரிகளை நானும் ரசித்தேன். அருமையான முத்துக்கள்.

திண்டுக்கல் தனபாலன் said...

அனைத்தும் அற்புதமான முத்துக்கள்...

கோமதி அரசு said...

அனைத்து முத்துக்களும் அருமை.
பாடல் கேட்டேன் அருமை.
வாழ்த்துக்கள்.

Avargal Unmaigal said...

உங்கள் பயணம் தொடரட்டும்...... கருத்துக்கள் வருகிறதோ இல்லையோ தொடருங்கள் சில நேரங்களில் கருத்துக்கள் இட நேரமில்லை என்பது என்னை பொறுத்தவரை உண்மைவாழ்த்துக்கள்.

மனோ சாமிநாதன் said...
This comment has been removed by the author.
மனோ சாமிநாதன் said...

வாழ்த்துக்களுக்கும் இனிய பாராட்டுக்களுக்கும் அன்பு நன்றி சகோதரர் ஸ்ரீராம்!
இந்த விளக்கில் திரிகள் ஏற்றப்படுவதாகத்தான் படித்தேன். இப்போது நீங்கள் சொல்வதைப்பார்த்தால் எனக்கும் சந்தேகம் வருகிறது. எப்படி அத்தனை உயரத்தில் ஏறி ஏற்ற முடியுமென்று தெரியவில்லை!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் நல்வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி ராமலக்ஷ்மி!

மனோ சாமிநாதன் said...

இனிய வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் அன்பு நன்றி கில்லர்ஜி!!

மனோ சாமிநாதன் said...

ரசித்து இனிமையாய் பாராட்டி எழுதியதற்கு அன்பு நன்றி பிரியசகி! இந்த சந்திரகெளன்ஸ் ராகத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இருக்கிறது. அது ' மாலைப்பொழுதின் மயக்கத்திலே கனவு கண்டேன் தோழி ' பாடல்! கேட்டிருக்கிறீர்கள் தானே? திருமதி பி.சுசீலாவின் தேன் குரல் அபப்டியே நம்மை மயக்க வைக்கும் எப்போது கேட்டாலும்! இலேசான வேதனையில், சோகத்தில் மனம் ஆழ்ந்து விடும்! இன்னொரு பாடலும் இருக்கிறது. இளையராஜா இசையில் ' வைதேகி காத்திருந்தாள் ' படத்தில் வரும் ' அழகு மலர் ஆட ' பாடலும் இதே ராகம் தான்!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி தனபாலன்!

மனோ சாமிநாதன் said...

ரசித்து பாராட்டியதற்கும் வாழ்த்துக்கள் சொன்னதற்கும் அன்பு நன்றி கோமதி அரசு!

மனோ சாமிநாதன் said...

நல்வார்த்தைகளால் என்னை உற்சாகப்படுத்தி இனிய வாழ்த்துக்கள் சொன்னதற்கு அன்பு நன்றி மதுரை தமிழன்!!!

பிஞ்சு அப்பாவி அதிரா:) said...

அருமையான தகவல்...
வாழ்த்துக்கள் மனோ அக்கா... நான் இன்னும் 400 ஐத் தொடவில்லையென நினைக்கிறேன்.

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி அதிரா!

வெங்கட் நாகராஜ் said...

400 பதிவுகள் - மனம் நிறைந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும். மேலும் பல பதிவுகள் தொடர்ந்து எழுதிட எனது வாழ்த்துகள்.

இசை முத்து - ரசித்தேன். தொகுப்பில் உள்ள மற்ற முத்துகளும் சிறப்பு.

தொடரட்டும் பதிவுகள்.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

அத்தனையும் நல் முத்துக்கள். படித்து ரசித்தேன். ஆயிரம் விளக்கு ஆச்சரியம் அளிக்கும் சுவையான முத்து. தங்கள் பணிகளுக்கிடையே இத்தனைப்பதிவுகள் எழுதி சாதித்திருப்பது மகிழ்வான விஷயம். தங்களின் 400ஆவது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். முத்தான இப்பதிவின் பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.