Thursday 12 December 2019

இதயத்திலிருந்து!!!


மருத்துவர் திரு. BRJ. கண்ணன் ஒரு இதய மருத்துவர், அதுவும் குழந்தைகளின் இதய மருத்துவர் என்பது தான் அவரது மிகப்பெரிய அடையாளம். 25 வருடங்களுக்கு மேலான சிகிச்சை அனுபவங்களுடன் பல மேற்படிப்புகள், ஆராய்ச்சிக்கட்டுரைகள் செய்திருப்பவர். பல‌ விருதுகளைப்பெற்றவர். எளிமையான வாழ்க்கை முறை உடையவர். மதுரை வடமலையான் மருத்துவ மனையில் நாள் முழுதும் சிகிச்சை செய்து வருகிறார். 

ஆனால் இவற்றையெல்லாம் தாண்டி, பொதுமக்களுக்கு ஒரு முக்கியமான, அர்த்தமுள்ள மனவியல் சம்பந்தப்பட்ட சிகிச்சையும் செய்து வருகிறார். அது சர்க்கரை நோயாளிகளுக்கான ஆலோசனை. அரிசியையும் கோதுமையுமான கார்போஹைட்ரேட் உணவுகளை மன வலிமையுடன் நிறுத்தினாலே சர்க்கரை நோய் தானாகவே கட்டுப்பாட்டுக்குள் வந்து விடும் என்பதை வலியுறுத்தி வருகிறார். அவரைப்பார்க்க வரும் நோயாளிகளுக்கு இது சம்பந்தமான குறிப்புகள் அடங்கிய காகிதங்களையும் தருகிறார். இது தவிர, ' இதயத்திலிருந்து' என்ற பல அனுபவங்களைக்கொண்ட குறிப்புகள் அடங்கிய புதினத்தையும் எழுதியிருக்கிறார்.
இதற்கு அணிந்துரை எழுதியிருக்கும் எழுத்தாளர் வரலொட்டி ரங்கசாமி, ' இதைப்படிக்கும்போது உங்கள் கண்களிலிருந்து பொங்கும் கண்ணீர் ஒரு சக்தி வாய்ந்த கிருமிநாசினி. இதயத்தில் மண்டியிருக்கும் அன்பின்மை என்ற கிருமியை அது அடையாளம் தெரியாமல் அழித்து விடும்' என்று சொல்லியிருப்பது இந்த மருத்துவருக்கு ஒரு எழுத்தாளர் சூட்டியிருக்கும் மகுடம் என்று சொல்லத்தோன்றுகிறது.

ஒரு புகழ்பெற்ற மருத்துவர் ஒரு மனிதாபிமானியாக, மழை பெய்தால் உடனே சைக்கிளில் அல்லது நடையில் அந்த மழையை அனுபவித்துக்கொண்டே செல்லும் ரசனையுடையவராக, ' அன்பான மனைவியே ஒரு மனிதனின் நோய் தீர்க்கும் மருந்து ' என்று சொல்லும் அற்புதமான கணவராக, பெருமாளின் பக்தராக பல அவதாரங்களை எடுக்கும் ஒரு மனிதராக இந்த நூலில் காட்சியளிக்கிறார்.
மனித நேயம் என்பது மதங்களுக்கும் மருத்துவத்திற்கும் அப்பாற்பட்டது என்பதை பிரார்த்தனை என்ற சிறுகதை அக்கதையிலுள்ள அர்ச்சகருக்குள் மட்டுமல்ல, நமக்குள்ளும் அழுத்தமாக பதிய வைக்கிறது. எந்த உறவினாலும் திருத்த முடியாத ஒரு தவறான பழக்கத்தை ஒரு சிறு குழந்தை தன் செய்கையால் திருத்தியபோது தந்தைக்கு பிரணவ மந்திரம் சொல்லி தகப்பன்சாமியாக ஆன அந்த மகனை நினைத்து சிலிர்த்துப்போகிறார் ' தெய்வ மகன் ' என்ற சிறுகதையில்! ஒரு நோயாளியைக் காப்பாற்ற ஒரு மருத்துவர் எப்படியெல்லாம் பசி மறந்து, தூக்கம் மறந்து போராடுகிறார் என்பதையும் கடைசியில் அத்தனை முயற்சியையும் மீறி அந்த மனிதன் இறக்க நேரிடும்போது அந்த மருத்துவர் அடைகின்ற மனவேதனை எத்தகையது என்பதையும் அவை எதையுமே உணராத மனிதர்கள் அந்த மருத்துவரைப்பற்றி தவறாகப் பேசும்போது ஏற்படும் துயரத்தையும் விவரித்திருப்பதைப்படித்தபோது ஒரு மருத்துவர் எந்த மாதிரி சோதனைகளையெல்லாம் தாங்க வேண்டியிருக்கிறது என்பது தெள்ளத்தெளிவாக நமக்குப்புரிகிறது.  இப்படி ஒவ்வொரு சிறுகதையும் ஒவ்வொரு அனுபவத்தை சொல்லி நம்மை சில சமயங்களில் தெளிவடைய வைக்கிறது. சில சமயங்களில் மனதை தாக்குகிறது. சில சமயங்களில் நெகிழ வைக்கிறது.
அவசியம் அனைவரும் படிக்க வேண்டிய ஒரு புத்தகம் இது.

14 comments:

ஸ்ரீராம். said...

அருமையான அறிமுகம்.

Geetha Sambasivam said...

Thank You for the review. Will try to read.

கோமதி அரசு said...

புத்தக விமர்சனம் படிக்க ஆவலை துண்டுகிறது.

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லதொரு புத்தக அறிமுகத்திற்கு நன்றி...

கரந்தை ஜெயக்குமார் said...

பயனுள்ள நூலை அறிமுகம் செய்திருக்கிறீர்கள்
நன்றி

Thenammai Lakshmanan said...

புதிய நூல். புதிய தகவல். அருமையான விமர்சனம். :)

kowsy said...

புத்தகத்தை அற்புதமாக விமர்சித்திருக்கின்றீர்கள். இந்த நூலுக்கு அணிந்துரை எழுதிய வரலோட்டி ரங்கசாமி எழுதியிருப்பதும் இந்த நூலை அளப்பதற்க்குப் போதுமானது. நன்றி

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டுதலுக்கு அன்பு நன்றி சகோதரர் ஸ்ரீராம்!

மனோ சாமிநாதன் said...

Thanks a lot for the nice feedback, Mrs.Geetha Sambasivam!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி கோமதி அரசு!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி தனபாலன்!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டுக்கு அன்பு நன்றி சகோதரர் கரந்தை ஜெயக்குமார்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் பாராட்டி எழுதிய கருத்துரைக்கும் அன்பு நன்றி தேனம்மை!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் இனிய பாராட்டிற்கும் அன்பு நன்றி கெளஸி!