Wednesday 7 August 2019

ஒரு விபத்தும் சில ஆச்சரியங்களும்!

முதலில் விபத்து பற்றி எழுதுகிறேன். கம்போடியாவில் ஒரு கோவிலைப்பார்க்க ந‌டந்து கொண்டிருந்த போது அந்த தளம் சரியில்லாத பாதையில் எது தடுக்கியது என்று தெரியவில்லை, திடீரென்று ஒன்றும் புரியாமல் மின்னல் வேகத்தில் தலை குப்புற விழுந்தேன். அந்த ஒரு கணம் விழும்போதே, பிடித்துக்கொள்ள எதுவும் அருகில் இல்லாமல் நான் தவித்தது மட்டும் தான் நினைவில் உள்ளது. சற்று அருகில் நடந்து வந்து கொண்டிருந்த என் கணவரும் வழிகாட்டியும் ஓடி வந்து என்னைத்தூக்கிய போது தான் கால் பயங்கரமாக வலித்தது புரிந்தது. இடது கால் கட்டை விரல் ச‌ற்று பெயர்ந்து முழுவதுமாக வீங்க ஆரம்பித்திருந்தது. அதற்குள் கோவில் அருகே வந்து விட்டதால் நான் வெளியே அமர்ந்து கொண்டு, என் கணவரையும் வழிகாட்டியையும் கோவிலைப்பார்க்க சொல்லி அனுப்பி விட்டேன். எப்போதும் கையில் வைத்திருக்கும் மூவ் ஆயின்மெண்ட் எடுத்து தடவிக்கொண்டு, குளிர்ந்த travel wipe-ஐ எடுத்து ஒத்தடம் கொடுத்ததில் வலி சற்று குறைந்தது. மறுபடியும் காரில் ஏறி உணவுண்ண தமிழ் உணவகத்திற்குச் சென்றோம். அங்கே, உணவகத்தின் உரிமையாளரிடம் காயத்தைக்காட்டி, சிகிச்சைக்கு எங்கே போவது என்று விசாரித்தோம்.

நாங்கள் இருந்தது கம்போடியாவின் பழமையான, புராதன நகரமான சியாம் ரீப். இங்கு கம்போடிய மொழி பேசும் ம்ருத்துவர் தான் கிடைப்பார் என்றும் அது நமக்குப்புரியாது என்றும் ஆங்கிலம் பேசும் மருத்துவமனைகள் கிடையாது என்றும் கூறி முதல் உதவிக்காக ஆங்கிலம் பேசினால் புரிந்து கொள்ளக்கூடிய ஒரு பார்மஸிக்கு அனுப்பி வைத்தார். நாங்கள் மறுநாள் வியட்நாம் நாட்டின் புகழ்பெற்ற ஹோஸ்மின் சிட்டி நகருக்கு செல்வதால் அங்கு ஆங்கிலம் பேசினால் புரிந்து கொள்ளக்கூடிய மருத்துவமனைகள் இருப்பதாகவும் மேலும் தகவல்கள் சொன்னார். அவர் சொன்னபடியே, பார்மஸி சென்று முதல் உதவி பெற்றுக்கொண்டு எங்கள் ஹோட்டலுக்கு திரும்பினோம். தொலைபேசியில் பேசியபோது எங்கள் மகனும் வியட்நாமில் மருத்துவ உதவி பெறுவது தான் நல்லது என்று சொல்ல, மறுநாள் கம்போடியாவில் சக்கர நாற்காலியின் உதவியுடன் விமானம் ஏறினோம்.



அன்று மாலை ஹோஸிமின் நகரின் ஒரு பொது மருத்துவமனைக்குச் சென்றோம். விபத்து பற்றி தெளிவாகக் கேட்டறிந்த அவர்களின் கனிவு என்னை அசத்தியது. பல்லைக்கடிக்கும் ஆங்கிலத்தில் மருத்துவப்பெண்மணியும் ஊழியர்களும் பேசி விசாரித்ததும் என் அனைத்துத் தகவல்களையும் அறிந்த விதமும் எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை. பின் எக்ஸ்ரே எடுக்க அந்தப்பிரிவின் தலமை மருத்துவரே வந்தார். என்னை அவரே சக்கர நாற்காலியில் அமர வைத்து அவரே தள்ளிக்கொண்டு சென்றார். விரலை பல முறை பல விதத்தில் எடுக்க வேண்டியிருந்த‌தால் ஒரு சில முறைகள் அதற்காக sorry கேட்டுக்கொண்டார். மறுபடியும் அவரே சக்கர நாற்காலியில் அமர வைத்து மருத்துவரின் அறைக்கு வெளியே விட்டுச் சென்றார்.

எக்ஸ்ரே என் விரலுக்கு எந்த வித பாதிப்புமில்லை என்று சொன்னதால்  மருத்துவர் எழுதிக்கொடுத்த மாத்திரை, மருந்துகள் கொண்ட பேப்பருடன் அங்கிருந்த பெண் ஊழியர் இன்னொரு அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார். நாங்கள் பணத்தை கட்டியதும் எல்லா விபரங்களும் அடங்கிய ஒரு ஃபைல், மற்றும் பணம் கட்டிய ரசீது, மருத்துவரின் என்னைப்பற்றிய குறிப்பு அனைத்தும் தந்தார்கள். இதெல்லாம் கொடுத்து இன்ஷூரன்ஸ் claim பண்ணலாம் என்று அவர்கள் சொன்னதும் ஏற்ப‌ட்ட வியப்பு இலேசில் குறையவில்லை!

எக்ஸ்ரே ஒன்றுமில்லை என்றாலும் இந்த விபத்து நடந்து இன்று 8 மாதங்கள் கடந்து விட்ட போதிலும், என் இடது கால் கட்டை விரலில் இன்னும் கொஞ்சம் வலி, மரத்துப்போன தன்மை இருந்து கொண்டு தானிருக்கிறது!

எந்த நாட்டிற்கு சென்றாலும் தேவையான மருந்துகள் அடங்கிய ஒரு மெடிக்கல் கிட் எடுத்துச் செல்ல வேண்டியது மிக அவசியம். நான் எப்போதுமே உள்ளூர் சென்றாலும்கூட இந்த மெடிக்கல் கிட் எடுத்துச் செல்வதுடன் எனக்கான மாத்திரைகள் இரண்டு செட் எடுத்து செல்வேன். ஒன்று கைப்பையிலும் மற்றது பெட்டியிலும் இருக்கும். ஒன்று தொலைந்தாலும் இன்னொன்று காப்பாற்றும்! ஆனால் இந்த அனுபவத்தில் எந்த ஊர் சென்றாலும் உள்ளூரோ, வெளியூரோ, அங்கிருக்கும் இந்திய மருத்துவர்கள் லிஸ்ட், ஆங்கிலம் அறிந்த மருத்துவ மனைகள் விபரங்களும் எடுத்துச்செல்ல வேன்டும் என்பதை புரிய வைத்தது! [ சில சமயங்களில் கூகிள் உதவி கூட கிடைக்காது!]

கடந்த 4 மாதங்களாக இருமலும் தொண்டைப்புண்ணுமாக இருந்ததால் தஞ்சையில் ஒரு மருத்துவரிடம் காண்பித்துக்கொண்டதில் அவர் எக்ஸ்ரே எடுக்கச் சொன்னார். முன்பு போலில்லாமல் எக்ஸ்ரே ஃபிலிம் 10 நிமிடங்களிலேயே கிடைத்து விட்டது. மருத்துவர் பார்த்து விட்டு நுரையீரலில் சளி கொஞ்சம் தங்கியிருப்பதாகச் சொல்லி  மருந்து மாத்திரைகள் எழுதிக்கொடுத்தார். என் உறவினரான மற்றொரு டாக்டர் அந்த எக்ஸ்ரேயைப்பார்த்து விட்டு, 'எக்ஸ்ரே அவ்வளவு க்ளியராக இல்லையே' என்று சொல்லி மேலே பேசவில்லை. மறுபடியும் நான் எப்போதும் செல்லும் பெண் மருத்துவரிட்ம் காண்பித்தபோது, அவர் உடனேயே ' எக்ஸ்ரே சரியாக இல்லை. நீங்கள் 4 மாதங்களுக்குப்பின் அங்கேயே [ நான் வசித்து வரும் துபாய் நகரில் ] ஒரு எக்ஸ்ரே எடுத்து விடுங்கள்' என்றார்! எனக்கு அதிர்ச்சியில் ஒன்றும் புரியவில்லை.

ஒரு நிமிடம்  வியட்நாம் அனுபவம் மனத்திரையில் ஓடியது. இத்தனைக்கும் பல போர்களால் பாதிக்கப்பட்டு, இப்போது தான் அடி மட்டத்திலிருந்து முன்னேறி வரும் ஒரு ஏழை நாடு அது. ஊரும் மொழியும் புரியாத இடத்தில்கூட கண்கூடாகப்பார்த்த தொழில் மரியாதை நம் பிரம்மாண்டமான இந்தியாவில் இல்லையே!

22 comments:

வெங்கட் நாகராஜ் said...

உங்கள் அனுபவம் அறிந்தோம்.

இந்தியாவில் மருத்துவத் துறை இன்னும் நிறைய முன்னேற வேண்டும். பணம் சம்பாதிக்கும் இடங்களாக மருத்துவமனைகள் மாறிக் கொண்டு இருக்கின்றன என்று தான் சொல்ல வேண்டும். படிப்பதற்கு நிறைய பணம் செலவு செய்ய வேண்டியிருக்கிறது எனச் சொல்லும் சிலரைப் பார்க்க முடிகிறது.

விரைவில் உங்கள் கால் வலி சரியாக எனது பிரார்த்தனைகள்.

Geetha Sambasivam said...

ஆச்சரியம் தான். இத்தனைக்கும் இந்தியாவில் தமிழ்நாடு தான் மருத்துவத் தலைநகரம் எனச் சொல்லுவதுண்டு. இப்படியான மருத்துவர்களும் இருக்கிறார்கள் என்பது தெரிந்தாலும் அந்த அனுபவம் நமக்கே வந்து வாய்க்கிறது. ஒரு வழியாகத் தொண்டை அழற்சியும் பிரச்னையும் குறைந்ததா இல்லையா?

KILLERGEE Devakottai said...

மருத்துவரே சக்கர நாற்காலியை தள்ளிக் கொண்டு வந்தது ஆச்சர்யமாக இருக்கிறது.

Thulasidharan V Thillaiakathu said...

மனோ அக்கா பயணக் கட்டுரை ஒன்றில் நீங்க கால் அடிபட்டு நடக்க முடியாமல் மேலே போகாமல் கணவர் மட்டும் போயிருந்ததாகச் சொன்ன நினைவு இருக்கு.

என்ன நல்ல மருத்துவம் இல்லையா. பொதுவாகவே நான் அறிந்தவரையில் வெளிநாட்டில் பப்ளிக் மருத்துவமனையிலும் கூட மிகவும் அன்புடன் நடத்துகிறார்க்ள் மட்டுமல்ல மருத்துவரே வீச் சேர் தள்ளிக் கொண்டு போவது எல்லாம்நடக்கும்.

இன்னும் சரியாகலையா அந்தக் கால்?

இப்போது இருமல் தொண்டைப்புண் சரியாக ஆச்சா இல்லையா? பிரச்சனை எதுவும் இல்லாமல் இருக்க பிரார்த்தனைகள்

உடல்நலம் பார்த்துக்கோங்க அக்கா

கீதா

திண்டுக்கல் தனபாலன் said...

மனிதநேயம்...

ஆனால் இங்கு...?

கரந்தை ஜெயக்குமார் said...

ஒரு நிமிடம் வியட்நாம் அனுபவம் மனத்திரையில் ஓடியது. இத்தனைக்கும் பல போர்களால் பாதிக்கப்பட்டு, இப்போது தான் அடி மட்டத்திலிருந்து முன்னேறி வரும் ஒரு ஏழை நாடு அது. ஊரும் மொழியும் புரியாத இடத்தில்கூட கண்கூடாகப்பார்த்த தொழில் மரியாதை நம் பிரம்மாண்டமான இந்தியாவில் இல்லையே!

அங்கு இருப்பது, மருத்துவமும் மனித நேயமும்

நம் நாட்டில் மிஞ்சி இருப்பதோ வணிகம் மட்டும்தான்

ஸ்ரீராம். said...

வெளிநாட்டு அனுபவம் ஆச்சர்யமான அனுபவம். அதுபோன்ற அணுகுமுறைகளை இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் பார்ப்பது கடினம்.

ஸ்ரீராம். said...

தற்சமயம் நல்ல எக்ஸ்ரே எடுத்துப் பார்த்திருப்பீர்கள். நலம்தானே?

இராய செல்லப்பா said...

டாக்டர்களை விடுங்கள், நமது நர்சுகளுக்குக் கூட மனிதாபிமானம் கிடையாது என்பதை அனைவரும் அறிவர். ஐ சி யு -வில் இருந்தாலும் இவர்கள் கூட்டம்கூடி சம்சாரிக்கிறார்களே அன்றி நோயாளியைக் கவனித்து நேரத்திற்கு மருந்து கொடுப்பதில்லை. ஆம்புலன்ஸ் ஊழியர்களும் ஸ்ட் ரெச்சரில் நோயாளியை ஏற்றுபவர்களும் அப்படியே அரக்கத்தனமாக நடந்துகொள்பவர்களே. இதையெல்லாம் மீறித்தான் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

கோமதி அரசு said...

//வெளியூரோ, அங்கிருக்கும் இந்திய மருத்துவர்கள் லிஸ்ட், ஆங்கிலம் அறிந்த மருத்துவ மனைகள் விபரங்களும் எடுத்துச்செல்ல வேன்டும் என்பதை புரிய வைத்தது! //

நீங்கள் சொல்வது சரிதான்.
அங்கு உள்ள மருத்துவர்களையும், இங்கு உள்ளவர்ளையும் ஒப்பிட்டு பார்க்காமல் இருக்க முடியவில்லை.

இப்போது நலமா நீங்கள்?

மறுபடியும் விரலில் இடித்துக் கொள்ளாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
எனக்கு கால் கட்டை விரல் இடித்துக் கொண்டது இன்னும் சரியாக மாட்டேன் என்கிறது.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

பதிவின் நிறைவில் இந்தியாவில் காணப்படுகின்ற யதார்த்தத்தைக் கூறிவிட்டீர்கள்.

மனோ சாமிநாதன் said...

பிரார்த்தனைக்கு அன்பு நன்றி வெங்கட்!
பணம் செலவழிப்பது அதிகமாக‌ இருந்தாலும்கூட, அதற்கேற்ற வைத்தியமாவது நல்லவிதமாக இருக்க வேண்டுமல்லவா? அந்த நம்பிக்கையில் கூட சில மருத்துவ மனைகளுக்கு செல்ல முடிவதில்லை!

மனோ சாமிநாதன் said...

விசாரிப்பிற்கு அன்பு நன்றி கீதா சாம்பசிவம்!
தஞ்சையிலிருந்து இங்கு [ துபாய் ] வரும்போதே மறுபடியும் தொண்டை அழற்சி திரும்பவும் வந்து விட்டது. மருந்து மாத்திரைகளில் தான் திரும்பவும் இருக்கிறேன்.பாதிப்பிற்குள்ளான‌
விரல் இன்னும் முழுமையாக சரியாகவில்லை!

எத்தனையோ விதமான மருத்துவர்களை நானும் அவ்வப்போது பார்த்துகொண்டிருக்கின்றேன்! ஒரு சமயம், ஒரு மருத்துவர், [ மிக அதிகமாகப்படித்த, மிகத்திறைமையான மருத்துவர் ] ' எல்லோரிடம் நான் 100 ரூ தான் வாங்குகிறேன். நீங்கள் வெளி நாட்டில் இருப்பதால் உங்களிடம் இரு மடங்காக வாங்கலாம்' என்று சிரித்துக்கொண்டே சொன்னார். என்னால் தான் ஒப்புக்காகக்கூட சிரிக்க முடியவில்லை! இரு மடங்காக அவர் கேட்ட பணத்தைக் கொடுத்து விட்டுத்தான் வெளியில் வந்தேன்! இத்தனைக்கும் அவர் தூரத்து உறவினர் வேறு! 10 வருடங்களுக்கு முன் நடந்த விஷயம் இது. இன்றைக்கு அவர் சொந்தமாகவே மருத்துவமனை கட்டி விட்டார்!

மனோ சாமிநாதன் said...

எனக்கும் மருத்துவரே இந்த அளவு பணிவாகவும் கனிவாகவும் இருந்தது ஆச்சரியமாகத்தானிருந்தது கில்லர்ஜி!

priyasaki said...

நாங்களும் வியட்நாம் பயணம் மெற்கொண்டோம் அக்கா.கட்ந்தவருட இறுதியில். உண்மையில் நல்ல மனிதர்கள். பணிவாக இருக்கிறார்கள். உங்க அனுபவ பதிவு அருமை. இப்போது நலம்தானே அக்கா. அலட்சியமாக இருக்காது மருத்துவத்தினை தொடரவும்.

மனோ சாமிநாதன் said...

இன்னும் அவ்வப்போது அந்த விரல் வலிக்கத்தான் செய்கிறது. விரலுக்கான பயிற்சி செய்து வருகிறேன். தங்கள் அக்கறைக்கும் பிரார்த்தனைகளுக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி கீதா!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி தனபாலன்!

மனோ சாமிநாதன் said...

இப்போதெல்லாம் வணிகம் 75 சதவிகிதமும் மனித‌ நேயம் 25 சதவிகிதமுமாக மருத்துவமனைகள் மாறிவிட்டன சகோதரர் ஜெயக்குமார்! மனிதர்கள் தான் திருந்த வேண்டும்!
கருத்துரைக்கு அன்பு நன்றி!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் விசாரிப்பிற்கும் அன்பு நன்றி சகோதரர் ஸ்ரீராம்!
இன்னும் இங்கு எக்ஸ்ரே எடுத்துப்பார்க்கவில்லை.ரேடியாலஜி சம்பந்தப்பட்டது என்பதால் இன்னும் சில‌ மாதங்கள் கழித்து பார்க்கச் சொல்லியுள்ளார் என் குடும்ப மருத்துவர்.

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் செல்லப்பா! நம் ஊரில் செவிலியரின் அணுகுமுறைகளையும் பார்த்து பார்த்து சலித்து விட்டது மனது. ராண்டம் பார்க்கிறேன் என்று சாப்பிட்டதும் சர்க்கரையை சோதித்து விட்டு அதிகமாக இருப்பதாக ரிப்போர்ட் கொடுக்கிறார்கள். நல்ல செவிலியர் நல்ல மருத்துவர் அமைய இன்றைக்கெல்லாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும்!

மனோ சாமிநாதன் said...

விசாரிப்பிற்கு அன்பு நன்றி கோமதி அரசு! கால் விரல் இடித்துக்கொண்டதற்கு எக்ஸ்ரே பார்த்து விட்டீர்களா? எனக்கும் ஒர் முறை கால் விரல் சோஃபாவில் இடித்து வலித்துக்கொண்டிருந்தது. இடித்தது தானே என்று 15 நாட்கள் அப்படியே மருந்து தடவிக்கொண்டு விட்டு விட்டேன். அப்புறமும் வலி இருந்ததால் மருத்துவரிடம் சென்று எக்ஸ்ரே பார்த்ததில் hairline fracture என்று தெரிந்தது!

Anuprem said...

அசோ ...

படிக்கும் போதே மனம் பதற செய்கிறது மா..ஆனாலும் அங்கு கிடைத்த கவனிப்பை நினைக்கும் போது மகிழ்ச்சியே ..

தற்பொழுது எங்கள் நண்பர் ஒருவர் கம்போடியா சென்று படங்கள் அனுப்பும் போது தங்களை நினைத்துக் கொண்டேன் ...உங்கள் வழி ஏற்கனவே கண்டு இருந்ததால் அவை எல்லாம் புதிதாக தெரியவில்லை ...

இங்கு இருக்கும் மருத்துவம் ...நல்ல மருத்துவரும் , மருத்துவமனையும் கிடைக்க புண்ணியம் செய்து இருக்க வேண்டும் என்னும் வருத்தமான நிலை ..