Sunday 8 July 2018

முழங்கால் வலியும் சில தீர்வுகளும்!!!


இன்றைக்கு உலகளவில் ஏராளமானோர் மூட்டு வலியால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

நம் உடலையே தாங்கும் கால்களின் மூட்டுக்களில் பிரச்சினை வந்தால் பொறுத்துக்கொள்ள முடியாத வலி ஏற்படும். இது முதுமையில் தான் வரும் என்பதெல்லாம் இப்போது பொய்த்து விட்டது. நடைமுறை பழக்க வழக்கங்களாலும் கால்களுக்கு சரியான பயிற்சியில்லாததாலும் இளம் வயதினருக்குக்கூட இப்போதெல்லாம் மூட்டு வலி வருகிறது. பாரம்ப‌ரியத்தன்மையும் ஒரு காரணம். அசைவம் சாப்பிடுவதாலும் மூட்டுக்கள் பாதிப்படைகின்றன என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். மூட்டுவலிக்கு முக்கியமான   காரணம் அதில் ஏற்படும் தேய்மானம். இந்த மூட்டுகளில் வழுவழுப்பான திசுக்களாலான   குருத்தெலும்பின் வழவழப்புத்தன்மை   குறைந்துவிட்டால் மூட்டை அசைக்கும்போது சோர்வும் வலியும் ஏற்படும். பெண்களுக்குத்தான் இத்தகைய தேய்மானம் அதிகம் ஏற்படுகிறது.



மூட்டுவலி ஏற்பட்டால் நடக்க முடியாது. கீழே தரையில் உட்கார்ந்து எழ முடியாது. டாய்லட் சீட்டில் உட்கார்ந்து எழ முடியாது. இரவு நேரங்களிலும் வலியினால் புரண்டு படுக்க முடியாமல் நல்ல தூக்கம் இருக்காது. சில சமயம் நடக்கவோ, நிற்கவோ முடியும் ஆனால் காலை மடித்து கட்டிலில் அமர்வதற்குள் வலியில் உயிர் போய் விடும். மூட்டுக்களில் மட்டுமல்லாது, பக்க வாட்டில் இரு புறமும் வீக்கமும் மூட்டிற்கு அடியிலுள்ள பள்ளத்தில் வலியும் இருக்கும்.

பொதுவாய் அலோபதி மருத்துவரிடம் செல்லும்போது இதற்கான எக்ஸ்ரே, அதைப்பார்த்து மருந்து மாத்திரைகள், உடற்பயிற்சிகள், பிஸியோதெரபி மூலம் வலியைக்குறைத்தல் என்று சிகிச்சை முறைகள் இருக்கும்.

எனது மூட்டுவலிக்காக இங்கே தஞ்சையிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்ற போது அங்கே எலும்பு அறுவை சிகிச்சை நிபுணராக இருக்கும் என் உறவினர் வழக்கம்போல மேற்க‌ண்ட சிகிச்சை முறைகளை செய்து விட்டு, ஒரு வேளை கால்களிலுள்ள இரத்தக்குழாய்களில் எங்கேனும் அடைப்பு இருக்கிறதா என்று ஒரு ஸ்கான் பண்ணி பார்த்து விடலாமா என்றார். கால்களில் மட்டும் பண்ணும் ஸ்கான் இது. முடிவில் எங்கேயும் அடைப்பு இல்லையென்றாலும் என் இடது கால் முட்டிக்கு பின்னாலுள்ள பள்ளத்தில் உள்ளே BAKERS CYST என்னும் கட்டி இருப்பதையும் வெரிகோஸ் வெயின் ஆரம்பித்திருப்பதையும் அந்த ஸ்கான் கண்டுபிடித்தது.

வெரிகோஸ் வெயின் என்பது காலின் தொடைப்பகுதிக்கு கீழோ அல்லது முட்டிக்காலுக்கு பின்புறத்திலோ, நரம்புகள் முடிச்சிட்டுக் கொண்டிருக்கும். உடலின் மற்ற பாகங்களிலும் கூட இத்தகைய முடிச்சுகள் இருக்கும். இவற்றால் அவ்வப்போது கால் பகுதியில் வலியும்,வேதனையும், குடைச்சல் போன்ற உணர்வும் ஏற்படும். கால் பகுதியின் இரத்த ஓட்டம் கடுமையாக பாதிக்கும்.

நமது மூட்டுக்களை சமனப்படுத்திக்கொன்டிருக்கும் சினோவியல் என்ற திரவம் மூட்டுவலி, மூட்டு வீக்கம், யூரிக் ஆசிட் அதிகரித்தல் மற்றும் காலில் அடிபடுதல் போன்ற காரணங்களால் அதிகரிக்கிறது. இப்படி அதிகரிக்கின்ற திரவம் வேறு வழியில்லாமல் மூட்டுக்கு நேர் பின்னால் உள்ள பள்ளத்தில் தனிக்கட்டியாக உருவாகிறது. இதுவே பேக்கர்ஸ் கட்டி எனப்படுகிறது.



இதற்கென்று தனி மருத்துவமோ அல்லது மருந்து மாத்திரைகளோ இல்லை. ஆரம்ப நிலையில் போதுமான ஓய்வை கால்களுக்குக் கொடுப்பதும் நிற்கும்போதும் வேலைகள் செய்யும்போதும் COMPRESSED STOCKING அணிவதும் வென்னீர் ஒத்தடம் கொடுப்பதுமே இந்தக்கட்டி பெரிதாவதை தடுக்கும்.

இது சில வாரங்களில் சில சமயம் சில மாதங்களில் மறைந்து போய் விடும் என்றும் மருத்துவர் கூறினார்கள். அப்படி மறையாமல் இப்போது சிறியதாக இருக்கும் கட்டி பெரியதாக வளர்ந்து விட்டால் கட்டியை முழங்கால்களின் பின்னால் ஆக பார்க்க முடியும். அப்போது வலி மிக அதிகமாக இருக்கும். அப்போது அறுவை சிகிச்ச மூலம் இந்த கட்டியை நீக்குவார்கள் என்றும் மருத்துவர் கூறினார்.

அதன் பின் கூகிள் மூலம் இந்தப்பிரச்சினையினால் கஷ்டப்பட்டவர்கள் எப்படி குணமானார்கள் என்பதைத்தெரிந்து கொள்ள முடிந்தது.

தெரிந்த தீர்வுகள்:

1. COOL PACK AND HOT PACK. இதை மாறி மாறி முழங்காலுக்குக் கீழே வைத்துக்கொள்ள வேன்டும்.
2. தினமும் மூன்று முறைகள் ஒரு தம்ளர் வென்னீரில் [ குடிக்கும் சூட்டில்] 1 மேசைக்கரண்டி ஆப்பிள் சிடார் வினீகர், 1 ஸ்பூன் தேன் கலந்து குடிக்க வேண்டும்.

இப்படி மாறி மாறி COOL PACK AND HOT PACK சிகிச்சை மேற்கொண்ட போது என் முழங்கால் வலியும் பின்னால் உள்ள வலியும் வீக்கமும் வெகுவாக குறைந்து விட்டது.
அதன் பின் சென்னையிலுள்ள மருத்துவர் ஜெயலக்ஷ்மியிடம் அக்குபங்சர் சிகிச்சை எடுத்துக்கொண்டதில் வலி 90 சதவிகிதம் மறைந்து விட்டது. முழங்காலின் மூட்டுக்களில் வயதாக வயதாக தேய்மானம் ஏற்படுவது இயல்பான விஷயம். ஆனால் அதீத வலி ஏற்படும்போது இந்த மாதிரி ஸ்கான் எடுத்துப்பார்த்து அதற்கான சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது.

மூட்டு வலிக்கும் சில தீர்வுகள்:

1. கடுகு எண்ணெயை சூடு செய்து மூட்டுக்களில் தடவி மெதுவாய் மஸாஜ் செய்து, உடனேயே வென்னீர் ஒத்தடம் தர வேண்டும்.
2. ஒரு வெங்காயத்தை எப்சம் சால்ட் 2 மேசைக்கரண்டியுடன் அரைத்து வலி உள்ள இடத்தில் வைத்து ஒரு மெல்லிய துணியினால் கட்ட வேண்டும். இரவு முழுவதும் வைத்திருந்து காலையில் இதை நீக்க வேண்டும். இதனாலும் வலி பெருமளவில் குறைகின்றது.
3. புங்க எண்ணெய், வேப்பெண்ணெய், கடுகு எண்ணெய், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய் இவற்றை சம அளவு எடுத்து காய்ச்ச வேண்டும். எண்ணெய் புகைந்து வரும்போது அடுப்பை அணைத்து அதில் 4 கட்டி சூடத்தைப்போட்டு வைக்க வேண்டும். சூடம் கரைந்து எண்ணெய் ஆறியதும் பாட்டிலில் சேமித்து வைத்துக்கொள்ள வேண்ட்டும். இதைத் தடவி வரும்போது வலி வெகுவாகக் குறையும்.

11 comments:

ஸ்ரீராம். said...

உபயோகமான குறிப்புகள்.

கோமதி அரசு said...

நான் மூட்டுவலி வந்த போது எருக்கம் இலையை (மூன்று இலை)தண்ணீரில் கொதிக்க வைத்து சூடு பொறுக்கும் அளவில் ஒத்தடம் கொடுத்தேன் மூன்று நாளில் சரியாகி விட்டது.
நீங்கள் சொன்ன குறிப்புகளும் தேவைபடுபவர்களுக்கு சொல்லலாம்.
நன்றி.

Nagendra Bharathi said...

அருமை

திண்டுக்கல் தனபாலன் said...

விரிவான விளக்கங்களுக்கு நன்றி...

Anuprem said...

அருமையான தகவல்கள்...

நிலாமகள் said...

பயனுள்ள தகவல்கள்... நன்றி சகோ. அந்த ஸ்கேன் டெஸ்டின் பெயர்?

Bhanumathy Venkateswaran said...

உபயோகமான தகவல்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

Thulasidharan V Thillaiakathu said...

நல்ல பயனுள்ள தகவல்கள் சகோதரி/ மனோ அக்கா

துளசிதரன், கீதா

vallisimhan said...

அருமையான தகவல் அன்பு மனோ.
உடல் எடையும் குறைய வேண்டும். இந்த அழற்சி
குறைய நடையும் அவசியம் என்றார்கள்.
வலி குறைந்தால் நடக்கலாம். நடந்தால் வலி அதிகரிக்கும்
என்றே ஓடுகிறது வாழ்க்கை.
மிக மிக நன்றீ மா. ஆப்பிள் சைடர் சாப்பிட்டுப் பார்க்கிறேன்.

Geetha Sambasivam said...

விரிவான குறிப்புகள். நன்றி.

ராமலக்ஷ்மி said...

பயனுள்ள அனுபவப் பகிர்வு.