இந்த முறை வலைத்தளத்திற்கும் எனக்குமிடையே ஒரு
இடைவெளி விழுந்து விட்டது.
42 வருடங்களுக்குப்பிறகு இதுவரை ஷார்ஜாவிலிருந்த
நாங்கள் துபாய்க்கு குடி பெயர்ந்தோம். மகனின் வர்த்தக அலுவலகம் துபாயில் என்பதால் இந்த
மாற்றம்.
இட மாற்றம், அதனால் ஏற்பட்ட தற்காலிக நெருக்கடிகள்
என்று பல நாட்கள் இணைய வசதியின்றி அதிகப்படியான வேலைப்பளு. ஒரு வழியாக, இணையத்தொடர்பு,
தொலைக்காட்சியின் உயிர்ப்பு, என்று நிமிரும்போது தஞ்சைக்குக் கிளம்பி விட்டோம்!
துபாய் ஒரு தனி எமிரேட், ஷார்ஜா ஒரு தனி எமிரேட்.
ஒவ்வொரு எமிரேட்டிற்கும் தனித்தனி சட்ட திட்டங்கள் என்பதால் முறைப்படி தொலைத்தொடர்பை
நீக்கி, பல்லாண்டு கால டெபாஸிட்டை திரும்பப்பெற்று, திரும்ப துபாயில் தொலைத்தொடர்பிற்கு
பணம் கட்டி மறுபடியும் தொலைத்தொடர்பு பெறுவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது!
எங்களுக்கு 42 வருடங்கள் என்றால் என் மகனுக்கு
40 வருடங்கள் ஷார்ஜாவில் வாழ்க்கை கழிந்து விட்டது. பழகிய இடங்கள், இத்தனை வருடங்களாக
பழகிய நண்பர்கள், மருத்துவம் பார்த்த மருத்துவ நண்பர்கள், கூடவே வரும் நிழல் போன்ற
நினைவுகள் அனைத்தையும் பிரிந்து புதிய இடத்திற்கு வந்து விட்டோம்.
இத்தனைக்கும் ஷார்ஜாவிலிருந்து துபாய் 15 கிலோ
மீட்டர் தூரம் தான். எப்போது வேண்டுமானாலும் ஷார்ஜாவிற்கு வந்து கொள்ளலாம் தான். ஆனாலும்
மனம் கனமாகி விட்டது எங்கள் வீட்டை விட்டுக் கிளம்பிய போது. என் மகனுக்கும் அதே மாதிரி
உணர்வுகள்!
sharjah |
அப்போதெல்லாம் ' திரைகடல் சென்று திரவியம் தேடு என்று ஒளவையார்
சொன்னது போல் பொருள் தேட, தன் இல்லத்தை வளப்படுத்த ஏராளமானோர் கடல் கடந்து பொருள் தேடி
தன் குடும்பத்தையும் தன் சுற்றத்தையும் வளப்படுத்தினார்கள். என் தாத்தா காலத்தில் பர்மா,
ரங்கூன், மலேயா நாடுகளுக்குச் சென்று பொருள் ஈட்டினார்கள். சட்டப்படி ஐக்கிய அரபுக்குடியரசில்
நுழைய முடியாதவர்கள் கள்ளத்தோணியில் வந்ததும் பசிக்காக நடுக்கடலில் கையில் கிடைத்த
தோல் பொருள்களையெல்லாம் சாப்பிட்டதுமான கதைகளைக்கேட்டிருக்கிறோம். நாளடைவில் கடுமையான
சட்ட திட்டங்களினாலும் காவல் கண்காணிப்புகளினாலும் இவையெல்லாமே அழிந்து போனது!
' 1971ல் ஆங்கிலேய ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு
ஏழு எமிரேட்ஸ்களும் இணைந்து ஐக்கிய அரபுக்குடியரசான பிறகு ஐந்து ஆண்டுகள் கழித்து நாங்கள்
ஷார்ஜாவில் நுழைந்தோம்.
எங்கு நோக்கினாலும் மணல் படுக்கைகள். சோனா பஜார்
என்று சிறு கடைகள் அடங்கிய சிறு சிறு தெருக்கள் இருக்கும். அங்கு தான் புடவைகள், நகைகள்
வாங்கும் வழக்கமிருந்தது. பெண்கள் பிரச்சினைகளுக்கென்று எந்த இந்திய மருத்துவரும் அப்போது
கிடையாது. ஒரு சூடான் நாட்டு மருத்துவப்பெண்மணியிடம் தான் செல்லுவோம்.
என் கணவருக்கு நடுக்கடலின் நடுவே கப்பலில் ஒரு
வாரம் வேலை, ஒரு வாரம் ஓய்வு. கடலின் நடுவில் 20000 அடிக்கும் மேலான ஆழத்திலிருந்து
எடுக்கப்பட்ட க்ரூட் ஆயில் இந்தக்கப்பலுக்கு ராட்சசக்குழாய்களின் வழியே வரும். அதன்
அளவை அளந்து அங்கேயே சேமித்து வைப்பதிலும் பின் அங்கிருந்து வெளியே ஏற்றுமதி செய்யும்
பணியிலும் என் கணவர் பொறுப்பு அதிகாரியாக இருந்தார்கள்.
கிடைக்கும் ஊதியத்தை என் கணவரும் அவரின் சகோதரர்களும்
அப்படியே ஊருக்கு அனுப்பி விடுவார்கள். மீதியிருக்கும் சொற்ப பணத்தில் தான் குடும்பம்
நடக்கும்.
இப்படியே 13 வருடங்கள் வேலை செய்த பிறகு ஒரு உணவகத்தின்
உரிமையாளராக மாறினார்கள்.
உறவு முறை பெண்களுக்கு திருமணங்கள், கல்வி வசதி,
பையன்களுக்கு படிப்பிற்கான செலவு, அரபு நாட்டில் வேலைகள் வாங்கித்தருதல், இப்படி உறவுகளுக்காக
என்றால் முதியோர் இல்லங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுதல் என்று செய்ததும் செய்து
வருவதும் மன நிறைவுக்காக!! என் கணவர் உணவகம் நடத்த ஆரம்பித்த பின் நிறைய ஏஜென்சிக்காரர்களால்
ஏமாற்றப்பட்டு, நடுத்தெருவில் விடப்பட்டு விழித்துக்கொண்டு நிற்கும் தமிழர்களை மற்ற
மாநிலத்தவர்கள் எங்கள் உணவகத்தில் கொன்டு வந்து விடுவார்கள். அவர்களுக்கு சாப்பாடு போட்டு, எங்கள் பணியாளர்களின்
விடுதியில் தங்க வைத்து, பாஸ்போர்ட், விசா என்று எதுவுமே இல்லாமல் தவிக்கும் அவர்களுக்கு
இந்தியன் கான்ஸ்லேட் மூலம் தற்காலிக பாஸ் வாங்கிக்கொடுத்து சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதும்
நிறைய நடக்கும். என் கணவரும் அவரைச் சார்ந்த சில தமிழர்களும் சேர்ந்து திடீரென்று மரணித்தவர்களை
பத்திரமாக தாய்நாட்டுக்கு அனுப்புவது, நோயுற்றவர்களுக்கு சிகிச்சை எடுக்க உதவுவது,
வெள்ள நிவாரணம், புயல் நிவாரணம் என்று அவ்வப்போது ஏற்படும் இயற்கைப்பேரிடர்களினால்
பாதிக்கப்பட்டவர்களுக்காக பணமும் ஆடைகளும் வசூலித்து இந்திய பிரதம மந்திரியின் நிவாரண
நிதிக்கு அனுப்புவது என்று எத்தனை எத்தனை அனுபவங்கள்!!
DUBAI |
இயந்திர மயமான வாழ்க்கையில் பாலைவனச்சோலை மாதிரி
ஷார்ஜா கிரிக்கெட் வந்தது. ஷார்ஜா, துபாயில் வசித்த இந்தியர்களெல்லாம் இந்திய வீரர்களுக்கு
ஆதரவாக வந்து குவியும் காட்சி அற்புதமாயிருக்கும்!! அவர்களின் கைத்தட்டலால் ஷார்ஜா
ஸ்டேடியமே கிடுகிடுத்துப்போகும்! நானும் என் கணவரும், சில சமயம் என் மகனும் தவறாமல்
கிரிக்கெட் மாட்ச் ஒவ்வொன்றையும் போய் ரசித்து விட்டு வருவோம்!
வாழ்க்கையில் காட்சிகள் மாறுவது போல, பாலைவனம்
மெல்ல மெல்ல சோலை வனமானது. கடல் நீர் குடிநீரானது. இந்த 40 வருடங்களில் அங்கே ஏற்பட்டிருக்கும்
கல்வி வளர்ச்சியும் வானளாவிய கட்டிடக்கலையும் செல்வ வளர்ச்சியும் மருத்துவ வசதிகளும்
பசுமையும் பிரமிக்கத்தக்கது.
ஷார்ஜா ஒரு அமைதியான அமீரகம். பாதுகாப்பான, சுதந்திரமான
வாழ்க்கையில் இது வரை பிரச்சினைகள் இருந்ததில்லை. இந்த அமைதியான வாழ்க்கையை விட்டு,
பரபரப்பான துபாய் வாழ்க்கைக்கு இனி பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும் !
24 comments:
ஓ மிக அருமையான கடந்தகால நினைவலைகள்.
புது இடம் புதுசுக்குப் பயமாகவும் ஒருமாதிரியும் இருக்கும்.. நாளடைவில் நன்கு பிடித்துப் போய் விடும்..
தங்கள் வாழ்க்கைச் சூழலுடன் அமீரகத்தின் வளர்ச்சியையும் இணைத்துச் சொன்னவிதம் அற்புதம்.மிகப் பெரிய அற்புத நாவலுக்குரிய சூழல்கள் அமைந்ததாக தங்கள் வாழ்க்கைப் பயணம் தொடர்வதை தங்கள் சிறிய ஆயினும் அற்புதமான பதிவு பிரதிபலிக்கிறது.தொடர்ந்து எழுதினால் மகிழ்வோம் வாழ்த்துக்களுடன்
பசுமையான நினைவுகளை மறந்திருப்பது எப்படி?....
ஆனாலும்
எத்தனையோ மாற்றங்களை எதிர் கொண்ட மனம் இதனையும் ஏற்றுக் கொள்ள வேண்டியது தான்...
வாழ்க நலம்...
புதிய இடம் ஒரு புத்துணர்ச்சியை தரும்... ஆரம்பத்தில் ஏதோ இழந்தது போல இருக்கும் ஆனால் சிக்கிரம் நமது பழகும் தன்மையால் எல்லாம் பிடித்து போகும்
காரில் ஏறினால் பதினைந்து நிமிடத்தில் ஷார்ஜா போய் நட்புகளை பார்த்து விடலாமே... சகோ.
நான் இருபது வருடங்கள் பழகியவர்களை இனிமேல் பார்க்க முடியாது என்று வரும்போது எனது மனம் மிகவும் வேதனைப்பட்டது.
பழகிய இடத்திலிருந்து - அதுவும் நீண்ட காலமாக இருந்த இடத்திலிருந்து பிரிந்து செல்வது - கடினமான செயல்தான்.
எனக்கு பதிமூன்று வருடங்கள் வாழ்ந்த இடத்தை விட்டு வந்து பெங்களூரில் செட்டில் ஆவது கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கிறது. நாற்பது வருடங்கள் என்பது தனி மனித வாழ்க்கையில் மிகப் பெரிய அளவு.பெரும்பாலான அரபு நாட்டு இந்தியர்களைப் போல நீங்களும் வளர்ந்து, மற்றவர்கள் வளர்ச்சிக்கும் உதவியிருக்கிறீர்கள். வாழ்க!
இடம் மாற்றம் என்பது சில காலத்திற்குச் சிரமமே. பின்னர் அது பழகிவிடும். ஒவ்வொரு புதிய சூழலும் புதிய அனுபவங்களைத் தருமே. அந்த வகையில் இதனை நேர்மறையாகக் கொள்வோம்.
அருமையாக மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டீர்கள்.
எனக்கு மாயவரத்தை விட்டு மதுரை வந்தபோது இருந்த மனநிலை போல் உள்ளது.
பழகிவிடும். விடுமுறையில் சென்று வரலாம் ஷார்ஜா போய்வரலாம்.
மற்றவர்களுக்கு உதவியதை படிக்கும் போது மனம் மிகவும் மகிழ்கிறது.
தொடரவேண்டும் பிறருக்கு உதவும் பணி வாழ்த்துக்கள்.
பழகிய இடத்தை விட்டு அதுவும் நீண்ட காலம் இருந்துவிட்டு போவது என்பது மனதுக்கு கஷடம்தான். கொஞ்சநாள்தான் அக்கா. பின் இதுவும் பழகிவிடும். அதுவும் துபாய் போன்ற பரபரப்பு மிக்க நகரத்தில் நேரமும்,வேலையும், சூழலும் மனதில் ஒட்டிவிடும்.
நீங்கள் மற்றவர்களுக்கு செய்த்திருக்கும் உதவிகளுக்கும்,நல்ல மனத்திற்கும் இறைவனின் ஆசிகள் என்று இருக்கும் மனோக்கா.
உண்மை தான் ஞானி அதிரா! வாழ்க்கையில் பிடிக்காத எத்தனையோ விஷயங்கள் காலப்போக்கில் பிடித்துப்போய் விடும். இது அப்படியில்லை. புதிய இடமென்னவோ வாழ்க்கையின் வர்ண ஜாலங்கள் அனைத்தையும் அடக்கியது. வாழ்க்கையின் முக்கால் பாகம் கழிந்த பிறகு, பழகிய இடத்தை விட்டுப்பிரிந்தது மட்டும் தான் இதில் மன நெகிழ்வும் கனமும்!
மனமுவந்து பாராட்டியதற்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றி சகோதரர் ரமணி!
உண்மை தான்! எல்லோரது வாழ்க்கையிலும் ஒரு அழகிய நாவல் எங்கோ ஒளிந்திருந்தாலும் சிலரால் மட்டுமே அதை அழகாக எழுத முடிகிறது! ஆனால் அதையும் தாண்டி, மனிதம், மனித நேயம் என்று நிறைய கற்றுக்கொடுத்திருக்கிறது ஷார்ஜா வாழ்க்கை!
புதிய இடம் வரவேற்றாலும், நல்ல அனுபவங்கள் காத்திருந்தாலும் பழகிய இடம், பலகாலம் இருந்த வீடு இவற்றைப் பிரியும் போது ஏற்படும் வருத்தம் இயல்பானது. புதிய இடத்தில் எல்லாம் நன்றே நடக்கும். எத்தனையோ பேருக்கு நீங்கள் பிரதிபலன் பாராது செய்த உதவிகள் மதிப்பிற்குரியது. உரியவர்களின் வாழ்த்துகள் என்றென்றும் உங்களோடு இருக்கும்.
வணக்கம் !
தங்கள் நினைவுகளின் ஈரத்தில் கொஞ்சம் இதயம் நனைந்துதான் போகிறது தங்கள் குடும்பத்தாரின் சேவை அளப்பெரியது மத்திய கிழக்கின் சில அவலங்களை நானும் அறிந்துகொண்டுதான் இருக்கிறேன் !
ஆமா தாயகத்தில் சென்று வாழ எப்பத்தான் தீர்மானம் பழக்கப்பட்ட இந்த நாட்டில் தொழில் ஆனால் நம் மண்ணிலும் சில காலம் வாழ வேண்டாமா ?
அன்பின் நினைவுகள் பகிர்ந்து தந்த பதிவு அருமை வாழ்க நலம் !
இனிய கருத்துரைக்கு மிகவும் நன்றி சகோதரர் துரை.செல்வராஜ்!
இனிமையான கருத்துரைக்கு அன்பு நன்றி மதுரைத்தமிழன்!
நானே எழுதியிருக்கிறேனே கில்லர்ஜி, எப்போது வேண்டுமானாலும் ஷார்ஜா சென்று வரலாமென்று! ஆனால் வாழ்க்கையில் எல்லாவற்றுக்குமே ஷார்ஜா என்று பழகி விட்டதால் இந்த இடமாற்றம் சற்று கடினமாக இருக்கிறது ஜீரணிப்பதற்கு!
கருத்துரைக்கு அன்பு நன்றி!!
இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி ஸ்ரீராம்!
இனிமையான கருத்துரைக்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி பானுமதி வெஙடேஸ்வரன்!
அருமையான கருத்துக்களுக்கு அன்பு நன்றி சகோதரர் ஜம்புலிங்கம்!!
இனிமையான கருத்துரைக்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி கோமதி அரசு!
அருமையாக எழுதி நெகிழச்செய்து விட்டீர்கள் பிரியசகி! என் மனமார்ந்த நன்றி!
இனிமையான கருத்துரைக்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி ராமலக்ஷ்மி!
அருமையாய் எழுதியிருக்கிறீர்கள் சீராளன்! அன்பு நன்றி!
என் ஒரே மகன் துபாயில் வணிகத்தில் ஈடுபட்டிருப்பதால் எங்களின் துபாய் வாழ்வு அப்படியே தொடர்கிறது! அவ்வப்போது தஞ்சை மண்ணில் ரீசார்ஜ் செய்து கொன்டு திரும்ப அங்கு சென்று விடுவது தான் இப்போதைய வழக்கமாக இருக்கிறது.
Post a Comment